திங்கள், 2 ஏப்ரல், 2012

ஜல்ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி - அமீரகத் தமிழ்மன்ற ஆண்டுவிழா மலரில்


சுப்பையாத் தாத்தாவிடம் கதை கேட்பதென்றால் குழந்தைகள் எல்லோருக்கும் அத்தனைப் பிரியம். வயதாகி விட்டாலே இயலாமையின் விளிம்பில் இளமைக்கால பிரதாபங்களை எடுத்து விடும் இயல்புக்கு விலக்கில்லை தாத்தாவும். அறுபதை நெருங்கிய ஒடிந்த தேகம். முறுக்கி விட்ட வெள்ளை மீசையும், பம்மென அடர்ந்த நரை முடியும், கணீர் குரலுமாகக் கம்பீரத் தோற்றம் முழுவதுமாகக் குலைந்து விடாததாலேயே அந்த குடியிருப்பின் காவல்காரராக காலரைத் தூக்கி விட்டுக் கொள்கிறார் இன்னும் தான் காளைதான் என்ற நினைப்பில்.

பள்ளி விட்டு வரும் குழந்தைகள் பட்டாளமாக தினசரி மாலை நேரத்தில் அவரைச் சூழ்ந்து கொள்வார்கள். ஏழு மலை தாண்டி ஏழு கடல் தாண்டி அடைக்கப்பட்ட இளவரசியை அரக்கனிடமிருந்து மீட்க இளவரசன் போராடும் மந்திர தந்திரக் கதையில் வரும் தாக்க வரும் பறக்கும் பாம்புகளும், விழுங்க வரும் விசித்திர மிருகங்களும் இன்றைய ஹாரி பாட்டர் கதையை விட சுவாரஸ்யமாக இருப்பதைக் குழந்தைகள் உணர்ந்திருந்தார்கள். சிந்துபாத் கதையைப் போல முடிவில்லாமல் அவர் ஏற்ற இறக்கத்துடன் தொடருவதைத் தினம் கேட்காவிட்டால் தலை வெடித்துப் போகும் பிள்ளைகளுக்கு. தொலைக்காட்சிக்குள் தொலைந்து போகும் இன்றைய பிள்ளைகளை இப்படிக் கட்டிப்போட முடிகிறதென்றால் தாத்தா நிஜமாகவே கெட்டிக்காரர்தான்.

ஒவ்வொரு நாளும் மந்திரக் கதைக்குத் ‘தொடரும்’ போட்ட கையோடு தவறாமல் பிள்ளைகளுக்குச் சொல்வது தன் சொந்தப் பிரதாபத்தை. அவரே அலுத்து ‘போங்க புள்ளைகளா. போய்ப் படிங்க. வீட்டுல திட்டப் போறாங்க’ என்றாலும் பிள்ளைகள் விட மாட்டார்கள். ‘சொக்கன், சோலைக் கதயச் சொன்னாத்தான் ஆச்சு’ எனப் பிடிவாதம் பிடிப்பார்கள். அப்படி அவர்களைக் கொஞ்சம் பிடிவாதம் பிடிக்க விட்டுக் கதையைத் தொடங்குவதில் கூட உள்ளூர ஒரு பெருமிதம் இருந்தது சுப்பையாவுக்கு.

த்து வருடங்களுக்கு முன்னால் வரை சுப்பையா முக்கூடல் பண்ணையார் ஒருவரிடம் வேலை பார்த்து வந்தார். அப்பா, தாத்தா எனப் பரம்பரையாக அங்கே வேலைக்கு இருந்தார்கள். தாத்தா வயலில் வேலை செய்தார் என்றால் அப்பா பண்ணையார் குடும்பத்துக்கு வண்டி ஓட்டினார். ‘வண்டின்னா என்ன வண்டின்னு நினைச்சீங்க’ என்பார். குழந்தைகள் ‘தெரியும் தாத்தா’ என வாயை மூடிக் கொண்டு சிரிப்பார்கள்.

‘ஜல் ஜல்’ எனச் சலங்கைகள் குலுங்க ஓடும் மாடுகள் பூட்டின வண்டி. சுப்பையா சின்ன வயதிலிருந்தே அப்பா வண்டி ஓட்டுகையில் முன்னால் தானும் இடுக்கிக் கொண்டு உட்கார்ந்து கொள்வார். மாடுகளை எப்படிச் செலுத்த வேண்டும் என்பது பத்து வயதிலேயே அத்துப்படி.

அடுத்த பத்து வருடத்தில் அப்பா சாட்டைகளை இவர் கையில் கொடுத்து விட்டார். அப்போதிலிருந்து பண்ணையார் குடும்பத்துக்கு முப்பது வருடம் இவர்தான் வண்டிக்காரர். என்னதான் வீட்டுக்கு இரண்டு மோட்டார் கார்கள் வந்து விட்டாலும் கம்பீரமான காளைகள் பூட்டிய வண்டியில் ஊருக்குள் போய் வந்தால்தான் மரியாதை என எண்ணிய குடும்பம் அது. அதுவும் எப்பேற்பட்ட காளைகளானாலும் இவரிடம் கன்றுக்குட்டிகளாய் அடங்கிக் கிடக்கும். அதைப் பார்த்தே ஊர் மக்கள் இவரிடம் பெரிய மரியாதை காண்பித்தார்கள். குறிப்பாக இளவட்டப் பையன்கள் பார்த்தால் ‘அய்யா செளக்கியமா’ எனக் கையெடுத்துக் கும்பிடுவார்கள். அதிலும் கடைசியாக இவர் வண்டியில் பூட்டி வந்த சோலையும் சொக்கனும் ஏகப் பெருமையைத் தேடி தந்து விட்டுருந்தார்கள்.

இரண்டும் அச்சில் வார்த்தது போல ஒரே மாதிரி வெள்ளை வெளேரேன முக்கால் அடிக்குத் திமிலும், ஒன்றரையடி உயரக் கூரிய கொம்புகளுமாகப் பார்ப்பவர்களை மிரட்டும். வளர்ந்த கன்றுகளாக வாங்கப்பட்டு இவராலேயே வளர்க்கப்பட்டவை என்பதால் இவரைத் தவிர எவருக்கும் அடங்காது. மாட்டுப் பொங்கலுக்கு வழக்கத்தை விட வைக்கோலைப் பந்தாகச் சுருட்டி நன்றாகத் தேய்த்துக் குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, நெற்றியிலே பளீரெனத் திலகமிட்டு, கழுத்திலே மாலையில் கரும்புத் துண்டுகள், பனங்கிழங்குகளுடன் பண்ணையார் கொடுக்கும் பணமுடிப்பையும் மஞ்சள் துணியில் முடிந்து கட்டி ஊர் உலா கூட்டிச் செல்வார். ஊர் உலா என்பது நான்கைந்து தெருக்கள் வழியே கூட்டிச் சென்று மீண்டும் வீட்டுக் கொட்டகைக்கு அழைத்து வருவதுதான். ஒருவகையில் இது சிறிய அளவிலான ஜல்லிக்கட்டு போலதான். மாடு வளர்க்கும் எல்லா வீடுகளிலும் இந்த வழக்கம் இருந்தது. சூரிய அஸ்தமன நேரத்தில் இப்படி வீர உலா கிளம்புகையில் திருஷ்டி கழிக்க என புறவாசலின் முன் வைக்கோலைப் போட்டு தீமூட்டி அதை மாடுகளைத் தாண்டச் செய்வார்கள்.

சோலையும் சொக்கனும் ‘ஹை ஜம்ப்’ செய்து அஞ்சாமல் தாண்டும் அழகைக் காணப் பாதுகாப்பாய் வீட்டுச் சுவர்களின் மேல் ஏறி நின்று காத்திருப்பார்கள் சிறுவர்கள். வாலிபப் பசங்களோ ஊரின் மற்ற அனைத்து மாடுகளின் கழுத்து முடிப்புகளையும் கைப்பற்றியக் களிப்புடனேயே திருப்தி அடைந்து விடுவார்கள். இந்த ஜோடியைப் பிடிப்பதாய் ‘பாவ்லா’ காட்டக் கூடப் பயந்து, சிறுவரைப் போல் மதில் மேல் ஏறி நின்றாலும் வெட்கக் கேடு எனப் பல்லிகளாய் சுவரோடு ஒட்டி நின்று வெறுமே வேடிக்கைதான் பார்ப்பார்கள். யாரும் கை வைக்கத் துணியாத பணமுடிப்பும் சுப்பையாவுக்கே கிடைத்தது. ஆனாலும் தான் அதை எடுத்துக் கொள்வது முறையல்ல எனச் சிறுவர்களை அழைத்துப் ‘புடிங்கடா பொங்கபடி’ எனக் கொடுத்து விடுவார்.

ந்தக் கதையை விலாவாரியாக அவர் விவரிக்கையில் பிள்ளைகள் கண்கள் ஜொலிக்கத் திறந்த வாய் மூடாமல் கேட்டுக் கொண்டிருப்பார்கள். நாலு தெருக்களையும் சுற்றி அவை எப்படி ஜல்ஜல் எனக் கம்பீரமாக ஓடிவருமென நடித்தும் காண்பிப்பார். அதனாலேயே அது ‘ஜல் ஜல் மாட்டுக்கதை’ ஆகிப் போனது பிள்ளைகளுக்கு. அதுவரைக்கும் உற்சாகமாய் சொல்லிக் கொண்டே வரும் தாத்தாவின் குரல் கதையின் பின்பாதியில் சுருதி இறங்கிப் போகும்.

பண்ணையாருக்கு இறங்கு முகம் வந்தது. யாரோ சொன்னதைக் கேட்டு திரைப்பட விநியோகத்தில் இறங்கிய பண்ணையார் நன்றாகக் கையைச் சுட்டுக் கொண்டார். குடியிருந்த வீடு உட்பட எல்லாவற்றையும் விலை பேச வேண்டி வந்த நிலைமை அவர்மேல் பொறாமை கொண்டிருந்தவர்களுக்குக் கூடப் பச்சாதாபத்தை வரவழைப்பதாய் இருந்தது. மாடுகள் வேறு யாருக்கும் அடங்காது என்பதால் மட்டுமல்ல, ஒரு காலத்தில் தனக்குப் பால்ய சிநேகிதனாகவும் இருந்த சுப்பையாவுக்கு அந்த மாடுகளைப் பணம் வாங்காமல் கொடுத்துச் செல்வதுதான் பரம்பரையாக உழைத்த அவர் குடும்பத்துக்கு தான்செய்யும் பிரதி உபகாரமாக இருக்கும் என்றாலும் அந்த நிலையில் கூடத் தான் இல்லாததை எங்கோ பார்த்தபடிச் சொன்னார் பண்ணையார். பணம் கைமாற பக்கத்து ஊர் ஜமீன் வீட்டில் சுப்பையாதான் மாடுகளை ஒப்படைத்து விட்டு வந்தார்.

மறுநாள் விடிந்தபோது ஊரெல்லாம் ஒரே பேச்சு, ஜமீன் வீட்டு வேலையாளை ஒரு காளை தூக்கி வீசியதில் ஆள் உயிரையே விட்டு விட்டதாக. பண்ணையார் அடுத்தவாரத்தில் ஊரைக் காலி செய்யும் முன்னரே வாங்கிய மாடுகளை ஜமீன் யாருக்கோ விற்று விட்டதாகக் காற்று வாக்கில் செய்தியும் வந்தது. “இப்போ என் கண்ணுங்க எங்கன இருக்கோ. எப்படி இருக்கோ தெரியாது’ எனத் தழுதழுப்பாய்க் கதையை முடிப்பார். பிள்ளைகளையும் சோகம் தொற்றிக் கொள்ளும். ‘சரி தாத்தா நாளைக்கி வாரோம்’ என விடைபெற்றுச் செல்வார்கள். எல்லோரும் கலைந்து சென்ற பின்னரும் மாடுகளின் சலங்கை ஒலி கொஞ்ச நேரம் அவருக்குக் கேட்டுக் கொண்டிருக்கும். அதில் ஒரு ஆறுதலும் கிடைத்து வந்தது அவருக்கு.

னைவியும் தவறிப்போய் பிள்ளைக் குட்டிகளும் இல்லாது அனாதரவாக நின்றவருக்கு ஊரை விட்டுப் போகும் முன் பண்ணையார் செய்த நல்ல காரியம் ஹைகிரவுண்டில் வசித்த காண்ட்ராக்டர் நண்பர் ஒருவரிடம் வேலைக்குச் சேர்த்து விட்டதுதான். கொஞ்ச காலம் கட்டிட வேலைகளுக்கு நம்பிக்கையான மேற்பார்வையாளராக இவரை வைத்திருந்த காண்ட்ராக்டர் பின்னர் இவர் வயதை மனதில் கொண்டுத் தான் கட்டிய ஒரு குடியிருப்பிலேயே காவலாளி வேலை வாங்கிக் கொடுத்து விட்டார். ஷிஃப்ட் வேலைதான். ஒருவாரம் காலை ட்யூட்டி என்றால் ஒருவாரம் இரவு பார்க்கவேண்டும். இவருக்கு மட்டும் அவுட் ஹவுசிலேயே ஜாகை. வளாகத்திலேயே இருந்ததால் குடும்பங்களுடனான நெருக்கம் அதிகமாக இருந்தது. ட்யூட்டி இல்லாத நேரத்தில் அவரைக் கடைகளுக்கு அனுப்புவார்கள். சம்பளம் போக இந்த வேலைகளுக்கு அன்பளிப்பாகத் தனியாகக் கிடைக்கிற ‘டிப்ஸு’ அவருக்கும் பிடித்திருந்தது.

அப்படிதான் அன்று வக்கீல் ‘வீட்டம்மா’ ஒரு வேலை கொடுத்திருந்தார். தூக்குச் சட்டியுடன் பேட்டை பக்கத்தில் ஒரு முகவரியைக் கொடுத்து நல்லெண்ணெய் வாங்கி வரச் சொன்னார். பொதுவாக தொலைவாகச் செல்ல வேண்டிய வேலைக்கு யாரும் இவரை அனுப்புவதில்லை. வழக்கமாக வாங்கிவரும் டிரைவர் தன் மகளுக்குக் கல்யாணம் எனப் பத்து நாள் லீவில் போயிருக்கும் சமயத்தில் எண்ணெய் தீர்ந்து விட்டதாம். அவசரத்துக்குப் பாக்கெட் எண்ணெயை வாங்கிச் சாடியில் ஊற்றி வைத்தால் முதல் வாயிலேயே கண்டு பிடித்துச் சாப்பிட மறுத்து விடுவானாம் மகன். ட்ரைவருக்கு ஃபோனைப் போட்டுக் கையில் கொடுத்து எங்கிருக்கிறது இடம் என்பதைக் கேட்டுக் கொள்ளச் சொன்னார்.

“ஹஹ்ஹ ஒம்ம தலயில கட்டிட்டாங்களா?” என்ற ட்ரைவர் குரலைத் தாழ்த்தி “அந்தப் பையன் இட்லியில எண்ணய ஊத்தித் திங்க மாட்டான் ஓய். எண்ணயில இட்லிய ஊறவச்சுத் திம்பான். அதும் அப்பப்ப எடுக்கிற எண்ணதான் வாசமா இருக்குமுன்னு மாசத்துல நாலுவாட்டி தூக்குச் சட்டியக் கையில திணிச்சுரும் அந்தம்மா” என சிரித்து விட்டுதான் எப்படிப் போக வேண்டும் என்பதை விளக்கினார். வேலைபார்க்கும் இடத்தில் விசுவாசமாக இருந்தே பழகிவிட்டத் தாத்தாவுக்கு ஆரம்பத்தில் இந்த மாதிரிப் பேச்சுகள் அதிர்ச்சி அளித்தன என்றாலும் இப்போதெல்லாம் பழகி விட்டது. அசூயையைக் காட்டிக் கொள்ளாமல் ‘உச்’சுக் கொட்டிக் கேட்டுக் கொண்டார்.

எண்ணெய்க்கான பணத்துடன் போய்வரும் வேலைக்காக நூறு ரூபாயும் பஸ் கட்டணம் தனியாக இருபது ரூபாயும் எனத் தாரளமாகதான் கொடுத்த வக்கீல் வீட்டம்மா, “ரொம்ப வெயிலா வேற இருக்கு. தேவைப்பட்டா பஸ் ஸ்டாப்புலருந்து ஆட்டோ பிடிச்சுக்குங்க தாத்தா. அதுக்குதான் இப்பவே ஒரு நூறைத் தந்திருக்கேன். ஆட்டோக்கு ஆச்சுன்னா அத அப்புறமா கேட்டு வாங்கிக்குங்க. கொடை வேணுமா” என்றார் பரிவுடன். “வேண்டாம் தாயீ. எல்லாம் நான் பாத்துக்கறேன்” எனக் கிளம்பினார்.

பேட்டை பேருந்து நிலையத்தில் இறங்கி நடக்கையில் எதிரிலிருந்த பேருந்திலிருந்து “சித்தப்பா” எனக் கூவியபடி கைப்பிள்ளையோடு இறங்கி மூச்சிறைக்க ஓடி வந்தாள் ஒன்று விட்ட அண்ணன் மகள் செண்டு. “நல்லாருக்கியா சித்தப்பா. ஒன்னய இங்கனப் பாப்பேன்னு நெனைக்கவே இல்ல. எங்கயோ கட்டடக்காரருட்ட வேலைக்குப் போயிட்டதா சனங்க அப்பப்ப பேசிப்பாங்க. இடந் தெரிஞ்சாலும்தான் நான் பெத்துப் போட்ட எந்த மூதி கூட்டி வந்துக் காட்டப்போகுது போ. இந்தா இந்தப்புள்ளய தொட்டு ஆசிருவாதம் பண்ணு. நம்ம வள்ளியோட தலச்சம்புள்ள. போன வாரம்தான் மொட்ட போட்டுக் காது குத்தி மொதப் பொறந்தநா கழிச்சோம். புருசனோட பங்காளி வூட்டுக் கல்யாணமுன்னு என்னய தொணைக்கி அழைச்சுட்டு வந்தா." என்றவள் திரும்பி “ஏ புள்ள வள்ளி. சின்னத் தாத்தா பாரு” எனக் கூப்பாடு போட, பேத்தி தன் கணவனையும் இழுத்துக் கொண்டு முகம் மலரப் பேருந்திலிருந்து இறங்கி ஓடிவந்தாள்.

கொள்ளுப் பேரனைப் பார்க்க அண்ணன் இல்லை. குடும்பம் தழைக்கக் கொடுப்பினை இல்லாத தன் கையில் மகள் செண்டு அந்தச் சின்னத் தளிரைக் கொடுத்தபோது கண்கள் கலங்கிப் போயின. சட்டைப் பையிலிருந்த நூறு ரூபாயை எடுத்துக் குழந்தையின் விரல்களில் செருகினார். செண்டும் வள்ளியும் அவர் கால்களில் விழுந்து எழுந்தார்கள்.”கும்புட்டுக்கய்யா” என புருசனையும் விழ வைத்தாள் பேத்தி. “பஸ்ஸு கெளம்பப் போகுது. ஊர்ப்பக்கம் முடியறப்போ வந்துட்டுப் போ சித்தப்பா” கலங்கியபடிச் சொன்னாள் செண்டு. பஸ் மறையும் வரை கையசைத்தபடி நின்றிருந்தார் சுப்பையா. சொந்தமெனச் சொல்லிக் கொள்ள யாருமில்லாத தன் மேல் பாசம் காட்ட ஒன்றிரண்டு ஜீவன்களையாவது கடவுள் உலகில் விட்டு வைத்திருக்கிறாரே என எண்ணியபடியே ட்ரைவர் சொன்ன வழியில் போய் எண்ணெய் மண்டியைத் தேடிக் கண்டு பிடித்தார்.

பெரிய கதவுகளைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தவர் முற்றம் தாண்டி இருந்தக் கட்டிடடத்தின் வாசல் முன்னிருந்து ‘அய்யா அய்யா’ எனக் குரல் கொடுத்தார். அவ்வளவுதான். தடதட என ஏதோ உருளுகிற மாதிரியான சத்தம். தொடர்ந்து “ம்மா.. ம்மா..” தவிப்பான கோரஸ் குரல். சுப்பையாவுக்கு அப்படியேத் தூக்கிப் போட்டது. ‘பொத்’தெனக் கையிலிருந்த தூக்குச் சட்டி நழுவி விழுந்தது. உடம்பின் ஒவ்வொரு நரம்புகளும் தனித்தனியாக அதிர, உச்சி மண்டைக்குள் இரத்தம் ஜிவ்வெனப் பாய, குரல் வந்த புழக்கடையை நோக்கி நீண்டு கிடந்த முடுக்கு வழியாக ஓடினார். அவர் கண்களை அவரால் நம்பவே முடியவில்லை.

ஆம் சோலைதான். சொக்கன்தான். இவரிடம் ஓடிவரத் தம்மைக் கட்டியிருந்த சங்கிலிகளிலிருந்து விடுவிக்க அவை போராடிய சத்தம்தான் கேட்டிருந்திருக்கிறது. தலையை இட வலமாக வேகவேகமாக ஆட்டியபடி அலைபாய்ந்து கொண்டிருந்தார்கள். தாங்க மாட்டாமல் “சொக்கா.. சோலே..” அடிவயிற்றிலிருந்து கத்தியபடி ஓடிச் சென்று அவற்றை அணைத்துக் கொண்டார். மாடுகள் இரண்டின் கண்களிலிருந்தும் கரகரவெனக் கண்ணீர். பருத்திக் கொட்டையும் புண்ணாக்கும் அகத்திக்கீரையும் பச்சைப்புல்லுமாக் கொடுத்துத் தான் பார்த்துப் பார்த்துப் பேணி வளர்ந்தவை செக்கு மாடுகளாய் ஒட்டி உலர்ந்து, எலும்புகள் துருத்த நின்றிருந்த கோலம் காணச் சகிக்கவில்லை. அடுத்து இருந்த திறந்த வெளியில் இரண்டு செக்குகள். தொழுவத்தில் இருந்த இன்னும் சில காளைகள் அசுவாரஸ்யமாக இவர்களைப் பார்த்து விட்டுத் திரும்பிக் கொண்டன.

“ஏம்ப்பா, வக்கீல் வீட்டுலருந்துதான வர்றே? காலையிலே ஃபோன் போட்டிருந்தாங்க. தூக்குச் சட்டிய வீசிட்டு நீ பாட்டுக்கு வந்துட்ட. அது சரி, இந்த மாடுகள ஒனக்குத் தெரியுமா? ” கேட்டபடியே வந்து நின்றார் ஊழியர் போலிருந்த ஒருவர்.

“ஆமாய்யா. ரெண்டும் நா வளத்த மாடுங்கய்யா. பத்து வருசம் கழிச்சுப் பாக்கன்யா. ‘அய்யா’ன்னு நான் கூப்புட்டக் கொரல வச்சே எம்புள்ளைங்க என்னய இனங்கண்டுக்கிட்டானுங்கய்யா. பதட்டத்துல நானும் இதுங்களத் தேடிக்கிட்டு சொல்லாமக் கொள்ளாம இங்கிட்டு நுழைஞ்சிட்டேன். தப்புத்தான்யா மன்னிச்சுடுங்க” எனக் கையெடுத்துக் கும்பிட்டவர் எண்ணெய்க்காகக் கொடுக்கப்பட்டிருந்த ரூபாய் தாள்களை எடுத்து நீட்டி “ஊத்தி வைக்கீகளா. இந்தா... இப்ப... அஞ்சே நிமிசத்துல வந்துர்றேன்” என்றார்.

சட்டைப்பையைத் துழாவிய போது திரும்பிப் போக வைத்திருந்த பத்து ரூபாய் மட்டுமே இருந்தது. கொஞ்சமும் யோசிக்காமல் “கண்ணுகளா. இப்ப வந்துர்றேன்” சோலை, சொக்கன் இருவர் முதுகிலும் தட்டிச் சொல்லி விட்டு வீதியில் இறங்கி ஓட்டமும் நடையுமாகத் தெருமுனையிலிருந்த பெட்டிக்கடைக்குச் சென்றார். இரண்டு பெரிய மொந்தன் பழங்களை வாங்கி வந்து ”ராசாக்களா இந்த ஏழ அப்பாவால முடிஞ்சது இதுதான்” என்றபடி இரண்டுக்கும் ஊட்டி விட கண்ணீருடன் சாப்பிட்டன அவை. “ம்மா.. ம்மா..” என அரற்றியவற்றின் நெற்றிகளை வருடி முத்தமிட்டவர் அதற்குமேல் அங்கு நிற்க முடியாமல் தளர்வாக முற்றத்துக்கு வந்தார்.

எண்ணெய் நிரம்பிய தூக்குச் சட்டியோடு நல்லவேளையாக மீதப்பணமாகப் பத்து ரூபாய் கிடைத்தது. பதினைந்து கிலோ மீட்டர் நடையில் இருந்து தப்பித்தாலும், பாச வலையிலிருந்து மீள முடியாதவராய், அதே நேரம் மீண்டும் அவற்றைப் பார்க்கும் திராணி தனக்கில்லை எனும் முடிவுடன், முடுக்கி விட்ட இயந்திரம் போல் பஸ்ஸைப் பிடித்து குடியிருப்புக்கு வந்து சேர்ந்தார். பித்துப் பிடித்தது போலாகி இரண்டு நாட்கள் காய்ச்சலில் விழுந்து எழுந்தார்.

அதன் பிறகு குழந்தைகள் எத்தனை வற்புறுத்திக் கேட்டாலும் ‘ஜல் ஜல் மாட்டுக் கதை’யை மட்டும் அவர் சொல்லவே இல்லை.
***

படம்: இணையத்திலிருந்து..

 • 1 மார்ச் 2012 வெளியிடப்பட்ட அமீரகத் தமிழ் மன்றம் 12-ஆம் ஆண்டு விழா மலரில் பிரசுரமாகியுள்ள சிறுகதை.
நன்றி அமீரகத் தமிழ்மன்றம்!


63 கருத்துகள்:

 1. ஆஹா! ராமலஷ்மி கணகளில் துளிர்த்த நீரை கட்டுப்படுத்த முடியலை.என்றும் மனதில் இருந்து நீங்க மறுக்கும் ஜல் ஜல் சலங்கை ஒலி.வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. ஜல் ஜல் மாட்டுக் கதை’சிறப்பாக இருக்கிறது.. பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 3. நல்ல கதைப் பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 4. உண்மையில படிச்சு முடிக்கும்போது கண் கலங்கிட்டுது. தாத்தாவின் வாழ்க்கைக் கதையை இவ்வளவு அழகா மனசுல பதியற மாதிரி சொல்லியிருக்கீங்க. அந்த மாடுகளின் சலங்கை ஒலி நீண்டநாள் மனதில் ஒலிக்கும, வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. மிகச் சிறப்பான சிறுகதை. சொக்கனும் சோலையும் குரல் கொடுக்குமிடத்தில் படிக்கும் எனக்குச் சிலிர்த்தது. அப்புறம் வரும் நிகழ்வுகளை நீங்கள் வர்ணித்துள்ள விதம் மிகச் சிறப்பு. கண்கள் கலங்கின. அந்த இடத்தில் கதை முடிந்து விட்டாலும் அப்புறம் வரும் நாட்களில் அவற்றை அவர் பார்க்கவும் முடியாமல், (தைரியமில்லாத இயலாமையுடன்) பார்க்காதிருக்க முடியாதிருக்கப் போகும் தவிப்பும் மனதில் தங்கி விட்டது. அருமை.

  பதிலளிநீக்கு
 6. நெகிழ வைத்தது கதை.. ராமலெக்ஷ்மி..ஆசியா சொன்னதுபோல கண்ணீர் கூட கசிந்தது..

  பதிலளிநீக்கு
 7. நல்ல கதைப் பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 8. நெகிழ வைத்த கதை...ஆறறிவு மனிதர்கள் மறந்த சொந்தங்களை ஐந்தறிவுப் பிராணிகள் மறப்பதே இல்லை...

  பதிலளிநீக்கு
 9. தாத்தாவோட சேர்ந்து எனக்கும் ஜல் ஜல் சலங்கை ஒலி ஒலிக்கறா மாதிரி இருந்தது.செல்லப் பிராணிகள் என்பதில் ‘செல்ல’ அடை மொழி அவை நம்மிடம் ஒட்டிக் கொள்வதால் வந்ததே.கதையைப் படிக்கையில் மனம் நெகிழ்ந்து பாராமாகி விட்டது. நமக்குள் பாதிப்பை ஏற்படுத்தும் கதைக்ளை நம்மால் மறக்கவே முடியாது.இந்தக் கதையும் அந்த வரிசையில்..
  வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 10. ராமலக்ஷ்மி எப்போதுமே உணர்வுகளுடன் விளையாடுபவர்.

  இந்தக் கதையிலும் நுட்பமான உணர்வு விளையாட்டு நம்மை மகிழவைக்கிறது

  வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி

  அன்புடன்
  தமிழ்த்தேனீ

  பதிலளிநீக்கு
 11. நெகிழ்வான கதை. தெரிந்த பெரியவர் யாருக்கேனும் நடந்த அனுபவமோ?

  ஜல் ஜல் பாடல் எனக்கு மிக பிடித்தமான ஒன்று

  பதிலளிநீக்கு
 12. அடங்காத காளைகள் கடைசியில் செக்கு மாடுகளாய் உழன்று வரும் கட்டத்தில் நெகிழ வெச்சிட்டீங்க ராமலஷ்மி..

  அருமையான கதை.

  பதிலளிநீக்கு
 13. நெகிழ வைக்கும் எழுத்து. மிக அருமை.
  வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 14. நல்ல கதைப் பகிர்வுக்கு நன்றி..

  பதிலளிநீக்கு
 15. இறுதியில் கண்கள் குளமாயின.....ஒரே வார்த்தையில் அவை இனம் கண்டு கொண்டு கத்தியது.....ஆச்சரியம்.

  சிறப்பான கதைக்கு பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 16. ஆஹா! அருமையோ அருமை! பூங்கொத்துப்பா!

  பதிலளிநீக்கு
 17. சிறப்பான கதை,பாராட்டுக்கள் அக்கா!!

  பதிலளிநீக்கு
 18. கதை கிராமத்து நினைவுகளை மீட்டு வந்துவிட்டது.

  கதை நன்று.

  பதிலளிநீக்கு
 19. கதை மனதில் ஜல் என்கிற சத்ததோடுதான் இன்னும்.அருமையான நெகிழ்ச்சியான கதை.வாழ்த்துகள் அக்கா !

  பதிலளிநீக்கு
 20. அந்த ஜீவன்களுடைய அன்பு மனசைப் போட்டுப் பிழிஞ்சுருச்சு. உண்மையான அன்பைப் புரிஞ்சுக்கணுமுன்னா..... செல்லங்களிடம்தான் படிக்கணும்.

  அருமையான கதை & நடை!

  இனிய பாராட்டுகள் ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 21. நெகிழ்ச்சியடைய வைத்த சிறுகதை. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 22. அடடா பாவமே. ராமலக்ஷ்மி இன்னிக்கு என் கண்கள் கலங்க நீங்கள் காரணம். சோலையும் சொக்கனும் ,சுப்பையாத் தாத்தாவும் தான்
  என்ன ஒரு எழுத்து நடை. மனம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்

  பதிலளிநீக்கு
 23. நல்ல பகிர்வுக்கு என்றென்றும் நன்றி

  பதிலளிநீக்கு
 24. ஒரு நல்ல சிறுகதை என்பது வாசித்து முடித்ததும் மனசில் வட்டமடித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று என் அப்பா சொல்வார்.உங்களின் இந்தக்கதை அந்த ஜல்ஜல் ஓசையோடு மனசை சுழற்றி அடிக்கிறது இதுவே கதைக்கான வெற்றி ராம லஷ்மி வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 25. “கண்ணுகளா. இப்ப வந்துர்றேன்” சோலை, சொக்கன் இருவர் முதுகிலும் தட்டிச் சொல்லி விட்டு வீதியில் இறங்கி ஓட்டமும் நடையுமாகத் தெருமுனையிலிருந்த பெட்டிக்கடைக்குச் சென்றார். இரண்டு பெரிய மொந்தன் பழங்களை வாங்கி வந்து ”ராசாக்களா இந்த ஏழ அப்பாவால முடிஞ்சது இதுதான்” என்றபடி இரண்டுக்கும் ஊட்டி விட கண்ணீருடன் சாப்பிட்டன அவை. “ம்மா.. ம்மா..” என அரற்றியவற்றின் நெற்றிகளை வருடி முத்தமிட்டவர் அதற்குமேல் அங்கு நிற்க முடியாமல் தளர்வாக முற்றத்துக்கு வந்தார்.//

  நெகிழவைத்து விட்டீர்கள் ராமலக்ஷ்மி.
  அருமையான கதை.

  பதிலளிநீக்கு
 26. Asiya Omar said...
  //ஆஹா! ராமலஷ்மி கணகளில் துளிர்த்த நீரை கட்டுப்படுத்த முடியலை.என்றும் மனதில் இருந்து நீங்க மறுக்கும் ஜல் ஜல் சலங்கை ஒலி.வாழ்த்துக்கள்.//

  மிக்க நன்றி ஆசியா.

  பதிலளிநீக்கு
 27. இராஜராஜேஸ்வரி said...
  //ஜல் ஜல் மாட்டுக் கதை’சிறப்பாக இருக்கிறது.. பாராட்டுக்கள்..//

  நன்றி இராஜராஜேஸ்வரி.

  பதிலளிநீக்கு
 28. வெங்கட் நாகராஜ் said...
  //நல்ல கதைப் பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துகள்...//

  நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
 29. கணேஷ் said...
  //உண்மையில படிச்சு முடிக்கும்போது கண் கலங்கிட்டுது. தாத்தாவின் வாழ்க்கைக் கதையை இவ்வளவு அழகா மனசுல பதியற மாதிரி சொல்லியிருக்கீங்க. அந்த மாடுகளின் சலங்கை ஒலி நீண்டநாள் மனதில் ஒலிக்கும, வாழ்த்துக்கள்.//

  மிக்க நன்றி கணேஷ்.

  பதிலளிநீக்கு
 30. ஸ்ரீராம். said...
  //மிகச் சிறப்பான சிறுகதை. சொக்கனும் சோலையும் குரல் கொடுக்குமிடத்தில் படிக்கும் எனக்குச் சிலிர்த்தது. அப்புறம் வரும் நிகழ்வுகளை நீங்கள் வர்ணித்துள்ள விதம் மிகச் சிறப்பு. கண்கள் கலங்கின. அந்த இடத்தில் கதை முடிந்து விட்டாலும் அப்புறம் வரும் நாட்களில் அவற்றை அவர் பார்க்கவும் முடியாமல், (தைரியமில்லாத இயலாமையுடன்) பார்க்காதிருக்க முடியாதிருக்கப் போகும் தவிப்பும் மனதில் தங்கி விட்டது. அருமை.//

  பாராட்டுக்கு மிக்க நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 31. Thenammai Lakshmanan said...
  //நெகிழ வைத்தது கதை.. ராமலெக்ஷ்மி..ஆசியா சொன்னதுபோல கண்ணீர் கூட கசிந்தது..//

  நன்றி தேனம்மை.

  பதிலளிநீக்கு
 32. Lakshmi said...
  //நல்ல கதைப் பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துகள்..//

  நன்றி லக்ஷ்மிம்மா.

  பதிலளிநீக்கு
 33. பாச மலர் / Paasa Malar said...
  //ஆறறிவு மனிதர்கள் மறந்த சொந்தங்களை ஐந்தறிவுப் பிராணிகள் மறப்பதே இல்லை... நெகிழ வைத்த கதை...//

  உண்மை மலர். மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 34. raji said...
  //தாத்தாவோட சேர்ந்து எனக்கும் ஜல் ஜல் சலங்கை ஒலி ஒலிக்கறா மாதிரி இருந்தது.செல்லப் பிராணிகள் என்பதில் ‘செல்ல’ அடை மொழி அவை நம்மிடம் ஒட்டிக் கொள்வதால் வந்ததே.கதையைப் படிக்கையில் மனம் நெகிழ்ந்து பாராமாகி விட்டது. நமக்குள் பாதிப்பை ஏற்படுத்தும் கதைக்ளை நம்மால் மறக்கவே முடியாது.இந்தக் கதையும் அந்த வரிசையில்..
  வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.//

  வாழ்த்துகளுக்கும் பாராட்டுக்கும் நன்றி ராஜி.

  பதிலளிநீக்கு
 35. தமிழ்த்தேனீ said...
  //ராமலக்ஷ்மி எப்போதுமே உணர்வுகளுடன் விளையாடுபவர்.

  இந்தக் கதையிலும் நுட்பமான உணர்வு விளையாட்டு நம்மை மகிழவைக்கிறது

  வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி//

  தங்கள் கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி தமிழ்த்தேனீ சார்.

  பதிலளிநீக்கு
 36. அது ஒரு கனாக் காலம் said...
  //வாழ்த்துக்கள் ..அருமையான கதை//

  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 37. மோகன் குமார் said...
  //நெகிழ்வான கதை. தெரிந்த பெரியவர் யாருக்கேனும் நடந்த அனுபவமோ?

  ஜல் ஜல் பாடல் எனக்கு மிக பிடித்தமான ஒன்று//

  பல காலக் கட்டங்களில் அவதானித்த பல பெரியவர்களின் குணாதிசயங்கள் மற்றும் சம்பவங்களுடன் கற்பனை கலந்த உருவான ஒன்றே. நன்றி மோகன்குமார்.

  பதிலளிநீக்கு
 38. அமைதிச்சாரல் said...
  //அடங்காத காளைகள் கடைசியில் செக்கு மாடுகளாய் உழன்று வரும் கட்டத்தில் நெகிழ வெச்சிட்டீங்க ராமலஷ்மி..

  அருமையான கதை.//

  நன்றி சாந்தி.

  பதிலளிநீக்கு
 39. அம்பிகா said...
  //நெகிழ வைக்கும் எழுத்து. மிக அருமை.
  வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.//

  நன்றி அம்பிகா.

  பதிலளிநீக்கு
 40. தருமி said...
  //நல்ல மண்வாசனைக் கதை...//

  நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 41. Kanchana Radhakrishnan said...
  //நல்ல கதைப் பகிர்வுக்கு நன்றி..//

  நன்றி மேடம்.

  பதிலளிநீக்கு
 42. கோவை2தில்லி said...
  //இறுதியில் கண்கள் குளமாயின.....ஒரே வார்த்தையில் அவை இனம் கண்டு கொண்டு கத்தியது.....ஆச்சரியம்.

  சிறப்பான கதைக்கு பாராட்டுகள்.//

  மிக்க நன்றி ஆதி.

  பதிலளிநீக்கு
 43. அன்புடன் அருணா said...
  //ஆஹா! அருமையோ அருமை! பூங்கொத்துப்பா!//

  நன்றி அருணா.

  பதிலளிநீக்கு
 44. S.Menaga said...
  //சிறப்பான கதை,பாராட்டுக்கள் அக்கா!!//

  மிக்க நன்றி மேனகா.

  பதிலளிநீக்கு
 45. அமைதி அப்பா said...
  //கதை கிராமத்து நினைவுகளை மீட்டு வந்துவிட்டது.

  கதை நன்று.//

  நன்றி அமைதி அப்பா.

  பதிலளிநீக்கு
 46. "உழவன்" "Uzhavan" said...
  //சூப்பர்//

  நன்றி:)!

  பதிலளிநீக்கு
 47. ஹேமா said...
  //கதை மனதில் ஜல் என்கிற சத்ததோடுதான் இன்னும்.அருமையான நெகிழ்ச்சியான கதை.வாழ்த்துகள் அக்கா !//

  நன்றி ஹேமா.

  பதிலளிநீக்கு
 48. துளசி கோபால் said...
  //அந்த ஜீவன்களுடைய அன்பு மனசைப் போட்டுப் பிழிஞ்சுருச்சு. உண்மையான அன்பைப் புரிஞ்சுக்கணுமுன்னா..... செல்லங்களிடம்தான் படிக்கணும்.

  அருமையான கதை & நடை!

  இனிய பாராட்டுகள் ராமலக்ஷ்மி.//

  அந்த அன்பை வாழ்விலே அனுபவிப்பவராயிற்றே நீங்கள். பாராட்டுக்கு நன்றி மேடம்.

  பதிலளிநீக்கு
 49. தமிழ் உதயம் said...
  //நெகிழ்ச்சியடைய வைத்த சிறுகதை. வாழ்த்துகள்.//

  நன்றி ரமேஷ்.

  பதிலளிநீக்கு
 50. வல்லிசிம்ஹன் said...
  //அடடா பாவமே. ராமலக்ஷ்மி இன்னிக்கு என் கண்கள் கலங்க நீங்கள் காரணம். சோலையும் சொக்கனும் ,சுப்பையாத் தாத்தாவும் தான்
  என்ன ஒரு எழுத்து நடை. மனம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்//

  நன்றி வல்லிம்மா.

  பதிலளிநீக்கு
 51. aman said...
  //நல்ல பகிர்வுக்கு என்றென்றும் நன்றி//

  மிக்க நன்றி, தங்கள் முதல் வருகைக்கும்.

  பதிலளிநீக்கு
 52. ஷைலஜா said...

  //ஒரு நல்ல சிறுகதை என்பது வாசித்து முடித்ததும் மனசில் வட்டமடித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று என் அப்பா சொல்வார்.உங்களின் இந்தக்கதை அந்த ஜல்ஜல் ஓசையோடு மனசை சுழற்றி அடிக்கிறது இதுவே கதைக்கான வெற்றி ராம லஷ்மி வாழ்த்துகள்!//

  மகிழ்ச்சியும் நன்றியும் ஷைலஜா.

  பதிலளிநீக்கு
 53. கோமதி அரசு said...
  //நெகிழவைத்து விட்டீர்கள் ராமலக்ஷ்மி.அருமையான கதை.//

  வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி கோமதிம்மா.

  பதிலளிநீக்கு
 54. திரட்டிகளில் வாக்களித்த, குறிப்பாக தமிழ்மணத்தில் 43 வாக்குகளுடன் சிறுகதையை ‘மகுடத்தில்’ இடம் பெறச் செய்த நட்புகள் அனைவருக்கும் நன்றி!

  பதிலளிநீக்கு
 55. http://www.blogintamil.blogspot.ae/2013/06/blog-post_19.html
  வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.அருமை.நன்றி.

  பதிலளிநீக்கு
 56. சிறிய விடுமுறைக்கு வீட்டுச் செல்லங்களை விட்டுவிட்டுச் சென்று திரும்பி வந்தவுடன் சில நிமிடங்களுக்கு அவைகள் காட்டும் அன்பை அனுபவித்தவர்களுக்குத் தான் புரியும் அதன் அருமை. மாலையில் அப்பா அலுவலகம் முடிந்து சைக்கிளில் வீட்டுக்கு திரும்புவார். அந்த சைக்கிள் சப்தம் கேட்டவுடன் "லட்சுமி" அம்மா என சப்தம் கொடுக்கும். அப்பா நேராக மாட்டுக் கொட்டகை தான் செல்வார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான். நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் தருகிற அன்பு அது. தங்கள் பகிர்வுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin