ஞாயிறு, 10 அக்டோபர், 2021

சொல்வனம்: இதழ் 255 - புது ஜோடிச் செருப்புகளை அடக்குவது எப்படி? - கோபால் ஹொன்னல்கரே கவிதை

 


புது ஜோடிச் செருப்புகளை அடக்குவது எப்படி?


வற்றை ஒன்றாக விட்டு வைக்காதீர்கள்
அவற்றை ஒன்றோடு ஒன்று பேசிக் கொள்ள அனுமதிக்காதீர்கள்
அவை தொழிற்சங்கம் அமைக்கக் கூடும்.
எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அவற்றை 
சுவர்க் கடிகாரம், சட்டப் புத்தகங்கள், நாட்காட்டி, தேசியக் கொடி,
காந்தியின் உருவப்படம் அல்லது செய்தித் தாளின் அருகே வைத்து விடாதீர்கள்.
சுதந்திரம், சத்தியாகிரகம்,
விடுமுறைகள், வேலை நேரம், குறைந்தபட்சக் கூலி, லஞ்சம்
ஆகியவற்றைப் பற்றி அவை அறிந்திடக் கூடும்.
அவற்றைக் கோயிலுக்கு அணிந்து செல்லாதீர்கள்.
உடனேயே அவற்றுக்குத் தெரிய வந்து விடும் நீங்கள் எவ்வளவு பலகீனமானவரென
உங்கள் கடவுள் பொய் என, உங்களை அவை கடிக்கவும் கூடும்.
அவற்றை உங்கள் சாப்பாட்டு மேசை அருகே நெருங்க விடாதீர்கள்
அவை உணவைக் கேட்கக் கூடும்
அல்லது தமது தீய கண்களை உணவின் மேல் வைக்கக் கூடும்.
முதலில் அவற்றைச் சிறிய தொலைவு நடந்து வர மட்டுமே பயன்படுத்துங்கள்
பிறகு மெதுமெதுவாகத் தூரத்தை அதிகரியுங்கள்
அவர்கள் ஒருபோதும் தாம் செய்ய வேண்டிய வேலையின் அளவைத் தெரிந்து கொள்ளவே கூடாது.
இறுக்கமான அவற்றின் வார்களைத் தளர்த்துங்கள்
தாங்கள் வளர்கிறோம் என
அவை குதூகலிக்கட்டும்.
காய்த்துப் போன வார்களின் மேல் பழைய எண்ணெயைத் தடவுங்கள்
அபிஷேகம் செய்யப்பட்டதாக அவை பூரிக்கட்டும்.
தற்போது அவை உங்கள் கொழுத்த கால்களுக்கு
அதிகநேர வேலை பார்க்கத் தயாராகி விட்ட
நல்ல, அடங்கிய தொழிலாளர்கள்.

*

மூலம்: "How to Tame a New Pair of Chappals" by Gopal Honnalgere 

*


கோபால் ஹொன்னல்கரே (1942-2003) தற்போது காலத்தால் மறக்கப்பட்டு விட்டக் கவிஞர்களில் ஒருவராகி விட்டார் என்பது வருத்தத்திற்குரியது. இவர் கர்நாடகாவில் பிறந்தவர். ஹைதராபாத் நகரிலுள்ள ஓயேஸிஸ் பள்ளியில் கலை மற்றும் எழுத்தைக் கற்பித்து வந்தார். ஆறு புத்தகங்களை வெளியிட்டார் என்றாலும் அவை எவையும் இப்போது அச்சில் இல்லை. பல மேற்கத்திய கவிஞர்களோடு தொடர்பில் இருந்தவர். புதிரான மனிதராக  சராசரியான வாழ்க்கையை வாழ்ந்து, பரிதாபமான சூழலில் காலமாகியிருக்கிறார்.

இவரது முதலிரண்டு நூல்களும் [A Wad of Poems (1971) and A Gesture of Fleshless Sound (1972)] கல்கத்தாவில், பி. லால் உடைய எழுத்தாளர் பட்டறையில் வெளிக் கொண்டு வரப் பட்டன. மற்றன நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பிரபலமற்ற சிறு அச்சகங்களின் மூலமாக வெளியாகியிருக்கின்றன.

இவரது சில கவிதைகள் சி.டி நரசிம்மையாவின் “An Anthology of Commonwealth Poetry” (1990, Macmillan) நூலில் இடம் பெற்றுள்ளன. 

அவரது நண்பர்களின் அன்பான முயற்சியினால் சென்ற ஆண்டில் கொண்டு வரப்பட்ட The Collected Poems of Gopal Honnalgere (edited by K.A. Jayaseelan, Poetrywala, Mumbai, 2020) என்கிற  தொகுப்பில் அவரது அத்தனை புத்தகங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டக் கவிதைகள் இடம் பெற்றுள்ளன. இந்நூலைக் கொண்டு வந்ததன் நோக்கமாக நண்பர்கள் சிலாகித்திருப்பது யாதெனில், ‘ஆங்கிலக் கவிதைகளுக்கான பங்களிப்பாக, நம் நாட்டில், இந்திய மொழிமரபில்  எழுதப்பட்டக் கவிதைகள் இவை’! 

“கவிதையும் கவிஞரும்” எனத் தொகுப்பின் அறிமுக உரையில் ‘ஹொன்னல்கரேயின் முதலிரண்டு நூல்களும் அவரது இளம் பருவத்தில் எழுதப்பட்டவையாக இருக்க வேண்டும்’ என்கிறார், ஜெயசீலன். மேலும் இந்திய-ஆங்கிலக் கவிதைகளுக்கு நேர்த்தியான எடுத்துக்காட்டாக இருக்கும் இவரது கவிதைகள், பம்பாய் பள்ளிக் கவிதைகளை நினைவூட்டுவதாகவும், அதிநவீனக் கவிதைகள் மற்றும் அமெரிக்கக் கவிதைகளுக்கு ஈடாக எழுதி வந்த நிஸ்ஸிம் எஸெக்கியலின் கவிதைகளுக்கு நெருக்கமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ‘நிஸ்ஸிம் போன்ற நகர்ப்புறவாசிகள் தமது ஒரு காலை இந்தியாவிலும் ஒரு காலை வெளிநாட்டிலும் வைத்திருக்க, ஹொன்னல்கரே யார் என்ன சொல்வார்களோ என எதைப் பற்றியும் கவலைப்படாமல்,  தீர்க்கமான இந்திய-ஆங்கிலக் கவிதைகளைத் தந்தவர்’ எனப் பாராட்டியுள்ளார்.

ஹொன்னல்கரேயின் கவிதைகள் நவீனத்துவத்தின் மற்றொரு கிளையாக, அதே நேரம் தேசத்தின் உணர்வைப் பேசுவதாக இருக்கின்றன. நிச்சயமாக நகர்ப்புற வாழ்வைப் பற்றியதாக அன்றி, புறநகர் வாழ்வின் மெய்யாவணமாக விளங்குகின்றன.

அவரது எழுத்துகளிலிருந்து வெளிப்படுவது அவரது சித்திரம் மட்டுமல்ல நாட்டின் சித்திரமும் கூட. இந்தியாவில் நிலவும் சாதி மற்றும் அடக்கு முறையைச் சாடி, பரிகசித்து எழுதப்பட்ட  மேற்படிக் கவிதை இவரது முக்கிய படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

*

ஆசிரியர் குறிப்பு மற்றும் கவிதையின் தமிழாக்கம்: ராமலக்ஷ்மி

*

நன்றி சொல்வனம்!

***

10 கருத்துகள்:

  1. ஹொன்னல்கரே அவர்களைப் பற்றி தெரிந்து கொண்டேன்.
    அந்தக் காலத்து எழுத்தாளர்களும், கவிஞர்களும் வறுமையில் வாடி . நோய்வாய்பட்டு இறந்து இருக்கிறார்கள்.

    நீங்கள் பகிர்ந்த வர் கவிதை நன்றாக இருக்கிறது.
    சொல்வனத்தில் இடம் பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. கவிஞரைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.  பகிரப்பட்டிருக்கும் கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
  3. அருமையான கவிதை!சிறப்பான மொழி மாற்றம். நன்றி.

    பதிலளிநீக்கு
  4. பதிவு வந்த அன்றே பார்த்துவிட்டேன் ராமலக்ஷ்மி/. கருத்து போட்டும் போகவில்லை. இன்றும் படுத்தியது போட்ட கருத்து போகவே இல்லை.

    மீண்டும் முயற்சி.

    ஹொன்னல்கரே வித்தியாசமான கவிஞர் என்று தெரிகிறது அவரது கவிதை வித்தியாசமாக நல்ல கருத்துடன் இருப்பதால். கவிஞரைப் பற்றியும் தெரிந்து கொண்டோம். வாழ்த்துகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துக்கு மிக்க நன்றி.

      கருத்து பதிவாகாமல் போனதன் காரணம் தெரியவில்லை. பக்கம் லோட் ஆக நேரமெடுத்திருக்கலாம்.

      நீக்கு
  5. எளிய மக்களின் மறுக்கப்பட்ட உரிமைகளை, வலிகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் உணர்வுப்பூர்வமான வரிகள்.

    அவர்கள் மீது செலுத்தப்படும் அடக்குமுறை, சுரண்டல் இவற்றிலிருந்து விடுவிக்கும் பல சட்டங்கள் இயற்றப்பட இத்தகைய பங்களிப்புகளும் முக்கியமானது.

    நல்லதொரு கவிதை - கவிஞர் பற்றிய தகவல் அறிந்து கொள்ள முடிந்தது. நன்றி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin