என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (85)
#1
ஆங்கிலப் பெயர்: Tailorbird |
நான்கே அங்குல உயரத்தில், நமது கைக்குள் அடங்கி விடக் கூடிய அளவில், பார்க்க அழகான தோற்றத்தைக் கொண்ட சின்னஞ்சிறு குருவி தையல்சிட்டு. தனியாகவோ ஜோடியாகவோ வயல்வெளிகளிலும் தோட்டங்களில் சுற்றித் திரியும். காடுகள், சிறு வனங்களிலும் பார்க்கலாம்.
குறிப்பிட்ட மாதங்களில் அவ்வப்போது நகர்புறத் தோட்டங்களுக்கு வருகை தரும் இவை, க்வீக் க்வீக் எனப் பாட ஆரம்பித்து வெவ்வேறு விதமாக ஒலியெழுப்பிப் பெரிய கச்சேரியே நடத்தி விடும். வெட்கப்பட்டு இலைகளுக்குள் மறைந்திருந்தாலும் இவற்றின் கச்சேரி இருப்பிடத்தைக் காட்டிக் கொடுத்து விடும். [ஆள் நடமாட்டம் தெரியாத சமயத்தில் சுதந்திரமாகக் கிளைகளில் சூரியக் குளியல் எடுத்த பறவைகளை ஜன்னலுக்குப் பின்னால் மறைந்திருந்து எடுத்த படங்களே இவை!]
#2
உயிரியல் பெயர்: Orthotomus sutorius |
சிஸ்டிகாேலிடே (Cisticolidae) குடும்பத்தை சேர்ந்த, கிளைகளைப் பற்றி அமரும் 'பாசரைன்' (Passerine) வகைப் பறவைகளுள் ஒன்றான இதன் உடலின் மேல்பாகம் பழுப்பு கலந்த ஆலீவ் பச்சை நிறத்திலும் கீழ்ப் பாகம் வெள்ளை நிறத்திலும் இருக்கும். தலையின் மேல் பாகம் பழுப்பு வண்ணத்தில் இருக்கும்.
#3
தமிழில் வேறு பெயர்: தையல்காரக் குருவி |
வட்ட வடிவ சிறகுகளையும், உறுதியான கால்களையும், வளைந்த நுனியுடைய கூர்மையான அலகினையும் செங்குத்தாக நிற்கும் சிறிய வாலினையும் கொண்டது.
பெரும்பாலான பாடும் பறவைகளைப் போல இவையும் பூச்சிப் புழுக்களையும் வண்டுகளையும் உண்டு வாழ்பவை.
தையல்காரக் குருவி எனும் பெயர் இது கூடு கட்டுகிற விதத்தை வியந்து அமைந்த காரணப் பெயர். நெசவாளிக் குருவியான தூக்கணாங்குருவியின் திறமைக்குச் சற்றும் குறைந்ததல்ல தையல்காரக் குருவி.
#4
அளவில் பெரிய இலைகளைத் தேர்ந்தெடுத்து ஓரங்களில் துளையிட்டு, சிலந்திக் கூடுகளின் பசை மற்றும் தாவரங்களிலிருந்து பிரித்தெடுத்த நார்களை நூல் போலப் பயன்படுத்தி நேர்த்தியாகவும் வலுவாகவும் ரிவெட் (rivet) அடித்து தைத்து கூட்டை உருவாக்குகிறது.
மற்றுமோர் ஆச்சரியம், இலைகளின் ஓரங்களில் இவை இடும் நுண்ணிய துளைகள் இலை பழுக்காமல் கூடு பச்சை நிறத்திலேயே இருக்க உதவுவதோடு, எதிரிகளிடமிருந்து உருவ மறைப்பு (camouflage) செய்யவும் உதவுகின்றன.
தூக்கணாங்குருவிகள் தோட்டத்தில் கூடு கட்டியதைப் போல இவை கூடு கட்டும் அதிர்ஷ்டம் வாய்க்கவில்லை ஆதலால், அவற்றின் திறமையை உங்களுக்குக் காட்ட இணையத்திலிருந்து எடுத்த சில ஓவியங்களும் படங்களும் ‘கொலாஜ்’ ஆக இங்கே:
இணையத்திலிருந்து.. |
சில நேரங்களில் ஒற்றைப் பெரிய இலையைத் தேர்ந்தெடுத்து சுருட்டி மடக்கி ரிவெட் அடித்து விடும் :).
இணையத்திலிருந்து... |
இந்தியாவில் அதிகம் தென்படும் இப்பறவைகள் ஆசியக் கண்டத்தின் வெப்ப மண்டலப் பகுதிகளில் பரவலாக வாழ்கின்றன. 10 முதல் 14 செ.மீ வரையிலான உயரமும் 6 முதல் 10 கிராம் வரையிலான எடையும் கொண்டவை. ஆண் - பெண் பறவைகள் தோற்றத்தில் வேறுபாடு அற்றவை. இனப் பெருக்கக் காலம் மார்ச் முதல் டிசம்பர் வரையிலும் என்றாலும் இந்தியாவில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான மழைக்காலம் இவற்றுக்கு உகந்தவை. மூன்று முட்டைகள் வரை இட்டு, 12 நாட்கள் அடைகாக்கும். ஆண், பெண் இரு பறவைகளும் குஞ்சுகளுக்கு உணவளிக்கும்.
#5
மிக சுவாரஸ்யமான விவரங்கள். துல்லியமான படங்கள்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குமிக அழகிய புகைப்படங்கள்! தையல்குருவி- தையல்கார குருவி கட்டிய கூடு மிக மிக அழகு! இந்த அபூர்வ விஷயத்தை பார்க்கத்தந்ததற்கு அன்பு நன்றி!!
பதிலளிநீக்குநன்றி மனோம்மா.
நீக்குஎன்ன அழகான படங்கள்!! ஷார்ப்!
பதிலளிநீக்குநம் வீட்டுப் பக்கத்திலும் டெய்லர் பேர்ட் - தையல் குருவி வருகிறது அதே போல தேன்சிட்டும் வருகிறது. ஆனால் படம் எடுக்க முடியவில்லை. எடுக்க முயற்சி செய்கிறேன் என் கேமராவின் திறன் குறைவு.
நல்ல தகவல்கள். நம்மை விட மிக அழகாகத் தைக்கிறது பாருங்க. இயற்கை இயற்கைதான் அதை விஞ்ச முடியவே முடியாது.
கீதா
ஆம், நம்மை விட அழகாகவே தைக்கிறது. ஆச்சரியங்கள் நிறைந்தது இயற்கை. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
நீக்கு