
இரு பக்கத்தினின்றும்
தாராளமாக
இறையப்படுகின்றன வார்த்தைகள்
பறவைகளுக்கான
தானியத்தைப் போல
வேடிக்கைக்குக் காத்திருந்தவர்கள்
கொத்திக் கொத்தி ருசித்தனர்
புறாக்களைப் போல
ஒவ்வொரு
மணிக்குள்ளிருந்தும்
மனிதப் பண்புகள்
சிரிப்பாய்ச் சிரிக்க
உண்டு களித்துப்
புறாக்கள் கொழுக்க
நல்லுறவும்
நேசக்கரம் இனி நீளுவதும்
கேள்விக் குறிகளாக
இடைவிடாது இறைத்ததில்
கைகள் சோர்ந்து,
தானியக் கூடைகளும் காலியாக
யுத்தம் முடிவுக்கு வருகிறது
புறாக்கள் பறந்து விட்டிருந்தன
போர்க்களமெங்கும்
அவை விட்டுச் சென்றிருந்த
எச்சங்கள்
காலத்தாலும்
கழுவ இயலா
கசப்பான மிச்சங்களாக.
***
படம்: இணையத்திலிருந்து..
29 ஆகஸ்ட் 2011 உயிரோசை இதழில்.., நன்றி உயிரோசை!