புதன், 11 அக்டோபர், 2017

லலித மஹால் - மைசூர் அரண்மனைகள் (3)

மைசூரின் கிழக்குப் பாகத்தில், சாமுண்டி மலைக்கு அருகில் இருக்கும் லலித மஹால், நகரின் இரண்டாவது மிகப் பெரிய அரண்மனை.
#1

1921 _ ஆம் ஆண்டு மகராஜா நான்காவது கிருஷ்ண உடையாரினால், பிரிட்டிஷ் வைஸ்ராய் மற்றும் ஆங்கிலேய உயர் அதிகாரிகள் வந்து தங்குவதற்கென்றே பிரத்தியேகமாகக் கட்டப்பட்டது.

#2


லண்டனில் இருக்கும் செயிண்ட்.பால் கத்தீட்ரல் போலவே வடிவமைக்கப் பட்ட ஒன்று. குறிப்பாக நடுவில் இருக்கும் அதன் குவிந்த மாடம் (dome).  நேர்த்தியாகக் கட்டப்பட்ட இந்த அழகிய மாளிகை,
தூய வெள்ளை நிறத்தில் வர்ணம் பூசப்பட்டு ஜொலிக்கிறது.

#3

1974 ஆம் ஆண்டு இது ஹெரிட்டேஜ் ஓட்டலாக மாற்றப் பட்டது. தற்போது இந்திய சுற்றுலா வளர்ச்சித் துறையின் அசோக் க்ரூப் விடுதிகளோடு சேர்க்கப்பட்டு, அரசாங்கத்தின் பராமரிப்பு விடுதியாக உள்ளது.

#4


#5

சுற்றுலாப் பயணிகளைக் கவரவும் ஈர்க்கவும் பராம்பரிய அலங்காரங்கள், தோற்றங்களை  உள்ளும் புறமும்  அப்படியே பராமரித்து வருகிறார்கள். அந்தகால இருக்கைகள் ஓவியங்களை ஆங்காங்கே பார்க்க முடிகிறது என்றாலும் நவீன வசதிகளுக்கும் குறைவில்லை.  அரச பரம்பரை வரலாற்றுக்கேற்ப, விருந்தினர்களைப் பாரம்பரியப் பாணியில் உபசரித்து சேவைகளைத் தொடருகிறார்கள்.

#6


நவீன மற்றும் ஆங்கிலேய மெனார் பாணி, இத்தாலியன் பலாஸோ கட்டிட முறை ஆகியன கலந்து கட்டப்பட்ட மாளிகை. இரண்டு தளம் கொண்டது. கட்டிடத்தைத் தாங்கி நிற்கின்ற இரட்டை உயரத் தூண்கள். முகப்பில் பரந்த தாழ்வாரம் கொண்டது.

#7

கோள வடிவிலான குவி மாடங்களும் நடுவே சற்று பெரிய மாடமும் கம்பீரத்தைக் கூட்டுகின்றன.

#8


அழகிய ஓவியங்களுடன் கூடிய கண்ணாடிகள் பல கதவுகளிலும் ஜன்னல்களிலும் கூரைகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. மாடியின் இடப்பக்க பால்கனியிலிருந்து சாமுண்டி மலையின் அழகிய தோற்றம் தெரியும்படியாக கட்டப்பட்டுள்ளது.

#9


மாபெரும் விருந்து மண்டபம், நடன அறை, மற்றும் இத்தாலிய சலவைக் கற்களால் ஆன அழகான வளைவுகளைக் கொண்ட படிக்கட்டுகள் (படம் 2) மாளிகையின் சிறப்பம்சங்கள். விருந்து மண்படம், நடன அறை ஆகியன  கூட்டங்கள் நடத்தவும் உணவுக் கூடமாகவும்  தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

#10

இப்படிக்கட்டுகள் சிறு சிறு ஆபரணங்களால் அலங்கரிப்பட்டுள்ளன. பிரிட்டனில் இருக்கும் பல மாளிகைகளில் உள்ள படிக்கட்டுகளின் தோற்றத்தைப் பின்பற்றி அவ்வாறே வடிவமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

விருந்து மண்டபத்தின் மிக உயரமான கூரையில் சூரிய வெளிச்சம் உள் நுழையும்படி அமைக்கப்பட்ட கூரை மாடங்கள் பெல்ஜியம் கண்ணாடிகளால் ஆனவை.

#11


#12

பல கன்னட, இந்தி திரைப்படப் பாடல்கள் இம்மாளிகையின் முன் படமாக்கப் பட்டிருக்கின்றன. உட்புறத்திலும் படப்பிடிப்புகள் நடந்துள்ளன.

#13

அசோக் க்ரூப் ஓட்டலுடன் இணைக்கப்பட்டு விட்ட லலித மஹாலின் பராமரிப்பு அத்தனை சிறப்பாக இல்லை. பெங்களூர் அசோகா ஓட்டல் மிகச் சுத்தமாக, சேவையும் பிரமாதமாக இருக்கும். ஆனால் இங்கே என் அனுபவத்தில் நான் கண்டது, வரவேற்பறை சோபாக்கள் தூசியடைந்து காணப்பட்டன. திரைச் சீலைகளில் கரப்பான் பூச்சிகள் ஓடிக் கொண்டிருந்தன. மாளிகையைச் சுற்றிப் பார்ப்பதற்கான நுழைவுக் கட்டணத்தோடு ஸ்நாக்ஸ், காபி சேர்த்தி. சுற்றிப் பார்த்து படங்கள் எடுத்து விட்டு வந்த பின், ஆர்டர் செய்த 3 காபியைக் கொண்டு வர முப்பது நிமிடங்களுக்கு மேல் அவர்கள் எடுத்ததால் நீங்களே குடித்துக் கொள்ளுங்கள் எனக் கிளம்பி விட்டோம்.


***
[2012_ஆம் வருடம் சென்றிருந்த அனுபவப் பகிர்வுடன், 
தகவல்கள்.. விக்கிப்பீடியா மற்றும் இணையத்திலிருந்து தமிழாக்கம் செய்தவை.]


14 கருத்துகள்:

  1. 1980 மைசூர்ப் பயணத்தின்போது இங்கு சென்றுவந்தோம்.

    பதிலளிநீக்கு
  2. அழகிய, இல்லை, மிக அழகிய இடங்கள், படங்கள்.

    பிரம்மாண்டம்.

    காஃபியை நீங்களே குடித்துக் கொள்ளுங்களென்று.... காசு? அதைத் திருப்பித் தரவில்லையா?!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரிதான். அதைத் தர இன்னும் ஒரு மணி நேரம் ஆக்கக் கூடும்:).

      நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. கம்பீரம், கலைநயம், நேர்த்தியுடன் எழில்மிகு தோற்றம். எத்தனை அழகிய இரசனை!

    Detailings Blue print போல் கன கச்சிதம். இடப்பக்கத்திலிருந்து சாமுண்டி மலையைப் பார்க்கவேண்டும் என்கிற ஆவலைத் தூண்டுகிறது.

    Coffee வருவதற்குள் நடன அரங்கத்தையும் சுற்றிவந்து கிளிக்கியிருந்தால், நல்லதா நான்கு படமும், அரண்மனை காபியும் கிடைத்திருக்கும் :).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுமதிக்கப்பட்ட இடங்கள் எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்த பிறகே உணவுக் கூடம் சென்றோம். அங்கே காத்திருக்கையிலேயே இவ்வளவு தாமதம். எழுந்து போய் விட்டால்..:)! இத்தனைக்கும் கூட்டமும் இல்லை(பார்க்க படம் 9).

      நன்றி.

      நீக்கு
  4. இப்பலாம் லலிதா மகால் பார்வையாளருக்கு திறந்து விடுறதில்லைன்னு நினைக்கேன். ஒரு ஊர்ல ஒரு ராஜக்குமாரி படத்தை இங்கதான் எடுத்தாங்க

    பதிலளிநீக்கு
  5. இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்று பார்த்திருக்கிறேன்
    படங்கள் அழகோஅழகு

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin