வெள்ளி, 11 நவம்பர், 2016

வரலாற்றின் கருணை - நவீன விருட்சம் 100_வது இதழில்..

நவீன விருட்சம் நூறாவது இதழில்..


எனது கவிதைகள் இரண்டு..

வரலாற்றின் கருணை


சிறு பிராயத்தில்
சிவன் கோவில் தோட்டத்தில்
பாரிஜாதப் பூக்களோடு
விளையாடியிருக்கிறேன்.
செடியில் கண் சிமிட்டியவற்றையும்
மண்ணில் சிந்திக் கிடந்தவற்றையும்
நோகாமல் ஒன்று ஒன்றாக
ஆள்காட்டி, பெருவிரல் இடுக்கினில்
இளஞ்சிகப்புக் காம்புகளைப் பற்றி
மிகக் கவனமாகச் சேகரித்திருக்கிறேன்.
கனமே இல்லாதப் பூக்களை
தோட்டத்துத் தொட்டியில் மிதக்க விட்டு
நீரின் அலைகளில் ஆடும் அழகினை
வேடிக்கைப் பார்த்திருக்கிறேன்.

பல பத்தாண்டுகளுக்குப் பின்
கனமற்றப் பாரிஜாதப் பூக்கள்
மீண்டும் என் கைகளில்.
கனத்த மனதுடன் கோப்பை நீரில்
மிதக்க விடுகிறேன் ஒன்று ஒன்றாக.
அன்றைய நாளில் என்னோடு  ஆடித் திரிந்த
சிறுவர் சிறுமியரின் பால்ய கால
முகங்களாக மாறிக் கொண்டே வந்தன
ஒவ்வொரு பூக்களும்.
சிலர் தொடர்பில் இல்லை
சிலர் உயிருடனே இல்லை
சரித்திரம் எதையும் திருப்பித் தந்ததில்லை
போனால் போகட்டுமென
நினைவுகளை மட்டும் விட்டுத் தந்திருக்கிறது.
*

[படம்: இணையத்திலிருந்து..]

பக்கம் 69_ல் விருட்சம் இணையதளத்தில் வெளியாகி முன்னர் இங்கு பகிர்ந்த ‘தனித்துவங்கள்’ கவிதையும்..
              நன்றி நவீன விருட்சம்!
***

                                                     

10 கருத்துகள்:

 1. இரண்டுமே அருமை. நவீன விருட்சத்தில் வெளியாவதற்கு வாழ்த்துகள்.

  இந்த இரண்டு கவிதைகளின் பொருளிலும் நானும் முன்பு முயற்சித்திருக்கிறேன். சில பெயர்கள் அழைக்கப்படும்பொழுது பால்யம் நினைவுக்கு வருவது போலவும், பழைய நண்பர்களை நினைப்பது போலவும், இதே போல என்னையும் யாரேனும் நினைத்திருக்கக் கூடும் என்றும் எழுதிய நினைவு..

  வாடிய இலை, பழைய நட்பு இரண்டையும் பற்றி நான் எழுதியதைத் தேடி எடுத்து விட்டேன்...

  1) வாடியதால்
  வாசம் தொலைத்த
  மலரொன்று
  விழுந்து கிடக்கிறது
  வற்றிய குளத்தில்

  ஏற்கெனவே
  விழுந்து கிடந்த
  மஞ்சள் இலைகள்
  காற்றில் நகர்ந்து
  ஆதுரத்துடன்
  அணைத்து மூடுகின்றன
  மலரை


  2) வருவதும் போவதுமான
  வாழ்க்கையில்
  நட்பு என்பது
  தனிக் கவிதை.

  என்னை மறந்த
  நட்பில்
  இன்னும்
  சிலர்
  என் நினைவில்

  நான் மறந்து விட்ட
  சில நட்புகளில்
  என்னை இன்னும்
  நினைக்கும்
  யாராவது இருப்பார்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரண்டு கவிதைகளும் அருமை. குறிப்பாக இரண்டாவது மிகப் பிடித்தது.

   பகிர்வுக்கு நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. கவிதை அருமை ராமலக்ஷ்மி.
  வாழ்த்துக்கள்.

  ஸ்ரீராம் கவிதையும் அருமை.

  பதிலளிநீக்கு
 3. பாராட்டுகள் மேம் இப்படித்தான் ஒரு செய்தி இன்னொன்றின் நினைவை வரவழைக்கும் எனக்கும் இதுநடக்கிறது. ஆனால் கவிதை ஆவதில்லை. பதிவுகளாகிறது சில நேரங்களில்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான். ஒவ்வொருவர் அனுபவங்களும் மற்றவரின் நினைவுகளைக் கிளப்புகின்றன. நன்றி GMB sir.

   நீக்கு
 4. பெரிய எதிர்பார்ப்பில்லாமல் வாசிக்கத்தொடங்கினேன். எளிமையாக, நன்றாகவே இருந்தது

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin