ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

எலிஸபெத் பேரட் பிரெளனிங்: குழந்தைகளின் அழுகுரல் (பாடல்கள் 8 & 9)


இயந்திரங்களே! சற்றேஅமைதியாக இருங்கள்!
குழந்தைகள் தங்கள் சுவாசத்தின் ஒலியை,
கண நேரமேனும் கேட்கட்டும் -
அன்றலர்ந்த இளந்தளிர்கள் மலர்வளையம் போல நின்று
ஒருவரின் கரங்களை மற்றவர் தொட்டுப் பார்க்கட்டும்!
கடவுள் தங்களுக்கு விதித்த, அளித்த வாழ்க்கை
இரக்கமற்ற இந்த உலோகச் சத்தம் மட்டுமே அல்ல
என்பதை உணரட்டும் -
ஓ சக்கரங்களே! உங்களில் வாழ்வதாக,
உங்களுக்கு அடியில் வாழ்வதாகக் கருதும் தமது எண்ணம்
தவறானது என தங்களின் ஆழ் மனதுக்கு, ஆன்மாவுக்கு நிரூபிக்கட்டும்!
அமைதியிலும், நாள் முழுவதிலும், இரும்புச் சக்கரங்கள் சுழன்றபடியே உள்ளன,
விதி வலியது என்பதாக.
சூரியனை நோக்கியவர்களாகக் கடவுள் கருதும் குழந்தைகளின் ஆன்மாக்களோ,
சுழன்று கொண்டேயிருக்கிறது இலக்கற்று, இருளில்.

ஓ என் சகோதரர்களே,
இரக்கத்திற்குரிய இளம் சிறார்களை
அண்ணாந்து பார்த்து ஆண்டவனிடம் வேண்டிக் கொள்ளச் சொல்லுங்கள்-
ஆசிர்வதிக்கப்பட்டவர், மற்ற எல்லோரையும் ஆசிர்வதிப்பவர்
ஆசிர்வதிப்பார் இவர்களையும் இன்னொரு நாளில், என.
பதிலளிப்பார்கள் குழந்தைகள், “ யார் கடவுளோ அவர்,
விரைந்து சுழலும் இரும்புச் சக்கரங்களால்
கலங்கி நிற்கும் எங்களுக்குச் செவிமடுக்கட்டும்!
நாங்கள் உரக்கத் தேம்பி அழுகையில்,
எங்களுக்கு அருகே வசிக்கும் மனித உயிர்கள் கடந்து செல்கின்றன
கவனிக்காமல், ஒரு வார்த்தை சொல்லாமல்!
அந்நியர்கள் கதவுக்கு அருகே பேசிக் கொள்வது
( சக்கரங்கள் சுழலும் சத்தத்தில்) எங்களுக்கும் கேட்பதில்லை;
ஒருவேளை கடவுளாக இருப்பாரோ, போற்றிப்பாடும் தேவதைகள் சூழ
எங்கள் அழுகையொலி கேட்டு வந்திருப்பாரோ?”

*

படங்கள் நன்றி: இணையம்
மூலம்: “The Cry of the Children
by Elizabeth Barrett Browning
இப்பாடல்களில் குழந்தைத் தொழிலாளர்களின் வேதனையையையும் அவலத்தையும்  வெளிக்கொண்டு வந்திருக்கிறார் கவிஞர். இங்கிலாந்தின்  தொழிற்சாலைகளிலும், நிலக்கரிச் சுரங்கங்களிலும் குழந்தைகள் பட்ட சிரமங்கள், சின்ன வயதிலேயே ஏற்பட்ட வியாதிகள், அதனால் பல குழந்தைகள் மரணித்த கொடுமை ஆகியவற்றைப் பேசுகின்ற இவை 1842_ஆம் ஆண்டில் Blackwoods பத்திரிகையில் வெளியாகி, பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புக்கான குரல்களை எழுப்பி 1844_ல் சட்டத் திருத்தங்களுக்கும் வித்திட்டிருக்கிறது.

[பாடல்கள் 10&11; 12&13.. விரைவில்..]

**

அதீதம் வெளியீடு.

4 கருத்துகள்:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin