Tuesday, May 27, 2008

கூழ்ச் சறுக்கு

கோடை வந்தால் கூடவே நினைவுக்கு வருவது கூழ் வற்றல். கூழ் வற்றல் என்றால் எங்களுக்குக் கூடவே நினைவுக்கு வருவது கூழ்ச் சறுக்கு. குளு குளு வெண் பனிச் சறுக்கு தெரியும்? அது என்ன கூழ்ச் சறுக்கு? சற்றுப் பொறுங்கள்! சகோதரிகள் நாங்கள் கூடி மலரும் நினைவுகளை அசை போடுகையில் மறக்காமல் நினைவு கூர்ந்து சிரித்து மகிழும் ஒரு சின்னச் சம்பவம்.

சிறு வயதில், எல்லா வீட்டிலும் போல கூழ் வற்றல் போடும் வைபவம் எம் வீட்டிலும் திருவிழா போலத்தான் திமிலோகப் படும். முன்னிரவே பின் முற்றத்தில் பெரிய பித்தளை அண்டாவில் கூழ் காய்ச்சப் படும். [தற்சமயம் US-ல் இருக்கும் என் சிறிய தங்கை இந்தியா வரும் போது அவளுக்குப் பிடிக்குமென அத்தனை பெரிய அண்டாவில் ஒரு காலத்தில் காய்ச்சிய கூழை சின்னஞ்சிறு பால்(வால்) சட்டியில் அம்மா காய்ச்சிக் கொடுப்பது வேடிக்கையாக இருக்கும். சரி விஷயத்துக்கு வருவோம்.] மறுநாள் காலையில் 'பாலாடை' போல் படர்ந்த்திருக்கும் கெட்டியான 'கூழாடை'க்கு ஒரு போட்டா போட்டியே நடக்கும். அதே போல் முழுமையாகக் காயாத வற்றல் ஒரு தனிச் சுவை. அதையும் விட்டு வைப்பதில்லை.

இருள் பிரியும் முன்னரே அனைவரும் எழுப்பி விடப் படுவோம். அம்மாவும் சின்ன பெரியம்மாவும் கையில் திணிக்கும் 'லொட்டு லொசுக்கு'சாமான்களை மேல் தட்டட்டி(மொட்டி மாடி)க்கு எடுத்துச் செல்வதும், அங்கு 'பராக்கு'ப் பார்க்காமல் காக்காய் விரட்டுவதும்தான் எங்கள் ட்யூடி!

ஒரு சமயம் முழு வேட்டியில் முதுகொடிய முத்து முத்தாய் வற்றலை இட்டு விட்டு 'அப்பாட!' என இடுப்பில் கை வைத்தபடி எழுந்து நின்றார்கள் என் பெரியம்மா. அருகே குட்டைச் சுவர் மேல் நின்றிருந்த என் பெரிய தங்கை (அப்போது ஆறேழு வயதிருக்கும்) காக்காய் விரட்டுகிறேன் பேர்வழி என்று 'உஷ்' என எம்பிக் குதித்தவள் 'சர்' என குளு குளு வெண் கூழில் சறுக்கி, முக்கால் வேட்டி கூழை முதுகிலே அப்பியபடி மல்லாந்து விழுந்தாளே பார்க்கலாம்:-))))! தான் இட்டு முடித்த கூழின் அழகைத் திருப்தியுடன் ஒரு கணம் ரசித்து நின்றிருந்த என் பெரியம்மாவின் முகம் போன போக்கைப் பார்க்க வேண்டுமே:-((((! அப்புறம் என்ன, 'பூசை'தானே என்று கேட்கிறீர்களா? அதுதான் இல்லை. அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி. நாங்கள் பெரியம்மா செல்லங்கள்!

43 comments:

 1. :)))
  ரசித்தேன்.

  ReplyDelete
 2. கூழ் வடகம் கஞ்சி சூடாக இருந்திருக்குமே முதுகைப் பதம் பாக்கலையா?வேட்டியில் இட்டுவிட்டதால் ஆறிப்போயிருக்கும்.ஆனாலும் உங்க பெரியம்மா ரொம்ப நல்லவங்க போல

  ReplyDelete
 3. முத்துச் சரத்துக்கு முத(ந)ல் வரவு!
  இந்தப் பதிவுக்கு முதல் ரசிகர்!
  நன்றி அம்பி!

  ReplyDelete
 4. வாருங்கள் கண்மணி! 'முன்னிரவே' காய்ச்சிய கூழ் எனக் குறிப்பிட்டிருக்கிறேனே! அதனால் 'ஜில் ஜில்' சறுக்குதான்! ஆமாம், நீங்கள் சொல்வது சரி, எங்கள் வால் தனங்களைப் பொறுத்துப் போகும் செல்ல(சின்ன)ப் பெரியம்மா!

  ReplyDelete
 5. ஸேம் பீலிங்க்ஸ் !


  ஆனா அதே நேரத்தில கொஞ்சம் கூழ் வடகங்களை பாதி காய்ந்த நிலையில் மேலே மொருகலாய் உள்ள கூழாய் இருக்கும் அந்த வடகத்தில் சில தின்று, காலியாக்கி, அந்த பழியை காக்கைக்கு போட்டிருக்கேனாக்கும் நானு!

  ReplyDelete
 6. நீங்களும் 'முழுமையாகக் காயாத வற்றல்' பிரியர்தானா ஆயில்யன்?
  காக்காய் மேலெல்லாம் நாங்கள் பழி போட முடியாது. நாங்கள்தான் அந்தக் காக்காய்கள் எனத் தெரிந்து போகும்.

  ReplyDelete
 7. ஹைய்யோ ஹைய்யோ....

  ஆமாம். காக்காய் பார்க்க பைனாகுலரா? :-)))))

  அந்தப் படத்தில் நீங்க தான் 'கன்'பார்ட்டியா?

  ReplyDelete
 8. ஹி.ஹி..இல்லீங்க மேடம். நாம பைனாகுலர் பார்ட்டி! (hunting game விளையாடையிலே எடுத்த படத்தைப் பதிவுக்குப் பயன் படுத்திக்கிட்டேன். மற்றபடி காக்காய் விரட்ட நாங்களும் குடைகளைத்தான் பயன் படுத்துவோம்!)

  ReplyDelete
 9. காய்ச்சின கூழு, பாதி உலர்ந்த வத்தல், வேய்யில் வாசம்

  மதியம் காவல், காவலில் விழுங்கும் வத்தல்,வடாம். அந்த ஜவுக்கு ஜவுக்குனு ருசி.
  ஸ்ஸ்ஸ்ஸ். ராமலக்ஷ்மி டூ மச்.
  அண்டாக் கூழா!!!
  இப்ப கூழுக்காகத்தான் கூழே. வத்தல் கட லேருந்துதான்.

  ReplyDelete
 10. ராமலக்ஷ்மி, கூழ்க்கதை ச்சுப்பர்பா/ அதைவிட படங்கள் அழகு.
  எல்லாருக்கும் கூழுமேலயும் ஆசை.
  பாதி காஞ்ச கூழும் ஆசை. வத்தலை முறத்தில காயப் ப்போடும்போது பாதியை முழுங்கிடுவோம்.:)
  அண்டாக் கூழு நாளெல்லாம் போசே:(

  ReplyDelete
 11. எப்போது படித்தாலும் / நினைத்தாலும் புன்னகைக்க வைக்கும் மலரும் நினைவுகள் ....

  நம்ம ஊரு காக்காவுக்கு 2 கன், பைனாக்குலரா ??? நல்ல தமாஷ் போங்க ! கூழ் திருட வரும் காக்காக்களை சுட்டுருவீங்களோ :-(

  --RL

  ReplyDelete
 12. கூழின் பருவங்களை இன்னும் விலாவாரியா விவரித்து நாவிலே நீரூறச் செய்கிறீர்களே வல்லி!

  ReplyDelete
 13. RL said: //நம்ம ஊரு காக்காவுக்கு 2 கன், பைனாக்குலரா ??? நல்ல தமாஷ் போங்க ! //

  படமும் தமாஷுக்குதான். சரியாக அந்தப் பருவத்தில் எடுத்தது சிக்கியது.

  ReplyDelete
 14. RL said: //கூழ் திருட வரும் காக்காக்களை சுட்டுருவீங்களோ :-( //

  காக்காயைச் சுடுவதா? அம்மாடீ...!

  //(hunting game விளையாடையிலே எடுத்த படத்தைப் பதிவுக்குப் பயன் படுத்திக்கிட்டேன். மற்றபடி காக்காய் விரட்ட நாங்களும் குடைகளைத்தான் பயன் படுத்துவோம்!)// என நான் துளசி மேடத்துக்கு அளித்த பதிலைக் கவனிக்கலையா RL?  அப்புறம் அது என்ன hunting game-னு கேட்டிராதீங்க..நாங்களே விதவிதமா விளையாட்டுக்களைக் கண்டு பிடிச்சு வித விதமா பேரும் வச்சுக்குவோம்.

  ReplyDelete
 15. பெரியம்மாவின் செல்லமே!!
  ஆனாலும் உங்க பெரியம்மாவுக்கு
  அசாத்திய பொறுமைதான்!!
  நல்லாருந்துது உங்க கூழ் கதை, சுறுசுறுவென்றிருந்தது. இன்னும் நீங்களே பெயர்சூட்டி விளையாடும்
  விளையாட்டுக்களையும் பதிவிடுங்களேன்.

  ReplyDelete
 16. 'சுறு சுறு'வென்றால் மறுபடி வத்தலின் மொறுமொறுப்புத்தான் நினைவுக்கு வருகிறது நானானி!

  எங்கள் விளையாட்டுக்களைப் பற்றி எழுதணும்னா 10 பதிவாவது போடணும். பார்க்கலாம். 'ஐடியா (திலக) மேடம்' 'கொசு வர்த்தி' ஏற்றி வச்சுட்டீங்க! (எப்படி? நானும் வலை பாஷை கத்துக்கிட்டு கரெக்டா யூஸ் பண்றேனா?)

  ReplyDelete
 17. நல்லாவே தேறிட்டீங்க ராமலக்ஷ்மி.

  சில வலை உலகச் சொற்களுக்கு 'காப்பிரைட்' இருக்கு. அதை முதலில் தெரிஞ்சுக்கணும். அந்தந்தச் சொற்களைப் பயன் படுத்தும்போது சொற்களின் சொந்தக்காரர்களுக்கு நன்றின்னு ப்ராக்கெட் போடணும்.

  பிராக்கெட்டுக்குள்ளே போடணும்.

  உதா:
  கொசுவத்தி ( நன்றி. துளசி)
  க.கை.நா (நன்றி. துளசி)
  சொ.செ.சூ ( நன்றி. வரவனையான்)
  இப்படி.

  இன்னொண்ணு கொசுவத்தி எங்கிட்டேதான் வாங்கணும். ஹோல்ஸேல் விலையில் தருவேன்)

  இப்பப் புரிஞ்சதுங்களா? :-))))

  ReplyDelete
 18. நன்றி துளசி மேடம், முதலில் கண்ணைக் காட்டில் விட்டாற் போலிருந்தது. இப்போ கொஞ்ச கொஞ்சமா தேறிட்டு வராப்லதான் தெரியறேன். அதான் உடனுக்குடன் ஆதரவுக் கரம் நீட்டி, மோதிரக் குட்டுமிட நீங்கல்லாம் இருக்கீங்களே!

  ஹி..ஹி..அப்படியே
  "க.கை.நா":-(
  "சொ.செ.சூ":-( -க்கும் விரிவாக்கம் சொல்லிட்டீங்கன்னா ரொம்ப நல்லாருக்கும். யூஸ் பண்ணவும் கூடவே ப்ராக்கெட்டுக்குள் நன்றி சொல்லவும் வசதியாயிருக்கும்:-)))!

  ReplyDelete
 19. ஐயையோ....!நான் சொந்தாமல்ல கொசுவத்தி செஞ்சிட்டிருக்கேன். பரவாயில்ல..நம்ம துள்சிதானே!
  சேரியா?=நானானி தெரிஞ்சுக்கோங்க
  ராமலஷ்மி!!

  ReplyDelete
 20. "சேரியா"க்குக் காப்பிரைட் உங்களுக்குத்தான் நானானி,சேரியா?(நன்றி.நானானி)

  சொந்தமா கொசுவத்தி செய்து சிரமப் படாதீங்க! நமக்கே நமக்காக ஹோல்சேலில் கிடைக்கிறதே "மேட் இன் நியூஸி" ஸ்டிக்கரோடு:-)))!

  ReplyDelete
 21. :-)
  நானும் படத்தைப் பார்த்து, ஏதோ சம்பல்காட்டு ராணிகள் தான் தமிழ்நாட்டுக்கு வந்துட்டாங்களோ என்றெண்ணி ஏமார்ந்து போனேன்!
  :-)

  ReplyDelete
 22. அந்த வயதில் நாங்கெல்லாம் கற்பனைக் குதிரைகளில் சவாரி செய்த ஜான்ஸி ராணிகள்! சம்பல்-னு எல்லோரயும் பயம் காட்டாதீங்க ஜீவா!

  ReplyDelete
 23. //ஜான்ஸி ராணிகள்!//
  அதானே, தமிழ்ப்பெண்களின் வீர மரபுதான் குன்றிலிட்ட விளக்கல்லவோ!

  ReplyDelete
 24. ரொம்ப நன்றி ஜீவா! "உன்னோடு சேர்த்து எங்களையும் சம்பல்காட்டு ரேஞ்சுக்கு இறக்கி விட்டுட்டியே" எனத் தங்கைகள் இருவரும் 'பிலு பிலு'வென்று பிடிக்கும் முன் //வீர மரபு//,//குன்றிலிட்ட விளக்கு// என்றெல்லாம் வயிற்றில் பால் வார்த்து விட்டீர்கள்:-)))!

  ReplyDelete
 25. கூழ் மேட்டர் என்னோட ஞாபகத்தையும் கிளறிடுச்சு. அப்புறம்
  //தட்டட்டி//?

  தட்டடி, இல்லேனா மச்சின்னுதானே நம்மூர்ல சொல்வாவோ.

  ReplyDelete
 26. உங்கள் பதிவும் படங்களும் பழைய காலத்துக்கே கொண்டு செல்லுது.
  மன்னிக்கணும்.தெரியாததால கேக்குறேன்.கூழ்னா என்ன?அதை எப்படி சமைப்பாங்க?அதை வச்சு என்ன செய்வாங்க?

  ReplyDelete
 27. படத்தைப் பார்த்தா நம்ம ஊர் மொட்டை மாடி தனியாத் தெரியுதே!! அதுவும் அந்த ஓடுகள்.... எந்த ஊர் இது? திருநெல்வேலியேவா இல்லை பக்கம் வேற எதாவது ஊரா?

  அம்பியும் நானும் ஒரே ஊர்!:))

  ReplyDelete
 28. ஆஹா, சூப்பர் கொசுவத்தி பதிவு. எனக்கும் இந்த அனுபவங்கள் உண்டுங்க மேடம். வத்த காயப் போடற இடத்தில பையனுக்கு என்ன வேலைனு கேப்பீங்க. நீங்க சொன்ன அதே காரணம் தான். காக்கா, அணில் இதுங்க கிட்ட இருந்து வத்தல்களைக் காக்கும் படை. ஆனா துப்பாக்கி, பைனாக்குலர் எல்லாம் கிடையாது.

  பைனாக்குலர் வெச்சிருக்கறது நீங்களா. ஆஹா படமும் அந்தக் காலத்துக்கு இட்டு செல்கிறது. சூப்பர்.

  ReplyDelete
 29. ஆடுமாடு said:"//தட்டட்டி//?
  தட்டடி, இல்லேனா மச்சின்னுதானே நம்மூர்ல சொல்வாவோ."

  இருக்கலாம்.ஆனா, நாங்க மாடியை 'மச்சு' என்போம். மொட்டை மாடியை 'தட்டட்டி'.மச்சை ஒட்டியும் ஒரு திறந்தவெளி இருந்ததால் அது 'கீழ் தட்டட்டி'யாகவும், மற்றது 'மேல் தட்டட்டி'யாகவும் ஆயிற்று!

  ஆடுமாடு சார், உங்கள் புல்வெளியில் (வலைப் பூவில்) மேய்ந்து வந்தேன். என் favorite எழுத்தாளர் s.ராமக்கிருஷ்ணன் வலை வாசகர்களுக்காகவே எழுதும் வலைப் பூவுக்கு கொடுத்திருக்கும் link-க்கு மிக மிக மிக நன்றி! (அது என்ன புதுமையான புனைப் பெயர் ஆடுமாடு?).

  ReplyDelete
 30. இலவசக் கொத்தனார் said://படத்தைப் பார்த்தா நம்ம ஊர் மொட்டை மாடி தனியாத் தெரியுதே!! அதுவும் அந்த ஓடுகள்.... எந்த ஊர் இது? திருநெல்வேலியேவா இல்லை பக்கம் வேற எதாவது ஊரா?
  அம்பியும் நானும் ஒரே ஊர்!:))//

  கல்லிடைக்குறிச்சியாரே வருக! அப்பளத்துக்குப் பெயர் போன ஊரைச் சேர்ந்தவராததால் கூழ் கதை தானாகவே இழுத்து வந்து விட்டது:-)!

  அம்பிக்கு சொன்ன அதே பதிலை சொல்றேன். பூர்விகம் தேவநல்லூர் ஆனாலும்,நாங்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் ப்ராப்பர் நெல்லை ஜங்ஷன் சிந்து(ம்)பூந்துறையில். பூக்கள் சிந்திக் கிடக்கும் (தாமிர பரணி) படித்துறை என்று அர்த்தமாம்.

  மச்சில் வெயிலின் உக்கிரம் தெரியாமலிருக்க குளிர்ச்சிக்காக ஓடுகள். அவைதானே அந்தக் காலத்தில் நமக்கெல்லாம் ஏஸி!

  மிகப் புதுமையான புனைப்பெயர் உங்களுக்கும் இலவசக் கொத்தனாரே!

  ReplyDelete
 31. சதங்கா said:// வத்த காயப் போடற இடத்தில பையனுக்கு என்ன வேலைனு கேப்பீங்க. நீங்க சொன்ன அதே காரணம் தான். காக்கா, அணில் இதுங்க கிட்ட இருந்து வத்தல்களைக் காக்கும் படை. ஆனா துப்பாக்கி, பைனாக்குலர் எல்லாம் கிடையாது.//

  கேட்க மாட்டேன் சதங்கா! ஏனென்றால் 'இப் படை தோற்கின் எப்படை..' range-ல் என் அண்ணன்மார்கள் இருவர், தம்பி சகிதம்தான்
  காக்கா, அணில் விரட்டும் படலங்கள் இருக்கும்.

  [சொன்னேனே, படம் வேடிக்கைக்கான இடைச் செருகல்:-)! வேறொரு சந்தர்ப்பத்தில் ஒரு அண்ணன் direct செய்ய இன்னோரு அண்ணன்(கதையில் வரும் பெரியம்மாவின் மகன்) எடுத்தது]

  ReplyDelete
 32. எம்.ரிஷான் ஷெரீப் said...
  //உங்கள் பதிவும் படங்களும் பழைய காலத்துக்கே கொண்டு செல்லுது.
  மன்னிக்கணும்.தெரியாததால கேக்குறேன்.கூழ்னா என்ன?அதை எப்படி சமைப்பாங்க?அதை வச்சு என்ன செய்வாங்க?//

  என்ன ரிஷான் இப்படிக் கேட்டுட்டீங்க?
  புழுங்கல் அரிசியை (4 மணி நேரம் போல) ஊற வைத்து, மையாக அரைத்து, சிறிது தண்ணீரில் கரைத்துக் கொள்ள வேண்டும். பின் அளவான தண்ணீரைக் கொதிக்க வைத்து, கரைத்து வைத்த மாவை விட்டுக் கிண்டினால் கூழாகி வரும். விரல்களை நீரில் நனைத்துக் கூழைத் தொட்டுப் பார்த்தால் ஒட்டாத பக்குவத்தில் இறக்கி, நீர் வற்றல் என்றால் உப்பு, அரைத்த பச்சை மிளகாயுடன் அவரவர் சுவைக்கேற்ப சீரகம் அல்லது ஓமம் சேர்ப்பர். வெங்காய வற்றல் என்றால்,கூழைச் சற்று கெட்டியாகக் காய்ச்சி உப்புடன் அரிந்த சின்ன வெங்காயம், ப.மிளகாய் சேர்ப்பர்.

  முன்னிரவே தயார் செய்து கொண்டு மறுநாள் அதிகாலை, மொட்டை மாடியில் நனைத்துப் பிழிந்த வேட்டியை விரித்துக் குமிழ் குமிழாக வற்றலிட்டு, அவை வெயிலில் நன்கு உலர்ந்ததும் எடுத்து store செய்து, வேண்டும் போதெல்லாம் எண்ணெயில் பொரித்துச் சாப்பிட வேண்டியதுதான்.

  ஒரு கோடையில் செய்து அடுத்த கோடை வரை stock செய்வது வழக்கம். இப்போதெல்லாம் ready made ஆக super market-களில் கிடைக்கிறது. இலங்கையில் எப்படியோ தெரியவில்லையே!

  ReplyDelete
 33. ஆஹா அருமையான விளக்கம் ராமலக்ஷ்மி..நன்றி சகோதரி :)

  //இப்போதெல்லாம் ready made ஆக super market-களில் கிடைக்கிறது. இலங்கையில் எப்படியோ தெரியவில்லையே! //

  இலங்கையில் கடைகளில் கிடைக்கிறது.ஆனால் இதுபோல வீடுகளில் செய்வதில்லை.

  வெயில் அதிகமில்லை தானே..அதனால்தானோ என்னவோ.. :(

  ReplyDelete
 34. இப்படி ஊர் ஞாபகத்தைக் குடுத்து ஏங்க வச்சிட்டீங்களே :(

  ReplyDelete
 35. எம்.ரிஷான் ஷெரீப் said...
  //இலங்கையில் கடைகளில் கிடைக்கிறது.ஆனால் இதுபோல வீடுகளில் செய்வதில்லை.//

  கடைகளில் கிடைப்பவற்றை விட வீடுகளில் செய்யப்படுபவைக்கே சுவை அதிகம். பல வருடங்கள் சகோதரிகள் மூவருக்கும் அம்மாதான்(எனக்கு என் மாமியாரும்) செய்து அனுப்புவது வழக்கமாக இருந்தது. இப்போது எம் ஊரில் கோடையில் சிறு தொழிலாக பல வீடுகளில் இது செய்யப் படுவதால், வாங்கி அனுப்புகிறார்கள்.

  ReplyDelete
 36. கவிநயா said: //இப்படி ஊர் ஞாபகத்தைக் குடுத்து ஏங்க வச்சிட்டீங்களே :(//

  ஏங்க வைத்தாலும் அந்நினைவுகள் இனியவையாச்சே, இல்லையா கவிநயா?

  ReplyDelete
 37. Hey....good post...

  It brought me back to my good old dyas.. I am from Nellai Kaalidaikurichi(small town near by Ambai). My mom used to make Kool vathal...i had to take care of them :)

  Keep Posting!!

  ReplyDelete
 38. Maniz said...
  //Hey....good post...//

  Thank you.

  //My mom used to make Kool vathal...i had to take care of them :)//

  :))!

  //It brought me back to my good old dyas.. I am from Nellai Kaalidaikurichi(small town near by Ambai).//

  அப்பளத்துக்கும் பெயர் பெற்ற ஊராயிற்றே கல்லிடைக்குறிச்சி!

  ReplyDelete
 39. பழைய நினைவுகளை கிளறி விட்டு விட்டீர்கள்

  ReplyDelete
 40. tamilnadunews said...
  //பழைய நினைவுகளை கிளறி விட்டு விட்டீர்கள்//

  பதிவிட்டுப் பலநாள் கழிந்தும் இன்னும் பலரது நினைவுகளைக் கிளறியபடியேதான் இருக்கிறது:))!
  தாங்கள் ரசித்ததில் மகிழ்ச்சி.

  ReplyDelete
 41. அன்புச் சகோதரி!
  நீங்கள் என் வலைப்பூக்களுக்கு வந்து அங்குள்ள கவிதைகளை ரசித்து, பாராட்டு மடல்களிட்டுச் சென்றதற்கு படைப்பாளர்கள் சார்பில் என் நன்றி!
  இதோ, உங்கள் தளத்துக்குள் நான்!
  அருமையான படைப்புகளை வழங்கியுள்ளீர்கள். பாராட்டுக்கள்!
  இப்போது அலைபேசி குறுந்தகவல் வாயிலாக கவிதைகளை அனுப்பி, தங்கள் வாசகர் வட்டத்தை விரிவுபடுத்திவரும் இளங்கவிஞர்களை ஊக்குவிக்க, நான் www.smskavignarkal-world.blogspot.com என்னும் புதிய தளமொன்றையும் துவக்கியுள்ளேன். அத்ற்கும் தாங்கள் விஜயம் செய்து, அக்கவிஞர்களை ஊக்குவிக்க வேண்டுகிறேன்.
  எனது நகைச்சுவைத் தளங்கள்:
  www.girijamanaalan-humour.blogspot.com
  www.girijanandha-humour.blogspot.com
  www.humour-garden.blogspot.com

  நன்றி!
  - கிரிஜா மணாளன்.

  ReplyDelete
 42. @கிரிஜா மணாளன்
  இந்த பின்னூட்டம் எந்தப் பதிவுக்கானது என்பது வெளியிட்ட பிறகே தெரிய வந்தேன். பல நகைச்சுவை தளங்களுக்கு சொந்தக் காரர் விரும்புவது நகைச்சுவைதான் அல்லவா:))!

  வார்ப்பு.காமின் சரம் வழியே தங்கள் கவிதைப் பூங்கா வலைப்பூவுக்குள் வரும் வாய்ப்புப் பெற்றேன். இளம் கவிஞர்களை ஊக்குவிக்கும் உங்கள் பணி பாராட்டுக்குரியது. புதிய தளமும் அதே பாணியில் சிறப்பாக உள்ளது. நேரம் வாய்க்கையில் வந்து கண்டிப்பாக வாசிக்கிறேன். பலர் நல்ல திறன் படைத்தவர்களாக இருக்கிறார்கள். உங்களுக்கும் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

  உங்கள் பாராட்டுக்கும் என் நன்றிகள்.

  ReplyDelete
 43. உங்கள் புகைப்படத்தை பார்த்து இந்தப்பதிவு பக்கம் வந்தேன். ஆனால், படங்கள் ஒன்றும் இல்லையே, ஏன்?

  நல்ல பதிவு. நிறைய நினைவுகளை 'அமைதி அம்மா'வும் ரசித்தார்கள்.

  //மறுநாள் காலையில் 'பாலாடை' போல் படர்ந்த்திருக்கும் கெட்டியான 'கூழாடை'க்கு ஒரு போட்டா போட்டியே நடக்கும்.//

  எல்லா ஊர்களிலும் இப்படித்தானா? நாங்களும் விதிவிலக்கல்ல.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin