புதன், 28 ஜூலை, 2021

ஆக, உங்களுக்கு எழுத்தாளராக விருப்பம்? - சார்லஸ் புக்கோவ்ஸ்கி (14) - புன்னகை இதழ்: 79

 


ஆக, உங்களுக்கு எழுத்தாளராக விருப்பம்?

னைத்தையும் மீறி
உங்களுக்குள் இருந்து உடைத்துக் கொண்டு வெளிவரவில்லையெனில்,
எழுதாதீர்கள்.
உங்களது இதயத்திலிருந்து, மனதிலிருந்து, வாயிலிருந்து, 
உங்களது குடல் நாளங்களிலிருந்து 
கேட்காமலே வரவில்லையெனில்
அதைச் செய்யாதீர்கள்.
மணிக்கணக்காக உங்கள் கணினித் திரையை
வெறித்து நோக்கியோ
உங்கள் தட்டச்சு இயந்திரத்தின் மேல்
கவிழ்ந்து கிடந்தோ
வார்த்தைகளைத் தேடுவீர்களானால்
எழுதாதீர்கள்.
பணத்திற்காகவோ புகழுக்காகவோ எழுதுவீர்களேயானால்,
அதைச் செய்யாதீர்கள்.
பெண்களுடன் பழகுவதற்காக எழுதுவீர்களேயானால்,
அதைச் செய்யாதீர்கள்.

அங்கேயே அமர்ந்து 
மீண்டும் மீண்டும் திருத்தி எழுதிக் கொண்டிருப்பீர்களேயானால்
அதைச் செய்யாதீர்கள்.
எழுத வேண்டுமென்பதே கடின வேலையாகத் தோன்றுமேயானால்
அதைச் செய்யாதீர்கள்.
நீங்கள் வேறொருவரைப் போல எழுத முயல்வீர்களேயானால்,
எழுதுவதையே மறந்து விடுங்கள்.
உங்களுக்குள் இருந்து 
கர்ஜித்து வெளிவரக் காத்திருக்க வேண்டியிருப்பின்,
பொறுமையுடன் காத்திருங்கள்.
அவ்வாறு கர்ஜித்து வெளிவரவில்லையெனில்
வேறு எதையேனும் செய்யுங்கள்.

எழுதியதை முதலில் உங்கள் மனைவிக்கோ
தோழிக்கோ தோழனுக்கோ
பெற்றோருக்கோ அல்லது வேறு யாருக்கேனுமோ
வாசித்துக் காட்ட வேண்டியிருப்பின்,
நீங்கள் எழுதத் தயாராகவில்லை.

மற்ற பல எழுத்தாளர்களைப் போல் இருக்காதீர்கள்,
தம்மைத் தாமே எழுத்தாளர்கள் எனச் சொல்லிக் கொள்ளும்
ஆயிரக்கணக்கான மற்றபல பேர்களைப் போல் இருக்காதீர்கள்.
மந்தமாக, அலுப்பூட்டுப் படியாக, பகட்டாக,
தன்னலமிக்கவராக இருக்காதீர்கள்.
உலகிலுள்ள நூலகங்கள் அயர்ந்து தூங்குகின்றன
உங்களைப் போன்றவர்களால்.
அப்படிச் செய்யவே செய்யாதீர்கள்.
உங்கள் ஆன்மாவிலிருந்து ஒரு ராக்கெட்டின் வேகத்தோடு 
புறப்பட்டு வந்தாலன்றி
எழுதாதீர்கள்.
எதுவும் செய்யாமலிருப்பது உங்களைப் பித்துப் பிடிக்கவோ
தற்கொலைக்கோ அல்லது கொலைக்கோ தூண்டினாலன்றி
எழுதாதீர்கள்.
உங்களுக்குள் இருக்கும் சூரியன்
உங்கள் குடலைச் சுட்டெரித்தாலன்றி
எழுதாதீர்கள்.

நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவராயின்,
சரியான நேரத்தில்,
அது தன்னைத் தானே எழுதிக் கொள்ளும்
தொடர்ந்து எழுதிடும் 
நீங்கள் சாகும் வரையில்
அல்லது உங்களுக்குள் அது சாகும் வரையில்.

அதைத் தவிர வேறு வழியில்லை

வேறு வழி இருந்ததுமில்லை.

**

மூலம்:
"so you want to be a writer?" By Charles Bukowski

**

கவிதைக்கான படம்: இணையத்திலிருந்து..!

**

ருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த அமெரிக்கக் கவிஞர் எனக் கொண்டாடப்படும் ஹென்ரி சார்லஸ் புக்கோவ்ஸ்கி (1920 – 1994) , நாவலாசரியரும் சிறுகதை எழுத்தாளரும் கூட. ஜெர்மனியில் பிறந்தவர். தந்தை அமெரிக்கர். தாய் ஜெர்மனியைச் சேர்ந்தவர். இவரது சிறுவயதில் பெற்றோர் அமெரிக்காவில் குடி புகவும், அமெரிக்கராகவே வளர்ந்தார். கூடப்பிறந்தவர்கள் கிடையாது. குடித்து விட்டுத் தாயையும் தன்னையும் அடிக்கும் வழக்கம் கொண்ட தந்தையை எதிர்க்க, சோகத்தை மறக்க தானும் அதே பழக்கத்தில் விழுந்தவர். லாஸ் ஏஞ்சல்ஸ் சிட்டி கல்லூரியில் பத்திரிகைத் துறையில் பட்டம் பெற்றிருந்தாலும் பெரும்பாலும் விளிம்பு நிலை வேலைகளையேத் தொடர்ந்து பார்த்திருக்கிறார். இவரது எழுத்துக்களும் இவர் வாழ்ந்த லாஸ் ஏஞ்சல்ஸின் சமூக, கலாச்சார, பொருளாதார நிலைமைகளைப் பிரதிபலிப்பதாகவே உள்ளன. ஆறு நாவல்கள், ஆயிரக்கணக்கான கவிதைகள், நூற்றுக்கணக்கான சிறுகதைகள் யாவும் சுமார் அறுபதுக்கு மேலான புத்தகங்களாக வெளியாகியுள்ளன. அனைத்தும் அமெரிக்க விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டங்களை மையமாகக் கொண்டவை.

**


ஜூலை 2021 புன்னகை இதழில் வெளியாகியுள்ள 
மூன்று தமிழாக்கக் கவிதைகளுள் ஒன்று.
நன்றி புன்னகை!

***

11 கருத்துகள்:

  1. சிறப்பான அறிமுகம்.  இயல்பாக வரும் விஷயங்களே படிக்க சுவாரஷ்யப் படுத்துகின்றன.  சொல்லி இருப்பது போல தட்டச்சு இயந்திரத்தின் மேல் கவிழ்ந்து படுத்து யோசித்தோ, மேலே விட்டத்தை வெறுத்தோ வார்த்தைகளைத் தேடினால் படிப்பவர்கள் பாவம்தான்.

    பதிலளிநீக்கு
  2. புன்னகை இதழில் உங்கள் தமிழக்காக் கவிதைகள் இடம்பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

    சார்லஸ் புக்கோவ்ஸ்கி அவர்கள் கவிதை எங்களுக்கு படிக்க பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. அன்பின் ராமலக்ஷ்மி,
    மிக அருமையான கவிதை. அதைத் தமிழாக்கிக் கொடுத்ததற்கு
    மிக நன்றி மா.

    உணர்ந்து சொன்ன வார்த்தைகள்.

    பதிலளிநீக்கு
  4. புன்னகை இதழில் தங்கள் தமிழாக்கம்
    வெளிவந்தது மிக மகிழ்ச்சி.
    சார்ல்ஸ் புக்கோவ்ஸ்கி யின் வாழ்க்கை
    அவர் பெற்ற விருதுகள், அவர் வாழ்வு முடிந்த விதம்
    எல்லாம் யோசிக்க வைக்கின்றன.
    நன்றி மா.

    பதிலளிநீக்கு
  5. நல்லதொரு அறிமுகம். எழுத்து குறித்த அவரது எண்ணங்கள் சிறப்பு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. உள்ளத்தில் ஆழ்ந்து அனுபவித்த உணர்வுகளை, அதன் உண்மைத் தன்மை பிறழாது வார்த்தைகளாக வடித்துவிடுவது ஓர் வரமே. வலி மிகுந்த வாழ்க்கையை சார்ல்ஸ் புக்கோவ்ஸ்கி பொறுமையுடன் எதிர் கொண்டதால் அது சாத்தியமாகிறது. சிறந்த மொழி பெயர்ப்பு. நன்றி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin