வியாழன், 27 பிப்ரவரி, 2014

இலைகளுக்குள் ஒளிந்திருக்கும் கவித்துவம் - நன்றி திரு. க. அம்சப்ரியா!

தமிழாசிரியரும், மாதமிருமுறை வெளியாகும் “புன்னகை - கேட்பினும் பெரிது கேள்!” கவிதை இதழின் ஆசிரியருமாகிய கவிஞர். க. அம்சப்ரியா அவர்கள் எனது கவிதைத் தொகுப்புக்கு அளித்திருக்கும் மதிப்புரையை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்:
இலைகளுக்குள் ஒளிந்திருக்கும் கவித்துவம் 
இதற்கு முன்பும் இலைகள் உதிர்ந்து கொண்டிருந்தன. இனியும் உதிரும்... நீங்களும் நானும் இந்தத் தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கையில் ஆயிரமாயிரம் இலைகள் உதிர்ந்தபடியிருக்கும். ஒரு மரம் துளிர்த்துக் கொண்டிருக்கும் போது, ஒரு செடி தனக்கான கடைசி இலையையும் உதிர்த்துவிட்டு வெறுமனே தண்டோடு நின்றிருக்கத்தான் செய்யும். மறுபடியும் மழை வரும்... தான் செழித்து வளர்வதற்கான வாய்ப்பும் அமையுமென்று காத்திருக்கும் செடிகளாக ஒவ்வொரு இலையாக உதிர்த்த செடி மனிதர்கள் காத்திருக்கிறார்கள்.

அன்பை அடையாளப் படுத்தவும், செய்கிற செயலுக்கான விளைவுகளுக்காகவும், அன்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மனிதர்களுக்காகவும் யார் என்ன செய்கிறார்களோ இல்லையோ கவிஞர்கள் தம் அன்பையும், மனிதத்தையும் ஒவ்வொரு சொல்லிலும் புதைத்து வைத்துக் காத்திருக்கிறார்கள். அன்புக்காகவும் பரிவுக்காகவும் நேசத்துக்காகவும்  ஏங்கும் மனிதருக்குத் தமது பேரன்பைக் கவிதையெனக் கொட்டிக் கொடுக்கிறார்கள்.

அதுவும் கவிதை மரத்தில் இந்த இலைகள் ஒரு நாளும் பழுப்பதில்லை. எப்போதும் அப்போதுதான் விடிந்த விடியலின் வாசனையோடும், அப்போதுதான் பிறந்த குழந்தையின் எதிர்பார்ப்போடும் இந்தக் கவிதை மரம் காத்திருக்கிறது. அப்படியான ‘இலைகள் பழுக்காத உலகம்’ ஒன்றை அழகிய பரிசாக்கி நமக்குத் தருகிறார் கவிஞர் ராமலக்ஷ்மி.

இலைகள் பழுக்காத உலகத்தைப் பார்ப்பது அரிதானது. தன் தந்தையின் நினைவைப் பகிர்ந்து கொள்ள இந்தத் தலைப்பைப் பயன்படுத்தியிருப்பது என்பதே கவிஞரின் மெல்லிய இதயத்தை அடையாளப்படுத்துவதாகவும், தனக்குள் எத்தனை எதிர்பார்ப்புகளை வைத்திருக்கிறார் என்பதையும் புரிந்து கொள்ள இயலும்.

ஆசைகளின் ஞாபகங்களை அசை போடுவது அலாதிப் பிரியமானது. அதுவும் . ‘விட்டு விடுதலை’யாகி விடுகிற பேராசையுடன் அலையும் மனதிற்கு எல்லா நினைவுகளும் சிறகாய் விரியக் கூடியவைதான். ‘வண்ணத்துப் பூச்சிகளின் வகுப்பறை’ கவிதையில் ஒரே தளத்தில் ஆசிரியை, மாணவி(யர்) இருவருக்குமாக முளைத்துக் கொண்ட சிறகுகளைப் பற்றி அழகாகப் பதிவு செய்திருக்கிறார். ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு யாழினியும், கடைசி ஆளாய் வகுப்பறையை விட்டு வெளியேறும் கனவு இறக்கை முளைத்த ஆசிரியையும் இருக்கிறார்கள். அவர்கள் சுற்றிப் பறந்து மகிழ்வதற்கான வண்ணமயமான வானத்தை இந்தத் தொகுப்பிற்குள் கவிஞர் வைத்திருக்கிறார்.

இதுவரை நாம் சந்திக்காத மனிதர்களையும், அப்படிச் சந்தித்திருந்தாலும் அவர்களுக்குள் ஒளிந்து கிடக்கிற ‘முகமூடி’களையும் கவிஞர் ஆங்காங்கே நமக்கானதாக்குகிறார்.

நம்பிக்கைக்குள் புதைந்துள்ள எதிர்பார்ப்புகளும் கவிதையென முளைத்துக் கொள்கிற போது, தனக்கேயான வசீகரத்தை அவை பெற்றுக் கொள்கின்றன. அது அதீத நம்பிக்கைதான் எனினும் கவிஞனின் நெடுங்கால எதிர்ப்பார்ப்பாய் இருக்கிறது. அப்படித்தான் ‘மறுப்பு’ கவிதையும் மலர்ந்துள்ளது.

உங்களிடம் யாருக்காகவோக் கொடுப்பதற்கான மலர்கள் எவ்வளவு ஈரத்துடன் இருந்தாலும் அதைப் பெற்றுக் கொள்வதற்கான எந்த ஆர்வமும் இல்லாமல் போகிறவர்களிடம் நீங்கள் இன்னும் கெஞ்சியபடியிருக்கிறீர்கள்... அல்லது கெஞ்சியபடி இருக்கிறோம். புறக்கணித்தவர்களின் தோட்டத்து மல்லிகைச் செடிகள் ஒரு நாள் மொட்டுவிட மறந்து போயின என்று பதிவு செய்யும் ராமலக்ஷ்மியின் மனதிற்குள் பிறருக்கான மனித நேயம் மேலோங்கி, இவர் கவிஞர்தான் என்பதை நிரூபித்து விடுகிறது.
க. அம்சப்ரியா

அன்பையும்,பாசத்தையும், கவலைகளையும் வெளிப்படுத்துகிற எந்தக் கவிதையிலும் வலிந்து திணிக்கப்பட்ட பாசாங்கோ, வார்த்தைகளின் ஆர்ப்பாட்டமோ இல்லை. இயல்பாக, உண்மையின் மையப்புள்ளியிலிருந்து இதைப் பதிவு செய்கிறார். அதனால்தான் இந்தக் கவிதைகள் மென்மையையும், முரண்பாட்டையும் ஒருங்கிணைத்துச் செல்கின்றன.

கவிதையை உச்சநிலைக்கு எடுத்துச் செல்வதில் முதன்மையானது ரசனை சார்ந்த அனுபவம். ரசனைக்குக் கூர்மையான கவனிப்பு அவசியம். யாரும் நுழையாத கவிதைப் பாதைக்குள் வாசகனைக் கைப் பிடித்து  அழைத்துச் செல்கிற போது, வாசகன் காணும் உலகம் ஆச்சரியங்கள் விரியும் வண்ண உலகமாகிறது. ‘அரும்புகள்’ கவிதையில் ராமலக்ஷ்மியின் கவிதைப் பார்வை நேர்த்தியும், அழகும் மிக்கதாக இருக்கிறது. நாம் கவனிக்கத் தவறி விட்டோமே என்று வியக்கத் தோன்றுகிறது.

கவிதையில் கதை சொல்லும் உத்தியிலும் கவிஞரின் தனித்துவ அடையாளமாக இருப்பது ‘தேவதைக்குப் பிடித்த காலணிகள்’ என்கிற கவிதை. குழந்தைமையோடு அழகிய கதையாக விரிகிற காட்சியனுபவம் ஒரு குறும்படத்திற்கான பதிவாகவே உள்ளது.

இலைகள் பழுக்காத உலகத்திற்குள் ‘சிற்றருவியின் சங்கீதம்’, ‘ஆயிரமாயிரம் கேள்விகள்’, ‘பிரார்த்தனை’, ‘ஏக்கம்’, ‘அனுதாபம்’, ‘காப்பாத்து கடவுளே’, ‘ராணித் தேனீ’, ‘வண்ணக் குடைகள் விற்பனைக்கு’ என இன்னும் எடுத்துச் சொல்ல ஏராளமாக இருக்கின்றன. இந்த உலகத்திற்குள் நீங்கள் நுழைகிற போது நான் கண்ட காட்சியையும், அனுபவித்த சாரலையும், என் பாதத்தினடியில் சரசரத்த இலைகளையும், பறவைகள், ஆறுகள், குழந்தைகள் என்று இனிய குரலோசையைத் தவிர்த்து வேறு காட்சிகளையும் நீங்கள் உணரக் கூடும். ஒருவருக்கு அடையாளப் படுத்தியக் காட்சியையே வேறு ஒரு கோணத்தில் இன்னொருவருக்குச் சுட்டிக் காட்டுவதுதான் கவிதையின் குறும்பும்... குதூகலமும் எனலாம்.

கவிதை அனுதாபத்தை அடையாளம் காட்டுகிறது

கவிதை மகிழ்ச்சியை, வருத்தங்களைப் பங்கிட்டுக் கொள்கிறது

கவிதை உலகின் மிகச் சிறந்த அன்பொன்றை இனிய பரிசாக்குகிறது.

*

நன்றி திரு. க. அம்சப்ரியா!
[நவீனக் கவிதைப் பயணத்தின் தொடர் பயணியாகிய க. அம்சப்ரியா, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் பரிசுகளை இருமுறையும், சிவகாசி பாரதி இலக்கியச் சங்கத்தின் சி.கனகசபாபதி நினைவுப் பரிசு, செல்வன் கார்க்கி நினைவுப் பரிசு ஆகியவற்றைப் பெற்றிருக்கிறார். (அவரது நான்காவது கவிதைத் தொகுப்பான ‘இரவுக் காகங்களின் பகல்’ நூலிலிருந்து..) ] 
**

நூல் கிடைக்குமிடம்:
இலைகள் பழுக்காத உலகம்
அகநாழிகை புத்தக உலகம், 390,
அண்ணா சாலை, KTS வளாகம், முதல் தளம்,
சைதாப்பேட்டை, சென்னை – 15.

தபாலில் வாங்கிட: aganazhigai@gmail.com
இணையத்தில் வாங்கிட.  http://aganazhigaibookstore.com/
***


தொடர்புடைய முந்தைய பதிவுகள்:
‘எங்கள் Blog' ஸ்ரீராம் பார்வையில்.. இலைகள் பழுக்காத உலகம்
இரா. குணா அமுதன் பார்வையில்.. - இலைகள் பழுக்காத உலகம் 

9 கருத்துகள்:

  1. /// புறக்கணித்தவர்களின் தோட்டத்து மல்லிகைச் செடிகள் ஒரு நாள் மொட்டுவிட மறந்து போயின ///

    அழகான, அருமையான விமர்சனத்தை ரசித்தேன்...

    வாழ்த்துக்கள்...

    கவிஞர். க. அம்சப்ரியா அவர்களுக்கு நன்றிகள்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. புத்தகத்தில் வாசித்தேன். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. மதிப்புரையும் ஒரு அருமையான கவிதையாக இருக்கிறது ராமலக்ஷ்மி!
    இலைகள் உதிர்த்து மழைக்காக காத்திருக்கிற மரங்கள் பற்றி, செடி மனிதர்கள் பற்றி எத்தனை அழகாய் சொல்லியிருக்கிறார் அம்சப்ரியா! அன்பையும் மனிதத்தையும் அள்ளித்தருவதில் கவிஞர்களுக்குத்தான் முதல் இடம் என்பதில் எத்தனை பெருமை! பிறந்த குழந்தையின் எதிர்பார்ப்புடனும் விடியலின் வாசனையுடனும் காத்திருக்கிற கவிதை மரமாக உங்கள் 'கவிதைத்தொகுப்பை' வர்ணித்து அசத்துகிறார்.!! ரொம்ப நாட்களாயிற்று இப்படி ஒரு தேன் தமிழில் ஊறித்திளைந்து! ஒரு சிறுகதையோ, அல்லது நெடுங்கதையோ அல்லது கவிதையோ, அதை வலியுடன் பிரசிவித்தவருக்கு ஒரு நல்ல மதிப்புரை தான் அருமருந்தாகிறது! இந்த மதிப்புரையோ உங்கள் கவிதைத்தொகுப்பிற்கு சமர்ப்பிக்கப்பட்ட ஒரு அழகிய மணிமகுடம்!

    உங்களுக்கு என் இனிய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!!

    பதிலளிநீக்கு
  4. சிறப்பான மதிப்புரை.....

    இப்போது தான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன்....

    பதிலளிநீக்கு
  5. @மனோ சாமிநாதன்,

    நிச்சயமாக. நீங்கள் சொல்லியிருப்பது போல அவரது மதிப்புரை அழகிய மணிமகுடமே. மகிழ்ச்சியும் நன்றியும் மனோம்மா.

    பதிலளிநீக்கு
  6. @மனோ சாமிநாதன்,

    நிச்சயமாக. நீங்கள் சொல்லியிருப்பது போல அவரது மதிப்புரை அழகிய மணிமகுடமே. மகிழ்ச்சியும் நன்றியும் மனோம்மா.

    பதிலளிநீக்கு
  7. @வெங்கட் நாகராஜ்,

    நன்றி. மகிழ்ச்சி வெங்கட். உங்கள் கருத்துகளுக்காகக் காத்திருக்கிறேன்:).

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin