Monday, January 20, 2014

சராசரி மனிதர்களின் மீது நெய்யப்பட்ட சம்பவங்களின் கதைகள் - நன்றி திரு. ரிஷபன்!

டை மழை போன்றதானது மனிதருக்கிடையேயான பல்வேறு உணர்ச்சிப் பிரவாகங்கள். வானவில்லாய் அவ்வப்போது சில தருணங்கள் வந்துவிட்டுப் போகின்றன. ஒரு சரிவின் விளிம்பில்.. நிராதரவின் எல்லையில்.. துக்கக் கனவின் உச்சியில்.. ஏதேனும் ஒரு கரம் நீண்டு கைதூக்கி விட்டுப் போகிறது. ஒரு வரியோ.. ஒரு கவிதையோ.. ஒரு கதையோ.. விடை தேடி சலித்துப் போன மனசுக்கு மயிலிறகு ஒத்தடம் தந்து விடுகிறது.

என்ன சொன்னாலும் என்னதான் மறுத்தாலும் நமக்கு உணர்வின் ஆதிக்கம் இருக்கிறது. வார்த்தைகளின் தாக்கம் இருக்கிறது. தேர்ந்தெடுத்த வார்த்தைகளின் அழகான அணிவகுப்பில் சட்டென்று ஒரு மந்திரப் புன்னகை மலர்ந்து விடுகிறது. பன்முகத் திறன் கொண்ட ராமலக்ஷ்மியின் 'அடை மழை' அத்தகைய ஜாலங்களை உள்ளடக்கிய கதைகளின் அழகிய முதல் தொகுப்பாய் வந்திருக்கிறது.

கதைகளுக்காக அலைய வேண்டிய நிர்ப்பந்தம் இல்லை அவருக்கு. யதார்த்த வாழ்வின் தினசரி சம்பவங்களில் 'இதோ.. நான் இருக்கிறேன்.. என்னைப் பற்றி எழுதேன்' என்று அவர் முன் வந்து ஒப்புக் கொடுக்கின்றன.

சரளமான நடையும், இயல்பான வார்த்தைகளும், பூமியில் கால் பாவாத மனிதர்களைச் சொல்லும் மிரட்டல் உத்தியற்று சராசரி மனிதர்களின் மீது நெய்யப்பட்ட சம்பவங்களின் தொகுப்பாய் இக்கதைகள்.

எழுத்தாளருக்கு என்று சில பொறுப்புகள் இருக்கின்றன. எதையும் எழுதிவிட முடியாது. முதல் வாசகரும் அவரே. வாழ்வின் பிரச்னைகளைக் கூர்ந்து நோக்கும்போது தீர்வுகளை சில நேரம் சொல்லாமல் சொல்லிப் போகும் ஜாலம் அவரிடம் உண்டு. மிகச் சிறந்த கதைகளின் சிறப்பு அம்சம் அதுவே. அடிப்படையில் மனித நேயமும் விவரிப்பதில் ஒரு கோர்வையும் வாய்த்து விட்டால் சிறுகதை வாசிப்பவர் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விடும். இத்தொகுப்பிலும் அதுவே பல கதைகளில் நிகழ்கின்றது.

மேல்தட்டு.. கீழ் தட்டு என்ற பாகுபாடின்றி இவரது கதைகள் பல்வேறு மாந்தர்களைப் பற்றியும் பேசுகின்றன. பிரச்னைகளை சொல்கின்றன. ஒரு விடியலின் நம்பிக்கை ஒளியையும் காட்டித் தருகின்றன. அல்லது 'இவர் வாழ்வில் இப்படி ஆயிற்று' என்று சொல்லி அத்தகு சூழலில் வாசகன் வர நேர்ந்தால் என்ன செய்ய வேண்டும் என்று உபதேசமாய் இல்லாமல் தோளில் கை போட்டு சினேகிதமாய் காட்டித் தருகின்றன.

சின்னச் சின்னத் தலைப்புகள். அதுவும் ஒற்றை வார்த்தையில்தான் பெரும்பாலும். அவசரமாய் சொல்லிப் போவதில்லை. கதைக் களம் நிதானமாய் .. வர்ணனைகளில் அடர்த்தியுடன்.. முடிவு என்ன ஆகும் என்கிற தவிப்பு சிறிதாவது வாசகனிடம் வந்து விடுகிற அளவு உணர்வு பூர்வமாய் கூட்டிப் போகிற எழுத்து நேர்த்தி.

கதைகளை ஒவ்வொன்றாய் சொல்லி என்ன ரசித்தேன் என்று விவரிக்கலாம். அதுவே தான் வாசிக்கிற ஒவ்வொருவருக்கும் நேரப் போகிறது என்பதால் கொஞ்சம் விலகி நின்று உங்களுக்கு வழி விடுகிறேன். வாசித்து முடித்ததும் சேர்ந்து கை தட்டலாம் நாம். இனி வரப் போகும் தொகுப்புகளுக்கும் சேர்த்து அட்வான்ஸ் வாழ்த்துகளுடன்.


-எழுத்தாளர் ரிஷபன்,
ஸ்ரீரங்கம், திருச்சி.

----

மதிப்புரை வழங்கி தொகுப்பைக் கெளரவித்திருக்கும் திரு. ரிஷபன் அவர்களுக்கு என் அன்பு நன்றி.


22 comments:

 1. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  என் எழுத்துலக மானஸீக குருநாதர் திரு ரிஷபன் அவர்களின் கருத்துக்களைப் படித்து மகிழ்ந்தேன்.

  அவருக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

  ReplyDelete
 2. வாழ்த்துகள் எப்போதும் !

  ReplyDelete
 3. இனி வரப் போகும் தொகுப்புகளுக்கும் சேர்த்து அட்வான்ஸ் வாழ்த்துகளுடன்.
  வானவில்லாய் மலர்ந்த அருமையான விமர்சனங்களுக்குப் பாராட்டுக்கள்..!

  ReplyDelete
 4. திரு ரிஷபன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. மதிப்புரை படித்தேன் (புத்தகத்திலும்). வாழ்த்துகள்.

  ReplyDelete
 6. நானும புத்தகத்தில் ரிஷபண்ணாவின் முன்னுரையைப் படித்தேன். அவருக்கே உரித்தான இனிய நடையில் அழகாகச் சொல்லியிருக்கிறார். உங்களுக்கு மகிழ்வுடன் என் நல்வாழ்த்துகள் மீண்டும். நூலை முழுமையாகப் படித்தபின் விமர்சனப் பகிர்வு வெளியிட உத்தேசம்!

  ReplyDelete
 7. திரு ரிஷபன் அவர்களுக்கு நன்றி. ஆசிகள் பெற்ற ராமலக்ஷ்மியின் கதைகளுக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 8. மிகச் சிறப்பான முன்னுரை..... பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி......

  ReplyDelete
 9. மதிப்புரையின் வழியே புத்தகத்தின் மதிப்பை எளிதாக விளங்கிக் கொள்ள முடிகிறது!

  ReplyDelete
 10. @பால கணேஷ்,

  மகிழ்ச்சி. காத்திருக்கிறேன் உங்கள் கருத்துக்கு. நன்றி கணேஷ்:).

  ReplyDelete
 11. @வல்லிசிம்ஹன்,

  ஆசிகள் பெற்றவை.. அழகாகச் சொல்லி விட்டீர்கள். மிக்க நன்றி வல்லிம்மா.

  ReplyDelete
 12. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

  ReplyDelete
 13. ரிஷ்பன் அழகாய் முன்னுரை செய்து இருக்கிறார். அவருக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

  உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
  மேலும் மேலும் புகழ் சேர வாழ்த்துக்கள்.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin