திங்கள், 17 மார்ச், 2014

மு.வி. நந்தினி பார்வையில்.. அடை மழையின் ‘ஈரம்’: வேலைக்குச் செல்லும் பெண்களின் அசாதாரண தருணம்..

நான் பார்க்கும் பெரும்பாலான பெண்கள் திருமணத்திற்குப் பிறகு அல்லது குழந்தை பேறுக்குப் பிறகு வேலைக்குப் போவதை விரும்புவதில்லை. அல்லது அவர்கள் சார்ந்த குடும்பத்தில் இருப்பவர்கள் வேலைக்குப் போகவேண்டாம் என்று வற்புறுத்தி அவர்களை போக விடுவதில்லை. இந்த இரண்டு காரணங்களையும் என் விஷயத்தில் நடக்காமல் பார்த்துக் கொண்டேன். எப்போதும் நான் வேலைக்குப் போவேன் என்று திருமணத்திற்கு முன்பே என் வீட்டாரிடம் உறுதியாக சொல்லியிருந்தேன். அதன்படி திருமணமாகி, கர்ப்பம் தரித்திருந்த ஒன்பது மாதங்கள் வரை வேலைக்குச் சென்றேன். வேலையிலிருந்து விலகிய ஒரு வாரத்தில் எனக்கு பிரசவமானது. குழந்தை பேற்றுக்கு பிறகு, 3 மாதங்கள் வரை விடுப்பு கேட்டிருந்தேன். இன்னும் சிறிது காலம் குழந்தைக்கு அருகிலேயே இருக்க வேண்டிய தேவை இருந்தது. விடுப்பை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்க கேட்டேன். அலுவலகத்தில் ஒத்துழைத்தார்கள். குழந்தைக்கு அருகில் இருந்த 5வது மாதத்தில் குழந்தைக்கு மாற்று உணவுக்கு பழக்கினேன். குழந்தையும் ஒத்துழைத்தான். அருகருகிலேயே உறவுகள் அமைந்துவிட்டதால் குழந்தையைப் பார்த்துக்கொள்ள ஆள் தேடும் தேவை ஏற்படவில்லை. அவர்களே மாற்றி மாற்றி குழந்தையை பார்த்துக்கொண்டார். குழந்தையை விட்டு வேலைக்குப் போகிறோமே என்கிற செயற்கையாக உருவாக்கப்பட்ட குற்ற உணர்ச்சி எல்லாம் எனக்கு உண்டாகவில்லை. எனக்கென்றும் என் குடும்பத்திற்கென்றும் நான் வேலைக்குப் போகும் தேவையிருந்தது. இதில் குற்றவுணர்ச்சி கொள்ள ஏதும். இந்த குற்றவுணர்ச்சி பற்றி ஏராளமான பெண்கள் என்னிடம் கேட்டதுண்டு. அப்படி எதுவும் இல்லை, என் குழந்தை நான் அருகில் இருந்திருந்தால் இவ்வளவு விஷயங்களை கற்றுக்கொண்டிருக்க மாட்டான். அவன் தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தை உன்னிப்பாக பார்க்கிறான், அதிலிருந்து அவன் யாரும் சொல்லிக்கொடுக்காமலே கற்கிறான் என்று அவர்களிடம் பேசுவேன். அது அவர்களுக்கு உகந்த பதில் அல்ல, அவர்கள் எதிர்பார்ப்பது என் செய்வது என் தலை எழுத்து என்கிற புலம்பலைத்தான்.

உறவுகள் இருந்தார்கள் அதனால் அவர்களிடம் குழந்தையை விட்டுப்போவதில்லை என்ன பிரச்னை இருக்கப்போகிறது எனக்கேட்கலாம். சிலதை சொல்லிவிடுகிறேன். காலையில் நானும் கணவரும் அலுவலகம் கிளம்புவதற்கு முன் குழந்தைக்கு நாள்முழுக்கத் தேவைப்படும் உணவு, இயற்கை உபாதைகளை கழிக்க வைத்து குளிப்பாட்டுவது என எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிடுவோம். குழந்தை பராமரிப்பு நிலையங்களில் எப்படி எல்லா தயாரிப்புகளோடு கொண்டுபோய் விடுவோம் அப்படித்தான் எல்லாமும் நடக்கும். உறவுக்கு தனிப்பட்ட வேலைகள் இருக்கும், அவர்களை எதிர்பார்ப்பது நியாமற்றது. குழந்தையை பார்த்துக்கொள்வதே பெரிய உதவிதானே. ஆகவே, குழந்தை பராமரிப்பு நிலையங்களில் இருக்கும் சிக்கல் இங்கேயும் இருப்பது இயற்கையானதே. குழந்தைக்கு காய்ச்சல் என்றால் நாம்தான் அலுவலகத்துக்கு விடுப்பு போட்டு பார்த்துக்கொள்ள வேண்டும். பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சல் என்பது அவ்வப்போது வருவது இயல்பானதே. ஆனால் நம் உறவுகளும் சில சமயம் நம்முடன் வேலை பார்ப்பவர்களும் ஏற்படுத்தும் பீதி, அவஸ்தையான ஒன்று.



இந்த அவஸ்தையை அப்படியே படம் பிடித்து காட்டுகிறது. ராமலக்ஷ்மியின் அடை மழை சிறுகதை தொகுப்பில் இருக்கும் ஈரம் கதை. கதை நாயகியின் உணர்வுகள் என்னுடையதை பிரதிபலிக்கின்றன. சில சம்பவங்களைத் தவிர, ஒருவகையில் இது என் கதை, பிரசவித்து கைக்குழந்தையை வீட்டில் விட்டு அலுவலகம் செல்லும் பெண்களின் வலி இந்தக் கதை.

குழந்தையை தவிக்க விட்டுவிட்டு அலுவலகம் போவது சரியா என சென்டிமெண்ட் கேள்விகளைக் கேட்காமல், ஒரு அசாதாரண தருணத்தில் குழந்தைக்கு தாயின் அருகாமை தேவைப்படும் தருணத்தில் அந்தப் பெண்ணைச் சுற்றியுள்ள உலகம் அவளை எப்படி அழுத்துகிறது என்பதை சொல்கிறது இந்தச் சிறுகதை. பெண்கள் வேலைக்குப் போகக்கூடாது என்பது அல்ல இப்போதுள்ள பிரச்னை, ஒரு பெண்ணைச் சுற்றியிருக்கும் நபர்கள் அவளுக்கு தரும் ஒத்துழைப்பு எப்படிப்பட்டது என்பதே இந்தக் காலக்கட்டத்தில் வேலைக்குச் செல்லும் பெண்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவால். இப்படியொரு சிந்தனையை தூண்டுதலை ஏற்படுத்தியிருக்கிறது ஈரம். வேலைக்குப் போகும் பெண்களைக் கொண்ட குடும்பத்தில் இருக்கும் ஆண்கள் அவசியம் படிக்க வேண்டிய சிறுகதை இது.

அடைமழை தொகுப்பில் இருக்கும் 13 சிறுகதைகளும் வெவ்வேறு மனிதர்களின் உணர்களை, கலாச்சாரத்தை, வாழ்க்கையை சொல்கின்றன. வசந்தா, பொட்டலம் சிறுகதைகளில் அடித்தட்டு பெண்களின் அடக்கப்பட்ட வாழ்க்கையை அழுத்தமான சித்தரித்திருக்கிறார் ராமலக்ஷ்மி.

ராமலக்ஷ்மியின் கதை மாந்தர்கள், கதைக்களம் பெண்களுடையது மட்டுமல்ல. அவர் ஆண்கள், பெண்கள் என எல்லோருடைய உணர்வுகளையும் தன் எழுத்தில் பிரதிபலிக்கிறார். வலிந்து திணிக்காத இயல்பான எழுத்து இவருடையது. முதல் தொகுப்பிலேயே நம்பிக்கைக்குரிய எழுத்து அவரிடமிருந்து வெளிப்படுகிறது. வாழ்த்துக்கள்.

நூல் : அடைமழை
ஆசிரியர் : ராமலக்ஷ்மி
கிடைக்குமிடம்:
அகநாழிகை புத்தக உலகம்,
390, அண்ணா சாலை,
KTS வளாகம், முதல் தளம்,
சைதாப்பேட்டை, சென்னை – 15.

தபாலில் வாங்கிட:
aganazhigai@gmail.com

இணையத்தில் வாங்கிட:
http://aganazhigaibookstore.com/

அடை மழை

இலைகள் பழுக்காத உலகம்




மு.வி. நந்தினியின் “எழுத்தும் எழுத்து நிமித்தமும்” வலைப்பக்கத்தில்:

வேலைக்குச் செல்லும் பெண்களின் அசாதாரண தருணமும் ராமலட்சுமியின் சிறுகதையும்

‘அசாதாரண தருணம்..’ என பிரச்சனை குறித்த என் பார்வையை அப்படியே பிரதிபலிப்பதாக அமைந்த தங்கள் பகிர்வுக்கும், நூல் அறிமுகத்திற்கும் நன்றி நந்தினி!

***

25 கருத்துகள்:

  1. நல்ல விமர்சனம். தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதை ஈரம். இதை உங்களிடமும் அச்சிடுவதற்கு முன்பே கடந்த வருடம் சொல்லியிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. அருமையான விமர்சனம்
    அவசியம் தொகுப்பை வாங்கிப் படித்துவிடுவேன்
    பகிர்வுக்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  3. நல்ல விமர்சனம்.

    நானும் படித்து முடித்து விட்டேன்..

    பதிலளிநீக்கு
  4. ஆழ்ந்த பார்வையில் எழுதப்பட்ட அருமையான விமரிசனம்...

    பதிலளிநீக்கு
  5. அசாதாரணநேரங்களின் கனமான தொகுப்பை அருமையாக விமர்சித்திருக்கிறீர்கள்..
    பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  6. தங்கள் அனுபவத்துடன் ஒரு கதையின் சம்பவங்கள் ஒத்துப் போகும்போது மனதுக்குப் பிடித்து விடுகிறது. அந்த வகையில் வாழ்வியல் சம்பவங்களுடன் இயைந்து எழுதப்பட்டவை உங்கள் கதைகள். பாராட்டப்படுவதில் வியப்பில்லை. சிறந்த முறையில் பகிர்ந்திருக்கிறார் திருமதி நந்தினி. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. @அகநாழிகை,

    நன்றி. ஆம், அப்போதே சொன்னீர்கள்.

    ஈரம் குறித்த அருமையான இந்த விமர்சனத்திற்கும், நூல் அறிமுகத்திற்கும் (மேலும் தனக்குப் பிடித்த கதைகள் பற்றி தொடர்ந்து பகிர்ந்து கொள்வதாகச் சொல்லியிருக்கிறார்) நந்தினிக்கு நம் நன்றி.

    பதிலளிநீக்கு
  8. @Ramani S,

    மகிழ்ச்சி. வாசித்த பின் உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  9. @வெங்கட் நாகராஜ்,

    காத்திருக்கிறேன் உங்கள் கருத்துகளை அறிய:). நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  10. அருமையான விமர்சனம்... வாங்கிப் படிக்க வேண்டும்... நன்றி...

    பதிலளிநீக்கு
  11. நந்தினி அவர்கள் அழகாய் ஈரம் கதையை விமர்சனம் செய்து இருக்கிறார்.

    வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  12. படிக்கும் ஆவலைத்தூண்டும் விமர்சனம். கண்டிப்பாக படிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  13. மேன்மேலும் பற்பல சிறப்புகளைப் பெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  14. ஒரு கேள்வி.....கதை நாயகி 5 மாதத்தில் குழந்தையை காப்பகத்தில் விட்டு வேலைக்கு செல்கிறார். இந்த 5 மாதம் என்ற காலம் யாரால் நிர்ணயிக்கப்படுகிறது ? அலுவலகத்தில் 3 மாதத்திற்கு மேல் விடுப்பு தராவிடில்......, குழந்தைதான் தன்னை தயார்படுத்தி கொள்ளவேண்டும்

    பிறந்த ஆறே வாரங்களில் குழந்தையை காப்பகத்தில் விட்டுச்செல்லும் அவலமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஏனென்றால் பேறுகால விடுப்பு 6 வாரங்கள் மட்டுமே.

    பதிலளிநீக்கு
  15. @KARMA,

    கதையை முழுதாக வாசிக்கும் போதுதான் இதுபோன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கும். 6 வாரமே விடுப்பு... மறுக்கவில்லை. ஆனால் தன் திறமைக்கு எப்போது வேண்டுமானாலும் வேலை கிடைக்கும் என்கிற நம்பிக்கையில், ஒரு வருடமேனும் வேலைக்கு செல்ல வேண்டாம் என்பது அவளது முடிவாக இருந்தது. ஐந்தாவது மாதத்தில் கணவனின் வற்புறுத்தலால் செல்ல நேருகிறது. அதே அலுவலகம் அவளை நிபந்தனைகளுடன் சேர்த்துக் கொள்கிறது என்பதாக நகருகிறது கதை. தங்கள் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin