வியாழன், 28 மே, 2020

இது எங்கள் தேசம்!? - 'கீற்று’ மின்னிதழில்..

இது எங்கள் தேசம்!?


வீட்டை மறந்து
ஊரைத் துறந்து
உறவைப் பிரிந்து
மாநிலங்கள் தாண்டி
வாழ்வாதாரம் வேண்டி
துணிந்து இடம் பெயர்ந்தோம்
என்ன இடர் வரினும் காக்கும்
எங்கள் தேசம் என.

வானுயர்ந்த
கட்டிடங்களுக்காகவும்
வளைந்து நீண்ட
பாலங்களுக்காகவும்
மொழி அறியா ஊர்களில்
உழைத்தோம் ஓய்வின்றி
இது எங்கள் தேசம் என.

நோய்த் தொற்றுக்காக
தேசம் அணிந்து கொண்ட
பாதுகாப்பு வளையத்திற்கு வெளியே
நாங்கள் தூக்கி விசிறப்பட்ட போது
தொடங்கியது எம் பயணம்
கால்நடையாக
கோபமோ வருத்தமோ இன்றி
இது எங்கள் தேசம் என.

பாதங்கள் புண்ணாக
பசியும் வெயிலும் வாட்ட
எமக்கென்றிருக்கும் கூரைகளின் கீழ்
அடைக்கலமாகிட
பல்லாயிரக் கணக்கான மைல்களை
கடக்கிறோம் அகதிகளாக
இது எங்கள் தேசம் என.

பாதை தவறிவிடக் கூடாதென
இருப்புப்பாதை வழிசென்ற எம்மவர்
களைப்பிலே கண்ணயர அதுவே
கடைசி உறக்கமான
செய்தி கேட்டு
உடலும் உள்ளமும் நடுங்க
நடக்கிறோம் மெளனமாக
இது எங்கள் தேசம் என.

வேலைக்கு ஊதியம் என்றே
வாழ்ந்து பழகிவிட்ட நாங்கள்
சுயம் தொலைத்து
வேதனையுடனேயே
பற்றிக் கொள்கிறோம்
நீளும் உதவுகளைக் கரங்களை
இன்னும் இருக்கிறார்கள்
எங்களுக்கும் சகோதரர்கள்
இந்தத் தேசத்தில் என.

தடுமாறும் முதியவர்கள்
தவிப்புடன் கர்ப்பிணிகள்
வதங்கிய மலர்களாய் குழந்தைகள்
உலர்ந்து மடியும் உயிர்கள்..
கண்ணீர் காய்ந்த கன்னங்களுடன்
தொடருகிறோம் துயருடன்,
நேர்மையையும் உழைப்பையும் தவிர
வேறெதுவும் அறியாத எங்களால்
எழும்பிய தேசம்
இது எங்களுக்குத் தரும் வெகுமதி என.
*

படம்: இணையத்திலிருந்து..
#லாக்டவுன் #2020 #கொரோனா
**

கீற்று மின்னிதழில், 
நன்றி கீற்று!


ஆசிரியர் கூற்று!





***

18 கருத்துகள்:

  1. மனம் நோகிறது அன்பு ராமலக்ஷ்மி.
    எத்தனை வேதனை. நோய்த்தொற்றை விட இவர்கள் துன்பம் இன்னும் கொடுமை.
    இந்திய பாகிஸ்தான் பிரிவு நேரத்தை விடக் கொடுமை.

    பதிலளிநீக்கு
  2. அவர்களின் துயரத்தைப் பதிவு செய்துவிட்டீர்கள். வாசிக்கும்போது இயலாமையும் குற்றவுணர்வும் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. கையறுநிலை.

    பதிலளிநீக்கு
  3. வேதனையின் உச்சம்..கொரோனா மனிதர்களின் கோரமுகத்தை வெளிச்சமிட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறது..அருமையான ஆக்கம்..வாழ்த்துகளுடன்..

    பதிலளிநீக்கு
  4. வேதனையான நிகழ்வு.  ஆனால் இங்கே புலம் பெயர்ந்தோருக்கு மட்டும் அல்ல, பட்டுக்கோட்டையில் வெளியூரிலிருந்து வந்த சொந்த அண்ணன் தன் தம்பியை உள்ளே சேர்க்காமல் விரட்டி விட்டிருக்கிறார்.  தொடர்ந்து உறுமினார் என்று வயதான தன் சொந்தத்தை வீட்டுக்கு வெளியே வைத்திருந்திருக்கிறது இன்னொரு சொந்தம்,  மனிதத்தையே ஆட்டிப்பார்த்திருக்கிறது இந்தத் தீநுண்மி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுபோல அதிர்ச்சி அளிக்கும் தகவல்களை நிறைய சந்தித்துக் கொண்டிருக்கிறோம் :(.

      கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. படிக்கவே மிகவும் வேதனையாக இருக்கிறது.

    கவிதை புலம்பெயர்ந்தவர்களின் நிலமையை சொல்கிறது.தினம் இதை காட்சியாக பார்க்கும் போது மனது மிகவும் கனத்து போகிறது.


    பதிலளிநீக்கு
  6. வேதனையான நிகழ்வுகள். உண்மையை உரக்கச் சொல்லும் கவிதை.

    பதிலளிநீக்கு
  7. இவர்கள் துயரம் மனம் கனத்துத்தான் போகிறது.

    பதிலளிநீக்கு
  8. புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படவேண்டும். 'நாடு முழுதுக்குமான ரேஷன் அட்டை' இந்த வகையில் ஒரு நல்ல் முயற்சி. ஆனால் நோயின் கடுமையை முன்னிட்டு உற்றார் உறவினரே அவர்களை ஏற்கமறுப்பது விசித்திரமே. ஒரு தீக்கிருமி மானிடப் பண்பட்டையே சீர்குலைத்துவிட்ட அவலத்தை என் சொல்வது! உணர்ச்சி பூர்வமான படைப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொழிலாளர்களின் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்க வேண்டியது அவசியம்.

      கருத்துக்கு மிக்க நன்றி.

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin