திங்கள், 20 அக்டோபர், 2008

'புகை'ச்சல்
விரலிடுக்கில்
அது
உங்கள் விருப்பம்.
அறவே
அதை
நீங்கள் விட்டிடத்தான்
அரசு வைக்கிறதோ
மறைமுகமாய்
ஒரு விண்ணப்பம்?

'பொது இடத்தில்
புகைக்கத் தடை'
அது
கிளப்பிய புகைச்சலுக்கு
இருக்கிறதா பாருங்கள்
இங்கே விடை:
சட்டம் கொடுக்கிறது
சில நிமிடக்
கட்டாய ஓய்வு.
அதனால்
தடை படுவதோ
உங்கள்
ஆயுளின் தேய்வு.


தனிமனித உரிமை
தவிடு பொடி ஆவதாய்
படபடக்கும் முன்னே-
வருமா
ஒரு சிந்தனை?
உடனிருக்கும் மாந்தருக்கும்
உண்டன்றோ
சுத்தமான காற்றை
சுவாசிக்கும் உரிமை.


வீட்டினிலும் கூடத்தான்-
நேசிப்பவரின் சுவாசிப்பில்
மாசினைக் கலந்திடல்
நியாயமா என
யோசித்தால் அருமை!
***

விரல் இடுக்கில்
அது என்றும்
உங்கள் விருப்பம்.
அதை விடுவதா
எனும் சிந்தனையே
பெரும் கலக்கம்.

ஊதும் புகையோடு
உள்ளிருக்கும்
மன இறுக்கம்
வெளியேறி விண்ணோடு
மறைவதாய்
மனம் மயங்கும்.
ஆனால்
உண்மைகள் யாவும்
அறிவுக்குத் தெரியும்.
***

விரல் இடுக்கில்
அது என்றென்றும்
உங்கள் விருப்பம்.
ஆயினும்
அறிவீர் நீரே:
இதயநோயின் உதயத்துக்கு
வாய்ப்பென்றும்-
புற்றுநோய்க்குப் பூத்தூவி
வரவேற்பென்றும்-
பக்கவாதத்தைப் பக்கமே
வரவிடக் கூடுமென்றும்-
சிறுநீரகப் பாதிப்பெனும்
சிக்கலிலே சீக்கிரமே
சிக்க வைத்திடலாமென்றும்.

இத்தனையும்
அறிந்த பின்னும்
எத்தனை நாள்
தொடர்வதென்பதும்
சத்தியமாய்
உங்கள் விருப்பம்.
ஆயினும்
சிந்திக்க நேரமின்றி
கவலைப்பட கணங்களின்றி
ஓடிக் கொண்டிருக்கும்
உங்களைத்
தேடி வந்திங்கு
நினைவூட்டவே
இந்தச் சட்டமென
நினைத்துப் பார்த்தால்
புகைச்சலோடு வந்த
எரிச்சலும் எரிந்திடும்.
***

வாழ்விலே
வேறென்னென்ன
உங்கள் விருப்பம்?
மாறாத புன்னகையை
உறவுகளுக்குத் தருவது?

மனதில்
உறுதி கொண்டால்
மறந்திட
இயலாதா புகையை?

இயலும்
உங்கள் நலத்தோடு
பின்னியது
உங்கள் நலம் நாடுவோர்
நலமும்
என்பதை
இதயத்தில்
இருத்திக் கொண்டால்!
*** *** ***
[படம்: இணையத்திலிருந்து]
இங்கு வலையேற்றிய பின் அக்டோபர் 23, 2008 திண்ணை இணைய இதழிலும் வெளிவந்துள்ளது.

'உங்கள் விருப்பம்’ என்ற தலைப்பில் 21 மே 2009 யூத்ஃபுல் விகடன் இணையதளத்திலும்:
23 மே 2009 விகடன்.காம் முகப்பிலும்:

79 கருத்துகள்:

 1. அக்கா நல்லவேளை நான் நிறுத்திய பின் இந்த கவிதையைப் படைத்தீர்கள். இல்லையேல் எனக்கு குற்ற உணர்வாகி இருக்கும்.

  ( அது எப்படிக்கா உங்க கவிதையெல்லாம் படிக்கும் போது கன்னத்தில் வருடுவதுபோலவும் படித்து முடித்த பின் செருப்பால் அறைந்தது போலவும் இருக்கு? )

  பதிலளிநீக்கு
 2. வாழ்விலே
  வேறென்னென்ன
  உங்கள் விருப்பம்?
  மாறாத புன்னகையை
  உறவுகளுக்குத் தருவது?
  மனதில்
  உறுதி கொண்டால்
  மறந்திட
  இயலாதா புகையை?//

  இதைவிட இதமாக யார் சொல்ல முடியும்?
  முடிந்தவரைப் படித்துக் காட்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 3. puhaikka kondu vandha thadayai, thani manitha suthanthiram endru palar por thodukka ... avarkalukku arputhamaai oru azahiya kavithai. arumai. arumai.

  sorry for the thanglish ... :)))

  பதிலளிநீக்கு
 4. //உடனிருக்கும் மாந்தருக்கும்
  உண்டன்றோ
  சுத்தமான காற்றை
  சுவாசிக்கும் உரிமை.

  வீட்டினிலும் கூடத்தான்-
  நேசிப்பவரின் சுவாசிப்பில்
  மாசினைக் கலந்திடல்
  நியாயமா என
  யோசித்தால் அருமை!//

  எனக்குப் பிடித்த வரிகள்.

  //( அது எப்படிக்கா உங்க கவிதையெல்லாம் படிக்கும் போது கன்னத்தில் வருடுவதுபோலவும் படித்து முடித்த பின் செருப்பால் அறைந்தது போலவும் இருக்கு? )//

  புதுகை.அப்துல்லா அவர்களின் பின்னூட்ட வரிகளையும் ரசித்தேன் :)

  பதிலளிநீக்கு
 5. //தனிமனித உரிமை
  தவிடு பொடி ஆவதாய்
  படபடக்கும் முன்னே-
  வருமா
  ஒரு சிந்தனை?//


  கலக்கல் போங்க..இந்த கோஷ்டிங்க தனிமனித சுதந்திரம் உரிமை ன்னு தான் முழங்குவாங்க ஆனா அவங்களோட உடம்பை (அடுத்தவங்க உடம்பை) பற்றி கவலைப்படமாட்டாங்க

  //உடனிருக்கும் மாந்தருக்கும்
  உண்டன்றோ
  சுத்தமான காற்றை
  சுவாசிக்கும் உரிமை//

  இவங்க எல்லாம் தன்னோட உடல் மீதே அக்கறை இல்லாதவங்க அடுத்தவங்களை பற்றி எங்கே நினைக்க போறாங்க

  //விரல் இடுக்கில்
  அது என்றும்
  உங்கள் விரும்பம்.
  அதை விடுவதா
  எனும் சிந்தனையே
  பெரும் கலக்கம்.//

  :-)))

  //உண்மைகள் யாவும்
  அறிவுக்குத் தெரியும்//

  சரியா சொன்னீங்க ..அது வேற ஒண்ணும் இல்லைங்க அபின் மாதிரி இவங்க நிக்கோடினுக்கு அடிமை

  //இதயத்தில்
  இருத்திக் கொண்டால்//

  நல்லா உரைக்கிற மாதிரி சொன்னீங்க

  //புதுகை.அப்துல்லா said...
  அக்கா நல்லவேளை நான் நிறுத்திய பின் இந்த கவிதையைப் படைத்தீர்கள். இல்லையேல் எனக்கு குற்ற உணர்வாகி இருக்கும். //

  பல பேர் இது மாதிரி பல முறை நிறுத்தி!!! இருக்காங்க..அப்துல்லா மறுபடியும் புகையை மறுபடியும் ஆரம்பித்தீர்கள் என்றால்.... யாராலும் ஒன்றும் செய்ய முடியாதுங்க..உங்க உடல் நலம் உங்களை நம்பி உள்ளவர்கள் நிலை நினைத்து பாருங்கள் புகைக்க துவங்கும் முன். அது மாதிரி திரும்ப ஒருமுறை தவறு செய்ய மாட்டீர்கள் என்று நம்புகிறேன் :-)

  //அது எப்படிக்கா உங்க கவிதையெல்லாம் படிக்கும் போது கன்னத்தில் வருடுவதுபோலவும் படித்து முடித்த பின் செருப்பால் அறைந்தது போலவும் இருக்கு? //

  எளிமையே ராமலக்ஷ்மி அவர்களின் பலம்.

  பதிலளிநீக்கு
 6. வாரே வா! கலக்கல்!

  typo here - //உங்கள் விரும்பம்.//

  பதிலளிநீக்கு
 7. //உடனிருக்கும் மாந்தருக்கும்
  உண்டன்றோ
  சுத்தமான காற்றை
  சுவாசிக்கும் உரிமை//


  அருமை அக்கா !

  நல்லா இருக்கு!

  பதிலளிநீக்கு
 8. அழகா சொல்லி இருக்கீங்க ராமலக்ஷ்மி வழக்கம் போலவே..
  நேசிப்பவர்களைப்பற்றி கவலை இருந்தாலே இந்த தவறு நடக்காதே..

  கவிதைக்கு பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 9. சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
  //NICE ....//

  கருத்துக்கு நன்றி சுடர்மணி.

  பதிலளிநீக்கு
 10. புதுகை.அப்துல்லா said...
  //அக்கா நல்லவேளை நான் நிறுத்திய பின் இந்த கவிதையைப் படைத்தீர்கள். இல்லையேல் எனக்கு குற்ற உணர்வாகி இருக்கும்.//

  குற்ற உணர்வுக்கே உங்கள் வாழ்க்கையில் இனி இடம் இருக்கக் கூடாது.

  கயல்விழி கொடுத்த பூச்செண்டை 'உங்கள் மன உறுதி' யாகவேப் பார்க்கிறோம் எல்லோரும்.

  காலத்துக்கும் அது வாடாதிருக்க வேண்டும் உங்கள் கைகளிலே.

  //( அது எப்படிக்கா உங்க கவிதையெல்லாம் படிக்கும் போது கன்னத்தில் வருடுவதுபோலவும் படித்து முடித்த பின் செருப்பால் அறைந்தது போலவும் இருக்கு? ) //

  அடடா அதுவல்ல என் நோக்கம் :( ! ஆனாலும் இவ்வரிகளை கவிநயா ரொம்பவே ரசித்திருக்கிறார்கள் பாருங்கள் :) !

  பதிலளிநீக்கு
 11. வல்லிசிம்ஹன் said...
  //இதைவிட இதமாக யார் சொல்ல முடியும்?//

  இத்தனை இதம் பதமா எப்போதும் பேச யாராலே முடியும் என உங்களைப் பற்றி ஒரு வியப்பு எல்லோருக்குமே உண்டு. முடியும்மா. நல்லதே நடக்கும்.

  பதிலளிநீக்கு
 12. சதங்கா (Sathanga) said...
  //sorry for the thanglish ... :)))//

  அப்போ உங்களுக்காக நானே கருத்திலிருக்கும் இங்கிலீஷை எடுத்து விடவா:)))?

  //புகைக்கக் கொண்டு வந்த தடையை,
  தனி மனித சுதந்திரம் என்று பலர் போர் தொடுக்க ... அவர்களுக்கு அற்புதமாய் ஒரு அழகிய கவிதை. அருமை. அருமை.//

  நன்றி. நன்றி சதங்கா.

  பதிலளிநீக்கு
 13. கவிநயா said...
  ////உடனிருக்கும் மாந்தருக்கும்
  உண்டன்றோ
  சுத்தமான காற்றை
  சுவாசிக்கும் உரிமை.

  வீட்டினிலும் கூடத்தான்-
  நேசிப்பவரின் சுவாசிப்பில்
  மாசினைக் கலந்திடல்
  நியாயமா என
  யோசித்தால் அருமை!//

  எனக்குப் பிடித்த வரிகள்.////

  படிப்பவர் மனதில் மறுபடி பதிந்திடும் வகையில் பிடித்ததை எடுத்துக் காட்டியிருப்பதற்கு நன்றி கவிநயா!

  பதிலளிநீக்கு
 14. SurveySan said...
  //வாரே வா! கலக்கல்!
  typo here - //உங்கள் விரும்பம்.// //

  நன்றி சர்வேசன்,
  சொல்லியிருக்கும்
  கருத்துக்கும்
  கூடவே
  திருத்தத்துக்கும்:)!

  பதிலளிநீக்கு
 15. கிரி said...
  // தனிமனித சுதந்திரம் உரிமை ன்னு தான் முழங்குவாங்க ஆனா அவங்களோட உடம்பை (அடுத்தவங்க உடம்பை) பற்றி கவலைப்படமாட்டாங்க//

  தனிமனித ஆரோக்கியம் எத்தனை அவசியம்னும் கூடவே அடுத்தவரைப் பற்றிய சிந்தனை எத்துணை அத்தியாவசியம்னும் அழகுறச் சொல்லி விட்டீர்கள் கிரி.

  //இவங்க எல்லாம் தன்னோட உடல் மீதே அக்கறை இல்லாதவங்க அடுத்தவங்களை பற்றி எங்கே நினைக்க போறாங்க//

  நினைக்கணும்னுதான் இந்தச் சட்டமே. பின்னாடியே இருப்பது ஒவ்வொரு தனிமனிதன் மேலும் அது காட்டும் அக்கறை. எல்லா விஷயத்திலும் இப்படி அரசு காட்டட்டுமே அக்கறை எனும் வாதங்களுக்கு முடிவேயில்லை. சொல்லப் படும் எந்த விஷயத்திலும் நாலே பர்சண்ட் நல்லது இருந்தா கூட அதை எடுத்துக் கொள்ளலாமே என்பதுதான் என் வாதம்.

  // அபின் மாதிரி இவங்க நிக்கோடினுக்கு அடிமை//

  ரெண்டுமே பெரும் கொடுமை:(!

  //பல பேர் இது மாதிரி பல முறை நிறுத்தி!!! இருக்காங்க..//

  நிறுத்தணும்ங்கிற எண்ணம் வந்தாலே போதும். கண்டிப்பா ஒரு நாள் நிறுத்தி விடுவார்கள்.

  //உங்க உடல் நலம் உங்களை நம்பி உள்ளவர்கள் நிலை நினைத்து பாருங்கள் புகைக்க துவங்கும் முன். அது மாதிரி திரும்ப ஒருமுறை தவறு செய்ய மாட்டீர்கள் என்று நம்புகிறேன் :-)//

  நம்புவோம். எல்லோருக்கும் உதாரணமாகி விட்ட பிறகு வந்து விட்டிருக்கும் பொறுப்புணர்ச்சியே அவரைக் கண்காணித்துக் கொள்ளும். சரிதானே அப்துல்லா?

  //எளிமையே ராமலக்ஷ்மி அவர்களின் பலம். //

  தொடரும் உங்களது ஊக்கம் தரும் இக்கருத்து, எனது தன்னம்பிக்கையைக் கூட்டுகிறது என்றால் அது மிகையாது. விரிவான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கிரி.

  பதிலளிநீக்கு
 16. super .

  உன் உயிர் பறிக்கவே
  உணக்கு உரிமையில்லை எனும்போதில்
  என்னுயிர்க் கொள்ள யார் தந்தார்
  சுதந்திரம் ?

  பதிலளிநீக்கு
 17. புகைப்பதின் தீமையை அப்துல்லா சொல்வதுபோல் வருடிக் கொடுத்து சொல்கிறது.
  மாற்றுக் கருத்து இல்லை. ஆயினும், passive smoking தருவதாகச் சொல்லப்படும் தீமைகள் பெரிதும் மிகையாக காட்டப்படுகின்றனவோ? அரசுக்கு உண்மையிலேயே அக்கறை/கவலை இருந்தால், முழுதுமாகவே தடை செய்யட்டுமே. தயாரிப்பு/விற்பனை எதுவும் கிடையாது என்று. புகை தரும் வரிப்பணம் வேண்டும். ஆனால் புகைப்பவனை தொடர்ந்து துரத்த வேண்டும் என்பது ஒரு sadist approach. நான் புகைப்பவன் அல்லன். இணைய தளங்களில் நடக்கும் விவாதங்களைக் கூர்ந்து கவனித்ததில் இன்னொரு பக்க நியாயமும் தெரிகிறது என்று சொல்ல வந்தேன்.
  மற்றபடி உங்கள் கவிதை வழமை போல் அருமை. உண்மையிலேயே ஒரு சகோதரியின் அன்பு வேண்டுகோள் போல இருக்கிறது.

  அனுஜன்யா

  பதிலளிநீக்கு
 18. ஆயில்யன் said...
  //அருமை அக்கா !
  நல்லா இருக்கு! //

  கருத்துக்கு மிக்க நன்றி ஆயில்யன்.

  பதிலளிநீக்கு
 19. முத்துலெட்சுமி-கயல்விழி said...
  //அழகா சொல்லி இருக்கீங்க ராமலக்ஷ்மி வழக்கம் போலவே..
  நேசிப்பவர்களைப்பற்றி கவலை இருந்தாலே இந்த தவறு நடக்காதே..//

  நேசமும் பாசமும் அக்கறையும் எல்லோருக்கும் இருக்கும்தான் முத்துலெட்சுமி. ஆனால் எட்டி யோசிக்க புகையில் மாட்டிக் கொண்ட மனம் மறுப்பதுதான் பிரச்சனையே.

  //கவிதைக்கு பாராட்டுக்கள். //

  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 20. Jeeves said...
  //super .//

  உங்கள் கருத்தும்தான்:

  //உன் உயிர் பறிக்கவே
  உனக்கு உரிமையில்லை எனும்போதில்
  என்னுயிர்க் கொள்ள யார் தந்தார்
  சுதந்திரம் ?//

  நெத்தியடி!

  பதிலளிநீக்கு
 21. அனுஜன்யா said...
  //புகைப்பதின் தீமையை அப்துல்லா சொல்வதுபோல் வருடிக் கொடுத்து சொல்கிறது.
  மாற்றுக் கருத்து இல்லை. ஆயினும், passive smoking தருவதாகச் சொல்லப்படும் தீமைகள் பெரிதும் மிகையாக காட்டப்படுகின்றனவோ? அரசுக்கு உண்மையிலேயே அக்கறை/கவலை இருந்தால், முழுதுமாகவே தடை செய்யட்டுமே. தயாரிப்பு/விற்பனை எதுவும் கிடையாது என்று. புகை தரும் வரிப்பணம் வேண்டும். ஆனால் புகைப்பவனை தொடர்ந்து துரத்த வேண்டும் என்பது ஒரு sadist approach.//

  நல்லது. மாறாது என் கருத்து எனினும் மாற்றுக் கருத்தை என்றைக்கும் மதிக்கிறேன்.

  கிரியின் ஆதங்கத்துக்குப் பதிலளிக்கையில் //எல்லா விஷயத்திலும் இப்படி அரசு காட்டட்டுமே அக்கறை எனும் வாதங்களுக்கு முடிவேயில்லை. சொல்லப் படும் எந்த விஷயத்திலும் நாலே பர்சண்ட் நல்லது இருந்தா கூட அதை எடுத்துக் கொள்ளலாமே என்பதுதான் என் வாதம். // என நானும் ஆதங்கத்துடன் குறிப்பிட்டிருந்ததைக் கவனித்தீர்களா தெரியவில்லை.

  "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
  மெய்ப்பொருள் காண்பது அறிவு"

  நீங்கள் சொல்கிற மாதிரி இச்சட்டம் அரசின் saddist approach ஆகவே கொண்டாலும் அச்சட்டத்தினுள் நமக்கான மெய்ப்பொருளை ஏன் தேடிடக் கூடாது?

  //மற்றபடி உங்கள் கவிதை வழமை போல் அருமை. உண்மையிலேயே ஒரு சகோதரியின் அன்பு வேண்டுகோள் போல இருக்கிறது.//

  சட்டத்தின் மறுபக்கத்தைச் சுட்டிக் காட்டினாலும் இது இந்தச் சகோதரியின் வேண்டுகோள் என்ற புரிதலுக்கு நன்றி அனுஜன்யா!

  பதிலளிநீக்கு
 22. புதுகை.அப்துல்லா ...
  அக்கா நல்லவேளை நான் நிறுத்திய பின் இந்த கவிதையைப் படைத்தீர்கள். இல்லையேல் எனக்கு குற்ற உணர்வாகி இருக்கும்.
  //
  அண்ணன் அப்துல்லாவே இப்படி சொல்லிட்டார். மறைத்து மறைத்து பேசும் உலகில் உண்மையை வெளிப்படையாக சொல்லிய அவருக்கு எனது பாராட்டுக்கள்.

  நல்லவேளை உண்மையிலே எனக்கு புகைபிடிக்கும் பழக்கம் இல்லை. அதனால நான் தப்பிச்சிட்டேன். காலத்திற்கு ஏற்ற சிறப்பான பதிவு. வாழ்த்துக்கள் அக்கா.

  பதிலளிநீக்கு
 23. /*உடனிருக்கும் மாந்தருக்கும்
  உண்டன்றோ
  சுத்தமான காற்றை
  சுவாசிக்கும் உரிமை*/

  /*இயலும்
  உங்கள் நலத்தோடு
  பின்னியது
  உங்கள் நலம் நாடுவோர்
  நலமும் என்பதை
  இதயத்தில்
  இருத்திக் கொண்டால்*/

  ஒவ்வொரு வரியும் யோசிக்க வைக்கும் வரிகள்...

  பதிலளிநீக்கு
 24. Truth said...
  //நல்ல இருக்குங்க.//

  வாங்க உண்மை. இம்மாத உங்களது PiT போட்டி படத்துக்குப் பொருத்தமாக இருக்கிறதுதானே? முதல் பத்துக்குள் தேர்வானதுக்கும் எனது வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 25. கடையம் ஆனந்த் said...
  //மறைத்து மறைத்து பேசும் உலகில் உண்மையை வெளிப்படையாக சொல்லிய அவருக்கு எனது பாராட்டுக்கள்.//

  உண்மைதான். அதற்காக அப்துல்லாவை எத்தனை பாராட்டினாலும் தகும். 'அவரால் முடிகையில் நம்மாலும் முடியாதா' எனப் பலரையும் சிந்திக்க வைக்கிறாரே!

  //நல்லவேளை உண்மையிலே எனக்கு புகைபிடிக்கும் பழக்கம் இல்லை. அதனால நான் தப்பிச்சிட்டேன்.//

  கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது:).

  //காலத்திற்கு ஏற்ற சிறப்பான பதிவு. வாழ்த்துக்கள் அக்கா.//

  உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ஆனந்த்.

  பதிலளிநீக்கு
 26. ராமலக்ஷ்மி said...
  அமுதா said...
  //*உடனிருக்கும் மாந்தருக்கும்
  உண்டன்றோ
  சுத்தமான காற்றை
  சுவாசிக்கும் உரிமை*/

  ஒவ்வொரு வரியும் யோசிக்க வைக்கும் வரிகள்... //

  என்னை யோசிக்க வைத்தது உங்களது பதிவான "நல்லா ஊதித் தள்ளுங்க... "! ஒரு முறை புகைவண்டியில் ஏசி கோச்சில் பயணித்த போது, கூட இருந்த நபர் புகைக்க, வீஸிங் ப்ராப்ளம் கொண்ட நீங்கள் பட்ட சிரமத்தைப் பதிவாக இட்டிருந்தீர்கள்.

  அனுஜன்யா, 'passive smoking' மிகைப் படுத்தப் படுவதான உங்கள் கருத்துக்கு அமுதாவின் இப்பதிவு http://nandhu-yazh.blogspot.com/2008/09/blog-post_24.html பதிலாகுமா என நேரம் கிடைத்தால் பாருங்களேன்.

  பதிலளிநீக்கு
 27. //உடனிருக்கும் மாந்தருக்கும்
  உண்டன்றோ
  சுத்தமான காற்றை
  சுவாசிக்கும் உரிமை.
  //

  :)). தனியாய்ச் செய்யுங்கள், குறைவாய்ச் செய்யுங்கள்.

  முடிவு, பின்னர் எடுங்கள்.

  அருமை ராமலக்ஷ்மி. இரசித்தேன் :)

  பதிலளிநீக்கு
 28. உங்கள் அடுத்த பதிவு வெள்ளிவிழா பதிவு இல்லீயா? அதான் 25-வது பதிவு இல்லீயா? ஊருக்கு நான் செல்வதால் முன் கூட்டியே என்னுடைய வாழ்துத்துக்களை பதிவு செய்துக்கொள்கிறேன் அக்கா.

  பதிலளிநீக்கு
 29. அக்கா! நல்லா எழுதி இருக்கீங்க... புகை நமக்கும், நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் விரோதி என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.. :)

  பதிலளிநீக்கு
 30. NewBee said...
  // தனியாய்ச் செய்யுங்கள், குறைவாய்ச் செய்யுங்கள்.

  முடிவு, பின்னர் எடுங்கள்.

  அருமை ராமலக்ஷ்மி. இரசித்தேன் :)//

  அதே அதே அதேதான். கவிதையை அழகாய் மூன்றே வாக்கியத்தில் அடக்கிய விதம் அருமை புதுவண்டு.
  வெகுவாகு இரசித்தேன்:)!

  பதிலளிநீக்கு
 31. கடையம் ஆனந்த் said...
  //உங்கள் அடுத்த பதிவு வெள்ளிவிழா பதிவு இல்லீயா? அதான் 25-வது பதிவு இல்லீயா? ஊருக்கு நான் செல்வதால் முன் கூட்டியே என்னுடைய வாழ்துத்துக்களை பதிவு செய்துக்கொள்கிறேன் அக்கா.//

  உங்கள் அட்வான்ஸ் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஆனந்த்:). ஊரிலிருக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் உங்களுக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 32. தமிழ் பிரியன் said...
  // புகை நமக்கும், நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் விரோதி என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.. :)//

  'புகை நம் ஆரோக்கியத்துக்குப் பகை'.
  அழகாய்ச் சொல்லிட்டீங்க தமிழ் பிரியன். கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 33. goma said...
  //HATS OFF toyou.
  your thought is wide and wonderful words are clear and crisp.//

  Thanks a lot for your encouraging words Goma!

  பதிலளிநீக்கு
 34. /வாழ்விலே
  வேறென்னென்ன
  உங்கள் விருப்பம்?
  மாறாத புன்னகையை
  உறவுகளுக்குத் தருவது?
  மனதில்
  உறுதி கொண்டால்
  மறந்திட
  இயலாதா புகையை?/


  உங்களுக்கே
  உரித்த அசத்தலான வரிகள்

  அருமை

  வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 35. @ திகழ்மிளிர்
  வருகைக்கும் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி திகழ்மிளிர்.

  பதிலளிநீக்கு
 36. @ கயல்விழி

  மிக்க நன்றி கயல்விழி.

  நம்மால் இயன்றது:)!

  பதிலளிநீக்கு
 37. //
  நேசிப்பவரின் சுவாசிப்பில்
  மாசினைக் கலந்திடல்
  நியாயமா என
  யோசித்தால் அருமை!
  //

  அருமை..அருமை..அருமை..நல்ல வரிகள்..

  பதிலளிநீக்கு
 38. @ வெண்பூ

  ஆமாம் எல்லோரும்
  'யோசிக்கணும் யோசிக்கணும் யோசிக்கணும்'னு
  சொல்ற மாதிரி இருக்கிறது உங்கள் வரிகள்.

  நன்றி வெண்பூ!

  பதிலளிநீக்கு
 39. அருமை

  (வேறு என்ன கூறுவது என்று தெரியவில்லை) :) :)

  பதிலளிநீக்கு
 40. பலர் சொல்லும் உபதேசம் ஒருவரால் சொல்லும்போது அதில் இருக்கும் நுட்பமான வித்தியாசம் வெற்றி அடைகிறது. அவ்வகையில் இந்த கவிதை வெற்றி அடைந்துள்ளது. எனது நண்பருக்கு இதை அனுப்பினேன். வாசித்ததும் என்னை அழைத்து, " புகைப்பழக்கத்தை விட முயற்சிக்கிறேன் என்றார்" - அவர் மனைவி எனக்கு நன்றி சொன்னார்கள், நான் உங்களுக்கு நன்றி சொல்கிறேன்.

  அன்புடன் என் சுரேஷ்

  பதிலளிநீக்கு
 41. புருனோ Bruno said...
  //அருமை

  (வேறு என்ன கூறுவது என்று தெரியவில்லை) :) :)//

  வேறெதுவும் நீங்கள் கூற வேண்டாம் டாக்டர் புருனோ. திருவார்த்தையான அந்த ஒரு வார்த்தை போதும்:)!

  பதிலளிநீக்கு
 42. N Suresh said...
  //பலர் சொல்லும் உபதேசம் ஒருவரால் சொல்லும்போது அதில் இருக்கும் நுட்பமான வித்தியாசம் வெற்றி அடைகிறது. அவ்வகையில் இந்த கவிதை வெற்றி அடைந்துள்ளது.//

  நன்றி.

  ***உண்மைகள் யாவும்
  அறிவுக்குத் தெரியும்.***

  எல்லோருக்கும் தெரிந்ததையேதான் கூறுகிறேன் என்பதையும் இவ்வரிகளில் சொல்லிவிட்டேன். ஆயினும் என் ஆதங்கத்தின் வெளிப்பாடாக வேண்டுகோளாக அமைந்த இக்கவிதை ஒருவருக்கேனும் மனதில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருமேயானால் அதைவிட வேறென்ன வேண்டும்?

  //எனது நண்பருக்கு இதை அனுப்பினேன். வாசித்ததும் என்னை அழைத்து, " புகைப்பழக்கத்தை விட முயற்சிக்கிறேன் என்றார்" - அவர் மனைவி எனக்கு நன்றி சொன்னார்கள், நான் உங்களுக்கு நன்றி சொல்கிறேன்.//

  இப்போது நானும் மறுபடி உங்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் சுரேஷ்:)!

  பதிலளிநீக்கு
 43. சட்டம் கொடுக்கிறது
  சில நிமிடக்
  கட்டாய ஓய்வு.
  அதனால்
  தடை படுவதோ
  உங்கள்
  ஆயுளின் தேய்வு.

  அசத்திட்டீங்க.

  பதிலளிநீக்கு
 44. @ AMIRDHAVARSHINI AMMA

  இல்லையா பின்னே,
  தனியிடம் உடன் கிடைக்காவிடில்
  தவிர்க்கப் படுகிறதே
  தற்காலிகமாய்ப் புகைப்பது.
  அதனால் நீளுவது
  அவரது ஆயுள்தான்.

  நன்றி அமிர்தவர்ஷிணி அம்மா!

  பதிலளிநீக்கு
 45. பீடி குடிக்காதேன்னு சொல்லி இப்ப எல்லாரும் சிகரெட்டுப் பக்கம் போயிட்டாங்க.அட சிகரெட் உடம்ப்புக்கு நல்லதில்லைன்னு சொன்னா அங்கே ஒருத்தர் லுக்கு விட்டுகிட்டு தம் மர்கள் எத்தனை வகை சிகரெட் புடிச்சாத்தான் எல்லாமே நடக்குதுன்னு பதிவே போடுறாரு.

  எது சொல்லியும் குடி!!! காரர்களுக்கு எதுவும் வேலைக்காகப் போவதில்லை.

  பதிலளிநீக்கு
 46. சிந்திக்க வைக்கும் வரிகள்.........மிக அருமையான கவிதை:-)

  பதிலளிநீக்கு
 47. ராஜ நடராஜன் said...
  //எது சொல்லியும் குடி!!! காரர்களுக்கு எதுவும் வேலைக்காகப் போவதில்லை. //

  உங்கள் ஆதங்கம் புரிகிறது ராஜ நடராஜன். நாம் சொல்வதைச் சொல்வோம். ஏற்றுக் கொள்வது அவரவர் விருப்பம்.

  கவிதையை வேண்டுகோளாகத்தான் பதிந்திருக்கிறேன்.

  கோடு போட்டு ஒதுங்கிடுவோம். ரோடு எந்தத் திசையில் போட வேண்டும் என்பதை அவரே தீர்மானிப்பர்.

  பதிலளிநீக்கு
 48. Divya said...
  //சிந்திக்க வைக்கும் வரிகள்.........//

  ஒரு சிலரையாவது சிந்திக்க வைக்காதா என்று வடிக்கப் பட்ட வரிகள்.

  //மிக அருமையான கவிதை:-)

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி திவ்யா.

  பதிலளிநீக்கு
 49. நல்ல கவிதை! :-)


  ****தனிமனித உரிமை
  தவிடு பொடி ஆவதாய்
  படபடக்கும் முன்னே-
  வருமா
  ஒரு சிந்தனை?

  வாழ்விலே
  வேறென்னென்ன
  உங்கள் விருப்பம்?
  மாறாத புன்னகையை
  உறவுகளுக்குத் தருவது?
  மனதில்
  உறுதி கொண்டால்
  மறந்திட
  இயலாதா புகையை?****

  நீங்கள் அவர்கள் நலனைக்கருதி அன்புடன் கடிந்துகொள்ளும் விதம் மென்மையாகவும், அவர்களை மாற்றும் வண்ணமாகவும் இருக்கிறது.

  அறிவுரை சொல்வது ஒரு கலை!

  அதை அழகாக செய்தால் கல்லும் கரையும்!

  அது உங்களால் முடிவது, உங்களுக்கு ஒரு கிஃப்ட் தான் !

  பதிலளிநீக்கு
 50. சமூக அக்கறையுள்ள கவிதை.பாராட்டுக்கள் ராமலஷ்மி.
  ஷைலஜா

  பதிலளிநீக்கு
 51. வருண் said...
  //நல்ல கவிதை! :-)//

  நன்றி வருண்.

  //நீங்கள் அவர்கள் நலனைக்கருதி அன்புடன் கடிந்துகொள்ளும் விதம் மென்மையாகவும், அவர்களை மாற்றும் வண்ணமாகவும் இருக்கிறது.//

  மாற்றினால் மட்டற்ற மகிழ்ச்சி அடைவேன்.

  //அறிவுரை சொல்வது ஒரு கலை!//

  பெரும்பாலான என் பதிவுகள் இந்த வழியிலேயே செல்வது சரியா என்று எனக்கொரு கவலை:(!

  //அதை அழகாக செய்தால் கல்லும் கரையும்!//

  அதில் தவறேயில்லை என சொல்கிறது உங்கள் உரை:)!

  //அது உங்களால் முடிவது, உங்களுக்கு ஒரு கிஃப்ட் தான் !//

  அப்படியானால் அதை பத்திரமாக வைத்துக் கொள்வேன் வருண்:))!

  பதிலளிநீக்கு
 52. ஷைலஜா said...
  //சமூக அக்கறையுள்ள கவிதை.பாராட்டுக்கள் ராமலஷ்மி.//

  வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ஷைலஜா.

  பதிலளிநீக்கு
 53. புகைக்குப் பகையாய்
  புதுக்கவிதை வகையாய்
  புனைந்தீர் ராமலஷ்மி

  அருமை,அதிஅற்புதம்!
  அனைவரின் விருப்பமும்
  அல்லல் தரும் புகையின்

  பழக்கம் மறந்து,ஆகட்டும்
  பண்பு வளர்க்கும் தமிழின்
  படிப்பினையாக உடனடியாய்!!

  என்றும் அன்புடன்
  தமாம் பாலா

  பதிலளிநீக்கு
 54. தமாம் பாலா (dammam bala) said...
  //புகைக்குப் பகையாய்
  புதுக்கவிதை வகையாய்
  புனைந்தீர் ராமலஷ்மி
  அருமை,அதிஅற்புதம்!//

  பாட்டாகவே பாடி விட்டீர்களா:)!
  நன்றி பாலா.

  //அனைவரின் விருப்பமும்
  அல்லல் தரும் புகையின்
  பழக்கம் மறந்து,ஆகட்டும்
  பண்பு வளர்க்கும் தமிழின்
  படிப்பினையாக உடனடியாய்!!//

  ஆம், இந்தச் சட்டத்தைப் பல எதிர்ப்புகளுக்கிடையே போராடி அமுலுக்குக் கொண்டு வந்ததே ஒரு தமிழர்தான் இல்லையா?

  பதிலளிநீக்கு
 55. நலம் நாடும் பதிவு...ஊதுகிற சங்கை ஊதியாகிவிட்டது..கேட்கிறவர்கள் கேட்க வேண்டும்..

  பதிலளிநீக்கு
 56. பாச மலர் said...
  //நலம் நாடும் பதிவு...//

  "எல்லோரும் நலம் வாழ நாம் பாடுவோம்..."

  முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாச மலர்.

  பதிலளிநீக்கு
 57. நல்லா சொல்லியிருக்கிறீங்க!! புகைக்கிறவர்களின் புத்திக்கு ஏறினால் சரி!!

  சகோதரிக்கு எனது இனிய திபாவளி நல்வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 58. @ இசக்கிமுத்து

  புத்திக்குப் புரியாதது எதுவுமில்லை.மனசுக்குத்தான் விட்டிட சக்தி தேவைப் படுகிறது. சிந்திக்க ஆரம்பித்து விட்டால் செய்வார்கள் கண்டிப்பாக. நம்புவோம்.

  கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  உங்களுக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 59. நல்ல சிந்தனை ராமலக்ஷ்மி. பதிவுக்கு நன்றி.

  இரண்டு லிங்க் கொடுக்கிறேன் பாருங்கள்.

  http://madhumithasblog.blogspot.com/2006/02/blog-post.html

  http://www.keetru.com/literature/essays/jayabashkaran_6.php

  பதிலளிநீக்கு
 60. @ மதுமிதா

  கருத்துக்கும் நீங்கள் தந்திருக்கும் இரண்டு சுட்டிகளுக்கும் மிக்க நன்றி மதுமிதா.

  "புகைப் பிடித்தல்" எத்துணை அபாயகரமானது என ஐந்தே அடிகளில் நெத்தியடியாக சொல்கிறது உங்கள் கவிதை.

  ஜெயபாஸ்கரன் அவர்களின் "கடைசி சிகரெட்டின் கல்லறை" 'இப்பழக்கத்தை விடுவது சாத்தியமா' என மனம் தடுமாறும் ஒவ்வொருவரும் தவறாமல் படிக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 61. Thr r no words to say abt ur kavithai...one thing i would say is tht because of u people only ....still tamil is recognized in this world......

  பதிலளிநீக்கு
 62. ஒவ்வொரு வரிகளும் சாட்டை அடி..

  //தனிமனித உரிமை
  தவிடு பொடி ஆவதாய்
  படபடக்கும் முன்னே-
  வருமா
  ஒரு சிந்தனை?
  உடனிருக்கும் மாந்தருக்கும்
  உண்டன்றோ
  சுத்தமான காற்றை
  சுவாசிக்கும் உரிமை//

  இது டாப் டக்கர்.. :)

  பதிலளிநீக்கு
 63. siri said..
  //Thr r no words to say abt ur kavithai...one thing i would say is tht because of u people only ....still tamil is recognized in this world......//

  பெரிய வார்த்தைகள் Siri. நான் பயணிக்கும் பாதையில் இன்னும் பொறுப்புடன் செல்ல வேண்டும் என்பதற்கான உந்துதலாக இதை எடுத்துக் கொள்கிறேன். மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 64. ஓவியா said...
  //அருமையான அர்த்தமுள்ள கவிதை.//

  வாழ்வின் அர்த்தத்தை புரிய வைக்கும் சிறு முயற்சி.
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஓவியா.

  பதிலளிநீக்கு
 65. பொடியன்-|-SanJai said...

  //ஒவ்வொரு வரிகளும் சாட்டை அடி..//

  சாட்டை அடியாக அன்றி சாமரமாக வீசித்தான் சொல்ல் முயன்றிருக்கிறேன் சஞ்சய். ஒவ்வொரு வரியும் படிப்பவர் மனதில் நிற்க வேண்டும் என்பதே நோக்கம்.

  ////தனிமனித உரிமை
  தவிடு பொடி ஆவதாய்
  படபடக்கும் முன்னே-
  வருமா
  ஒரு சிந்தனை?
  உடனிருக்கும் மாந்தருக்கும்
  உண்டன்றோ
  சுத்தமான காற்றை
  சுவாசிக்கும் உரிமை//

  இது டாப் டக்கர்.. :) //

  இந்தச் சட்டத்தை எதிர்ப்பவ்ர்கள் பிரதானமாக முன் வைக்கும் வாதமே தனி மனித உரிமை பற்றித்தான். இங்கேதான் நெருடுகிறது. மற்றவர்கள் உரிமையையும் அவர்கள் மனதில் கொள்ள வேண்டுமல்லவா?

  வருகைக்கும் பாராட்டும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 66. மறுபடியும் ஒரு நல்ல கவிதை!!

  //
  வீட்டினிலும் கூடத்தான்-
  நேசிப்பவரின் சுவாசிப்பில்
  மாசினைக் கலந்திடல்
  நியாயமா என
  யோசித்தால் அருமை!//

  நல்ல யோசனை!!

  பதிலளிநீக்கு
 67. //வாழ்விலே
  வேறென்னென்ன
  உங்கள் விருப்பம்?
  மாறாத புன்னகையை
  உறவுகளுக்குத் தருவது?
  மனதில்
  உறுதி கொண்டால்
  மறந்திட
  இயலாதா புகையை?//

  :-)

  பதிலளிநீக்கு
 68. சந்தனமுல்லை said...
  //மறுபடியும் ஒரு நல்ல கவிதை!!//

  நன்றி சந்தனமுல்லை.

  ////வீட்டினிலும் கூடத்தான்-
  நேசிப்பவரின் சுவாசிப்பில்
  மாசினைக் கலந்திடல்
  நியாயமா என
  யோசித்தால் அருமை!//

  நல்ல யோசனை!!////

  யோசனையை முன் வைத்தாயிற்று.

  ////வாழ்விலே
  வேறென்னென்ன
  உங்கள் விருப்பம்?
  மாறாத புன்னகையை
  உறவுகளுக்குத் தருவது?
  மனதில்
  உறுதி கொண்டால்
  மறந்திட
  இயலாதா புகையை?//

  :-)////

  உங்கள் புன்னகையே சொல்கிறது மாறாத புன்னகையை உறவுகளுக்குத் தரத்தான் வேண்டுமென்று.

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 69. அருமையான கவிதை பாராட்டுக்கள்

  ///'பொது இடத்தில்
  புகைக்கத் தடை'//

  எனக்கும் இதில் உடன்பாடில்லை
  முற்றாக தடைசெய்வதே நலம்

  பதிலளிநீக்கு
 70. தங்கராசா ஜீவராஜ் said...
  ///'பொது இடத்தில் புகைக்கத் தடை'//

  எனக்கும் இதில் உடன்பாடில்லை
  முற்றாக தடைசெய்வதே நலம்////

  மருத்துவர் தங்களுக்கு இதில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பேது:)?

  //அருமையான கவிதை பாராட்டுக்கள்//

  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 71. நன்று! நன்று! சுதந்திரமாக சொன்ன நற்சிந்தனை...
  ...............................
  "திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" என்பது திருடி கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமல்ல அது பொதுவான சமுதாய சிந்தனை

  --
  முல்லை இளமாறன்

  பதிலளிநீக்கு
 72. know-how 2u said...

  //நன்று! நன்று! சுதந்திரமாக சொன்ன நற்சிந்தனை...//

  அனைவரின் நலம் நாடும் சிந்தனைதான்:)! நன்றி.

  // "திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" என்பது திருடி கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமல்ல அது பொதுவான சமுதாய சிந்தனை//

  அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். அவரவர் உணர்ந்தால்தான்.. மனதில் உறுதி கொண்டால்தான்.. மறந்திட இயலும் புகையை.

  முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முல்லை இளமாறன்.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin