ஓர் அறிமுகம்
எனக்கு அரசியல் தெரியாது ஆனால்
அதிகாரத்தில் இருப்பவர்களின் பெயர்கள் தெரியும்,
நேருவில் தொடங்கி அவற்றை ஒப்பிக்க முடியும்
வாரத்தின் நாட்களை, அல்லது மாதங்களை ஒப்பிப்பது போல
நான் ஒரு இந்தியர், மிகப் பழுப்பு நிறத்தில், மலபாரில் பிறந்தவள்,
நான் பேசுவது மூன்று மொழிகளில், எழுதுவது இரண்டில்,
கனாக் காண்பது ஒன்றில்.
அவர்கள் சொன்னார்கள், ஆங்கிலத்தில் எழுதாதே,
ஆங்கிலம் உனது தாய்மொழி இல்லை என்று.
விமர்சகர்களே, நண்பர்களே, வருகை தரும் உறவினர்களே,
நீங்கள் ஒவ்வொருவரும்?
நான் பேசுகிற மொழி, எனதாகிறது,
அதன் உருத்திரிவுகள், அதன் விந்தைகள்
அனைத்தும் என்னுடையவை, என்னுடையவை மட்டுமே.
அது பாதி ஆங்கிலமாகவும், பாதி இந்திய மொழியிலுமாக
வேடிக்கையாக இருக்கலாம், ஆனால் அது நேர்மையானது,
நான் ஒரு மனுஷி என்பதற்கு ஒப்பாக மனிதத்தன்மை பெற்றது,
தெரியவில்லையா உங்களுக்கு?
அது ஒலிக்கிறது எனது சந்தோஷங்களை,
எனது ஏக்கங்களை, எனது நம்பிக்கைகளை,
மேலும் அது எனக்குப் பயனுள்ளதாக இருக்கிறது
காகத்துக்குக் கரைதல் போன்று அல்லது
சிங்கத்துக்குக் கர்ஜனை போன்று,
இது மனித உரை, அங்கு அல்ல இங்கிருக்கும் மனதின் உரை,
பார்க்கக் கூடிய கேட்கக் கூடிய விழிப்புடைய மனது.
புயலில் செவிடான, குருடான மரங்களின் உரையோ அல்லது
கருமேகங்களின் அல்லது மழையின் அல்லது
சுடர் விட்டெரியும் ஈமச்சிதையின் தெளிவற்ற முணுமுணுப்போ அல்ல.
நான் அப்போது குழந்தை, பிறகு உயரமானேன்
எனது அவயங்கள் வீங்கின மற்றும்
ஓரிரு இடங்களில் உரோமங்கள் முளை விட்டன,
வளர்ந்து விட்டதாகச் சொன்னார்கள்.
வேறெதைக் கேட்பது எனத் தெரியாத நிலையில்,
நான் அன்பினை யாசித்த போது,
பதினாறு வயதான இளம்பெண்ணை
அறைக்குள் தள்ளிக் கதவை மூடினார்,
என்னை அவர் அடிக்கவில்லை ஆனால்
எனது பரிதாபத்துக்குரிய பெண்-உடல் அடிபட்டதாக உணர்ந்தது.
என் மார்பகங்கள் மற்றும் கருப்பையின் கனம் என்னைக் கசக்கியது.
நான் சுருங்கினேன் இரக்கத்துக்குரியவளாக.
பிறகு... நான் மேற்சட்டை அணிந்தேன்,
என் சகோதரனின் காற்சிராயையும்.
என் கூந்தலைக் குட்டையாக வெட்டிக் கொண்டு
என் பெண்மையை உதாசீனம் செய்தேன். அவர்கள் சொன்னார்கள்,
சீலை அணிந்திடு, பெண்ணாக இரு, மனைவியாக இரு என்று.
பூத்தையல்காரியாக, சமையல்காரியாக,
வேலையாட்களுடன் சண்டை பிடிப்பவளாக.
பொருந்திடு, ஓ, முறைப்படு,
கூவினார்கள் வகைப்படுத்துபவர்கள்.
சுவர்கள் மேல் அமராதே, சன்னல்களின்
சரிகை திரைச்சீலைகள் வழியாக நோட்டமிடாதே.
ஆமியாக இரு, அல்லது கமலாவாக இரு. அல்லது,
அதைவிடச் சிறப்பு மாதவிக்குட்டியாக இரு.
நேரம் வந்து விட்டது பெயரையும், பொறுப்பையும் தெரிவு செய்ய.
பாசாங்கு நாடகங்கள் ஆடாதே.
மூளைக் கோளாறுடனோ அல்லது வேட்கையுடனோ விளையாடாதே.
நேசிப்பில் ஏமாற்றப்படுகையில் சங்கடத்தில் சத்தமாக அழாதே. ...
நான் ஒருவரை சந்தித்தேன், நேசித்தேன்.
அவரை எந்தப் பெயர் கொண்டும் அழைக்க வேண்டாம்,
அவர் எல்லா ஆண்களையும் போன்று பெண்ணை விரும்புகின்றவர்,
எவ்வாறு எல்லாப் பெண்களையும் போன்று
நான் அன்பைத் தேடுகிறேனோ அது போல.
அவரிடத்தில்.. நதிகளின் பசித்த பாய்ச்சல்,
என்னிடத்தில்.. சமுத்திரத்தின் சோர்வற்றக் காத்திருத்தல்.
'யார் நீங்கள்', நான் ஒவ்வொருவரிடமும் கேட்கிறேன்,
அதற்கான பதில், 'நான்' என்பது.
எந்தவொரு இடத்திலும், எல்லா இடத்திலும்,
இந்த உலகத்தில் நான் பார்க்கிறேன்,
தன்னை 'நான்' என சொல்லிக் கொள்பவரை, இறுக்கமாக
தனது உறைக்குள் வைக்கப்பட்ட வாளைப் போன்று.
நான்தான் தனிமையில் குடிக்கிறேன்
நள்ளிரவில், பன்னிரெண்டு மணியளவில்,
பழக்கமற்ற நகரங்களின் விடுதிகளில்.
நான்தான் சிரிக்கிறேன், நேசிக்கிறேன்,
பிறகு அவமானமாக உணருகிறேன்,
நான்தான் சாகிறேன் எனது தொண்டை அடைக்க.
நானே பாவி, நானே புனிதர். நேசிக்கப்பட்டவளும் நான்,
வஞ்சிக்கப்பட்டவளும் நான். உங்களிடமில்லாத
எந்தவொரு மகிழ்ச்சியும் என்னிடத்தில் இல்லை,
உங்களிடத்தில் இல்லாத எந்தவொரு வலியும் இல்லை.
நானும் என்னை அழைக்கிறேன் 'நான்' என்றே.
*
மூலம்: 'An Indroduction' by Kamala Das
கமலா தாஸ் (1934-2009) :
கமலா தாஸ் எனப் பரவலாக அறியப்பட்ட கமலா சுரயா குறிப்பிடத் தக்க இந்திய எழுத்தாளர். ஆரம்பக் காலத்தில் மாதவிக்குட்டி என்ற பெயரில் எழுதத் தொடங்கியவர். கேரளாவின் மலபார் மாவட்டத்திலுள்ள புன்னையூர்குளத்தில் பிறந்தவர். ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் ஏராளமான சிறுகதைகளையும், கவிதைகளையும் எழுதியுள்ளார். இவரது தந்தை கொல்கத்தாவில் பணியாற்றியதால் இளமைப்பருவத்தில் கொல்கத்தாவிலும், புன்னையூர்குளத்திலிருந்த பூர்வீக வீட்டிலுமாக வளர்ந்திருக்கிறார். இவரது தாயார் புகழ்பெற்ற மலையாளக் கவிஞர். தந்தை ‘மாத்ருபூமி’ மலையாள தினசரியின் நிர்வாக ஆசிரியராகப் பணிபுரிந்தவர். 15 வயதில் மாதவ தாஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று மகன்கள் இருக்கின்றனர். 1999_ஆம் ஆண்டு இஸ்லாம் மதத்தைத் தழுவி தன் பெயரை கமலா சுராயா என மாற்றிக் கொண்டார். கேரள சாகித்ய அகடமியின் துணை தலைவர் பொறுப்பில் இருந்தார். அரசியலுல் பெரிய நாட்டம் இல்லாவிடினும் பெண்கள் நலனுக்காகவும் மதசார்பற்ற கொள்கைக்காகவும் லோக் சேவா கட்சியைத் தொடங்கினார்.
பெரும்பாலும் ஆங்கிலத்தில் எழுதி வந்த கமலா தாஸின் இலக்கியப் பயணம் 1960_ஆம் ஆண்டு வெளியான "கொல்கத்தாவில் கோடைக்காலம் - Summer in Calcutta" கவிதைத் தொகுப்பிலிருந்து தொடங்கியது. இவரது படைப்புகள் ஒப்புதல் வாக்குமூலப் பாணியில், சொந்த அனுபவங்கள் மற்றும் உணர்ச்சிகளை அச்சமின்றி ஆராய்ந்து வெளிப்படுத்துபவையாக இருந்தன. காதல், விருப்பம், ஏக்கம், திருமணம், ஆகியவற்றைப் பற்றியும், ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்கள் எதிர்கொள்ள நேர்ந்த போராட்டங்களைப் பற்றியும் இவர் எழுதியவை சமூக நியமங்களையும் எதிர்பார்ப்புகளையும் கேள்வி கேட்பவையாகவும் சவால் விடுப்பவையாகவும் அமைந்தன. அதிக அளவில் கொண்டாடப்பட்ட இவரது முக்கியப் படைப்பு "என் கதை" (My Story) எனும் சுய சரிதை நாவல். இவரது எழுத்தில் இருந்த நேர்மையும், ஆர்வம், ஆத்திரம் எனக் கலவையான உணர்வுகளைத் தூண்டும் தன்மையும் இவருக்குப் பாராட்டுகளை மட்டுமின்றிக் கடும் விமர்சனங்களையும் பெற்றுத் தந்தன.
தனது பணிக்காலம் முழுவதிலும் தொடர்ச்சியாகப் பல விருதுகளைப் பெற்றவர். சாகித்ய அகடமி விருது, ஆசியக் கவிதைப் பரிசு, ஆசிய நாடுகளுக்கான ஆங்கில எழுத்துக்குரிய கென்ட் (Kent) விருது ஆகியன குறிப்பிடத்தக்கவை.
*
படங்கள்: நன்றியுடன், இணையத்திலிருந்து..
*
கவிதை மற்றும் ஆசிரியர் குறிப்பின் தமிழாக்கம்: ராமலக்ஷ்மி
*
'உதிரிகள்' முதுவேனிற்கால இதழில் வெளியாகியுள்ள 3 தமிழாக்கக் கவிதைகளில் ஒன்று,
நன்றி உதிரிகள்!
இவரைப்பற்றி ஓரளவு நான் அறிந்திருப்பதற்கு காரணம் அவரின் என் கதை படைப்பு. படைப்பைப் படித்ததில்லை. அதனால் நேர்ந்த சர்ச்சைகளை படித்திருக்கிறேன். இன்றும் இன்னும் அதிக விவரம் அறிந்தேன்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குகவிதையைப் படிக்கும்போது கொஞ்சம் விமர்சனங்களை தாங்க முடியாதவராக தெரிகிறார். இது என் அனுபவம், நீ தலையிடாதே என்பது போல.. நீ என்னை அதிகாரம் செய்யாதே என்றும் சொல்கிறார்.
பதிலளிநீக்குஅது ஒரு கோணம். விமர்சனங்களை தைரியமாக எதிர் கொண்டார் என்கிற கோணத்திலும் பார்க்கலாம். நன்றி ஸ்ரீராம்.
நீக்குபுஷ்பா தங்கதுரை இவரை பற்றி கதை எழுதி இருக்கிறார் படித்து இருக்கிறேன். குமதத்தில் தொடர் கதையாக வந்தது என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குநீங்கள் பகிர்ந்த அவர் கவிதை அவருக்கு நேர்ந்த கஷ்டங்களை சொல்கிறது.
உண்மைகளை எழுதும் போது விமர்சனங்கள் வரத்தான் செய்யும். சமூகத்தை பற்றி சொல்வதை ஏற்று கொள்ள முடியதவர்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்தார்கள்.
/குமுதத்தில்../ ஓ. நான் வாசித்ததில்லை. /உண்மைகளை எழுதும் போது/ உண்மைதான். தங்கள் கருத்துக்கு நன்றி கோமதிம்மா.
நீக்குநான் எனும் சுயத்தின் அப்பட்டமான அவல உணர்வுகளை வெளிப்படுத்துபவர், சமூகம் அறிந்தே மறைக்கும் பல முகமூடிகளைக் கிழித்து உண்மைகளைத் தோலுரித்து, சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்துவதால், அவரது கருத்துகளை விட, அவரது தனிப்பட்ட வாழ்வே பேசுபொருளாகும்.
பதிலளிநீக்கு/தனிப்பட்ட வாழ்வே பேசுபொருளாகும்/ அதுதான் நடந்தது. தங்கள் கருத்துக்கு நன்றி.
பதிலளிநீக்கு