புதன், 23 நவம்பர், 2011

நள்ளிரவில் பெற்றோம்.. இன்னும்..

அதீதம் இணைய இதழின் ஃபோட்டோ கார்னருக்கான படத் தேர்வுகள் குறித்து, சில இதழ்களில் வெளியான படங்களுடனேயே விரிவாகப் பகிர்ந்து கொண்டிருந்தேன் இங்கு. குழந்தைகள் தினச் சிறப்புப் படமாக 14 நவம்பர் அதீதத்தில் நான் தேர்வு செய்த Camera கிறுக்கன் அவர்களின் படமும் அதற்கான என் தலைப்புமே இது..

நள்ளிரவில் பெற்றோம். இன்னும்...
படம் வெளியான மறுநாள் அதீதம் தளத்தில் சகோதரி ஸ்ரீவிஜி என்பவர் அளித்திருந்த கருத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறேன், உங்கள் கருத்துகளை எதிர்நோக்கி..,

Tue, 15/11/2011 - 07:00
குழந்தைகளாக இருக்கும் போது வேலைக்குச் செல்வதென்பது மிக விருப்பமான ஒன்று, பரீட்சை இல்லை, கட்டுப்பாடு என்கிற ரோதனை இல்லை, வீட்டுப்பாடம் இல்லை, டியூஷன் இல்லை...! :) அப்பா அம்மா வேர்வையுடன் அழுக்கு ஆடையில் வீட்டிற்கு வரும்போது, அதே போல் நாமும் எப்போது வேலைக்குச்செல்வோம் என ஏங்கியிருந்திருப்போம் அல்லவா! அதற்காகவே என்னனுடைய 13 வயதில், நான் ஒரு சீனன் நடத்திய ‘கிச்சாப்’ (சீன உணவுகளில் தெளிக்கப்படும் ஒரு திரவம்) கம்பெனிக்கு வேலைக்குப்போனேன் பள்ளி விடுமுறையில், (அப்பாவிற்குத்தெரியாது, அம்மாவிடம் டிமிக்கி கொடுத்து, ஒரு வாரம் கூட தாக்குப்பிடிக்காமல் ஓடிவந்துட்டேன். கிச்சாப் போத்தல் கழுவும் வேலை, கடினமான வேலை, சீனன் தாறுமாறாகதிட்டுவான். போத்தல் கழுவ ஒரு சிறிய கருவி இருக்கும் (கடையில் தேங்காய் துருவ வைத்திருக்கும் மிஷின் போல்) அதில் ஒரு பிரஷ் நீட்டிக்கொண்டு இருக்கு, அதில் நீர் வந்துக்கொண்டு அது சுற்றிக்கொண்டே இருக்கும், அப்போது அந்த போத்தலை அதனுள் நுழைக்கவேண்டும், சரியான கழுவினால் தப்பித்தோம், இல்லையேல் அந்த கண்ணாடி போத்தல் பாதியிலே உடைந்து கைகளைப் பதம் பார்க்கும்.. இன்னமும் அதன் காயங்கள் என் விரல்களில் உண்டு.. அப்பாவை விட சித்தப்பா அடிக்கவே வந்து விட்டார் இந்த விவரம் வீட்டிற்கு தெரிந்த போது. அவ்வளவு அக்கறை பிள்ளைகள் மீது. இது விரும்பிச்சென்று செய்துப் பார்த்ததால்,வலி பட்டவுடன் ஓடிவந்தோம். ஆனால் பல குழந்தைகள்??? காலை வைத்துவிட்டு வேதனைகளை அனுபவித்த வண்ணமாக, வெளியே சொல்லமுடியாமல், பாவம் குடும்ப சூழல்???? இதற்கு ஒரு விடிவுகாலம் பிறக்கவே என் பிராத்தனை. (மேலே உள்ள படம் என்ன சொல்கிறதுன்னு தெரியல, ஆனால் பசங்க ஃசைக்கிள் கடையில், வாடிக்கையாளர்களுக்கு காத்திருப்பதைபோல் இருக்கு பள்ளிக்குச்செல்லாமல், அதனால்தான் உடனே பகிர்ந்தேன் என் மனவூஞ்சலில் எழுந்த இந்தப் பகிர்வை...) படத்தை தப்பாக நோக்கி கருத்துரைத்திருந்தால், பொருத்தருள்க.

சரியான புரிதலுடனேதான் தம் மனக்குமுறலை வெளிப்படுத்தியிருக்கிறார். இவர் கேள்விக்கு என்ன பதிலுண்டு நம்மிடம், படத்துக்கான தலைப்பை ‘விடியவேயில்லை’ எனப் பூர்த்தி செய்வது தவிர்த்து???
***

செப்டம்பர் II-அதீதத்துக்கு தேர்வு செய்த ஜீவா சுப்பிரமணியம் அவர்களது படம் “கரங்கள்” இன்னொரு விடையற்ற கேள்வியாக....

துடிப்பான உதவிக் கரங்களா?
படிப்பைத் துறந்து
உழைக்க வந்த பிஞ்சுக் கரங்களா...???
***


14 நவம்பர் 2011. நாடெங்கிலும் பள்ளிகள் தோறும் குழந்தைகள் தினக் கொண்டாட்டம். ஆனால் கர்நாடகத்தின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள் அன்றைய தினத்தைக் கையிலெடுத்துக் கொண்டது தங்கள் அடிப்படை உரிமைக்காக. ஒரு நாடு அதன் குழந்தைகளுக்கு நல்ல கல்வியை அளிக்கவேண்டியது தலையாய கடமை. எத்தனை மாநில அரசுகள் அதைச் சரிவர செய்கின்றன? மாநிலத் தலைநகரங்கள் ஐடி வளர்ச்சியில் முன்னிலை வகிக்க வேண்டுமெனக் படுகிற கவலையில் பத்து சதவிகிதமேனும் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்கிறோமா என்று கவனிக்கின்றனவா?

பெருநகரின் ஒரு மூலையிலிருந்து ஒரு மூலைக்குச் செல்லப் பலப் பலகோடிகளைச் செலவழித்து மெட்ரோ, போக்குவரத்து நெரிசல்களைக் குறைக்கப் பாலங்கள். இந்தச் செலவில் ஆயிரத்தில் ஒருபங்கு ஆகாது ஒரு கிராமத்துக்கு அரசு கூட ஒரு பேருந்துவை இயக்குவதால். சரியான போக்குவரத்து வசதி இல்லாததாலே சுற்றுவட்டக் கிராமங்களின் பல சிறுவர் சிறுமியர் மேற்கொண்டு படிப்பைத் தொடர இயலாமல் போய் விடுகிறார்கள்.

இந்தப் பிரச்சனையை அரசின் கவனத்துக்குக் கொண்டுவரவே குழந்தைகள் தினத்தில் தங்கள் உரிமையைக் கோரி போராட்டத்தைப் பரவலாக மேற்கொண்டார்கள் குழந்தைகள். ரெய்ச்சூர் கிராமத்தைச் சேர்ந்த அக்கம்மா பீரப்பா எனும் பதினைந்து வயதுச் சிறுமி ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு பஞ்சாயத்துத் தலைவரிடம் தங்கள் கிராமத்தில் மேல்நிலைப் பள்ளி கொண்டுவர மனுக் கொடுத்திருக்கிறார். அந்த மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் 10 அல்லது 15 பேராவது எட்டாம் வகுப்புக்குப் பிறகு பள்ளியை விட்டு நின்று விடுகிறார்கள். தானும் அவர்களுள் ஒருவரெனச் சொல்லும் அக்கம்மா, படிப்பைத் தாங்கள் தொடரவிரும்பினால் பதினைந்து கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டுமென்றும், அதற்கு நாளொன்றுக்கு ரூ 30 செலவாகுமெனவும், தினக்கூலிக்குச் செல்லும் தன் தாயாரை அப்படித் தன்னால் சிரமப் படுத்த முடியாதென்றும் சொல்லுகிறார்.

ஊருக்கு ஒரே ஒரு பேருந்தே இயக்கப்படுவதாயும், அதுவும் மழைக்காலத்தில் வருவதில்லையெனவும், தன்னோடு எட்டாவது தேறிய 15 பேரில் ஐந்து பேர் மட்டுமே படிப்பைத் தொடர முடிந்ததாகவும், இதுவே ஒவ்வொரு வருடமும் நடப்பதாக வருத்தப்படுகிறார். “எங்கள் ஊரிலேயே மேல்நிலைப்பள்ளி வந்தால் நாங்கள் எல்லோருமே படிக்கலாமல்லவா?” எனக் கண்ணில் நம்பிக்கை மிளிர பத்திரிகைக்குப் பேட்டி கொடுத்த இவரது மனுவை பஞ்சாயத்து பரிசீலிக்குமா?

இது போல் பிடார் மாவட்டம், யடியூர் கன்ஞ்ஹல்லி கிராமத்தைச் சேர்ந்த 14 வயது ஹஸனம்மா ஜம்பப்பா எப்படி தினம் 7 கிலோ மீட்டர் பயணம் செய்து படிப்பைத் தொடர வேண்டியிருந்தது தங்கள் ஊர் குழந்தைகள் என விளக்கியிருந்தார் குழந்தைகள் தினத்தன்று. இவர் அங்குள்ள குழந்தைகள் அமைப்பின் வைஸ் ப்ரெசிடண்ட். மாவட்ட நீதிபதி, மனித உரிமைக் கமிஷன் அனைவரிடமும் போராடி ஒருவாறாகக் கல்வித்துறை அதிகாரி அவர் ஊருக்கு வந்து பார்த்து ஒன்பதாம் வகுப்பைக் கொண்டு வந்திருக்கிறார். 2012-ல் பத்தாவதும் வந்து விடும் என நம்பிக்கைத் தெரிவிக்கிறார் ஹசனம்மா.

இப்படிச் சிறுமியர்கள் தங்கள் உரிமைகளுக்காகத் தாமாகவே அமைப்பை ஏற்படுத்திக் கடுமையாகப் போராடியே அதைப் பெறும் சூழலில்தான் நம் நாடு இருக்கிறது எனும் போது எத்தனை வெட்கமாக உணர வேண்டியுள்ளது? இன்னும் முடியவில்லை இவ்வருடக் குழந்தைகள் தினச் சிறப்புப் பேட்டிகள்.

தேராபவியைச் சேர்ந்த பதினான்கு வயதுச் சிறுவன் அமரேஷ் கரியப்பா, தங்கள் கிராமத்துக்குப் பேருந்தைக் கொண்டுவரப் புத்தகப் பைகளோடு எப்படி மாணவர் எல்லோருமாய்ச் சாலைமறியல் செய்தார்கள் என்பதைப் பகிர்ந்து கொண்டிருந்தார் 14 நவம்பர் அன்று. லோகல் செய்தித் தாள்களில் இந்தச் செய்தி இடம்பெறவும் நல்லவேளையாக அரசு பேருந்து டெப்போ நிர்வாகியே உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து மறுநாளிலிருந்து அவர்களின் கிராமத்துக்குப் பேருந்தை அனுப்பி வைத்திருக்கிறார்.

இந்தக் கிராமபுறங்களிலிருந்து ஒட்டுமொத்தமாகக் கிடைக்கின்ற வாக்குகளை வைத்தே அரசு பரிபாலனமும் நாட்டில் நடக்கிறது.

நகர்ப்புறங்களில் அரசுப்பள்ளி வசதிகள் ஓரளவு நன்றாக இருப்பினும் கூட பள்ளிப்படிப்பைத் துறப்பவர் எண்ணிக்கை அதிகமான படிதான் உள்ளது. சிறுவர்களை வேலைக்கு வைப்பது கூடாதென்கிறோம். ஆனால் குழந்தைத் தொழிலாளிகளைப் பல இடங்களில் பரவலாகப் பார்க்கமுடிகிறது. நெருங்கி விசாரிக்க முனைந்த போது ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமான கதை. சின்ன வயதில் கல்வியைத் துறப்பது என்பது குழந்தைகளை வேறு தீய பழக்கங்களுக்கு ஆளாக்கி வாழ்வைத் திசை மாற்றி விடுவதும் நடக்கிறது. சிறுமியர் வாழ்வு சீரழிக்கப்படும் வேதனைகளிலும் முடிகிறது. அத்தனைக் கதைகளுக்கும் அடிநாதமாக அமைந்திருப்பது அடிப்படை உரிமை மறுக்கப்படுகிற சமூக அமைப்பும், அரசின் அக்கறையின்மையுமே என்பது தெரிய புரிய வரும்.

இது ஒரு மாநிலத்தின் கதை மட்டுமல்ல. அக்கம்மா பீரப்பா, ஹஸனம்மா ஜம்பப்பா, அமரேஷ் கரியப்பா இவர்கள் நாட்டின் ஒட்டுமொத்தக் கிராமப்புற, நடுத்தர மற்றும் உழைக்கும் ஏழை வர்க்கக் குடும்பத்துச் சிறுவர்களின் பிரதிநிதிகளாகவேத் தெரிகிறார்கள்.

அதை உறுதிப்படுத்துவதாகவேப் பகிர்ந்த படங்களும். முதல் படம் கொல்கத்தாவிலும் இரண்டாவது வாரணாசியிலும் எடுக்கப்பட்டவை.
*** ***

31 கருத்துகள்:

  1. இந்த இரண்டு புகைப்படங்களும், அது ஏற்படுத்தும் அதிர்வுகளும் தமிழ்நாட்டிற்கும் பொருந்தக் கூடியவையே. எல்லாக் குழந்தைகளுக்கும் கல்வி என்ற இலக்கு எட்டாக்கனியாகவே இன்னும் இருக்கிறது. இந்தப் பிஞ்சுகளைப் பார்க்கையில் மனதில் பாரம் கூடுகிறது...

    பதிலளிநீக்கு
  2. அப்பா!!!!!! எவ்ளோ பெரிய பதிவு கொஞ்ச இருங்க வேலைய முடிச்சுட்டு வரேன்....

    பதிலளிநீக்கு
  3. அக்கா...காலத்துக்கேற்ற பதிவு !

    பதிலளிநீக்கு
  4. இதை நினைத்தால் எப்போதும் மனதில் வலிதான்...நம்மால் முடிந்தவரை ஒரு சில குழந்தைகளின் வாழ்வையேனும் மாற்றியமைக்க முயற்சிக்க வேண்டியது என்பது ஒரு தற்காலைகத் தீர்வு...

    பதிலளிநீக்கு
  5. படங்கள் கவலைகொள்ள வைக்கின்றன.
    இந்நிலை முடிவது எப்போது ?

    பதிலளிநீக்கு
  6. மாணவர்களின் நிலைமையும் செயலும் நெகிழ்ச்சியையும், நொண்டி அரசுகளின் மெத்தனத்தை நினைத்து ஆத்திரத்தையும் ஒருசேர மூட்டும் சிறப்பான பகிர்வு.

    நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  7. இரண்டாவது படம் :
    வண்டியைத் தள்ளினால்தான் வாழ்க்கையைத் தள்ள முடியும்...

    கருப்பு வெள்ளையில் இருக்கும் இது போன்ற படங்கள் பதினைந்து இருக்கும் ஒரு தளத்தில் பார்த்தேன். வருத்தமாக இருந்தது.
    ஒருபக்கம் இவர்கள் சம்பளம் இருந்தால்தான் அவர்கள் குடும்பம் சாப்பிட முடியும் என்னும்போது இவர்களை சட்டம் பார்த்து வேலையை விட்டு எடுத்து விட்டால் அந்தக் குடும்பம் என்ன ஆகும் என்றும் தோன்றியது. அரசாங்கம் இந்த மாதிரிக் குடும்பங்களுக்கு எவ்வளவு உதவ முடியும்?

    பதிலளிநீக்கு
  8. //சின்ன வயதில் கல்வியைத் துறப்பது என்பது குழந்தைகளை வேறு தீய பழக்கங்களுக்கு ஆளாக்கி வாழ்வைத் திசை மாற்றி விடுவதும் நடக்கிறது. சிறுமியர் வாழ்வு சீரழிக்கப்படும் வேதனைகளிலும் முடிகிறது. அத்தனைக் கதைகளுக்கும் அடிநாதமாக அமைந்திருப்பது அடிப்படை உரிமை மறுக்கப்படுகிற சமூக அமைப்பும், அரசின் அக்கறையின்மையுமே என்பது தெரிய புரிய வரும்.//

    ரொம்பச்சரிங்க..

    பதிலளிநீக்கு
  9. மனம் கனக்கச் செய்துபோகும் பதிவு
    படங்களுடன் பதிவினைப் படிக்கையில்
    மனம் பதறத்தான் செய்கிறது

    பதிலளிநீக்கு
  10. வண்டியைத் தள்ளினால்தான் வாழ்க்கையைத் தள்ள முடியும்...
    என்ற நிலையை நினைத்தால் வருத்தமே ஏற்படுகிறது.

    நல்லதொரு அலசல் பதிவு.
    பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  11. தென் மாநிலங்களில், இந்த நிலை குறைவு, ஆனால் வட கிழக்கு மாநிலங்களில் இது போன்ற நிலமி அதிகம்,அரசியல்வாதிகளுக்க்கும் துறை சார்ந்த அதிகாரிகளும் அதிக அக்கறையுடன் நடவடிக்கை எடுத்தால் நிச்சயம் நல்ல மாற்றம் ஏற்படும்!

    பதிலளிநீக்கு
  12. கணேஷ் said...
    //இந்த இரண்டு புகைப்படங்களும், அது ஏற்படுத்தும் அதிர்வுகளும் தமிழ்நாட்டிற்கும் பொருந்தக் கூடியவையே. எல்லாக் குழந்தைகளுக்கும் கல்வி என்ற இலக்கு எட்டாக்கனியாகவே இன்னும் இருக்கிறது. இந்தப் பிஞ்சுகளைப் பார்க்கையில் மனதில் பாரம் கூடுகிறது...//

    கருத்துக்கு நன்றி கணேஷ்.

    பதிலளிநீக்கு
  13. ஹேமா said...
    //அக்கா...காலத்துக்கேற்ற பதிவு !//

    நன்றி ஹேமா.

    பதிலளிநீக்கு
  14. பாச மலர் / Paasa Malar said...
    //இதை நினைத்தால் எப்போதும் மனதில் வலிதான்...நம்மால் முடிந்தவரை ஒரு சில குழந்தைகளின் வாழ்வையேனும் மாற்றியமைக்க முயற்சிக்க வேண்டியது என்பது ஒரு தற்காலைகத் தீர்வு...//

    சரியாகச் சொன்னீர்கள் மலர். அதை என்னால் இயன்றவரை செய்து வருகிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  15. மாதேவி said...
    //படங்கள் கவலை கொள்ள வைக்கின்றன.
    இந்நிலை முடிவது எப்போது ?//

    இதே கேள்வியுடன் சிறுவர்களே இன்று களமிறங்கிப் போராடுகிறார்கள்.

    நன்றி மாதேவி.

    பதிலளிநீக்கு
  16. சத்ரியன் said...
    //மாணவர்களின் நிலைமையும் செயலும் நெகிழ்ச்சியையும், நொண்டி அரசுகளின் மெத்தனத்தை நினைத்து ஆத்திரத்தையும் ஒருசேர மூட்டும் சிறப்பான பகிர்வு.//

    நன்றி சத்ரியன்.

    பதிலளிநீக்கு
  17. ஸ்ரீராம். said...
    //ஒருபக்கம் இவர்கள் சம்பளம் இருந்தால்தான் அவர்கள் குடும்பம் சாப்பிட முடியும் என்னும்போது இவர்களை சட்டம் பார்த்து வேலையை விட்டு எடுத்து விட்டால் அந்தக் குடும்பம் என்ன ஆகும் என்றும் தோன்றியது. அரசாங்கம் இந்த மாதிரிக் குடும்பங்களுக்கு எவ்வளவு உதவ முடியும்?//

    அடிப்படையில் சிறப்பான கல்வி வசதி ஒவ்வொரு குழந்தைக்கும் கிடைக்கும் பட்சத்தில் பெற்றோர் படிக்கட்டுமென்றே நினைப்பார்கள் என்பதே என் எண்ணம். அது இல்லாமல் வேலைக்கு அனுப்ப ஆரம்பித்து அதுவே பழகிப் போகிற சூழலில்தான் பெரும்பாலான குடும்பங்கள். அரசு அவசியம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய ஒரு பிரச்சனை இது.

    பதிலளிநீக்கு
  18. அமைதிச்சாரல் said...
    *****//சின்ன வயதில் கல்வியைத் துறப்பது என்பது குழந்தைகளை வேறு தீய பழக்கங்களுக்கு ஆளாக்கி வாழ்வைத் திசை மாற்றி விடுவதும் நடக்கிறது. சிறுமியர் வாழ்வு சீரழிக்கப்படும் வேதனைகளிலும் முடிகிறது. அத்தனைக் கதைகளுக்கும் அடிநாதமாக அமைந்திருப்பது அடிப்படை உரிமை மறுக்கப்படுகிற சமூக அமைப்பும், அரசின் அக்கறையின்மையுமே என்பது தெரிய புரிய வரும்.//

    ரொம்பச்சரிங்க../*****

    நன்றி சாந்தி.

    பதிலளிநீக்கு
  19. Ramani said...
    //மனம் கனக்கச் செய்துபோகும் பதிவு
    படங்களுடன் பதிவினைப் படிக்கையில்
    மனம் பதறத்தான் செய்கிறது//

    கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  20. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //வண்டியைத் தள்ளினால்தான் வாழ்க்கையைத் தள்ள முடியும்...
    என்ற நிலையை நினைத்தால் வருத்தமே ஏற்படுகிறது.

    நல்லதொரு அலசல் பதிவு.
    பகிர்வுக்கு நன்றி!//

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  21. அன்புடன் அருணா said...
    //பூங்கொத்து!//

    நன்றி அருணா.

    பதிலளிநீக்கு
  22. நம்பிக்கைபாண்டியன் said...
    //தென் மாநிலங்களில், இந்த நிலை குறைவு, ஆனால் வட கிழக்கு மாநிலங்களில் இது போன்ற நிலமி அதிகம்,அரசியல்வாதிகளுக்க்கும் துறை சார்ந்த அதிகாரிகளும் அதிக அக்கறையுடன் நடவடிக்கை எடுத்தால் நிச்சயம் நல்ல மாற்றம் ஏற்படும்!//

    தென் மாநிலமாகிய கர்நாடகத்தைப் பற்றியே சொல்லியுள்ளேன். இதைவிடவும் வடக்கே அதிகம் என்பது சரியாகவே இருக்கலாம். நீங்கள் சொல்கிற மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலே இவர்களுக்கு விடிவு பிறக்கும். கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  23. /*இப்படிச் சிறுமியர்கள் தங்கள் உரிமைகளுக்காகத் தாமாகவே அமைப்பை ஏற்படுத்திக் கடுமையாகப் போராடியே அதைப் பெறும் சூழலில்தான் நம் நாடு இருக்கிறது எனும் போது எத்தனை வெட்கமாக உணர வேண்டியுள்ளது?*/
    :-( உண்மை தான். எத்தனையோ NGOs , இன்னும் பலர் என்று தனிப்பட்ட நிலைகளில் பலருக்கு உதவி கிடைக்கிறது என்றாலும் சமூகத்தில் பலர் இன்னும் அல்லல் படுகிறார்கள். அரசு அக்கறை கொண்டு ஒழுங்காகத் திட்டமிட்டு செயல்படுத்தினால் ஒழிய தீர்வு கிடைப்பது கஷ்டமோ? ஆனால் யார் அரசேற்றாலும் தூற்றவும் மாற்றவும் தான் நேரம் சரியாக உள்ளது :-(

    பதிலளிநீக்கு
  24. கர்நாடக குழந்தைகளின் விழிப்புணர்ச்சி மெச்சத்தக்கது!

    அவசியமான, வித்தியாசமான இடுகைக்கு பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  25. அமுதா said...
    ****/*இப்படிச் சிறுமியர்கள் தங்கள் உரிமைகளுக்காகத் தாமாகவே அமைப்பை ஏற்படுத்திக் கடுமையாகப் போராடியே அதைப் பெறும் சூழலில்தான் நம் நாடு இருக்கிறது எனும் போது எத்தனை வெட்கமாக உணர வேண்டியுள்ளது?*/

    :-( உண்மை தான். எத்தனையோ NGOs , இன்னும் பலர் என்று தனிப்பட்ட நிலைகளில் பலருக்கு உதவி கிடைக்கிறது என்றாலும் சமூகத்தில் பலர் இன்னும் அல்லல் படுகிறார்கள். அரசு அக்கறை கொண்டு ஒழுங்காகத் திட்டமிட்டு செயல்படுத்தினால் ஒழிய தீர்வு கிடைப்பது கஷ்டமோ? ஆனால் யார் அரசேற்றாலும் தூற்றவும் மாற்றவும் தான் நேரம் சரியாக உள்ளது :-(/****

    அதுதான் வேதனை அமுதா. அக்கறை எடுத்துச் செய்தால் நிச்சயமாய் மாற்றங்கள் கொண்டு வர இயலும். குழந்தைகளைத் தொழிற்சாலைகளில் வேலைக்குச் சேர்ப்பவர்கள் இங்கு அதிகமே. சட்டம் ஒரு கண் துடைப்பாகவே உள்ளது. வயதைக் கூட்டி பொய் சான்றிதழ்கள் பெற முடிவதும் தெரிய வந்தது சிலரிடம் பேசியதில்:(!

    பதிலளிநீக்கு
  26. ஈரோடு கதிர் said...
    //கர்நாடக குழந்தைகளின் விழிப்புணர்ச்சி மெச்சத்தக்கது!

    அவசியமான, வித்தியாசமான இடுகைக்கு பாராட்டுகள்!//

    நன்றி கதிர்.

    பதிலளிநீக்கு
  27. தமிழ்மண நட்சத்திர வாழ்த்துக்களை இங்கே பதிவு செய்கிறேன்.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  28. @ ராஜ நடராஜன்,

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  29. சின்ன வயதில் கல்வியைத் துறப்பது என்பது குழந்தைகளை வேறு தீய பழக்கங்களுக்கு ஆளாக்கி வாழ்வைத் திசை மாற்றி விடுவதும் நடக்கிறது. சிறுமியர் வாழ்வு சீரழிக்கப்படும் வேதனைகளிலும் முடிகிறது. அத்தனைக் கதைகளுக்கும் அடிநாதமாக அமைந்திருப்பது அடிப்படை உரிமை மறுக்கப்படுகிற சமூக அமைப்பும், அரசின் அக்கறையின்மையுமே என்பது தெரிய புரிய வரும்.//

    சரியாக சொன்னீர்கள் ராமலக்ஷ்மி.
    படங்கள் மனதை கனக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin