ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017

‘வின்டேஜ் பெங்களூர்’ ஓவியங்களும்.. சில நினைவலைகளும்..

மெட்ரோ, சாலை விரிவாக்கம், அதற்காக இழந்த மரங்கள், எங்கெங்கும் முளைத்திருக்கும் ஷாப்பிங் மால்கள், எந்தப் பக்கம் திரும்பினாலும் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகள், ஐடி வளாகங்கள்.. இவைதாம் தோட்ட நகரம் என அறியப்பட்ட பெங்களூரின் இன்றைய அடையாளங்கள். காலத்திற்கு அவசியமான மாற்றங்கள் என என்னதான் நியாயப் படுத்தினாலும் பெங்களூர் தன் பழைய அழகை எப்போதோ தொலைத்து விட்டிருப்பதை பல காலமாக இங்கே குடியிருப்பவர்கள் நிச்சயம் ஒத்துக் கொள்வார்கள். 25 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பெங்களூரை அவ்வப்போது நினைத்துப் பார்க்காமல் இருக்க முடிவதில்லை ரொம்பப் பழகிய இடங்களுக்குச் சென்று வருகையில்.

நேற்று முன் தினம், ஒரு உணவகத்தில் அன்றைய பெங்களூரை நினைவு படுத்தும் விதமான ஓவியங்களைக் கண்டதும் மகிழ்ச்சி தாங்கவில்லை. அவை சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய பெங்களூரைச் சித்தரிப்பவையாக இருந்தன. நின்று நின்று ஒவ்வொன்றையும் ரசித்த பின்னர் படம் எடுத்தேன் உங்களுடன் பகிர்ந்து கொள்ள. பிரபல கார்ட்டூனிஸ்ட் பால் ஃபெர்னான்டஸ் வரைந்த ஓவியங்கள் இவை. பின்னர் இணையத்தில் தேடியபோது அவரது படைப்புகள் மேலும் பல பார்க்கக் கிடைத்தன எனினும் நான் படமாக்கியவற்றை மட்டும் இங்கே பகிர்ந்துள்ளேன். என் கணிப்பின் படியே இவை 1960-70_களின் பெங்களூர் என்பதும் தெரிய வந்தது. ஓவியங்களுக்கு நேரெதிரே இருந்து எடுக்க முடியாமல் இருக்கைகள் தடுக்க, நிற்க முடிந்த இடங்களில் மின் விளக்குகளின் பிரதிபலிப்பு விழ, சமாளித்து எடுத்த கோணங்களில்.. படங்கள்:

#1
எம்.ஜி. ரோட் என அறியப்படும் மகாத்மா காந்தி சாலையில், ஹிக்கின்பாதம்ஸ் புத்தகக் கடை


எத்தனையோ முறை சென்றிருக்கிறேன். அருகே இருந்த பல பிரபல கடைகள், திரையரங்குகள் காணாமல் போயிருக்க இன்றைக்கும் தாக்குப் பிடித்து அதே கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

#2
எம்.ஜி ரோடில் காஃபி ஹவுஸ்


பிரிகேட் மற்றும் எம்.ஜி ரோடில் ஷாப்பிங் முடித்தோமா, போகலாம் காஃபி ஹவுஸ். வெளியூர்களிலிருந்து பள்ளி, கல்லூரி, அல்லது பழைய அலுவலக நண்பர்கள் வருகிறார்களா? கண்டுபிடிக்க அதிக சிரமமில்லாத இடம் ஆகையால் இங்கிருக்கும் மற்றவர்களுக்கும் தகவல் தந்து, அனைவரையும் வரச்சொல்லவும், ஒன்று கூடி மணிக்கணக்கில் பேசி மகிழவும் காஃபி ஹவுஸ். காஃபியோடு சிற்றுண்டிகளும் நன்றாக இருக்கும்.

சுமார் எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த இடத்தில் இயங்கிய இக்கடைக்கு, பத்தாண்டுகள் முன் வரைக்கும் சென்ற நினைவிருக்கிறது. லீஸ் முடிந்து போகவே இப்போது வேறிடத்திற்கு (சர்ச் ஸ்ட்ரீட் என நினைக்கிறேன்) மாற்றி விட்டதாகக் கேள்வி.

இன்னொரு கவனிக்கத் தக்க அம்சம் என்னவெனில் காலத்திற்கேற்ப எந்த மாற்றங்களும் செய்து கொள்ளாமல் பழைய உள் அலங்காரம், இருக்கை மேசைகளுடனேயே கடைசி வரை இயங்கி வந்தது இந்த உணவகம்.

