வெள்ளி, 7 ஜனவரி, 2022

அக்காக் குயில் ( Common hawk-cuckoo ) - பறவை பார்ப்போம்

 #1

ஆங்கிலப் பெயர்: Common hawk-cuckoo
உயிரியல் பெயர்: Hierococcyx varius

க்காக் குயில் இந்திய துணைக் கண்டங்களில் காணப்படும், நடுத்தர அளவிலான பறவை. குயில் இனத்தைச் சேர்ந்த இப்பறவை தோற்றத்தில் வல்லூறுவைப் போல் இருக்கும் என்பது உண்மை. நானும் இதனை இளம் வல்லூறு என எண்ணியே படம் எடுத்தேன். ஓரிரு கணங்களே காட்சி தந்து விட்டுப் பறந்து விட்ட படியால் நன்றாகப் பார்க்க முடியவில்லை. (தெளிவாகப் படமாக்கவும் முடியவில்லை.) பின்னர் எடுத்த படத்தை உற்று நோக்கிய போது வல்லூறுவைப் போலக் கண்கள் மஞ்சளாக இல்லையே எனத் தோன்றியது. கண்களைச் சுற்றிக் காணப்பட்ட அந்த மஞ்சள் வளையமும் வித்தியாசமாகப் பட்டது. இணையத்தில் தேடியதில் இது அக்காக் குயில் (அல்லது  அக்காக் குருவி) எனத் தெரிய வந்தது. 

#2

வேறு பெயர்கள்: 
அக்காக் குருவி, 
மூளைக்காய்ச்சல் பறவை

மற்ற பல குயில் இனங்களைப் போல இவையும் தம் முட்டைகளைப் காக்கை அல்லது தவிட்டுக்குருவி போன்ற பிற பறவைகளின் கூடுகளில் இடுகின்றன. மனிதர்கள் வசிக்கும் பகுதிகளிலுள்ள மரங்களில் வாழும் என்றாலும் அத்தனை எளிதில் தென்பட்டு விடாது.

வல்லூறுவை விட சிறிதாக, சுமார் 32 செ.மீ அளவில் புறாவின் உயரத்தில் இருக்கும். இப்பறவையின் மேல் பாகம் சாம்பல் நிறத்திலும் முன் பாகம் வெள்ளை நிறத்தில் பழுப்பு நிற சிறு குறுக்குவாட்டுக்  கோடுகளைக் கொண்டிருக்கும். வாலின் நுனி அகன்று இருக்கும்.  ஆண், பெண் பறவைகள் ஒரே போன்றே தோற்றமளிக்கும் எனினும் ஆண் பறவை அளவில் சற்றே பெரிதாக இருக்கும். கண்களைச் சுற்றிக் காணப்படும் தனித்துவமான மஞ்சள் வளையத்தைப் பற்றி மேலே குறிப்பிட்டாயிற்று:).

தோற்றத்தில் மட்டுமில்லாமல் இறக்கைகளை அடித்து லாவகமாக சறுக்கியபடி பறப்பது, மேலிருந்து கிளைகளில் வந்து அமரும் விதம், வாலினை ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கமாக ஆட்டுவது எனப் பல செயல்களிலும் வல்லூறுவை ஒத்திருக்கும்.

அதே போல மார்பிலும் தொண்டையிலும் காணப்படும் ஆழ்ந்த நிறக் குறுக்குவாட்டுக் கோடுகளைப் பார்த்து இதை பெரிய-பருந்துக் குயில் (Large Hawk-Cuckoo) எனக் குழப்பம் அடைபவர்களும் உண்டு.

கோடைக் காலத்தில், மழைக்காலத்துக்கு முந்தையக் கோடை மாதங்களில் ஆண் பறவைகளின் தொடர்ச்சியான குரலைக் கேட்க முடியும். ஆனால் காணக் கிடைப்பது அரிதாக இருக்கும்.  மூன்று கட்டையில் சத்தமான அலறலாக ஐந்தாறு முறைகளாகக் குரலெழுப்பும். நாள் முழுவதும் மற்றும் நிலாக் காயும் இரவுகளிலும் இவற்றின் சத்தம் கேட்டபடி இருக்கும். பெண் பறவைகளின் தொடர்ச்சியான குரலும் கர்ண கடூரமாகவே இருக்குமெனத் தெரிகிறது.

இப்படிக் காய்ச்சலில் கதறுவது போன்ற தன் குரலினால் ‘மூளைக் காய்ச்சல் பறவை’ என்ற பெயரைப் பெற்றிருக்கிறது. ஒரு காலத்தில் ப்ரிட்டிஷ்காரர்கள் இந்தியா வந்த போது இப்பறவையின் குரலைக் கேட்டுத் திகைத்துப் போயினராம். தனக்கு மூளைக் காய்ச்சல் எனக் கண்டறிந்து நிலைகுலைந்து அதுவே அதை அறிவிப்பது போலிருக்கிறது எனக் கருதி brain fever bird என இப்பறவையை அழைத்தனர்  என்றும் சொல்லப்படுகிறது.

இவற்றின் பிரதான உணவு புழுப் பூச்சிகள். குறிப்பாகக் கம்பளிப் பூச்சிகளை லாவகமாக உண்பதில் வல்லமை பெற்றவை. அவற்றை மரங்களில் தேய்த்து நச்சுப் பாகங்களை நீக்கி விட்டு உண்ணும். 

இவற்றின் இனப்பெருக்கக் காலம் மார்ச் முதல் ஜூன் வரையிலும். தவிட்டுக் குருவிகளின் இனப் பெருக்கக் காலத்தோடு ஒத்தும் போவதால் அவற்றின் கூடுகளில் ஒரு ஒரு முட்டையாக இட்டு விடும். குஞ்சுகள் வளர்ப்புப் பெற்றோருடன் சுமார் ஒரு மாத காலம் வரையிலும் இருக்கும். 

**

*விக்கிப்பீடியா ஆங்கிலத் தளம் உட்பட இணையத்திலிருந்து சேகரித்துத் தமிழாக்கம் செய்த தகவல்கள்.
**

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: (121)
பறவை பார்ப்போம் - பாகம்: (78)

***

12 கருத்துகள்:

  1. ஆச்சர்யமான தகவல்கள்.  கம்பளிப்பூச்சியையே பிடித்து உண்ணும் என்பதும் ஆச்சர்யம்.  அன்னக்கிளி படத்தில் 'சொந்தமில்லை பந்தமில்லை' பாடலில் அக்கக்கா எனும் கீதம் எனும் வரி நினைவுக்கு வந்தாலும் அது சத்தியமாக இந்த அக்கா பறவை எழுப்பும் ஒலியல்ல என்பது பின்வந்த வரிகளில் அதன் குரல்வளம் பற்றி படித்ததும் புரிந்தது! 

    இது அக்காப்பறவை என்றால் தங்கைப் பறவை எங்கே இருக்கும்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. https://tamilamudam.blogspot.com/2011/05/blog-post_16.html இந்தப் பதிவின் நாலாவது பத்தியில் (சிறுவயதில் கேட்ட ஆனால் பார்க்காத) ‘அக்கூ.. அக்கூ..’ என்று சோகமாகக் குரலெழுப்பும் குருவியைப் பற்றி எழுதியிருக்கிறேன். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சோகப் பாடலில் வரும் குருவி அதுவாகக் கூட இருக்கலாம் :).

      கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. நானும் இதைப் பார்க்க வேண்டும் என்று ரொம்பவே தேடியதுண்டு அதன் சத்தம் கேட்கும் போதெல்லாம். உங்கள் படத்தின் வழி பார்த்துக் கொண்டேன். வீட்டருகில் இருக்கும் மரத்தில் ஏப்ரல் மாதங்களில் சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கும் மாலை நேரத்திலும் கூட. ஆனால் காண வேண்டும் என்று பார்த்து பார்த்துத் தேடி கண்ணில் அகப்பட்டதே இல்லை. ஆமாம் இது அக்கா அல்லது அக்கு பறவை என்று சொல்வதுண்டு. ஊரில் இருந்தப்ப சின்ன வயதில் குயில் என்று நினைத்தோம் ஆனால் அதுவல்ல என்பதும் தெரிந்தது.

    இப்போது உங்கள் பதிவின் மூலம் இதைப் பற்றி தகவல்கள் அறிகிறேன் மிக்க நன்றி.

    படங்கள் அருமை ராமலக்ஷ்மி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில குறிப்பிட்ட மாதங்களில் இரவிலும் ஒரு பறவை ஒலி எழுப்பியபடியே இருக்கும். அது இதுதானோ என நினைக்கிறேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீதா.

      நீக்கு
  3. முதல் படம் நிஜமாகவே குட்டி வல்லூறு போலவே இருக்கு!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், அப்படி நினைத்தே ஏமாந்தேன்:). https://tamilamudam.blogspot.com/2019/07/shikra-42.html வல்லூறுவையும் முன்னர் படம் எடுத்திருக்கிறேன் ஆகையால் பின்னர் வித்தியாசம் புலப்பட்டது:). நன்றி கீதா.

      நீக்கு
  4. படங்கள் ரொம்பவே அழகு! உபரியான தகவல்கள் ஆச்சரியப்பட வைக்கின்றன!!

    பதிலளிநீக்கு
  5. அக்காக் குருவிகளைப் பற்றிய தகவல்கள் அருமை..

    இப்போது தான் அக்காக் குருவி காணக் கிடைத்தது.. மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. படங்களும் தகவல்களும் சிறப்பு. நெய்வேலியில் கம்பளிப் பூச்சிகள் அதிகம் அதனால் அக்கா குருவிகளும் அதிகம். பழமொழி அதன் ஒலியைக் கேட்டு அதனை பார்க்க முயன்றது உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ‘பலமுறை’? ஒலியெழுப்பும் நேரத்தில் இதைக் கண்டதில்லை. காலையிலும் இரவிலும் விநோதமான கரகரப்பில் ஒலியெழுப்பும் பறவை இதுதானா என்பதும் உறுதியாகத் தெரியவில்லை:).

      நன்றி வெங்கட்.

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin