வியாழன், 24 ஜூலை, 2008

எல்லார்க்கும் இனியவராய்...


மண்ணிலே பிறந்திட்ட மனிதர்களே! இம்
மண்ணில் ஒருபிடியும் நமக்குச் சொந்தமில்லை
விண்ணுலகம் செல்லுகையில் நாம் வாரிக்
கொண்டு போவது எதுவுமில்லை!
தண்ணீரில் எழுதுகின்ற எழுத்தன்றோ இத்
தரையினிலே நாம்வாழும் நல்வாழ்வு
கண்ணிலே எண்ணெய் விட்டுக் காத்ததெல்லாம்
கரைசேரும் நாளினிலே கூட வருமோ?

எண்ணி எண்ணிக் கொடுத்திடுவார்
எண்ணியே வாழ்ந்திடுவார்; எப்படிக்
காத்திட பெருக்கிட என்பதைத் தாண்டி
பகிர்ந்திடல் எனவொன்று உண்டெனில் பதறிடுவார்!
எண்ணுகின்ற கத்தை தாள்களிலே
உண்மையில் ஒன்றுகூட நம்மோடு
பின்னாளில் வாராது என்பதனை உணர்ந்த
பின்னாலும் அதை சவுகரியமாய் மறந்திடுவார்!

நிலத்துக்கு எல்லை வகுத்து
உனதெனது என்பார்
பெருகி ஓடும் நீரினையும்
தனது தனது என்பார்!
ஒருவனே தேவன் எனப் போற்றிட
மறுத்துக் கலகம் செய்வார்
ஒன்றே குருதியின் நிறம்-இதை
மறந்து உலகம் பதறிடச் செய்வார்!

நேசமானவரும் நெருக்கமில்லாதவரும்
பாசமானவரும் பார்த்தே இராதவருமாய்
எத்தனையோ பேரினை-எமன்
நித்தம் சொடக்கிடும் நேரத்துக்குள்
சொர்க்கமோ நரகமோ சுருட்டிக்
கொண்டு போகிறான்; விரட்டி
வரும் காலனின் சுருக்கு விழும்
நேரமோ எவருக்கும் நிச்சயமில்லை!

அத்தனையும் தெரிந்திருந்தும்
அடுத்தவரை மதிப்பதில்லை
அன்பை ஏன் கொடுப்பதில்லை
கடமை ஏன் செய்வதில்லை?
சாதியின் பெயரால் சாடுதலும்
மற்ற மதத்தினரை மதியாதலும்
மொழியின் பெயரால் மோதுதலும்
போதும் போதும் போதுமே!

வேதங்கள் வாசித்து விட்டு
வேறு விதமாய் நடந்திடலாகாது
கீதைதனைப் படித்து விட்டு
கீழ்த்தரமான காரியங்களில்
இறங்கிடுதலும் ஈடுபடுதலுமாகாது!
குர்ரான் ஓதிவிட்டு நற்
குண நலன்களை மறந்திடலாகாது
முரண்பாடுகளின் மொத்த உருவங்களாய்
என்றைக்கும் இருந்திடலாகாது!

புதியவராய் மாறிடலாமே
புனர்ஜென்மம் எடுத்திடலாமே
கண்ணியமாய் நடந்திடலாமே
புண்ணியங்கள் சேர்த்திடலாமே!
இப்பூவுலகில் இறைவன் நம்மை
இட்டு வைத்திருக்கும் நாட்களிலே
எல்லார்க்கும் இனியவராய்
இருந்து விட்டுப் போகலாமே!
*** *** *** *** *** *** ***

['நண்பர் வட்டம் ' மே 1989 இலக்கிய இதழிலும், July 3, 2003 "திண்ணை" இணைய இதழிலும் வெளி வந்த கவிதை.]

[இங்கு வலையேற்றிய பின் 6 மார்ச் 2009 இளமை விகடன் இணைய தளத்திலும் வெளிவந்துள்ளது.]

இளமை விகடன் முகப்பில்:


[படம் நன்றி: ஜீவ்ஸ்]

64 கருத்துகள்:

 1. எல்லார்க்கும் இனியவராய்
  இருந்து விட்டுப் போகலாமே!


  இருக்கலாம். இருக்க வேண்டும்.

  மிக அருமையான கருத்துக்கள்.

  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. உங்க பிளாக்கிற்கு முதோ தபா வந்தேன். அமுதம் மிக அருமை.

  பதிலளிநீக்கு
 3. எல்லாருக்கும் இனியவராய் .. கடினம் தான் இருந்தாலும் முயற்சிப்பது நலம்.

  பதிலளிநீக்கு
 4. நீங்க அப்படிதான ( எல்லாருக்கும் இனியவராய் )

  கவிதை செமையா இருக்கு ...

  எளிமையாவும்...

  பதிலளிநீக்கு
 5. டெல்லியில் நடந்த நிகழ்வுகளை தொடர்புபடுத்தி எழுதியதோ?னு ஒரு நிமிடம் நினைத்து விட்டேன்.

  அப்படியே பொருந்துகிறதே! :))


  முதல் பாரா பட்டினத்தார் பாடல் வரிகளை நினைவு படுத்துகிறது. :)

  பதிலளிநீக்கு
 6. அடேங்கப்பா, அருமையான கவிதை.
  எப்படிங்க இப்படியெல்லாம் கவிதை எழுதரது? சூப்பர்.

  ///அத்தனையும் தெரிந்திருந்தும்
  அடுத்தவரை மதிப்பதில்லை
  அன்பை ஏன் கொடுப்பதில்லை
  கடமை ஏன் செய்வதில்லை?////

  அருமை!

  ஹ்ம். எனக்கு இதெல்லாம் வராது, அதனால ஒரு ஈஸி விளைய்யாட்டுக்கு உங்களுக்கு ஒரு அழைப்பு இங்கே

  பதிவப் போடுங்க. அட்வான்ஸ் நன்றி!

  பதிலளிநீக்கு
 7. கவிதை அழகு! சிந்தனையோ சிற்பம்!

  அன்புடன்,
  ஜோதிபாரதி.

  பதிலளிநீக்கு
 8. எல்லோர்க்கும், 'நல்லார் ஒருவர் உளரேல், அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை!'
  என்ற ஔவையார் பாடல் நினைவுக்கு வருகிறது, ராமலஷ்மி!!
  நல்ல சிந்தனைகள்!!!!

  பதிலளிநீக்கு
 9. அருமையானக் கவிதை

  ///அத்தனையும் தெரிந்திருந்தும்
  அடுத்தவரை மதிப்பதில்லை
  அன்பை ஏன் கொடுப்பதில்லை
  கடமை ஏன் செய்வதில்லை?//
  யோசிக்க வைக்கிறது!!

  பதிலளிநீக்கு
 10. //ஒன்றே குருதியின் நிறம்-இதை
  மறந்து உலகம் பதறிடச் செய்வார்!//

  நெத்தியடியா சொன்னீங்க

  //விரட்டி
  வரும் காலனின் சுருக்கு விழும்
  நேரமோ எவருக்கும் நிச்சயமில்லை!//

  அது புரியாமல் பலரும் பல தவறுகளை செய்கிறார்கள்.

  //அத்தனையும் தெரிந்திருந்தும்
  அடுத்தவரை மதிப்பதில்லை
  அன்பை ஏன் கொடுப்பதில்லை
  கடமை ஏன் செய்வதில்லை?
  சாதியின் பெயரால் சாடுதலும்
  மற்ற மதத்தினரை மதியாதலும்
  மொழியின் பெயரால் மோதுதலும்
  போதும் போதும் போதுமே//

  அருமை!

  உங்கள் கவிதைகளின் சிறப்பே எளிமை தான். எனக்கெல்லாம் எளிதாக புரிகிறது :-)

  பதிலளிநீக்கு
 11. //ஒருவனே தேவன் எனப் போற்றிட
  மறுத்துக் கலகம் செய்வார்
  ஒன்றே குருதியின் நிறம்-இதை
  மறந்து உலகம் பதறிடச் செய்வார்!
  //

  தலைவர்கள்ன்னு சொல்லிக்கிற சில பேரோட மண்டையில இதெல்லாம் உறைக்கனும்.

  அருமை சகோதரி

  பதிலளிநீக்கு
 12. //தண்ணீரில் எழுதுகின்ற எழுத்தன்றோ இத்
  தரையினிலே நாம்வாழும் நல்வாழ்வு
  கண்ணிலே எண்ணெய் விட்டுக் காத்ததெல்லாம்
  கரைசேரும் நாளினிலே கூட வருமோ?//

  பிடித்த வரிகள். கவிதை மிக நன்று. எல்லார்க்கும் நல்லவராய் இருக்க முடிந்த வரை முயல்வோம்...

  //நீங்க அப்படிதான்( எல்லாருக்கும் இனியவராய் )//

  வழிமொழியறேன் :)

  பதிலளிநீக்கு
 13. புதுகைத் தென்றல் said...
  //இருக்கலாம். இருக்க வேண்டும்.
  மிக அருமையான கருத்துக்கள்.
  வாழ்த்துக்கள்//

  கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி புதுகைத் தென்றல்.

  பதிலளிநீக்கு
 14. புதுகைத் தென்றல் said...
  //உங்க பிளாக்கிற்கு முதோ தபா வந்தேன்.//

  முதோ வருகைக்கு நன்றி:)! தென்றலாகிய நீங்கள் வலைச் சரத்தில் புயலாக வீசிய போதுதான் எனக்கு முதல் அறிமுகம்.

  //அமுதம் மிக அருமை.//

  அருந்திய அமுதம் பிடித்ததில் எனக்கும் அளவற்ற சந்தோஷம்!

  பதிலளிநீக்கு
 15. முத்துலெட்சுமி-கயல்விழி said...
  //எல்லாருக்கும் இனியவராய் .. கடினம் தான் இருந்தாலும் முயற்சிப்பது நலம்.//

  உண்மை. கடினம்தான். ஆனால் முயற்சிக்க வேண்டும் என்கிற எண்ணமே தானாக நம்மை வழி நடத்தும் இல்லையா முத்துலெட்சுமி?

  பதிலளிநீக்கு
 16. அதிஷா said...
  //நீங்க அப்படிதான ( எல்லாருக்கும் இனியவராய் )//

  எந்நாளும் அப்படி இருந்திட விரும்புகிறேன்:)!

  //கவிதை செமையா இருக்கு ...
  எளிமையாவும்...//

  கருத்துக்கு நன்றி அதிஷா!

  பதிலளிநீக்கு
 17. ambi said...
  //டெல்லியில் நடந்த நிகழ்வுகளை தொடர்புபடுத்தி எழுதியதோ?னு ஒரு நிமிடம் நினைத்து விட்டேன்.//

  அட ஆமாம்.

  //அப்படியே பொருந்துகிறதே! :))//

  ரொம்பப் பொருத்தம்தான் போங்க:)! பொட்டி நிறைய கட்டுக்கட்டாய் எடுத்துக் காட்டி... வழிகாட்ட வேண்டிய தலை(மை)களே... அழுவதா...சிரிப்பதா... தெரியவில்லை.

  //முதல் பாரா பட்டினத்தார் பாடல் வரிகளை நினைவு படுத்துகிறது. :)//


  "பாடுபட்டு தேடிப் பணத்தை புதைத்து வைத்த
  கேடு கெட்ட மானிடரே கேளுங்கள்
  கூடு விட்டு ஆவிதான் போயின பின்
  யாருக்கால் உதவும் பாவிக்கால் இந்த பணம்"
  --என்கிற வரிகள்தானே? இதுவும் தாங்கள் சொன்ன பின்னரே நினைவுக்கு வந்தது, நம்புங்கள்:)! அது சரி, நம் முன்னோர் பாடாத எந்தக் கருத்தை நாம் புதிதாகச் சொல்லிவிடப் போகிறோம். இல்லையா அம்பி?

  பதிலளிநீக்கு
 18. SurveySan said...
  //அடேங்கப்பா, அருமையான கவிதை.
  எப்படிங்க இப்படியெல்லாம் கவிதை எழுதரது? சூப்பர்.//

  வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சர்வேசன்.

  //ஒரு ஈஸி விளைய்யாட்டுக்கு உங்களுக்கு ஒரு அழைப்பு//

  ஈஸி விளையாட்டை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு என் வலைத்தேடல் இல்லை என்பதையும், "தொடர் அழைப்பு விடுவதில் தயக்கம் இன்னும் நீங்கியபாடில்லை" என நான் கூறியதையும் தவறாக எடுத்துக் கொள்ளாது உடன் புரிந்து கொண்டதற்கு மிக மிக நன்றி சர்வேசன்.

  பதிலளிநீக்கு
 19. ஜோதிபாரதி said...
  //கவிதை அழகு! சிந்தனையோ சிற்பம்!//

  முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஜோதிபாரதி!

  பதிலளிநீக்கு
 20. நானானி said...
  //எல்லோர்க்கும், 'நல்லார் ஒருவர் உளரேல், அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை!'
  என்ற ஔவையார் பாடல் நினைவுக்கு வருகிறது, ராமலஷ்மி!!
  நல்ல சிந்தனைகள்!!!!//

  ஒளவையாரின் பாடலை நினைவு கூர்ந்து அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் நானானி. எல்லோரும் எல்லார்க்கும் நல்லாராய் இருந்து விட்டால்... நினைக்கவே இனிக்கிறதல்லவா?

  பதிலளிநீக்கு
 21. யார்க்கும் நண்பராய் யார்க்கும் இனியவராய் யார்க்கும் தோழனாய் வாழ்வதே சிறப்பு. அருமை.

  தி.விஜய்


  http://pugaippezhai.blogspot.com

  பதிலளிநீக்கு
 22. சந்தனமுல்லை said...
  //அருமையானக் கவிதை//

  முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி இவ்வார நட்சத்திர பதிவாளரே!

  ////அத்தனையும் தெரிந்திருந்தும்
  அடுத்தவரை மதிப்பதில்லை
  அன்பை ஏன் கொடுப்பதில்லை
  கடமை ஏன் செய்வதில்லை?//

  யோசிக்க வைக்கிறது!!////

  இப்படி நாம் அடிக்கடி யோசித்தாலே போதும். நல்லது தானாக நடக்கும்.

  பதிலளிநீக்கு
 23. இசக்கிமுத்து said...
  //நல்ல லட்சிய கவிதை, அருமை//

  முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இசக்கிமுத்து!

  பதிலளிநீக்கு
 24. கிரி said...
  //அருமை!//

  கவிதையின் கருத்துக்களோடு உடன்பட்டு அவ்வரிகளை எடுத்தும் காட்டியிருக்கிறீர்கள். நன்றி.

  //உங்கள் கவிதைகளின் சிறப்பே எளிமை தான். எனக்கெல்லாம் எளிதாக புரிகிறது :-)//

  நான் எழுதுவது கவிதை போன்ற உரைநடையா, உரைநடை போன்ற கவிதையா என்பது எனக்கேத் தெரியாது. "அப்படியெல்லாம் யோசித்தால் நாம் எழுதும் ஆர்வத்தையே இழந்து விடுவோம்" என கவிநயா ஒருமுறை சொன்னது ஆறுதல். இந்த வலைப்பூக்கள் நமக்கு வழங்கியிருக்கும் வசதிகளில் முதன்மையானது எழுத்துச் சுதந்திரம், இல்லையா கிரி?

  பதிலளிநீக்கு
 25. தலைப்பே ரத்தினச் சுருக்கமாய் கவிதையை படம் பிடித்துக் காட்டுகிறதே. அருமை. அருமை. பட்டினத்தார், ஔவையார், கண்ணதாசன் எல்லாரும் சொல்லியது போல் கலந்து செய்த கலவை அல்லவா உங்கள் கவிதை.

  இங்க பின்னூட்டியவர்கள் சொன்னது போல், மக்கள் இருக்க மாட்டேங்கறாங்களே. இருந்தால் நல்லா இருக்கும். நாளுக்கு நாள் மோசமால்ல போய்கிட்டு இருக்கு.

  கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் முன்னால் எழுதியிருக்கிறீர்கள். அதே போல தான் இன்றும் இருக்கிறோம்.

  கேட்டா 'சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டஸ்ட்டு'னு சால்ஜாப்பு வேற :))

  பதிலளிநீக்கு
 26. புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
  ////ஒருவனே தேவன் எனப் போற்றிட
  மறுத்துக் கலகம் செய்வார்
  ஒன்றே குருதியின் நிறம்-இதை
  மறந்து உலகம் பதறிடச் செய்வார்!//
  தலைவர்கள்ன்னு சொல்லிக்கிற சில பேரோட மண்டையில இதெல்லாம் உறைக்கனும்.
  அருமை சகோதரி//

  கருத்துக்கு நன்றி அப்துல்லா. அம்பிக்கு நான் சொல்லியிருக்கும் பதிலைப் பார்த்தீர்களா. தலைமைகளின் தலைக்கு இதெல்லாம் உறைத்தால் இத்தனை தவறுகள் நாட்டில் இருக்காதே.

  பதிலளிநீக்கு
 27. கவிநயா said...//பிடித்த வரிகள். கவிதை மிக நன்று. எல்லார்க்கும் நல்லவராய் இருக்க முடிந்த வரை முயல்வோம்...//

  பிடித்த வரிகளைக் கூறி கவிதையை ரசித்தமைக்கு நன்றி கவிநயா!
  நீங்க சொன்ன மாதிரி அப்படி இருக்க எல்லோரும் முடிந்த வரை முயற்சிப்போமாக!

  பதிலளிநீக்கு
 28. விஜய் said...
  //யார்க்கும் நண்பராய் யார்க்கும் இனியவராய் யார்க்கும் தோழனாய் வாழ்வதே சிறப்பு.//

  அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள் விஜய் நன்றி.

  பதிலளிநீக்கு
 29. ///அத்தனையும் தெரிந்திருந்தும்
  அடுத்தவரை மதிப்பதில்லை///

  அருமை..அருமை.. அத்தனையும் உண்மை ராமலக்ஷ்மி!

  இனிதான ஒரு கவிதையில்
  இத்தனை விஷயங்களா?
  இனியாவது திருந்தமாட்டீரா என்ற
  இங்கிதம் கலந்த ஆதங்கத்தை
  இதமாக தந்திருக்கின்றீர்கள்,நன்றி!

  மற்றபடி... அப்புசாமி,சீதாபாட்டி,ரசகுண்டு, பீமாராவ்,இடிலீ,சங்கர்லால்,தேநீர்,
  இந்திரா,தமிழ்வாணன்,
  குளூகோஸ்/ஆரஞ்சு மாத்திரை, லாரன்ஸ்,டேவிட்,அ.கொ.தி.க, இரும்புக்கை மாயாவி,ஜானி நீரோ,மாண்ட்ரெக், டெஸ்மாண்ட்,கணேஷ்,வசந்த்,நித்யா,ஆத்மா,ஜீனோ எல்லாரும் நலம்தானே?!? :)))

  யாராவது விட்டுப்போயிருந்தால் இந்த 'சமகாலத்தவன்' மிகவும் விசாரித்ததாக சொல்லிவிடுங்கள் :-)

  பதிலளிநீக்கு
 30. //அத்தனையும் தெரிந்திருந்தும்
  அடுத்தவரை மதிப்பதில்லை
  அன்பை ஏன் கொடுப்பதில்லை
  கடமை ஏன் செய்வதில்லை?
  //

  இது ஒருஅள்விற்கு, நம் கட்டுப்பாட்டிற்குள் உள்ளவற்றில் முடியும்.

  //கண்ணியமாய் நடந்திடலாமே//

  நம் எல்லையைத்தாண்டி, பொது எல்லைக்குள் செல்கையில் சற்றுக் கடனம் தான். :))

  எளிய சொற்களில் நல்லெண்ணங்கள், கவிதை நன்று! ராமலக்ஷ்மி. :)

  வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 31. சதங்கா (Sathanga) said...
  //தலைப்பே ரத்தினச் சுருக்கமாய் கவிதையை படம் பிடித்துக் காட்டுகிறதே. அருமை. அருமை.//

  ஆமாம் நீங்கள் சொல்வது சரியே. அந்த இரண்டு வார்த்தைகளை மட்டும் மனதில் நிறுத்திக் கொண்டால் இனிமை தானாக மலராதா?

  //பட்டினத்தார், ஔவையார், கண்ணதாசன் எல்லாரும் சொல்லியது போல் கலந்து செய்த கலவை அல்லவா உங்கள் கவிதை.//

  அப்படி யோசித்து எழுதா விட்டாலும் கூட, அம்பிக்கு சொன்ன மாதிரி அவர்கள் நமக்குச் சொல்லிச் செல்லாத எந்த கருத்துகளை நாம் புதிதாகச் சொல்லி விடப் போகிறோம். நம்மைச் சுற்றி நடப்பவற்றைப் பார்த்து வருத்தங்களை வார்த்தைகளில் வடிக்கும் போது எல்லார் சொன்ன கருத்துகளினாலும் கலந்து கட்டிய கதம்பமாகி விட்டது.

  //கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் முன்னால் எழுதியிருக்கிறீர்கள்.//

  ஆமாம். அதை சில சின்ன சின்ன மாற்றங்களுடன் தந்தேன்.

  //அதே போல தான் இன்றும் இருக்கிறோம்.//

  அதற்கும் ஆமாம். பெரிய மாற்றம் ஏதுமில்லை:( !

  கேட்டா 'சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டஸ்ட்டு'னு சால்ஜாப்பு வேற :)) //

  சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் சதங்கா!

  பதிலளிநீக்கு
 32. தமாம் பாலா (dammam bala) said...
  //இனிதான ஒரு கவிதையில்
  இத்தனை விஷயங்களா?
  இனியாவது திருந்தமாட்டீரா என்ற
  இங்கிதம் கலந்த ஆதங்கத்தை
  இதமாக தந்திருக்கின்றீர்கள்,நன்றி!//

  இனிய நடையில் சொல்லிய கருத்துக்கும் நன்றி.

  //யாராவது விட்டுப்போயிருந்தால் இந்த 'சமகாலத்தவன்' மிகவும் விசாரித்ததாக சொல்லிவிடுங்கள்:-)//

  சொல்லிட்டேன். மாண்ட்ரெக்குடன் வரும் லொதார்,நர்மதா,ஓஜோவிடமும் வேதாளம் அவரது கேசரி,வாலி,ரெக்ஸ்,டயானா ஆகியோரிடமும்:)))! அதெல்லாம் ஒரு காலம் இல்லையா பாலா? இந்த கதாபாத்திரங்களை வைத்தே நாங்கள் க்விஸ் வேறு நடத்துவோம்.

  பதிலளிநீக்கு
 33. நல்ல மனைவி,நல்ல பிள்ளை, நல்ல குடும்பம் தெய்வீகம்னு பாட்டு நினைவு வருகிறது. நம் முன்னோர்கள் நமக்கு நல்ல வழிதான் காட்டிச் சென்றார்கள். இருக்கும் வரை இனியவராய் இருப்பதை,
  விட்டுவிட்டுக் கடி சொற்கள் சொல்லிக் ,கண்டதே காட்சியென்று கொண்டு,
  கல்லறையை நொக்கிச் செல்லும் நாள் தொலைவில் இல்லை என்பதையும் மறந்து,சுகம்,பணம் தேடும் மனிதரையும் சுரண்டுபவர்களையும் நினைத்தாலே கசக்கிறது.

  அருமையான எண்ணங்களைப் பதிந்திருக்கிறீர்கள் ராமலக்ஷ்மி. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 34. /மண்ணிலே பிறந்திட்ட மனிதர்களே! இம்
  மண்ணில் ஒருபிடியும் நமக்குச் சொந்தமில்லை
  விண்ணுலகம் செல்லுகையில் நாம் வாரிக்
  கொண்டு போவது எதுவுமில்லை!/

  /அத்தனையும் தெரிந்திருந்தும்
  அடுத்தவரை மதிப்பதில்லை
  அன்பை ஏன் கொடுப்பதில்லை /


  அருமையான வரிகள்

  பதிலளிநீக்கு
 35. எனது பதிவிற்கு வருகைதந்தமைக்கு நன்றி.உங்களது பேவரிட் புத்ததகங்கள் அனைத்தும் எனக்கும் பிடித்தவையே.

  பதிலளிநீக்கு
 36. //எல்லார்க்கும் இனியவராய்
  இருந்து விட்டுப் போகலாமே!
  //

  முடிந்தவரை இப்படி இருப்பது தான் என் விருப்பமும்.

  அருமையான தத்துவக்கவிதை. வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 37. // முரண்பாடுகளின் மொத்த உருவங்களாய்
  என்றைக்கும் இருந்திடலாகாது! //

  1989ல் முதலில் இக்கவிதை வெளிவந்ததாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
  19 வருடங்களுக்குப்பின் வந்த போதும் இதே கதை நீடிக்கிறது.
  கொஞ்சம் யோசனை செய்து பார்த்தால்,
  2089 ல் மட்டுமல்ல, 3089 லும் இதுவே நீடிக்கும்.
  ஏனெனின் இது நிதர்சனம்.

  மனிதன் என்பவன்
  முரண்பாடுகளின் கலவையே.
  உடலியலிலும் சரி, உளவியலிலும் சரி,
  உண்மையிலே நம் எல்லோரிலும்
  எதிரெதிர் நிலைகள்
  எப்போதும் உள்ளன.

  மனித சமுதாயமும் ஆகவே
  முரண்பாடுகளின் கலவையாகத்தான் இருக்க இயலும்.

  இலட்சியம் ஒன்றிருக்கவேண்டும், அதை நோக்கி நடக்கவேண்டும்.
  இல்லை எனக்கோர் மாற்றுக் கருத்து.
  இருப்பினும் இருப்பதைக் குறை கூறிக்கொண்டே
  இயம்புவதில் நோதலில்
  என்ன பயன் ?

  ஆகவே ஒன்று சொல்வேன்.
  ஆயிரம் முரண்பாடுகளுக்கிடையேயும்,
  அமைதியாக இரு.
  அடக்கத்துடன்
  அன்புள்ளம் கொண்டு
  ஆக்கபூர்வமாக செயல்படு. உன்னை
  அண்டி வருவோருக்கு
  ஆண்டவனாயிரு.

  சுப்பு ரத்தினம்.
  தஞ்சை.
  http://arthamullavalaipathivugal.blogspot.com

  பதிலளிநீக்கு
 38. NewBee said...
  //இது ஒருஅளவிற்கு, நம் கட்டுப்பாட்டிற்குள் உள்ளவற்றில் முடியும்.//
  //நம் எல்லையைத்தாண்டி, பொது எல்லைக்குள் செல்கையில் சற்றுக் கடினம்தான். :))//

  உண்மைதான் newbee! ஆனால்
  தத்தமது எல்லைக்குள்
  ஒவ்வொருவரும் முயற்சித்தாலே
  எத்தனையோ மாற்றங்கள் பிறக்கும்
  பொது எல்லைக்குள் செல்கையிலே,
  இல்லையா:)?

  //எளிய சொற்களில் நல்லெண்ணங்கள், கவிதை நன்று! ராமலக்ஷ்மி. :) வாழ்த்துகள்//

  வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி newbee!

  பதிலளிநீக்கு
 39. வல்லிசிம்ஹன் said...
  //நல்ல மனைவி,நல்ல பிள்ளை, நல்ல குடும்பம் தெய்வீகம்னு பாட்டு நினைவு வருகிறது.//

  ஆமாம் வல்லிம்மா! ஒவ்வொரு வீட்டிலும் இப்பாட்டு ஒலிக்க ஆரம்பித்து, ஒருவருக்கொருவர் என்றும் இனியவராய் இருக்க விழைந்திட்டால் வாழும் நாடும் தெய்வீகமாகிவிடாதா?

  //நம் முன்னோர்கள் நமக்கு நல்ல வழிதான் காட்டிச் சென்றார்கள். இருக்கும் வரை இனியவராய் இருப்பதை, விட்டுவிட்டுக் கடி சொற்கள் சொல்லிக் ,கண்டதே காட்சியென்று கொண்டு,
  கல்லறையை நொக்கிச் செல்லும் நாள் தொலைவில் இல்லை என்பதையும் மறந்து,சுகம்,பணம் தேடும் மனிதரையும் சுரண்டுபவர்களையும் நினைத்தாலே கசக்கிறது.//

  அருமையாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். இதுவே எனது ஆதங்கமும்.

  வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 40. ***அகழ்வாரை தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வாரை பொறுத்தல் தலை**

  இந்தக்குறளில் சொல்வதுபோல், என்னால் ஓரளவுக்கு முடியும். ஆனால் எல்லோருக்கும் இனியவராய் என்னால் இருக்கமுடியுமா?

  நிச்சயமாக சில கீழ்தரமான மனித ஜந்துகளிடன் என்னால் இனியவராக இருக்க முடியவே முடியாது.

  அப்படி இருப்ப்பவர்களை என்னால் பாராட்ட முடியுமா?

  அதுவும் முடியாது!

  நம்மல்லாம் சாதாரண மனிதர்தானே?:)

  மற்றவர்களைப்பற்றி எனக்கு தெரியாது. ஆனால் நான் நிச்சயம் ஒரு சாதாரண மனுஷ ஜென்மம்தான் :)

  பதிலளிநீக்கு
 41. முதல் முறை உங்கள் பதிவிற்கு வரும்போதே மனதிற்கு இதமான அருமையான கவிதையை வாசித்ததில் சந்தோஷம்.

  பதிலளிநீக்கு
 42. திகழ்மிளிர் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 43. வேளராசி said...
  //உங்களது பேவரிட் புத்ததகங்கள் அனைத்தும் எனக்கும் பிடித்தவையே.//

  அட, தமாம் பாலா போல நீங்களும் 'சமகாலத்தவர்'தானா:))?

  இக் கவிதையிலே சொல்லியிருக்கிறாற் போல "எப்படிக்
  காத்திட பெருக்கிட என்பதைத் தாண்டி
  பகிர்ந்திடல் எனவொன்று உண்டெ"ன உலகுக்கு உணர்த்திப் பொது நலத் தொண்டாற்றும் திரு.லோகநாதன் பற்றிய உங்கள் பதிவு அருமை. இவர் போன்றோரை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து அனைவரையும் சிந்திக்க வைக்கிறீர்கள். வாழ்த்துக்கள் வேளராசி.

  பதிலளிநீக்கு
 44. கயல்விழி
  //முடிந்தவரை இப்படி இருப்பது தான் என் விருப்பமும்.//

  நல்லது கயல்விழி. மிக்க மகிழ்ச்சி.

  //அருமையான தத்துவக்கவிதை. வாழ்த்துக்கள்//

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 45. sury said...//ஆகவே ஒன்று சொல்வேன்.
  ஆயிரம் முரண்பாடுகளுக்கிடையேயும்,
  அமைதியாக இரு.
  அடக்கத்துடன்
  அன்புள்ளம் கொண்டு
  ஆக்கபூர்வமாக செயல்படு. உன்னை
  அண்டி வருவோருக்கு
  ஆண்டவனாயிரு.//

  உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி சூரி சார். அதுவும் இந்தக் கடைசிப் பத்தி கருத்துக் களஞ்சியம். அருமையான அறிவுரை.

  இப்போது எனது கருத்துகளையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன், தடை ஏதுமில்லைதானே?

  //மனித சமுதாயமும் ஆகவே
  முரண்பாடுகளின் கலவையாகத்தான் இருக்க இயலும்.//

  உண்மைதான். மாற்றுக் கருத்து எனக்கும் இல்லை. ஆனால், ஒவ்வொருவரும் தன் வரையில் முயன்றால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்பதுதான் எனது கோரிக்கையேயன்றி, சமுதாயத்தைக் குறை சொல்லிக் கொண்டே இருப்பதல்ல எனப் பணிவுடன் கூறிக் கொள்கிறேன்.

  //நோதலில்
  என்ன பயன் ?//

  நேற்று முன் தினம் பெங்களூரில் 9 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு. அதைத் தொடர்ந்து நேற்று அகமதாபாத்தில் 17 இடங்களில். எதற்காக மோதல் எனத் தெளிவில்லாமல் நடக்கிறது மோதல். எதற்காக சாதல் எனத் தெரியாமலே நடக்கிறது அப்பாவிகளின் சாதல். நோகாமல் நம்மால் இருக்க இயலவில்லை அல்லவா?

  //அன்புள்ளம் கொண்டிரு//
  //எல்லார்க்கும் இனியவராயிரு// என இரண்டிரண்டு வார்த்தைகளிலேச் சொல்லி விட்டுப் போய்க் கொண்டேயிருக்கலாம்தான். ஆனால், எதையும் சற்று எடுத்துச் சொன்னால் நெஞ்சைத் தைக்கா விட்டாலும் ஓரளவேனும் நினைவில் நிற்காதா எனும் ஆதங்கமே இப்பதிவு.

  எந்தப் பிரச்சனையையும் எல்லாக் கோணங்களிலும் பார்க்க வேண்டும் என்கிற நோக்கத்துடனான தங்கள் கருத்தும் எனக்குப் புரிகிறது. மிக்க நன்றி சார்!

  பதிலளிநீக்கு
 46. தமிழ் பிரியன் said...
  //வலைச்சரத்தில் பதிவர்//
  http://blogintamil.blogspot.com/2008/07/blog-post_5862.html

  அழகுத் தமிழில் தாங்கள் வலைச் சரத்தில் முன் வைத்திருக்கும் என்னைப் பற்றிய அறிமுகம் இன்னும் நல்ல படைப்புகளைத் தர வேண்டும் என்கிற பொறுப்புணர்ச்சியை எனக்குத் தந்துள்ளது. நன்றி தமிழ் பிரியன்.

  பதிலளிநீக்கு
 47. வருண் said..//.***அகழ்வாரை தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வாரை பொறுத்தல் தலை***
  இந்தக்குறளில் சொல்வதுபோல், என்னால் ஓரளவுக்கு முடியும். ஆனால் எல்லோருக்கும் இனியவராய் என்னால் இருக்கமுடியுமா?//

  ஆகா அருமையான குறளை மேற்கோள் காட்டியிருக்கிறீர்கள். ம்ம்ம்....நியாயமான கேள்விதான்.

  //நிச்சயமாக சில கீழ்தரமான மனித ஜந்துகளிடன் என்னால் இனியவராக இருக்க முடியவே முடியாது.
  அப்படி இருப்ப்பவர்களை என்னால் பாராட்ட முடியுமா? அதுவும் முடியாது! //

  கேள்விகளைக் கேட்டு தாங்களே பதிலும் கூறி விட்டீர்கள். முடிந்த வரை முயற்சித்து முன் மாதிரியாய் இருக்கலாம். வள்ளுவர் வாக்கைக் கடைப் பிடிக்க முடியாது போகிற இடங்களிலே "துஷ்டரைக் கண்டால் தூர விலகு." எனும் பொன் மொழியைக் கருத்தில் கொள்ள வேண்டியதுதான். சரிதானா வருண்?

  பதிலளிநீக்கு
 48. நிஜமா நல்லவன் said...
  //முதல் முறை உங்கள் பதிவிற்கு வரும்போதே மனதிற்கு இதமான அருமையான கவிதையை வாசித்ததில் சந்தோஷம்.//

  எனக்கும் நிஜமா சந்தோஷம், தங்கள் வருகையில்:))!

  பதிலளிநீக்கு
 49. ****வள்ளுவர் வாக்கைக் கடைப் பிடிக்க முடியாது போகிற இடங்களிலே "துஷ்டரைக் கண்டால் தூர விலகு." எனும் பொன் மொழியைக் கருத்தில் கொள்ள வேண்டியதுதான். சரிதானா வருண்?***

  உண்மைதாங்க, ராமலக்ஷ்மி!

  அதனால்தானே "மாடரேஷன்" செய்து பின்னூட்டங்களை அனுமதிக்கிறோம்?
  :-)

  நல்ல கவிதை! நல்லெண்ணம் கொண்டவர்கள் நீங்கள்! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 50. வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வருண்.

  பதிலளிநீக்கு
 51. அடடா இங்க இருக்கற காமெண்ட்களிலேயே ஏகப்பட்ட கருத்துக்கள் இருக்கிறதே பதிவைப் போல. மெதுவா வந்து திரும்பப் படிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 52. சதங்கா (Sathanga) said...
  //அடடா இங்க இருக்கற காமெண்ட்களிலேயே ஏகப்பட்ட கருத்துக்கள் இருக்கிறதே பதிவைப் போல.//

  ஆமாம் சதங்கா, இத்தகைய கருத்துப் பரிமாற்றங்கள் நம் பார்வையை மேலும் விசாலமாக்குவதுடன் நம்மைச் செம்மைப் படுத்திக் கொள்ளவும் வழி வகுப்பதாக உணர்கிறேன்.

  கமென்ட்களை ரசிப்பதற்காகவே தாங்கள் மறுபடி வருவது 'வழக்கம் போல்' தொடர்வதில் மகிழ்ச்சி:)!

  பதிலளிநீக்கு
 53. அருமையான விஷயத்தை எளிமையான கவிதையால என்னை போன்ற மக்களுக்கும் புரியும் விதத்தில் சொல்லிருக்கீங்க .வாழ்த்துக்கள் ராமலஷ்மி மேடம் :))

  பதிலளிநீக்கு
 54. முதல் வருகைக்கும் ரசிப்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரம்யா ரமணி!

  பதிலளிநீக்கு
 55. பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய

  விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

  விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

  உலகில் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்


  ஒன்றுபடுவோம்
  போராடுவோம்
  தியாகம் செய்வோம்

  இறுதி வெற்றி நமதே


  மனிதம் காப்போம்
  மானுடம் காப்போம்.

  இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.


  கோவை விஜய்
  http://pugaippezhai.blogspot.com/

  பதிலளிநீக்கு
 56. அருமை. வாழ்த்துகள்//

  பதிலளிநீக்கு
 57. அருமையான வரிகள் சகோதரி.
  ஜூலை 24க்குப்பிறகு எதையும் எழுதக் காணோமே..
  இடைவெளி வேண்டாம். தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி :)

  பதிலளிநீக்கு
 58. கடையம் ஆனந்த் said...
  //அருமை. வாழ்த்துகள்//

  அட திருநெல்வேலியா நீங்க? முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஆனந்த்.

  பதிலளிநீக்கு
 59. ம்.ரிஷான் ஷெரீப் said...
  //அருமையான வரிகள் சகோதரி.//
  ஜூலை 24க்குப்பிறகு எதையும் எழுதக் காணோமே..
  இடைவெளி வேண்டாம். தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி :)//

  பாராட்டுக்கும் அதிக இடைவெளி வேண்டாம் என்கிற உங்கள் அன்புக் கட்டளைக்கும் நன்றி ரிஷான். இதோ இன்று எனது அடுத்த பதிவு.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin