புல்வெளியில்
கண்களின் கவனத்திற்கு எளிதில் வராதவாறு,
வாலையும் பிடரி மயிரையும் காற்று அலைக்கழிக்க
குளிர்ந்த நிழலில் நிற்கின்றன மறைவாக;
அவற்றில் ஒன்று புல்லினை மேய்ந்தவாறு நகர்ந்திட
- மற்றது எங்கோ பார்த்தவாறு - மீண்டும் அனாமதேயமாக
நிற்பதைக் காண முடிகிறது.
இப்பொழுதிலிருந்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, அநேகமாக
இரு பனிரெண்டு தொலைவு வரிசை போதுமானதாயிருக்கிறது
அவற்றைப் பற்றிய பழங்கதைக்கு. கோப்பைகள், பந்தயப் பணம்மற்றும் போட்டிகளால் நிறைந்த மயக்கமூட்டும் மதியவேளைகள்,
அதன் மூலமாக அவற்றின் பெயர்கள் பொறிக்கப்பட்ட
மங்காத, உயர்தர ஜூன் மாதங்கள் -
பட்டுடைகளுடன் ஆரம்பம்; வானத்துக்கு எதிராக
எண்ணிக்கைகள் மற்றும் சிறுகுடைகள்: வெளியில்
விமானப்படையை ஒத்தக் காலி வாகனங்களின் அணிவகுப்பு, வெப்பம்,
மற்றும் குப்பைக் கூளமாகப் புல்வெளி: அதன்பின் அந்த நீண்ட ஆரவாரம்
அமைதியற்று அலைந்து, மெல்ல மெல்ல அடங்க -
தெருவெங்கும் பத்திரிகையாளர்கள்.
பழைய நினைவுகள் செவிகளைச் சுற்றும் ஈக்களைப் போல்
தொல்லையளிக்கின்றனவா அவற்றிற்கு?
தம் தலையைச் சிலுப்பிக் கொள்கின்றன.
அந்திப்பொழுது நிழல்களை நிரப்புகிறது.
கோடைகள் செல்லச் செல்ல எல்லாம் களவாடப்பட்டு விட்டன,
துவக்க-வாயில்கள், மக்கள் கூட்டம் மற்றும் ஆரவாரம் -
இப்பொழுது இருப்பதெல்லாம் தொந்திரவில்லாதப் புல்வெளிகள்.
பஞ்சாங்கத்தில், அவர்களது பெயர்கள் வாழ்கின்றன;
அவர்களும் தங்கள் பெயர்களை நழுவ விட்டு,
நிம்மதியாக நிற்கிறார்கள்,
இப்போதில்லை ஆனந்தம் அளித்த அதிவேகப் பாய்ச்சல்.
பார்ப்பதில்லை எந்தத் தொலைநோக்கியும்
அவர்கள் ஓய்விடத்தில் இருப்பதை,
ஆர்வத்துடன் முன்னறிவிப்பதில்லை நிறுத்தற்கடிகாரங்கள்:
காத்திருக்கின்றன, கடிவாளத்துடன் சாயங்காலம் வருகிற
பராமரிப்பாளர் மற்றும் பராமரிக்கும் பையனுக்காக மட்டும்.
*
மூலம்: At Grass by Philip Larkin
*
ஃபிலிப் லார்கின் (1922–1985):
ஆங்கிலக் கவிஞரும், நாவலாசியரும், நூலகருமான ஃபிலிப் லார்கின் பிரிட்டனில் போருக்குப் பிந்தைய காலத்து முன்னணிக் கவிஞர்களில் ஒருவராகக் கருதப்பட்டவர். இவரது கவிதைகள் தெளிவு, எளிமை மற்றும் வாழ்வு குறித்தான இருண்ட கண்ணோட்டம் ஆகியவற்றுக்காக அறியப்பட்டவை.
‘புல்வெளியில்’, முதுமையை மையமாகக் கொண்டு ஃபிலிப் லார்கின் படைத்த உணர்வுப்பூர்வமான பாடல். வாழ்வின் பிரகாசமான இளமைப்பருவத்தைக் கடந்து அந்திமக் காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் பந்தயக் குதிரைகளைப் பற்றியதாக மட்டுமின்றி பொதுவில் மனித வாழ்க்கை, புகழ் மற்றும் மற்றவரின் தோல்வியாகும் ஒருவரது வெற்றி, அதன் நிலையற்றத்தன்மை, மரணம், அதற்கானக் காத்திருப்பு குறித்துப் பேசுவதாக அமைந்துள்ளது.
*
தமிழாக்கம்: ராமலக்ஷ்மி
*
28 ஜனவரி 2024 சொல்வனம் இதழில்.., நன்றி சொல்வனம்!
***
நல்லதொரு மொழிபெயர்ப்பு கவிதை.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குநல்ல கவிதை. மறதி நோய் வந்த முதியவர்கள் பார்த்து கொள்ள ஆள் போட்டு இருக்கிறார்கள் சில் இடங்களில். அவ்ர் வரவை எதிர்ப்பார்த்து காத்து இருக்கும் முதியவர்களை நினைத்து கொள்கிறேன். வயதான் குதிரைகளை போல பையனின் வரவுக்கு காத்து இருக்கும் முதியவர்கள்.
பதிலளிநீக்குநீங்கள் சொல்லியிருப்பது உணர்வுப்பூர்வமான உண்மை. தங்கள் கருத்துக்கு நன்றி கோமதிம்மா.
நீக்குநல்லதொரு கவிதை - உங்கள் மொழியாக்கம் நன்று.
பதிலளிநீக்குஇரண்டாவது வரியில் “அலைக்களிக்க” என்று இருப்பது “அலைக்கழிக்க” என்று வரவேண்டுமோ? சற்றே குழப்பம் எனக்கு.
கவனக்குறைவால் நேர்ந்த பிழை. திருத்தி விட்டேன்.
நீக்குநன்றி வெங்கட்.