செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

காஜி நசருல் இஸ்லாம் கவிதை - சொல்வனம் வங்காளச் சிறப்பிதழில்..

 

வங்காள இலக்கியச் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது சொல்வனம் இதழ் 240அதில், நான் தமிழாக்கம் செய்த கவிதையும் கவிஞரைப் பற்றிய குறிப்பும் ..! நன்றி சொல்வனம்!

திருடரும் கொள்ளையரும் 


யார் உன்னைக் கொள்ளைக்காரன் என அழைத்தது, ஓ நண்பா?
யார் உன்னைத் திருடன் என விளித்தது?
சுற்றிச் சூழ, கொள்ளையர் தம் முரசுகளை முழக்க
திருடர்கள் ராஜ்ஜிய பரிபாலனம் செய்கிறார்கள்.
யார் அந்த நீதித் தேவன்
கொள்ளையரையும் திருடரையும் சீர்தூக்கிப் பார்ப்பது?
கேள் அவனை,  இன்று உலகெங்கிலுமாய்
யார் சிறந்த கொள்ளையன் என்று?
ஓ மாண்புமிகு நீதிபதியே, உயர்த்திப் பிடியுங்கள் 
உங்களது நீதித்துறையின் கைச்சுத்தியை;
மகான்கள் இன்று மகான்களாய் இருக்கிறார்கள்
எளியவர்களின் செல்வத்தைக் களவாடிக் கொண்டு.
கொள்ளை, திருட்டு, வஞ்சகம், சுரண்டல் ஆகியன 
எவ்வளவுக்கு எவ்வளவு  பெரிதாக இருக்கிறதோ
அவ்வளவு உயருகிறது இப்போது சமூக அந்தஸ்து !
எழும்புகின்றன ராஜாக்களின் அரண்மனைகள்,
குடிமக்களின் உறைந்த இரத்தத்தினாலான செங்கற்களைக் கொண்டு.
கொள்ளைக்காரப் பணக்காரர்கள் நடத்துகிறார்கள் தம் தொழிற்சாலைகளை 
இலட்சக் கணக்கானவர் குடியிருக்கும் வீடுகளை அழித்து.
மோசடிக்கார ஆலைமுதலாளிகளே,
மனிதர்களை அரைக்கவே நீங்கள் இயந்திரங்களை நிர்மாணிக்கிறீர்கள்;
உள்ளே செல்லும் பசித்த மனிதர்கள் வந்து விழுகிறார்கள் வெளியே 
நசுக்கப்பட்டக் கரும்புகளாக.

லட்சக்கணக்கான மக்களைப் பிழிந்தெடுக்கும் 
மனிதத்தன்மையற்ற ஆலைமுதலாளிகள்
திராட்சை ரசத்தினால் தமது குவளைகளையும் 
தங்கத்தினால் தமது மண்குடுவைகளையும் நிரப்பிக் கொள்கிறார்கள்.
ஈட்டிக்காரர்களின் வயிறுகள் கொழுத்து வளருகின்றன
துயரத்தில் உழலுபவர்களுக்குத் தேவையான உணவை உண்டு.
பட்டினி கிடப்பவர்களின் வசிப்பிடங்களை ஆக்ரமித்துக் கொண்டு
குதிரைகளில் சவாரி செய்கின்றனர் நிலக்கிழார்கள்.
விபச்சாரமாக்கி விட்டுள்ளனர் உலகின் பொருளாதாரத்தை  வியாபாரிகள்;
குற்றம், சாத்தான், பானகம் பரிமாறுகிறவன்
அங்கே பாடுகிறார்கள் குவேராவின் வெற்றியை.
அன்றாட ரொட்டி , ஆரோக்கியம், வாழ்க்கை, நம்பிக்கை,
மொழி என அத்தனையையும் இழந்து, 
கொடூரமான வீழ்ச்சியைச் சந்திக்கிறான் நொடிந்த கடனாளி.
சுற்றுமுற்றும் - தப்பிக்க வழியேயில்லாமல்
அகழியை வெட்டி வைத்திருக்கிறது பொருளாதாரச் சண்டாளன்.
சிறை ஆனது மொத்த உலகமும் 
அதற்குக் காவலாளிகளாய் கொள்ளைக்காரர்கள்;
எல்லாக் கொள்ளையரும் திருடரும் 
ஒன்று விட்ட சகோதரர்கள்;
எல்லா வேடதாரிகளும் நண்பர்கள்.

யார் உன்னைக் கொள்ளைக்காரன் என அழைத்தது, ஓ நண்பா?
யார் சொன்னது, நீ திருடுவாய் என்று?
நீ பணத்தையோ  வீட்டுப் பண்டபாத்திரங்களையோ
திருடியிருக்கலாம்,
ஆனால் நீ யாருடைய மென்மையான இதயத்திலும்
பட்டாக்கத்தியைக் பாய்ச்சவில்லை.
நீ திருடனாக இருக்கலாம், பரவாயில்லை,
ஆனால் அவர்களைப் போல் மனிதாபிமானம் அற்றவனில்லை.
ரத்னாகரைப் போல
நீயும் வால்மீகி ஆகலாம்
ஒரு உண்மையான மனிதனை நீ சந்திக்கையில்.

*
மூலம் (வங்காள மொழியில்..): 'Chor - daka' by Kazi Nazrul Islam 
ஆங்கில மொழியாக்கம்: Sayeed Abubakar
ஆங்கிலம் வழித் தமிழில்.. - ராமலக்ஷ்மி

**

ங்காளக் கவிஞரும், எழுத்தாளரும், இசைக் கலைஞரும் ஆன காஜி நசருல் இஸ்லாம் (1899 -1976),  நசருல் என்றே பரவலாக அறியப்பட்டார்.  இவரது பெரும்பாலான கவிதைகள் மற்றும் இசைப் பாடல்களின் கருவாக அமைந்தவை மதப்பற்று, தெய்வ நம்பிக்கை, ஃபாசிசம் மற்றும் சமூக அடக்குமுறைகளுக்கு எதிரான புரட்சிகரக் கருத்துகள்.  அரசியல், சமூக நீதிக்காகத் தன் கவிதைகளின் மூலமாகக் குரல் எழுப்பியதற்காகவும், தேசத்தின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டதற்காகவும் வங்காளத்தின் புரட்சிக்கவியாக இன்றளவிலும் அறியப்படுகிறார்.

1899_ஆம் ஆண்டு வங்காள இஸ்லாம் குடும்பத்தில் பிறந்தவர். இளைஞனாக இருந்தபோது அருகில் இருந்த மசூதியில் பணியாற்றியவர். கிராமியக் கலைக் குழு ஒன்றில் இணைந்து பணியாற்றிய காலத்தில் கவிதை, நாடகம், இலக்கியம், நாட்டுப்புறப் பாடல்கள் ஆகியவற்றைப் பற்றி அறிந்து கொண்டவர். 1917_ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தில் சேர்ந்து முதலாம் உலகப் போரின் போது சேவையாற்றியவர். அதன் பின் கொல்கத்தாவில் ஒரு பத்திரிகையாளராக அறியப்பட்டார். பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்துப் புரட்சிகரமான கவிதைகளைப் படைத்தவர்:
1. 'புரட்சிக்காரன்' - (Bidrohi - வங்காள மொழியில்) 
2.'அழிவின் பாடல்' -  (Bhangar Gaan - வங்காள மொழியில்)  

மேலும்  ‘வால் நட்சத்திரம்’ (Dhumketu -வங்காள மொழியில்) எனும் பத்திரிகையில் அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்து எழுதி வந்தார். இதன் காரணமாக பிரிட்டிஷ் காலனி அதிகாரிகளால் பலமுறை சிறை செய்யப்பட்டார்.

இவரது எழுத்துக்கள் விடுதலை, மனிதாபிமானம், அன்பு மற்றும் புரட்சியை மையமாகக் கொண்டிருந்தன. மத வெறியையும், பழமை வாதத்தையும் எல்லாவிதத்திலும் எதிர்த்தவர். மதம் மட்டுமின்றி சாதி வெறி, ஆண்-பெண் பாலின அடிப்படையிலான வேறுபாடுகளையும் எதிர்த்தவர். பல சிறுகதைகளையும், நாவல்களையும், கட்டுரைகளையும் எழுதியிருந்தாலும் தமது பாடல்களுக்காகவும், கவிதைகளுக்காகவும் சிறந்த புகழ் பெற்றவர். வங்க மொழியில் கஜல் பாடல்களுக்குச் செழுமை சேர்ந்தவர். தனது எழுத்துக்களில் அதிகமான அளவில் அரேபிய, பெர்சிய வார்த்தைகளை உபயோகித்ததற்காகக் குறிப்பிடப்பட்டவர்.




நசருல் சுமார் 4000 பாடல்களை எழுதி இசையமைத்தவர். அவற்றில் பெரும்பாலானவை HMV நிறுவனத்தால் ‘நசருல் கீத்’ என்ற பெயரில் கிராமபோன் இசைச் தட்டுகளாக வெளியிடப்பட்டன. தனது 43_வது வயதில் பெயர் அறியாத குணப்படுத்த முடியாத நோயினால் குரலையும் நினைவையும் இழந்தார். அதன் பிறகு சிகிச்சைக்காக வியன்னா, ராஞ்சி, இந்தியா எனப் பல இடங்களுக்கு மாறி வசித்தார். 1972_ஆம் வருடம் வங்காள அரசின் அழைப்பின் பேரில் தாக்காவுக்கு குடும்பதினரால் அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அரசாங்கம் குடியுரிமை வழங்கி கெளரவித்தது. அதன் பின் நான்காண்டுகள் கழித்து 1976_ல் காலமானார்.

***
(படங்கள்: இணையத்திலிருந்து..)



6 கருத்துகள்:

  1. கவிதை மொழிபெயர்ப்பு அருமை.  நஸ்ருல் பற்றி அறிந்தேன்.  நன்றி.

    பதிலளிநீக்கு
  2. கவிதை மொழிபெயர்ப்பு அருமை.நசுருல் பற்றி தெரிந்து கொண்டேன்.
    சொல்வனம் வங்காள இலக்கிய சிறப்பிதழுளில் இடம்பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. சிறப்பான கவிதை. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin