புதன், 28 அக்டோபர், 2015

சார்லஸ் புக்கோவ்ஸ்கி கவிதைகள் (8,9) - சொல்வனம் இதழ்: 138



பட்டத்தினால் என்ன பயன்?

அவர்களால் அடைய முடிவதில்லை
அழகானவர்கள் தீச்சுடரில் மரிக்கிறார்கள்-
தற்கொலை மாத்திரைகள், எலிப் பாஷாணம், கயிறு 
எதுவாக வேண்டுமானலும் இருக்கட்டும்...
கைகளைக் கிழித்துக் கொள்கிறார்கள்,
சன்னல் வழியே தம்மை வீசி எறிகிறார்கள், 
கண்களைத் தோண்டிக் கொள்கிறார்கள்,
அன்புக்கு மறுப்பு
வெறுப்புக்கு மறுப்பு
மறுப்பு, மறுப்பு.

அவர்களால் அடைய முடிவதில்லை
அழகானவர்களால் சகிக்க முடிவதில்லை,
அவர்கள் வண்ணத்துப்பூச்சிகள்
அமைதிப்புறாக்கள்
சிட்டுக்குருவிகள்,
அவர்களால் அடைய முடிவதில்லை.

ஓங்கிய ஓர் தீச்சுடர் 
பூங்காவில் முதியவர்கள் சதுரங்கம் ஆடுகையில்
ஓர் சுடர், ஓர் நற்சுடர்
வெயிலில் 
பூங்காவில் முதியவர்கள் சதுரங்கம் ஆடுகையில்.

அறையின் விளிம்பில் அழகானவர்கள் 
சிலந்திகளாய், ஊசிகளாய், மெளனிகளாய்
நசுக்கப்பட்டுக் காணக் கிடைக்கிறார்கள்.
ஏன் நம்மை விட்டுச் சென்றார்கள் என
புரிந்து கொள்ளவே முடியவில்லை,
அவர்கள் மிகவும் அழகானவர்கள்.

அவர்களால் அடைய முடிவதில்லை
அருவருப்பானவர்களை அவர்களது அருவருப்பான வாழ்க்கைக்கு விட்டு விட்டு
இளமையிலேயே இறந்து போகிறார்கள் அழகானவர்கள்.

வெயிலில் பூங்காவில் முதியவர்கள் சதுரங்கம் ஆடுவதைப் போன்று
நேசிப்புக்குரியது, புத்திசாலித்தனமானது: வாழ்க்கை, தற்கொலை மற்றும் மரணம்.
**


முடிவு

மலர வேண்டிய நேரத்தில் 
மலர்வதைப் பற்றிய அக்கறையற்ற
ரோஜாக்களைப் போன்றவர்கள் நாம்.
காத்திருந்து
வெறுத்துப் போனது போலிருக்கிறது
சூரியன்.
**

மூலம்: 
Whats The Use Of A Title?
&
Finish
by
Charles Bukowski

படம்: இணையம்
*

இதழ் 138 , நன்றி சொல்வனம்!

12 கருத்துகள்:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin