வெள்ளி, 2 ஏப்ரல், 2010

கட்டிப் போட்டக் கதைகள்

தைகள் சுகானுபவம். வாசிக்கும் போது காட்சிகளையும் கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் நாமே கற்பனை செய்து கொள்வது சுவாரஸ்யம் என்றால், சொல்லிக் கேட்கையில் சொல்லுபவர் திறமைசாலியானால் அந்தக் கதைக்கு உள்ளே நாமும் விழுந்து விடுவோம். 

ஆரம்பப்பள்ளிக் காலத்தில் எங்களைப் பள்ளிக்கு அழைத்துச் சென்ற வயதான ஓட்டுநர் பளபளக்கும் வழுக்கைத் தலையும், முறுக்கி விட்ட பெரிய வெள்ளை மீசையுடனுமாய் இருப்பார். அவரை மீசைக்கார தாத்தா என்றே அழைப்போம். கடைசி நபர் காருக்கு வந்து சேரும் வரை மற்றவருக்கு மந்திர தந்திரக் கதைகளை தினம் சொல்லுவார். ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி ரேஞ்சுக்கு ஒரு தலைப்பு. அதேபோல அவர் போடும் விடுகதைகள் எவையும் இரண்டு வரியில் இருக்காது. ஒரு பத்து வரிப் பாடலாய் கவிதையாய் இருக்கும். எவற்றையும் இவர் படித்தறிந்திருக்க வாய்ப்பில்லை. சொந்தக் கற்பனையாகவோ செவிவழிக் கதைகளாகவோதான் இருந்திருக்க வேண்டும். எப்படியானாலும் அவரிடம் குடியிருந்த தமிழுக்கும் திறமைக்கும் இப்போது வைக்கிறேன் ஒரு வணக்கம். 

ஹி. நான் கூட ஒரு நல்ல கதை சொல்லியாய் 'இருந்தேன்'. பதின்ம வயதில் என் தம்பி தங்கைகள், ஊரிலிருந்து வரும் அத்தைகள் மற்றும் சித்தி, சித்தப்பா குழந்தைகள் எல்லோருக்கும் நான் கதை சொல்லிக் கேட்பதென்றால் கொள்ளைப் பிரியம். குறிப்பாக சாக்லேட் ஹவுஸ் என ஒரு அட்வென்ச்சரஸ் கதை சொல்லுவேன். கேட்கும் 'அத்தனை' பேரையும் கதையில் ஒரு கதாபாத்திரமாக்கி விடுவேன். கண் இமைக்காமல் வாய் மூடாமல் கேட்பார்கள். இத்தனை வருடங்களுக்குப் பிறகும் அவர்கள் அடிக்கடி அதை நினைவுகூர்ந்து மகிழ்வதுண்டு. நான்கு வருடம் முன்னே தம்பிக்கு திருமணமான புதிதில் அவன் மனைவி நான் சற்றும் எதிர்பாராத விதமாகத் திடீரென ‘அக்கா எனக்கும் அந்த சாக்லேட் ஹவுஸ் கதை சொல்றீங்களா?’ எனக் கேட்டதுதான் ஹைலைட்:))! மகனுக்கு ஏழெட்டு வயது வரை கதை சொல்லுவேன். ஆர்வமாகக் கேட்பான் என்றாலும் அந்த அளவுக்கு ஈர்த்த மாதிரித் தெரியவில்லை! ஒரே ஒரு கதாபாத்திரமாக அவனை மட்டும் உள்ளே கூட்டிச் சென்றது அத்தனை சுவாரஸ்யப் படுத்தவில்லையோ என்னவோ:)! 

'எல்லாம் சரி. இப்போது எப்பூடி' எனக் கேட்டால் முத்துச்சரத்தில் சிறுகதைகளின் எண்ணிக்கை 'அப்பூடியொன்றும் தெரியவில்லையே' என்கின்றது. கதையாய் சொல்ல வேண்டியவற்றையும் கூட கவிதையாய் சொல்லி முடித்துவிடவே விழைகிறது மனம். இந்த சோம்பேறித்தனத்திலிருந்து விடுபட்டு கதைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிக்கிறேன். 

அடுத்து வாசிப்பு என வருகையில் பகிர்ந்திடும் அளவுக்கு அது அத்தனை விசாலமானது அல்ல என்றாலும் ஆதிமூலக்கிருஷ்ணனின் வலைப்பூவுக்காக அளித்த பேட்டியில் 'ஒவ்வொரு காலக் கட்டங்களின் போதும் உங்கள் மனதோடு தங்கிவிட்ட சில புத்தகங்களை நினைவுகூர முடியமா?' எனும் கேள்விக்குப் பதிலாகச் சொல்லியிருந்தவற்றையே இங்கு சற்று விரிவாகப் பகிர்ந்து கொள்கிறேன். 

தமிழை எழுத்துக் கூட்டிப் படிக்க ஆரம்பித்த போது தினத்தந்தியின் சிந்துபாத் கதையைத்தான் முதலில் தொடங்கினேன் என்று நினைக்கிறேன். ஆறேழு வயதிருக்கையில் விடுமுறைக்காக என்னையும் அண்ணனையும் தூத்துக்குடியிலிருந்த அத்தையின் வீட்டுக்கு அப்பா பஸ் ஏற்றி விட்டு அது கிளம்பும் சமயத்தில் சர்ப்ரைசாகக் கொடுத்த பைண்டு செய்யப்பட்ட சிறுவருக்கான சித்திரக் கதைகள்தான் முதல் வாசிப்பின்பம். மூன்று பன்றிக்குட்டிகளையும், ஏழுசித்திரக் குள்ளர்களையும் பின்வந்த காலங்களில் வெவ்வேறு பதிப்பகங்களின் வாயிலாகச் சந்திக்க நேர்ந்ததென்றாலும் அந்த முதல் வாசிப்பின் படங்கள் அகலவில்லை கண்களிலிருந்து. அப்பா நெல்லை ஊசிக்கோபுரத்தின் எதிர்வரிசையிலிருக்கும் டயோசீசன் புக் செண்டர் அழைத்துச் சென்று சிறுவர் புத்தகங்கள் வாங்கித் தருவார்கள். எழுபதுகளில் வெளிவந்த சிறுவர் மலர்களில் அம்புலிமாமா,ரத்னபாலா, பாலமித்ரா,சம்பக், பூந்தளிர், அணில் மற்றும் கல்கி நிறுவனத்தின் கோகுலம். கோகுலத்தின் முதல் இதழ் வெளிவந்த போது அப்பா என்னை அழைத்துக் கையில் தந்த நாள் இன்னும் நினைவில். அவரது வழிகாட்டல் எனது ஒன்பது வயதுக்குமேல் கிடைக்காது போனது. இருப்பினும் கூட்டுக் குடும்பத்தில் சின்ன பெரியப்பாவினால் தொடர்ந்து எல்லாப் புத்தகங்களும், வார மாதப் பத்திரிகைகளும் வாங்கப் பட்டதால் வாசிப்பு தொடர்ந்தது. இதிலே பாலமித்ரா, ரத்னபாலாவில் என் கருத்துக்கள் வாசகர் கடிதங்களாய் வெளிவந்துள்ளன. சன்மானமாக ரூ.2 அல்லது 5 அனுப்புவார்கள்! அப்புறம் அப்புசாமியும் சீதாப்பாட்டியும் பீமாராவ் ரசகுண்டுவுடன் அசத்தினார்கள் எங்களை சிலகாலம். துப்பறியும் சங்கர்லாலும் தமிழ்வாணனும் பிடித்தமானவர்களாய் இருந்ததற்கு கதைகளில் வரும் அழகுத் தமிழ் பெயர்களும் தமிழ்வாணனின் எளிமையான எழுத்து நடையும் முக்கிய காரணமாக இருந்தன. 

இந்திரஜால காமிக்ஸும் முத்து காமிக்ஸும் ஒரு புதிய மாய உலகத்துக்குள் வைத்திருந்தது அப்போதைய சிறுவர்களை. இரும்புக்கை மாயாவி; ரிப் கெர்பி-டெஸ்மாண்ட்; மாண்ட்ரேக்-லொதார்-ஓஜோ, நர்தா-கர்மா; வேதாளம்-டயானா, அவரது குதிரை கேசரி-நாய் வாலி மற்றும் அவர் வளர்த்த பொன்னிற முடிச் சிறுவன் ரெக்ஸ் ஆகிய கதாபாத்திரங்கள் இன்றளவிலும் மறக்க முடியாதவை. ஒருநாள் கண் விழிக்காத ப்ரெளன் நிற நாய்க்குட்டியைத் தடவிக் கொடுத்தபடியே தம்பி எங்களது முகத்தைப் பார்த்திருக்க, குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடி யோசித்து யோசித்து ஒவ்வொருவரும் ஒரு பெயரைச் சொல்ல, அரைமணிக்கும் மேலாக அத்தனையும் ‘ஊஹூம்’ ஆகிக் கொண்டிருந்தன. அப்போது அங்கு திடுமெனப் பிரவேசித்த சின்ன அத்தை பிரச்சனையைக் கேட்டுவிட்டு சட்டென ‘ரெக்ஸ்’ என்றார்கள். “ஹோ” எனும் பெருங்கூச்சலுடன் ஒருமனதாகப் பெயர் அங்கீகரிக்கப்பட்டு பெயர்சூட்டும் வைபவம் இனிதே நடந்தேறியது. அப்படியாக இருந்தது காமிக்ஸின் தாக்கமும், அவற்றில் வரும் கதாபாத்திரங்களின் மீதான நேசமும். 

எங்களுக்குப் பிடித்தமான விளையாட்டுக்களில் ஒன்று, இந்தக் கதைகளில் வரும் வசனம் எதையாவது ஒருவர் சொல்ல மற்றவர் 'யார் எந்தக் கதையில் பேசியது' என்பதைச் சரியாகக் கண்டுபிடிக்க வேண்டும். நேரம் போவது தெரியாமல் உற்சாகமாய் விளையாடுவோம். பெரியவர்களும் சேர்ந்து கொள்வார்கள் என்பதற்கு மேற்படி நாமகரண சம்பவமே அத்தாட்சி. சமீபத்தில் பதிவுலக நண்பர் ஜீவ்ஸ் தனது வார இறுதிகளை காமிக்ஸ் படித்துக் கழிப்பதாகக் கூறினார். சுமார் 150 காமிக்ஸ்களை அடுக்கி வைத்துக் கொண்டு அவற்றிலே மூழ்கித் திளைக்கிறாராம். அ.கொ.தி.க-வை சுவாரஸ்யமாய் வாசித்துக் கொண்டிப்பதாய் சொன்னபோது ‘அவையெல்லாம் இன்னுமா வெளிவருகின்றன’ எனக் கேட்டேன். 'எல்லாமே அந்தக்காலத்தில் வந்தவற்றின் மறுபதிப்புகளே. வேண்டுமா உங்களுக்கும்?’ என்றார். இப்போது வாசித்தால் அதே த்ரில் கிடைக்குமா தெரியவில்லை. ஒவ்வொரு காலகட்டத்தில் நமக்கிருக்கும் ஆர்வங்கள், விருப்புக்கள் மாறிக் கொண்டே போகிறதுதான். எது எப்படியாயினும் அந்தந்த காலங்களில் அவை தந்த மகிழ்ச்சியும், அதனுடனான நினைவுகளும் பொய்யில்லாப் பொக்கிஷங்களே. 

பிறகு எண்பதுகளில் தொடராக வெளிவந்த சுஜாதாவின் கரையெல்லாம் செண்பகப்பூ, பிரிவோம் சந்திப்போம், இரத்தம் ஒரே நிறம், கனவுத் தொழிற்சாலை, காகிதச் சங்கிலிகள்; ஸ்டெல்லா புரூஸின் அது ஒரு நிலாக்காலம், ஒருமுறைதான் பூக்கும்; பாலகுமாரனின் 'ஆரம்பக்கால' நாவல்களாகிய இரும்புக்குதிரைகள், மெர்க்குரிப் பூக்கள், பச்சை வயல் மனது போன்றவை. சிவசங்கரி, இந்துமதி ஆகியோரின் கதைகளும் அப்போது தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தன. எல்லாவற்றையுமே வாசித்திருக்கிறேன் எனினும் சிலவற்றைத் தவிர மற்றவை அதிகம் என்னை ஈர்க்கவில்லை. ஹைஸ்கூலில் இருக்கும்போது கமல்-ரஜனிக்கு இருந்தது போலவே சிவசங்கரி-இந்துமதிக்கு தீவிர ரசிகைகள் இருந்தார்கள். தலைப்பு நினைவில் இல்லை, ஒரு தொடர்கதையை வாரம் ஒருவராய் மாற்றி மாற்றி எழுதினார்கள். அந்த சமயம் வெளியான இளைமை ஊஞ்சலாடுகிறது, நினைத்தாலே இனிக்கும் படங்களில் யார் நடிப்பு பெஸ்ட் என்பது போல, இந்தக் கதையிலும் யார் எழுத்து பெஸ்ட் எனும் விவாதம் அனல் பறந்தது தொடர் முடியும் வரை. ஆனால் அதென்னெவோ விதிவிலக்காக சுஜாதா மட்டும் எப்போதும் எல்லோருக்கும் பிடித்தமானவராய் இருந்தார். 

தொன்னூறுகளிலிருந்து வாசிப்பென்பது வாரப்பத்திரிகைகளுடன் மட்டுமென்றாகி விட்டது. தற்போது எஸ்.ரா, நாஞ்சில்நாடன் ஆகியோர் எழுத்துக்கள் பிடித்தவையாய் உள்ளன. அடுத்த மாதத்துடன் பதிவுலகம் வந்து இரு வருடங்கள் நிறையப் போகின்றன. வலையுலகம் வந்த பின்னரே மறுபடி வாசிக்கும் ஆர்வம் துளிர்த்துள்ளது. சமீபத்தில் படித்து ரசித்தவை ‘மாலன் சிறுகதைகள்’ ’சுப்ரமணிய ராஜு கதைகள்’. முதல் வாசிப்பில் பிரமிப்பைத் தந்த புத்தகங்கள் எல்லாமே மறுவாசிப்பின் போது அதே உணர்வைத் தருவதில்லை. ஆனால் சில, காலங்கள் கடந்தும் முதல் வாசிப்பின்போது ஏற்படுத்திய தாக்கத்துக்கு எள்ளளவும் குறையாமல். பொன்னியின் செல்வனை அவ்வாறே எல்லோரும் குறிப்பிடுகிறார்கள். ஏனோ சரித்திரக் கதைகள் மேல் அத்தனை நாட்டம் இல்லை. ஒவ்வொருவர் அதை சிலாகித்துச் சொல்லுகையில் வாசித்துவிட வேண்டுமெனும் ஆசை பிறந்து வாங்கி வைத்ததுள்ளேன். சீக்கிரம் ஆரம்பித்து முடிப்பேன் என நம்புகிறேன். தொடர அழைத்த முகுந்த் அம்மாவுக்கும், தன் பதிவின் பின்னூட்டத்தில் கேட்டுக் கொண்ட அமைதிச்சாரலுக்கும் நன்றிகள். தொடர விருப்பமானவர்கள் தொடருங்களேன். 
***

81 கருத்துகள்:

  1. ஒவ்வொரு காலகட்டத்தில் நமக்கிருக்கும் ஆர்வங்கள், விருப்புக்கள் மாறிக் கொண்டே போகிறதுதான். எது எப்படியாயினும் அந்தந்த காலங்களில் அவை தந்த மகிழ்ச்சியும், அதனுடனான நினைவுகளும் பொய்யில்லாப் பொக்கிஷங்களே.

    ...... வார்த்தைகளில் முத்தாய் கருத்துக்கள் ......... அருமை.
    பதிவுலகில், இரண்டு வருடங்கள். wow!. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!

    பதிலளிநீக்கு
  2. //தமிழை எழுத்துக் கூட்டிப் படிக்க ஆரம்பித்த போது தினத்தந்தியின் சிந்துபாத் கதையைத்தான் முதலில் தொடங்கினேன் என்று நினைக்கிறேன்//

    சிந்துபாத் கதை போல தான் நமது படிப்பும் என்றுமே முடிவதில்லை

    பதிலளிநீக்கு
  3. //ஏனோ சரித்திரக் கதைகள் மேல் அத்தனை நாட்டம் இல்லை. //

    நானும் அப்படித்தான் இருந்தேன் பொன்னியின் செல்வன் படிக்கும் முன்..

    பதிலளிநீக்கு
  4. //எண்பதுகளில் தொடராக வெளிவந்த சுஜாதாவின்..//

    இதில் கறுப்பு சிவப்பு வெளுப்பு என்ற கதைதான் கண்டனங்களின் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டு, இரத்தம் ஒரே நிறம் என்று வேறுகளத்தில் பயணித்தது என்று ஞாபகம்.

    வேண்டுகோளை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. Chitra said...

    //...... வார்த்தைகளில் முத்தாய் கருத்துக்கள் ......... அருமை.
    பதிவுலகில், இரண்டு வருடங்கள். wow!. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!//

    வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சித்ரா.

    பதிலளிநீக்கு
  6. நசரேயன் said...

    ***/ //தமிழை எழுத்துக் கூட்டிப் படிக்க ஆரம்பித்த போது தினத்தந்தியின் சிந்துபாத் கதையைத்தான் முதலில் தொடங்கினேன் என்று நினைக்கிறேன்//

    சிந்துபாத் கதை போல தான் நமது படிப்பும் என்றுமே முடிவதில்லை/***

    உண்மைதான் நசரேயன், சுவாசிக்கும் வரை வாசிக்கும் வழக்கம் போகாது:)!

    பதிலளிநீக்கு
  7. நசரேயன் said...

    ***/ //ஏனோ சரித்திரக் கதைகள் மேல் அத்தனை நாட்டம் இல்லை. //

    நானும் அப்படித்தான் இருந்தேன் பொன்னியின் செல்வன் படிக்கும் முன்../***

    நிச்சயம் வாசித்து விடுவேன்:)! நன்றி நசரேயன்.

    பதிலளிநீக்கு
  8. அட! நீங்களும் என்னைப் போல் தானா!
    சிவசங்கரி, இந்துமதி இருவரும் சேர்ந்து எழுதிய கதை `இரண்டு பேர்’
    அதற்கு ஒரு வாசகர், எழுத்தாளர்கள் இருவரையும் தரக்குறைவாக விமரிசித்ததும், பின் கண்டனத்துக்கு ஆளானதும் நினைவு வருகிறது.
    பொன்னியின் செல்வன் படியுங்கள்.
    எத்தனை முறை படித்தாலும் சலிக்காது. புதிய பதிப்புக்கு மணியம்செல்வம் படங்கள் வரைந்திருக்கிறார் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. அமைதிச்சாரல் said...

    ***/ //எண்பதுகளில் தொடராக வெளிவந்த சுஜாதாவின்..//

    இதில் கறுப்பு சிவப்பு வெளுப்பு என்ற கதைதான் கண்டனங்களின் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டு, இரத்தம் ஒரே நிறம் என்று வேறுகளத்தில் பயணித்தது என்று ஞாபகம்./***

    ஆமாங்க மூன்று அத்தியாயங்கள் வரை சென்று பின்னர் நின்று போய் அடுத்தது தொடங்கியது. பெயர் சரியாக நினைவில் இல்லை. இணையத்திலும் தேடிப்பார்த்து விட்டேன் ஏதேனும் குறிப்பு இருக்குமா என.

    //வேண்டுகோளை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி.//

    வருகைக்கும் கருத்துக்கும் நானும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்:)!

    பதிலளிநீக்கு
  10. படிக்க நல்ல சுகானுபவமாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  11. அம்பிகா said...

    //அட! நீங்களும் என்னைப் போல் தானா!//

    அப்படியேதான் அம்பிகா:))!

    //சிவசங்கரி, இந்துமதி இருவரும் சேர்ந்து எழுதிய கதை `இரண்டு பேர்’
    அதற்கு ஒரு வாசகர், எழுத்தாளர்கள் இருவரையும் தரக்குறைவாக விமரிசித்ததும், பின் கண்டனத்துக்கு ஆளானதும் நினைவு வருகிறது.//

    ஆமாம், பெரும் சர்ச்சைக்கு உள்ளான தொடர்தான் அது. லிவிங் டு கெதர் பற்றிய கதை என நினைக்கிறேன்.

    //பொன்னியின் செல்வன் படியுங்கள்.
    எத்தனை முறை படித்தாலும் சலிக்காது. புதிய பதிப்புக்கு மணியம்செல்வம் படங்கள் வரைந்திருக்கிறார் என நினைக்கிறேன்.//

    அதைத்தான் வாங்கியுள்ளேன். நன்றி அம்பிகா. நிச்சயம் படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. அன்புடன் அருணா said...

    //படிக்க நல்ல சுகானுபவமாக இருந்தது.//

    அப்போ நானும் சிறந்த கதை சொல்லிதான்னு சொல்லுங்க:)! நன்றி அருணா.

    பதிலளிநீக்கு
  13. //ஏனோ சரித்திரக் கதைகள் மேல் அத்தனை நாட்டம் இல்லை.//

    பொன்னியின் செல்வனை வாசித்த பிறகு சரித்திர நாவல்களை தொடர்ந்து வாசிப்பதற்கு நேரமே இல்லையே என்றுதான் இன்றுவரை வருத்தப்பட்டுக்கொண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  14. // பிறகு எண்பதுகளில் தொடராக வெளிவந்த சுஜாதாவின் கரையெல்லாம் செண்பகப்பூ, பிரிவோம் சந்திப்போம், இரத்தம் ஒரே நிறம், கனவுத் தொழிற்சாலை, காகிதச் சங்கிலிகள்; ஸ்டெல்லா புரூஸின் அது ஒரு நிலாக்காலம், ஒருமுறைதான் பூக்கும்; பாலகுமாரனின் 'ஆரம்பக்கால' நாவல்களாகிய இரும்புக்குதிரைகள், மெர்க்குரிப் பூக்கள், பச்சை வயல் மனது போன்றவை. சிவசங்கரி, இந்துமதி ஆகியோரின் கதைகளும் //
    sailing on the same boat.

    பதிலளிநீக்கு
  15. சமீபமாக காமிக்ஸ் படிக்கனும்னு ஆசையா இருக்கு...

    ஜீவ்ஸிடம் கேட்கனும்

    பதிலளிநீக்கு
  16. திருவாரூரிலிருந்து சரவணன் said...

    //பொன்னியின் செல்வனை வாசித்த பிறகு சரித்திர நாவல்களை தொடர்ந்து வாசிப்பதற்கு நேரமே இல்லையே என்றுதான் இன்றுவரை வருத்தப்பட்டுக்கொண்டிருக்கிறேன்.//

    நேரத்தை ஏற்படுத்திக் கொண்டு நான் பொ.செ வாசித்து விடுகிறேன் சரவணன்:)! வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  17. குழந்தைகளுக்கான நூலகத்துக்குள் நுழைந்து வெளிவந்த உணர்வை ஏற்படுத்தியது ‘கட்டிப் போட்ட கதைகள்’

    பதிலளிநீக்கு
  18. ராமலக்ஷ்மி said...

    ஜெரி ஈசானந்தன். said...

    ***/ // பிறகு எண்பதுகளில் தொடராக வெளிவந்த..//


    sailing on the same boat./***

    ஆகா, மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  19. ஈரோடு கதிர் said...

    //சமீபமாக காமிக்ஸ் படிக்கனும்னு ஆசையா இருக்கு...

    ஜீவ்ஸிடம் கேட்கனும்//

    நல்ல ஆசைதான், வாங்கிப் படியுங்கள்! பால்யகாலத்துக்கு அழைத்துச் சென்று நம்மைப் புதுப்பித்துக் கொள்ள உதவலாம்:)!

    பதிலளிநீக்கு
  20. @ goma,

    பெரியவர்களுக்கான நூலகமும் கடைசி பத்திகளில்:)! வருகைக்கு மிக்க நன்றி கோமா.

    பதிலளிநீக்கு
  21. //ஆமாம், பெரும் சர்ச்சைக்கு உள்ளான தொடர்தான் அது. லிவிங் டு கெதர் பற்றிய கதை என நினைக்கிறேன்//
    இனிமையாகவே சென்றுகொண்டிருக்கும் இல்லறத்தை மீற எண்ணும் கதை என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  22. //சமீபத்தில் பதிவுலக நண்பர் ஜீவ்ஸ் தனது வார இறுதிகளை காமிக்ஸ் படித்துக் கழிப்பதாகக் கூறினார். சுமார் 150 காமிக்ஸ்களை அடுக்கி வைத்துக் கொண்டு அவற்றிலே மூழ்கித் திளைக்கிறாராம்./

    ஓஹோ! வாரம் ஃபுல்லா ஆபிஸ்ல உக்கார்ந்து ப்ளாக் படிக்கவேண்டியது வீக் எண்ட்ல இதுவா ? ரைட்டு ஹோம் கேபினெட்ல வாத்தியை வசமா மாட்டவைக்க ப்ளான் போடவேண்டியதுதான்!

    பதிலளிநீக்கு
  23. //ஒவ்வொரு காலகட்டத்தில் நமக்கிருக்கும் ஆர்வங்கள், விருப்புக்கள் மாறிக் கொண்டே போகிறதுதான். எது எப்படியாயினும் அந்தந்த காலங்களில் அவை தந்த மகிழ்ச்சியும், அதனுடனான நினைவுகளும் பொய்யில்லாப் பொக்கிஷங்களே///

    கண்டிப்பாக ஆனால் சிறிது காலத்திற்கு பின்பு மாறிப்போன ஆர்வங்களும் விருப்பங்களும் மீண்டும் மெல்ல மனதிற்கு படர்ந்து விரிகின்றது! நினைவுகளில் அசை போட ஆரம்பிக்கின்றது!

    பதிலளிநீக்கு
  24. கதை சொல்லிகள் பற்றி சொல்ல ஆரம்பித்து விவரித்தது இண்ட்ரஸ்டிங்க்!
    கோகுலம் அம்புலிமாமா,ராணி காமிக்ஸ் & சிறுவர்மலர் மட்டுமே எனது லிமிட்டுக்குள் :)
    பொன்னியின் செல்வன் - ஸேம் ப்ளட் ! ஏனோ சரித்திர நாவல்கள் படிக்க நினைக்கும்போதே செம டெரராகிறது! அப்படியும் சில முறை முயற்சித்து கேரக்டர்களிடையே குழம்பி போய் நிறுத்தியிருக்கிறேன்! ஆனாலும் பொன்னியின் செல்வன் சோழமண்டலத்தினை உருவகப்படுத்தும்,குறிப்பிடப்படும் ஊர்கள் இன்றும் மிச்சமிருக்கும் வரலாற்றுசுவடுகள் பார்க்கும்போது படிக்கவேண்டும் என்ற ஆவலினை திணித்தப்படியே இருக்கின்றது! படிக்கணும் !

    பதிலளிநீக்கு
  25. மிக சுவாரசியமாக எழுதியிருக்கிறீர்கள். சின்ன வயதில் என்ன, இப்பவும் கதை சொல்லியாகத் தான் இருக்கிறீர்கள். இரண்டு வருடம் சலிக்காமல் வலையுலகில் எழுதுவதற்கும் வாழ்த்துகள் தோழி.

    பதிலளிநீக்கு
  26. //கதைகள் சுகானுபவம். வாசிக்கும் போது காட்சிகளையும் கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் நாமே கற்பனை செய்து கொள்வது சுவாரஸ்யம் என்றால், சொல்லிக் கேட்கையில் சொல்லுபவர் திறமைசாலியானால் அந்தக் கதைக்கு உள்ளே நாமும் விழுந்து விடுவோம்.//

    அக்கா.. சரியா சொன்னீங்க.

    இதுவே சொல்லுது. நீங்க எவ்ளோ நல்லா கதை சொல்லி இருப்பீங்கன்னு.

    கவிதையில கதைய சொல்றது உங்க திறமை. அதை விட்டிடாதீங்க.

    பதிலளிநீக்கு
  27. பதிவுலகில்
    இரண்டு வருடங்கள்
    வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  28. ****முதல் வாசிப்பில் பிரமிப்பைத் தந்த புத்தகங்கள் எல்லாமே மறுவாசிப்பின் போது அதே உணர்வைத் தருவதில்லை. ஆனால் சில, காலங்கள் கடந்தும் முதல் வாசிப்பின்போது ஏற்படுத்திய தாக்கத்துக்கு எள்ளளவும் குறையாமல். பொன்னியின் செல்வனை அவ்வாறே எல்லோரும் குறிப்பிடுகிறார்கள். ஏனோ சரித்திரக் கதைகள் மேல் அத்தனை நாட்டம் இல்லை. ஒவ்வொருவர் அதை சிலாகித்துச் சொல்லுகையில் வாசித்துவிட வேண்டுமெனும் ஆசை பிறந்து வாங்கி வைத்ததுள்ளேன். சீக்கிரம் ஆரம்பித்து முடிப்பேன் என நம்புகிறேன்.****

    பொன்னியின் செல்வன் இப்போத்தான் படிக்கப்போறீங்களா!!!வரலாற்றுக் கதையென்றால் சாண்டில்யந்தான் என்று நம்பியிருந்த நான், மற்றவர்களின் சான்றிதழ்களாலும்.பலத்த ரெக்கமெண்டேஷனாலும் பொன்னியின் செல்வன் (அந்தக் காலத்து கல்கி கலக்சன்) -பழுவேட்டரையர், நந்தினி படங்கள் எல்லாம் அழகா தத்ரூபமாக வரைந்து இருப்பார்கள்- படித்தேன். உண்மையிலேயே பெஸ்ட் கதைதான். கல்கியின் நடை கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்.

    திடீர்னு, “நேயர்களே! உங்களை இங்கே அழைத்துச் செல்கிறேன்” என்று சொல்லுவார்! That I found as somewhat strange.

    If someone says something is so great, I would try to prove that it is not. But I failed to do so and accepted that it is indeed a good novel. I read when I was in high school, I am not sure how Iwoud feel if I read it now. நீங்கதான் படிச்சுட்டு சொல்லனும்!

    பதிலளிநீக்கு
  29. அருமையான தொகுப்பு. அருமையான நினைவுகள்.

    //ஒவ்வொரு காலகட்டத்தில் நமக்கிருக்கும் ஆர்வங்கள், விருப்புக்கள் மாறிக் கொண்டே போகிறதுதான். எது எப்படியாயினும் அந்தந்த காலங்களில் அவை தந்த மகிழ்ச்சியும், அதனுடனான நினைவுகளும் பொய்யில்லாப் பொக்கிஷங்களே.//

    சரியான வார்த்தைகள். நானும் சிந்துபாத் சிறு வயதில் விடாமல் படித்து இருக்கிறேன். இப்போது அதனை நினைத்தால் எனக்கு சிரிப்பு வரும்.

    அருமையான பதிவு ராமலெட்சுமி அவர்களே. தொடர்ந்ததற்கு நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
  30. மிக சுவாரசியமாக எழுதியிருக்கிறீர்கள்.

    வார்த்தைகளில் முத்தாய் கருத்துக்கள்

    இரண்டு வருடம் சலிக்காமல் வலையுலகில் எழுதுவதற்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  31. ரத்னபாலா, அம்புலிமாமா எல்லாம் பொக்கிஷங்கள். அருமையான நினைவுகள்

    பதிலளிநீக்கு
  32. பாலராஜன்கீதா said...

    ***/ //ஆமாம், பெரும் சர்ச்சைக்கு உள்ளான தொடர்தான் அது. லிவிங் டு கெதர் பற்றிய கதை என நினைக்கிறேன்//
    இனிமையாகவே சென்றுகொண்டிருக்கும் இல்லறத்தை மீற எண்ணும் கதை என்று நினைக்கிறேன்./***

    உறுதியாகச் சொல்ல முடியவில்லைதானே:)? வருடங்கள் பல ஆகி விட்டதால் சரியாக நினைவில் இல்லை. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பாலராஜன்கீதா.

    பதிலளிநீக்கு
  33. ஆயில்யன் said...

    //ரைட்டு ஹோம் கேபினெட்ல வாத்தியை வசமா மாட்டவைக்க ப்ளான் போடவேண்டியதுதான்!//

    சந்தோசமாய் படித்துக் கொண்டிருக்கிறார். போகட்டும் விடுங்கள்:)!

    பதிலளிநீக்கு
  34. ஆயில்யன் said...

    //கதை சொல்லிகள் பற்றி சொல்ல ஆரம்பித்து விவரித்தது இண்ட்ரஸ்டிங்க்!//

    அதுதாங்க இந்தத் தொடர் பதிவின் முக்கிய சப்ஜெக்ட்.

    //ஏனோ சரித்திர நாவல்கள் படிக்க நினைக்கும்போதே செம டெரராகிறது! அப்படியும் சில முறை முயற்சித்து கேரக்டர்களிடையே குழம்பி போய் நிறுத்தியிருக்கிறேன்!//

    நம்ம கட்சியா:)? ஒரே மூச்சாகப் படித்தால் குழப்பம் நேராதோ என நினைக்கிறேன். முயற்சி செய்யுங்கள்.

    //படிக்கவேண்டும் என்ற ஆவலினை திணித்தப்படியே இருக்கின்றது! படிக்கணும் !//

    படித்து விடுவோம்:)!

    பதிலளிநீக்கு
  35. ஆயில்யன் said...
    //கண்டிப்பாக ஆனால் சிறிது காலத்திற்கு பின்பு மாறிப்போன ஆர்வங்களும் விருப்பங்களும் மீண்டும் மெல்ல மனதிற்கு படர்ந்து விரிகின்றது! நினைவுகளில் அசை போட ஆரம்பிக்கின்றது!//

    ஆமாம், இதுவும் நடக்கிறது.

    கருத்துக்களுக்கு நன்றி ஆயில்யன்.

    பதிலளிநீக்கு
  36. True - even though you wont have the same thrill and suspense when you read these comics in your teen years, it is definitely worth browsing through those comics again since they take you back to those olden golden days. And when you have someone you can share that memories with and reminisce, it becomes even more fun!

    Get some comics ready for me to read when I get there in July :)

    பதிலளிநீக்கு
  37. "இதிலே பாலமித்ரா, ரத்னபாலாவில் என் கருத்துக்கள் வாசகர் கடிதங்களாய் வெளிவந்துள்ளன"//

    அப்பொழுதே எழுத்துச் சேவை தொடங்கி விட்டதா?

    "ஆனால் அதென்னெவோ விதிவிலக்காக சுஜாதா மட்டும் எப்போதும் எல்லோருக்கும் பிடித்தமானவராய் இருந்தார்"//

    உண்மை...உண்மை.

    எல்லாமே அந்தக்காலத்தில் வந்தவற்றின் மறுபதிப்புகளே. வேண்டுமா உங்களுக்கும்?’ என்றார்"//

    அப்படியா..Interesting.

    அருமை. வாசிப்பு என்பது அற்புதமான அனுபவம்தான். இதை இப்போது இழக்கும் தலைமுறை தாம் என்ன இழக்கிறோம் என்றே தெரியாமல் இருப்பது பரிதாபம். பொன்னியின் செல்வன் போன்றவையும், இன்னும் சில புத்தகங்களும் எத்தனை முறை வாசித்தாலும் அலுக்காது. சுஜாதா கேட்கவே வேண்டாம். காமிக்ஸ் புத்தகங்கள் மீண்டும் படித்துப் பார்த்தால்தான் தெரியும்.

    பதிலளிநீக்கு
  38. நல்ல பதிவு, மகிழ்ச்சி.

    //முதல் வாசிப்பில் பிரமிப்பைத் தந்த புத்தகங்கள் எல்லாமே மறுவாசிப்பின் போது அதே உணர்வைத் தருவதில்லை.//

    எனக்கும் இந்த அனுபவம் உண்டு. வார இதழ்களில் தொடராக வந்த கதைகள், மீண்டும் புத்தமாக வெளியாகும் போது வாங்கி படித்துவிட்டு சங்கடப்பட்டிருக்கிறேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  39. மிக அழகான பதிவு.

    /எது எப்படியாயினும் அந்தந்த காலங்களில் அவை தந்த மகிழ்ச்சியும், அதனுடனான நினைவுகளும் பொய்யில்லாப் பொக்கிஷங்களே//

    நிச்சியமாக.வரிகளில் விளையாடியிருக்கீங்க மேடம்..

    பதிலளிநீக்கு
  40. //சொல்லிக் கேட்கையில் சொல்லுபவர் திறமைசாலியானால் அந்தக் கதைக்கு உள்ளே நாமும்//

    அதே, அதே!! ஆனால், நான் வாசித்தறிந்ததே அதிகம்.

    பதிலளிநீக்கு
  41. பேட்டியில் பகிரப்பட்ட பதில்களின் விரிவான பதிப்பாக இருந்தது இந்தப்பதிவு. சிறப்பு.

    (பொ.செ. நானும் வாங்கி வைத்திருக்கிறேன் :-)

    பதிலளிநீக்கு
  42. இப்போதைக்கு அட்டென்டன்ஸ். பிறகு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  43. கலக்கீடீங்க ராமலட்சுமி, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  44. ஜெஸ்வந்தி said...

    //மிக சுவாரசியமாக எழுதியிருக்கிறீர்கள். சின்ன வயதில் என்ன, இப்பவும் கதை சொல்லியாகத் தான் இருக்கிறீர்கள்.//

    நிஜமாகவா:)? நன்றி.

    // இரண்டு வருடம் சலிக்காமல் வலையுலகில் எழுதுவதற்கும் வாழ்த்துகள் தோழி.//

    எல்லாம் நண்பர்கள் நீங்கள் தருகிற உற்சாகத்தினால்தான். வாழ்த்துக்களுக்கும் நன்றி ஜெஸ்வந்தி.

    பதிலளிநீக்கு
  45. சுசி said...

    //இதுவே சொல்லுது. நீங்க எவ்ளோ நல்லா கதை சொல்லி இருப்பீங்கன்னு.

    கவிதையில கதைய சொல்றது உங்க திறமை. அதை விட்டிடாதீங்க.//

    நன்றி சுசி. நீங்கள் சொன்னதற்காகவே அதையும் தொடருகிறேன்:)!

    பதிலளிநீக்கு
  46. நண்டு@நொரண்டு -ஈரோடு said...

    //பதிவுலகில்
    இரண்டு வருடங்கள்
    வாழ்த்துக்கள் .//

    நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  47. வருண் said...

    //பொன்னியின் செல்வன் இப்போத்தான் படிக்கப்போறீங்களா!!!//

    ஹி..

    //வரலாற்றுக் கதையென்றால் சாண்டில்யந்தான் என்று நம்பியிருந்த நான், மற்றவர்களின் சான்றிதழ்களாலும்.பலத்த ரெக்கமெண்டேஷனாலும் பொன்னியின் செல்வன் (அந்தக் காலத்து கல்கி கலக்சன்) -பழுவேட்டரையர், நந்தினி படங்கள் எல்லாம் அழகா தத்ரூபமாக வரைந்து இருப்பார்கள்- படித்தேன். உண்மையிலேயே பெஸ்ட் கதைதான். கல்கியின் நடை கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்.//

    நீங்களும் ஆவலை அதிகரித்து விட்டீர்கள்.

    //If someone says something is so great, I would try to prove that it is not. But I failed to do so and accepted that it is indeed a good novel. I read when I was in high school, I am not sure how Iwoud feel if I read it now. நீங்கதான் படிச்சுட்டு சொல்லனும்!//

    நான் முதல் முறையாகத்தானே வாசிக்க இருக்கிறேன். பலரும் மறுவாசிப்பிலும் ஈர்த்ததாகவே குறிப்பிட்டிருக்கிறார்கள். கண்டிப்பாக வாசித்த பின் பகிர்ந்து கொள்கிறேன். மிக்க நன்றி வருண்.

    பதிலளிநீக்கு
  48. முகுந்த் அம்மா said...

    *** //அருமையான தொகுப்பு. அருமையான நினைவுகள்...

    சரியான வார்த்தைகள். நானும் சிந்துபாத் சிறு வயதில் விடாமல் படித்து இருக்கிறேன். இப்போது அதனை நினைத்தால் எனக்கு சிரிப்பு வரும்.//

    அதே அதே:)!

    //அருமையான பதிவு ராமலெட்சுமி அவர்களே. தொடர்ந்ததற்கு நன்றிகள் பல.//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முகுந்த் அம்மா.

    பதிலளிநீக்கு
  49. சே.குமார் said...

    //மிக சுவாரசியமாக எழுதியிருக்கிறீர்கள்.

    வார்த்தைகளில் முத்தாய் கருத்துக்கள்

    இரண்டு வருடம் சலிக்காமல் வலையுலகில் எழுதுவதற்கும் வாழ்த்துகள்.//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் சே.குமார்.

    பதிலளிநீக்கு
  50. நர்சிம் said...

    //சுவாரஸ்யம்ங்க.//

    மிக்க நன்றி நர்சிம்:)!

    பதிலளிநீக்கு
  51. சின்ன அம்மிணி said...

    //ரத்னபாலா, அம்புலிமாமா எல்லாம் பொக்கிஷங்கள். அருமையான நினைவுகள்//

    ஆமாம் அம்மிணி. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  52. Someone like you said...

    //True - even though you wont have the same thrill and suspense when you read these comics in your teen years, it is definitely worth browsing through those comics again since they take you back to those olden golden days.//

    I agree.

    //And when you have someone you can share that memories with and reminisce, it becomes even more fun!//

    Very true.

    //Get some comics ready for me to read when I get there in July :)//

    Done dear:)!

    பதிலளிநீக்கு
  53. ஸ்ரீராம். said...

    //"இதிலே பாலமித்ரா, ரத்னபாலாவில் என் கருத்துக்கள் வாசகர் கடிதங்களாய் வெளிவந்துள்ளன"

    அப்பொழுதே எழுத்துச் சேவை தொடங்கி விட்டதா?//

    :)!

    //"ஆனால் அதென்னெவோ விதிவிலக்காக சுஜாதா மட்டும் எப்போதும் எல்லோருக்கும் பிடித்தமானவராய் இருந்தார்"

    உண்மை...உண்மை.//

    இப்போது அப்படித்தானே?

    //அருமை. வாசிப்பு என்பது அற்புதமான அனுபவம்தான். இதை இப்போது இழக்கும் தலைமுறை தாம் என்ன இழக்கிறோம் என்றே தெரியாமல் இருப்பது பரிதாபம். பொன்னியின் செல்வன் போன்றவையும், இன்னும் சில புத்தகங்களும் எத்தனை முறை வாசித்தாலும் அலுக்காது. சுஜாதா கேட்கவே வேண்டாம். காமிக்ஸ் புத்தகங்கள் மீண்டும் படித்துப் பார்த்தால்தான் தெரியும்.//

    கருத்துப் பகிர்வுக்கு நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  54. அமைதி அப்பா said...

    ***/ நல்ல பதிவு, மகிழ்ச்சி.

    //முதல் வாசிப்பில் பிரமிப்பைத் தந்த புத்தகங்கள் எல்லாமே மறுவாசிப்பின் போது அதே உணர்வைத் தருவதில்லை.//

    எனக்கும் இந்த அனுபவம் உண்டு. வார இதழ்களில் தொடராக வந்த கதைகள், மீண்டும் புத்தமாக வெளியாகும் போது வாங்கி படித்துவிட்டு சங்கடப்பட்டிருக்கிறேன்.
    நன்றி./***

    இந்த அனுபவமும் இருந்திருக்கிறது எனக்கும். கருத்துக்கும் வருகைக்கும் நன்றி அமைதி அப்பா.

    பதிலளிநீக்கு
  55. அன்புடன் மலிக்கா said...

    ***//மிக அழகான பதிவு.

    /எது எப்படியாயினும் அந்தந்த காலங்களில் அவை தந்த மகிழ்ச்சியும், அதனுடனான நினைவுகளும் பொய்யில்லாப் பொக்கிஷங்களே//

    நிச்சியமாக.வரிகளில் விளையாடியிருக்கீங்க மேடம்..//***

    நன்றி மலிக்கா.

    பதிலளிநீக்கு
  56. ஹுஸைனம்மா said...

    ***/ //சொல்லிக் கேட்கையில் சொல்லுபவர் திறமைசாலியானால் அந்தக் கதைக்கு உள்ளே நாமும்//

    அதே, அதே!! ஆனால், நான் வாசித்தறிந்ததே அதிகம்./***

    ஆனால் எவரும் கதைகளைக் கடக்காமல் வரவில்லை, சரிதானே:)? நன்றி ஹுஸைனம்மா.

    பதிலளிநீக்கு
  57. ஆதிமூலகிருஷ்ணன் said...

    //பேட்டியில் பகிரப்பட்ட பதில்களின் விரிவான பதிப்பாக இருந்தது இந்தப்பதிவு. சிறப்பு.//

    நன்றி ஆதி.

    //(பொ.செ. நானும் வாங்கி வைத்திருக்கிறேன் :-)//

    சீக்கிரமா படிச்சுடுங்க:)!

    பதிலளிநீக்கு
  58. சதங்கா (Sathanga) said...

    //இப்போதைக்கு அட்டென்டன்ஸ். பிறகு வருகிறேன்.//

    அவசரமில்லை. வந்து ஒரு ஹலோ சொன்னதே சந்தோஷம்:)! நன்றி சதங்கா.

    பதிலளிநீக்கு
  59. சசிகுமார் said...

    //கலக்கீடீங்க ராமலட்சுமி, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றி சசிகுமார்.

    பதிலளிநீக்கு
  60. மின்னஞ்சலில்...

    //Made Popular : கட்டிப் போட்ட கதைகள்
    ...
    Fri, 2 April, 2010 11:26:02 PM
    From:
    Tamilish Support
    ...
    Add to Contacts
    To: ramalakshmi_rajan@yahoo.co.in

    Hi Ramalakshmi,

    Congrats!

    Your story titled 'கட்டிப் போட்ட கதைகள்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 2nd April 2010 05:56:02 PM GMT

    Here is the link to the story: http://www.tamilish.com/story/217164

    Thank you for using Tamilish.com

    Regards,
    -Tamilish Team//

    தமிழ் மணத்தில் வாக்களித்த 18 பேர்களுக்கும், தமிழிஷில் வாக்களித்த 19 பேர்களுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  61. பழைய கதை கேட்ட நினைவுகள் வந்துடுச்சு உங்க பதிவ படிச்சு....நல்லா இருக்குங்க

    பதிலளிநீக்கு
  62. நான் காமிக்ஸ் புத்தகத்தின் தீவிர ரசிகன். முதன் முதலில் தினமணியில் வந்த மந்திரவாதி மாண்டிரேக் ஐ என் அப்பா எனக்கு அறிமுகப்படுத்தினார்..அதில் இருந்து மற்ற காமிக்ஸ் ராணி, முத்து, லயன், போன்றவற்றை எங்கே சென்றாலும் வாங்கி விடுவேன்.

    எங்க வீட்டில் ஒரு மூட்டை அளவு வைத்து இருந்தேன், இதில் பல பைண்டிங் செய்து வைத்து இருக்கிறேன். இன்னமும் சில இருக்கின்றன. சிலவற்றை சிறு வயது நினைவாக பாதுகாத்து வைத்துள்ளேன்.

    காமிக்ஸ் கதாப்பாத்திரங்களான ஆர்ச்சி, லக்கி லுக், மாண்டிரேக், லோதர், ஜேம்ஸ் பான்ட், சுப்பாண்டி (பலர் பெயர் மறந்து விட்டது) என்று பலரை எனக்கு ரொம்ப பிடிக்கும்.

    இந்தப்பதிவு இவற்றை நினைவு படுத்தி விட்டது :-) ஊரில் இருந்து இருந்தால் புத்தகத்தை தேடி இருப்பேன் ;-)

    பதிலளிநீக்கு
  63. கட்டித்தான் போட்டிருந்தன.. சரியாச் சொன்னீங்க..
    \\எது எப்படியாயினும் அந்தந்த காலங்களில் அவை தந்த மகிழ்ச்சியும், அதனுடனான நினைவுகளும் பொய்யில்லாப் பொக்கிஷங்களே.//

    நிச்சயமாக ..

    ஜீவ்ஸ் போலவே நான் இன்னமும் ஊருக்கு போனா சாப்பிடும்போது காமிக்ஸ் தான்.

    பதிலளிநீக்கு
  64. கதைகள் மட்டுமல்ல; உங்களின் எழுத்து நடை கூட எங்களைக் கட்டிப்போட்டு விடுகிறது. :-)
    //ஹி. நான் கூட ஒரு நல்ல கதை சொல்லியாய் 'இருந்தேன்'//
    சொல்லவேயில்ல.. எனக்கும் சாக்லேட் ஹவுஸ் கேட்கனும்போல இருக்கு :-)
    மீசைக்கார தாத்தாவையும் நினைவு கூர்ந்தது ஹைலைட்.
     
    இப்படி ஒரு இடுகையை உங்களை எழுதவைத்தவர்களுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  65. @ கிரி,

    நீங்களும் காமிக்ஸ் ரசிகர்தானா:)?

    //இதில் பல பைண்டிங் செய்து வைத்து இருக்கிறேன்.//

    நாங்களும் பலவற்றை அப்படிதான் வைத்திருந்தோம். அவற்றில் சில இன்னும் உள்ளன என நினைக்கிறேன்.

    //இந்தப்பதிவு இவற்றை நினைவு படுத்தி விட்டது :-) ஊரில் இருந்து இருந்தால் புத்தகத்தை தேடி இருப்பேன் ;-)//

    எனக்கும் தேடும் ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டீர்கள்.

    பகிர்வுக்கு நன்றி கிரி.

    பதிலளிநீக்கு
  66. @ முத்துலெட்சுமி/muthuletchumi

    //ஜீவ்ஸ் போலவே நான் இன்னமும் ஊருக்கு போனா சாப்பிடும்போது காமிக்ஸ் தான்.//

    ஆஹா, தொடருங்கள். நானும் முயற்சிக்க இருக்கிறேன்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முத்துலெட்சுமி.

    பதிலளிநீக்கு
  67. "உழவன்" "Uzhavan" said...

    ***/ கதைகள் மட்டுமல்ல; உங்களின் எழுத்து நடை கூட எங்களைக் கட்டிப்போட்டு விடுகிறது. :-)/***

    நன்றி உழவன்:)!

    //சொல்லவேயில்ல.. எனக்கும் சாக்லேட் ஹவுஸ் கேட்கனும்போல இருக்கு :-)//

    சரிதான்:))!


    //மீசைக்கார தாத்தாவையும் நினைவு கூர்ந்தது ஹைலைட்.//

    சிறந்த கதை சொல்லி அவர்.

    //இப்படி ஒரு இடுகையை உங்களை எழுதவைத்தவர்களுக்கு நன்றி//

    உங்களுடன் சேர்ந்து நானும் முகுந்த அம்மாவுக்கும் அமைதிச் சாரலுக்கும் மறுபடி நன்றிகளை சொல்லிக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  68. பல சிறுவர் மாத இதழ்களை இன்றும் நினைவில் வைத்து எழுதியது அருமை. படிக்கும் போது தான், அட இதை எல்லாம் நாமும் படித்திருக்கிறோமே என நினைவு வருகிறது. படமும் அந்தக் கால நினைவலைகளில் மிதக்க வைக்கிறது. இப்ப உள்ள குட்டிப் பசங்க என்ன செய்யறாங்க ? அவங்களுக்கும் ஒரு டி.வி. ஆரம்பித்து அதில் கட்டிப் போட்டுவிட்டார்களே இப்படி ...

    பதிலளிநீக்கு
  69. நன்றி நன்றி

    இந்த காமிக்ஸ் பத்தி பேசுனாவே ஒரு ஆதங்கம் வருது. ராணிகாமிக்ஸ் எல்லாம் 3 ரூபாக்குள்ள கிடைச்சது. முதல் 500 காமிக்ஸ் எல்லாம் முத்து முத்தா இருந்தது. இப்ப அதோட ஒரு பிரதியும் கிடைக்கல. முத்து/லயன் 200 புத்தகம் இருக்கு. ஆனாலும் ராணிகாமிக்ஸ் கிடைக்கலையேன்னு மனசு கிடந்து அடிச்சுக்குது. இதுமூலமா யாருட்டையாவது ராணி காமிக்ஸ் இருந்தா தந்துதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்

    பதிலளிநீக்கு
  70. எனக்கும் அந்த சாக்லேட் ஹவுஸ் கதை சொல்லுங்களேன் அக்கா. :)

    சுவாரசியமாய் மறந்துவிட்ட அனைத்துப் புத்தகங்கள், கதைப் பெயர்களை நினைவுக்குக் கொண்டு வந்தமைக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  71. சதங்கா (Sathanga) said...

    //பல சிறுவர் மாத இதழ்களை இன்றும் நினைவில் வைத்து எழுதியது அருமை. படிக்கும் போது தான், அட இதை எல்லாம் நாமும் படித்திருக்கிறோமே என நினைவு வருகிறது. படமும் அந்தக் கால நினைவலைகளில் மிதக்க வைக்கிறது.//

    மலரும் நினைவுகள் என்றைக்கும் இதம! நீங்களும் ஏன் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்திடக் கூடாது:)?

    //இப்ப உள்ள குட்டிப் பசங்க என்ன செய்யறாங்க ? அவங்களுக்கும் ஒரு டி.வி. ஆரம்பித்து அதில் கட்டிப் போட்டுவிட்டார்களே இப்படி ...//

    அதென்னவோ உண்மைதான்:(!

    கருத்துப் பகிர்வுக்கு நன்றி சதங்கா.

    பதிலளிநீக்கு
  72. Jeeves said...

    // நன்றி நன்றி

    இந்த காமிக்ஸ் பத்தி பேசுனாவே ஒரு ஆதங்கம் வருது. ராணிகாமிக்ஸ் எல்லாம் 3 ரூபாக்குள்ள கிடைச்சது. முதல் 500 காமிக்ஸ் எல்லாம் முத்து முத்தா இருந்தது. இப்ப அதோட ஒரு பிரதியும் கிடைக்கல. முத்து/லயன் 200 புத்தகம் இருக்கு. ஆனாலும் ராணிகாமிக்ஸ் கிடைக்கலையேன்னு மனசு கிடந்து அடிச்சுக்குது. இதுமூலமா யாருட்டையாவது ராணி காமிக்ஸ் இருந்தா தந்துதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்//

    உங்கள் கோரிக்கையை ராணி காமிக்ஸ் வைத்திருப்பவர்கள் கவனிப்பார்கள் என நம்புவோம்:)!

    நான் வாசித்த காலத்தில் இந்திரஜால காமிக்ஸும் முத்து காமிக்ஸும் மட்டும்தான். ராணி, லயன் எல்லாம் இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

    பதிலளிநீக்கு
  73. விக்னேஷ்வரி said...

    // எனக்கும் அந்த சாக்லேட் ஹவுஸ் கதை சொல்லுங்களேன் அக்கா. :)//

    நீங்களுமா..ஆ..ஆ:)?

    //சுவாரசியமாய் மறந்துவிட்ட அனைத்துப் புத்தகங்கள், கதைப் பெயர்களை நினைவுக்குக் கொண்டு வந்தமைக்கு நன்றிகள்.//

    வருகைக்கு நன்றி விக்னேஷ்வரி.

    பதிலளிநீக்கு
  74. வலையுலகங்களில் பவனி வருகையில் ஒத்த ரசனை உடையவர்களை காணும் போது ஏற்படும் பரவசத்திற்கு அளவே இல்லை.

    நான் இன்றும் ஒரு காமிக்ஸ் ரசிகன் தான்... உங்கள் காமிக்ஸ் பகிர்வும் அந்த ரெக்ஸ் விடயமும் கிளாசிக் டச்

    பதிலளிநீக்கு
  75. Rafiq Raja said...
    //வலையுலகங்களில் பவனி வருகையில் ஒத்த ரசனை உடையவர்களை காணும் போது ஏற்படும் பரவசத்திற்கு அளவே இல்லை.//

    வலைச்சரம் வாயிலாக நீங்கள் பதிவினைத் தேடிக் கண்டுபிடித்ததிலேயே தெரிகிறதுங்க:)!

    //நான் இன்றும் ஒரு காமிக்ஸ் ரசிகன் தான்...//

    மகிழ்ச்சி. நானும் மறுபடி வாசித்துப் பார்க்கலாம் என்றிருக்கிறேன்:)!

    //உங்கள் காமிக்ஸ் பகிர்வும் அந்த ரெக்ஸ் விடயமும் கிளாசிக் டச்//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரஃபிக் ராஜா.

    பதிலளிநீக்கு
  76. //நான் கூட ஒரு நல்ல கதை சொல்லியாய் 'இருந்தேன்'//

    ஆமாங்க...நான் கூட நல்லா கதை சொல்லுவேன்.முக்கியமா,”இவ்ளோ நேரம் எங்க போன “ ன்னு கேக்குறப்போ.... :)

    //இந்திரஜால காமிக்ஸும் முத்து காமிக்ஸும் ஒரு புதிய மாய உலகத்துக்குள் வைத்திருந்தது அப்போதைய சிறுவர்களை. இரும்புக்கை மாயாவி; ரிப் கெர்பி-டெஸ்மாண்ட்; மாண்ட்ரேக்-லொதார்-ஓஜோ, நர்தா-கர்மா; வேதாளம்-டயானா, அவரது குதிரை கேசரி-நாய் வாலி மற்றும் அவர் வளர்த்த பொன்னிற முடிச் சிறுவன் ரெக்ஸ் ஆகிய கதாபாத்திரங்கள் இன்றளவிலும் மறக்க முடியாதவை.//

    மறக்க முடியுமா.....

    //அப்போது அங்கு திடுமெனப் பிரவேசித்த சின்ன அத்தை பிரச்சனையைக் கேட்டுவிட்டு சட்டென ‘ரெக்ஸ்’ என்றார்கள். “ஹோ” எனும் பெருங்கூச்சலுடன் ஒருமனதாகப் பெயர் அங்கீகரிக்கப்பட்டு பெயர்சூட்டும் வைபவம் இனிதே நடந்தேறியது. அப்படியாக இருந்தது காமிக்ஸின் தாக்கமும், அவற்றில் வரும் கதாபாத்திரங்களின் மீதான நேசமும்.//

    காமிக்ஸ் மேல இவ்ளோ ஆர்வம் வச்சு இருந்த நீங்க,இனிமேலும் படிக்க முயற்சி செய்யனும்க்றது என்னோட சின்ன ஆசை....

    //எது எப்படியாயினும் அந்தந்த காலங்களில் அவை தந்த மகிழ்ச்சியும், அதனுடனான நினைவுகளும் பொய்யில்லாப் பொக்கிஷங்களே.//

    உண்மைதாங்க....அந்த காமிக்ஸ் தரக் கூடிய இன்ப நினைவுகள் கொஞ்ச நஞ்சமல்ல... :)
    ஒவ்வொரு புத்தகமும் ஆயிரம் நினைவுகளை தன்னகத்தே கொண்டது... :)

    பதிலளிநீக்கு
  77. @ ILLUMINATI,

    வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றியும் மகிழ்ச்சியும்:)!

    //காமிக்ஸ் மேல இவ்ளோ ஆர்வம் வச்சு இருந்த நீங்க,இனிமேலும் படிக்க முயற்சி செய்யனும்க்றது என்னோட சின்ன ஆசை....//

    இந்தப் பதிவுக்குப் பின் எனக்கே அந்த ஆசை வந்து விட்டது! நிச்சயமாய்:)!

    பதிலளிநீக்கு
  78. அன்பின் ராமலக்ஷ்மி

    அருமை அருமை - சிறு வயதில் கேட்டு, பார்த்து, படித்து, அறிந்த கதைகளை இப்பொழுது நினைத்து, மகிழ்ந்து, எழுதிய இடுகை "கட்டிப் போட்ட கதைகள்" அருமை - அருமை.

    இவ்வனுபவம்தான் தங்களின் எழுதும் திறமையினை அதிகரித்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

    நானும் சிறு வயதில் தினத்தந்தியின் சிந்துபாத் ( கன்னித்தீவா ) கதையினை காலை எழுந்த உடன் படித்து விட்டுத்தான் அடுத்த வேலை.

    அம்புலி மாமா, கல்கண்டு - தமிழ்வாணனின் சங்கர்லால், அவரது மனைவி, மாது, கத்தரிக்காய் போன்ற பாத்திரங்கள் - அடடா மறக்க இயலுமா ....

    துப்பறியும் சாம்பு எத்தனை தடவை படித்திருப்பேன்

    சாண்டில்யனின் கடல்புறா யவன ராணி போன்ற பல சரித்திரக்கதைகள் - அவரின் வர்ணனைகள் மறக்க இயலுமா

    சுஜாதாவின் அததனை கதைகளும் - முதல் கதையில் இருந்து ........

    டபிள்யூ ஆர் ஸ்வர்ணலதா எழுதிய தெருவிளக்கு - ரோஷணி ( ரோஷன் ) இன்னும் மனதில் நிழலாடுகிறது.

    பலப்பல துப்பறியும் நாவல்கள் படித்ததுண்டு

    ம்ம்ம்ம்ம்ம் - கொசு வத்தி சுத்த வச்சிட்டீங்க

    நல்வாழ்த்துகள் ராமலக்ஷ்மி
    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  79. cheena (சீனா) said...

    //அருமை அருமை - சிறு வயதில் கேட்டு, பார்த்து, படித்து, அறிந்த கதைகளை இப்பொழுது நினைத்து, மகிழ்ந்து, எழுதிய இடுகை "கட்டிப் போட்ட கதைகள்" அருமை - அருமை.//

    நன்றி சார்.

    //இவ்வனுபவம்தான் தங்களின் எழுதும் திறமையினை அதிகரித்திருக்கும் என்பதில் ஐயமில்லை.//

    நீங்கள் சொல்லுகையில் அதுவும் ஒரு காரணமே என உணருகிறேன்.

    //நானும் சிறு வயதில் தினத்தந்தியின் சிந்துபாத் ( கன்னித்தீவா ) கதையினை காலை எழுந்த உடன் படித்து விட்டுத்தான் அடுத்த வேலை.//

    ஆகா:)!

    // தமிழ்வாணனின் சங்கர்லால், அவரது மனைவி, மாது, கத்தரிக்காய் போன்ற பாத்திரங்கள் - அடடா மறக்க இயலுமா ....//

    இயலவில்லையே இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும்..

    வருகைக்கும், இடுகையை ரசித்து வாசித்துக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கும் என் நன்றிகள் சீனா சார்.

    பதிலளிநீக்கு
  80. இன்னமும் எங்களை கட்டிப்போட்டுதான் இருக்கின்றன! முத்து / லயன் காமிக்ஸ்கள் இப்போது காலத்துக்கேற்ப மாற்றம் கண்டு புது பொலிவுடன் வருகின்றன! எடிட்டர்டின் ப்ளாகை ஒருதடவை பாருங்கள்!

    http://lion-muthucomics.blogspot.in

    புதிய காமிக்ஸ்கள் Ebay-இல் கிடைக்கின்றன!

    http://www.ebay.in/sch/thecomicsstores2012/m.html?_nkw=&_armrs=1&_from=&_ipg=25&_trksid=p3686

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin