சனி, 10 ஏப்ரல், 2021

தேடினேன்.. வந்தது.. - சிட்டுக்குருவி (House Sparrow) - பறவை பார்ப்போம் - பாகம்: (66)

 #1

ழிந்து வரும் அபாயத்தில் இருக்கும் பறவைகளின் பட்டியலில் சிட்டுக்குருவி இனம் சேர்ந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன. 

சிறு வயதில் எனது அன்றாட வாழ்வில் அதிகமாகப் பார்த்த பறவைகள் எவை என்றால் காகங்களையும் சிட்டுக்குருவிகளையும்தான் கை காட்ட முடியும். திருநெல்வேலி மதுரை ரோட்டில், எங்கள் வீட்டுப் புறவாசல் தாண்டி  இருந்த பிள்ளையார் கோயில் அரச மரத்தில் கூடடையும் கொக்கு உள்ளிட்ட பறவைகளை மேல் தட்டட்டியில் இருந்து ரசித்ததெல்லாம் தனிக் கணக்கு. ஆனால் அவை வீட்டுக்கு வருவதில்லையே. வீட்டு விருந்தாளிகள் என்றால் மேற்சொன்ன இரண்டும்தாம். 

அதிலும் சிட்டுக்குருவிகள் வசிப்பதற்காகவே முற்றத்தில் இரு தூண்களுக்கு நடுவே தாத்தா பரண் அமைத்திருந்ததால் அவற்றின் தினசரி தரிசனம் நிச்சயம்.

2013_ஆம் ஆண்டு சிட்டுக்குருவிகள் தினத்தன்று பதிந்த ‘கூடு இங்கே குருவி எங்கே.. - https://tamilamudam.blogspot.com/2012/03/blog-post_20.html’ என்ற என் பதிவில் அந்த ‘மலரும் நினைவுகளை’ நேரமிருப்பின் வாசிக்கலாம்.

இப்போது எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், பெங்களூர் வந்த இத்தனை ஆண்டுகளில் ஒருமுறை கூட சிட்டுக்குருவியைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. எங்கேனும் ஊர்களுக்குப் பயணம் செல்லுகையில் பார்த்ததுதான். 

அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசித்த போது மாடப் புறாக்களும், காகங்களும், எப்போதேனும் பால்கனி கைப்பிடியில் ஒருசில மணித்துளிகள் அமர்ந்து செல்லும் பருந்துகளும், அபூர்வமாக வருடம் ஒருமுறை குறிப்பிட்ட மாதத்தில் வந்து ஆச்சரியப்படுத்திய ஆந்தையும் மட்டுமே பறவை-விருந்தாளிகள் கணக்கில் வரும். காகத்தையும், புறாவையும் அப்போது சலிக்கச் சலிக்கப் படங்கள் எடுத்தாயிற்று.

கடந்த நான்கு வருடங்களாக, தோட்டத்துடன் கூடிய இந்த வீட்டுக்கு வந்த பின் இதுவரையில் சுமார் முப்பதுக்கும் மேலான வகைப் பறவைகளை எங்கள் தோட்டத்திலேயே பார்த்து விட்டேன். அதில் 25 வகைகளைப் படமாக்கித் தகவல்களுடன் பகிர்ந்தும் விட்டேன். இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், வருடக் கணக்காக சிட்டுக்குருவியைத் தேடியதைப் போல இங்கே காகத்தைத் தேட வேண்டிய நிலை. வயல்கள் சூழ்ந்த, தோட்டங்களைக் கொண்ட இந்தப் பகுதிக்கு வந்த முதலிரண்டு வருடங்களில் ஒரு காகம் கூட கண்ணில் படவில்லை என்றால் நீங்கள் நம்பிதான் ஆக வேண்டும். இப்போது இரண்டு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை எப்போதேனும் சுற்றுச் சுவருக்கு அப்பால் இருக்கும் யூகலிப்டஸ் மரத்திலிருந்து கேட்க நேரும் காகம் கரைகிற சத்தம்  ‘அட நம்ம காக்கா’ என எண்ணவும், எட்டிப் பார்க்கவும் வைக்கின்றது :). 

கண்ணிலேயே அகப்படாமல் இருந்த சிட்டுக்குருவி, சின்ன வயதில் மிக அருகாமையில் பார்த்து வளர்ந்த ஒரே குருவி, இன்று எத்தனையோ வகைக் குருவிகளைப் படம் எடுத்திருந்தாலும் ‘சிட்டுக்குருவியை எடுக்க முடியவில்லையே’ என வருத்தப்பட வைத்த குருவி... சில மாதங்களுக்கு முன் ஓர் அதிகாலையில் கலையாத தூக்கத்துடன் சன்னல் திரையை விலக்கிய போது முருங்க மரக் கிளையில் ஒய்யாரமாக அமர்ந்திருக்கக் கண்டேன். பரபரப்பாகி அரை நிமிடத்தில் அவசர அவசரமாக ஓரிரு படங்கள்தான் எடுத்திருப்பேன். பறந்து விட்டது. போகட்டும், எப்படியோ என் நீண்ட நாள் ஆசை நிறைவேறிய வரையில் திருப்தியே :).

ஆக.., என் வீட்டுத் தோட்டத்தில்.., என்னைத் தேடி வந்த பறவைகள்.. பட்டியலில் சிட்டுக்குருவியையும் இப்போது சேர்த்தாயிற்று. அத்தோடு மேலதிகத் தகவல்கள் சிலவற்றையும் பார்ப்போம். ..

ஆங்கிலப் பெயர்: House Sparrow
உயிரியல் பெயர்: Passer domesticus

#2


லகின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படும் சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி குடும்பமான பேஸ்ஸரிடே (Passeridae)  வகையைச் சேர்ந்த சிறு பறவை ஆகும். பேஸ்ஸர் (Passer) பேரினத்தின் 25 வகைகளில் இதுவும் ஒன்று.

ஆண் குருவிகள் ஆழ் கருப்பு, பிரகாசமான வெள்ளை, மற்றும் பழுப்பு அடையாளங்களுடன் காணப்படும். பெண் குருவிகளும் குஞ்சுகளும் வெளிர் பழுப்பு மற்றும் சாம்பல் நிறத்தில் இருக்கும். பூர்வீகம் ஆசியாவின் பெரும்பகுதி, ஐரோப்பா மற்றும் மத்தியத் தரைக்கடல் பகுதிகள் என்றாலும் மனிதர்களின் மெனக்கிட்டதாலோ அல்லது ஒரு விபத்தாகவோ அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களிலும் அறிமுகமாகி உலகிலேயே அதிகபட்சமாகப் பரவிய காட்டுப் பறவையாக உள்ளது.

சிட்டுக்குருவிகள் பொதுவாக ஐந்தரை முதல் ஏழு அங்குல நீளம் கொண்டவை ஆயினும் சராசரியாகப் பெரும்பாலான பறவைகள் 6 அங்குல நீளத்தில் காணப்படுகின்றன. எடை 25 முதல் 40 கிராம் வரை கொண்டவை. குட்டையான வாலினைக் கொண்டவை. விதைகளை உடைத்துச் சாப்பிட ஏற்றவாறு இதன் அலகுகள் கடினமானதாகவும் கூம்பு வடிவத்தில் சுமார் முக்கால் முதல் ஓர் அங்குல நீளத்திலும் இருக்கும். முதுகெலும்பற்ற மெல்லுடலிகள், மண்புழுக்கள், பூச்சிகளையும் தானியங்கள், பெர்ரி-திராட்சைப் பழங்கள், காய்-கனி விதைகள் மற்றும் மொட்டுகளை உணவாக்கிக் கொள்ளும்.

இவற்றின் இனப்பெருக்கக் காலம் வருடம் முழுவதும் என சொல்லப்பட்டாலும்ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலும் முக்கியமான காலமாக உள்ளது. 

கட்டிடங்களில் காணப்படும் பொந்துகளிலும் விரிசல்களிலும் கூடுகளை அமைக்கும். மனிதர்களால் இவற்றுக்காகவே பூங்கா மற்றும் மரங்களில் தொங்கவிடப்படும் கூடுகளிலும் கூட்டை அமைத்துக் கொள்ளும். சுவர்களில் படரும் கொடிகள், வேலியோரங்கள் ஆகியவற்றிலும் இவற்றின் கூடுகளைக் காணலாம். ஜோடிப் பறவைகள் ஒன்றிற்கு ஒன்று உண்மையாக இருப்பதோடு கூடு கட்டும் இடத்திற்கும் உண்மையாக அதே இடத்தில் திரும்பத் திரும்ப கூடுகளை அமைத்திடும். ஜோடியில் ஒரு பறவை இறக்க நேரிட்டால், அதன் பின்னரே ஒரு சிலநாட்களில் வேறு பறவையுடன் ஜோடி சேரும். 

கூடுகளின் பொந்தினை வைக்கோல், காய்ந்த புற்கள், சணல் கயிற்று இழைகள், முடிக் கற்றைகள், காகிதக் கிழிசல்கள், இறகுகள் ஆகியவற்றைக் கொண்டு மெத்தை அமைக்கும். உயிருடன் உலவும் புறாக்களிடமிருந்தும் இறகுகளை உருவிக் கொள்ளுமாம்:).

இரண்டு அல்லது மூன்று பிடிகளாக, ஓர் நாள் இடைவெளியில் ஒரு முறைக்கு இரண்டு முதல் ஐந்து முட்டைகள் வரையிலுமாக இடும். ஆண்-பெண் இரு பறவைகளுமே பொறுப்பெடுத்து முட்டைகளை அடை காக்கும். 11 முதல் 14 நாட்களில் குஞ்சுகள் பொரிந்து வெளியே வரும். குஞ்சுகளைப் பராமரிப்பதிலும் இருபாலினப் பெற்றோரும் சமபங்கு எடுத்துக் கொள்ளும். குஞ்சுகளுக்கு உணவாக முதுகெலும்பில்லாத புழுக்கள், கம்பளிப்பூச்சிகள், வண்டுகள் மற்றும் வெட்டுக்கிளிகளைப் பிடித்து வந்து கொடுக்கும். இப்பூச்சிகளை வெளியில் காண அரிதாகும் குளிர் காலமாயின் காய், கனிகளின் விதைகளைக் கொடுத்துச் சமாளிக்கும்.

முட்டையிலிருந்து வெளிவந்த குஞ்சுகள் 14-16 நாட்களில் இறகுகள் முளைத்து கூட்டை விட்டு வெளியில் வந்தாலும் தாமாக உணவு உட்கொள்ளத் தடுமாறும் ஆகையால் பெற்றோர் அவற்றை இருவாரங்களுக்குத் துணையிருந்து பராமரிக்கும். பெண்பறவைகள் அடுத்த பிடி முட்டைகளை இடச் சென்று விடும் பட்சத்தில் இந்தப் பொறுப்பைப் ஆண்பறவைகள் முன்னெடுத்துச் செய்யும். 

#3

செல்லப் பறவையாக மனிதர்களால் வளர்க்கப்பட்டாலும், விவசாயத்திற்குப் பாதகமாக இருப்பதால் அதே மனிதர்களால் கொல்லவும் பட்டுள்ளன. மேலும் வீட்டுப் பூனைகள், காகங்கள், பருந்து மற்றும் ஆந்தை போன்ற பறவைகள் இவற்றின் கொன்றுண்ணிகளாக உள்ளன. மனிதர்களாலும் உணவுக்காகக் கொல்லப் பட்டிருக்கின்றன.

மனிதக் குடியிருப்புகளோடு இணைந்து வாழும் இக்குருவிகள், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் இரு அமைப்புகளிலுமே பொருந்து வாழக் கூடியவை. ஆனால் மனிதர்களற்ற காடுகள், புல்வெளிகள், பாலைவனங்களைத் தவிர்த்து விடும். 

சிட்டுக்குருவி இனம் அழிந்து விடக் கூடாதெனும் விழிப்புணர்வோடு இப்போது பல அமைப்புகள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு வருடமும்  மார்ச் 20_ஆம் தேதி உலகச் சிட்டுக்குருவிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருவது நாம் அறிந்ததே.

*

[தகவல்கள்: இணையத்தில் சேகரித்துத் தமிழாக்கம் செய்துள்ளேன்.]

**

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (99)
பறவை பார்ப்போம் - பாகம்: (66)

12 கருத்துகள்:

 1. காக்க்கைகளே அருகி வருகின்றனவா?  அட ஆண்டவா...  இங்கு கண்ணில் பட்டுக்கொண்டுதான் இறுக்கிடற.  நீங்கள் சொல்வதுபோல சிட்டுக்குருவிகள்தான் கண்ணில் படுவதில்லை.  கடைசியாக ப்ரயாக்ராஜில் பார்த்தது.  சிட்டுக்குருவி பற்றிய விவரங்கள் சுவாரஸ்யம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெங்களூரின் நகர்ப்புறப் பகுதிகளில் காக்கைகள் அதிகம் உள்ளன. ஆனால் வொயிட்ஃபீல்ட் போன்ற புறநகர்ப் பகுதியில், அதுவும் இங்கே தோட்டங்களும் வயல்களும் சூழ்ந்த இடத்தில் காக்கைகள் அதிகம் வருவதில்லை. அவற்றிற்கான உணவு குப்பைக் கழிவுகளில்தாம் அதிகம் கிடைக்கின்றனவோ என்னவோ?

   கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. சிட்டுக்குருவி வந்து விட்டதா? மகிழ்ச்சி படங்கள் அழகு.
  தேடியது கிடைத்து விட்டால் மகிழ்ச்சிதான்.

  திரும்ப திரும்ப கூட்டை சரிசெய்து அங்கேயே கட்டும். இப்போது வந்து இருக்கும் அங்கு கூடு கட்ட.
  இங்கு நிறைய குருவிகள் வருகிறது. தினம் பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. சேகரித்தத் தகவல்களைப் பகிர்ந்துள்ளேன். கூட்டினைச் சரிசெய்து கட்டுவதை நேரில் தாங்கள் பார்த்திருப்பது அறிந்து மகிழ்ச்சி. நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 3. வேதனையான செய்தி. பிற இனங்கள் அழிவதானது, மனித இன அழிவிற்கான ஆரம்பப்புள்ளி.

  பதிலளிநீக்கு
 4. படங்கள் மற்றும் தகவல்கள் சிறப்பு. தலைநகரிலும் பறவைகள் அருகி விட்டன. புறாக்கள் மட்டுமே எண்ணிலடங்கா இலக்கத்தில்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதுவும் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் மேல் தளங்களில் புறாக்கள் எண்ணிலடங்காமல்தான் உள்ளன. பலருக்கும் புறாக்களின் கழிவுகளைச் சுவாசிப்பதனால் வீஸிங் பிரச்சனை ஏற்படுகிறது. இப்போது மாடப்புறாக்கள் ஒரு தொல்லையாகவே பார்க்கப்படுகிறது. நன்றி வெங்கட்.

   நீக்கு
 5. சிட்டுக்குருவிபற்றி யார் என்ன எழுதினாலும் படிக்க வந்துட வேண்டியதுதான்!

  பதிலளிநீக்கு
 6. சிட்டுக்குருவி.... சின்ன வயசுல, எங்க வீட்டுக்குள் எல்லாம் பறக்கும். எனக்குத்தான் மின்விசிறியில் (ஓடாத) அடி பட்டுக்குமோன்னு தோணும்.

  படங்கள் அழகு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம், சில நேரங்களில் வீட்டுப் பட்டாலைக்குள் வந்து விடும். வீட்டுக்குள் பறக்கும் போது மின் விசிறிகளை அணைத்து வைக்கும் நினைவு வருகிறது.

   மிக்க நன்றி.

   நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin