அன்ன பட்சியாய்..

செல்கின்ற பாதையெல்லாம்
மலர்க் கம்பளம் சாத்தியமில்லை
தடுமாற வைக்கப் பாய்ந்து வரலாம்
எத்திசையிலிருந்தும் எறியப்பட்டு
கூரிய கற்களாய் விமர்சனங்கள்
உற்று நோக்கின் உதவக் கூடும்
படிந்திருக்கும் துகள்களில்
ஒளிந்திருக்கும்
நண்பர் மறைத்த நம் குறைகள்!
துவள வைக்கும்
தொடர் விமர்சன ஈட்டிகளாகட்டும்
உடல் காயமுறட்டும்
ஊசிமுனை வார்த்தைகள்
உள்ளம் மட்டும் துளைக்காதிருக்கட்டும்
வீதிகளில் போற்றிச் சிலைகள்
விமர்சகருக்கு அல்ல
விமர்சிக்கப் பட்டவருக்கே
நீரினை விலக்கிப் பாலினைப் பருகும்
அன்ன பட்சியாய்..
நல்லன எடுத்து அல்லாதது விலக்கி
வளைத்திடலாம் வில்லாய்
விமர்சனங்களை..
எய்திடலாம் இலக்கினை நோக்கி
அம்புகளை.
***
31 டிசம்பர் 2010, கீற்று மின்னிதழில்.., நன்றி கீற்று!
தட்சணை

கற்றுத் தந்தவனுக்கு
உற்ற காணிக்கை
காலமெலாம் அவன்
காலடியில் கிடப்பதல்ல
பெற்ற வித்தையில்
பெயரினை ஈட்டி
சுற்றம் போற்ற
வாழ்ந்து காட்டுவதே.
***
செப்டம்பர் 2010, ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கத்தின் சுவடுகள் - முதல் இதழில்.., நன்றி சுவடுகள்!
படங்கள்: இணையத்திலிருந்து..