கரையின் மேல்
வந்து மோதுகின்றன
அலைகள்
அளப்பற்ற ஆற்றலுடன்.
ஒவ்வொரு மணற்துகள்களின்
ஊடாகவும்
கர்ஜிக்கின்றன வலிமையுடன்.
ஆக்ரோஷம் அடங்கி மீண்டும்
கடலை நோக்கிப்
பின் வாங்குகையில்
ஆதுரமாகத் தழுவி
விடை பெறுகின்றன.
அமைதிக்கும் ஆர்ப்பரிப்புக்கும்
இடையே
முடிவின்றித் தொடருகின்ற
உறவுக்கு சாட்சியாக
தம் தூய
வெண்சிறகுகளை விரித்து
உயரப் பறக்கின்றன
கருமேகங்களைத் தாண்டி
கடற்பறவைகள்.
அடித்து வீசும் காற்றோடு
கசிந்து மெலிந்தாலும்
மயக்குகிறது இசையாக
ஓயாத அலையோசை.
அடக்க முடியா சக்தியும்
அளக்க முடியா அமைதியும்
எழுதிக் கொண்டேயிருக்கின்றன
நாளும் பொழுதும்
புதுப்புது அத்தியாயங்களை.
வேண்டுகோள் விடுக்கின்றன
ஆழ்கடல் உயிரினங்கள்
யாரும் அவசரப்பட்டு
கடைசிப் பக்கத்தை
தேட வேண்டாமென்று.
**
படமும் கவிதையும்.. சொல்வனம் 136_ஆம் இதழில்..,
நன்றி சொல்வனம்!
**
அருமையான காட்சி உருவகம். 'அளவற்ற' என்கிற வார்தையைதான் கேள்விப்பட்டிருக்கிறேன். 'அளப்பற்ற' புதிது.
பதிலளிநீக்குபுழக்கத்தில் இருக்கும் சொற்பிரயோகமே.
நீக்குநன்றி ஸ்ரீராம்.
கவிதையும் அதற்கேற்ற படமும் இனிமை!
பதிலளிநீக்குநன்றி மனோம்மா.
நீக்குகவிதை நன்று. வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.