Monday, October 31, 2011

ஈரம்

ரமாக்கி விட்டிருந்தாள் குழந்தை.

பார்த்துப் பார்த்து பால் பவுடர், ஃபீடிங் பாட்டில், ஜூஸ், ஒவ்வொரு முறை டயாப்பரை மாற்றும் முன்னும் போடவேண்டிய க்ரீம், பவுடர், மாற்றுடை இத்யாதிகள் எல்லாம் எடுத்துக் கூடையில் வைத்து விட்டு, செய்த காலை உணவை உண்ணக் கூட நேரமில்லாமல் இரயிலில் சாப்பிட்டுக் கொள்ளலாம் என டப்பர்வேர் டப்பாவில் அடைத்துக் கொண்டு, தூங்கிக் கொண்டிருந்த குழந்தையைத் தூக்க வந்தால்.., ஈரம் ஏற்படுத்திய அசெளகரியத்தைக் கூட வெளிப்படுத்தாமல் செப்புவாய் திறந்திருக்க அயர்வாகக் கிடந்தாள் செளம்யா.

ஏதோ உறுத்தத் தொட்டுத் தூக்கிய அனு பதறிப் போனாள். குழந்தையின் உடலில் சூடு தெரிந்தது.

“தூங்கிட்டுதானே இருக்கா? நல்லதாப் போச்சு. சட்டை கூட மாத்த வேண்டாம். டயாப்பரை போட்டு சீக்கிரமா கெளம்பும்மா, நேரமாகுது” அவசரப்படுத்தினான் பின்னால் வந்து நின்ற அருண்.

“காய்ச்சல் இருக்கறாப்ல தெரியுதே. டாக்டரிடம் காமிச்சா தேவல போலிருக்கே.”

ஒரு கணம் திகைத்தவன் "சரி அப்போ உன்னை டாக்டர் வீட்டில் விட்டுட்டு போறேன். நீ காமிச்சுட்டு க்ரஷ்ல விட்டுட்டு அதே ஆட்டோவுல ஸ்டேஷன் போயிடேன்.”

“இதுக்குதான் ஒரு நல்ல ஏற்பாடாகுற வரை வீட்லயே இருக்கேன்னேன்” என்றாள் தீனமாக.

“சரி சரி உடனே ஆரம்பிக்காத. அப்போ லீவைப் போடு.”

“லீவா? நான்தான் சொன்னேனே? வழியே இல்லை. அப்படின்னா இந்த வேலைய மறந்திடணும். நீங்க டாக்டரைப் பார்த்து காமிச்சு க்ரஷ்ல விட்ருங்களேன். காலையில் ஒரு ட்ரெயினிங் அட்டெண்ட் செய்யணும். அது முடிஞ்சு முக்கியமான ப்ராஜெக்ட் ஒண்ணு முடிச்சுக் கொடுக்க வேண்டி இருக்கு. சீக்கிரம் வரக் கூட பெர்மிஷன் கேட்க முடியுமா தெரியல.”

“நானா? என்ன விளையாடறியா? முன்ன காய்ச்சல் வந்தப்பல்லாம் உடனேயேவா டாக்டர்ட்ட ஓடுனோம்? ஏன் பயப்படறே? வந்து காட்டிக்கலாம். வழக்கமா கொடுக்கற சிரப்பைக் கொடுத்துடு. க்ரஷ்லயும் அடுத்தாப்ல எப்ப கொடுக்கணும்னு சொல்லிடலாம்.”

அடுத்த ஐந்து நிமிட வாதத்தில் அவள் பேச்சு எடுபடாத மாதிரி எல்லாவற்றுக்கும் ஒரு மாற்று வழி சொன்னவனை மீறும் வழி தெரியாமல் திகைத்தவள், இயக்கப்பட்டவள் போல் டெம்ப்பரேச்சர் செக் செய்து, மருந்தை ஊற்றிக் கொடுத்து, ஈரத்துணியை மாற்றி, டயாப்பரை மாட்டிக் குழந்தையைத் தோளில் சாய்த்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.

செள
ம்யாவுக்கு இப்போது நான்கு மாதமாகிறது. பால்குடி மாறவில்லை. குழந்தை பிறந்த ஓரிரு வருடங்கள் வீட்டில் இருந்திடவே அவளுக்கு விருப்பம். தனது திறமைக்கு மீண்டும் உடனே வேலை கிடைக்கும் எனும் நம்பிக்கை நிறைய இருந்தது. ஆனால் அருண் சம்மதிக்கவில்லை. பேசிப் பேசிக் கரைத்தான்.

தன் அம்மா கூடவந்து இருப்பாள் என்றான். அனுவின் சம்பளத்தையும் கணக்குப் போட்டுதான் கார் லோன் எடுத்ததாகவும், அடுத்தாற்போல் வீட்டு லோன் பற்றி சிந்தக்க வேண்டாமா என்றும், பிறந்திருப்பது பெண் குழந்தையாச்சே, ஓடிஓடி சேர்த்தால்தானே ஆச்சு என்றும் என்னென்னவோ சொன்னான். மூன்றாம் மாதம் முடிந்ததுமே அவள் மேலதிகாரியின் நம்பரை டயல் செய்து ஃபோனைக் கையில் திணித்தான்.

அவரது பேச்சு வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டாகவே இருக்கும். அவளது திறமைக்காக இன்னும் ஒருவருடம் வரை கூடச் சம்பளமில்லா விடுமுறை தந்து காத்திருக்கத் தயாராய் இருப்பதாக ஒரு துண்டு. இப்போதே வருவதானாலும் சரி, சேர்ந்த பிறகு குழந்தையைக் காரணம் காட்டி அடிக்கடி லீவு போடக் கூடாது என்பது ரெண்டாவது துண்டு. இவளும் தன் மாமியாரை நம்பி ‘அந்தப் பிரச்சனையே வராது. உடனேயே ஜாயின் பண்றேன் சார்’ என உறுதி அளித்தாள்.

சேரவேண்டிய நாள் நெருங்க நெருங்க மனதுக்குள் பயம் கவ்வியது. புகுந்த வீட்டிலிருந்து ஒரு தகவலும் இல்லை. அருணிடம் கேட்டால் ‘அதெல்லாம் வந்திடுவா அம்மா. அண்ணாவே அழைச்சு வந்து விடுறேன்னிருக்கார்’ என்றான்.

மாமனார் காலமாகி ஆண்டுகள் பல ஆகியிருக்க, மூத்தமகனுடன் மருமகள் அன்பில் நனைந்தபடி பேரக் குழந்தைகளைப் பேணிப் பிரியமாய் பார்த்துக் கொண்டு இருப்பதாகவே தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் மாமியார், இவளைப் பெண் பார்க்க வந்த போது. அந்தக் குழந்தைகளைப் பிரிந்து இங்கு வருவாராமா? ஒன்றும் புரியவில்லை. அருணுக்குத் தெரியாமல் ஊருக்குத் தொலைபேசிய பொழுது அன்பொழுக நலம் விசாரித்தாரே தவிர வருவதாய் ஒருவார்த்தை சொல்லவில்லை.

அருண் மேலான சந்தேகம் வலுத்தது. பிரசவம் முடிந்த இரண்டாம் மாதமே பிறந்த வீட்டிலிருந்த அவளைத் தன்னோடு அழைத்துக் கொள்வதில் தீவிரம் காட்டியவனாயிற்றே. அப்பா கூட “பாசக்கார மாப்பிள்ளம்மா. பாரு உன்னய கொழந்தய பிரிஞ்சு இருக்க முடியாம அவஸ்தை படுறாரு” என சொன்ன போது இவளும் எப்படி வெள்ளந்தியாய் நம்பிக் கிளம்பி வந்து விட்டிருந்தாள்!

திட்டமிட்டே தன்னைத் தயார் செய்திருக்கிறான் என்பதை உணர்ந்த போது மனம் வலித்தது. ‘அம்மாவுக்கு திடீர்னு ஆஸ்துமா ஜாஸ்தியாயிட்டாம். பழகுன டாக்டர் இல்லாம இங்கு வந்து இருக்க பயப்படுறா. ஹை பி பி வேற படுத்துதாம்’ எங்கோ பார்த்தபடி சொன்னவன் இரண்டு தெரு தள்ளி இருக்கிற குழந்தைகள் காப்பகத்தின் வசதிகளை மடமடவென அடுக்கினான். ‘மேலதிகாரியிடம் சொன்ன தேதியில் சேர்ந்து விடலாம், அம்மா கொஞ்ச காலம் பொறுத்து கட்டாயம் வருவா. பேத்தி மேல் கொள்ளை ஆசை’ என்றான்.

ஒருமாதம் ஓடி விட்டது வேலைக்குச் செல்ல ஆரம்பித்து.

கார் காப்பகத்தின் வாசலில் நின்றிருந்தது. அதை நடத்துகிற காந்தாதான் இப்போது அனுவுக்குக் குலசாமி.

தூங்கிய குழந்தையை கைமாற்றியபடி விவரம் சொன்ன போது குலசாமி அதை ரசிக்கவில்லை. “ஏம்மா, நான்தான் சேர்க்கும் போதே சொல்லியிருக்கேனே. குழந்த உடம்புக்கு முடியலேன்னா கொண்டு விடாதீங்கன்னு. அதுவும் இது ரொம்ப சிறுசு.”

“மருந்து கொடுத்திருக்கேங்க. திரும்ப 4 மணிநேரம் கழிச்சு இந்த சிரப்பைக் கொடுங்க. நான் சீக்கிரமா வரப் பார்க்கிறேன்.”

நின்றால் மேலே ஏதும் கேட்டு விடுவாளா எனப் பயந்து இவள் விடைபெற்றால், அதையே அருண் இன்னொரு விதத்தில் தனக்கு செய்வதாய் பட்டது. அதிக நெரிசல் இல்லாத சாலையிலும் ரொம்ப டென்ஷனாக ஓட்டுவதான பாவனையுடன் விரட்டி விரட்டிச் சென்று ஸ்டேஷன் வாசலில் இவளை உதிர்த்து விட்டு “இடையிடையே ஃபோனைப் போட்டுக் கேட்டுக்கோ” எனக் கட்டளை வேறு.

புறநகரில் இருக்கும் அலுவலகத்துக்கு இப்படி அரக்கப் பரக்க இரயிலைப் பிடிப்பதெல்லாம் பழகிப் போன ஒன்றுதான் என்றாலும் என்றைக்குமில்லாத ஒரு கிலி. சுயபச்சாதாபம், குற்றஉணர்வு எல்லாம் தாண்டி குழந்தையைப் பற்றிய கவலையால் கட்டி எடுத்து வந்த காலை உணவைப் பிரிக்கவே பிடிக்கவில்லை.

ஹாய் அனு! குட் மார்னிங். யு லுக் சிம்ப்ளி க்ரேட் இன் திஸ் யெல்லோ சுடிதார்யா” லேட்டாகி விட்டதோ என ட்ரெயினிங் ஹாலை நோக்கி வேகவேகமாக நடந்த போது பின்னாடியே உற்சாகக் குரல் கொடுத்தபடி வந்தாள் அலுவலகத் தோழி ஸ்வேதா.

மூன்று மணி நேர ட்ரெயினிங். நடுவே எங்கேனும் யாரும் பேசினால் மேலாளருக்குப் பிடிக்காது. ஏகப்பட்ட பணம் செலுத்தி அழைத்து வந்த ட்ரெய்னர் சொல்வதை அப்படியே அனைத்துப் பேரும் உள்வாங்கி செயல்பட்டு கம்பெனியை நாட்டின் நம்பர் ஒன்னாக்கி விட வேண்டுமெனக் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டபடி கவனித்துக் கொண்டிருப்பார். கலந்துரையாடலில் அத்தனை பேரின் பங்கும் இருந்தே ஆக வேண்டும். பள்ளி கல்லூரி பருவக் கெடுபிடிகளே தேவலாம்.

மொபைலை அனைவரும் சைலன்டில் போட்டிருந்தனர். அவ்வப்போது கைப்பையிலிருந்து எடுத்துப் பார்க்கக் கூட இவளுக்குத் தயக்கமாய் இருந்தது. இதில் எங்கே ரெஸ்ட் ரூமுக்குச் செல்ல? நெஞ்சுப் பாரம் அதிகரித்தது. தாய்ப்பாலை எடுத்து அலுவலக குளிர்சாதனப் பெட்டியில் சேகரித்து வைத்து, வீட்டுக்கு எடுத்துச் செல்வதாய் சிலர் சொல்லி பத்திரிகைகளில் படித்திருக்கிறாள். சீனியர் சிலரிடம் கேட்டபோது ‘நம்ம கம்பெனியிலா. அடப் போம்மா’ என்றதற்கு என்ன அர்த்தம் என்றுதான் இவளுக்குப் புரியவில்லை.

கூட்டம் முடிந்த வேளையில் மொபைலுக்கு ஒரு காலும் வந்திக்கவில்லை. சற்று நிம்மதியானது மனது. காந்தாம்மாவை அழைத்தாள்.

அடுத்த டோஸ் மருத்து கொடுத்து விட்டதாகவும் சூடு குறைந்திருப்பதாகவும் சொன்னவர், குழந்தை பாட்டிலையே வாயில் வாங்க மறுத்து விட்டதாகவும், தம்ளரில் ஊற்றிப் போக்குக் காட்டிக் கொஞ்சம் புகட்டி விட்டதாகவும் குண்டைத் தூக்கிப் போட்டார்.

‘கொஞ்சம் என்றால் எத்தனை அவுன்ஸ்?’ இவள் கேட்க முடியாது. கேட்டால் நாளைக்கே வேறு இடம் பார்க்க வேண்டி வரலாம்.

“ரொம்ப தேங்க்ஸ்மா” என்றாள்.

பாவம் அம்முச் செல்லம். உடம்புக்கு முடியாது போனால் அம்மாவின் கதகதப்பான அணைப்புத்தான் வேண்டும் அவளுக்கு.

காலையிலும் சாப்பிடாதது பசித்தது. வழக்கமாக கேண்டீனுக்கு செல்லுபவள் நேரத்தை மிச்சம் பண்ண, கொண்டு வந்த காலை உணவையே அவசரமாய் ஐந்து நிமிடங்களில் சாப்பிட்டு விட்டு வேலையை ஆரம்பித்து விட்டாள். அடுத்த அரை மணியில் காந்தாம்மாவின் அழைப்பு. சிணுங்கலாக இருந்த குழந்தையின் அழுகை சமாதானங்களுக்கு மசியாமல் பெரிதாகி விட்டதாகவும், தூங்கப் போட முயலுவதாகவும் சொன்னாள். ‘கிளம்பி வந்தால் பிள்ளைக்கு நல்லது’ என்றாள்.

கலகலப்பாகக் காலை வணக்கம் சொல்லி நேசம் பாராட்டிய ஸ்வேதாவின் நினைவு வர, தேடி ஓடினாள். நிலைமையை விளக்கி ‘ப்ராஜெக்டை கொஞ்சம் முடிச்சுக் கொடுக்க முடியுமா’ கெஞ்சலாகக் கேட்ட போது “என்னப்பா என் வேலையே இன்னும் முடியலையே. இதையும் சேர்த்து செய்யணும்னா நான் பத்து மணி வரை இருக்க வேண்டியதுதான். சீக்கிரமா செய்யத்தான் பாரேன்” எனக் கை விரித்தாள். முதல் காலாண்டின் இறுதி நெருங்கிக் கொண்டிருக்க, வேலைப் பளு எல்லோர் தோளிலும்தான்.

ஏமாந்த மனதைத் தேற்றியபடி அந்த செக்க்ஷனை விட்டு வெளியே வந்தவளுக்கு ‘எதற்கும் அவளையே வேறு நண்பர் யாரிடமாவது கேட்டுப் பார்க்கச் சொல்லலாமோ’ எனும் எண்ணம் எழ, திரும்பி நடந்தாள். பிரசவ விடுமுறைக்கு பிறகு அலுவலகம் நுழைந்த போது பல புதிய முகங்கள். சிலரை இன்னும் சரியாக அறிமுகம் ஆகி இருக்கவில்லை.

ஸ்வேதாவின் இருக்கையை நெருங்கிய போது இவள் பின்னால் வந்து நிற்பது தெரியாமல் யாரையோ அலைபேசியில் அழைத்துச் சொல்லிக் கொண்டிருந்தாள்: “இவல்லாம் எதுக்கு வேலைக்கு வர்றா? பிள்ளையப் பாத்துட்டு வீட்டோட கெடக்கலாமில்ல கொஞ்ச காலம். எல்லாம் வயித்தெரிச்சல். எங்கே அதுக்குள்ள நான் அவள ஓவர்டேக் செஞ்சு ப்ரோமஷனைத் தட்டிட்டுப் போயிடுவனோன்னு..”

மேலே நின்று கேட்கப் பிடிக்காமல் நகர்ந்து வந்த அனு, மனதின் அத்தனை சக்தியையும் ஒன்று திரட்டி, கவனத்தைக் கூட்டிப் பிடித்து ஒரு பிசாசைப் போல வேலையை செய்து முடித்தாள். அதைக் காட்டியே வழக்கத்துக்கு மாறாக ஒருமணி முன்னால் கிளம்ப அனுமதி வாங்க முடிந்தது.

ரயில் நிலையத்தில் கூட்டம் இருக்கவில்லை. வண்டி வந்தது. நெரிசல் நேரம் இல்லையாதலால் பல பெட்டிகள் காலியாகக் கிடக்க, ஒன்றிலேறி சன்னலோர இருக்கையைப் பிடித்தாள். மற்ற இருக்கைகளும் நிரம்பலாயின.

மனம் ஆசுவாசமானது. ‘அம்முச் செல்லம், இன்னும் அரைமணி பொறுத்துக்கோடா. அம்மா வந்துட்டே இருக்கேன்டா’ என்றது.

ஸ்டேஷனை விட்டுக் கிளம்பிய ஒருசில நொடிகளிலேயே ஏதோ காரணத்தால் வண்டி நின்று விட்டது. ‘அஞ்சு நிமிசமாகுமாம்’ விரல்களைக் குவித்து விரித்துத் தகவல் சொன்னபடியே சன்னலைக் கடந்து சென்றார், என்னவென்று பார்க்க இறங்கிய சிலரில் ஒருவர். பக்கத்துத் தண்டவாளத்தில் சரளைக் கற்கள் குவிக்கப் பட்டு வேலை நடந்து கொண்டிருந்தது.

அதன் அருகிலிருந்த மரத்தின் இறக்கமான கிளையிலிருந்து பருத்திச் சேலையில் தொட்டிலொன்று தொங்கிக் கொண்டிருந்தது. உள்ளே குழந்தை. தொட்டிலுக்குக் கீழே தண்ணீர் புட்டி, மருந்து பாட்டில், கிலுகிலுப்பை, கிளிப்பச்சை நிறத்தில் ஒன்றரையடி உயர பிளாஸ்டிக் சிறுமி பொம்மை.


குழந்தை சிணுங்க ஆரம்பிக்க வேலையிலிருந்த பெண்மணி ஓடிச் சென்று “உலுலாயி உலுலாயி” என இழுத்து இழுத்து ஆட்டவும் அமைதியானது. அந்த ஆட்டத்திலேயே விட்டுவிட்டு அம்மாக்காரி வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள். ஆடி ஆடி தொட்டில் நிற்கவும் நெளிந்து வளைந்து பெரிய குரலெடுத்து அழ ஆரம்பித்தது குழந்தை.

“யாரம்மா அது? புள்ளயக் கதறவிட்டுக்கிட்டு வேலையப் பாக்குறது. போம்மா போயி புள்ளயக் கவனி”

எங்கிருந்தோ ஓங்கி ஒலித்த குரல் மேற்பார்வையாளருடையதாக இருக்க வேண்டும். மண்வெட்டியால் சரளைகளைத் தட்டுக்குத் தள்ளிக் கொண்டிருந்த பெண்மணி பதறி அதை அப்படியே போட்டுவிட்டு ஓடினாள் குழந்தையிடம்.

யூரோப் பாரளுமன்றக் கூட்டத்துக்கு அதன் உறுப்பினரான இத்தாலியப் பெண்மணி லிஸியா தன் கைக்குழந்தையை நெஞ்சோடு தொட்டிலிட்டு அணைத்து எடுத்துச் செல்ல முடிகிறது. உழைக்கும் மகளிருக்கான உரிமைகளைப் பற்றிய மசோதாவிற்காக வாதாடவும் வாக்களிக்கவும் வந்தவரின் இச்செயலைப் பார்த்து உலகம் பூரிக்கிறது. பாராட்டுகிறது. நடைமுறையில் எத்தனை அலுவலகங்களில் இது சாத்தியமாகிறது? அதை சாத்தியப் படுத்தும் கருணை அந்த வீதியோரத்து உழைக்கும் மக்களிடத்திலாவது இருப்பதைப் பார்த்து வியப்பும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது அனுவுக்கு.

கூடவே ‘இத்தனை வேண்டாம் சாமீ. ஒரு அனுசரணை, புரிதல் இருந்தால் போதுமே தன் போன்றோருக்கு’ என்கிற ஏக்கம் தவிர்க்க முடியாததாய் இருந்தது.

பெட்டிக்கு நேர் எதிரே என்பதால் அனைவரின் கவனமும் அங்கேயே இருந்த வேளையில் அழைத்த அலைபேசியில் காப்பகத்தின் எண் மிளிர்ந்தது. “என்னம்மா நீ. கெளம்பியாச்சா இல்லியா? பிள்ள விடாம அழுறா. ஒரு அக்கற வேண்டாம்?”

காந்தாம்மாவின் குரல் அந்த நிசப்தமான சூழலில் அனைவருக்கும் கேட்கும்படி ஒலித்தது வேறு தர்மசங்கடத்தை அதிகரிக்க, “நாலு மணிக்கே கெளம்பிட்டேங்க. வழியிலே என்னமோ பிரச்சனை. இரயில் நின்னு போச்சு. பொறப்பட்டிரும் இப்ப. நீங்க திரும்பப் பாலைக் கரைச்சுக் கொடுத்துப் பாருங்களேன்” என்றாள்.

‘அது தெரியாதா எங்களுக்கு’ என்பது போல மறுமுனை கடுப்பாகத் தொடர்பைத் துண்டித்துக் கொண்டது.

மொபைலை பைக்குள் போட்டுவிட்டு நிமிர்ந்த போது தொழிலாளப் பெண்மணி குழந்தையை மார்போடு அணைத்தபடி மரத்துக்குப் பின்னால், அமர இடம் தேடிக் கொண்டிருந்தாள்.

‘கொடுத்து வச்ச அம்மா. அதைவிடக் கொடுத்து வச்ச...’

இவளது சிந்தனை முழுமை பெறுமுன்..,

“குழந்தை எத்தனை கொடுத்து வச்சிருக்கு பாத்தீங்களா?” என்றார் எதிர் இருக்கையிலிருந்த மனிதர் பக்கத்தில் இருந்தவரிடம்.

பதிலுக்கு அந்த நல்ல மனிதர் “ஆமாங்க. என்ன பாவம் பண்ணுச்சுங்களோ சில குழந்தைங்க. பொறந்த சில நாளுல காப்பகத்துல விட்டுட்டு கெளம்பிடறாங்க வேலைக்கு. ஒய்யாரக் கொண்டையாம்.. தாழம்பூவாம்.. உள்ளே இருக்குமாம்...” என முடிக்காமல் நமுட்டாகச் சிரித்தார் ஜாடையாக இவளைப் பார்த்தபடி.

கோபமாய் ஏதோ சொல்ல வாயெடுத்தவள் அப்படியே அமுங்கிப் போனாள். காலையில் இருந்து நேர் கொள்ள நேர்ந்த பல மனிதர்களின் உள்ளங்களில் காணக் கிடைக்காத ஈரம், அங்கு சிதறப்பட்ட வார்த்தைகள் தந்த அதே வலி மிகுந்த வீரியத்துடன் வெளிப்பட்டு குழந்தைக்கும் இல்லாமல் நெஞ்சை நனைத்து விட்டிருக்க, வேகம் பிடித்து விரையத் தொடங்கிய வண்டிக்கு ஈடாகப் போட்டிபோட்டுக் கொண்டு காற்றில் படபடத்த துப்பட்டாவை நடுங்கிய விரல்களால் இழுத்து இறுகப் பற்றிக் கொண்டு, உலர்ந்த கண்களால் மெளனமாகச் சன்னல் வழியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.
***

வம்சி சிறுகதைப் போட்டிக்காக.

படம் நன்றி: கருவாயன் என்ற சுரேஷ்பாபு
http://www.flickr.com/photos/30041161@N03/5864024764/in/photostream


***

மு.வி. நந்தினியின் பார்வையில்.. “ஈரம்” ..

75 comments:

 1. வாழ்த்துக்கள் ராமலக்‌ஷ்மி மேடம்..

  ReplyDelete
 2. //‘இத்தனை வேண்டாம் சாமீ. ஒரு அனுசரணை, புரிதல் இருந்தால் போதுமே தன் போன்றோருக்கு’ என்கிற ஏக்கம் தவிர்க்க முடியாததாய் இருந்தது.

  /////

  அருமை...பெண்ணின் மன ஓட்டம் வரிகளில் தெறிக்கிறது. வாழ்வி்ன் நிதர்சனம் தெரிகிறது வாழ்த்துகள் உங்களுக்கு!

  ReplyDelete
 3. அக்கா...
  சிறுகதை அருமை..
  நல்ல கரு.
  உங்களுக்கே வெற்றி உரித்தாகட்டும்....

  ReplyDelete
 4. மனப் பதைப்போடு கதை முழுவதும் நகர்கிறது.

  என்னதான் காலத்தின் கோலமோ அருமையான வரிகளால் இதயத்தைக் கட்டிப் போட்டு விட்டீர்கள் ராமலக்ஷ்மி.

  அந்தப் பெண் வீட்டுக்குச் சீக்கிரம் போகட்டும்.
  வெற்றிக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. எடுத்துக்கொண்ட கருவும் அமைத்த களமும் அருமை

  வெற்றி பெற வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. ஒரு தாயின் திணறல்களை அப்படியே பதிவிட்டு வாசகரையும் உருக வைத்து விட்டீர்கள்.

  ReplyDelete
 7. அங்கங்கு ஈரம் தென்படுகிறது... பாவம் அவளைச் சுற்றி மட்டும் ஈரமற்ற பூமி... வறண்டிருக்கிறது... மிகவும் நல்லக் கதை... மனதைத் தொடுகிறது...வாழ்த்துக்கள்... வெற்றி கிட்டட்டும்...

  ReplyDelete
 8. இன்னும் முழுமையாய் பெண்களுக்கான உரிமை கிடைக்கவில்லை " இந்த கதை சமூக அவலத்தின் ஒரு சிறு உதாரணம்.தாய்க்காக ஒரு பெண்ணின் குரல் !

  ReplyDelete
 9. நெகிழ வைத்த கதை ராமலெக்ஷ்மி.. வாழ்த்துக்கள் வெற்றி பெற..:)

  ReplyDelete
 10. அருமை. பணம் சேர சேர ஈரமும் வற்றிவிடுவதை பார்க்க முடிகிறது. அதோடு நிறைய சம்பாதிப்பதனாலேயே, அதீத திறமை இருப்பதனாலேயே - மகளீரை அழ விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete
 11. ஒரு அருமையான கதையை கையிலெடுத்து அழகான கதையை படைத்து மனதினை நெகிழச்செய்து விட்டீர்கள்!வாழ்த்துகக்ள்!

  ReplyDelete
 12. அருமை.
  மனசை நெகிழ வைக்கிறது.
  இருவரும் வேலைக்குப் போகும் கைக்குழந்தையை வைத்திருப்பவர்கள் அவசியம் படிக்க வேண்டும்.
  என்ன சொல்ல? பெருமூச்சு தான் வருகிறது.

  ReplyDelete
 13. ஒரு பச்சிளம் குழந்தையின் தாயின் தவிப்பை நன்கு உணர முடிகிறது.

  பாவம் அந்தக்குழந்தை.

  பணத்தேவைகளும் பேராசைகளும் தாய் சேய் பாசத்தையே தடுப்பதை சகித்துக் கொள்ளவே முடியவில்லை.

  பணம் தான் வாழ்க்கையில் முக்கியம் என்று நினைப்பவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டிருக்கவே வேண்டாம்.

  நல்லதொரு பதிவு. பகிர்வுக்கு நன்றிகள். பரிசு பெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. நல்ல கருத்துள்ள இயல்பான கதை,அருமையாக எழுதியிருக்கீங்க ராமலஷ்மி.வெற்றி பெற வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 15. இயல்பான நடையில் அருமையான கதை. வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக அலுவலகத்துலயே காப்பகம் கொண்டாந்தா தேவலாம்..

  ReplyDelete
 16. ஒரு பெண்ணின் மனநிலையில் அருமையாக நகர்த்தி முடிவும் சொல்லியிருக்கிறீர்கள்.வெற்றிக்கு வாழ்த்துகள் அக்கா !

  ReplyDelete
 17. படித்த உடன் கண்களில் ஈரம். அணுவுக்கும், முக்கியாமாக அருணுக்கும் நெஞ்சில் ஈரம் சீக்கிரம் வரட்டும். வெற்றி பெற வாழ்த்துகள். அருமையான விழிப்புணர்வுக் கருவி வைத்து கதை.

  ReplyDelete
 18. அருமையான கதை ..வெற்றிபெற வாழ்த்துக்கள்

  ReplyDelete
 19. //வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக அலுவலகத்துலயே காப்பகம் கொண்டாந்தா தேவலாம்..//

  நான் சொல்ல நினைத்தும் அதுவே. நீங்க களத்தில் குதிச்சிடீன்களா? வெற்றி உங்களுக்கு தான் !!

  ReplyDelete
 20. ரொம்ப அருமையா இருக்கு ராமலக்ஷ்மி.

  வெற்றி பெற வாழ்த்துகின்றேன்.

  ReplyDelete
 21. நல்லதொரு கதைக் கருவைத் தேர்ந்தேடுத்து, மனம் நெகிழும் வண்ணம் அழகாய் சொல்லி விட்டீர்கள். உணர்வுகளில் தைத்தது. அருமை. வெற்றிபெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 22. கதை அருமை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...தமிழ்மணம் 7

  ReplyDelete
 23. வாழ்த்துக்கள் ராமலக்‌ஷ்மி மேடம்

  ReplyDelete
 24. அவ்ளோ உணர்வு பூர்வமா இருக்கு அக்கா.. அருமையான கரு.

  வெற்றிக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 25. அருமையாக எழுதியிருக்கிறீர்கள்!
  படித்து முடித்தபோது மனம் பாரமாகிவிட்டது.

  தோழியின் பெயர் முதலில் ஸ்வேதா பிறகு ஸ்னேகாவாக மாறி உள்ளதே.. ராமலக்‌ஷ்மி

  ReplyDelete
 26. அருமை.
  வெற்றி பெற வாழ்த்துகள்.

  ReplyDelete
 27. அருமையான கதை....இன்றைய சராசரி தம்பதியரின் வாழ்க்கையை அப்படியே பிரதிபலித்திருக்கிறீர்கள்....இது ஒரு சிறுகதையாக முற்றுப்புள்ளி வைத்துவிடமுடியாது...இது தொடர்கதையே.....

  வாழ்த்துக்கள் இராமலக்ஷ்மி :)

  ReplyDelete
 28. ஒரு தாயின் தவிப்போடு வாசிப்பவர்களையும் பயணிக்கவைக்கிறது!
  வார்த்தைகள் காட்சிகளாக தெரிகின்றன, வெற்றிபெற வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 29. நம்ம ஊர் வாழ்க்கை ரொம்ப ஸ்ட்ரெஸ்ஃபுல்லா மாறிக்கொண்டு வருவதை உங்க கதையில் பார்க்கிறேன். Having a child and bringing her/him up is a BIG RESPONSIBILITY these days. It is not an easy task anymore! Lot of people dont go for a child here in US because they know that they cant deal with such situations. They are not immature. They are rather WISE unlike this "Arun"!

  So, one need to be very careful when they want to have a child and want to work as well. There is going to be lot pressure from work. It is not uncommon to have colleagues like Swetha too!

  Support from grand parents can help a lot. If they are unavailable then there is lot of sacrifice need to come from BOTH parents (Anu and Arun).

  When the child is sick, usually day-care wont take the child here. Baby-sitter wont take that responsibility either. Because what if something "really bad" happens to the child?? They dont want to be blamed for any big loss!

  One of the parents must stay at home when the child has a temperature. That is where the marital problem starts between couple and it can get worse and eventually can lead to divorce.

  ரொம்ப சீரியஸான ஒரு பிரச்சினையை அட்ரெஸ் பண்ணி இருக்கீங்க!

  போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 30. வருண் பிட்டுப் பிட்டு வைத்திருக்கிறார். எனக்கும் இதே கருத்துத்தான்; ஆனால் சரியாக வெளிப்படுத்தத் தெரியவில்லை.

  நன்றி வருண்,

  வாழ்த்துகள் ராமலக்ஷ்மி வெற்றிக்கு.

  நன்றி.

  ReplyDelete
 31. //யூரோப் பாரளுமன்றக் கூட்டத்துக்கு அதன் உறுப்பினரான இத்தாலியப் பெண்மணி லிஸியா தன் கைக்குழந்தையை நெஞ்சோடு தொட்டிலிட்டு அணைத்து எடுத்துச் செல்ல முடிகிறது. உழைக்கும் மகளிருக்கான உரிமைகளைப் பற்றிய மசோதாவிற்காக வாதாடவும் வாக்களிக்கவும் வந்தவரின் இச்செயலைப் பார்த்து உலகம் பூரிக்கிறது. பாராட்டுகிறது. நடைமுறையில் எத்தனை அலுவலகங்களில் இது சாத்தியமாகிறது? அதை சாத்தியப் படுத்தும் கருணை அந்த வீதியோரத்து உழைக்கும் மக்களிடத்திலாவது இருப்பதைப் பார்த்து வியப்பும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது அனுவுக்கு.//

  உழைக்கும் மகளிர் எதிர் கொள்ளும் பிரச்சினைகளை அழகாய் படம் பிடித்து காட்டி இருக்கிறீர்கள்.

  அலுவலகத்தில் குழந்தைகள் காப்பகம் இருந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும்.

  கூடிய விரைவில் இப்படி வசதிகள் ஏற்பட வாழ்த்துக்கள்.

  வெற்றிப்பெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 32. /*//யூரோப் பாரளுமன்றக் கூட்டத்துக்கு அதன் உறுப்பினரான இத்தாலியப் பெண்மணி லிஸியா தன் கைக்குழந்தையை நெஞ்சோடு தொட்டிலிட்டு அணைத்து எடுத்துச் செல்ல முடிகிறது. உழைக்கும் மகளிருக்கான உரிமைகளைப் பற்றிய மசோதாவிற்காக வாதாடவும் வாக்களிக்கவும் வந்தவரின் இச்செயலைப் பார்த்து உலகம் பூரிக்கிறது. பாராட்டுகிறது. நடைமுறையில் எத்தனை அலுவலகங்களில் இது சாத்தியமாகிறது? அதை சாத்தியப் படுத்தும் கருணை அந்த வீதியோரத்து உழைக்கும் மக்களிடத்திலாவது இருப்பதைப் பார்த்து வியப்பும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது அனுவுக்கு.//
  */
  நல்ல கதை... யதார்த்தமான நிகழ்வுகள் தான். தீர்வென்று ஒன்று வந்தால் நன்றாக இருக்கும்

  ReplyDelete
 33. நல்லா வந்திருக்கு ராமி! ஃப்ளோ சூப்பர், சலிப்பு தட்டாமல் சல் என்று போகிறது. எல்லாரும்
  சொன்னா மாதிரி கருவும், அடுத்து எப்படி கொண்டு போவீர்கள் என்ற பதைபதைப்பும் கதையை
  அருமையாய் ஆக்கியுள்ளது. வெற்றி பெற வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 34. அன்பின் ஈரம் ,,
  நல்லா இருக்கு ராமல்க்‌ஷ்மி வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 35. மணிஜி...... said...
  //வாழ்த்துக்கள் ராமலக்‌ஷ்மி மேடம்..//

  நன்றி மணிஜி.

  ReplyDelete
 36. ஷைலஜா said...
  ***//‘இத்தனை வேண்டாம் சாமீ. ஒரு அனுசரணை, புரிதல் இருந்தால் போதுமே தன் போன்றோருக்கு’ என்கிற ஏக்கம் தவிர்க்க முடியாததாய் இருந்தது./////

  அருமை...பெண்ணின் மன ஓட்டம் வரிகளில் தெறிக்கிறது. வாழ்வி்ன் நிதர்சனம் தெரிகிறது வாழ்த்துகள் உங்களுக்கு!//***

  கதையின் மையக்கருவை சரியாக எடுத்துக்காட்டிப் பாராட்டியிருப்பதற்கு நன்றி ஷைலஜா.

  ReplyDelete
 37. சே.குமார் said...
  //அக்கா...
  சிறுகதை அருமை..
  நல்ல கரு.//

  நன்றி குமார்.

  ReplyDelete
 38. T.V.ராதாகிருஷ்ணன் said...
  //வாழ்த்துகள்//

  நன்றி டி வி ஆர் சார்.

  ReplyDelete
 39. அன்புடன் அருணா said...
  //பூங்கொத்துப்பா!//

  நலமா அருணா? மிக்க நன்றி.

  ReplyDelete
 40. வல்லிசிம்ஹன் said...
  //மனப் பதைப்போடு கதை முழுவதும் நகர்கிறது.

  என்னதான் காலத்தின் கோலமோ அருமையான வரிகளால் இதயத்தைக் கட்டிப் போட்டு விட்டீர்கள் ராமலக்ஷ்மி.

  அந்தப் பெண் வீட்டுக்குச் சீக்கிரம் போகட்டும்.
  வெற்றிக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.//

  மிக்க நன்றி வல்லிம்மா.

  ReplyDelete
 41. ஆமினா said...
  //எடுத்துக்கொண்ட கருவும் அமைத்த களமும் அருமை

  வெற்றி பெற வாழ்த்துக்கள்//

  வருகைக்குக் கருத்துக்கும் நன்றி ஆமினா.

  ReplyDelete
 42. ரிஷபன் said...
  //ஒரு தாயின் திணறல்களை அப்படியே பதிவிட்டு வாசகரையும் உருக வைத்து விட்டீர்கள்.//

  மிக்க நன்றி ரிஷபன்.

  ReplyDelete
 43. குமரி எஸ். நீலகண்டன் said...
  //அங்கங்கு ஈரம் தென்படுகிறது... பாவம் அவளைச் சுற்றி மட்டும் ஈரமற்ற பூமி... வறண்டிருக்கிறது... மிகவும் நல்லக் கதை... மனதைத் தொடுகிறது...வாழ்த்துக்கள்... வெற்றி கிட்டட்டும்...//

  வருகைக்குக் கருத்துக்கும் மிக்க நன்றி நீலகண்டன்.

  ReplyDelete
 44. mangai said...
  //இன்னும் முழுமையாய் பெண்களுக்கான உரிமை கிடைக்கவில்லை " இந்த கதை சமூக அவலத்தின் ஒரு சிறு உதாரணம்.தாய்க்காக ஒரு பெண்ணின் குரல் !//

  மிக்க நன்றி மங்கை.

  ReplyDelete
 45. தேனம்மை லெக்ஷ்மணன் said...
  //நெகிழ வைத்த கதை ராமலெக்ஷ்மி.. வாழ்த்துக்கள் வெற்றி பெற..:)//

  நன்றி தேனம்மை.

  ReplyDelete
 46. தமிழ் உதயம் said...
  //அதீத திறமை இருப்பதனாலேயே - மகளீரை அழ விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். வாழ்த்துகள்.//

  ஒரு வகையில் உண்மை. வருகைக்குக் கருத்துக்கும் நன்றி ரமேஷ்.

  ReplyDelete
 47. ஸாதிகா said...
  //ஒரு அருமையான கதையை கையிலெடுத்து அழகான கதையை படைத்து மனதினை நெகிழச்செய்து விட்டீர்கள்!வாழ்த்துகக்ள்!//

  மிக்க நன்றி ஸாதிகா.

  ReplyDelete
 48. Rathnavel said...
  //அருமை.
  மனசை நெகிழ வைக்கிறது.
  இருவரும் வேலைக்குப் போகும் கைக்குழந்தையை வைத்திருப்பவர்கள் அவசியம் படிக்க வேண்டும்.
  என்ன சொல்ல? பெருமூச்சு தான் வருகிறது.//

  மிக்க நன்றி சார்.

  ReplyDelete
 49. வை.கோபாலகிருஷ்ணன் said...
  //பணம் தான் வாழ்க்கையில் முக்கியம் என்று நினைப்பவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டிருக்கவே வேண்டாம்.

  நல்லதொரு பதிவு. பகிர்வுக்கு நன்றிகள். பரிசு பெற வாழ்த்துக்கள்.//

  இருவருக்கும் வேலைக்குப் போவதென்பது தவிர்க்கமுடியாததாகி வரும் உலகில் உலகம் சற்று அனுசரணையோடு பெண்ணின் பிரச்சனைகளை அணுக வேண்டும். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க vgk.

  ReplyDelete
 50. asiya omar said...//நல்ல கருத்துள்ள இயல்பான கதை,அருமையாக எழுதியிருக்கீங்க ராமலஷ்மி.வெற்றி பெற வாழ்த்துக்கள்...//

  மிக்க நன்றி ஆசியா.

  ReplyDelete
 51. அமைதிச்சாரல் said...
  //இயல்பான நடையில் அருமையான கதை. வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக அலுவலகத்துலயே காப்பகம் கொண்டாந்தா தேவலாம்..//

  ஒருசில அலுவலகங்களில் மட்டும் என்றில்லாமல் இது கட்டாயமாக்கப்பட்டால் நன்றாக இருக்கும். நன்றி சாந்தி.

  ReplyDelete
 52. ஹேமா said..
  //ஒரு பெண்ணின் மனநிலையில் அருமையாக நகர்த்தி முடிவும் சொல்லியிருக்கிறீர்கள்.வெற்றிக்கு வாழ்த்துகள் அக்கா !//

  நன்றி ஹேமா.

  ReplyDelete
 53. ஸ்ரீராம். said...
  //படித்த உடன் கண்களில் ஈரம்....வெற்றி பெற வாழ்த்துகள். அருமையான விழிப்புணர்வுக் கருவி வைத்து கதை.//

  மிக்க நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 54. goma said...
  //அருமையான கதை ..வெற்றிபெற வாழ்த்துக்கள்//

  மிக்க நன்றி.

  ReplyDelete
 55. மோகன் குமார் said...
  ***//வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக அலுவலகத்துலயே காப்பகம் கொண்டாந்தா தேவலாம்..//

  நான் சொல்ல நினைத்தும் அதுவே. //***

  நன்றி மோகன்குமார்.

  ReplyDelete
 56. துளசி கோபால் said...
  //ரொம்ப அருமையா இருக்கு ராமலக்ஷ்மி.

  வெற்றி பெற வாழ்த்துகின்றேன்.//

  மிக்க நன்றி மேடம்.

  ReplyDelete
 57. கணேஷ் said...
  //நல்லதொரு கதைக் கருவைத் தேர்ந்தேடுத்து, மனம் நெகிழும் வண்ணம் அழகாய் சொல்லி விட்டீர்கள். உணர்வுகளில் தைத்தது. அருமை. வெற்றிபெற வாழ்த்துக்கள்.//

  மிக்க நன்றி கணேஷ்.

  ReplyDelete
 58. சசிகுமார் said...
  //கதை அருமை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்..//

  நன்றி சசிகுமார்.

  ReplyDelete
 59. r.v.saravanan said...
  //வாழ்த்துக்கள் ராமலக்‌ஷ்மி மேடம்//

  மிக்க நன்றி சரவணன்.

  ReplyDelete
 60. சுசி said...
  //அவ்ளோ உணர்வு பூர்வமா இருக்கு அக்கா.. அருமையான கரு.

  வெற்றிக்கு வாழ்த்துகள்.//

  நன்றி சுசி.

  ReplyDelete
 61. meenamuthu said...
  //அருமையாக எழுதியிருக்கிறீர்கள்!
  படித்து முடித்தபோது மனம் பாரமாகிவிட்டது.

  தோழியின் பெயர் முதலில் ஸ்வேதா பிறகு ஸ்னேகாவாக மாறி உள்ளதே.. ராமலக்‌ஷ்மி//

  நன்றி மீனா. சுட்டிக்காட்டியதும் திருத்தி விட்டேன்:)!

  ReplyDelete
 62. Kanchana Radhakrishnan said...
  //அருமை.
  வெற்றி பெற வாழ்த்துகள்.//

  நன்றி மேடம்.

  ReplyDelete
 63. Nithi Clicks said...
  //அருமையான கதை....இன்றைய சராசரி தம்பதியரின் வாழ்க்கையை அப்படியே பிரதிபலித்திருக்கிறீர்கள்....இது ஒரு சிறுகதையாக முற்றுப்புள்ளி வைத்துவிடமுடியாது...இது தொடர்கதையே.....

  வாழ்த்துக்கள் இராமலக்ஷ்மி :)//

  சரியாகச் சொன்னீர்கள். நன்றி நித்தி.

  ReplyDelete
 64. நம்பிக்கைபாண்டியன் said...
  //ஒரு தாயின் தவிப்போடு வாசிப்பவர்களையும் பயணிக்கவைக்கிறது!
  வார்த்தைகள் காட்சிகளாக தெரிகின்றன, வெற்றிபெற வாழ்த்துக்கள்!//

  மிக்க நன்றி நம்பிக்கை பாண்டியன்.

  ReplyDelete
 65. அமைதி அப்பா said...
  //பணமா பாசமா?//

  விடை கிடைக்காமல் உலகில் உலவும் கேள்வி. நன்றி அமைதி அப்பா.

  ReplyDelete
 66. வருண் said...
  //நம்ம ஊர் வாழ்க்கை ரொம்ப ஸ்ட்ரெஸ்ஃபுல்லா மாறிக்கொண்டு வருவதை உங்க கதையில் பார்க்கிறேன். .............. One of the parents must stay at home when the child has a temperature. That is where the marital problem starts between couple and it can get worse and eventually can lead to divorce.

  ரொம்ப சீரியஸான ஒரு பிரச்சினையை அட்ரெஸ் பண்ணி இருக்கீங்க!

  போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!//

  குழந்தை நலமின்றி இருக்கும்போது எங்குமே பொறுப்பேற்கத் தயங்குவார்கள்தான். பெரியவர்களும் வந்து இருக்க முடியாத சூழலில் தம்பதியர் புரிதலுடன் செயல்பட வேண்டியது மிக அவசியமான ஒன்றாகிறது. அருண் போல் பொய் நம்பிக்கை கொடுத்து தன் காரியமே கண்ணாக இருப்பவரும், குடும்ப அமைப்பு உடைந்து விடக் கூடாதென பொறுத்துப் போகும் அனு போன்றோரும் இங்கு அதிகம். என்றேனும் அனு உறுதியான முடிவெடுக்கும் கட்டம் வந்தே தீரும். அது நல்ல மாற்றங்களுடன் இருக்க வேண்டுவோம்.

  விரிவான கருத்துக்கு மிக்க நன்றி வருண்.

  ReplyDelete
 67. geethasmbsvm6 said...
  //வருண் பிட்டுப் பிட்டு வைத்திருக்கிறார். எனக்கும் இதே கருத்துத்தான்; ஆனால் சரியாக வெளிப்படுத்தத் தெரியவில்லை.

  நன்றி வருண்,

  வாழ்த்துகள் ராமலக்ஷ்மி வெற்றிக்கு.

  நன்றி.//

  மிக்க நன்றி மேடம்.

  ReplyDelete
 68. கோமதி அரசு said...

  //உழைக்கும் மகளிர் எதிர் கொள்ளும் பிரச்சினைகளை அழகாய் படம் பிடித்து காட்டி இருக்கிறீர்கள்.

  அலுவலகத்தில் குழந்தைகள் காப்பகம் இருந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும்.

  கூடிய விரைவில் இப்படி வசதிகள் ஏற்பட வாழ்த்துக்கள்.

  வெற்றிப்பெற வாழ்த்துக்கள்.//

  மிக்க நன்றி கோமதிம்மா.

  ReplyDelete
 69. அமுதா said...
  //நல்ல கதை... யதார்த்தமான நிகழ்வுகள் தான். தீர்வென்று ஒன்று வந்தால் நன்றாக இருக்கும்//***

  ஆம் அமுதா. என் ஆதங்கமும் அதுவே. மிக்க நன்றி.

  ReplyDelete
 70. ramachandranusha(உஷா) said...
  //நல்லா வந்திருக்கு ராமி! ஃப்ளோ சூப்பர், சலிப்பு தட்டாமல் சல் என்று போகிறது. எல்லாரும்
  சொன்னா மாதிரி கருவும், அடுத்து எப்படி கொண்டு போவீர்கள் என்ற பதைபதைப்பும் கதையை
  அருமையாய் ஆக்கியுள்ளது. வெற்றி பெற வாழ்த்துக்கள்!//

  நீண்ட நாள் கழித்தான தங்கள் வருகையும் கருத்தும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்றன:)! நன்றி உஷா.

  ReplyDelete
 71. முத்துலெட்சுமி/muthuletchumi said...
  ***/அன்பின் ஈரம் ,,
  நல்லா இருக்கு ராமல்க்‌ஷ்மி வாழ்த்துக்கள்../***

  ஆம், அது வறண்ட உள்ளங்களில் பாயட்டுமாக. மிக்க நன்றி முத்துலெட்சுமி!

  ReplyDelete
 72. திரட்டிகளில் வாக்களித்த நட்புகளுக்கு என் நன்றி.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin