Monday, August 18, 2008

வெண் புறா

ஆயிற்று ஆண்டுகள் சரியாக அறுபத்தியொன்று, அவரவர் வழியை அவரவர் பார்த்துக் கொண்டு போகிறோம் என அந்நியரிடமிருந்து அடுத்தடுத்த நாட்கள் சுதந்திரம் வாங்கிக் கொண்டு.

திரும்பிப் பார்த்தால் எத்தனை உயிர் இழப்புகள் இரண்டு பக்கங்களிலும் அன்றிலிருந்து இன்றுவரை என்னன்னவோ காரணங்களைச் சொல்லிக் கொண்டு.

வேண்டாம் வேண்டாம் இனி எந்த துவேஷமும் என ஏங்குவோர் இருபுறமும் உண்டு. அயர்வாக இருக்கிறது... அப்பக்கமும் இப்பக்கமும் விடுவதில்லை விடுவதில்லை என விடாமல் ஆவேசப்பட்டே அழிவுக்கு இட்டுச் செல்லும் அறிவிலிகளைக் கண்டு.

அத்தனையையும் தாண்டி அவ்வப்போது துளிர் விடும் நட்புகளைப் பூக்க விட்டால் நன்று. ஐந்தாண்டுகளுக்கு முன் அப்படி நம் நாட்டுக்கு வந்தது ஒரு அழகிய பூச்செண்டு.

சிகிச்சைக்கென வந்த நூர்பாத்திமாவின் வரவையொட்டி ஜூலை 24,2003-ல் திண்ணை இணைய இதழில் நான் எழுதிய கவிதை இதோ உங்கள் பார்வைக்கு:வெண்புறா

இரு துருவங்களாக
பாகிஸ்தானும் பாரதமும்!
பாலமாக நீ வந்தாய்
நூர் பாத்திமா!
இத் துருவங்களை
இணைக்கத்தான்
இரு துளைகளை
இறைவன் வைத்தானோ
இத்தனை சின்ன உன்
இதயத்திலே!

மறுபடியும் துளிர்க்கிறது நட்பு,
லாகூருக்கும் டெல்லிக்கும் பேருந்து-
சின்னத் தேவதையே உன்னைச்
சிணுங்காமல் ஏற்றிக் கொண்டு!
பெங்களூரே பரபரப்பானது,
பிஞ்சே உன்
பஞ்சுப் பாதங்கள் பட்ட போது.
'நூர் நூர் ' என
உன்னைப் பார்க்கத்தான்
எத்தனை நூறு பேர்-
கை நிறைய பூங்கொத்துக்களும்
வாய் நிறைய வாழ்த்துக்களும்
நெஞ்சு நிறைய பிரார்த்தனைகளுமாய்-
குழந்தைகளும் பெரியவரும்
வரிசை வரிசையாய்-
நினைத்தாலே பெருமிதம்!
'அந்நிய நாட்டுக் குழந்தை ' என
அந்நியப் படுத்தாமல்
அத்தனை செலவையும்-ஏற்று
கொண்டார் ஒரு சிலர்.
அது
ஆனந்தம் என்றால்
நல்லிணக்கத்துடன்
அதை ஏற்று,
பாச மகளின்
மருத்துவதுக்காகக்
கொண்டு வந்த
பெருந்தொகையை
நேசத்துடன்
இந்தியக் குழந்தைகளுக்காக
இந்திய மருத்துவரிடம்
தந்தாரே உன் தந்தை-
அது
பேரானந்தம்!
தேறிடுவாய் நீ
சீக்கிரம்
தேவதையே பாத்திமா!
உன்
சிங்காரச் சிரிப்பினிலே
சிலிர்த்துக் கிளம்பிப்
பறந்திடுமே
சமாதான வெண்புறா!
*** *** ***


[படங்கள்:இணையத்திலிருந்து]

28 comments:

 1. //வேண்டாம் வேண்டாம் இனி எந்த துவேஷமும் என ஏங்குவோர் இருபுறமும் உண்டு.//

  சரியாக கூறினீர்கள்

  //அயர்வாக இருக்கிறது... அப்பக்கமும் இப்பக்கமும் விடுவதில்லை விடுவதில்லை என விடாமல் ஆவேசப்பட்டே அழிவுக்கு இட்டுச் செல்லும் அறிவிலிகளைக் கண்டு.//

  கலக்கிட்டீங்க ராமலக்ஷ்மி பலரின் மனதை பிரதிபலித்து இருக்கிறீர்கள் (இதில் என்னுடைய மனமும் :-) )

  //இத் துருவங்களை
  இணைக்கத்தான்
  இரு துளைகளை
  இறைவன் வைத்தானோ//

  மனதை தொடும் வரிகள்

  நீங்கள் தற்போது எழுதிய கவிதையையும் எழுதுங்கள், படிக்க ஆவலுடன் இருக்கிறோம்.

  உங்கள் கவிதைகளின் பலமே அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையாக இருப்பது தான்.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. அருமையான கவிதை அக்கா!

  //உன்
  சிங்காரச் சிரிப்பினிலே
  சிலிர்த்துக் கிளம்பிப்
  பறந்திடுமே
  சமாதான வெண்புறா!//

  நல்லா இருக்கு!

  ReplyDelete
 3. ஆழ்ந்தக் கருத்துக்கள்...அற்புத எழுத்தாற்றல் உங்களுக்கு!! எவ்வளவு எளிதான வரிகளில் எல்லோர் எண்ணங்களையும் பிரதிபலிக்கத் தெரிகிறது உங்களுக்கு!!

  ReplyDelete
 4. உண்மையான உணர்வுகளுடன் அழகான கவிதை... இரு நாட்டு மக்களுக்கும் உள்ள உணர்வின் பிரதிபலிப்பே...

  நூர் பாத்திமாவின் கவிதை அழகு!

  ReplyDelete
 5. கிரி said...//பலரின் மனதை பிரதிபலித்து இருக்கிறீர்கள் (இதில் என்னுடைய மனமும் :-) )//

  வாருங்கள் கிரி. வரிக்கு வரி நீங்கள் எடுத்துக் காட்டியிருக்கும் விதமே கூறுகிறது பதிவு உங்கள் மனதையும் பிரதிபலித்திருக்கறது என்பதை.

  //மனதை தொடும் வரிகள் //

  மற்ற கருத்துகளும் மனதைத் தொட்டு அறிவிலிகள் யாராயினும் அவர்தம் கண்களைத் திறந்திட வேண்டும் என்பதே என் அவா.

  //நீங்கள் தற்போது எழுதிய கவிதையையும் எழுதுங்கள், படிக்க ஆவலுடன் இருக்கிறோம்.//

  நன்றி கிரி. இனிதான் எழுதணும்:))! முதலில் எழுதியவற்றையெல்லாம் ஒவ்வொன்றாகத் தந்து வருகிறேன். நடுநடுவே இப்போதைய எழுத்துக்களும் இருக்குமாறு அவசியம் பார்த்துக் கொள்கிறேன். நல்ல கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 6. மனதை தொடும் வரிகள். கலக்கிட்டீங்க ராமலக்ஷ்மி அக்கா!

  ReplyDelete
 7. ஆயில்யன் said...
  //அருமையான கவிதை அக்கா!//

  வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி ஆயில்யன்.

  ReplyDelete
 8. சந்தனமுல்லை said...
  //ஆழ்ந்தக் கருத்துக்கள்...அற்புத எழுத்தாற்றல் உங்களுக்கு!! எவ்வளவு எளிதான வரிகளில் எல்லோர் எண்ணங்களையும் பிரதிபலிக்கத் தெரிகிறது உங்களுக்கு!!//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சந்தனமுல்லை. எல்லோர் எண்ணங்களையும் பிரதிபலிக்க வேண்டும் என்கிற கவிதையின் நோக்கம் நிறைவேறிய மன நிறைவு கிடைத்து விட்டது.

  ReplyDelete
 9. தமிழ் பிரியன் said...
  //உண்மையான உணர்வுகளுடன் அழகான கவிதை... இரு நாட்டு மக்களுக்கும் உள்ள உணர்வின் பிரதிபலிப்பே...//

  வரவுக்கும் புரிதலுக்கும் நன்றி தமிழ் பிரியன்.

  //நூர் பாத்திமாவின் கவிதை அழகு!//

  நல்ல ஆரோக்கியத்துடன் நூறாண்டுகள் வாழ வாழ்த்திடுவோம்!

  ReplyDelete
 10. ஹிம்ம் நீங்க சொல்றது எவ்வளவு உண்மை..என்ன தான் நம்ம மக்கள் மத்தில கருத்து வேறுபாடு இருந்தாலும், Compassionla இந்தியர்களை அடிச்சிக்க ஆள் இல்லேன்னு Proove பண்ணிட்டாங்க..


  \\பிஞ்சே உன்
  பஞ்சுப் பாதங்கள் பட்ட போது.
  'நூர் நூர் ' என
  உன்னைப் பார்க்கத்தான்
  எத்தனை நூறு பேர்-
  \\

  \\தேவதையே பாத்திமா!
  உன்
  சிங்காரச் சிரிப்பினிலே
  சிலிர்த்துக் கிளம்பிப்
  பறந்திடுமே
  சமாதான வெண்புறா!
  \\


  அருமை :))

  ReplyDelete
 11. அக்கா முகமது அலி ஜின்னா இந்தியாவின் பிரதமராக சுதந்திரம் அடைந்தவுடன் தான் வர வேண்டும் என்று விரும்பினார். ஆனால் ஆதரவு நேருவிற்கே இருந்தது. எனவே இஸ்லாமியர்களுக்கு என்று தனிநாடு என்ற கோஷத்தோடு நாட்டைப் பிரித்தார்.இதில் என்ன பெரிய காமடி என்றால் அவர் இஸ்லாமிய நம்பிக்கைகளின் மேல் நம்பிக்கை கொண்டவர் அல்ல. மது அருந்துவது துவங்கி இஸ்லாம் தடை செய்த அனைத்து விஷயங்களையும் செய்தவர்.அவர் மனைவி கூட இஸ்லாமியர் அல்ல. ஓரு தனி மனிதனின் பதவி ஆசை( விரும்பிய ஜின்னாவும் சரி விட்டுக் கொடுக்க மறுத்த நேருவும் சரி) ஓரு தேசத்தையே இரு பிளவாக்கி இன்று வரை பிரச்சனைகளைத் தொடரச் செய்கிறது.

  ReplyDelete
 12. எளிமையான வார்த்தைகளில்
  கனமான கருத்துக்களை
  இயல்பாக எல்லோர் மனதையும்
  கவரும் வண்ணம் படைக்கும் உன் ஆற்றலைக் கண்டு பெருமைப் படுகிறேன், ராமலஷ்மி..மி...மி..மி

  ReplyDelete
 13. உங்களுக்கு நிறையவே நல்லெண்ணங்கள் இருக்குங்க ராமலக்ஷ்மி!!!

  நான்கூட நினைப்பதுண்டு, புத்தர், காந்தி பிறந்த பாரதத்தில் வாழும் நாம் கொஞ்சம் பெரியமனதுடன் விட்டுக்கொடுத்துப்போனால் என்ன?

  எதற்கு இந்த சண்டை, இந்த துவேஷம்? என்றெல்லாம். நிறையப்பேருடன் வாதம் செய்துள்ளேன், "ஏன் நாம் கொஞ்சம் "பெரியமனதுடன்" நடந்துகொள்ளக்கூடாது என்று.

  எல்லோரும் என்னை தேசதுரோகியைப் பார்ப்பதுபோல் பார்க்கிறார்கள்! :(.

  If it is not between countries, and it is between me and another person, I would have certainly resolved any dispute by being magnanimous. whatever it takes, I would do it! :)

  ReplyDelete
 14. இப்படிக் கவிதை எழுதி நீங்கள் மனத்தைக் கரைத்தால்,
  கட்டாயம் நம் இரு தேசமும் மீண்டும் நட்புத் துளிர்க்கும் கரங்களை நீட்டும் ராமலக்ஷ்மி. கல்லும் கனியாகும் ராமலக்ஷ்மியின் கவிதையைக் கேட்டால்.

  ReplyDelete
 15. //இத் துருவங்களை
  இணைக்கத்தான்
  இரு துளைகளை
  இறைவன் வைத்தானோ//

  //உன்
  சிங்காரச் சிரிப்பினிலே
  சிலிர்த்துக் கிளம்பிப்
  பறந்திடுமே
  சமாதான வெண்புறா!//

  மனதை நெகிழ வைத்துப் பின் மகிழ வைக்கும் வரிகள். அருமை, ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 16. கவிதையே சமாதானக்கொடி பிடிக்கிறது... மனிதாபிமானம் கொண்ட நெஞ்சங்கள் எல்லா இடத்திலும் உண்டு...தீ தன்னை பெயர்தன்னில் கொண்ட தீவிரவாதமக்களால் அவர்கள் அடையாளம் தெரியாமல் மறைகிறார்கள்.வெண்புறா எல்லாஇடத்திலும் தூது சென்றால் எத்தனை நன்றாக இருக்கும்? மிகச்சிறந்த பதிவு ராமலஷ்மி!

  ReplyDelete
 17. கடையம் ஆனந்த் said...
  //மனதை தொடும் வரிகள்.
  கலக்கிட்டீங்க ராமலக்ஷ்மி அக்கா!//

  எல்லோர் மனதையும் தொட்டு நல்ல மாற்றங்கள் நிகழப் பிரார்த்திப்போம் ஆனந்த்.

  ReplyDelete
 18. Ramya Ramani said...
  //ஹிம்ம் நீங்க சொல்றது எவ்வளவு உண்மை..என்ன தான் நம்ம மக்கள் மத்தில கருத்து வேறுபாடு இருந்தாலும், Compassionla இந்தியர்களை அடிச்சிக்க ஆள் இல்லேன்னு Proove பண்ணிட்டாங்க..//

  உண்மைதான் ரம்யா. நம் மண்ணின் பாரம்பரியமும் அதுதான். ஆனா எல்லா மக்களிடமும் இந்த compassion எப்போதும் இருந்தால் எப்படி இருக்கும்..? யோசிக்கவே நன்றாக இருக்கிறதல்லவா!

  கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ரம்யா!

  ReplyDelete
 19. அப்துல்லா, உள்ளதை உள்ளபடி சற்று உரக்கவேச் சொல்லி உள்ளத்தைத் தொட்டு விட்டீர்கள்.

  //ஓரு தேசத்தையே இரு பிளவாக்கி இன்று வரை பிரச்சனைகளைத் தொடரச் செய்கிறது.//

  பிளவான தேசங்களுக்குள் மேலும் மேலும் பிளவுகளை ஏற்படுத்திக் கொண்டே போகிற சக்திகளைக் கண்டு இன்னும் வேதனை அதிகரிக்கிறது. நல்ல மாற்றங்கள் வர கடவுள் அருள் புரியட்டும்.

  ReplyDelete
 20. நானானி said...
  //எளிமையான வார்த்தைகளில்
  கனமான கருத்துக்களை
  இயல்பாக எல்லோர் மனதையும்
  கவரும் வண்ணம் படைக்கும் உன் ஆற்றலைக் கண்டு பெருமைப் படுகிறேன், ராமலஷ்மி..மி...மி..மி//

  நானானி..னி..னீங்க கொடுக்கிற தொடர் ஊக்கமும் அதற்கு ஒரு காரணமாயிற்றே! மிக்க நன்றி..றி..றி:))!

  ReplyDelete
 21. வருண் said...
  //நான்கூட நினைப்பதுண்டு, புத்தர், காந்தி பிறந்த பாரதத்தில் வாழும் நாம் கொஞ்சம் பெரியமனதுடன் விட்டுக்கொடுத்துப்போனால் என்ன?//

  இதை இதை இதைத்தான் எல்லாரும் நினைக்க வேண்டுமென விரும்புகிறேன் வருண்.

  //எல்லோரும் என்னை தேசதுரோகியைப் பார்ப்பதுபோல் பார்க்கிறார்கள்! :(.//

  சில நல்ல விஷயங்களை உரக்கச் சொல்லுகையில் இப்படிப்பட்ட பார்வைகள் தவிர்க்க இயலாததாகி விடுகின்றன:(!

  //If it is not between countries, and it is between me and another person, I would have certainly resolved any dispute by being magnanimous. whatever it takes, I would do it! :)//

  Great Varun. முன்னர் சொன்னது போல உங்களைப் போல ஒவ்வொருவரும் நினைக்க ஆரம்பித்து விட்டால் தொலைத்து நிற்கும் அமைதியை மீட்டு விடலாம்.

  கருத்துகளுக்கு மிக்க நன்றி வருண்.

  ReplyDelete
 22. வல்லிசிம்ஹன் said...
  //இப்படிக் கவிதை எழுதி நீங்கள் மனத்தைக் கரைத்தால்,
  கட்டாயம் நம் இரு தேசமும் மீண்டும் நட்புத் துளிர்க்கும் கரங்களை நீட்டும் ராமலக்ஷ்மி.//

  கரங்களை நீட்டட்டும். கலகங்கள் மறையட்டும். உங்கள் நல்வார்த்தை பலிக்கட்டும் வல்லிம்மா.

  //கல்லும் கனியாகும் ராமலக்ஷ்மியின் கவிதையைக் கேட்டால்.//

  ரொம்பப் பெரிய வார்த்தைகள், நன்றி.

  ReplyDelete
 23. கவிநயா said...
  //மனதை நெகிழ வைத்துப் பின் மகிழ வைக்கும் வரிகள்.//

  ஆமாம் கவிநயா, அவ்வரிகள் பாடும் நூரின் வரவு பெங்களூரையே நெகிழவும் மகிழவும் வைத்தது என்றால் அது மிகையில்லை.

  கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி.

  ReplyDelete
 24. ஷைலஜா said...
  // மனிதாபிமானம் கொண்ட நெஞ்சங்கள் எல்லா இடத்திலும் உண்டு...தீ தன்னை பெயர்தன்னில் கொண்ட தீவிரவாதமக்களால் அவர்கள் அடையாளம் தெரியாமல் மறைகிறார்கள்.//

  ரொம்பச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
  வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ஷைலஜா.

  ReplyDelete
 25. ராமலஷ்மி மேடம்,

  கொண்டு, கண்டு, பூச்செண்டு என்று இன்றைய வரிகளோடு,

  //பிஞ்சே உன்
  பஞ்சுப் பாதங்கள் பட்ட போது.
  'நூர் நூர் ' என
  உன்னைப் பார்க்கத்தான்
  எத்தனை நூறு பேர்//

  என்ற வரிகளோடு, ஏனைய கருத்துக்கள் அனைத்தும் அருமை, எளிமை.

  ReplyDelete
 26. சதங்கா,
  கவிதையைக் கண்டு, அதில் பிடித்த வரிகளை எடுத்துக் கொண்டு, பாராட்டித் தந்து விட்டீர்கள் பின்னூட்டமெனும் பூச்செண்டு:)). நன்றி!

  ReplyDelete
 27. அன்பின் ராமலக்ஷ்மி,

  அருமையான கவிதை.

  //இத் துருவங்களை
  இணைக்கத்தான்
  இரு துளைகளை
  இறைவன் வைத்தானோ
  இத்தனை சின்ன உன்
  இதயத்திலே! //

  அர்த்தம் பொதிந்த அழகியவரிகள்.

  தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி.

  ReplyDelete
 28. ரிஷான்,
  தங்கள் பாராட்டுக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி!

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin