Tuesday, May 5, 2009

'நல்வாழ்வு தந்தாயே நீயே!' -அன்னையர் தின வாழ்த்துக்கள்!

முந்தைய தலைமுறையின் வழி காட்டுதலுடனும் ஆசிகளுடனும் அடுத்த தலைமுறையை உருவாக்கி வரும் அன்னையரா நீங்கள்? நன்று. நல்ல அம்மாக்களாய் நாம் இன்று மிளிரக் காரணமாயிருக்கும் நம் அம்மாக்களைப் போற்றி வாழ்த்துவதோடு இந்த அன்னையர் தினம் முடிந்து விடாதிருக்க, சிந்தனைக்கு வித்திடும் சில விஷயங்களை முன் வைக்க விரும்புகிறேன்.

'போகிற இடத்தில் பெண் குழந்தைகள் பக்குவமாய் நடந்து கொள்ள வேண்டுமே'யெனப் பார்த்துப் பார்த்து எல்லா வேலைகளும் பழக்கி வளர்க்கும் அம்மாக்களும் உண்டு. 'படிக்கிற குழந்தை நம் வீட்டிலிருக்கும் வரை இஷ்டம் போலிருக்கட்டுமே' என நினைத்து, தானே எல்லாம் இழுத்துப் போட்டு செய்யும் அம்மாக்களும் உண்டு. கனிவை அணையாக் கனலாய் மனதினுள் மறைத்து வைத்துக் கொண்டு கண்டிப்பாகவே இருக்கும் அம்மாக்களின் மத்தியில் கல்லூரிப் பருவத்திலும் செல்லம் கொஞ்சிக் கொஞ்சி வாயில் சாப்பாட்டைத் திணித்து அனுப்பி வைக்கும் அம்மாக்களும் உண்டு.

நாம் எப்படி வளர்க்கப் பட்டிருந்தாலும் அப்போதெல்லாம் தெரியாத அம்மாவின் அருமை, புகுந்த வீட்டிற்கு போனதும் கூட அவ்வளவாக உறைக்காத பெருமை நாமும் ஒரு தாயாகும் வேளையில் எப்படிப் புரிந்து போகிறது? குழந்தை வளரும் ஒவ்வொரு தருணத்திலும் சரி, குழந்தைக்காக இன்பச் சிரமங்களை எதிர் கொள்ளும் பொழுதுகளிலும் சரி, தத்தமது அம்மாக்களை நினைக்காதவரே இருக்க முடியாது. ‘ஓரிரு குழந்தைகளை வளர்ப்பதற்கே இப்படி. நீ எப்படி அம்மா எங்கள் அத்தனை பேரினை அப்படிப் பார்த்துக் கொண்டாய்?’ கேட்காதவர் இருக்க முடியாது.

அப்படியெல்லாம் நம்மை வளர்த்த அம்மா அப்பாவுக்கும், இன்னொரு பெற்றோராய் மதிக்கப்பட வேண்டிய மாமியார் மாமனாருக்கும் நாம்(மகள் மகன் இருவரும்தான்) செய்ய வேண்டியது என்ன? அவர்கள் 'க்ரேட்' எனப் புரிந்து கொள்ளுதல் மட்டுமேயா? அவர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமை, செலுத்த வேண்டிய நன்றி என்றெல்லாம் சொன்னால் அவை உறவுகளுக்குள் அர்த்தமற்றவையாக, ஏன் அதிகபட்ச வார்த்தைகளாகவும் கூடத் தோன்றிடக் கூடும். ஆகையால் பாசத்துடன் உள்ளன்புடன், அவர்களே கூட பிரச்சனையாய் கருதாத சில விஷயங்களை நாம் இன்னொரு கோணத்திலிருந்து யோசித்துப் பார்க்கலாமே.

நமக்கு பிரசவம் பார்க்க எந்த வயதிலும் எந்த உடல் நிலையிலும் ஓடி வந்து உடனிருந்து உதவுகின்ற அம்மாக்கள், வேறெந்த இக்கட்டாயினும் கேட்காமலே கைகொடுக்கும் அம்மாக்கள் எல்லா சமயங்களிலும் அப்படி இருந்தேயாக வேண்டும் என்கிற எதிர்பார்ப்புகளை விட வேண்டும். அவர்கள் பெற்றோராய் நமக்கு ஆற்ற வேண்டிய எல்லாக் கடமைகளையும் செய்த பின்னரும், இருக்கும் கடைசி காலம் வரை நமக்காகவே வாழ வேண்டும். நம்மைச் சுற்றியே அவர்கள் வாழ்க்கைப் பின்னப் பட்டிருக்க வேண்டும் என்கிற எண்ணங்களைத் தவிர்த்திட வேண்டும். அவர்களுக்கென்றிருக்கக் கூடிய சில ஆசைகள் ஆர்வங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளும் நிம்மதியான சூழலை உருவாக்கித் தர வேண்டும்.

'இரண்டு வாரம் நான் கான்ஃப்ரன்ஸுக்கு வெளிநாடு போகிறேனம்மா வந்து குழந்தைகள்கூட இரேன்' என்கிற நாம் திரும்பி வந்த பின் அவர்களை உட்கார வைத்துக் கவனிப்போம். அம்மா கையால் செய்து சாப்பிட ஆசைப்படுவதில் தவறில்லைதான். ஆனால் அவர்க்ளுக்கு பிடித்ததை நம் கையால் செய்து கொடுத்துப் பார்த்துக் கொண்டால் அதில் கிடைக்கும் மகிழ்ச்சி பன்மடங்காகுமில்லையா? சிறுவயதில் எத்தனை சுற்றுலாவுக்கு நம்மை அழைத்துச் சென்றிருப்பார்கள்? அவர்கள் பார்க்காத இடங்களுக்கு அழைத்துச் சென்று காட்டி வருவோம். நேரமின்மையாலோ ‘இனி எதற்கு’ என்ற எண்ணத்தாலோ விட்டு விடும் சின்னச் சின்னத் தேவைகளையும் கூட நாம் கவனமாய்க் கண்டு பிடித்துப் பூர்த்தி செய்வோம்.

இந்த தலைமுறையில் வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் அதிகம்தான். வீட்டில் நமது குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் முழுப் பொறுப்பையும் ஒரு போதும் நம் பெற்றோர்களிடம் தருவது சரியாகாது. தவிர்க்க முடியாத அப்படிப்பட்ட சூழல்களில் எல்லா வேலைகளுக்கும் உதவிக்கு ஆட்கள் வைத்துக் கொடுப்பது மிகவும் அவசியம் (ஓரிரு குடும்பங்களில் விளக்கேற்றி வைத்த மாதிரியும் ஆயிற்று). பெரியவர்கள் மேற்பார்வை மட்டுமே செய்கிற மாதிரியாக இருக்க வேண்டும். அதே போல ஓய்வு பெற்ற அப்பாக்களில் சிலர் வெளி வேலைகளை விரும்பி ஏற்றுச் செய்வார்கள். அவர்களாக விருப்பட்டாலன்றி நாமாக 'வீட்டில்தானே இருக்கிறார்கள்' என எந்த வேலையையும் அவர்கள் மேல் திணிப்பது சரியல்ல. அவர்கள் வயதினை எப்போதும் கருத்தினில் கொள்ள வேண்டும்.
சரி அதே வயதினைக் காரணம் காட்டி பெற்றோரை வீட்டோடு வைத்துக் கொள்ள நினைப்பதும் சரியல்ல. கோவிலுக்கோ உறவினர் நண்பர் வீடுகளுக்கோ பொது இடங்களுக்கோ அடிக்கடி சென்று வர பிரியப் படலாம். குறிப்பாக விசேஷ வீடுகள் சென்றால் பலநாள் பார்க்காதவரை எல்லாம் பார்க்கலாம் எனும் அதீத ஆர்வம் இருக்கும். ‘இந்த தள்ளாத வயதில் பேசாமல் வீட்டோடு இருங்களேன்’ என்றிடாமல் முடிந்தால் நாமே அழைத்துச் செல்லலாம் அல்லது தக்க வசதி செய்து கொடுத்து அனுப்பி வைக்கலாம். அந்த மாதிரியான சந்திப்புகள் அவர்கள் உள்ளத்தை எவ்வளவு தூரம் ஆரோக்கியமாக வைக்கிறது என்பது யோசித்துப் பார்த்தால்தான் புரியும்.

அம்மாக்கள் என்றைக்கும் அம்மாக்களாகவே இருக்கிறார்கள் தன்னலமற்ற பாசத்தைப் பொழிந்து கொண்டு. அதை நாம் பயன்படுத்திக் கொள்கிற மாதிரி எந்த சமயத்திலும் நடந்திடக் கூடாது. நாமும் ஆகி விட்டோம் பெற்றோராய். நமது தன்னலமற்ற பாசம் நம் குழந்தைகளை நோக்கி மட்டுமேயன்றி நம்மை ஆளாக்கியவர்கள் மேலும் இருக்கட்டும். நாங்கள் எவரும் அப்படியல்ல என்றால் அதைவிட சந்தோஷம் வேறில்லை. ஆனால் இதிலிருக்கும் ஏதேனும் ஒரு குறிப்பாவது எவருக்கேனும் தேவைப்படுவதாய் இருக்கலாமென்ற எண்ணத்திலேதான் இங்கு பதிந்திருக்கிறேன்.

அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்!"அம்மாக்களின் வலைப்பூக்களில்" சந்தனமுல்லை விடுத்திருந்த அழைப்புக்காக எழுதியது.

நேற்றுடன் எனது வலைப்பூவுக்கு ஆயிற்று வயது ஒன்று.
59 comments:

 1. அம்மாவுக்கென்றே ஒரு பதிவு. பாராட்டுக்கள் அக்கா.

  ReplyDelete
 2. இந்த முறை நீங்களேதான் முதல்:)! நன்றி ஆனந்த்.

  ReplyDelete
 3. நேற்றுடன் எனது வலைப்பூவுக்கு ஆயிற்று வயது ஒன்று.
  //

  ஓராண்டில் சாதனைகள் எராளம். உங்கள் மகத்தான சாதனைக்கு எனது வாழ்த்துக்கள் அக்கா.


  விகடனில் இடம் பெற்றது. தரமான கவிதைகள், சிறந்த புகைப்படங்கள், சிறந்த சமுதாய படைப்புகள் எல்லாம் முத்துசாரத்தில் முத்துக்களாக அலங்கரித்து இருக்கிறது.


  உங்களின் வெற்றி பயணம் தொடரட்டும்...தொடரட்டும்...

  ReplyDelete
 4. ராமலக்ஷ்மி said...
  இந்த முறை நீங்களேதான் முதல்:)! நன்றி ஆனந்த்.
  //

  டெலிபதி என்று நினைக்கிறேன். ரொம்ப சந்தோஷம்.

  ReplyDelete
 5. அம்மாக்கள் என்றைக்கும் அம்மாக்களாகவே இருக்கிறார்கள்
  //

  தாய்மைக்கு ஈடு உலகத்தில் எதுவும் இல்லை. நடமாடும் தெய்வம் அம்மா மட்டுமே.

  ReplyDelete
 6. முதல் வருட நிறைவு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!

  அன்னையின் பெருமைகள் மீண்டும் ஒரு முறை நினைத்து, உணர்ந்து மகிழ வைக்கும் வரிகள்!

  ReplyDelete
 7. ராமலக்ஷ்மி கலக்கலா பதிவு போட்டுட்டீங்க!

  அம்மாவின் அன்பிற்கு ஈடு இணை எதுவும் இல்லை..அதை உண்மையாக புரிந்து கொண்டவர்களுக்கே புரியும்

  //அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்!//

  உங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்

  என்னோட (அம்மா) பதிவும் விரைவில் :-)

  //நேற்றுடன் எனது வலைப்பூவுக்கு ஆயிற்று வயது ஒன்று.//

  அப்படியா! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!! வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
 8. கடையம் ஆனந்த் said...

  //தாய்மைக்கு ஈடு உலகத்தில் எதுவும் இல்லை. நடமாடும் தெய்வம் அம்மா மட்டுமே.//

  அழகாய் சொல்லிவிட்டீர்கள் ஆனந்த்.

  //விகடனில் இடம் பெற்றது. தரமான கவிதைகள், சிறந்த புகைப்படங்கள், சிறந்த சமுதாய படைப்புகள் எல்லாம் முத்துசாரத்தில் முத்துக்களாக அலங்கரித்து இருக்கிறது.

  உங்களின் வெற்றி பயணம் தொடரட்டும்...தொடரட்டும்...//

  முதல் வருகைக்கும் முதல் வாழ்த்துக்கும் மிக்க நன்றி! உங்களது இந்தப் பாராட்டு தொடர்ந்து என்னை பொறுப்புடன் செயல்பட வைக்கும்.

  ReplyDelete
 9. ஆயில்யன் said...

  //முதல் வருட நிறைவு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!//

  வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ஆயில்யன்:)!

  //அன்னையின் பெருமைகள் மீண்டும் ஒரு முறை நினைத்து, உணர்ந்து மகிழ வைக்கும் வரிகள்!//

  அன்னையின் பெருமையும் அருமையும் எப்போது நினைத்தாலும் மகிழ வைப்பவை.

  ReplyDelete
 10. //‘இந்த தள்ளாத வயதில் பேசாமல் வீட்டோடு இருங்களேன்’ என்றிடாமல் முடிந்தால் நாமே அழைத்துச் செல்லலாம் அல்லது தக்க வசதி செய்து கொடுத்து அனுப்பி வைக்கலாம்.//

  நல்லதொரு பதிவு...


  உங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்

  //நேற்றுடன் எனது வலைப்பூவுக்கு ஆயிற்று வயது ஒன்று.//

  உங்களின் வெற்றிப் பயணம் தொடரட்டும்...வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 11. அன்னையர் தின வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 12. கிரி said...
  //ராமலக்ஷ்மி கலக்கலா பதிவு போட்டுட்டீங்க!//

  நன்றி கிரி.

  //அம்மாவின் அன்பிற்கு ஈடு இணை எதுவும் இல்லை..அதை உண்மையாக புரிந்து கொண்டவர்களுக்கே புரியும்//

  அம்மாவின் மீது அளவற்ற பாசம் வைத்திருக்கும் உங்கள் கருத்து வெறென்னவாக இருக்க முடியும்?

  //உங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்//

  எனது வாழ்த்துக்களையும் உங்கள் அம்மாவுக்கும் சமீபத்தில் அம்மாவாகிய உங்கள் மனைவிக்கும் மற்றும் சகோதரிகளுக்கும் தெரிவித்திடுங்கள்:)!

  //என்னோட (அம்மா) பதிவும் விரைவில் :-)//

  ஆவலுடன் காத்திருக்கிறோம். இயலுமாயின் அன்னையர் தினமாகிய பத்தாம் தேதிக்குள் பதிவிடப் பாருங்களேன்.

  *** //நேற்றுடன் எனது வலைப்பூவுக்கு ஆயிற்று வயது ஒன்று.//

  அப்படியா! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!! வாழ்த்துக்கள்!!!****

  நன்றி நன்றி நன்றி, தொடரும் உங்கள் ஊக்கத்துக்கு:)!

  ReplyDelete
 13. வாழ்த்துகள் ஒரு வருடம் பூர்த்தியானதுக்கு.
  ஒரு வருடம்தானா அது!!
  அருமை அருமை.
  அர்த்தம் பொதிந்த பதிவு. எப்படி இவ்வளவு அழகாகச் சிந்திருக்கிறீர்கள் ராமலக்ஷ்மி.

  ஆழ்ந்த கருத்து. இன்னும் இன்னும் மேலும்மேலும் இனிய வெற்றிகளைச் சந்திக்க வாழ்த்துகள். உங்கள் எழுத்தைப் படிக்கப் படிக்க என்னவெல்லாமோ சிந்திக்கத் தோன்றுகிறது.அத்தனையும் நல்ல எண்ணங்கள். மீண்டும் அன்பு வாழ்த்துகளுடன்

  ReplyDelete
 14. த.ஜீவராஜ் said...
  //நல்லதொரு பதிவு...//

  பதிவின் கருத்துக்களுடன் உடன் படுவதில் மகிழ்ச்சி.

  //உங்களின் வெற்றிப் பயணம் தொடரட்டும்...வாழ்த்துக்கள்...//

  தொடரும் உங்கள் போன்றோரின் ஊக்கத்துடனே தொடர்கிறது என் பயணமும், வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 15. இய‌ற்கை said...

  //அன்னையர் தின வாழ்த்துக்கள்..//

  உங்களுக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 16. வல்லிசிம்ஹன் said...

  //வாழ்த்துகள் ஒரு வருடம் பூர்த்தியானதுக்கு.
  ஒரு வருடம்தானா அது!!//

  சரியாக ஒரு வருடம்தான் வல்லிம்மா!

  //அருமை அருமை.
  அர்த்தம் பொதிந்த பதிவு. எப்படி இவ்வளவு அழகாகச் சிந்திருக்கிறீர்கள் ராமலக்ஷ்மி.//

  நெடுநாட்களாக சிந்தனையில் இருந்த சில விஷயங்கள் சந்தனமுல்லையின் அழைப்பினால் எழுத்து வடிவாயிற்று.

  //ஆழ்ந்த கருத்து. இன்னும் இன்னும் மேலும்மேலும் இனிய வெற்றிகளைச் சந்திக்க வாழ்த்துகள்.//

  உங்கள் ஆசிகளுக்கு நன்றி.

  //உங்கள் எழுத்தைப் படிக்கப் படிக்க என்னவெல்லாமோ சிந்திக்கத் தோன்றுகிறது.அத்தனையும் நல்ல எண்ணங்கள். மீண்டும் அன்பு வாழ்த்துகளுடன்//

  தொடரும் உங்கள் ஊக்கத்துக்கு என்றும் கடமைப் பட்டிருக்கிறேன்.

  ReplyDelete
 17. என் அன்பு பிரண்ட்!

  ஆச்சா 1 வருடம்!என் அன்பு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 18. நல்ல அறிவுரையோடு வந்திருக்கும் வாழ்த்து பதிவு.. ராமலக்ஷ்மி

  ReplyDelete
 19. அபி அப்பா said...

  //என் அன்பு பிரண்ட்!

  ஆச்சா 1 வருடம்!என் அன்பு வாழ்த்துக்கள்!//

  ஆமாமாம், ஆயிற்று ஒரு வருடம்:)!
  அன்பான வாழ்த்துக்களுக்கு என் நன்றி!

  ReplyDelete
 20. முத்துலெட்சுமி/muthuletchumi said...

  //நல்ல அறிவுரையோடு வந்திருக்கும் வாழ்த்து பதிவு.. ராமலக்ஷ்மி//

  நன்றி முத்துலெட்சுமி. அறிவுரை என்பதை விடவும் பரிந்துரை என்றிடலாம். அதைவிடவும் மனதில் தோன்றியவற்றின் பகிர்தல் என்றால் இன்னும் comfortable ஆக இருக்கிறது:)!

  ReplyDelete
 21. அம்மா வாழ்கன்னு சொல்லாம்னு பார்த்தா எலெக்‌ஷன் நேரம்...தப்பா அர்த்தமாயிருமோன்னு பயமாயிருக்கு

  :)))

  ReplyDelete
 22. //நேற்றுடன் எனது வலைப்பூவுக்கு ஆயிற்று வயது ஒன்று.

  //

  அக்கா நீங்கள் மட்டுமல்ல....நான்,தாமிரா,பரிசல்,நர்சிம்,கார்க்கி,ராப்,வடகரைவேலன்,அனுஜன்யா,வால்பையன் என பலருக்கும் இந்த மாதம் முதல் ஆண்டு. நமக்கு நாமே வாழ்த்து சொல்வோம் :))

  ReplyDelete
 23. அன்னையர் தின வாழ்த்துக்கள். ராமலக்ஷ்மி :-)

  ***நேற்றுடன் எனது வலைப்பூவுக்கு ஆயிற்று வயது ஒன்று.***

  முத்துச்சரத்திற்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 24. thankns and wish u the same. beautiful words. tannalamatra ammaakkal.

  ReplyDelete
 25. valthukkal

  arumayana pathivirkum

  ungal sathanaikalukkum

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 26. எம்.எம்.அப்துல்லா said...

  //அம்மா வாழ்கன்னு சொல்லாம்னு பார்த்தா எலெக்‌ஷன் நேரம்...தப்பா அர்த்தமாயிருமோன்னு பயமாயிருக்கு

  :)))//

  :))))!

  ReplyDelete
 27. எம்.எம்.அப்துல்லா said...

  //அக்கா நீங்கள் மட்டுமல்ல....நான்,தாமிரா,பரிசல்,நர்சிம்,கார்க்கி,ராப்,வடகரைவேலன்,அனுஜன்யா,வால்பையன் என பலருக்கும் இந்த மாதம் முதல் ஆண்டு.//

  அப்படியா? இத்தனை நல்ல பதிவர்களை [ஹி, என்னையும் சேர்த்துத்தான்] தமிழ் கூறும் வலையுலகத்துக்கு அளித்திருக்கிறதா கடந்த வருட மே மாதம்?

  //நமக்கு நாமே வாழ்த்து சொல்வோம் :))//

  கண்டிப்பாக! வாழ்த்திக் கொள்வோம்:). எல்லோருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 28. வருண் said...

  //அன்னையர் தின வாழ்த்துக்கள். ராமலக்ஷ்மி :-)//

  நன்றி வருண்.

  //முத்துச்சரத்திற்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்!//

  முத்துச் சரத்துக்கு தொடரும் தங்கள் வருகைக்கும், பதிவுகளை விரிவாக அலசிடும் தங்கள் கருத்துக்களுக்கும் இப்போது என் நன்றிகளைச் சொல்லிக் கொள்கிறேன்.

  ReplyDelete
 29. குப்பன்_யாஹூ said...

  //thankns and wish u the same. beautiful words. tannalamatra ammaakkal.//

  நன்றி குப்பன்_யாஹூ. அம்மாக்கள் என்றும் தன்னலமற்றவர்கள்தான்!

  ReplyDelete
 30. Mummu paththi nalla kavidhai irukkumnu ododi vandhen. ;)

  liked the content :)

  ReplyDelete
 31. sakthi said...

  //valthukkal

  arumayana pathivirkum

  ungal sathanaikalukkum

  வாழ்த்துக்கள்//

  உங்கள் நல்வாழ்த்துக்களுக்கு நன்றி சக்தி.

  ReplyDelete
 32. மிக அருமையான பதிவு மேடம். நிறைய சிந்திக்க வைக்கும் விஷயங்கள் சொல்லி இருக்கிறீர்கள். நன்றி

  உங்களுக்கு ஓராண்டு நிறைவிற்கு வாழ்த்துகள்

  ReplyDelete
 33. அன்னையர் தின வாழ்த்துக்கள்

  // அம்மாக்கள் என்றைக்கும் அம்மாக்களாகவே இருக்கிறார்கள் தன்னலமற்ற பாசத்தைப் பொழிந்து கொண்டு.//

  உண்மைதாங்க.

  ஆனாப்பாருங்க ஏனோ முதியோர் இல்லம் கொஞ்சம் அதிகமாயிட்டு வருது ((-:

  // நேற்றுடன் எனது வலைப்பூவுக்கு ஆயிற்று வயது ஒன்று.//

  வாழ்துக்கள்.தொடர்ந்து வெற்றி நடைபோடுங்க.

  இந்த பதிவுல கவிதாயினி மிஸ்சிங்கா :-))

  ReplyDelete
 34. SurveySan said...

  //Mummu paththi nalla kavidhai irukkumnu ododi vandhen. ;)//

  அவ்வப்போது கட்டுரையாகவும் எண்ணங்களைப் பகிர்ந்திடலாம் என்றுதான்:)!

  //liked the content :)//

  பாருங்க எந்த வடிவில் இருந்தாலும் content-தான் முக்கியம் என சொல்லாம சொல்லிட்டீங்க. நன்றி:)!

  ReplyDelete
 35. அமுதா said...

  //மிக அருமையான பதிவு மேடம். நிறைய சிந்திக்க வைக்கும் விஷயங்கள் சொல்லி இருக்கிறீர்கள். நன்றி//

  எல்லோருக்கும் தெரிந்தவைதான் இருந்தாலும், ஒருசில குறிப்புகள் ஒருசிலரை புதிதாக சிந்திக்க வைக்கும் என்கிற நோக்கத்தில் பதிந்தேன் அமுதா.

  //உங்களுக்கு ஓராண்டு நிறைவிற்கு வாழ்த்துகள்//

  மிக்க நன்றி.

  ReplyDelete
 36. கார்த்திக் said...

  //அன்னையர் தின வாழ்த்துக்கள்//

  நன்றி கார்த்திக்.

  //ஆனாப்பாருங்க ஏனோ முதியோர் இல்லம் கொஞ்சம் அதிகமாயிட்டு வருது ((-://

  வருத்தத்துக்குரிய இவ்விஷயம் இப்போது சகஜமானதாகி வருகிறது:(!

  //வாழ்துக்கள்.தொடர்ந்து வெற்றி நடைபோடுங்க.//

  மறுபடியும் என் நன்றிகள்.

  //இந்த பதிவுல கவிதாயினி மிஸ்சிங்கா :-))//

  பாருங்க, சர்வேசனுக்கு பதில் சொல்லுகையில் உங்களைத்தான் நினைத்தேன். சரியாக அதே நொடியில் நீங்கள் எனக்குப் பின்னூட்டமிட்டிருக்கிறீர்கள்:)! நீங்கள்தானே ஒருமுறை ‘எப்போதும் கவிதையாகவே தருகிறீர்களே, அக்கா’ என முறையிட்டிருந்தீர்கள், நினைவிருக்கிறதா:)?

  ReplyDelete
 37. தொடர்ந்து விகடனில் தங்களின் பதிவு வெளிவருவதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஏனெனில் தங்களின் பதிவின் தரம். இந்தவகையில் இந்தப்பதிவும் விரைவில் விகடனில் வரும். ஓராண்டு கடந்த தங்களின் வலைப்பதிவு பயணம் மேலும் சிறக்க வாழ்த்துகள்!
  அன்னையர் தின வாழ்த்துகள்!

  ReplyDelete
 38. அன்னையர் தின வாழ்த்துக்கள் தெரிவித்த
  அன்னைக்கு,
  முதல் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 39. சூப்பரா வந்திருக்கு பிரண்ட் இந்த பதிவு!

  எனக்கு தான் அம்மாவை பத்தி எழுத உட்காந்தா ஒன்னுமே எழுத வரமாடேங்குது!

  பேசாம நான் அம்மா மடியில் படுத்திருக்கும் போட்டோவை போட்டுடவா? அந்த போட்டோவே பல பதிவுக்கு சமம்!

  ReplyDelete
 40. நமக்காகவே வாழ வேண்டும். நம்மைச் சுற்றியே அவர்கள் வாழ்க்கைப் பின்னப் பட்டிருக்க வேண்டும் என்கிற எண்ணங்களைத் தவிர்த்திட வேண்டும். அவர்களுக்கென்றிருக்கக் கூடிய சில ஆசைகள் ஆர்வங்களை நிறைவேற்றிக் கொள்ளும் நிம்மதியான சூழலை உருவாக்கித் தர வேண்டும்.

  ரொம்ப சரியா சொல்லியிருக்கீங்க ராம் மேடம், ஆனா இத மட்டும் என்னால செய்யவே முடியல, இன்னும் அம்மா அப்படின்னு எல்லாத்தையும் அட்ஜஸ்ட் பண்ணிக்கனும்னு நெனைக்கிறென். இந்தப் புத்தி எப்ப என்னவிட்டு தொலையும்னு தெரியல. இனிமேவாவது மாத்திக்கனும். புரியுது,, ஆனா முடியல..


  வயதொன்று ஆன உங்கள் ப்லாகிற்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 41. //நாங்கள் எவரும் அப்படியல்ல என்றால் அதைவிட சந்தோஷம் வேறில்லை//
  நிச்சயமாக..

  ஆறறிவு ஜீவன்களுக்கு மட்டுமல்ல; அதற்கும் குறைந்த அனைத்து ஜீவன்களின் அம்மாக்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 42. ஆஹா...!!! அருமை... அருமை...!! அன்னையர்களை பத்தி அருமையா சொன்னீங்கோ.....!!! நெம்ப சந்தோசமா இருக்குங்க சகோதரி...!!!! பெற்ற தாய் மீது வெறுப்புடையவர்கள் உங்கள் பதிவைப் படித்தால் கூட.. மனம் திருந்த வைக்கும் பதிவாக உள்ளது....!!!

  வாழ்த்துக்கள்....!!! அன்னையர் தின வாழ்த்துக்கள்.....!!!!

  " உலக அன்னையர்கள் நலமுடன் வாழ என் பிராத்தனைகள்...."

  " வாழ்க வளமுடன்.."

  ReplyDelete
 43. ரொம்ப நல்ல பதிவு. நல்ல சிந்தனைகள். Everyone should be proud of you.

  ஒரு ஆண்டு தானா? நீங்களும் மே? இந்த மாதத்தில் ஏதோ இருக்கு :)

  வாழ்த்துகள்.

  அனுஜன்யா

  ReplyDelete
 44. குடந்தைஅன்புமணி said...

  //தொடர்ந்து விகடனில் தங்களின் பதிவு வெளிவருவதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஏனெனில் தங்களின் பதிவின் தரம். இந்தவகையில் இந்தப்பதிவும் விரைவில் விகடனில் வரும்.//

  நீங்கள் சொன்ன மாதிரியே விகடன் அன்னையர் தினச் சிறப்பு சேகரிப்பில் இப்பதிவு இடம் பெற்றுள்ளது அன்புமணி:).

  //ஓராண்டு கடந்த தங்களின் வலைப்பதிவு பயணம் மேலும் சிறக்க வாழ்த்துகள்!

  அன்னையர் தின வாழ்த்துகள்!//

  உங்கள் பாராட்டுக்களுக்கும் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 45. ஜீவன் said...

  //அன்னையர் தின வாழ்த்துக்கள் தெரிவித்த
  அன்னைக்கு,//

  :)!

  //முதல் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!//

  உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஜீவன்.

  ReplyDelete
 46. அபி அப்பா said...

  //சூப்பரா வந்திருக்கு பிரண்ட் இந்த பதிவு!//

  மிக்க நன்றி.

  //எனக்கு தான் அம்மாவை பத்தி எழுத உட்காந்தா ஒன்னுமே எழுத வரமாடேங்குது!//

  சிலநேரங்களில் உணர்ச்சி மிகும் போது வார்த்தைகள் வருவதில்லைதான்.

  //பேசாம நான் அம்மா மடியில் படுத்திருக்கும் போட்டோவை போட்டுடவா?//

  அழகாய்ப் போட்டிடலாமே.

  //அந்த போட்டோவே பல பதிவுக்கு சமம்!//

  நிச்சயமாய், படம் ஒன்றே போதும் பல்லாயிரம் சொல் தேவையில்லை:)!

  ReplyDelete
 47. அமிர்தவர்ஷினி அம்மா said...

  ****நமக்காகவே வாழ வேண்டும். நம்மைச் சுற்றியே அவர்கள் வாழ்க்கைப் பின்னப் பட்டிருக்க வேண்டும் என்கிற எண்ணங்களைத் தவிர்த்திட வேண்டும். அவர்களுக்கென்றிருக்கக் கூடிய சில ஆசைகள் ஆர்வங்களை நிறைவேற்றிக் கொள்ளும் நிம்மதியான சூழலை உருவாக்கித் தர வேண்டும்.****

  //ரொம்ப சரியா சொல்லியிருக்கீங்க ராம் மேடம், ஆனா இத மட்டும் என்னால செய்யவே முடியல, இன்னும் அம்மா அப்படின்னு எல்லாத்தையும் அட்ஜஸ்ட் பண்ணிக்கனும்னு நெனைக்கிறென்.//

  ’நம்ம அம்மாதானே’ன்னு நினைத்துக் கொள்ளத் தோன்றுகிறது இல்லையா?

  // இந்தப் புத்தி எப்ப என்னவிட்டு தொலையும்னு தெரியல. இனிமேவாவது மாத்திக்கனும். புரியுது,, ஆனா முடியல..//

  புரிந்து விட்டதால் மாற்றிக் கொள்ள முடிந்து விடும், கவலைப் படாதீர்கள்:)!

  //வயதொன்று ஆன உங்கள் ப்லாகிற்கு வாழ்த்துக்கள்//

  உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு என் நன்றிகள்!

  ReplyDelete
 48. " உழவன் " " Uzhavan " said...

  //ஆறறிவு ஜீவன்களுக்கு மட்டுமல்ல; அதற்கும் குறைந்த அனைத்து ஜீவன்களின் அம்மாக்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!//

  அழகான சிந்தனையுடனான வாழ்த்து:)! மிக்க நன்றி உழவன்!

  ReplyDelete
 49. லவ்டேல் மேடி said...

  //ஆஹா...!!! அருமை... அருமை...!! அன்னையர்களை பத்தி அருமையா சொன்னீங்கோ.....!!! நெம்ப சந்தோசமா இருக்குங்க சகோதரி...!!!! பெற்ற தாய் மீது வெறுப்புடையவர்கள் உங்கள் பதிவைப் படித்தால் கூட.. மனம் திருந்த வைக்கும் பதிவாக உள்ளது....!!!//

  நன்றி மேடி. சில பேருக்கு சில வருத்தங்கள் இருக்கலாம். ஆனால் சிந்தித்துப் பார்த்தால் அன்னையர் நமக்காக செய்த நல்லவற்றின் முன் அந்த அல்ப வருத்தங்கள் தூசிக்கு சமானம் என உணர இயலும். அப்படிப்பட்ட சின்ன வருத்தங்களை வெறுப்பாக்கிக் கொண்டு திரியும் மனிதர்களும் நடைமுறை வாழ்வில் இருக்கத்தான் செய்கிறார்கள்:(!

  //வாழ்த்துக்கள்....!!! அன்னையர் தின வாழ்த்துக்கள்.....!!!!

  " உலக அன்னையர்கள் நலமுடன் வாழ என் பிராத்தனைகள்...."

  " வாழ்க வளமுடன்.."//

  உங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் எல்லா அன்னையரையும் சென்ற்டையட்டும்! நன்றி நன்றி:)!

  ReplyDelete
 50. அனுஜன்யா said...

  //ரொம்ப நல்ல பதிவு. நல்ல சிந்தனைகள். Everyone should be proud of you.//

  நன்றி அனுஜன்யா. Let us all be proud of our moms:)!

  //ஒரு ஆண்டு தானா?//

  நானும் அப்படித்தான் என்னையே கேட்டுக் கொள்கிறேன்:)!

  //நீங்களும் மே? இந்த மாதத்தில் ஏதோ இருக்கு :)//

  ம்ம். நிச்சயமாய்:)! உங்கள் முதல் வருட நிறைவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  உங்கள் வாழ்த்துக்களுக்கும் என் நன்றிகள்!!

  ReplyDelete
 51. //தவிர்க்க முடியாத அப்படிப்பட்ட சூழல்களில் எல்லா வேலைகளுக்கும் உதவிக்கு ஆட்கள் வைத்துக் கொடுப்பது மிகவும் அவசியம் (ஓரிரு குடும்பங்களில் விளக்கேற்றி வைத்த மாதிரியும் ஆயிற்று). பெரியவர்கள் மேற்பார்வை மட்டுமே செய்கிற மாதிரியாக இருக்க வேண்டும்.//

  இது பெரிய பிரச்சினைதான்!
  வேலை சொல்லி வாங்கிகிட்டு நிம்மதியா இருக்கலாமேன்னு நமக்கு தோணுது. ஆனா நான் பார்த்த வரை அவங்களுக்கு பாந்தப்பட்டு வராது. அவங்களே செஞ்சாதான் திருப்தி!

  ReplyDelete
 52. திவா said...
  //ஆனா நான் பார்த்த வரை அவங்களுக்கு பாந்தப்பட்டு வராது. அவங்களே செஞ்சாதான் திருப்தி!//

  அதென்னவோ உண்மைதான். நாம்தான் அதற்கு அவர்களைப் பக்குவப் படுத்த வேண்டும். ஏனெனில் அடுத்த 10 அல்லது 15 வருடத்திற்கான ஆரோக்கியம் இதனால் ஓரிரு வருடங்களிலேயே சீர்குலையத் தொடங்குவது க்ண்கூடு:(! வயதான காலத்தில் உடல் வருத்திச் செய்யும் வேலைகள் குறைக்கப்பட்டு உடலோடு மன ஆரோக்கியத்துக்கு வேறு பொழுது போக்குகள் வழிவகை செய்யப் படுவது நல்லது என்றே பரிந்துரைக்கிறேன்.

  கருத்துக்கு மிக்க நன்றி திவா.

  ReplyDelete
 53. அன்னை உள்ளம் படைத்த அனைவருக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 54. அக்கா... கொஞ்சம் லேட்டாயிடுச்சு... உங்களுக்காக ஸ்பெஷல் அன்னையர் தின வாழ்த்துக்கள்! அக்காவும் ஒரு அன்னை தானே.. :)

  ReplyDelete
 55. மழலைகள் முட்டி மோதி, தத்தி தாவுகையில் இவ்வோராண்டுக் குழந்தை நாலுகால் பாய்ச்சலில் (கருத்தாளமிக்க பதிவுகளில்) அல்லவா பாய்கிறது !!!

  தமிழமுதக் குழந்தைக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் !!!

  அதன் அன்னைக்கும், மற்றும் உலக அன்னையர் யாவருக்கும் 'அன்னையர் தின வாழ்த்துக்கள்'

  ReplyDelete
 56. தமிழ் பிரியன் said...

  //அக்கா... கொஞ்சம் லேட்டாயிடுச்சு...//

  தாமதமில்லை. சரியாக அன்னையர் தினத்தன்று வாழ்த்த வந்து விட்டீர்கள்:)! அதுவும் இப்படியொரு அருமையான வாழ்த்து:

  //அன்னை உள்ளம் படைத்த அனைவருக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்!//

  நன்றி தமிழ் பிரியன்!

  ReplyDelete
 57. சதங்கா (Sathanga) said...

  //மழலைகள் முட்டி மோதி, தத்தி தாவுகையில் இவ்வோராண்டுக் குழந்தை நாலுகால் பாய்ச்சலில் (கருத்தாளமிக்க பதிவுகளில்) அல்லவா பாய்கிறது !!!//

  பாய்ச்சல் எல்லாம் இல்லை சதங்கா:)! ஒவ்வொரு அடியும் நிதானமாக எடுத்து வைத்தபடிதான்..:)! அன்பினால் தந்து விட்டிருக்கிறீர்கள் சற்று அதிகமாகவே பாராட்டினை:)! நன்றி!

  //தமிழமுதக் குழந்தைக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் !!!//

  நன்றி நன்றி!!

  //அதன் அன்னைக்கும், மற்றும் உலக அன்னையர் யாவருக்கும் 'அன்னையர் தின வாழ்த்துக்கள்'//

  மகிழ்வுடன் ஏற்கிறோம்:)!

  ReplyDelete
 58. படித்தேன், ரசித்தேன். ;-)

  நீங்கள் பெங்களூரில் இருப்பதாக அறிகிறேன்...பெங்களூரில் நான் பி.டி.எம் ஏரியா...

  நாளை ( மே 13 7 PM ) கருடா ஜெயநகர் மாலில், லேண்ட்மார்க் நடத்தும் ஜெப்ரி ஆர்ச்சர் நேர்காணலுக்கு செல்வீர்களா?

  தமிழ் நூல்கள் லைப்ரரி போல எங்கு கிடைக்கிறது?

  ReplyDelete
 59. Raju said...

  //படித்தேன், ரசித்தேன். ;-)//

  நன்றி, முதல் வருகைக்கும்.

  //நீங்கள் பெங்களூரில் இருப்பதாக அறிகிறேன்...பெங்களூரில் நான் பி.டி.எம் ஏரியா...

  நாளை ( மே 13 7 PM ) கருடா ஜெயநகர் மாலில், லேண்ட்மார்க் நடத்தும் ஜெப்ரி ஆர்ச்சர் நேர்காணலுக்கு செல்வீர்களா?//

  இல்லை:), அந்தப் பக்கம் அதிகம் வருவதில்லை. நாங்கள் இருப்பது பெங்களூரின் வடபகுதியில். ஃபோரம் லேண்ட்மார்க்தான் போவதுண்டு.

  //தமிழ் நூல்கள் லைப்ரரி போல எங்கு கிடைக்கிறது?//

  தெரியவில்லையே.

  விற்பனைக்கு என்று பார்த்தால் ரிலையன்ஸ் டைம் அவுட்டில் தமிழுக்கு தனி செக்‌ஷன் கொண்டு வந்துள்ளார்கள். நல்ல கலெக்‌ஷனாகவும் உள்ளது.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin