செவ்வாய், 13 டிசம்பர், 2016

எமிலி டிக்கின்சன்: தோட்டத்துக்கு வந்த பறவை

https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/28475486316/
தோட்டத்துக்கு வந்திருந்தது அந்தப் பறவை
நான் பார்த்தது அவனுக்குத் தெரியாது
தூண்டிற்புழுவைப் பாதியாகக் கடிக்கிறான்
அப்படியே பச்சையாக அதை விழுங்குகிறான்

பிறகு வசதியாக ஒரு புல்லில் இருந்த
பனித்துளியைக் குடிக்கிறான்,
வண்டொன்றுக்கு வழி விட
சுவர் ஓரமாகப் பக்கவாட்டில் தத்தித் தாவுகிறான்

வேகமாகச் சுழலும் கண்களால்
நாலாபக்கங்களிலும் நோட்டமிடுகிறான்,-
அச்சம் கொண்ட பாசிமணிகள் போலிருந்தன, அவை எனக்கு;
ஆபத்தில் இருப்பவனைப் போல, எச்சரிக்கையாக
தன் வெல்வெட் தலையைச் சிலுப்புகிறான்

ரொட்டித் துணுக்கொன்றை அளிக்கிறேன்,
சுருண்டிருந்த தன் சிறகுகளை அவன் விரிக்கிறான்
மிருதுவாகச் செலுத்துப்படுகிறான் வீடு நோக்கி

படகுகள் கடலைக் கிழித்து விரைவதை விடவும்
இலகுவாக நேர்த்தியாக,
பட்டாம்பூச்சிகளை விடவும்
நயமாக நளினமாக,
நீந்துகிறான் வானில்.

மூலம்:
IN THE GARDEN
Emily Dickinson

***


எமிலி டிக்கின்ஸனின் பிரபலமான இக்கவிதையின் தலைப்பு IN THE GARDEN என்பதாக இருந்தாலும் ’A bird came down the walk' என கவிதையின் முதல் வரியினாலேயே இக்கவிதை அறியப்பட்டு வருகிறது. ஒரு பறவையின், அன்றாட வாழ்வின் சாதாரணக் கணங்களைப் பற்றியதாக முதல் வாசிப்பில் தோன்றக் கூடும். ஆனால் பல குறியீடுகளைக் கொண்டதாக இக்கவிதை குறித்த விமர்சகர்களின் பார்வை சுவாரஸ்யமானது.

அமெரிக்க இலக்கிய விமர்சகராகிய ஹெலன் வென்ட்லர் (Helen Vendler ) இதை, சிறிய சம்பவத்தை விநோதமாக விவரிக்கும் கவிதை என்கிறார். கவிஞர் பறவையை ஒரு கொலையாளியாகப் பார்ப்பதாகவும், அது தனக்கே ஆபத்தை விளைவிக்கக் கூடும் என்பதான உணர்வு சட்டென எழ அதை ரொட்டித் துண்டைக் கொடுத்து சாந்தப்படுத்த முயன்றதாகவும் சொல்கிறார். கவிஞரின் கூர்ந்த அவதானிப்பைப் பாராட்டும் இவர், பறவை புறப்பட்டுச் செல்வதை வர்ணிக்கும் வரிகளைக் கொண்டாடுகிறார்.

மற்றுமொரு சுவாரஸ்ய தகவலையும் இவர் தருகிறார். கவிஞர் எமிலி தனது சொந்தப் பிரதியில் ஒருவாறாகவும், வெளியீட்டில் ஒருவாறாகவும் நிறுத்தக் குறியீடுகளை இட்டிருப்பதன் மூலம் இருவேறு விதமாக அனுபவத்தைச் சொல்ல முனைந்திருக்கிறார் என்கிறார். ரொட்டித் துண்டைக் கொடுத்த பிறகு ‘பறவை கொலையாளி ஆயிற்றே’ என தான் எச்சிரிக்கை அடைந்ததாக சொந்தப் பிரதியில் சொன்னவர், நீட்டப்பட்ட ரொட்டித் துண்டைப் பார்த்து பறவை எச்சரிக்கை அடைந்ததாக முதல் வெளியீட்டில் சொல்லியிருக்கிறார்.

அமெரிக்க இலக்கிய விமர்சகரும் பேராசிரியருமான ஹெரால்ட் ப்ளூம் (Harold Bloom) முரட்டுத்தனம், பயம், மரியாதை, செருக்கு, நயம் என சிக்கலான கலவையான குணங்களைக் கொண்டதாக அப் பறவை சித்திரிக்கப்பட்டிருப்பதை கவனத்துக்குக் கொண்டு வருகிறார்.

கவிஞரும் பேராசிரியருமான டாக்டர் சக் டெய்லர் (Dr. Chuck Taylor), இயற்கையான விவரிப்பைக் கொண்ட இக்கவிதையின் குறியீடு என்ன என்பதை ஆராய்கிறார். இலாவகமாக இலகுவாக மேலே மேலே செல்லும் பறவையின் பறத்தலை  ஆன்மாவின் இறுதிப் பயணத்தோடு ஒப்பிடுகிறார். எத்தனையோ குறைபாடுகள் இருப்பினும், புழுவைக் கொன்று உண்ணும் செயலைப் பறவை செய்யினும் இறுதி யாத்திரை இப்படியானதாகவே இருக்கிறது என்கிறார்.

(தகவல்கள்: ஆங்கில விக்கிப்பீடியாவிலிருந்து எனது தமிழாக்கம்)

***
எமிலி டிக்கின்சன் (டிசம்பர் 10, 1830 – மே 15, 1886)   அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த பெண் கவிஞர். ஆங்கிலக் கவியுலகில் குறிப்பிடத் தக்கப் படைப்பாளி .  தனிமையைப் பெரிதும் விரும்பியவர். வெள்ளை நிற ஆடைகளை மட்டும் அணிதல், விருந்தினருடன் பேசுவதில் தயக்கம் காட்டுதல், அறையை விட்டு வெளியே வராதிருத்தல் போன்ற பழக்க வழக்கங்களால் விந்தையான பெண்ணாக அறியப்பட்டார்.
டிக்கின்சன் ஆயிரத்து எண்ணூறு கவிதைகளை எழுதினாலும் அவரது வாழ்நாளில் அவற்றுள் வெகு சிலவே அச்சில் வெளியாகின. அவ்வாறு வெளியானவையும் பதிப்பாளர்களால் அக்கால கட்ட கவிதை மரபுகளுக்கேற்ப மாற்றங்கள் செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. டிக்கின்சனின் கவிதைகள் அவரது காலகட்டத்தின் கவிதை மரபுகளை மீறி புதிய வடிவங்களைக் கொண்டிருந்தன. மரணம் மற்றும் மரணமின்மை ஆகியவற்றை கருப்பொருள்களாகக் கொண்டிருந்தன. டிக்கின்சன் தன் நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களும் இவ்விஷயங்களையேக் கருப்பொருள்களாகக் கொண்டிருந்தன.

டிக்கின்சனின் நண்பர்களுக்கு அவர் கவிதை எழுதுவது தெரிந்திருந்தாலும் அவரது மரணத்துக்குப் பின்னரே அவர் பெரும் எண்ணிக்கையில் கவிதை எழுதியிருந்தது கண்டுபிடிக்கபபட்டது. அவரது முதல் கவிதைத் தொகுப்பு அவர் மரணமடைந்து நான்காண்டுகளுக்குப் பிறகு வெளியானது. 1955 முதல் டிக்கின்சனின் கவிதைகள் அனைத்தும் அவற்றின் மூல வடிவில் முதன்முறையாக வெளியேறின. 19ம் நூற்றாண்டின்இறுதியிலும் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் அவரது கவிதைகள் விமர்சகர்களின் வரவேற்பைப் பெறவில்லை. ஆனால் காலப்போக்கில் இலக்கிய உலகின் நிலைப்பாடு மாற்றமடைந்து தற்போது டிக்கின்சன் குறிப்பிடத்தக்க அமெரிக்கக் கவிஞர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.

[தகவல்கள்: தமிழ் விக்கிபீடியா பக்கத்திலிருந்து...]

***


16 கருத்துகள்:

 1. நல்லதொரு பகிர்வு. ஆங்கில மூலத்தில் சில கவிதைகள் படித்ததுண்டு.

  பதிலளிநீக்கு
 2. பிரபல கவிஞரின் பிரபல கவிதைகளில் ஒன்றை அழகாக...

  பதிலளிநீக்கு
 3. அற்புதமான கவிதை
  உணர்ந்து படிக்கும்படியாக அருமையான
  மொழிபெயர்ப்பு
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. எமிலி டிக்கின்சன் அவர்களைப்பற்றியும் அவர் கவிதையும் அறிய தந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 5. நன்றாக இருக்கிறது. விவரங்களும் படித்துத் தெரிந்து கொண்டேன்.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin