செவ்வாய், 8 ஜூலை, 2014

நதியில் என் ஓடம்

த்தனை ஆயிரம் இரவுகளோ அறியேன்
ஓடும் நதியில்
ஓடத்தில்
உறங்கிக் கொண்டிருக்கிறேன்.
அழகிய சோலைகளின் பக்கம்
அமைதியில் உறைந்த வனங்களின் பக்கம்
இறங்குவேன் என்றெண்ணி
ஓடம் கரை தொட்டு நின்ற கணங்களை
கவனிக்கத் தவறி
உறங்கிக் கொண்டிருக்கிறேன்.

துள்ளும் மீனைப் பாராமல்
புள்ளின் ஒலியைக் கேளாமல்
வெயிலை மழையை உணராமல்
வானின் நீலத்தை, விரையும் மேகத்தை
நிலவை, நட்சத்திரங்களை ரசிக்காமல்
கனவுகளைச் சுவாசித்து
சுளித்தோடும் நீரில்
பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

என் கனவில் சந்தித்து
கைகளைக் குலுக்கிக் கொள்கிறார்கள்
நான் அறிந்த ஆனால்
ஒருவரையொருவர் அறியாத மனிதர்கள்.
சந்திக்கிறேன் நானும்
பரிச்சயமான ஆனால்
அதுவரை சந்தித்திராத நபர்களை.
தினம் ஒரு கனவு
தினம் ஒரு நிகழ்வைச் சுற்றி
முடிவென்பது இல்லாமல் ஆனால்
தொடங்கிய புள்ளியிலிருந்து விலகாமல்.

நீங்காத உறக்கத்தால்
பகல்களும் இரவுகளாய்க் கழிய
சேகரமான கனவுகள் எல்லாம் சேர்ந்து
என் தலையைப் பாரமாக்கிய ஓர் இரவில்
விழித்துக் கொள்கிறேன்
விரும்பி நதியில் குதிக்கிறேன்
புத்துணர்வுடன்
எழும்பி விண்ணில் பறக்கிறேன்
எல்லைகளற்றப் பிரபஞ்சத்தில்
இறகைப் போல் மிதக்கிறேன்
ஆனந்தம் பிறக்கிறது
பறக்கப் பிடிக்கிறது
தலைப் பாரம் இறங்கி விட்டது.

நிலவின் பிம்பம் போல்
நதியில் என் ஓடம்
தொலைவில் தெரிகிறது
அலையின் போக்கில்
செல்கிறது அசைந்தாடி
இப்போதும்
நான் இல்லாமலும்

***

படம் நன்றி: இணையம்

7 ஜூலை 2014 நவீன விருட்சத்தில் வெளியான கவிதை. நன்றி நவீன விருட்சம்!

15 கருத்துகள்:

 1. குறியீட்டுக் கவிதை மிக மிக அற்புதம்
  படகு உடன் படும் பல்வேறு விஷயங்களை
  பட்டியலிட்டு ரசித்தேன்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. // எல்லைகளற்றப் பிரபஞ்சத்தில் இறகைப் போல் மிதக்கிறேன்... //

  ஆகா...!

  பதிலளிநீக்கு
 3. அக்கா...
  கவிதை அருமை...

  எப்படியிருக்கீங்க அக்கா..?

  பதிலளிநீக்கு
 4. மாயை ஒன்று மாயாஜாலம் செய்கிறது!

  பதிலளிநீக்கு
 5. @Innamburan S.Soundararajan

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 6. @Innamburan S.Soundararajan

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin