ஞாயிறு, 9 நவம்பர், 2025

மன்னிப்புக் கோர மறுப்பவள் - 'பண்புடன்' இதழ்: 6

மன்னிப்புக் கோர மறுப்பவள்


அவர்கள் அவளிடம் சொன்னார்கள் 
அவள் ஒரு அழகி அல்ல என்று,
அழகுக்காக அவர்கள் வரையறுத்திருந்த
லட்சணங்கள் எதுவும் அவளிடம் இல்லையென்று.

அவளது உடலின் எடை அதிகமென்றார்கள்
அவளது சிரிப்பு உரத்ததென்றார்கள்
அவளது தோலின் நிறத்தைக் குறிப்பிட்டார்கள்
அவளது கனவுகள் மிக உயரமானவை,
ஒரு பெண் எட்ட முடியாதவை என்றார்கள்.

அவர்கள் ஒருபோதும் பார்க்கவில்லை
அவளது கைகள் 
வெறுமையிலிருந்து அழகை உருவாக்குவதை,
அவளது பொறுமை 
வலிகளைச் சித்திரமாக மாற்றுவதை,
அவளது திறமைகள்
பேசுபொருளாகிப் புகழ் பெறுவதை. 

அவள் சிரித்தபோது 
அவளது முகத்தைப் பாராட்டியவர்கள்
வலியைத் தாங்கிக் கொண்ட 
அவளது வலிமையைப் பாராட்ட மறுத்தார்கள்.

அவர்கள் அவளை 
மிகச் சாதாரணமானவள் என்று அழைத்தார்கள்.
அவளிடம் அரசியல் குறித்தோ 
உலக நடப்புகள் குறித்தோ 
பேச இயலாது என்றார்கள்.
ஏனெனில், அவளது அசாதாரணத்தைக் காண 
எப்போதும் அவர்கள் மனம் விரும்பியதில்லை.

அவர்களது ஒவ்வொரு செயலும்
அவளுக்குள் ஒரு ஆயாசத்தை விதைத்தது
சுருங்கிப் போக, 
‘இது போதும்’ எனும் எண்ணத்துக்குள்
சத்தமின்றி மூழ்கிட.
முயன்றாள்
தன் குரல், தன் உடல், தன் மகிழ்ச்சி
அனைத்தையும் மறந்து
அவர்களது பலவீனமான எதிர்ப்பார்ப்புக்கு
புன்னகையுடன் பொருந்திப் போக.
ஆயின் அவளது பிரதிபலிப்பு 
அவளைத் திரும்பிப் பார்த்தக் கணத்தில்
கவனித்தாள்
அது கெஞ்சவில்லை, சோர்வுற்றிருந்தது.

உணர்ந்தாள்
இந்த உலகம் 
அவளது உடலை வெறுக்கவில்லை.
அதை நேசிக்கும் 
அவளது சுதந்திரத்தை வெறுக்கிறது.
மீண்டு வந்தாள்
மற்றவர்களை மகிழ்விக்க அல்ல
தான் வாழ.

அவர்கள் தொடர்ந்து பேசுகிறார்கள்
அவள் நிமிர்ந்து பதிலளிக்கிறாள்
மன்னிப்புக் கேட்கச் சொல்கிறார்கள்
மறுக்கிறாள்
நான் நானாக இருப்பதற்கு 
எதற்கு மன்னிப்பு என்கிறாள்.

இப்போது உலகம் உற்றுப் பார்க்கையில், 
அவள் திரும்பிப் பார்க்கிறாள்
சோர்வுடன் அல்ல,
தன்னுடனான சொந்தப் போரில் 
ஏற்கனவே வெற்றி பெற்ற அமைதியுடன்.
*

[படம்: AI உருவாக்கம்]
*

8 நவம்பர் 2025, பண்புடன் மின்னிதழில், 
நன்றி பண்புடன்!
***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin