செவ்வாய், 28 ஜூலை, 2026

மாபெரும் தப்பிப்பு - சார்லஸ் புக்கோவ்ஸ்கி (30) - பண்புடன் இணைய இதழில்..

 


மாபெரும் தப்பிப்பு

கேள்”, என்றான் அவன்,
“ஒரு வாளிக்குள் நண்டுகள் கொத்தாக இருப்பதை 
எப்போதேனும் பார்த்திருக்கிறாயா?”
“இல்லை,” என்றேன் நான்.

“சரி. அங்கு என்ன நடக்குமெனில்
அவ்வப்போது ஒரு நண்டு
மற்ற நண்டுகளின் மேல் ஏறி
வாளியின் விளிம்பை நோக்கி ஏறத் தொடங்கும்.
அது தப்பித்து வெளியேறப் போகும் தருணத்தில்
இன்னொரு நண்டு அதைப் பிடித்து
கீழே இழுத்துவிடும்.”

“உண்மையாகவா?” என்று கேட்டேன்.
“உண்மையாகத்தான்,” என்றான் அவன்.
“இந்த வேலைவும் அப்படியேதான்.
இங்கிருந்து யாராவது வெளியேறுவதை
மற்றவர்கள் விரும்புவதில்லை.
இதுதான் இந்த அஞ்சல் துறையின் நிலைமை!”

“நான் உன்னை நம்புகிறேன்”, என்றேன்.
சரியாக அந்த நேரத்தில் வந்த மேற்பார்வையாளர் 
“நீங்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தீர்கள்.
இந்த வேலையில் பேச அனுமதி இல்லை,” என்றார்.

அங்கே நான் பதினொன்றரை ஆண்டுகள் இருந்தேன்.

நான் என் இருக்கையிலிருந்து எழுந்து
நேராக அந்த மேற்பார்வையாளரின் மேல் ஏறி
பிறகு கைகளை நீட்டி 
என்னையே மேலே இழுத்துக் கொண்டு
வெளியே வந்துவிட்டேன்.
அது நம்ப முடியாத அளவுக்கு
மிக எளிதாக இருந்தது.
ஆனால் மற்றவர்கள் யாரும்
என்னைப் பின்தொடரவில்லை.

அதன் பிறகு எப்போதெல்லாம் நான்
நண்டு கால்களைச் சாப்பிட்டேனோ
அந்த இடம் நினைவுக்கு வந்தது.
ஒருவேளை ஐந்து அல்லது ஆறு முறை
அந்த இடத்தைப் பற்றி நினைத்திருப்பேன்...
கல்லிறாலுக்கு மாறும் முன்பு.

* 

மூலம்: The Great Escape By Charles Bukowski

தமிழாக்கம்: ராமலக்ஷ்மி

*

படம்: ஏஐ உருவாக்கம்

*

சார்லஸ் புக்கோவ்ஸ்கி  (1920 – 1994):

இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த அமெரிக்கக் கவிஞர் எனக் கொண்டாடப்படுபவர் ஹென்றி சார்லஸ் புக்கோவ்ஸ்கி. ஆயிரக்கணக்கான கவிதைகள், நூற்றுக்கணக்கான சிறுகதைகள், ஆறு நாவல்கள் ஆகிய யாவும் சுமார் அறுபதுக்கும் மேலான புத்தகங்களாக வெளியாகியுள்ளன. ஜெர்மனியில் பிறந்தவர். தந்தை அமெரிக்கர். தாய் ஜெர்மானியர். இவரது சிறுவயதில் பெற்றோர் அமெரிக்காவில் குடி புகவும், அமெரிக்கராகவே வளர்ந்தார். புக்கோவ்ஸ்கியின் எழுத்துக்களும் இவர் வாழ்ந்த லாஸ் ஏஞ்சல்ஸின் சமூக, கலாச்சார, பொருளாதார நிலைமைகளைப் பிரதிபலிப்பதாகவே உள்ளன.

*

நன்றி பண்புடன்!

***

4 கருத்துகள்:

  1. வெகு எளிமையாக வசன நடையில் இருக்கிறது.  எது ஒன்றிலிருந்தும் தப்பித்தல் மனதைப் பொறுத்த விஷயம்.  கொஞ்சம்  சிரமமானது.

    பதிலளிநீக்கு
  2. அருமையான கவிதை பகிர்வு . மொழிபெயர்ப்பு செய்து கொடுத்தமைக்கு நன்றி ராமலக்ஷ்மி. பக்கத்து வீட்டில் வாளியில் போட்டு இருக்கும் நண்டுகளை பார்த்து இருக்கிறேன். ஒன்றை ஒன்று காலை பிடித்து இழுப்பதை காட்டி இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காட்சியாகவே கண்டிருக்கிறீர்களா? சுவாரஸ்யம். நன்றி கோமதிம்மா.

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin