திங்கள், 25 ஆகஸ்ட், 2008

புன்னகைப் பூவே பூமிகா


பெற்றதும் பெற்றவளே 'தான் இனிப் பிழைக்க மாட்டோம்' என்ற எண்ணத்தில், பெற்ற பூவை பூமிக்குள் புதைத்து விட்டுப் பின் மனம் பதைத்து ஊர் மக்களிடம் சென்று சொல்ல, திரண்டு வந்து அவர்களால் காப்பாற்றப் பட்டிருக்கிறாள் இந்தச் சிசு. பெற்ற தாய் கை விட்டாலும் பூமித் தாய் கை விடவில்லை. அதனாலேயே "பூமிகா" என அன்புடன் அவர்களால் பெயரிடப் பட்டிருக்கிறாள். தாயும் இறந்து விட தூத்துக்குடி அடைக்கலாபுரத்திலுள்ள புனித சூசை அறநிலையக் காப்பகத்தில் அடைக்கலமாயிருக்கிறதாம் இந்தப் புன்னகைப் பூ.

இது ஒரு செய்தியாக படத்துடன் போன மாதம் குமுதம் வார இதழில் வெளியாகி இருந்தது. இதே போல 2003-ல் பெங்களூரின் பிரபல மருத்துவமனையொன்றில் பால்மணம் மாறாத பச்சிளம் சிசுவைக் கையாடி.. மயக்க மருந்து கொடுத்து.. சட்டத்துக்குப் புறம்பாக ஒரு கும்பல் விற்க முனைந்தாகச் செய்தி ஒன்றைப் படித்தப் பாதிப்பில் செப்டம்பர் 4, 2003 திண்ணை இணைய இதழில் நான் எழுதிய கவிதை உங்கள் பார்வைக்கு:கண்ணே கலைமானேபெற்றவள் கை
மாற்றியா விட்டாள்?
சொல்கிறார்கள் குற்றமாய்-
ஆயினும் எவருக்கும்
தெரியவில்லை சரியாய்-
தொற்றிக் கொள்ளத்
தோள் தேடி-கிளியே
கேள்விக் குறியாக நீ!

***

நோட்டுக்களாலே தொட்டில் கட்டி
நோட்டமிட்டு உனைக் கவர்ந்து
நோகாமல் கையாள
தூக்கத்துக்கும் மருந்தளித்து விட-
தூண்டிலில் சிக்கிய மீனாய் நீ!

***

தயக்கமே இல்லாமல்
தடயங்களை மறைத்துத்
தகவல்களையும் தடம் மாற்றி-
தடுமாற்றமே இல்லாமல்
தந்திரமாய் விலை பேசும்
தரகர் கும்பலிடம்
தத்தளித்திடும் தளிரே உண்மையிலே
தத்து அளித்திடவா
தரப் பட்டாய் நீ ?

***

கலி என்பது இதுதானோ
கற்றவரும் துணையாமே!
காலம் எங்கே செல்கிறதென
கலக்கம் சூழுதிங்கே கலைமானே
கவலை அறியாது நீ!

***

கொடுமை கண்டு அடங்கவில்லை
கொந்தளிப்பு இங்கெமக்கு
சந்தையிலே விற்கின்ற
கொத்தவரங்காயா நீ ?

***

மருத்துவமனை வளாகத்திலேயே
மனசாட்சியற்ற சிசு ஏலம்
மாசற்ற மலரே-ஏதும் புரியாமல்
மருந்து மயக்கத்தில் நீ!

***

காவலரால் மீட்கப் பட்டு
கரை சேர்ந்தாய் ஒரு வழியாய்
நிம்மதி நெஞ்சோடு
நிறைவாய் ஒரு வாக்கியம்
இனியேனும் இனிதாக
வாழ்வாங்கு வாழ்க நீ!

*** *** ***
இப்போது புன்னகைப் பூவாம் பூமிகாவும் நல்ல இடத்தில் சேர்ந்து வாழ்வாங்கு வாழ்ந்திட வாழ்த்திடுவோம்!

முதல் படம் நன்றி: 6 ஜுலை 2008 குமுதம் வார இதழ்
இரண்டாவது படம் நன்றி: 29 ஜூலை 2003 டைம்ஸ் ஆஃப் இண்டியா [செய்தியுடன் வந்தது]

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வேண்டுகோள்: பூக்களைப் புறக்கணிக்காதீர்கள்!
கேள்வி: அரசுத் தொட்டில் முறை தமிழ் நாட்டில் நடைமுறையில் இருக்கிறதா?
ஆசை: முறை தவறுவதால் பிறக்கும் குழந்தைகளுக்காகவும் வறுமை மற்றும் பல காரணங்களால் வளர்க்க வழிவகை அறியாதவர்களுக்கும் உதவும் வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் இம்முறை தவறாமல் இருக்க வேண்டும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பிரார்த்தனை: அரசுத் தொட்டில்களில் இட நேருகின்ற அவலங்கள் யாவும் மறைந்து அதற்கான அவசியமே இல்லாது போகும் பொற்காலம் பிறந்திட வேண்டும் என விரும்பும் பதிவர் ஆர்.செல்வக்குமாரின் கனவு மெய்ப்பட வேண்டும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
விழிப்புணர்வு: 28 Aug 2008 அன்று இரவு Times Now சேனலில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சியின் சுட்டியை பதிவர் சஞ்சய் மறுமொழியில் தந்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியைப் பார்க்க நேர்ந்தால் [பிரார்த்தனையை ஒரு பக்கம் நாம் தொடர்ந்தாலும்] தற்போதைய நடைமுறைத் தேவைக்காகவே எனது அந்த வேண்டுகோளும் ஆசையும் என்பது விளங்கக் கூடும். குழந்தைகளைப் புறக்கணிக்காமல், இப்படி கை மாற்றில் ஈடுபடாமல் பலவித சொந்தக் காரணங்களால் வளர்க்க இயலாது எனக் கருதுபவர்கள் முறையாகக் காப்பகங்களில் கொண்டு சேர்த்தால் அவர்கள் தத்து எடுக்கக் காத்திருக்கும் பல பெற்றோர்கள் வசம் சட்டப்படி ஒப்படைக்கப் பட்டு வாழ்வாங்கு வாழ்வார்கள்.
49 கருத்துகள்:

 1. நோக்கமும், கவிதையும் அழகா இருக்கு அக்கா!... :)

  பதிலளிநீக்கு
 2. கேள்விக்குறியோடு தாயைப் ப‌ற்றி புரியாத‌ செய்தியில் ஆர‌ம்பித்து, ப‌ண‌த்தால் குண‌ம் இழ‌க்கும் கேடுகெட்ட‌ ம‌னித‌ரை சாடி, த‌த்த‌ளிக்கும் த‌ளிரை கொத்த‌வ‌ர‌ங்காயென‌ உவ‌மைப் ப‌டுத்தி (அப்படித் தான் நொந்து போயிருக்கும் அத் த‌ளிர்), காவ‌ல‌ர் மீட்டெடுக்க‌, வாழ்வாங்கு வாழ்த்தி முடித்த‌து அருமை, அருமை. உங்க‌ள் ம‌ன‌ம் ப‌த‌றிய‌தை அழ‌கான‌ எளிய‌ வ‌ரிக‌ளில் அழ‌கான‌ முத்துக்க‌ளாய் கோர்த்திருக்கிறீர்க‌ள்.

  பதிலளிநீக்கு
 3. தமிழ் பிரியன் said...
  //நோக்கமும், கவிதையும் அழகா இருக்கு அக்கா!... :)//

  முதல் வருகைக்கும் கவிதையின் நோக்கத்தை புரிந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி தமிழ் பிரியன்.

  பதிலளிநீக்கு
 4. //கலி என்பது இதுதானோ
  கற்றவரும் துணையாமே!
  காலம் எங்கே செல்கிறதென
  கலக்கம் சூழுதிங்கே கலைமானே
  கவலை அறியாது நீ!//

  "கவலை அறியாது நீ" என்ற வரி மனசைத் தைத்தது. குழந்தையாகவே இருந்து விட்டால்...

  பதிலளிநீக்கு
 5. பூமிகா எந்த குறையும் இல்லாமல் வளர்ந்து. இந்த பூமியை ஆள வேண்டும். அதற்கு எல்லா வல்ல இறைவன் அவருக்கு துணை இருக்க இறைவனை வேண்டுகிறேன். ராமலட்சுமி அக்கா உங்கள் பதிவுகளில் இந்த பதிவு தான் வரலாற்று சிறப்புமிக்கது.

  பதிலளிநீக்கு
 6. சதங்கா (Sathanga) said...
  ///கேள்விக்குறியோடு தாயைப் ப‌ற்றி புரியாத‌ செய்தியில் ஆர‌ம்பித்து, ப‌ண‌த்தால் குண‌ம் இழ‌க்கும் கேடுகெட்ட‌ ம‌னித‌ரை சாடி, த‌த்த‌ளிக்கும் த‌ளிரை கொத்த‌வ‌ர‌ங்காயென‌ உவ‌மைப் ப‌டுத்தி (அப்படித் தான் நொந்து போயிருக்கும் அத் த‌ளிர்), காவ‌ல‌ர் மீட்டெடுக்க‌, வாழ்வாங்கு வாழ்த்தி முடித்த‌து அருமை//

  பதிவின் சாராம்சத்தை முத்தான வரிகளில் கோர்த்து மாலையாகத் தந்தமைக்கு நன்றி சதங்கா.

  பதிலளிநீக்கு
 7. //தாயும் இறந்து விட தூத்துக்குடி அடைக்கலாபுரத்திலுள்ள புனித சூசை அறநிலையக் காப்பகத்தில் அடைக்கலமாயிருக்கிறதாம் இந்தப் புன்னகைப் பூ.//

  அடப்பாவிகளா!

  //கலி என்பது இதுதானோ
  கற்றவரும் துணையாமே!//

  அருமையான வரிகள். படித்தவர்கள் தான் பல தவறுகள் செய்கிறார்கள்.

  //ஏதும் புரியாமல்
  மருந்து மயக்கத்தில் நீ!//

  எத்தனை உண்மை ..மருந்து மயக்கமே இல்லை என்றாலும் இந்த பிஞ்சு மனத்திற்கு எந்த சூழ்ச்சி புரிய போகிறது.

  //இப்போது புன்னகைப் பூவாம் பூமிகாவும் நல்ல இடத்தில் சேர்ந்து வாழ்வாங்கு வாழ்ந்திட வாழ்த்திடுவோம்//

  நானும் வாழ்த்துகிறேன்

  உங்கள் இந்த குழந்தைக்கான கவிதைக்கு என் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 8. தொட்டில் குழந்தைகள் திட்டம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல எந்த நாட்டிலும் இருக்கக்கூடாது.

  மருத்துவமனைகள் இருந்தால் நோய் இருக்கிறது என்று அர்த்தம்

  போலீஸ் இருந்தால்
  களவு இருக்கிறது என்று அர்த்தம்.

  அது போல
  தொட்டில் குழந்தைகள் திட்டம் இருந்தால்,
  தாய்-தந்தை யாரென்று தெரியாத குழந்தைகள் இருக்கிறார்கள் என்று அர்த்தம்.

  இந்த நிலை மாறவேண்டும்.
  அதனால்தான் சொல்கிறேன்

  தொட்டில் குழந்தைகள் திட்டம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல எந்த நாட்டிலும் இருக்கக்கூடாது.

  (என் வேண்டுகோளை ஏற்று மீண்டும் எழுதத் துவங்கியதற்க்காக வாழ்த்துக்கள். எழுத்து என்பது இறைவன் தந்த வரம். எழுதாத எழுத்துக்கள் கைவிடப்பட்ட குழந்தைகளைப் போல, கைவிடாதீர்கள்... கை வலிக்க எழுதுங்கள்)

  பதிலளிநீக்கு
 9. //கலக்கம் சூழுதிங்கே கலைமானே
  கவலை அறியாது நீ!//

  //தூக்கத்துக்கும் மருந்தளித்து விட-
  தூண்டிலில் சிக்கிய மீனாய் நீ!//


  அதுதானே அவங்களுக்கு அட்வான்டேஜ்!!
  ஒரு குழந்தையின் இன்னொசென்சை, அவங்களோட
  சுயநலத்திற்கு பயன்படுத்த எப்படி மனசு வருதோ??

  ம்ம்..!!

  பதிலளிநீக்கு
 10. பூமியிலிருந்து வந்தாள்
  பூமிகாவானாள்
  அடைக்கலாபுரம் சென்றாள்
  அடைக்கலமானாள்
  உன் கவிதையில் வந்தாள்
  கவிதையாகவே இருப்பாள்
  பிரார்த்தனைகளில் வருவாள்
  பிரார்த்திக்கப்படுவாள்

  உங்களை எண்ணிப் பெருமைப் படுகிறேன் சகோதரி

  அனுஜன்யா

  பதிலளிநீக்கு
 11. பிற்சேர்க்கையில் என் பெயரைச் சேர்த்து என்னை முதன்மை படுத்தியதற்க்காக நன்றி!

  பிரார்த்தனை எளிதானது,
  களத்தில் இறங்கி
  சமூகக் களைகளைப் பிடுங்குவதை விட.

  எளிதானதை மனதில் சுமப்பேன்.
  கடுமையானதை சொற்களால் பரப்புவேன்.

  பதிலளிநீக்கு
 12. கவிநயா said...

  //"கவலை அறியாது நீ" என்ற வரி மனசைத் தைத்தது. //

  கருத்துக்க்கு நன்றி கவிநயா.

  //குழந்தையாகவே இருந்து விட்டால்... //

  தன்னைச் சுற்றி நடப்பதையெல்லாம் அறியாத கள்ளம் கபடமற்றது குழந்தை உலகம். அதை இப்படிப் பயன்படுத்திக் கொள்பவர்களை என்னவென்று சொல்ல?

  பதிலளிநீக்கு
 13. கடையம் ஆனந்த் said...
  //பூமிகா எந்த குறையும் இல்லாமல் வளர்ந்து. இந்த பூமியை ஆள வேண்டும்.//

  என்ன அருமையான வாழ்த்து!

  //அதற்கு எல்லா வல்ல இறைவன் அவருக்கு துணை இருக்க இறைவனை வேண்டுகிறேன்.//

  எல்லோருமே அதற்காகப் பிரார்த்திப்போம்.

  //ராமலட்சுமி அக்கா உங்கள் பதிவுகளில் இந்த பதிவு தான் வரலாற்று சிறப்புமிக்கது.//

  பதிவு சிறப்பு பெறுவதை விட இம்மாதிரியான விஷயங்கள் நடந்ததாக இனி வரலாறே இருக்கக் கூடாது. அதற்காகவும் பிரார்த்திப்போம்.

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆனந்த்.

  பதிலளிநீக்கு
 14. //முறை தவறிப் பிறக்கும் குழந்தைகளுக்காக ஒவ்வொரு மாநிலத்திலும் இம்முறை தவறாமல் இருக்க வேண்டும்.//


  "முறை த‌வ‌றுவ‌தால் பிற‌க்கும் .." என‌ இருக்க‌லாமோ ?


  சுப்பு ரத்தினம்.
  தஞ்சை.

  பதிலளிநீக்கு
 15. கிரி said:
  //படித்தவர்கள் தான் பல தவறுகள் செய்கிறார்கள்.//

  ரொம்பச் சரி. இந்த கேஸில் மருத்துவர்களும் உடந்தை என்பது பெரிதாகப் பேசப் பட்டது.

  //எத்தனை உண்மை ..மருந்து மயக்கமே இல்லை என்றாலும் இந்த பிஞ்சு மனத்திற்கு எந்த சூழ்ச்சி புரிய போகிறது.//

  புரியப் போவதில்லைதான். ஆனால் அழுது வைத்தால் அவர்கள் மாட்டிக் கொள்வார்களே. அதற்காகப் பிறந்த பிஞ்சுக்கு மருந்தைக் கொடுப்பார்களா..சற்று டோசேஜ் அதிகமானாலும் அதுவே நஞ்சாகிப் போயிருக்குமே? சமுதாயத்தின் நஞ்சாக வெகு காலம் உலவி வந்த இக்கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விட்டதாக பின்னர் வந்த தகவல் ஒரு ஆறுதல்.

  //நானும் வாழ்த்துகிறேன்//

  ஆம் எல்லோரும் வாழ்த்திடுவோம். கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி கிரி.

  பதிலளிநீக்கு
 16. r.selvakkumar said...
  //தொட்டில் குழந்தைகள் திட்டம் இருந்தால்,
  தாய்-தந்தை யாரென்று தெரியாத குழந்தைகள் இருக்கிறார்கள் என்று அர்த்தம்.

  இந்த நிலை மாறவேண்டும்.
  அதனால்தான் சொல்கிறேன்

  தொட்டில் குழந்தைகள் திட்டம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல எந்த நாட்டிலும் இருக்கக்கூடாது.//

  உங்கள் நியாமான ஆதங்கம் எனக்குப் புரிகிறது. அப்படி ஒரு சூழல் ஏற்பட நம் நாடு பயணப் பட வேண்டிய தூரம் அதிகமுள்ளது. ஆனால் நம் கை மீறிய விஷயங்களில் கை கொடுப்பது பிரார்த்தனை. ஆகையால் உங்கள் ஆசையையே பிரார்த்தனையாகப் பிற்சேர்க்கை செய்து விட்டேன். மிக்க நன்றி செல்வக்குமார்.

  // எழுத்து என்பது இறைவன் தந்த வரம். எழுதாத எழுத்துக்கள் கைவிடப்பட்ட குழந்தைகளைப் போல, கைவிடாதீர்கள்...//
  எத்தனை அழகாக இந்தப் பதிவிலிருந்தே உதாரணம் காட்டி ஊக்கப் படுத்தியிருக்கிறீர்கள்.

  //கை வலிக்க எழுதுங்கள்//

  அதிகம் வலையேற்றா விட்டாலும் நோட்டுக்களை நிரப்பிக் கொண்டுதான் இருக்கிறேன். தற்சமயம் வாரம் ஒன்றாவது வலையேற்றும் வழக்கத்தை மேற்கொள்ளலாமென நினைத்திருக்கிறேன். நன்றி!

  பதிலளிநீக்கு
 17. சந்தனமுல்லை said...
  ////தூக்கத்துக்கும் மருந்தளித்து விட-
  தூண்டிலில் சிக்கிய மீனாய் நீ!//

  அதுதானே அவங்களுக்கு அட்வான்டேஜ்!!
  ஒரு குழந்தையின் இன்னொசென்சை, அவங்களோட
  சுயநலத்திற்கு பயன்படுத்த எப்படி மனசு வருதோ??////

  உண்மைதான் சந்தனமுல்லை. கல்மனம் என்பார்களே. இங்கே அது சரியாகப் பொருந்துகிறது.

  பதிலளிநீக்கு
 18. அனுஜன்யா said...
  //பூமியிலிருந்து வந்தாள்
  பூமிகாவானாள்
  அடைக்கலாபுரம் சென்றாள்
  அடைக்கலமானாள்
  உன் கவிதையில் வந்தாள்
  கவிதையாகவே இருப்பாள்//

  கவிதையாகவே வாழ்த்தி விட்டீர்கள்!

  //பிரார்த்தனைகளில் வருவாள்
  பிரார்த்திக்கப்படுவாள்//

  பிரார்த்தனை வலியது.

  //உங்களை எண்ணிப் பெருமைப் படுகிறேன் சகோதரி//

  பிரார்த்திக்கும் தங்கள் உள்ளம் கண்டு நானும் பெருமை கொள்கிறேன் அனுஜன்யா!

  பதிலளிநீக்கு
 19. r.selvakkumar said...
  //பிற்சேர்க்கையில் என் பெயரைச் சேர்த்து என்னை முதன்மை படுத்தியதற்க்காக நன்றி!//
  வேண்டுகோள், கேள்வி, ஆசை எல்லாம் தாண்டி பிரார்த்தனையைப் பிரதானப் படுத்த என்னைத் தூண்டியதற்காக நான்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

  //பிரார்த்தனை எளிதானது,
  களத்தில் இறங்கி
  சமூகக் களைகளைப் பிடுங்குவதை விட.//

  உண்மைதான். பிரார்த்தனை வலிமையானதும் கூட.

  //எளிதானதை மனதில் சுமப்பேன்.
  கடுமையானதை சொற்களால் பரப்புவேன்.//

  நல்ல வழக்கம். வாழ்த்துக்கள் செல்வக்குமார்.

  பதிலளிநீக்கு
 20. sury said...
  ////முறை தவறிப் பிறக்கும் குழந்தைகளுக்காக ஒவ்வொரு மாநிலத்திலும் இம்முறை தவறாமல் இருக்க வேண்டும்.//

  "முறை த‌வ‌றுவ‌தால் பிற‌க்கும் .." என‌ இருக்க‌லாமோ ?////


  தாங்கள் கூறியிருக்கும் திருத்தம் எத்தனை சரியானது!
  இந்தச் சிசுக்கள் எந்தப் பாவமும் புரியாதவை.
  எந்தத் தவறும் செய்யாதவை.
  பரிசுத்தமானவை.
  மாற்றி விட்டேன் வரிகளை. மிக்க நன்றி சார்!

  பதிலளிநீக்கு
 21. ஆழ்ந்த கருத்துக்கள்..
  பொதிந்த உண்மைகள்..
  மனது கனக்கிறது...

  பதிலளிநீக்கு
 22. உருப்புடாதது_அணிமா said...
  //ஆழ்ந்த கருத்துக்கள்..
  பொதிந்த உண்மைகள்..
  மனது கனக்கிறது...//

  முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அணிமா!

  பதிலளிநீக்கு
 23. கவலை தெறிக்கிறது உங்கள் கவிதைத் துளிகளில்.

  ராமலக்ஷ்மி,நிகழ்வுகளில் மனம்துயர் அடையும் போது ,பொங்கி வர்ரும் உங்கள் வார்த்தைகள் எனக்கு ஒரு வடிகாலாய் அமைந்தது. வளரட்டும் உங்கள் தமிழ் மேலும் மேலும்.
  அன்புடன்.

  பதிலளிநீக்கு
 24. எனக்கு இந்த செய்தி மற்றும் உங்கள் கவிதை படித்தவுடன் * பராசக்தி படத்தில்
  * கல்யாணி யின் குழந்தை சாகாமல் உயிருடன் வருவது ஞாபகம் வருகிறது.

  இப்போதெல்லாம் உண்மை நிகழ்ச்சிகள், கதை, கற்பனை மற்றும் சினிமாயில் வருவதைவிட வருத்தமளிப்பதாக வருகிறது! :-(

  நல்ல கவிதை ராமலக்ஷ்மி அவர்களே!

  வாழ்த்துக்கள்!

  I wish beautiful Boomika reads your poem when she grows up! ;-)

  பதிலளிநீக்கு
 25. "நான் விண்ணுக்கு நீ பூமிக்கு"
  என்று எண்ணித்தான்
  பூமிக்குள் என்னைப் புதைத்தாயோ?
  ஆதரவற்றவருக்கு அன்புக்கரம்
  ஆயிரம் நீளும்,என்பதை
  உன்னைபோல் நானும்
  புரியாமல் இருந்திருந்தால்,
  உனக்கு,அவப்பெயர் இல்லாமல்,
  நீ புதைக்கும் முன்,
  நானே ,என் மூச்சை ,
  கருவரையிலேயே புதைத்திருப்பேனே!
  எனக்கு என்ன பெயர்
  சூட்ட வேண்டும் என்று
  சொல்லாமல் சொல்ல,
  பூமிக்கா என்னைத் தந்தாய்?

  பதிலளிநீக்கு
 26. அன்றைக்கு நீங்க எழுதின கவிதை 5 வருடம் கழித்து இன்றைக்கும் பொருந்துகின்றது. :(

  உங்களின் இந்தக் கவிதை பொருந்தாமல் இருக்கும் நாளை ஆவலோடு எதிர்நோக்குகின்றேன்.

  பதிலளிநீக்கு
 27. வல்லிசிம்ஹன் said...
  //ராமலக்ஷ்மி,நிகழ்வுகளில் மனம்துயர் அடையும் போது ,பொங்கி வர்ரும் உங்கள் வார்த்தைகள் எனக்கு ஒரு வடிகாலாய் அமைந்தது.//

  உண்மைதான் வல்லிம்மா வருத்தங்களுக்கு வடிகாலாக அமைவது
  எழுத்துக்களால் அமையும் வார்த்தைகளும்
  வார்த்தைகளால் அமையும் வரிகளும் வரிகளால் அமையும் கவிதைகளும்தான்.

  பதிலளிநீக்கு
 28. வருண் said...
  //எனக்கு இந்த செய்தி மற்றும் உங்கள் கவிதை படித்தவுடன் * பராசக்தி படத்தில்
  * கல்யாணி யின் குழந்தை சாகாமல் உயிருடன் வருவது ஞாபகம் வருகிறது.//

  கதையிலே அச்சம்பவம் உங்களை அத்தனை பாதித்திருந்ததால்தான் இப்படித் தொடர்பு படுத்த முடிந்தது, இல்லையா வருண்?

  //இப்போதெல்லாம் உண்மை நிகழ்ச்சிகள், கதை, கற்பனை மற்றும் சினிமாயில் வருவதைவிட வருத்தமளிப்பதாக வருகிறது! :-(//

  வருத்தமளிக்கும் உண்மை வருண்.

  //நல்ல கவிதை ராமலக்ஷ்மி அவர்களே!//

  நன்றி.

  //வாழ்த்துக்கள்!
  I wish beautiful Boomika reads your poem when she grows up! ;-)//

  நம் அனைவரின் வாழ்த்துக்களும் அவளை வாழ்வாங்கு வாழ வைக்கும். கருத்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 29. goma said...
  //"நான் விண்ணுக்கு நீ பூமிக்கு"
  என்று எண்ணித்தான்
  பூமிக்குள் என்னைப் புதைத்தாயோ?
  ஆதரவற்றவருக்கு அன்புக்கரம்
  ஆயிரம் நீளும்,என்பதை
  உன்னைபோல் நானும்
  புரியாமல் இருந்திருந்தால்,
  உனக்கு,அவப்பெயர் இல்லாமல்,
  நீ புதைக்கும் முன்,
  நானே ,என் மூச்சை ,
  கருவரையிலேயே புதைத்திருப்பேனே!
  எனக்கு என்ன பெயர்
  சூட்ட வேண்டும் என்று
  சொல்லாமல் சொல்ல,
  பூமிக்கா என்னைத் தந்தாய்?//

  கோமா, புன்னகைப் பூக்கும் பூமிகாவுக்கு எதுவும் தெரியாது என்றுதான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவள் தன் பூவிதழ் திறந்தால் என்ன சொல்லியிருப்பாள் எனக் கவிபாடிக் கலங்க வைத்து விட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
 30. புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
  //அன்றைக்கு நீங்க எழுதின கவிதை 5 வருடம் கழித்து இன்றைக்கும் பொருந்துகின்றது. :(

  உங்களின் இந்தக் கவிதை பொருந்தாமல் இருக்கும் நாளை ஆவலோடு எதிர்நோக்குகின்றேன்.//

  பொருமி எழுதியதெல்லாமும் இப்படிப் பொருந்திப் போவது வேதனைக்குரிய விஷயம்தான் அப்துல்லா.
  இக்கவிதை எந்நாளும் இனி யாருக்கும் பொருந்தக் கூடாது. எல்லோரது பிரார்த்தனையும் அதுவாகவே இருக்கிறது பாருங்கள். கூட்டுப் பிரார்த்தனைக்கு என்றைக்குமே வலிமை அதிகம்தான்.

  பதிலளிநீக்கு
 31. நானும் அந்தக் குழந்தையை பற்றி படித்தேன்.

  உங்கள் கவிதை அருமை.

  மிக நல்ல கவிதை.

  பதிலளிநீக்கு
 32. செம டச்சிங் கவிதை... செல்வகுமாருக்கு மட்டுமல்ல.. நம் அனைவரின் விருப்பமும் அது தான்..

  பதிலளிநீக்கு
 33. புதுகைத் தென்றல் said...
  //நானும் அந்தக் குழந்தையை பற்றி படித்தேன்.//

  ஆமாம் ஒரு மாதம் ஆயிற்று அச்செய்தி வந்து. சில காலம் கழித்து குமுதமே அக்குழந்தையில் நலம் அறிந்து இன்னொரு கட்டுரை தந்தால் நன்றாக இருக்கும் இல்லையா, தென்றல்?

  பதிலளிநீக்கு
 34. SanJai said...
  // செல்வகுமாருக்கு மட்டுமல்ல.. நம் அனைவரின் விருப்பமும் அது தான்..//

  சஞ்சய் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நேற்று Times Now சேனலில் இரவு 9 முதல் 9.30 வரை ஒரு நிகழ்ச்சியைப் பார்க்க நேர்ந்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.சுமார் 10,12 ஆண்டுகளுக்கு முன் தங்கள் குழந்தைகளைப் பணத் தேவைக்காக வெளிநாட்டுக்குத் தத்துக் கொடுக்க ஏஜன்ஸிகளிடம் விற்று விட்ட சில தம்பதிகளையும், பிரசவித்த உடனேயே குழந்தைகளைத் திருட்டுக் கொடுக்க நேர்ந்த சில தம்பதிகளையும் பேட்டி எடுத்திருந்தார்கள். விற்றவர்கள் தவறுக்கு வருந்தி அழுதார்கள். திருட்டுக் கொடுத்தவர்கள் தமது தலையெழுத்தை எண்ணித் தேற்ற இயலாதபடி தேம்பியிருந்தார்கள். ஒரு விழிப்புணர்வை கொண்டு வர இவற்றையெல்லாம் காட்டி, வளர்க்க முடியாத தம்பதிகள் முறையாக எப்படி அரசு காப்பகங்களில் ஒப்படைக்க வேண்டும் என்பதையெல்லாமும் சமூக நிறுவன அதிகாரிகள் தெளிவாக விளக்கியிருந்தார்கள். இப்பதிவில் இரண்டாவதாக நான் கூறியிருந்த சம்பவத்தில் காவலர்கள் பலகாலமாக இப்படித் திருட்டில் ஈடுபட்டிருந்த அந்தப் பெரிய கும்பலையே பிடித்திருக்கிறார்கள். இப்போது தனியார் ஏஜன்ஸிகளுக்கு லைசன்ஸ் கொடுப்பதிலிருந்து சட்ட திட்டங்கள் இந்த விஷயத்தில் மிகக் கடுமையாக இருப்பதும் ஆறுதல் தரக் கூடிய விஷயம். அரசும் காவலரும் இதே போல தொடர்ந்து இவ்விஷயத்தில் கவனம் செலுத்தி வந்தால் நீங்கள் சொல்வது போல செல்வக்குமாரின் ஆசையும் நம் அத்தனை பேரின் கனவும் மெய்ப்படும் காலம் கட்டாயம் வரும்.

  பதிலளிநீக்கு
 35. தொட்டில் குழந்தை திட்டம் தற்பொழுது இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை, அரசியல் மாற்றம் காரணமாக அத்திட்டமும் செயலற்று போய்விட்டதா என்றும் தெரியவில்லை.

  செல்வகுமார் சொன்னது போல தொட்டில் குழந்தை திட்டம் எந்நாட்டிலும் இருக்க கூடாது...

  பதிலளிநீக்கு
 36. மீண்டும் மீண்டும் இந்த வலைச்சரத்தில் பங்கு கொண்டு எழுதுவதும், மற்றவர்களை வாசிப்பதும், ஒரு தொடர் பிரார்த்தனை போல எனக்குத் தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
 37. 3 நாட்களாக இங்கு கேபிள் கனெக்ஷன் வருவதில்லை. அதானால் என் அபிமான(தென்னிந்திய செய்திகளுக்கு நன்கு முக்கியத்துவம் தருகிறார்கள்.. CNN-IBN போல தெற்கை புறக்கனிப்பதில்லை)டைம்ஸ் நவ் பார்க்க முடியவில்லை.

  உங்கள் தகவலுக்கு நன்றி அக்கா.. அதை இப்போது http://timesnow.tv/NewsDtls.aspx?NewsID=14729 என்ற சுடியில் படித்துவிட்டேன். நன்றி. விருப்பமுள்ளாவர்கள் பாருங்க. விடியோவுடன் இருக்கு.

  பதிலளிநீக்கு
 38. சரவணகுமரன் said...
  //:-(//

  வருத்தத்தில் பங்கு கொண்டமைக்கு நன்றி சரவணகுமரன்.

  பதிலளிநீக்கு
 39. இசக்கிமுத்து said...
  //செல்வகுமார் சொன்னது போல தொட்டில் குழந்தை திட்டம் எந்நாட்டிலும் இருக்க கூடாது...//

  உங்களைப் போலவேதான் எல்லோரும் சொல்லியிருக்கிறார்கள் இசக்கிமுத்து. செல்வக்குமார் அவர்களே சொன்ன மாதிரி இது ஒரு தொடர் பிரார்த்தனையாகி விட்டது. அதற்கான வலிமை என்றைக்கும் அதிகம்.

  பதிலளிநீக்கு
 40. SanJai said...
  //உங்கள் தகவலுக்கு நன்றி அக்கா.. அதை இப்போது http://timesnow.tv/NewsDtls.aspx?NewsID=14729 என்ற சுடியில் படித்துவிட்டேன். நன்றி. விருப்பமுள்ளாவர்கள் பாருங்க. விடியோவுடன் இருக்கு.//

  சிரத்தையுடன் நிகழ்ச்சியைத் தேடிப் பார்த்துவிட்டு பலரும் அறிய சுட்டியையும் தந்துள்ளமைக்கு நான்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

  இந்த நிகழ்ச்சியைப் பார்க்க நேர்ந்தால் எனது தற்போதைய "ஆசை"க்கான காரணமும் விளங்கக் கூடும். குழந்தைகளைப் புறக்கணிக்காமல், இப்படி கை மாற்றில் ஈடுபடாமல் முறையாகக் காப்பகங்களில் கொண்டு சேர்த்தால் அவை தத்து எடுக்கக் காத்திருக்கும் பல பெற்றோர்கள் வசம் ஒப்படைக்கப் பட்டு வாழ்வாங்கு வாழும் இல்லையா?

  //தென்னிந்திய செய்திகளுக்கு நன்கு முக்கியத்துவம் தருகிறார்கள்.. CNN-IBN போல தெற்கை புறக்கனிப்பதில்லை)//

  உண்மைதான். டைம்ஸ் நவ்வின் இந்த நிகழ்ச்சியிலும் தெற்கு.. குறிப்பாகத் தமிழகத் தம்பதிகள்...
  இனியாவது மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இதில் ஒரு விஷயம் பாருங்கள். இது முக்கியமாய் எந்தச் சாராரைப் போய்ச் சேர வேண்டுமோ அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. இதைப் பார்க்கும் வாய்ப்பும் இருக்காது. பிராந்திய சேனல்களோ இம்மாதிரி நிகழ்ச்சிகள் தருவதில் அத்தனை ஆர்வம் காட்டுவதில்லை.

  பதிலளிநீக்கு
 41. @அபி அப்பா,
  என்னத்தையும் சொல்ல முடியலைதான். 'பிரார்த்தனை'யால் 'வேண்டுகோளும் ஆசையும்' நிறைவேறட்டும். 'கேள்வி'க்கு அரசு சிந்தித்து விடை கொடுக்கட்டும். 'விழிப்புணர்வு' பிறக்கட்டும்.

  பதிலளிநீக்கு
 42. கவிதை, கருத்து, கேள்வி, எண்ணம், ஆசைகள் அனைத்தும் உண்மை.. மனம் பதபதைக்கின்ற உண்மைகள்

  பதிலளிநீக்கு
 43. மனதை நெகிழ செய்கிறது
  கனம் தங்காமல் கண்ணீர் வெளிவருகிறது ...............

  பதிலளிநீக்கு
 44. @ கோவை மு.சரளா,

  கருத்துக்கு நன்றி. இது போன்ற சம்பவங்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டிருப்பது வேதனை.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin