புதன், 21 அக்டோபர், 2009

தொழில்


ந்துருவுக்கு சந்தோஷமாக இருந்தது தன் தொழில் நேர்த்தியை நினைத்து. ஐந்து வருடங்களில் தனி ஆளாக இருபது முகமூடிக் கொள்ளைகள் நடத்தி விட்டான். ஏடிஎம், ஒதுக்குப் புறமான தனிவீடுகள், சிலபல கடைகளின் கல்லாக்கள் என அவன் கைவரிசை காவல்துறைக்குப் பெரும்தலைவலியாகவே இருந்து வந்தது. போலீசாரின் திறமையைப் புகழ்ந்து ஏதேனும் செய்தி பத்திரிகையிலோ தொலைக்காட்சியிலோ வந்தால் தாங்க முடியாத சிரிப்புத்தான் வரும் அவனுக்கு.

அன்றைய ப்ராஜக்ட்டையும் போட்ட திட்டம் இம்மியும் பிசகாமல் முடித்து விட்டிருந்தான். அவன் குறி வைத்தது ஒரு சின்ன நகைக் கடைக்கு. நகை என்று வந்து விட்டால் சின்னது பெரியது என்பதெல்லாம் ஒரு பொருட்டா என்ன? குண்டுமணி அளவேயானாலும் தங்கம் தங்கமாயிற்றே.

ஓரளவு அதிகமான போக்குவரத்துக் கொண்ட சாலை ஒன்றிலிருந்து பிரியும் சந்தின் முனையில் இருந்தது அந்தக் கடை. நேர் எதிரே பிள்ளையார் கோவில். அதுவும் காலை பத்து மணிக்கெல்லாம் நடை சாத்தி விடுவார்கள். கடையையும் கோவிலையும் விட்டால் அந்தச் சந்து முழுவதும் தனி வீடுகள். மதிய நேரம் ஆள் நடமாட்டமே இருப்பதில்லை.

ஒரு பக்கம் கலகலப்பான சாலை என்பதால் நகைக்கடை உரிமையாளர் காவலாளி ஏதும் வைத்துக் கொள்ளவில்லை. சரியாக இரண்டு மணியளவில் தனது நோஞ்சான் மச்சானின் பொறுப்பில் கடையினை விட்டுவிட்டு உரிமையாளர் சாப்பிடக் கிளம்பிச் சென்றால் திரும்புவதற்கு இரண்டு மணிநேரமாகும். கூட ஒரே ஒரு விற்பனைப் பெண்மணிதான். ஒருவாரமாக தினம் அந்த சமயத்தில் வந்து நின்று ஃபீல்ட் வொர்க் செய்தாயிற்று. பிள்ளையார் தும்பிக்கையை நீட்டிப் பிடித்தால்தான் உண்டு என நினைத்துக் கொண்டான் சந்துரு.

எதிர் திசையில் தன் பைக்கை நிறுத்தி விட்டு சாலையைக் கடக்க நிற்கையில் சரியாக ஒரு ஸ்கூட்டி வந்து நின்றது கடை முன்னே. ஒரு இளம் பெண்ணும், நடுத்தர வயதுப் பெண்மணியும் இறங்கினார்கள். சந்துரு அசரவில்லை. போட்ட திட்டம் நடந்தே ஆக வேண்டும். எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்கத்தான் ப்ரீஃகேஸில் சகல ஆயுதங்களும் இருக்கிறதே.

கடைக்குள் நுழையும் முன் தயாராக வைத்திருந்த முகமூடியை மாட்டிக் கொண்டவன், மடமடவென செயலில் இறங்கினான். தானியங்கிக் கதவாகையால் பிறர் சந்தேகத்துக்கு இடமின்றித் தாழிட எளிதாயிற்று. கல்லாவிலிருந்த நோஞ்சான் திடுக்கிட்டு சுகாதரிப்பற்குள் நெற்றியில் துப்பாக்கியை அழுத்திஹேண்ட்ஸ் அப்என்றான்.

அலாரம் எதையாவது அழுத்த நினைச்சே அவ்ளோதான். நான் சொல்றதையெல்லாம் ஒழுங்காக் கேட்டா நாலு பேருக்கும் உசுராவது மிஞ்சும். கூப்பாடு போடலாம்னு நினைச்சீங்க.. ஆளுங்க வருமுன்னயே அடுத்தடுத்து சுட்டுப்போட்டுட்டுப் போயிட்டேயிருப்பேன். இது சைலன்சர் பொறுத்தின துப்பாக்கி நெனப்புல இருக்கட்டும்என்றவன் விற்பனைப் பெண்மணியைப் பார்த்துதொற எம் பொட்டியஎன்றான்.

அதிலிருந்த கயிறுகளையும் துணிப்பந்துகளையும் அவளை விட்டே எடுக்க வைத்து வாடிக்கையாளர்கள் கைகளையும் நோஞ்சானின் கைகளையும் கட்டவைத்து வாயில் துணிப் பந்துகளைத் திணிக்கச் செய்தான்.

இப்ப ஒழுங்கு மரியாதையா ஷோகேஸில் இருக்கிற அம்புட்டு நகையையும் இதுலஅள்ளிப் போடல அப்புறம் ஒம் பொணத்ததான் இங்கிருந்து அள்ளிட்டு போக வேண்டியிருக்கும்எனப் பெட்டியைக் காட்ட நடுநடுங்கி அவன் சொன்னவாறே செய்தாள் அவள். காரியம் முடிந்ததும் ஏற்கனவே விதிர்விதிர்த்துப் போயிருந்த அந்தப் பெண்ணைக் கட்டிப் போடுவதும், வாயில துணியை அடைப்பதும் கஷடமாக இல்லை.

கொஞ்ச நேரத்துல ஒங்க முதலாளி வந்து அவுத்து விடுவாரு. வரட்டுமா கண்ணுங்களாஎன்றபடி யாரும் வருகிறார்களா எனக் கவனமாகப் பார்த்து விட்டு, வெளியேறும் சமயம் முகமூடியைக் கழட்டிக் கொண்டவன் பைக்கில் ஏறி சிட்டாய்ப் பறந்து வந்து விட்டான்.
*

என்ன மேடம் சொல்றீங்க. அவனை நேரில பார்த்ததே இல்லைங்கறீங்க. இப்பவும் உங்க யாராலேயும் முகத்தைப் பார்க்க முடியல. அப்புறம் எப்படி?" ஆச்சரியமாய்க் கேட்டார் ராம்.

ஆனால் வாடிக்கையாளராக மாட்டிக் கொண்ட பாமாவோ உறுதியாக இருந்தாள் அது அவன்தான் என்று.

இன்ஸ்பெக்டர் நான் சொன்ன தகவலை வச்சுக்கிட்டு உடனே அவனை வளைச்சுப் புடிக்க முடியுமான்னு முதல்ல பாருங்க. புடிச்ச பிறகு இதோ இந்த நம்பரில் என்னைக் கூப்பிடுங்க. பொண்ணு ரொம்ப பயந்து போயிருக்கா. இப்ப நான் கிளம்பறேன்என்றவள் மகளை அழைத்துக் கொண்டு ஸ்கூட்டியை நோக்கிச் செல்ல அவளை தடுக்க விரும்பவில்லை ராம்.

அங்கே குண்டு இங்கே குண்டுஎன வரும் அனாமத்து தொலைபேசித் தகவல்களை எப்படி ஒதுக்க முடியாதோ அதே போல இதையும் எடுத்துக் கொண்டால் என்ன எனத் தோன்றிற்று. அது மட்டுமின்றி பாமாவின் உறுதி மேல் ஏற்கனவே ஒரு நம்பிக்கை படர்ந்து விட்டிருந்தது.
*

அடுத்த சில மணி நேரத்தில் பாமா வீட்டில் இருந்தார் ராம்.

உங்களை ஸ்டேஷனுக்கெல்லாம் அலைக்க வேண்டாமேன்னு நானே வந்துட்டேன் தேங்க் பண்ண. நீங்க சொன்ன ஏஜன்ஸியிலே போய் விசாரிச்சதுமே வீட்டு அட்ரஸ் கிடச்சுட்டு. மஃப்டியில் ரவுண்டு கட்டி நின்னு அவன் வீட்டுக்குள்ள நுழையும் போதேப் புடிச்சுட்டோம். நீங்க எப்பேர்பட்ட உதவி செஞ்சிருக்கீங்க தெரியுமா? எனக்கு அவார்டு கிடைக்கோ இல்லையோ, நிச்சயமா உங்களுக்கு ரிவார்டு வாங்கிக் கொடுப்பேன்.”

அதெல்லாம் வேண்டாம். ஒரு சிட்டிசனா என் கடமையைத்தானே செஞ்சேன்.”

இருந்தாலும் க்ரேட் நீங்க. அவனோட மெயின் தொழிலு கொள்ளை. ஆனா, ஊரோட பார்வைக்கு அப்பாவியாக் காட்டிக்க ஒரு தொழில். என்னா கில்லாடிங்கறீங்க! சரி, இப்பவாவது சொல்லுங்க எப்படி அவனை கைகாட்டினீங்கன்னு..”

இன்ஸ்பெக்டர், அந்த ஏஜன்ஸியிலிருந்து கடந்த அஞ்சு வருஷமா எங்க கம்பெனிக்கு சப்ளையரா இவன்தான் வந்துட்டிருக்கான். முதல்ல இதக் கேளுங்க. நான் பத்து வருஷம் முன்னே மும்பையில் வேலை பார்த்த கம்பெனியிலிருந்து ஒருத்தர் ஏதோ விஷயமாய் எங்க மேனஜர்ட்ட பேச ஃபோன் போட்டார். அவர்ஹலோன்னு சொன்ன அடுத்த செகன்ட் . ‘யெஸ் அருண்ன்னு பேரைச் சொல்ல அசந்தே போயிட்டார். அதுபோலத்தான் அவன்ஹேண்ட்ஸ் அப்ன்னதுமே எனக்குப் புரிஞ்சு போச்சு..”

அங்கே சிறையில் சந்துருவுக்கு, ‘எங்கேடா வச்சிருக்க முன்ன கொள்ளையடிச்சதையெல்லாம்எனக் கேட்டு போலீஸ் தன்னைச் செய்ய போகிற சித்திரவதையை விட, ‘எப்படி எப்படி எப்படி மாட்டினோம்என்கிற சிந்தனையே மிகப் பெரும் சித்திரவதையாய் இருக்க..

இங்கே இன்ஸ்பெக்டர் ராம், பாமா சொல்வதை வியப்பு அடங்காமல் கேட்டுக் கொண்டிருந்தார்.

நீங்கன்னு இல்ல, பொதுவா எல்லோருமே ஒரு ஆளைக் கண்ணால பார்த்து உள்வாங்கித்தான் அடையாளம் கண்டுக்கறீங்க. ஆனால் என்னை மாதிரியானவங்க காதால குரலை உள்வாங்கினாலே ஆளைத் தெரிஞ்சிடும்.”

இப்போது ராமின் முகத்திலிருந்த வியப்பு குழப்பமாக மாறுவதைக் கவனித்த பாமா சிரித்தாள்.

ஏன்னா அது எங்க தொழில் இன்ஸ்பெக்டர். இருபது வருஷமா டெலிஃபோன் ஆப்பரேட்டரா இருக்கேன்.”

***
*** *** ***

படம்: இணையத்திலிருந்து...



புதன், 14 அக்டோபர், 2009

பொம்மை [அக்டோபர் PiT]

விநாயகா போற்றி!
தருவாய் வெற்றி!



***



சிரிக்கும் புத்தர் சிலைகள்

உறங்குபவர் வீட்டிலே அலங்காரப் பொம்மைகள்
உழைப்பவர் வீட்டிலே அதிர்ஷடப் பொம்மைகள்

***



தங்கத்தில் தகதகவென்றிருக்கும் தாமரை

கண்ணாடியானாலும் கவர்ந்திழுக்கும் கமலம்
***


முத்துவின் ரசிகைகள்



சொல்கிறார்கள்..
ரஜனியின் ‘முத்து’வுக்கு மட்டும் இல்லையாம்
ராமலக்ஷ்மியின் முத்து(ச்சரத்து)க்கும்தானாம்:)!

***


சாந்தம்

'இவர் முதத்தில் தவழும் அமைதி
உலகம் முழுவதும் நிலவட்டும்'

-சொல்லியதாலேயே கிட்டிடக் கூடும்
நோபல் பரிசு எனக்கும் :( !?!?
***


பெங்களூரு 'கருடா மால்' வாசலில்...
விளம்பரங்களுக்குள்ளே
மங்களகரமாய் பொம்மைகளின் அணிவகுப்பு!
இவ்வருட நவராத்திரிக்கான சிறப்பு!
***



எல்லோருக்கும் தீபத் திருநாள் வாழ்த்துக்கள்!

***





அப்டேட்ஸ்:

18 அக்டோபர் 2009
PiT-அக்டோபர் 2009-போட்டி படங்களின் அணிவகுப்பு

26 அக்டோபர் 2009
வந்து விட்டார் எனது விநாயகரும் TOP 15-க்குள், பாருங்கள் இங்கே:
PiT அக்டோபர் 2009 - முதல் குட்டைப் பட்டியல்
இரண்டாவது முறையாக முதல் சுற்றில் என் படமும்:)!

செவ்வாய், 6 அக்டோபர், 2009

சத்திய சோதனை



பரீட்சை எழுதப்
போகிறீர்களா?
இருக்கிறதா இது-
பார்த்தபிறகே அனுமதி.

அன்றாடம் செல்லும்
அலுவலகம்தான் என்றாலும்
போட்டால்தான் திறக்கும்
வாயிற்கதவுகள்.

ஓட்டுச்சாவடியில்
இல்லை ஏதும் அடாவடி
என்றால்
அதிர்ஷ்டசாலி நீங்கள்-
காட்டிவிட்டு அழுத்தி
வரலாம் பொத்தானை.

விமான நிலையத்தில்
வேண்டியிருந்தது.
வலைவழி பதிந்த
பயணச் சீட்டாயின்
இரயிலிலும்
வேண்டுமிப்போது.

கால ஓட்டத்தில்
சுயநலமான தேடலில்
ஒரு சிலராலோ
பெரும்பாலினராலோ
தொலைத்தபடியே
வரப்பட்டது-
ஆறறிவு படைத்ததாய்
அறியப்படும் மனிதனின்
நல்ல அடையாளங்களாய்க்
கருதப்பட்ட-
உண்மையும் நேர்மையும்.

இதுதான் நான்
நான்தான் இது
நாளும் நிரூபிக்க-
நம்மோடு இப்போது
இருந்தாக வேண்டும்..
இணைபிரியாது எப்போதும்-
அடையாள அட்டைகள்!
***



இங்கு வலையேற்றிய பின் இக்கவிதை 19 அக்டோபர் 2009 யூத்ஃபுல் விகடனில் வெளியாகியுள்ளது:



‘ஹலோ நான்தாங்க’:


*மூன்று தினங்களுக்கு முன்னர் ‘காந்தி ஜெயந்தி’! நாடெங்கிலும் மக்கள் நாமெல்லாம் மிக்க மகிழ்வுடன் கொண்டாடி விட்டோம்தானே.., வார இறுதியோடு சேர்த்துக் கிடைத்த அரசு விடுமுறையாக?

புதன், 30 செப்டம்பர், 2009

பன்னீர் புஷ்பங்களே!



வாட்டும் நோயினால்
வருத்தத்தில் அவன்-
இறுகிய முகமும்
குன்றிய உள்ளமுமாய்...

நலம் விசாரிக்க
வலம் வந்த மருத்துவர்
இவன் இருக்கும் இடம்
வந்து நின்றார்-
வெளிர் உடையும்
பளீர் சிரிப்புமாய்...

'கலக்கம் விலக்கிடு
காலத்தே குணமாவாய்!
பரிந்துரைத்த பயிற்சிகளைப்
பழகச் சலிப்பதேன் ?
படுத்தே இருந்தால்
அடுத்துநீ எழுந்து நடப்பது
எப்போதாம்?' கேட்டார்
புன்னகை பூத்தபடி.

தொடர்ந்தார் கனிவாய்:
'மலர்ச்சியுடன் மருந்துகளை
உட் கொள்வாய்,
உற்சாகமாய் இருந்திட்டாலே
தேறிடலாம் விரைவாய்!'

நம்பிக்கை ஊற்றினிலிருந்து
நன்னீர் வழங்கிய
திருப்தியுடன்
திரும்பி நடந்தார்.

'மிடுக்காக வந்து
துடுக்காகச் சொல்லிவிட்டாரே,
பட்டால் அன்றோ புரியும்
வலியின் ஆழமும்-
கதிகலங்கி நிற்குமென்
உள்மனதின் கோலமும்!'

தெளிக்கப்பட்டது பன்னீர் என்ற
தெளிவில்லாமல வென்னீரென்றே
நினைத்துச் சலிக்கின்றான்.

சொன்னவரும் மனிதர்தான்
அவருக்கும் இருக்கக்கூடும்
ஆயிரம் உபாதை என்பதனை
ஏனோ மறக்கின்றான்.
**

வாழ்வோடு வலியும்
காலத்தோடு கவலையும்
கலந்ததுதான் மானுடம் என்பது
இறைவனின் கணக்கு.
இதில் எவருக்குத்தான்
தரப்படுகிறது விதிவிலக்கு?

ஆறுதலாய் சொல்லப்படும்
வார்த்தைகள் கூட சிலருக்கு
வெந்த புண்ணில் பாய்ச்சப்படும்
வேல்களாய்த் தோன்றுவது
வேதனையான விந்தை!

துயரின் எல்லை என்பது
தாங்கிடும் அவரவர்
மனவலிமையைப்
பொறுத்ததே!
ஆயினும் கூட...

பாவம்பாவம் எனப்
பரிதவிப்பைப் பன்மடங்காக்கும்
உற்றார் பலர் உத்தமராகிறார்.
விரக்தியை விடச் சொல்லுபவர்
வேதனை புரியாதவராகிறார்!

சோதனை மேல் சோதனையென
சோர்ந்திருப்பவனின் சோகத்தை
மென்மேலும் சூடேற்றுபவர்
மனிதருள் மாணிக்கமாகிறார்.

மனதைரியத்துடன் இருக்கும்படி
மனிதநேயத்துடன் மன்றாடுபவரோ
அடுத்தவர் அல்லல்
அறிய இயலாத
அற்பப் பதராகிறார்!

அக்கறையை அனுபவத்தை
ஆக்கப் பூர்வமாய்
நோக்கத் தெரியாமல்-
அன்பை ஆறுதலை
இனம் புரிந்து
ஏற்கத் தெரியாமல்..

நேசத்துடன் பாசங்கலந்து
நீட்டப்படும் பூங்கொத்தில்
முட்களைத் தேடியபடி-
இருக்கத்தான் செய்கிறார்
சிலர்..

அத்தகு
இடம் அறிந்து
மெளனிகளாகத்
தெரியாமலேதான்
பலர்..!
*** *** ***

படம்: இணையத்திலிருந்து..

*17 ஏப்ரல் 2003, திண்ணை இணைய இதழில் 'இரண்டு கவிதைகள்’ என்ற தலைப்பின் கீழ் வெளிவந்த மற்றொரு கவிதை.
23 ஜூலை 2009 ‘விந்தை உலகம்’ என்ற தலைப்பில் வார்ப்பு கவிதை வாராந்திரியிலும்.


*“ஈடு செய்ய முடியாத இழப்பினைச் சந்தித்தவருக்கும் மீண்டு வரப் போராடும் உடல்நலக் குறைவோடு வருந்துவோருக்கும் மட்டும், என்றைக்கும் ஆறுதலை பன்னீர் புஷபங்களான வார்த்தைகளால் மட்டுமே தந்துவிட முடியாது. ஆனால் அவர்தம் மனக்காயங்களைக் காலம் ஆற்றிட, உடல் நலம் பெற்றுத் தேறிட நம் உள்ளார்த்தமான பிரார்த்தனைப் பூக்கள் நிச்சயம் கை கொடுத்திடும்.

வியாழன், 24 செப்டம்பர், 2009

இல்லாதாரும் இலவசங்களும்...


ழுத்தாலோ எண்ணத்தாலோ
செயல்படுத்தும் திட்டத்தாலோ
எழும்பும் விளைவுகள்
எளியவனை இயலாதவனை
எழுந்துநிற்க வைத்தால்
எத்தனை நலம்?
ஏங்கிநிற்கிறான் என்பதற்காக
கூனியே கையேந்தவிடுவதா
அவன்வாழ்க்கைக்கு பலம்?

'னியொரு விதி செய்வோம்
அதைஎந்த நாளும் காப்போம்
தனியொருவனுக்கு
உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்!'-
பசித்தவன் கேட்டுவிட்டு
பரவசப் படட்டுமென்றா
பாடினான் பாரதி?
இல்லாதவன் கேட்டுவிட்டு
இங்கெமக்குக் குரல்கொடுக்க
இனியொரு நல்லவன்
இதுபோலப் பிறப்பானா என
நன்றியில் நனைந்து போக
வேண்டுமென்றா
எண்ணினான் பாரதி?
பாரதம் தன்னிறைவு கண்டு
பார்புகழத் தலைநிமிர்ந்து
எழுந்துநிற்க அல்லவா
எழுதினான் அந்தமகாக்கவி!

முற்றிலும் முடியாதவனா
தவறில்லை போடலாம்சோறு!
ஆனால்..
முடிந்தும் முயற்சியற்றவனா
இயன்றால்
வேளாவேளைக்குக்
கூழோகஞ்சியோ கிடைத்திட
வேலைக்கு வழிசெய்து-
உழைப்பின் உயர்வை
உன்னதத்தை
உணர்த்திடப் பாரு!
அது விடுத்துத்
தானம் என்றபெயரில்
தந்துதந்து அவனை
தன்மானம் மறக்கச்
செய்வதிடலாமா கூறு!

ல்லாதவனிடம் கொள்ளும்
இரக்கமும்
கலங்கிநிற்பாரிடம் காட்டும்
கருணையும்..
அவரை
முன்னேற்றப் பாதையில்
செல்லத் தூண்டும்
முயற்சியை வேகத்தை-
ஆர்வத்தைத் தாகத்தைக்
கொடுக்க வேண்டியது
அவசியம்.
முட்டுக்கட்டையாய்
அயற்சியை சுயபச்சாதாபத்தை
அலட்சியத்தை சோம்பலைத்
தராமல் பார்த்திடல்
அத்யாவசியம்!

னியொருவனுக்கு உணவில்லாத
ஜகத்தினை அழித்திடும்
சாத்தியம் இல்லாது போனாலும்-
சாதிக்க வேண்டிய ஜகம்
இலவசங்களால்
சக்தி இழந்திடாதிருக்க
சிந்திப்போமே!
பொன்னான பொழுதினைத்
தூங்கியே கழிப்போரையும்-
செல்லும்பாதையில் களைத்துத்
துவண்டு விழுவோரையும்-
தூக்கி நிறுத்தும்
தூண்டுகோலாய் நாமிருக்க
யோசிப்போமே!
தத்தமது காலாலே
வீறுநடை போட்டிடத்தான்
பழக்கிடுவோமே!
*** **** *** **** ***

படம்: இணையத்திலிருந்து..

*17 ஏப்ரல் 2003 திண்ணை இணைய இதழில் 'இரண்டு கவிதைகள்' தலைப்பின் கீழ் வெளிவந்த ஒரு கவிதை.

*தொடர்கின்ற இலவசங்கள், இல்லாதாரை இருக்குமிடத்திலேயே இன்னும் அழுத்தி இருத்துவது தொடர்கதையாவது கண்டு.. இதைத் தேடி எடுத்துப் பதிவிடத் தோன்றியது.
*இங்கு வலையேற்றிய பின் 2 நவம்பர் 2009 வார்ப்பு கவிதை வாராந்திரியிலும்..

திங்கள், 21 செப்டம்பர், 2009

பூக்களைப் புறக்கணிக்காதீர்கள்!

கண்ணே கலைமானே












பெ
ற்றவள் விற்றா விட்டாள்
சொல்கிறார்கள் குற்றமாய்-
ஆயினும் எவருக்கும்
தெரியவில்லை சரியாய்-
தொற்றிக் கொள்ளத்
தோள் தேடிக் கிளியே
கேள்விக் குறியாக நீ!
***

கத்தை கத்தையாய் கண்ணே
நோட்டுக்களைக் கைமாற்றி
நோகாமல் உனைக் கையாளத்
தூக்கத்துக்கும் மருந்தளித்து விட-
தோள்கள் துவண்டு போய்
தொங்கி விழும் தலையுடன்
தூண்டிலில் சிக்கிய மீனாய் நீ!
***

தயக்கமே இல்லாமல்
தடயங்களை மறைத்துத்
தகவல்களையும் இடம் மாற்றி-
தடுமாற்றமே இல்லாமல்
தந்திரமாய் விலை பேசும்
தரகர் கும்பல் இவர்கைகளிலே
தத்தளித்திடும் தளிரே- உண்மையிலே
'தத்து' அளித்திடத்தான்
தரப் பட்டாயா நீ?
***

கலி என்பது இதுதானோ
கற்றவரும் துணையாமே!
காலம் எங்கே செல்கிறதென
கலக்கம் சூழுதிங்கே கலைமானே
கவலை அறியாது நீ!
***

கொடுமை கண்டு அடங்கவில்லை
கொந்தளிப்பு இங்கெமக்கு
சந்தையிலே விற்கின்ற
கொத்தவரங்காயா நீ?
***

மருத்துவமனை வளாகத்திலேயே
மனசாட்சியற்ற சிசு ஏலமாம்
மாசற்ற மலரே-ஏதும் புரியாமல்
மருந்து மயக்கத்தில் நீ!
***

காவலரால் மீட்கப் பட்டு
கரை சேர்ந்ததாயென-செய்தி
ஊடகங்கள் உறுதி செய்ததும்தான்
உறக்கம் வந்தது எமக்கு
நிறைவாய் ஒரு
வாக்கியம் உனக்கு-
இனியேனும் இனிதாய்
வாழ்ந்திடுக நீ!
*** ***

பூக்களைப் புறக்கணிக்காதீர்கள்















கு
ற்ற உணர்வென்பது
கொஞசமும் இன்றிக்
குப்பைத் தொட்டியிலும்
இடுகாட்டு வாசலிலும் கூட
இட்டுச் செல்கிறாராமே உனைப்
போன்றப் பல பூஞ்சிட்டுக்களை
விடிகின்ற காலையோடு
விடிந்து விடும் உம்வாழ்வுமென-
விட்டிடலாம் கவலைதனை
எவரேனும் கண்டெடுத்துக்
கரை சேர்ப்பாரென-
இரை தேடி இரவெல்லாம்
சுற்றி வரும் நாய்களிடம்
மாட்டி மடிய நேர்ந்தால்
என்னவாகும் எனும்
பின்விளைவுகளைப் பற்றிய
சிந்தனை சிறிதுமின்றி...!
***

எட்டி யோசிக்கட்டும்
பூக்கள் உம்மைப்
புறக்கணிக்கும் செடிகள்.
***

என் செய்வது..
சில செடிகளுக்கு-
பல கொடிகளுக்கு-
பூக்களுடனான பந்தம்
தொடர்ந்திடக் கொடுத்து
வைப்பதில்லைதான்.
***

வறுமை முதல் வெறுமைவரை
வெவ்வேறு காரணங்களால்
அடித்து வீசும் காற்றாகவும்
சுழன்று வீசும் புயலாகவும்
வாழ்க்கையை விளையாடிவிட்ட-
விதியின் சதியினால்
துளிர்க்கின்ற தளிர்களைத்
தம்மோடு வைத்துக்
கொள்ள வழியற்ற-
அச்செடிகொடிகள்
அரசுத் தொட்டிலிலோ
ஆதரவற்றோர் இல்லத்திலோ
உம்மை உதிர்த்துச் சென்றால்-
தத்தெடுக்கக் காத்திருப்போர் வசம்
சட்டப்படி ஒப்படைக்கப்பட்டு-நீவிர்
வாழ்வாங்கு வாழ்ந்திடத்தான்
வழிவகை பிறந்திடுமே.
*** *** ***

முதல்படம் நன்றி: யூத்ஃபுல் விகடன்
இரண்டாவது படம்: இணையத்திலிருந்து..

*'கண்ணே கலைமானே' கவிதை செப்டம்பர் 4, 2003 திண்ணை இணைய இதழில் வெளியாகி உங்களுடன் இங்கே பகிர்ந்து கொண்டதுதான் என்றாலும், வேதனை கலந்த வேண்டுகோளாக ஒலிக்கும் அடுத்த பாக சேர்க்கையுடன் 11 ஏப்ரல் 2009 யூத்ஃபுல் விகடன் இணைய தளத்திலும், 1 ஜூன் 2009 வார்ப்பு கவிதை வாராந்திரியிலும் வெளியாகியுள்ளது.


*ஹ்லோ, நான்தாங்க:


“இந்த மீ(நீ)ள்பதிவினைத் தொடர்ந்து, புதிதாய் எழுதும்வரை முத்துச்சரத்தில் கோர்க்காத சில பழைய படைப்புகளை அடுத்தடுத்து பார்வைக்கு வைக்கலாம் என்றிருக்கிறேன். 'ஆ.., இன்னுமா ஸ்டாக் தீரலை’ன்னு கேட்க மாட்டீங்கதானே?

செவ்வாய், 15 செப்டம்பர், 2009

Dawn and Dusk [Silhouette-Sep PiT போட்டிக்கு]

புத்தம்புது காலை பொன்னிற வேளை



இனிவருமோ இந்நிமிடம்?



எங்கோ கூவும் குயில்களின் கீதம்
மகிழ்வாய்ப் பாடும் மைனாக்களின் கானம்
'கீச்'சிடும் குருவிகள் நடத்திடும் உற்சாகப்பாடம்
தென்னங்கீற்றுகளும் கேட்டுத் தலையசைக்கும்;
விழித்தெழும் கிளிகள் சிறகுகள் விரிக்கும்
புலர்ந்தது பொழுதெனக் குதூகலமாய்க் கிளம்பும்;

இன்று இப்பொழுது காணக் கிடைக்கும்
இதோ இந்த சூரிய உதயம்
இந்நிமிடம் நொடிக்கு மட்டுமே சொந்தம்;
ஒருமுறை கடந்தது மறுமுறை வாய்ப்பினும்
ஒன்றல்ல உணர்வோம் அதுவும் எதுவும்!

நாளையைக் காண நமக்கு விதித்திருந்தாலும்
நழுவ விடாதிருப்போம் நம்மைப் புதுப்பிக்கும்
எத்தகு இனிய சிலிர்ப்புகளையும்;
அத்தோடு தொலைக்காது இருப்போம்
இந்நிமிடம் இந்நொடியில் நாடிவரும்
நம்மை உயர்விக்கத் தேடிவரும்
எந்தவொரு நல்வாய்ப்புக்களையும்;
சோம்பித் தள்ளிப்போடாதும் இருப்போம்
முயன்றால் அக்கணமே அத்தருணமே
முடிக்கக் கூடிய வேலைகளையும்!
*** *** ***





மஞ்சள் வெயில் மாலையிலே மெல்ல மெல்ல இருளுதே



நம்பிக்கையின் சூத்திரம்

அந்திமழைக்குப் பின்னே அழகு காட்டும் வானம்
அஸ்தமனத்துக்கு பின்னே இருள் வந்து சூழும்;
அஸ்திவாரம் நம்பிக்கைக்கு அதுவே ஆகும்
அடுத்தநாள் விடிகையில் தானே புரியும்.
*** *** ***


'இனிவருமோ இந்நிமிடம்?' இங்கு வலையேற்றிய பின் 17 செப்டம்பர் 2009 யூத்ஃபுல் விகடனில்க்ளிக் கவிதை"யாக வெளியாகியுள்ளது:




*ஹலோ, நான்தாங்க பேசறேன்:
[அப்பப்போ இப்படிப் பேசுவேன். “நான்தாங்கன்னா யாரு”ன்னு கலாய்க்க கூடாது. ஓகே:)?]

ஒரு மாதம் ஆயிற்று உங்களையெல்லாம் சந்தித்து. விடுப்பு நீடித்தாலும் விழுந்தடித்து ஓடிவந்து ‘பிட்’டுக்கு பதிவிட்டு, இரண்டாவது படத்தை போட்டிக்குக் கொடுத்த கையோடு மறுபடியும் 'பைபை' சொல்லவிருக்கிறேன்! முன்போல செயல்பட இன்னும் நாளாகலாம் என்றாலும் அவ்வப்போது வந்தபடி இருப்பேன்.

ஒவ்வொரு மாதமும் தலைப்பைத் தந்து எப்படி எடுக்கலாம் படங்கள் எனப் பாடமும் நடத்துகிறார்கள் ‘பிட்’டிலே. படித்துப் புதிதாய் படம் பிடிப்பவர் பலர். இருப்பதைக் கொடுத்தே காலத்தை ஓட்டுகிறோம் சிலர்:)! புது புரொஃபசர் நந்துவும் அழகாய் விளக்கியிருக்கிறார் silhouette பற்றி, பாருங்கள் இங்கே.

மேலுள்ளவை பார்வைக்கு முன்னர் வைத்த படங்களே ஆயினும் போட்டியில் கலந்து கொள்ளாதவை. நந்து அப்பதிவுகளின் பின்னூட்டத்தில் அப்போது அறிவுறுத்தியபடி பி.பி செய்தவை. இம்மாதத் தலைப்புக்குப் பொருத்தமாய் தோன்றியதால் மீள்படங்கள் ஆனவை. கவிதைகள் வழக்கம்போல படத்துக்காகவே படைத்தவை. பை பை:)!



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin