வால் காக்கை
ஆங்கிலப் பெயர்: Rufous Treepie |
விவசாய நிலங்களிலும் நகர்ப்புறத் தோட்டங்களிலும் பொதுவாகத் தென்படக் கூடியதுதான் இப்பறவை என்றாலும் இரண்டு வருடங்களுக்கு முன் ஒரே ஒரு முறைக் காணக் கிடைத்தது. தென்னை மர இலையின் கீற்றுகளுக்குள் மறைந்து கொண்டு போஸ் கொடுக்க மறுத்தாலும் என்ன வகைப் பறவை என்பதைத் தெரிந்து கொள்வதற்காக ஒரு படம் எடுத்து வைத்தேன் அப்போது. இணையத்தில் தேடி வால் காக்கை எனக் கண்டு பிடித்து, எங்கள் குடியிருப்பில் வசிக்கும் மற்றுமொரு பறவை ஆர்வலரிடம் கேட்டு உறுதியும் படுத்திக் கொண்டுக் காத்திருந்தேன், காத்திருந்தேன்.. மீண்டும் கண்ணில் பட:). ஒருவாறாக சமீபத்தில் சரியாக உலகச் சுற்றுச் சூழல் தினத்தன்று கிடைத்தது வால்காக்கை ஜோடிப் பறவைகளின் தரிசனம். படமெடுக்கவும் நன்கு ஒத்துழைத்தன:).
#2
உயிரியல் பெயர்: Dendrocitta vagabunda |
காக்கையைப் போன்ற கருந்தலையும் அலகும், சாம்பல் நிறத்தில் வெள்ளை நிறப் பட்டைகளையும் கருப்பு முனையையும் கொண்ட நீண்ட விறைப்பான வாலும், மஞ்சளும் பழுப்பும் கலந்த இலவங்கப்பட்டை நிற உடலும் இவற்றைச் சட்டென அடையாளம் காண உதவும்.
#5
ஏற்ற இறக்கத்துடன் பறக்கும் விதமும், படபடவென இறக்கைகளை வேகமாக அடித்து, அதைத் தொடர்ந்து இறக்கைகளோடு வாலையும் விரித்தபடி நழுவிப் பறக்கின்ற விதமும் கவனத்தை ஈர்க்கக் கூடியவை.
#6
காகங்களைப் போலவே இவை அனைத்துண்ணி. பழங்கள், தேன் சுவை கொண்ட பூக்களின் விதைகள், பூச்சிகள், பல்லிகள், தவளைகள், பூரான்கள், பிற பறவைகளின் முட்டைகள் போன்றன இவற்றுக்குப் பிடித்தமான உணவு. இறந்த உயிரினங்களையும் உண்டு வாழ்பவை. இரை தேடுவதற்கு ஜோடியாக மட்டுமின்றி கூட்டமாகவோ அல்லது பிற வேட்டையாடும் வகைப் பறவைகளான காட்டுச் சிலன்பன்கள், கரிச்சான் குருவிகளுடன் சேர்ந்தோ செல்லக் கூடியவை. மான்கள், குறிப்பாக சம்பார் மான்கள் தம் உடலில் வாழும் ஒட்டுண்ணியை நீக்கிக் கொள்ள இவற்றை அனுமதிக்கின்றன. பிற காகக் குடும்பத்தைச் சேர்ந்த பிற பறவைகளைப் போலவே இவையும் உணவுகளைப் பதுக்கி வைக்கும் பழக்கம் கொண்டவை. பனை மரங்களை அழிக்கின்ற ஒரு வகை அந்துப்பூச்சிகளை உட்கொண்டு தென்னிந்தியாவில் பனை மர வளர்ப்புக்குப் பேருதவியாக இருப்பவை.
#7
இனப்பெருக்கக் காலம் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலும். காகங்களின் போன்றே மரங்களிலும் புதர்களிலும் ஆழமில்லாத வாயகலாமானக் கூடுகளைக் கட்டும். மூன்று முதல் ஐந்து முட்டைகள் வரையிலும் இடும்.
இப்பறவைகள் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மியான்மர், லவோஸ் மற்றும் தாய்லாந்து வரையிலுமாகப் பரவலாக வசிக்கின்றன. கார்வால் போன்ற இமயமலைப் பகுதிகளுக்குக் குறிப்பிட்ட பருவங்களில் வலசை செல்கின்றன.
#8
*
இந்த பறவைகளை நானும் படம் எடுத்து இருக்கிறேன்.
பதிலளிநீக்குசெண்பக பூ பூக்கும் காலௌம் வந்து விடும் மாயவரத்தில். அப்போது அங்கு எல்லாம் செண்பகபறவை என்று சொல்வார்கள்.
மிக அழகாய் படம் எடுத்து இருக்கிறீர்கள்.
இதன் சத்தம் வித்தியாசமாக இருந்தது அப்போதுதான் வெளியே போய் பார்த்தேன்.
பறவையைப்பற்றி நிறைய விஷயங்கள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
சாதாரணமாகத் தென்படக் கூடியவைதாம். ஆனால் இங்கே அரிதாகவே வருகின்றன. நான் இரண்டாவது முறையாகப் பார்க்கையில் படம் எடுத்திருக்கிறேன். நானும் அவை எழுப்பிய சத்தத்தால் ஈர்க்கப்பட்டே கவனித்தேன்:).
நீக்குசெம்போத்துப் பறவையையும் செம்பகம் என்பார்கள். இதையும் அவ்வாறு சொல்வார்கள் என்பது கூடுதல் தகவல்.
நன்றி கோமதிம்மா.
இப்போதுதான் பார்க்கிறேன். அல்லது இப்போதுதான் அறிகிறேன்! புதிதாக ஏதாவது கண்ணில் பட்டால் படம் எடுத்துக்கொண்டு நகர்ந்து விடாமல் அதைப் பற்றி விவரங்கள் அறிய முற்படுவது ஆச்சர்யம். அதை எங்களோடும் பகிர்ந்து கொள்வது சிறப்பு. அழகிய படங்கள், சுவாரஸ்யமான விவரங்கள்.
பதிலளிநீக்குகாலஞ்சென்ற பறவை ஆர்வலர் திரு. கல்பட்டு நடராஜன் அவர்களை 3 முறைகள் சந்தித்திருக்கிறேன். எடுக்கும் படங்களைத் தகவல்களுடன் பகிர்ந்திட அறிவுறுத்தினார். அவர் காட்டிய வழியில் தொடருகின்றேன். தகவல்களைத் தேடி அறிந்து கொள்வது சுவாரஸ்யமாகவும் உள்ளது.
நீக்குநன்றி ஸ்ரீராம்.
புதியதொரு பறவை வகை - எனக்கு! படம் எடுத்து, தகவல்களையும் தேடித் தந்த உங்கள் பணி சிறப்பு. தொடரட்டும் பகிர்வுகள்.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குஇங்கு வந்த போது பார்க்கில் பார்த்தேன் ஆனால் படம் எடுக்கவில்லை அப்போது கையில் கேமரா இல்லாததால். அதன் பின் பார்க்கக் கிடைக்கவில்லை.
பதிலளிநீக்குபடங்கள் அசத்தல்!!! மிகவும் ரசித்தேன் தகவல்களோடு. மிக்க நன்றி
கீதா
பெங்களூரில் குறிப்பிட்ட பருவங்களில் மட்டும் வருமென நினைக்கிறேன். நீங்கள் பறவையைப் பார்த்திருப்பது அறிந்து மகிழ்ச்சி. நன்றி கீதா.
நீக்குமுன்பே இந்த பதிவுக்கு பதில் அளித்து இருக்கிறேன்.
பதிலளிநீக்குமாயவரத்தில் அதன் சத்தங்களை காணொளி எடுத்தேன்.
மதுரையில் நிறைய தடவை படம் எடுத்து பகிர்ந்து கொண்டு பதிவு போட்டேன், அதிலும் வால்காக்கை என்று திருத்த வேண்டும்.
அப்படியும் முகநூல் மீள் பதிவில் செண்பகம் என்றே குறிப்பிட்டு இருக்கிறேன்.
அடுத்த தடவை வால் காக்கை என்று சொல்லவேண்டும்.
மீள் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி கோமதிம்மா.
நீக்கு