#3
ப்ளாஸா தியேட்டர்

எம்.ஜி ரோடில், 1936 முதல் 2005ஆம் ஆண்டு வரை இயங்கி வந்த திரையரங்கம். 2003_ல் வெளியான ‘கல் ஹோ ந ஹோ’ இந்தித் திரைப்படத்தை இங்கே பார்த்திருக்கிறேன்.

#4
விதான செளதா

90-களில் விருந்தினர்கள் வரும்போது வார இறுதிகளில்  அழைத்துச் செல்லும் முக்கிய இடம். ஞாயிறு மாலை சர மின் விளக்குகளால் ஒளிரும். சுற்றிப் பார்த்து விட்டு, காற்றாட அமர்ந்து கதைப் பேசிப் பொழுதைப் போக்க மக்கள் கூட்டம் அலை மோதும்.

#5
அழகு கொஞ்சும் ஹல்சூரு ஏரி
மோட்டர் படகில் சுற்றி வரலாம் இன்று. 
தொலைவில் இருந்து பார்க்கையில், சுற்றி வர இருக்கும் சாலைகளின் ஓரமாகக் சாலையோரமாகக் கடந்து செல்லுகையில் பார்க்க அழகாகத்தான் தெரிகிறது இன்றைய ஹல்சூரு ஏரியும் .   ஆனால் அருகே போய்ப் பார்த்தல் தெரிந்திடும் அதன் அவல நிலை.

சூழல் மாசு குறித்து நான் எழுதிய பதிவுகள் சில இங்கே:

2005ஆம் ஆண்டில் ஒரு முறையும், 2016_ல் மற்றொரு முறையுமாக ஏரியில் கலக்கும் ரசாயனக் கழிவுகளால் ஆயிரக் கணக்கான மீன்கள் மடிந்து மிதந்தது வரலாற்றில் பதிவான வெட்கக் கேடான சம்பவங்கள்.

#6
கமர்ஷியல் ஸ்ட்ரீட்

பெங்களூரில் எப்போதும் பிஸியாகக் காணப்படும் தெருக்களில் ஒன்று. செருப்புகள், துணிகள், பைகள், உணவகங்கள், நகைகள், அழகுப் பொருட்கள் என இவற்றின் குறுக்குத் தெருக்களும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும். இருபது ஆண்டுகளுக்கு முன் தீபாவளிக்கு ஒரு மாதம் முன்னதாகவே கமர்ஷியல் ஸ்ட்ரீட்டும், பிரிகேட் ரோடும் களை கட்டி விடும். மின் விளக்குத் தோரணங்கள் ஜொலிக்க நள்ளிரவு வரையிலும் வியாபாரம் நடக்கும். கூப்பன், குலுக்கல் என அமர்க்களப்படும்.

இப்போதும் கூட இவர்களுக்கென்றே இருக்கும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையைக் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. ஆனாலும் ஆங்காங்கே முளைத்தபடியே இருக்கும் ஷாப்பிங் மால்கள், பெருகி விட்ட ஜனத்தொகை, போக்கு வரத்து நெரிசல் ஆகியவற்றால் அவரவர் வாழும் இடங்களுக்கு அருகிலேயே தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள் மக்கள். மேலும் மால்களுக்குச் செல்வது வாரயிறுதிகளின் பொழுதுபோக்கு அம்சமாகி விட்டுள்ள நிலையில்,  ஷாப்பிங் செய்யும் மக்களின் பொதுவான மனநிலை ‘எப்போதேனும் தேவைப்படும்’ எனக் கண்ணில் காண்பதையெல்லாம் வாங்கிக் குவித்துக் கொள்வதாக இருக்கிறது.

ஆனால் தேவைக்கென்று கடை கடையாய் ஏறி இறங்கி, பொருட்களைத் தேடித் தேடி வாங்கிய காலங்கள் அதி சுவாரஸ்யமானவை.  அவற்றில் கமர்ஷியல் தெருவோடு, சஃபீனா ப்ளாஸாவின் வாரயிறுதி விற்பனைகள், பிரிகேட் ரோட், எம்.ஜி ரோட், மல்லேஸ்வரம் எட்டாவது க்ராஸ், சம்பிகே ரோட், ரஸல் மார்க்கெட் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம். தெற்கு பெங்களூரில் வசிப்பவர்கள் ஜெயநகரைக் கொண்டாடுவார்கள்.

#7
ரஸல் மார்க்கெட்

சிவாஜி நகர் ரஸல் மார்க்கெட்டும் அதையடுத்த வளாகத்திலிருக்கும் “ஆடம்ஸ்” கடையும் நான் 90_களில் அடிக்கடி சென்ற இடங்கள். ஐந்தாண்டுகளுக்கு முன் அங்கே தீ விபத்து ஏற்பட்ட சமயம், அதற்காகவே அங்கு சென்று நான் எடுத்த படங்களுடனான பதிவொன்று இங்கே:
மீண்டு வந்த ரஸல் மார்க்கெட்டும் பெங்களூர் ஏழை வியாபாரிகளும்

#8
சிவாஜி நகர்


# 9
பெங்களூர் பேலஸ்

இங்கேதானே இருக்கிறது.. எங்கே போகப் போகிறதென இன்னும் பார்க்காமலே இருக்கும் அரண்மனை:)!

#10
வாகனங்களுக்குப் போட்டியாக குதிரை வண்டிகள் ஓடும் செளத் பரேட்


#11
நள்ளிரவில் தள்ளாட்டம்.. ஷுலே காவல் நிலையம்

#12
உயர் கல்விக்கு சென்ட்ரல் காலேஜ்

***

14 கருத்துகள்:

  1. அழகாக வரையப்பட்டு இருக்கிறது.
    முதல் படத்தில் டிராபிக் போலீஸ்க்காரர் மீசை, காஃபி ஹவுஸ் சர்வர் கையில் கொண்டு வரும் காஃபி கப், தோசை எல்லாம் அழகு. அந்தக்கால வண்டிகள், கார்கள் என்று காலத்தை காட்டு கண்ணாடி போல் ஓவியம் அழகு.
    ஒவ்வொரு படத்தையும் ரசித்து பார்த்தேன்.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் ரசித்துப் பார்த்ததை அறியும் போது அரசு சாரின் ஓவியங்கள் நினைவுக்கு வருகின்றன. நன்றி கோமதிம்மா. ஆம், இவை காலத்தைக் காட்டும் கண்ணாடியாக உள்ளன.

      நீக்கு
  2. நினைவுகளைக் கிளறும் ஆசாகான படங்கள். எம்.ஜி ரோடின் குனாதிசயமே மாறிவிட்டது (பெங்களூரின்?). காபி ஹவுஸ் இருக்கிறதோ?

    பேலஸ் எங்கே இருக்கிறது? நானும் பார்த்ததே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெங்களூரேதான் மாறி விட்டது. எம்.ஜி. ரோடின் அழகு போயே போய் விட்டது. காஃபி ஹவுஸ் போனதுண்டா? இப்போது சர்ச் ஸ்ட்ரீட்டில் இயங்குவதாகக் கேள்வி. பேலஸ் வஸந்த் நகரில் (கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 1 கி.மீட்டர்தான்) உள்ளது. எண்ணற்ற முறைகள் கடந்து போயிருக்கிறேன். செல்லும் நேரம் இன்னும் வரவில்லை:). நன்றி. இந்த முறை ஜி ப்ளஸ் ஐடியிலிருந்து வந்திருக்கிறீர்கள்!

      நீக்கு
  3. பெங்களூரு பழக்கமில்லை என்பதால் எனக்கு அருமை தெரியவில்லை!! உங்கள் மகிழ்ச்சியில் பங்கு கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. பெங்களூரு பற்றிய நினைவலைகள் என்னை ஒரு பதிவு எழுத வைத்தது சுட்டி தருகிறேன் பாருங்கள் ப்ளீஸ் /http://gmbat1649.blogspot.com/2016/09/blog-post.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி. இந்த ஓவியங்களை ரசித்தது போலவே உங்கள் பதிவையும் ரசித்தேன்.

      நீக்கு
  5. அருமையான வரைபடங்கள்....அந்த இடங்களை படிக்கும் போது இப்பொழுது நான் செல்லும் காட்சிகள் நினைவுக்கு வருகின்றன...

    பதிலளிநீக்கு
  6. பெரும்பான்மையான படங்களில் கட்டிடங்களும், வாகனங்களும் பழமையின் அடையாளமாக உள்ளது. அழகானவற்றை இனி ஓவியங்களில்தான் பார்க்க முடியும்போல. மாற்றங்கள் பெருநகரங்களில் மிகத்துரிதமாக நிகழ்கின்றன. கட்டிடங்கள், சாலைகள் மட்டுமல்ல, மனித உறவுகளும் கூட!

    மெல்லிய சந்தோஷம், திருநெல்வேலியில் அவ்வளவு பெரிய மாற்றம் தெரியவில்லை!! (தற்போது பக்ரீத் விடுமுறைக்காக இந்தியாவில், வீராணம் கிராமத்து வீட்டில் இரண்டு மைனாக்களுடன் :-).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருநெல்வேலியிலும் நிறைய மாற்றங்கள். கிராமங்களில் அதிகம் இல்லாதிருக்கலாம். மைனாக்கள் பறக்கும் போது கவனிக்கவும்:).

      கருத்துக்கு நன்றி.

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin