Wednesday, February 4, 2009

மயிலிறகுக் கனவுகள்


படிக்கப் போவதாய்ச் சொல்லி
புத்தகங்கள் கையில் ஏந்தி
படிப்படிப்பாய்த் தாவி ஏறி
மொட்டைமாடிக் குட்டிச் சுவரில்
சாய்வாய் உள்ளடங்கி-
புத்தகத்தை கைகள் விரிக்கையில்
விழிகள் விரிந்ததென்னவோ
விண்ணினை நோக்கி.

கண் எட்டிய தூரமெல்லாம்
அகண்ட பெருவெளியாய்
அது ஒன்றே தெரிந்திட-
உலகமே அதுதானோ என
வானின் அழகில்
மனமது லயித்திட..

பொதிப் பொதியாய்
நகர்ந்திட்ட வெண்பஞ்சு
மேகக் கூட்டமதனில்
பலப்பல வடிவங்களை
உள்ளம் உருவகப்படுத்தி
உவகை கொண்டிட-
கூடவே குடை பிடித்து
உற்சாகமாய்க் கனவுகள்
ஊர்வலம் சென்றிட..

கூட்டம் கூட்டமாய்
பறந்திட்டக் கிளிகளோ
கூட வாயேன் நீயுமெனக்
கூப்பிடுவதாய்த் தோன்றிட-
இல்லாத இறக்கை
இரண்டால் எம்பிப்
பறக்கவும் துவங்கிடுகையில்..

தலைமாட்டுச் சுவற்றின்பின்
தலைதட்டி நின்றிருந்த
கொய்யாமரக் கிளையிலிருந்து
கூடு திரும்பிய
காகமொன்று கரைந்திட-
மறைகின்ற சூரியனுடன்
கரைகின்ற வெளிச்சம்
கவனத்துக்கு வந்தது.

மூடியது பதின்மம்
மடியிலிருந்த புத்தகத்தை-
மயிலிறகெனக் கனவுகளைப்
பத்திரமாய் உள்வைத்து-
கரைந்திடுமோ அவையுமென்ற
கவலையோ கலக்கமோ சிறிதுமின்றி-
படிக்காத பாடங்கள் மட்டுமே
பாரமாய் நெஞ்சில் இருக்க.

*** *** ***

[படம்: இணையத்திலிருந்து]

[இங்கு வலையேற்றிய பின் ஜனவரி 30,2009 திண்ணை இணைய இதழிலும் பிப்ரவர் 5,2009 வார்ப்பு கவிதை வாராந்திரி மின்னிதழிலும் பின்னர் மார்ச் 14,2009 இளமை விகடன் இணையதளத்திலும் வெளிவந்துள்ள கவிதை]

விகடன் முகப்பில்:

76 comments:

 1. /படிக்காத பாடங்கள் மட்டுமே
  பாரமாய் நெஞ்சில் இருக்க./

  அருமை

  ReplyDelete
 2. //மறைகின்ற சூரியனுடன்
  கரைகின்ற வெளிச்சம்
  கவனத்துக்கு வந்தது.
  //
  பிரண்ட்! காக்கா கத்தி இருக்க கூடாது கொத்தி இருக்கனும்:-))

  பின்னே அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணாம காலை முதல் சூரியன் மறையும் வரை கனவு கண்டுகிட்டு இருக்கலாமா:-))

  ReplyDelete
 3. //புத்தகத்தை கைகள் விரிக்கையில்
  விழிகள் விரிந்ததென்னவோ
  விண்ணினை நோக்கி.
  //

  எவ்ளோ ரசனையா எழுதி இருக்கிங்க.. கலக்கல் அக்கா. ;)

  ReplyDelete
 4. அழகான ஒரு மாலைப்பொழுதை விவரிக்கும் கவிதை.

  //இல்லாத இறக்கை
  இரண்டால் எம்பிப்
  பறக்கவும் துவங்கிடுகையில்..//

  //மறைகின்ற சூரியனுடன்
  கரைகின்ற வெளிச்சம்//

  கலக்குறீங்க. வாழ்த்துகள்.

  அனுஜன்யா

  ReplyDelete
 5. //மயிலிறகெனக் கனவுகளைப்
  பத்திரமாய் உள்வைத்து-
  கரைந்திடுமோ அவையுமென்ற
  கவலையோ கலக்கமோ சிறிதுமின்றி//

  மயிலிறகை போல மென்மையான வரிகள்

  இதை படித்த போது எனக்கு "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்" படத்தில் வரும் "கொஞ்சும் மைனாக்களே" பாடல் வரி நினைவிற்கு வந்ததது...

  "நூறு கனவுகள் கண்டாலே ஆறு கனவுகள் பலிக்காதா" :-)

  ReplyDelete
 6. படிக்கப் போவதாய் சொல்லி
  புத்தகங்கள் கையில் ஏந்தி
  படிப்படிப்பாய் தாவி ஏறி
  மொட்டைமாடிக் குட்டிச் சுவரில்
  சாய்வாய் உள்ளடங்கி-
  புத்தகத்தை கைகள் விரிக்கையில்
  விழிகள் விரிந்ததென்னவோ
  விண்ணினை நோக்கி.
  //
  எப்டிக்கா... உங்கள் கைவண்ணத்தில் வார்த்தைகள் தாண்டவம் ஆடுது. வார்த்தைகள் கூட மயில் இறகாக வருடுதே.
  அழகிய சொல்லில் வடிக்கப்பட்ட கவிதையாய் மிக அழகாக செதுக்கி இருக்கிறீர்கள்.

  ReplyDelete
 7. திகழ்மிளிர் said...

  // /படிக்காத பாடங்கள் மட்டுமே
  பாரமாய் நெஞ்சில் இருக்க./

  அருமை//

  பதிமனுக்கு என்றைக்கும் அப்போதைய பிரச்சனை மட்டுமே பாரம். இந்தப் பள்ளி பாடத்தை விடக் காத்திருக்கும் வாழ்க்கைப் பாடங்களைப் பற்றி அவற்றுக்குக் கவலையில்லை. அந்தப் பருவம் அப்படி.

  ரசனைக்கும் வருகைக்கும் நன்றி திகழ்மிளிர்.

  ReplyDelete
 8. /*மயிலிறகெனக் கனவுகளைப்
  பத்திரமாய் உள்வைத்து-
  கரைந்திடுமோ அவையுமென்ற
  கவலையோ கலக்கமோ சிறிதுமின்றி-
  படிக்காத பாடங்கள் மட்டுமே
  பாரமாய் நெஞ்சில் இருக்க*/
  மிக அருமை. வரிகள் நெஞ்சை வருடின. இலயித்துப் போனேன் அழகான மாலைப் பொழுதில்.

  ReplyDelete
 9. SanJaiGan:-Dhi said...

  // //புத்தகத்தை கைகள் விரிக்கையில்
  விழிகள் விரிந்ததென்னவோ
  விண்ணினை நோக்கி.
  //

  எவ்ளோ ரசனையா எழுதி இருக்கிங்க.. கலக்கல் அக்கா. ;)//

  இயற்கை விரும்பி நீங்கள் சரியான வரிகளைத்தான் ரசித்திருக்கிறீர்கள்! உங்கள் ரசனைக்கும் நன்றி சஞ்சய்!

  ReplyDelete
 10. மயிலிறகு மாதிரியே ரொம்ப இதமா வருடுது கவிதையும்.எல்லாருக்கும் ஒரு மயிலிறகு காலம் இருக்கும் போல!!!!!!!

  ReplyDelete
 11. அனுஜன்யா said...

  //அழகான ஒரு மாலைப்பொழுதை விவரிக்கும் கவிதை.//

  நன்றி அனுஜன்யா. ஒருவிதத்தில் உங்களது ‘பூவாகி காயாகி’ கவிதைதான் இதற்கு இன்ஸ்பிரேஷன். அழகான மாலைப் பொழுதை மட்டுமின்றி அற்புதமாய் பத்திரப் படுத்தப் படும் கனவுகளையும் அதன் மேலே வைக்கப் படும் நம்பிக்கைகளையும் சொல்வதாக அமைத்திருக்கிறேன், வழக்கமான என் ’just a narration’ பாணியிலிருந்து சற்று விலகி.

  //கலக்குறீங்க. வாழ்த்துகள்.//

  தங்கள் ரசனைக்கும் தொடர் ஊக்கத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி அனுஜன்யா.

  ReplyDelete
 12. கிரி said...

  // //மயிலிறகெனக் கனவுகளைப்
  பத்திரமாய் உள்வைத்து-
  கரைந்திடுமோ அவையுமென்ற
  கவலையோ கலக்கமோ சிறிதுமின்றி//

  மயிலிறகை போல மென்மையான வரிகள்//

  பதிமன்களும் மனது அத்தனை மென்மையானவையே.

  //இதை படித்த போது எனக்கு "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்" படத்தில் வரும் "கொஞ்சும் மைனாக்களே" பாடல் வரி நினைவிற்கு வந்ததது...//

  அட, ஆமாம். மிகப் பொருத்தமான நினைவூட்டல் கிரி. அதுவும் ஒரு பதிமனின் பாடல்தானே:)!

  //"நூறு கனவுகள் கண்டாலே ஆறு கனவுகள் பலிக்காதா" :-)//

  கண்டிப்பாக, சரியாகப் பாயிண்டைப் பிடித்து விட்டீர்கள்:).

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கிரி.

  ReplyDelete
 13. கடையம் ஆனந்த் said...
  //எப்டிக்கா... உங்கள் கைவண்ணத்தில் வார்த்தைகள் தாண்டவம் ஆடுது. வார்த்தைகள் கூட மயில் இறகாக வருடுதே.
  அழகிய சொல்லில் வடிக்கப்பட்ட கவிதையாய் மிக அழகாக செதுக்கி இருக்கிறீர்கள்.//

  மயிலிறகாய் வார்த்தைகள் வருடியதில் மகிழ்ச்சி ஆனந்த். பாராட்டுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 14. அமுதா said...
  //மிக அருமை. வரிகள் நெஞ்சை வருடின. இலயித்துப் போனேன் அழகான மாலைப் பொழுதில். //

  மாலைப் பொழுதுகளே மயங்கத்தானே:), ரசனைக்கு மிக்க நன்றி அமுதா.

  ReplyDelete
 15. sindhusubash said...

  //மயிலிறகு மாதிரியே ரொம்ப இதமா வருடுது கவிதையும்.//

  நன்றி சிந்து.

  //எல்லாருக்கும் ஒரு மயிலிறகு காலம் இருக்கும் போல!!!!!!!//

  அதைத் தாண்டாம வந்தவர்கள் இருப்பார்களா என்ன:)?

  ReplyDelete
 16. கவிதை மிக அருமை!

  இறகு மிக மிக அருமை !

  ReplyDelete
 17. //இல்லாத இறக்கை
  இரண்டால் எம்பிப்
  பறக்கவும் துவங்கிடுகையில்..
  //

  :) நினைக்கையிலேயே இனிமையா இருக்கு!

  ReplyDelete
 18. "புத்தகத்தை கைகள் விரிக்கையில்
  விழிகள் விரிந்ததென்னவோ
  விண்ணினை நோக்கி....."
  அது ஒன்றுமில்லை,கற்றுக்கொள்ள வேண்டியது விண்ணளவு இருக்கும் போது இந்த கை அகல புத்தகத்தில் என்ன இருக்கப் போகிறது?....என்ற சிந்தனையும் கூட காரணமாக இருக்கலாம்....இல்லையா ராமலஷ்மி?[அவ்வப்போது திண்ணையில் இளைப்பாறுவது வழக்கம்,என் எழுத்தைச் சீராக்கிய மற்றொரு தமிழ் பட்டரையாயிற்றே போகாமல் இருக்கலாமா.போனால் அங்கே தமிழ் அம்தம் சொட்டிக் கொண்டிருந்தது.]

  ReplyDelete
 19. பொதிப் பொதியாய்
  நகர்ந்திட்ட வெண்பஞ்சு
  மேகக் கூட்டமதனில்
  பலப்பல வடிவங்களை
  உள்ளம் உருவகப்படுத்தி
  உவகை கொண்டிட-
  கூடவே குடை பிடித்து
  உற்சாகமாய் கனவுகள்
  ஊர்வலம் சென்றிட..

  சரியா சொல்லியிருக்கீங்க
  ஒரே கனவுதான் போங்க அப்ப, எங்க படிக்க எப்படி படிக்க.

  ReplyDelete
 20. படிக்காத பாடங்கள் மட்டுமே
  பாரமாய் நெஞ்சில் இருக்க.

  ஆமா இந்த மேட்டர் தான் உறுத்திக்கிட்டே இருக்கும்.

  ReplyDelete
 21. நாகை சிவா said...

  //கவிதை மிக அருமை!

  இறகு மிக மிக அருமை !//

  நன்றி சிவா. இறகினும் மெல்லிய உணர்வுகளும் அதன் கனவுகளும் நம்பிக்கைகளும்:)!

  ReplyDelete
 22. எம்.எம்.அப்துல்லா said...

  // //இல்லாத இறக்கை
  இரண்டால் எம்பிப்
  பறக்கவும் துவங்கிடுகையில்..
  //

  :) நினைக்கையிலேயே இனிமையா இருக்கு!//

  ஆனா பாருங்க துவங்கும் முன்னரே முடிந்தும் விட்டது. சரி அடுத்த நாள் மாலைதான் இருக்கிறதே என்கிறீர்களா? அந்த நம்பிக்கையும் நன்றே:)!

  ReplyDelete
 23. goma said...

  // "புத்தகத்தை கைகள் விரிக்கையில்
  விழிகள் விரிந்ததென்னவோ
  விண்ணினை நோக்கி....."
  அது ஒன்றுமில்லை,கற்றுக்கொள்ள வேண்டியது விண்ணளவு இருக்கும் போது இந்த கை அகல புத்தகத்தில் என்ன இருக்கப் போகிறது?....என்ற சிந்தனையும் கூட காரணமாக இருக்கலாம்....இல்லையா ராமலஷ்மி?//

  அற்புதம் கோமா, உங்கள் வித்தியாசமான புரிதல். உண்மைதான் புத்தகம் சொல்லித் தரும் பாடத்தை விட வாழ்க்கை சொல்லித் தரவிருக்கும் பாடங்கள் கட்டாயமாய் விண்ணளவே.

  //என் எழுத்தைச் சீராக்கிய மற்றொரு தமிழ் பட்டரையாயிற்றே//

  உண்மைதான், அது போல இடைவெளி விட்டிருந்த என் எழுத்துப் பயணத்தை நடுவில் தொடர வைத்ததும் திண்ணைதான்.

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோமா.

  ReplyDelete
 24. அமிர்தவர்ஷினி அம்மா said...

  //சரியா சொல்லியிருக்கீங்க
  ஒரே கனவுதான் போங்க அப்ப, எங்க படிக்க எப்படி படிக்க.//

  அந்தக் கனவையும் படிக்காத அந்தப் பாடப் புத்தகத்திலே பத்திரப் படுத்தும் அழகை அப்போ என்னான்னு சொல்ல:)))?

  ReplyDelete
 25. அமிர்தவர்ஷினி அம்மா said...

  //**படிக்காத பாடங்கள் மட்டுமே
  பாரமாய் நெஞ்சில் இருக்க.**

  ஆமா இந்த மேட்டர் தான் உறுத்திக்கிட்டே இருக்கும்.//

  பாருங்க மத்த மேட்டர் எதுவும் கவலை லிஸ்டில் வரவே வராது:)! சரி அந்த உறுத்தலே உந்துதலைத் தந்திடும் என நம்புவோம்:)!

  கருத்துக்களுக்கு நன்றி அமித்து அம்மா!

  ReplyDelete
 26. மாணவப்பருவத்தில்
  புத்தகத்தோடு தனிமையில் மாடிக்குச் சென்று வானத்தையும் வானத்து மேகங்களையும் ரசிக்கும் யாருக்கும் ஏற்படும் ஒரு மனநிலையை நீங்கள், இயற்கை சூழலோடு வர்ணனை செய்து கவிதை யாத்து அதை பதிவு செய்துள்ளீர்கள். நல்வாழ்த்துக்கள்!

  இதை வாசித்ததும் எனது மாணவப்பருவமும் ஏறத்தாழ இதே போன்ற இயற்கை சூழலில் நான் இருந்ததையும் எல்லொரைப் போன்று என்னிலும் நினைவலைகளை தட்டிவிட்டுச் சென்றது.

  கவிதையின் முடிவில் பாடங்களை படிக்கவில்லையே என்ற பாரம் அந்த மாணவச் செலவத்திற்கு இருப்பதை கவனமுடன் குறிப்புட்டுள்ளது மிகச் சிறப்பு.

  இது போன்ற மனநிலைகளை பதிவு செய்யும் கவிதைகள் பல நீங்கள் எழுத என் இனிய வாழ்த்துக்கள்.

  அன்புடன் என் சுரேஷ்

  ReplyDelete
 27. N Suresh said...
  //இதை வாசித்ததும் எனது மாணவப்பருவமும் ஏறத்தாழ இதே போன்ற இயற்கை சூழலில் நான் இருந்ததையும் எல்லொரைப் போன்று என்னிலும் நினைவலைகளை தட்டிவிட்டுச் சென்றது.//

  உண்மைதான் பலரது நினைவலைகளையும் தட்டி விட்டிருக்கிறது. தங்கள் வாழ்த்துக்களுக்கும் விரிவான கருத்துக்களுக்கும் என் நன்றிகள்.

  ReplyDelete
 28. ஹும்..அதெல்லாம் ஒரு காலம்..

  நல்லாருக்கு ராமலக்ஷ்மி..

  ReplyDelete
 29. கண்களைத் திறந்து கொண்டே "ட்ரீம் அடிக்கிறது" பற்றி அழகாய் சொல்லியிருக்கிறீர்கள் :)

  //மறைகின்ற சூரியனுடன்
  கரைகின்ற வெளிச்சம்//

  எனக்குப் பிடிச்ச வரிகள்ல இதுவும் ஒண்ணு.

  //படிக்காத பாடங்கள் மட்டுமே
  பாரமாய் நெஞ்சில் இருக்க.//

  முடிவு கச்சிதம்.

  தலைப்பு அற்புதம் :)

  ReplyDelete
 30. //படிக்கப் போவதாய் சொல்லி
  புத்தகங்கள் கையில் ஏந்தி
  படிப்படிப்பாய் தாவி ஏறி
  மொட்டைமாடிக் குட்டிச் சுவரில்
  சாய்வாய் உள்ளடங்கி-
  புத்தகத்தை கைகள் விரிக்கையில்
  விழிகள் விரிந்ததென்னவோ
  விண்ணினை நோக்கி.//

  என்னப் பத்திச் சொல்லலியே :-) எல்லாம் இப்பொ நடந்த மாதிரியே இருக்கு எனக்கு :-)
  சூப்பர இருக்கு.

  ReplyDelete
 31. மிகவும் அருமையான கவிதை. கனவுகளில் இருந்தாலும், நிஜம் வலியைத் தரும்! மயிலிறகுக் கவிதை அழகு.

  ReplyDelete
 32. /படிக்காத பாடங்கள் மட்டுமே
  பாரமாய் நெஞ்சில் இருக்க./

  அதுதான் எப்பவுமே இருக்கே???அதென்னவோ படிக்க ஆரம்பித்தவுடன் கனவுகளின் ஊர்வலம் ஆரம்பிச்சுடுது...இப்பவும் கூட...
  அன்புடன் அருணா

  ReplyDelete
 33. //கூட்டம் கூட்டமாய்
  பறந்திட்டக் கிளிகளோ
  கூட வாயேன் நீயுமெனக்
  கூப்பிடுவதாய் தோன்றிட//
  ஆஹா! கூடவே போயிருக்கலாமோ
  என்று இன்று தோன்றுகிறதா...ராமலக்ஷ்மி?
  கனவுகள்..கனவுகள்..கனவுகளே வாழ்க்கையான பின் அதில் கரைந்ததெத்தனை? நிறைந்ததெத்தனை?

  நானும் புத்தகமும் கையுமாக தட்டட்டிக்குச் சென்று கனவில் கரைந்ததெல்லாம் கொசுவத்தியாக சுத்துகிறது.

  ReplyDelete
 34. திண்ணையில் படித்தபொழுதே அருமையான கவிதையாகக் கண்டேன்..மிக நல்ல முயற்சி..தொடருங்கள் சகோதரி !

  ReplyDelete
 35. //
  படிக்கப் போவதாய் சொல்லி
  புத்தகங்கள் கையில் ஏந்தி
  படிப்படிப்பாய் தாவி ஏறி
  மொட்டைமாடிக் குட்டிச் சுவரில்
  சாய்வாய் உள்ளடங்கி-
  புத்தகத்தை கைகள் விரிக்கையில்
  விழிகள் விரிந்ததென்னவோ
  விண்ணினை நோக்கி//

  ரொம்ப தாமதமா வந்ததினால்
  இந்த அழகு கவிதையை ரொம்ப
  காலம் தாழ்த்தி படித்ததிற்கு
  வருந்துகிறேன்

  ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க
  அருமை அருமை அருமை !!

  ReplyDelete
 36. //
  அபி அப்பா said...
  //மறைகின்ற சூரியனுடன்
  கரைகின்ற வெளிச்சம்
  கவனத்துக்கு வந்தது.
  //
  பிரண்ட்! காக்கா கத்தி இருக்க கூடாது கொத்தி இருக்கனும்:-))

  பின்னே அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணாம காலை முதல் சூரியன் மறையும் வரை கனவு கண்டுகிட்டு இருக்கலாமா:-))

  //

  அபி அப்பா கடைசியா என்னாதான் சொல்ல வாராருன்னே
  புரியலையே, உங்களுக்கு புரிஞ்சுதா ராமலக்ஷ்மி ???

  ReplyDelete
 37. //
  தலைமாட்டுச் சுவற்றின்பின்
  தலைதட்டி நின்றிருந்த
  கொய்யாமரக் கிளையிலிருந்து
  கூடு திரும்பிய
  காகமொன்று கரைந்திட-
  மறைகின்ற சூரியனுடன்
  கரைகின்ற வெளிச்சம்
  கவனத்துக்கு வந்தது.
  //

  ஆஹா என்ன அருமை என்ன அருமை
  ரொம்ப நல்லா உணர்ந்து சொல்லி இருக்கீங்க

  கண்களுக்கும் கருத்துக்கும் அருமையான
  விருந்து படைத்ததிற்கு நன்றி என்ற
  ஒற்றைச்சொல் போதுமா ??
  போதாது கருத்துத் தெளிந்து
  சொல்லுகிறேனே!!

  ReplyDelete
 38. பாச மலர் said...

  //ஹும்..அதெல்லாம் ஒரு காலம்..

  நல்லாருக்கு ராமலக்ஷ்மி..//

  வசந்த காலம்:)! நன்றி பாசமலர்.

  ReplyDelete
 39. கவிநயா said...

  //கண்களைத் திறந்து கொண்டே "ட்ரீம் அடிக்கிறது" பற்றி அழகாய் சொல்லியிருக்கிறீர்கள் :)//

  ஹை:)! ‘ட்ரீட் அடிக்கிறது’ இந்த வார்த்தைப் பிரயோகமும் வெகு அழகு.

  //முடிவு கச்சிதம்.

  தலைப்பு அற்புதம் :)//

  இத்துடன் பிடித்த வரிகளை ரசித்துக் கூறியிருப்பதற்கும் என் நன்றிகள் கவிநயா!

  ReplyDelete
 40. Truth said...

  //என்னப் பத்திச் சொல்லலியே :-) எல்லாம் இப்பொ நடந்த மாதிரியே இருக்கு எனக்கு :-)

  என்ன ட்ரூத், உண்மையை நீங்களே இப்படிப் போட்டு உடைக்கலாமா:)?

  // சூப்பர இருக்கு.//

  நன்றி.

  ReplyDelete
 41. வெ.இராதாகிருஷ்ணன் said...

  //மிகவும் அருமையான கவிதை. கனவுகளில் இருந்தாலும், நிஜம் வலியைத் தரும்! மயிலிறகுக் கவிதை அழகு.//

  உண்மைதான், ஆனால் கனவில் இருக்கும் பதிமன்களுக்கு அப்போதைய தருணங்களும் அதன் நிஜங்களும் மட்டுமே வலி.

  முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி இராதகிருஷ்ணன்.

  ReplyDelete
 42. //படிப்படிப்பாய் தாவி ஏறி
  மொட்டைமாடிக் குட்டிச் சுவரில்
  சாய்வாய் உள்ளடங்கி-//

  :-) படிக்க ஆரம்பிக்கும்போதே, அட என்னைப் போல் என்றூ தோன்ற வைத்த வரி!


  //விழிகள் விரிந்ததென்னவோ
  விண்ணினை நோக்கி.//

  அழகு!

  //பொதிப் பொதியாய்
  நகர்ந்திட்ட வெண்பஞ்சு
  மேகக் கூட்டமதனில்
  பலப்பல வடிவங்களை
  உள்ளம் உருவகப்படுத்தி
  உவகை கொண்டிட-//
  இதைத்தான் சொன்னீங்களா..பப்புவோட போஸ்ட்-ல! :-)

  ReplyDelete
 43. //மூடியது பதிமன்//

  பதிமன் -ன்னா புரியலை ராமலஷ்மி..:(

  //மயிலிறகெனக் கனவுகளைப்
  பத்திரமாய் உள்வைத்து-//

  என்ன ஒரு ஒப்பீடு! செம!

  //படிக்காத பாடங்கள் மட்டுமே
  பாரமாய் நெஞ்சில் இருக்க//

  அட இதுவும் என்னைப் போலன்னு சொல்ல வைச்ச வரி! :-)

  நல்ல கவிதையைப் பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
 44. அன்புடன் அருணா said...

  // /படிக்காத பாடங்கள் மட்டுமே
  பாரமாய் நெஞ்சில் இருக்க./

  அதுதான் எப்பவுமே இருக்கே???அதென்னவோ படிக்க ஆரம்பித்தவுடன் கனவுகளின் ஊர்வலம் ஆரம்பிச்சுடுது...இப்பவும் கூட...//

  சரியாகத்தான் சொல்றீங்க:)))! ஆனா பதிமன் கண்ட கனவில் இருந்தது ஒரு லயிப்பு. இன்று புத்தகத்துடன் ஒன்ற முடியாததற்குக் காரணம் எப்பவும் இருக்கிற அடுத்த நிமிடத்தைப் பற்றிய பரபரப்பு என்று தோன்றுகிறது. சரிதானா:)?

  ReplyDelete
 45. நானானி said...

  / //கூட்டம் கூட்டமாய்
  பறந்திட்டக் கிளிகளோ
  கூட வாயேன் நீயுமெனக்
  கூப்பிடுவதாய் தோன்றிட//
  ஆஹா! கூடவே போயிருக்கலாமோ
  என்று இன்று தோன்றுகிறதா...//

  "பசுமை நிறைந்த நினைவுகளே..
  பாடித் திரிந்த பறவைகளே.."
  //கனவுகள்..கனவுகள்..கனவுகளே வாழ்க்கையான பின் அதில் கரைந்ததெத்தனை? நிறைந்ததெத்தனை?//

  ஆமாம் நானானி.
  கனவுகளே பலித்து வாழ்க்கையானால் வசந்தம்.
  வாழ்க்கையே ஒரு கனவு என்றானாலோ வருத்தம்.
  இதுதான் வாழ்வியல் தத்துவம்.

  //நானும் புத்தகமும் கையுமாக தட்டட்டிக்குச் சென்று கனவில் கரைந்ததெல்லாம் கொசுவத்தியாக சுத்துகிறது.//

  எல்லோரையும் போல உங்களுக்குமா:)? கருத்துக்களுக்கு மிக்க நன்றி நானானி.

  ReplyDelete
 46. எம்.ரிஷான் ஷெரீப் said...

  //திண்ணையில் படித்தபொழுதே அருமையான கவிதையாகக் கண்டேன்..மிக நல்ல முயற்சி..தொடருங்கள் சகோதரி !//

  தொடர் ஊக்கத்துக்கு மிக்க நன்றி ரிஷான்.

  ReplyDelete
 47. RAMYA said...

  //ரொம்ப தாமதமா வந்ததினால்
  இந்த அழகு கவிதையை ரொம்ப
  காலம் தாழ்த்தி படித்ததிற்கு
  வருந்துகிறேன்

  ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க
  அருமை அருமை அருமை !!//

  நன்றி ரம்யா. தாமதமாய் வரவில்லை, பதிவிட்ட அன்றேதான் வந்துள்ளீர்கள்:)!

  ReplyDelete
 48. RAMYA said...

  //அபி அப்பா கடைசியா என்னாதான் சொல்ல வாராருன்னே
  புரியலையே, உங்களுக்கு புரிஞ்சுதா ராமலக்ஷ்மி ???//

  அவர் சும்மா கலாட்டாவுக்குச் சொல்லியிருக்கிறார் ரம்யா:)))!

  ReplyDelete
 49. RAMYA said...

  //கண்களுக்கும் கருத்துக்கும் அருமையான
  விருந்து படைத்ததிற்கு நன்றி என்ற
  ஒற்றைச்சொல் போதுமா ??
  போதாது கருத்துத் தெளிந்து
  சொல்லுகிறேனே!!//

  போதும் ரம்யா ஒற்றைச் சொல் போதும்:)!

  ReplyDelete
 50. சந்தனமுல்லை said...

  // //படிப்படிப்பாய் தாவி ஏறி
  மொட்டைமாடிக் குட்டிச் சுவரில்
  சாய்வாய் உள்ளடங்கி-//

  :-) படிக்க ஆரம்பிக்கும்போதே, அட என்னைப் போல் என்றூ தோன்ற வைத்த வரி!//

  நானானி முதல் முல்லை வரை..:)!

  / //பொதிப் பொதியாய்
  நகர்ந்திட்ட வெண்பஞ்சு
  மேகக் கூட்டமதனில்
  பலப்பல வடிவங்களை
  உள்ளம் உருவகப்படுத்தி
  உவகை கொண்டிட-//
  இதைத்தான் சொன்னீங்களா..பப்புவோட போஸ்ட்-ல! :-)//

  இதே இதே:)!

  ReplyDelete
 51. சந்தனமுல்லை said...

  // //மூடியது பதிமன்//

  பதிமன் -ன்னா புரியலை ராமலஷ்மி..:( //

  பன்னிரெண்டு முதல் பத்தொன்பது வயதிலான ‘டீன் ஏஜ்’தான் பதிமன் வயதெனக் குறிப்பிடப் படுகிறது.

  // //மயிலிறகெனக் கனவுகளைப்
  பத்திரமாய் உள்வைத்து-//

  என்ன ஒரு ஒப்பீடு! செம!// //

  பாருங்க, இது நம்பிக்கை சார்ந்த விஷயமும். சின்னதில் மயிலிறகு குட்டி போடும் என்றே பலரும் அதைப் புத்தகத்தில் பத்திரப் படுத்துவதைப் பார்த்திருக்கிறீர்களா:)?

  // //படிக்காத பாடங்கள் மட்டுமே
  பாரமாய் நெஞ்சில் இருக்க//

  அட இதுவும் என்னைப் போலன்னு சொல்ல வைச்ச வரி! :-)//

  ரொம்ப ரொம்ப சரி. அதைப் பாரமாய் உணர்கின்ற பதிமன்தான் நம்பிக்கையுடன் முயன்று பாரத்தை இறக்கிடும் எப்பாடு பட்டேனும். அதனாலேயே மயிலிறகுக் கனவுகளும் ஜெயித்து விட்டது பாருங்கள் உங்கள் விஷயத்தில் 'மின்னுகிற கிரீடத்துடன்’:)! [எனது சென்ற கவிதை நினைவில் இருக்கிறதல்லவா?]

  //நல்ல கவிதையைப் பகிர்ந்தமைக்கு நன்றி!//

  தங்கள் கருத்துக்களுக்கும் நன்றி முல்லை!

  ReplyDelete
 52. //டீன் ஏஜ்’தான் பதிமன் வயதெனக் குறிப்பிடப் படுகிறது.

  //

  ஓ..நான் “பதின்ம” என்று படித்த நினைவு. பதிமன் புதிதாய் இருக்கிறது!!

  //பாருங்க, இது நம்பிக்கை சார்ந்த விஷயமும்.// அந்தப் புரிதலினால் தான் அந்த ஒப்பீட்டை உணர முடிந்தது!

  //மயிலிறகு குட்டி போடும் என்றே பலரும் அதைப் புத்தகத்தில் பத்திரப் படுத்துவதைப் பார்த்திருக்கிறீர்களா:)?

  //

  ஹஹ்ஹா..யாரைப் பார்த்து என்னக் கேள்விக் கேட்டீங்க!!
  இயலும்போது http://sandanamullai.blogspot.com/2006/07/blog-post_05.html இந்தப் பதிவினைப் படித்து பாருங்கள்..நினைவுகள் எனும் லேபிள் கீழ் வகைப் படுத்தியிருக்கிறேன்!

  உங்களால் என் பழைய பதிவுகளையும் நினைவுகளையும் அசைப் போட்டேன்! :-)

  ReplyDelete
 53. சந்தனமுல்லை said...
  //ஓ..நான் “பதின்ம” என்று படித்த நினைவு. பதிமன் புதிதாய் இருக்கிறது!! //

  நான் அர்த்தம் கொண்டது அதுதான் ஆனாலும் ‘பதிமன்’ புதிதுதான்:). நீங்கள் நினைத்துப் படித்ததே சரி:)! இப்போது மாற்றி விட்டேன் பாருங்கள். மிக்க நன்றி:)!

  //அந்தப் புரிதலினால் தான் அந்த ஒப்பீட்டை உணர முடிந்தது!//

  புரியுது புரியுது நீங்கள் அசை போட்டவைகளை ஆசையுடன் நானும் படித்ததுமே புரிந்தது:)!

  //ஹஹ்ஹா..யாரைப் பார்த்து என்னக் கேள்விக் கேட்டீங்க!//

  அதானே யாரைப் பார்த்து என்ன கேட்டிருக்கிறேன்:)))? இதிலே விளக்கம் வேறு..:)).. "மயிலிறகே மயிலிறகே” மன்னித்துக் கொள்:)!

  ReplyDelete
 54. Ramalakshmi!

  மதின்மம் னா டீன் ஏஜ் னு தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் போது "சந்தனமுல்லை" கேட்டதால் புரிந்துகொண்டேன்ங்க. தமிழிலேயே இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.:-)

  ------------------
  கொய்யா மரம்னு சொன்னதும் எனக்கு சிறுவயதில் கொய்யாக்காய் இன்னொருவர் மரத்தில் போய் பறித்து சாப்பிட்டது ஞாபகம் வருகிறது.
  பழங்கள்தான் சுவையா இருக்கும்னு உலகறிந்த உண்மை. ஆனால் என்னைக்கேட்டால் கொய்யா காயில் (உள்ப்பகுதி வெள்ளையாக இருக்கனும், பிங்க்கா இருக்கக்கூடாது)தான் சுவை அதிகம் என்பேன். கொய்யாப்பழத்தில் இல்லை!
  -----------------
  சரி உங்க கவிதைக்கு வர்றேன்.

  மொட்டை மாடியில் படிக்கப்போனவர் கவனமெல்லாம் படிப்பில் இருந்து கனவில் லயித்தது போல உங்க "கொய்யா மரக் கிளை" என்னை இந்த கவிதையிலிருந்து என் கவனத்தை கொய்யாக் காய் "திருடி"த் தின்ற காலத்திற்கு கொண்டு சென்றுவிட்டது.

  அதனால்தானோ என்னவோ எனக்கு இன்னும் உங்க conclusion சரியா புரியலைங்க :( புரிஞ்ச மாதிரி இருக்கு ஆனா இன்னும் புரியலை.

  ஆனா, மொட்டைமாடியில் நான் படித்ததைவிட கனவுகண்டதுதாங்க அதிகம்! என்னை எங்க வீட்டு மொட்டைமாடிக்கும் மொட்டைமாடி நினைவுகளுக்கும் அனுப்பியதற்கு உங்களுக்கும் உங்கள் அழகான கவிதைக்கும் நன்றி! :-)

  ReplyDelete
 55. வருண் said...

  //Ramalakshmi!

  மதின்மம் னா டீன் ஏஜ் னு தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் போது "சந்தனமுல்லை" கேட்டதால் புரிந்துகொண்டேன்ங்க.//

  வருண், அது /‘ம’தின்மம்/ அன்று ‘பதின்மம்’. பனிரெண்டில் தொடங்கி பதிமூன்று, பதிநான்கு எனப் பத்தொன்பது வரை செல்லுகிறதே..அதே:)!

  //தமிழிலேயே இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.:-)//

  ரொம்ப ரொம்ப சரி. இந்த வார்த்தை நானும் மிகச் சமீபத்தில் அதுவும் நம் வலையுலகத்தில் கற்றதே, ஆகையால்தான் முதலில் உபயோகிக்கையில் சிறு குழப்பம். நல்லவேளையாகக் கேட்டார் முல்லை:)!

  //ஆனால் என்னைக்கேட்டால் கொய்யா காயில் (உள்ப்பகுதி வெள்ளையாக இருக்கனும், பிங்க்கா இருக்கக்கூடாது)தான் சுவை அதிகம் என்பேன். கொய்யாப்பழத்தில் இல்லை!//

  என் பெரிய தங்கையைத்தான் கேட்க வேண்டும். எங்கள் வீட்டுத் தோட்டத்தில் ஒரு காயையும் பழுக்க விட மாட்டாள்:)! எனக்குப் பழமே பிடித்தம்.

  //சரி உங்க கவிதைக்கு வர்றேன்.//

  வருவோம்.

  //ஆனா, மொட்டைமாடியில் நான் படித்ததைவிட கனவுகண்டதுதாங்க அதிகம்!//

  ஆக, உங்களையும் விட்டு வைக்கவில்லை மொட்டைமாடி:)! பதின்ம பருவத்தில் பையனோ பெண்ணோ எதிர்காலத்தைப் பற்றி ஏதேதோ கனவுகள்..மறைகின்ற சூரியனோடு கரைகின்ற வெளிச்சத்தில்.. கனவுகள் முடிந்து முழித்துக் கொள்கையில் அவற்றை மயிலிறகென புத்தகத்துள் மானசீகமாகப் பத்திரப் படுத்துகிறார்கள் அவை கரையாது என்கிற நம்பிக்கையோடு. நம்பிக்கை சார்ந்த விஷயமிது, குட்டி போடும் என மயிலிறகை ஒரு நம்பிக்கையோடு பத்திரப் படுத்துவது போல.. என்றேனும் தங்கள் கனவு பலிக்கும் என்கிற நம்பிக்கை.

  ஆனால், வாழ்க்கை கற்றுத் தரப் போகும் கடினமான பாடங்கள் எத்தனையோ காத்திருக்க, அந்த வயதுக்கே உரிய இன்னொசன்ஸ் அந்தத் தருணத்தைப் பற்றி மட்டுமே கவலை கொள்ள வைக்கிறது.. படிக்காத அன்றைய பாடங்கள் மட்டுமே பாரமாய் மனதை அழுத்த.

  இதைப் புரிவதில் இருக்கலாம் சிரமங்கள் சிலருக்கு என்றே ஆங்காங்கே சில பதில்களில் விளக்கம் கொடுத்து வந்தேன். ஆனால் கவிதையின் இலக்கணம் என இப்போது சொல்லப் படுவது யாதெனின் யார் யாருக்கு எப்படிப் புரிகிறதோ அப்படி எடுத்துக் கொள்ளலாம் என்பதே:), அது மட்டுமின்றி ஏதோ ஒரு விதத்தில் அது வாசிப்பவர் மனதைப் பாதித்தாலே அது பாஸ் வாங்கி விட்டதாகவும் அர்த்தம்:). கொய்யா நினைவுகளை உங்களுக்கு கொண்டு வந்ததிலேயே வாங்கி விட்டது இது பாஸ் மார்க் என நினைக்கிறேன்:)!

  தங்கள் விரிவான கருத்துக்களுக்கு மிக்க நன்றி வருண்:)!

  ReplyDelete
 56. //
  ராமலக்ஷ்மி said...
  RAMYA said...

  //அபி அப்பா கடைசியா என்னாதான் சொல்ல வாராருன்னே
  புரியலையே, உங்களுக்கு புரிஞ்சுதா ராமலக்ஷ்மி ???//

  அவர் சும்மா கலாட்டாவுக்குச் சொல்லியிருக்கிறார் ரம்யா:)))!

  //

  தெரியும் நான் சும்மா அபி அப்பாவை கலாட்டா பண்ணினேன் !!!

  ReplyDelete
 57. RAMYA said...
  *****//உங்களுக்கு புரிஞ்சுதா ராமலக்ஷ்மி ???//

  அவர் சும்மா கலாட்டாவுக்குச் சொல்லியிருக்கிறார் ரம்யா:)))!//

  தெரியும் நான் சும்மா அபி அப்பாவை கலாட்டா பண்ணினேன் !!!*****

  நீங்க ஸ்மைலி போடலியா, அதான் சீரியஸா பதில் சொல்லியிருக்கிறேன்:)! அப்பாட, இப்படி நாலு பேர் எனக்கு சப்போர்டுக்கு வந்தால்தான் அவர் கலாட்டா குறையும்:)!

  ReplyDelete
 58. ***ஆனால், வாழ்க்கை கற்றுத் தரப் போகும் கடினமான பாடங்கள் எத்தனையோ காத்திருக்க, அந்த வயதுக்கே உரிய இன்னொசன்ஸ் அந்தத் தருணத்தைப் பற்றி மட்டுமே கவலை கொள்ள வைக்கிறது..***

  இப்போ புரியுதுங்க, தேங்க்ஸ்!

  எனக்கு புரிந்தமாதிரி நடிக்கத் தெரியாதுங்க. அதான் சொல்லிட்டேன்.
  இதற்கு என்னுடைய தமிழ் அறிவுக்குறைவினால் வந்த இயலாமையும் உங்களுடைய அசாத்திய கவிதைத் திறனும்தான் காரணம்.:-)

  ஆமாங்க ஐ மெண்ட் "பதின்மம்". அது நல்லா புரிந்தது. நான் ஒரு "எழுத்துப்பிழை மன்னன்!" அதன் விளைவுதான் அது! டீனேஜ்க்கு பதின்மம் ஒரு அழகான தமிழாக்கம்! உங்கள் கவிதைமூலம் கற்றுக்கொண்டேன்.

  உங்கள் பொறுமையான விளக்கத்திற்கு நன்றி!

  ReplyDelete
 59. வருண் said...

  //நான் ஒரு "எழுத்துப்பிழை மன்னன்!"//

  வருண், எழுத்துப்பிழை மன்னனாக இருப்பதில் தவறில்லை, "கருத்துப் பிழை" மன்னனாகத்தான் இருக்கக் கூடாது:)! நகைச்சுவை மன்னன் நாகேஷ் பற்றி பதிவிட்ட நீங்கள் கண்டிப்பாக 'திருவிளையாடல்' திரைப்படம் பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன். கேட்பாரே நக்கீரர் "சொல்லில் பிழை இருந்தால் மன்னிக்கலாம், ஆனால் பொருளிலே பிழை இருந்தால்..?" என்று:)!

  //உங்கள் பொறுமையான விளக்கத்திற்கு நன்றி!//

  ஆர்வத்துடன் கேட்கிற உங்களுக்குப் பதிலளிப்பதில் எனக்கும் ஆனந்தமே!

  ReplyDelete
 60. 'ஒரு வரி'யில் சொல்லணும் என்றால்,

  டீன் ஏஜ் கனவுகளைக் கொண்ட நாவல் படித்த அளவிற்கு இருக்கிறது. அத்தனையும் அடக்கி, மயிலிறகாய் வருடுகிறது கவிதை ...

  கோமா அவர்களின் வித்தியாசமான புரிதல், கூடுதல் வருடல் ...

  ReplyDelete
 61. ஒவ்வொரு விஷயத்தையும் அனுபவிச்சு எழுதியிருக்கீங்க...

  பதின்ம வயதுகளின் ரசனைகளே தனிதான், கட்டுத்தறிகள் மட்டும் இல்லாதிருந்தால் எட்டி வானத்தையே வசமாக்குமளவுக்கு...

  கவிதை அருமை...

  ReplyDelete
 62. ராமலக்ஷ்மி நேற்று உங்களுக்கு
  ஒரு பின்னூட்டம் போட்டேன்
  எந்த பதிவு என்று தெரியவில்லை
  சரி பரவா இல்லை,

  இன்று வலைச்சரம்
  காண தவற வேண்டாம்
  நன்றி தோழி !!!

  ReplyDelete
 63. இது போன்று பலர் வாழ்க்கை பாடத்தையும் ரசிக்க வேண்டும்
  அது இன்பமான நினைவுகளை தரும்

  ReplyDelete
 64. பிரண்ட்! காக்கா கத்தி இருக்க கூடாது கொத்தி இருக்கனும்:-))

  பின்னே அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணாம காலை முதல் சூரியன் மறையும் வரை கனவு கண்டுகிட்டு இருக்கலாமா:-))

  காக்கா கத்துனாலும் சரி கொத்தினாலும் சரி இன்றைய தலைமுறை இதுபோன்று தான்

  ReplyDelete
 65. சதங்கா (Sathanga) said...

  //'ஒரு வரி'யில் சொல்லணும் என்றால்,

  டீன் ஏஜ் கனவுகளைக் கொண்ட நாவல் படித்த அளவிற்கு இருக்கிறது. அத்தனையும் அடக்கி, மயிலிறகாய் வருடுகிறது கவிதை ...//

  நன்றி சதங்கா, இந்த ஒற்றை வரியும் மயிலிறகு வருடலே!

  //கோமா அவர்களின் வித்தியாசமான புரிதல், கூடுதல் வருடல் ..//

  நான் அவ்வண்ணமே உணர்ந்தேன்.

  ReplyDelete
 66. சுந்தரா said...

  //பதின்ம வயதுகளின் ரசனைகளே தனிதான்,//

  உண்மைதாங்க:)! அத்தனை அழகாய் ரசிக்க.. லயிக்க.. இயலாதுதான் போய் விடுகிறது பின் வரும் காலங்களில்.

  //கட்டுத்தறிகள் மட்டும் இல்லாதிருந்தால் எட்டி வானத்தையே வசமாக்குமளவுக்கு...//

  எத்தனை அழகாய் சொல்லி விட்டீர்கள். நிஜமே என்றாலும் கட்டுத்தறியும் அவசியமாயிருக்கும் பருவம் ஆயிற்றே:)! கயிறின் மறுமுனை பெற்றவர் பிடித்திருக்க அது தந்த பாதுகாப்பு உணர்வும் குறிப்பிடத் தக்கதே.

  //கவிதை அருமை... //

  முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுந்தரா:)!

  ReplyDelete
 67. RAMYA said...

  //இன்று வலைச்சரம்
  காண தவற வேண்டாம்
  நன்றி தோழி !!!//


  வந்தேன் ரம்யா. ஆறாம் நாள் ஆசிரியப் பணியில் வலைச்சரத்தை முத்துச்சரத்துக்கு அளித்தமைக்கு எனது அன்பான நன்றிகள். தொடர்ந்து நல்ல படைப்புகளைத் தரவேண்டுமென்கிற பொறுப்புணர்வு கூடியுள்ளது.

  ReplyDelete
 68. அண்ணன் வணங்காமுடி said...

  //இது போன்று பலர் வாழ்க்கை பாடத்தையும் ரசிக்க வேண்டும்
  அது இன்பமான நினைவுகளை தரும்//

  வாழ்க்கைக் கற்றுத் தரும் பாடங்கள் இன்பம் துன்பம் கலந்தததாகவே இருந்தாலும் எல்லா சூழலிலும் எப்படி எதிர்நீச்சல் போட வேண்டும் என்பதையும் கற்றுத் தராமல் போவதில்லை.

  ReplyDelete
 69. அண்ணன் வணங்காமுடி said...

  //காக்கா கத்துனாலும் சரி கொத்தினாலும் சரி இன்றைய தலைமுறை இதுபோன்று தான்//

  இருக்கலாம்:), வளர்க்கப் படும் விதத்தையும் தாண்டி இன்றைய தலைமுறை சந்திக்கும் வெளியுலக சூழல் அன்றைய தலைமுறைக்கு அமைந்தது போல அத்தனை அமைதியாகவும் இல்லை.

  முதல் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 70. அடடா பிரண்ட்! காக்காவை கொத்த சொன்னது இந்த அளவு ரீச் ஆகிடுச்சா:-))

  ReplyDelete
 71. @அபி அப்பா,
  ஆமாம்:). என் பக்கம் ரம்யா இருக்க, உங்கள் கருத்துக்கே வணங்கியிருக்கிறார் பாருங்கள் அண்ணன் வணங்காமுடி:)!

  ReplyDelete
 72. //கூட்டம் கூட்டமாய்
  பறந்திட்டக் கிளிகளோ
  கூட வாயேன் நீயுமெனக்
  கூப்பிடுவதாய் தோன்றிட-
  இல்லாத இறக்கை
  இரண்டால் எம்பிப்
  பறக்கவும் துவங்கிடுகையில்..//

  அழ‌கு

  ReplyDelete
 73. //புத்தகத்தை கைகள் விரிக்கையில்
  விழிகள் விரிந்ததென்னவோ
  விண்ணினை நோக்கி//.

  அழ‌கோ அழ‌கு

  ReplyDelete
 74. @ இயற்கை,
  முதல் வருகைக்கும் பிடித்த வரிகளை எடுத்துக் கூறி ரசித்தமைக்கும் என் நன்றிகள்!

  ReplyDelete
 75. //படிக்காத பாடங்கள் மட்டுமே
  பாரமாய் நெஞ்சில் இருக்க.//
  நமக்கு அப்படியெல்லாம் ஒன்னும் இல்லேங்க.. எதையோ படிச்சோம் இப்ப எதையோ பண்ணிக்கிட்டு இருக்கோம்..:-)

  மயிலிறகு போல கவிதை ரொம்ப நல்லா இருந்ததுங்க..

  ReplyDelete
 76. " உழவன் " " Uzhavan " said...

  \\ //படிக்காத பாடங்கள் மட்டுமே
  பாரமாய் நெஞ்சில் இருக்க.//

  நமக்கு அப்படியெல்லாம் ஒன்னும் இல்லேங்க.. எதையோ படிச்சோம் இப்ப எதையோ பண்ணிக்கிட்டு இருக்கோம்..:-)// \\

  :))!

  //மயிலிறகு போல கவிதை ரொம்ப நல்லா இருந்ததுங்க..//

  மிக்க நன்றி உழவன்!

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin