உயிர்ப்பு
சுவர் எத்தனை காலம்
அசைந்து கொடாமல்
மறித்து நிற்குமென்பதை
நமக்குக் கற்றுத் தந்த பின்னரே
வெளிப்புறமாகத் திறக்கும்
கதவு வெற்றி.
கைத்தட்டல்கள் அன்றி
நமது காலடிச் சத்தமே
அதிகமாக ஒலிக்கும்
அறை தோல்வி.
ஒரு பருவத்திற்கு நம் பெயரை
நினைவு வைத்திருக்கும்
கூட்டம் வெற்றி.
நினைவு கூர வற்புறுத்தும்
இரவு தோல்வி.
ஏற்றம் முடிந்துவிட்டதென்று
கண்களை ஏமாற்றும்
மலைச்சிகரம் வெற்றி.
மற்றுமோர் முறையில்
பாதங்களுக்கு ஏறக் கற்றுத்தரும்
படிக்கல் தோல்வி.
பிறர் கைகளால்
பொலிவேற்றப்படும்
கண்ணாடி வெற்றி.
முகம் மட்டும் மிஞ்சும்வரை
பிரதிபலிப்புகளை உரித்தெறிந்து
அடித்துச் செல்லும்
நதி தோல்வி.
தன் சொந்தச் சிலை அருகே
மனிதனை அமர வைத்து
மெல்லச் சிலையாகவே
மாற்றுவது வெற்றி.
ஒரு மனிதனை உடைத்து
வறண்ட நிலம் போல் பிளந்து
ஆழத்திலிருந்து புதிதொன்றை
முளைக்கச் செய்வது தோல்வி.
இறுதியில்
காலம் கணக்கிடுவதில்லை
எத்தனை வெற்றிகள்
நம் வாசலைக் கடந்தனவென்று.
வாழ்வு தேடுவது
தோல்விப் பெருவெளியில்
துடிக்கும் இதயத்தின்
ஒற்றைத் துளி இரத்தத்தில்
மிச்சமிருக்கும் சூட்டை
*
படம்: ஏஐ உருவாக்கம்
*
நன்றி பண்புடன்!


நன்றாய் இருக்கிறது. ஆனால் அவற்றை ஏன்.. சரி விடுங்கள்.
பதிலளிநீக்குநீங்கள் கேட்க வருவதை ஓரளவு ஊகிக்க முடிகிறது:). வெற்றிகள் வேண்டாதவை அல்ல. அதை நோக்கியதுதானே வாழ்க்கை. இலக்கை எட்டி விட்டோம் என நின்று விடாமல், தோல்விகள் வந்தாலும் துவண்டு விடாமல் தொடர்ந்து பயணித்தலின் அவசியத்தைப் பேசுகிறது கவிதை. நன்றி ஸ்ரீராம்!
பதிலளிநீக்குஹா ஹா ஹா ஹா என்ன ஆட்சேபம் என்று சரியாக புரிந்து கொண்டீர்கள். நன்றி !கௌரவம் படத்தில் சிவாஜி கணேசன் ஒரு காட்சியில் சொல்வார் , "என்னுடைய அண்ணன் பிரெஸ்டிஜ் பத்மநாபன் சொல்வான்.." என்று சொல்லி ஒரு வசனம் ஒன்று சொல்லுவார் .முடிந்தால் கண்டுபிடித்து கேட்டுப்பாருங்கள்!!!!!!!
நீக்குநம்மை உயிர்ப்புடன் வைத்து கொள்ள வேண்டும்.
பதிலளிநீக்குநாம் மட்டும் இருக்கும் அறையில் நம் காலடி சத்தம் மட்டும் கேட்கும் தனிமையில் இருக்கையில். புகழ் வெளிச்சத்தில் கைதட்டல்களுடன் வாழ்ந்தவர்கள் அறையில் முடங்கி போவது சோகம்.