ஏ.இ. ஹவுஸ்மேன் கவிதைகள்
1. இளமையில் இறக்கின்ற விளையாட்டு வீரனுக்கு
நீ உன் ஊருக்காகப் பந்தயத்தில் வென்ற வேளையில்
நாங்கள் உன்னை நாற்காலியில் ஏந்திச் சென்றிருக்கிறோம் சந்தை-வெளியில்
மக்களும் சிறுவர்களும் வழிநெடுக நின்று ஆரவாரம் செய்தார்கள்
தோளுக்கு மேல் உன்னைத் தூக்கி வீட்டுக்கு அழைத்து வந்தோம்.
இன்று, சாலையில் அனைத்து ஓட்டப் பந்தய வீரர்களும் வந்துள்ளனர், அமைதியான ஊரின் நகரமக்கள்
தோளுக்கு மேல் உன்னைத் தூக்கி வீட்டுக்குக் கொண்டு வந்து
வாயிற்படியில் கிடத்தியுள்ளோம்.
புத்திசாலி இளைஞன், சாதுரியமாக நழுவி விட்டாய்
எங்கே புகழ் தங்குவதில்லையோ அக்களங்களிலிருந்து,
வெகு இளம் வயதில் சூடிய வெற்றி வாகையாயினும்
அது வாடி விடுகிறது விரைவாக ரோஜாவை விடவும்.
இந்த நிழலிரவால் மூடப்பட்ட கண்கள் இனிக் காணப் போவதில்லை
தன் சாதனை முறியடிக்கப்படுவதை,
மண்ணால் நிரம்பிய பெட்டிக்குள் மூடப்பட்டு விட்டன செவிகள்:
ஆரவாரத்திற்குச் சற்றும் குறைந்ததில்லை அமைதியின் சப்தம்.
இப்போழுது நீ வெற்றியைக் குவித்து, மதிப்பு மிக்க இளைஞர்கள்,
புகழ் பெற்ற ஓட்டப் பந்தய வீரர்களைக் கொண்ட
கூட்டத்தைப் பெருக்கத் தேவையில்லை,
மனிதனுக்கு முன்னரே மரணித்து விடுகிறது பெயர்.
ஆக அடங்கட்டும் ஓடிய உனது பாதங்கள் பெட்டியினுள்
கரகோஷங்கள் தேயும் முன் உயர்த்திப் பிடிக்கட்டும்
மரணத்தின் நிழலில் துயர்அனுசரிக்கும் வீரர்கள்
நீ போராடி வென்ற கோப்பையை உன் கல்லறை வாசலில்.
இளம் வயதில் வாகை சூடிய அத்தலையைச் சுற்றி
சூழும் மக்கள் திரள், சக்தியற்று இறந்து கிடக்கும் உனை
உற்று நோக்கிக் கண்டு கொள்கிறது, கூந்தலின் மேல்
வாடாத செறிவான அம்மலர் வளையத்தை.
*
மூலம்: “To an Athlete Dying Young” By A. E. Housman
**
2. ஓ யாரந்த இளம் குற்றவாளி
ஓ யாரந்த இளம் குற்றவாளி
மணிக்கட்டுகளில் கைவிலங்குகளுடன்?
மற்றும் எதற்காக இன்னும் அவனைத் தொடருகிறார்கள்
பொருமிக் கொண்டு, முஷ்டியை முறுக்கிக் கொண்டு?
மற்றும் எதற்காக அவன் அணிந்து கொண்டிருக்கிறான்
குற்ற உணர்வால் பீடிக்கப்பட்ட அப்படியொரு வளிதனை?
ஓ அவர்கள் அவனை சிறைக்குக் கூட்டிச் செல்கிறார்கள்
அவனது கூந்தலின் நிறத்திற்காக.
இத்தகையக் கூந்தலைக் கொண்ட அவனது தலை,
மனிதத்தன்மைக்கே அவமானம்;
முன்னொரு காலத்தில் கூந்தலின் இந்நிறத்திற்காகவே
தூக்கில் தொங்க விடப்பட்டார்கள்.
தூக்கில் தொங்குதல் அத்தனை மோசமில்லை ஆயினும்
தோலுரித்தல் அதனினும் அழகானது
பெயரற்ற, சகிக்க இயலாத நிறத்தைக் கொண்ட
அவனது கூந்தலுக்காக.
ஓ அதிக அளவு உழைப்பினைக் கொடுத்திருக்கிறான்
அதற்கான விலையையும் செலுத்தியிருக்கிறான்
தன் தலையை மறைக்க அல்லது
குறிப்பிட்ட நிறத்தில் சாயமடிக்க;
ஆனால் உலகமே வெறித்து நோக்க, அவர்கள்
இரவலனின் தொப்பியைப் பிடுங்கி எறிந்து விட்டார்கள்
மற்றும் அவர்கள் அவனை நீதிமன்றத்திற்கு
வலிந்து இழுக்கிறார்கள் அவனது கூந்தலின் நிறத்திற்காக.
இப்போது அது அவன் விரல்களைக் கட்டிய
சிதைந்த பழங்கயிறு, அவன் பாதங்களோ ஓடுபொறியில்
மற்றும் போர்ட்லாந்தின் குளிர் மற்றும் வெப்பத்தில்
சிறைச்சாலை நிலக்கரிச் சுரங்கக் குழுவில்
தன் கடின உழைப்புக்கு நடுவில் கிடைக்கும் நேரத்தில்
அவன் கடவுளைச் சபிக்கலாம்
அவர் அளித்த கூந்தலின் நிறத்திற்காக.
*
மூலம்: "Oh Who Is That Young Sinner" By A. E. Housman
**
எ. இ. ஹவுஸ்மேன்:
ஆல்ஃப்ரெட் எட்வர்ட் ஹவுஸ்மேன் (1859 – 1936) இங்கிலாந்தின் ஃபாக்பரி, வொர்செஸ்டர்ஷைரில் பிறந்தவர். பெற்றோரின் ஏழு குழந்தைகளில் மூத்தவர். இவரது சிறுவயதில் குடும்பம் ப்ரூம்ஸ்க்ரோவ் நகருக்கு இடம் பெயர அங்கு பள்ளிப் படிப்பை முடித்தார். செயிண்ட். ஜான்ஸ் கல்லூரி, ஆக்ஸ்ஃபோர்டில் பயின்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். கல்லூரி வயதில் அறை நண்பர் மேல் ஓரின ஈர்ப்பு ஏற்பட்டு கவனச் சிதறலால் இறுதித் தேர்வில் தோல்வி கண்டார் எனினும் இறுதியாண்டில் தேர்ச்சி அடைந்து லண்டனில் குமாஸ்தாவாக 10 ஆண்டு காலம் பணியாற்றினார். இந்தக் காலக் கட்டத்தில் கிரேக்க, உரோமானிய இலக்கியங்களைத் தீவிரமாக வாசித்தார். பலனாக முதலில் லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியிலும், பின்னர் கேம்ப்ரிட்ஜ், டிரினிட்டி கல்லூரியிலும் லத்தீன் பேராசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றதோடு இறக்கும் வரையிலும் அப்பணியினைத் தக்க வைத்துக் கொண்டார்.
தன் வாழ்நாள் காலத்தில் இரு கவிதை நூல்களை வெளியிட்டவர். A Shropshire Lad (1896) மற்றும் Last Poems (1922).
A Shropshire Lad எனும் இவரது முதல் நூல் முதலாம் உலகப் போர் காலத்தில் பரவலாக வாசிக்கப்பட்டது. நாட்டுப்புற வாழ்வின் வனப்பு, கைம்மாறு கிட்டாத காதல், இளமைப் பருவத்தின் அவசரம், துயரம், மரணம் மற்றும் சாதாரண போர்வீரனின் நாட்டுப் பற்று ஆகியவை இந்நூலில் இருந்த கவிதைகளின் பாடுபொருட்களாக இருந்தன. இதன் கையெழுத்திப் பிரதி பல பதிப்பகத்தினரால் நிராகரிக்கப்பட்ட நிலையில் நண்பர்கள் மற்றும் உடன் பணிபுரிவோரின் ஆச்சரியத்திற்கு நடுவில் ஹவுஸ்மேன் தானாகவே இந்நூலைப் பதிப்பித்தார். மிக மெதுவாகவே இந்நூல் புகழடைந்தது. அப்போதைய போயர் போரும், முதலாம் உலகப் போரும் இந்நூலுக்குக் கவனம் சேர்த்தன. படைவீரர்களின் ஏக்கங்களைச் சித்தரித்த கவிதைகள் இங்கிலாந்தின் துணிச்சலான வீரர்களை வெகுவாக ஈர்த்தன. பல இசையமைப்பாளர்கள் இக்கவிதைகளைப் பாடல்களாக இசைத்து மேலும் இந்நூலுக்குப் பெருமை சேர்த்தனர்.
*
இங்கு இடம் பெற்றுள்ள ஹவுஸ்மேனின் புகழ் பெற்ற படைப்புகளில் ஒன்றான முதல் கவிதை இளமை, புகழ், மரணம் மற்றும் மரணத்தின் மீதான அச்சம் எனப் பல முக்கிய கருக்களைப் பாடுபொருளாகக் கொண்டது. இவை அனைத்தையும் ஒரு இளைஞனின் வாழ்வு மற்றும் அகால மரணத்தோடு ஒருங்கிணைத்ததுடன் அவை குறித்த தன் ஆழ்ந்த சிந்தனையை வெளிப்படுத்தியுள்ளார் கவிஞர்.
அடுத்த கவிதை, எழுத்தாளர் ஆஸ்கர் வைல்டின் கைதினையொட்டி இவர் எழுதியது. ஓரினச் சேர்க்கை குற்றச்சாட்டின் கீழ் ஈராண்டு காலச் சிறைத் தண்டனை பெற்றவர் ஆஸ்கர் வைல்ட். ஆஸ்கர் வைல்ட், ஹவுஸ்மேனின் சகோதரரை நன்கறிந்தவர் என்பதோடு இவரது A Shropshire Lad கவிதைத் தொகுப்பைப் பாராட்டியவரும் ஆவார். ஆயினும் ஆஸ்கர் வைல்டின் மேலிருந்த அச்சம் மற்றும் தயக்கத்தின் காரணமாகத் தன் வாழ்நாளில் இக்கவிதையை ஹவுஸ்மேன் வெளியிடவில்லை. தனிமனித சுதந்திரத்தை மதிக்காத அரசின் போக்கினை எதிர்த்து எழுதப்பட்ட இக்கவிதை இவரது காலத்துக்குப் பின் வெளியாகி மிகப் பிரபலமான ஒன்று.
**
தமிழில்: ராமலக்ஷ்மி
**
நன்றி கனலி!
***
வெளிச்சத்தில் இருந்து கொண்டே இருந்தால்தான் புகழ்... மறைந்து விடும் புகழை தேடித்தான் பிடிக்கவேண்டும்.
பதிலளிநீக்கு"ஆரவாரத்திற்கு சற்றும் குறைந்ததல்ல அமைதியின் சத்தம். - சூப்பர்.
நன்றி ஸ்ரீராம்.
நீக்குஇரண்டாவது கவிதை மனதைத் தாக்குகிறது. தலைமுடி, அதன் நிறம் செய்த பாவம் என்ன? இதன் குறியீடு? ஓரினச்சேர்க்கைக்கு இதற்கும் என்ன சம்பந்தம்?
பதிலளிநீக்குஇணையத்தில் கிடைத்த தகவல்களில், ஆஸ்கர் வைல்டிற்கு இளநரை இருந்ததாகவும் அதற்காக அவர் சாயம் இட்டுக் கொண்டதாகவும் குறிப்புகள் உள்ளன. சாயம் இட்டுக் கொள்வதை ஓரினச் சேர்க்கையாளர்களின் இயல்பாகக் கருதியிருக்க வாய்ப்பிருக்கலாம். இது என் அனுமானமே.
நீக்குஆரவாரத்திற்குச் சற்றும் குறைந்ததல்ல அமைதியின் சத்தம்//
பதிலளிநீக்குமனிதனுக்கு முன்னே மரணித்துவிடுகிறது பெயர்!//
ஆழாமான கருத்துள்ள வரிகள்.
இரண்டுமே அருமை. கவிஞரைப் பற்றியும் தெரிந்து கொண்டேன்.
கீதா
கருத்துகளுக்கு நன்றி கீதா.
நீக்குகவிதை நன்றாக இருக்கிறது. முதல் கவிதை அமைதியின் சத்தத்தை சொல்கிறது. கவிதையை படித்து முடிக்கும் போது மனம் சோகமாகி விடுகிறது.
பதிலளிநீக்குஅடுத்த கவிதையும் கூந்தலின் நிறத்தால் படும்பாடு படித்து விட்டு வருத்தம் அடைகிறது.
ஆசிரியர் குறிப்பும் இருக்கும் போது அவர் சுகப்படவில்லை என்று தெரிகிறது.
தங்கள் கருத்துகளுக்கு நன்றி கோமதிம்மா.
நீக்குஇரண்டாவது கவிதை பற்றி நான் கூட ஒரு கமெண்ட் இட்டிருந்தேனே....
பதிலளிநீக்குஓ மன்னிக்கவும். அதுவும் வெளியாகி இருக்கிறது. கவனிக்கவில்லை!
பதிலளிநீக்குஇந்தப் பதிவில் தங்களது முதல் கமெண்ட் தவிர்த்து மற்ற அனைத்தும் ஸ்பாமுக்கு சென்று விட்டிருந்தன. ஏனென்று தெரியவில்லை. ஆகையால் இரண்டாம் கவிதைக்கான கருத்தை தாமதமாகவே கவனிக்க நேர்ந்தது.
நீக்குகவிதைகள் இரண்டும் நன்று.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்கு