புதன், 23 அக்டோபர், 2024

அப்பா வீடு திரும்புகிறார் - திலீப் சித்ரே - சொல்வனம் இதழ்: 328


அப்பா வீடு திரும்புகிறார்

என் அப்பா பின்மாலைப் புகைவண்டியில் பயணிப்பார்
மஞ்சள் ஒளியில்  அமைதியான பயணிகளுக்கு நடுவே நின்றபடி
கவனிக்காத அவரது கண்களை புறநகர்கள் நழுவிக் கடந்து செல்லும் 
அவரது சட்டையும் கால்சட்டையும் நனைந்திருக்க 
அவரது கருப்பு மழை மேல்அங்கி சேறினால் கறை படிந்திருக்க
புத்தகங்கள் திணிக்கப்பட்ட அவரது பை 
சரிந்து தொங்கிக் கொண்டிருக்கும். 
வயதினால் மங்கிய அவரது கண்கள் 
வீடு இருக்கும் திசையை நோக்குகின்றன 
ஈரப்பதமான மழைக்கால இரவின் ஊடாக.
நீண்ட வாக்கியத்திலிருந்து கைவிடப்படும் ஒரு வார்த்தையை போன்று
புகைவண்டியிலிருந்து இறங்கும் அவரை 
இப்போது என்னால் பார்க்க முடிகிறது.
அவர் துரிதமாக கடக்கிறார் நீண்ட சாம்பல் நிற நடைமேடையை,
அவரது செருப்புகள் சேறினால் பிசுபிசுப்பாக இருக்க
இருப்புப் பாதையைக் கடந்து, சந்தில் நுழைந்து, விரைகிறார்.
மீண்டும் வீடு, நான் பார்க்கிறேன் அவர் நலிந்த தேநீரைப் பருகுவதை,
பழைய சப்பாத்தியை உண்பதை, புத்தகம் வாசிப்பதை.
கழிவறைக்குள் செல்கிறார் 
மனிதரால் உருவாக்கப்பட்ட உலகிலிருந்து 
மனிதர் விலகுவதைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்க. 
வெளியில் வந்தவர் நடுங்குகிறார் பீங்கான் தொட்டி அருகில்,
குளிர்ந்த நீர் ஓடுகிறது அவரது பழுப்புநிறக் கைகளின் மேல்,
சில நீர்த்துளிகள் அவரது மணிக்கட்டுகளின் 
நரைத்த ரோமங்களில் ஒட்டிக் கொள்கின்றன.
அவரது பாராமுகப் பிள்ளைகள் எப்போதுமே 
அவருடன் பகிர்ந்திட மறுத்து விடுகிறார்கள்
வேடிக்கைப் பேச்சுகளையோ இரகசியங்களையோ.
இப்போது அவர் தூங்கப் போகிறார் 
கரகரக்கும் வானொலியைக் கேட்டபடி,
தன் முன்னோர்களையும், பேரக் குழந்தைகளையும் பற்றிக் கனவு கண்டபடி,
குறுகலான கணவாய்களின் வழியாக 
துணைக் கண்டங்களுள் நுழையும் நாடோடிகளை நினைத்தபடி.
*

மூலம்: “Father Returning Home” by Dilip Chitre

*

திலீப் புருஷோத்தம் சித்ரே (1938 – 2009) இந்தியா விடுதலை பெற்ற பின் தோன்றிய மிக முக்கிய எழுத்தாளர்கள் மற்றும் விமர்சகர்களுள் ஒருவராவார்.  கவனிப்புக்குரிய இருமொழி எழுத்தாளர். மராத்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் எழுதி வந்தவர். ஆசிரியர், சிறந்த ஓவியர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் பத்திரிகைகளில் பத்தி எழுத்தாளர்.

*

தமிழாக்கம்: ராமலக்ஷ்மி

**

நன்றி சொல்வனம்!
**

சொல்வனம் இதழில் இக்கவிதைக்கு எழுத்தாளர் இரா. முருகன் அவர்களது பின்னூட்டம். திலிப் சித்ரே குறித்த மேலதிகத் தகவல்களுக்காகவும் குறிப்பாக மகனை இழந்த சோகம் இக்கவிதையை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ள உதவுவதாலும் இங்கும் சேமிக்கிறேன்.
வாழ்த்துகளுக்கு நன்றி 
திரு. இரா.முருகன்!
***

2 கருத்துகள்:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin