திங்கள், 25 மார்ச், 2019

பேகல் கோட்டை - கேரளம் (1)

கேரளத்தின் காசரகோடு மாவட்டத்தில், . மங்களூரிலிருந்து 65கிமீ தூரத்தில், பேகல் எனும் இடத்தில் இருக்கிறது 40 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தில் ‘பேகல்’ கோட்டை.

#1

பம்பாய் திரைப்படத்தின் “உயிரே.. உயிரே..” பாடல் காட்சி படமாக்கப் பட்ட இடம் என்றால் உங்கள் எல்லோருக்கும் சட்டெனப் புரிந்து போகும். பலர் இந்தப் பாடல் கோவாவில் எடுக்கப்பட்டது என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

#2


இந்தக் கோட்டையின் சிறப்பம்சம் இது கடற்கரையோரம் அமைந்திருப்பது. கண்காணிப்பு கோபுரங்கள், தண்ணீர் தொட்டிகள், குகைகள், தளவாட கிடங்குகள் என்று பல வகை வரலாற்று ஈர்ப்புகள் இங்கு இருக்கின்றன. உள்ளே செல்லலாம் வாருங்கள்.

#3


கோட்டையைச் சுற்றி வர நீண்டு செல்லும் பாதைகள், முடிவில் ஆங்காங்கே கண்காணிப்புக் கோபுரங்கள்:

#3

#4

#5


#6


#7

பேகல் கோட்டையைப் பற்றிய வரலாற்றுத் தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம், வாருங்கள்:

#8

கேளடி நாயக்கர்களில் தனிப் பெரும் ஆட்சியாளராக கருதப்பட்டவர் சிவாப்பா நாயக்கர். தக்கான பிஜப்பூர் சுல்தான்கள், மைசூர் ஆட்சியாளர்கள், போர்த்துகீசியர்களை வென்று கர்நாடகத்தின் பெரும்பகுதிகளை ஆட்சி செய்த பெருமைக்கு உரியவர். பெட்னோரைச் சேர்ந்த இவரால் கட்டப்பட்டதே கிபி 1650_ஆம் ஆண்டு பேகல் கோட்டை என்கிறார்கள்.

அன்றைய நாட்களில் எல்லா அரசாங்கங்களுமே கடற்கரைக் கோட்டைகளால் பாதுகாத்து வரப் பட்ட நிலையில்  இது சிரக்கள் ராஜாக்கள் காலத்தில் முன்னரே கட்டப்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது என்றும் தகவல்கள் சொல்கின்றன.

ஹெச்.ஏ. ஸ்டுயர்ட் எனும் ஆய்வாளர் “கி.மு 1650-70 காலக் கட்டத்தில் சிவப்பா நாயக்கரால் பல கோட்டைகள் கட்டப்பட்டது உண்மைதான். ஆனால் பேகல் மற்றும் அதனருகே இருக்கும் சந்திரகிரி கோட்டைகள் சிவப்பாவின் படையெடுப்புக்கு முன்னரே கோலத்திரி அல்லது சிரக்கள் ராஜாக்களால் கட்டப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. பெட்னோர் மன்னர்கள் இதை சீரமைத்து மேம்படுத்தியிருக்கலாம்” எனத் தனது கையேட்டில் (Handbook of South Canara - 1985) குறிப்பிட்டிருக்கிறார்.

அதை உறுதி படுத்தும் விதமாக ஹிரிய வெங்கடப்பா நாயக்கர் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டு சிவப்பா நாயக்கரால் கட்டிமுடிக்கப்பட்டது பேகல் கோட்டை எனும் வரலாற்றுக் குறிப்பும் இருக்கிறது. சந்திரகிரி கோட்டையும் அதே காலத்தில் கட்டப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. வெளிநாட்டு எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளவும், மலபாரைக் கைப்பற்றவும் இவை அவசர அவசரமாகக் கட்டி முடிக்கப்பட்டனவாம். மலபாரைக் கைப்பற்ற வந்த திப்பு சுல்தானின் இராணுவக் குடியிருப்பாகவும் சில காலங்கள் இருந்திருக்கிறது பேகல் கோட்டை.

கோட்டைக்கு உள்ளே சில வீடுகள்..

#9

 #10

#11

#12

சமீபத்தில் அங்கே செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கிடைத்த நாணயங்கள் மற்றும் கலைப்பொருட்கள் ஆகியன மைசூர் சுல்தான்கள் இங்கு இருந்து சென்றதை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.

கோட்டையின் முக்கிய அம்சமாகக் கருதப்படுபவை ஏராளமான படிக்கட்டுகளுடன் கூடிய அதன் பிரமாண்டமான தண்ணீர் தொட்டி. அடுத்து கோட்டையின் தெற்குப் புறமாகச் சென்று சேரும் ஒரு சுரங்கப் பாதை, ஏறிச் செல்ல அகன்ற பாதையைக் கொண்ட கண்காணிப்புக் கோபுரம் ஆகியன.

#13
சுரங்கப்பாதை

கண்காணிப்புக் கோபுரம்
#14

#15

#16


அங்கிருந்து பார்க்கையில் சுற்றிவர இருக்கும் கொட்டிக்குளம், உடுமா, பள்ளிக்கரா, கன்ஹங்கட் , பேகல் என அனைத்து ஊர்களையும் பார்க்க முடியும்.  ஒரு காலத்தில் ஊர்களின் பாதுகாப்புக்கு இது மிகவும் பயனாகியிருந்திருக்கிறது. எதிரிகள் வருகை, ஊருக்குள் அவர்களால் சிறு சலசலப்பு என்றாலும் அங்கிருந்து கண்டு பிடித்து விடுவார்கள்.

#17

#18

#19


ஆங்காங்கே கண்காணிப்புக்காக இது போல அமைக்கப்பட்ட சதுரச் துவாரங்கள் கோட்டையின் பலமான பாதுகாப்புக்கான அஸ்திவாரங்கள். அதிலும் முக்கியமாக கவனிக்க வேண்டியது, கோட்டையின் மேல் பகுதியில் இருப்பவை எதிரிகள் வரவைக் கவனிக்கவும், சற்று கீழ் அமைந்த துவாரங்கள் எதிரிகள் சற்று தொலைவில் வரும் போதே தாக்கவும். கடல் மட்ட அளவில் அமைந்த துவாரங்கள் எதிரிகள் அருகே வரும் போது தாக்கவும் பயன்படுத்தப் பட்டு வந்திருக்கின்றன. மிக நேர்த்தியாக யோசித்து வடிவமைக்கப்பட்டக் கோட்டையாக இது திகழுகிறது.


டலுக்கு மிக அருகில் கட்டப்பட்ட இந்தக் கோட்டையில் முக்கால் வாசி வெளிப்புறப்பகுதி எப்போதும் அலைகளால் நனைந்த படியே இருக்கின்றன.

#20

#21

#22

#23

#24

ஆஞ்சநேயர் வீற்றிருக்கும் முக்கியப்ரணா கோவில், அதன் அருகே அமைந்த மிகப் பழமையான மசூதி ஆகியவை இங்கே அந்நாளில் நிலவி வந்த மத ஒற்றுமை, அமைதியைப் பறை சாற்றுவதாக உள்ளது. மற்ற இந்தியக் கோட்டைகள் போல அரசாளும் மையமாகவோ அரண்மனை, மாளிகை, கட்டிடங்களுடனோ இல்லாது, எதிரிகளிடமிருந்து நாட்டையும் மக்களையும் காப்பதற்கான ஒரே நோக்கத்துடன் அமைக்கப்பட்ட கோட்டை இது.

#25

1992ஆம் ஆண்டு  இந்திய அரசாங்கம் இந்தக் கோட்டையைச் சுற்றுலாத் தளமாக அறிவித்தது. மூன்று ஆண்டுகள் கழித்து மேலும் மேம்படுத்தி சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஈர்த்திடலாயிற்று. பம்பாய் படப் பாடல் மட்டுமின்றி பல விளம்பரங்கள், ம்யூஸிக் ஆல்பங்கள் ஆகியனவும் இங்கே படமாக்கப்பட்டிருக்கின்றன.

விரிந்த கோட்டை, பரந்த கடல் ஆகிய பிரமாண்டங்களைத் தவிர வேறு சுவாரஸ்யங்களை எதிர்பார்க்க முடியாது.

*

வரலாற்றுத் தகவல்கள்:
இணையத்திலிருந்து சேகரித்துத் தமிழாக்கம் செய்தவை.

**
நான்கு ஆண்டுகளுக்கு முன் சென்ற போது எடுத்த படங்கள். இப்பயணத்தின் அனுபவங்களை மேலும் நான்கு பதிவுகளாகப் பகிர்ந்திட உள்ளேன்.

***




18 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான தகவல்கள். சுவாரஸ்யமான இடம். சிறப்பான படங்கள்.

    பதிலளிநீக்கு
  2. விரிந்த கோட்டை என்று உங்களின் நுணுக்கமான புகைப்படங்கள் மூலம் உணர் முடிகிறது!அலைகள் மோதும் பாறைகள் கூட் முதலைகள் படுத்திருப்பது போல் காட்சியளிக்கின்றன!

    பதிலளிநீக்கு
  3. மிக அழகான கோட்டை.
    கடற்கரையும் அழகு.
    விவரங்கள் அருமை.
    பார்க்க ஆவலை தூண்டுகிறது படங்கள்.

    பதிலளிநீக்கு
  4. ஸ்வாரஸ்யமான தகவல்கள். படங்கள் அனைத்தும் அழகு.

    பதிலளிநீக்கு
  5. இதுவரை பார்த்திராத கோட்டை. வாய்ப்பு கிட்டும்போது அவசியம் செல்வேன். ரசிக்கத்தகுந்த புகைப்படங்கள்.

    பதிலளிநீக்கு
  6. ஒவ்வொரு படமும் கொள்ளை அழகு ..
    தகவல்களும் அருமை

    பதிலளிநீக்கு
  7. அழகான புகைப்படங்களோடு,சிறப்பான தகவல்களையும் உள்ளடக்கிய பதிவு.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin