ஞாயிறு, 21 ஜனவரி, 2024

தேவாலயம் செல்லுதல் - சொல்வனம் இதழ் 309

 

தேவாலயம் செல்லுதல்

எதுவும் நடக்கவில்லை என நான் உறுதி செய்த பிறகு
கதவை ஓங்கி மூடிக் கொள்ள அனுமதித்து, உள்ளே நுழைந்தேன்.
மற்றுமோர் தேவாலயம்: தரைவிரிப்புகள், இருக்கைகள், மற்றும் பீடம்,
சில புத்தகங்கள்; பரந்து விரிந்து கிடந்த பூக்கள்; 
ஞாயிறுக்காகப் பறிக்கப்பட்டவை, இப்போது பழுப்பு நிறத்தில்;சில பித்தளைச் சாமான்கள்
பவித்திரமான இடத்தின் மேல்; சிறிய நேர்த்தியான இசைக்கருவி;
மற்றும் பதட்டமான, ஊசல் வாடையுடைய, புறக்கணிக்க இயலாத மெளனம்,
கடவுளுக்கே தெரியும் எத்தனை காலமாக என. என்னிடம் தொப்பியில்லை ஆதலால் 
மரியாதை செலுத்த தர்ம சங்கடத்துடன் எனது மிதிவண்டிக் கவ்வியைக் கழட்டுகிறேன்,

இன்னும் சற்றே முன் நகர்ந்து, புனித நீர்க் கலனின் விளிம்பைத் தடவுகிறேன்.
நான் நிற்கும் இடத்திலிருந்து பார்க்கையில் கூரை ஏறக்குறையப் புதிதாகத் தோற்றமளிக்கிறது-
சுத்தம் செய்யப்பட்டுள்ளது அல்லது புனரமைக்கப்பட்டுள்ளது? யாரேனும் அறிந்திருக்கக் கூடும்: எனக்குத் தெரியாது.
சாய்மேசை முன் ஏறிநின்று, பெரிய எழுத்துருக்களில் இருந்த
விவிலிய வசனங்கள் சிலவற்றைக் கவனமாக வாசிக்கிறேன், 
நான் நினைத்ததை விடவும் சத்தமாக உச்சரிக்கிறேன் “இதோ.. நிறைவடைந்தது”.
எதிரொலிகள் விரைவாக அடங்குகின்றன. திரும்பி வாசலுக்கு வந்து,
புத்தகத்தில் கையொப்பமிடுகிறேன், ஆறு பைசா அயர்லாந்து நாணயத்தை உண்டியலில் தானமிடுகிறேன்,
செல்லும் வழியில் நின்று பார்க்கத் தகுதியற்றது எனும் எண்ணத்துடன்.

ஆயினும் நான் நின்று பார்க்கிறேன்: உண்மையில் அடிக்கடி செய்கிறேன்,
ஒவ்வொரு முறையும் ஒருவித இழப்பில் முடிகின்றது இதே போல,
எதைப் பார்ப்பது என வியக்கிறேன்; மேலும், வியக்கிறேன்
எப்போது தேவாலயங்கள் முழுமையாகப் பயனற்றுப் போகும் என,
அவற்றை என்னவாக நாம் மாற்றப் போகிறோம் என, ஒருவேளை நாம்
சில தேவாலயங்களை அருங்காட்சியமாக ஆக்குவோம் ஆயின் வைக்கலாம்
அவற்றின் வரைதோல், தட்டு, பூட்டிய பேழைகள் ஆகியவற்றை.
மீதமானவை இலவசமாக வாடகைக்கு அனுமதிக்கலாம், மழையையும் ஆட்டு மந்தையையும்.
நாம் அவற்றை அதிர்ஷ்டமற்ற இடங்களென ஒதுக்கலாமா?

அல்லது, இருட்டிய பிறகு, தெளிவற்ற பெண்மணி வரலாம்
தன் குழந்தைகளைக் குறிப்பிட்டக் கல்லைத் தொடப் பணிக்கலாம்;
புற்றுநோயைக் குணமாக்க மூலிகைகளைப் பறிக்கலாம்; அல்லது 
சில குறிப்பிட்ட இரவுகளில் நடமாடும் ஆவிகளைக் காணலாம்?
ஏதோ ஒரு வித சக்தி தொடர்ந்தபடி இருக்கும்
விளையாட்டுகளில், புதிர்களில், சீரற்ற வெளித் தோற்றத்தில்;
ஆனால் மூட நம்பிக்கைகள், நம்பிக்கையைப் போன்றே, அழிய வேண்டும்,
அவை அழியும்போது என்ன மிஞ்சும்?
புற்கள், களைகள் படர்ந்த நடைபாதைகள், முட்புதர்கள், வானம்,

வாரத்திற்கு வாரம் தன் அங்கீகாரத்தை இழந்து வரும் தோற்றம்,
தெளிவற்று வரும் நோக்கம். நான் வியக்கிறேன்
யார் அந்தக் கடைசி நபர், இந்த இடம் எதுவாக இருந்ததோ அதற்காக 
இந்த இடத்தை நாடி வருகிற மிகக் கடைசி நபர்; குழுவைச் சேர்ந்த ஒருவர்
தட்டவும் குறிப்பெடுக்கவும் திரைமாடங்களைப் பற்றியும் தெரிந்தவர்?
பாழடைந்தவற்றின் மேல் பித்தான ஏதோவொருவர், பழமை மேல் நாட்டமானவர்,
அல்லது கிறுஸ்துமஸ் மேல் போதை கொண்டவர், காற்றில் வரும்
போதகரின் ஆடை, இசைக் கருவிகள் மற்றும் வெள்ளைப்போளத்தின் நறுமணங்களை விரும்புகிறவர்?
அல்லது அவர் என் பிரதிநிதியானவர்,

சலிப்புற்று, தகவல் அற்று, பரிசுத்த ஆவி சேற்றில் கலைந்ததை அறிந்து,
ஆயினும் இந்தக் குறுக்கு நிலத்தின் மேல் பிரியம் கொண்டு,
புறநகரின் புதர்க்காடாயினும் இதுநாள் வரையிலும் பிளந்து விடாதது
தோன்றிய போது இருந்தது போலவே இருப்பது
பிரிவினையில் மட்டும் - திருமணம், மற்றும் பிறப்பு,
மற்றும் இறப்பு, மற்றும் இந்த சிந்தனைகள் - ஆகியவற்றுக்காகக் கட்டப்பட்டது
இந்தப் பிரத்தியேகமான கூடு? ஆயின், இது குறித்து எனக்கு எந்தக் கருத்தும் இல்லை
அறைகலன்களுடனான இந்த உறைந்த கொட்டகைக்கு என்ன மதிப்பு,
அமைதியாக இங்கு நிற்கையில் என்னை இது மகிழ்ச்சியாக்குகிறது;

ஒரு கருத்தார்ந்த வீடு கருத்தார்ந்த நிலத்தின் மேல்,
யாருடைய அந்தக் கலவையான காற்றில் நமது அனைத்து நிர்ப்பந்தங்களும் சந்திக்கின்றனவோ,
அங்கீகரிக்கப்படுகின்றனவோ, மற்றும் ஊழ்வினைகள் என அங்கியிடப்படுகின்றனவோ
அந்த அளவுக்கானவை ஒருபோதும் வழக்கொழிந்து போக வாய்ப்பில்லை,
யாரேனும்  என்றென்றும் தனக்குள் இருக்கும் தேடலை
வியந்தும் தீவிரமாகக் கருதியும் இருக்கும் வரையில்,
மற்றும் அதனோடு இந்த நிலத்தை ஈர்க்க வைத்து,
எதுவோ, அவன் எப்போதோ கேட்டது, விவேகமாக வளரப் பொருத்தமானது,
அதுமட்டுமின்றி, பலரும் அமைதியாக உறங்கும் கல்லறைகளால் சூழப்பட்டது.
*

மூலம்: Church Going by Philip Larkin

*

ஃபிலிப் லார்கின் (1922–1985): 

ஆங்கிலக் கவிஞரும், நாவலாசியரும், நூலகருமான ஃபிலிப் லார்கின் பிரிட்டனில் போருக்குப் பிந்தைய காலத்து முன்னணிக் கவிஞர்களில் ஒருவராகக் கருதப்பட்டவர். இவரது கவிதைகள் தெளிவு, எளிமை மற்றும் வாழ்வு குறித்தான இருண்ட கண்ணோட்டம் ஆகியவற்றுக்காக அறியப்பட்டவை. 

கவிதைகளில் நிலவிய தெளிவின்மை, கவனமின்மையை எதிர்த்தும், நேரடியான மற்றும் மரபுப் பாணியை ஆதரித்தும் 1950-களில் ஒரு குழுவாக பிரிட்டிஷ் கவிஞர்களால் உருவெடுத்த இயக்கத்துடன் தன்னை இணைத்துக் கொண்டவர்.

1945_ல் வெளியான இவரது முதல் கவிதைத் தொகுப்பான The North Ship, தன் வரையில் அத்தனை திறம் மிக்கதாக இல்லாது போயினும் அதன் சில பகுதிகள் பின்னாளில் தன் எழுத்தில் அவர் காட்டிய தனித்துவமான நுண்மைக்கும் முதிர்ச்சிக்கும் கட்டியம் கூறுவதாக அமைந்தவை. 1955_ல் வெளியான இரண்டாவது தொகுப்பான The Less Deceived  அவரது தலைமுறையின் அதிமுக்கிய கவிஞராக அவர் அறியப்படக் காரணமானதுடன், அவர் சார்ந்திருந்த இயக்கத்தை வழிநடத்தும் குரலாகவும் ஒலித்தது.

"Church Going" அவரது மிக முக்கிய கவிதைகளில் ஒன்று. கிராமப்புறத்தில் தேவாலயத்தை மிதிவண்டியில் கடந்து செல்ல நேரும் நாத்திகரின் பார்வையில் எழுதப்பட்ட இக்கவிதை சமூகத்தில் மதமானது தன் பிடியை இழக்கும் போது, மதத்திற்கு இடமின்றிப் போகும் போது சமூகம் எப்படி மாறும்-மாறாது என்பதைக் குறித்து பேசுகிறது. மதமும் அதன் மேலான நம்பிக்கையும் மெல்ல மரணிப்பதாகவும் தேவாலயங்கள் தேவையற்றதாக மாறுவதாகவும் செல்லுகிற கவிதை இறுதியில் பிரிட்டிஷ் தேவாலயங்களின் பாரம்பரியமும் அவற்றின் ஆன்மாவும் மடிய வாய்ப்பில்லை, அதன் தேவை எப்போதும் இருக்கும் என்பதாகவே முடிகிறது.

"This Be The Verse," "High Windows," "The Whitsun Weddings" ஆகியன இவரது மேலும் சில பிரபலமான கவிதைகள். பெரும்பாலும் இவரது கவிதைகள் காதல், மரணம், காலத்தின் பாதை, மனித உறவுகளுக்கிடையேயான சிக்கல்கள் ஆகியவற்றைக் கருக்களாகக் கொண்டு வாழ்க்கையை ஆராய்வதைக் காணலாம். இவரது படைப்புகள் சாதாரண வாழ்வை ஆழ்ந்து நோக்குவதாகவும் பிரதிபலிப்பதாகவும், சமயங்களில் மனிதரின் நிலைமையைக் குறைகாணும் போக்கிலும் அமைந்தவை. 

கவிதைகள் மட்டுமின்றி "Jill" (1946) and "A Girl in Winter" (1947) ஆகிய இரு நாவல்களையும் பல கட்டுரைகள், மற்றும் விமர்சனங்களையும் எழுதியவர். தன் பணிக்காலத்தின் பெரும்பகுதியை நூலகராகக் கழித்தவர். குறிப்பாக ஹல் பல்கலைக் கழகத்தின் நூலகராகப் பல ஆண்டுகள் பணியாற்றியவர்.

**

கவிதை மற்றும் ஆசிரியர் குறிப்பின் தமிழாக்கம்: ராமலக்ஷ்மி
***

நன்றி சொல்வனம்!
***




4 கருத்துகள்:

  1. கவிதை நடையைத் தொடும் நீண்ட உரத்த சிந்தனைத் தொடர்.  மனதில் எங்கேயோ ஓரிடத்தை பிடிக்க முயற்சிக்கிறது.  'கவிஞர்' பற்றிய குறிப்புகள் படித்துத் தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  2. நல்லதொரு தமிழாக்கம். ஆசிரியர் குறித்த குறிப்பும் சிறப்பு. தொடரட்டும் உங்கள் பதிவுகள்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin