எழுத்து என்பது ஒரு சிற்பத்தைப் போல ஒரு கல்வெட்டைப் போல தான் வாழ்ந்த காலத்தை வருங்காலத்துக்கு எடுத்துச் செல்லும் ஆவணமாக அமைந்து போகையில் எழுதப்பட்ட காலத்தில் கொண்டாடப்பட்டு மக்கள் மனதில் இடம் பெறுவதையெல்லாமும் தாண்டி வருங்காலம் வியந்து போற்றுவதாக உயர்ந்து நின்று விடும். கவனிப்பற்று போகும் அத்தகு எழுத்துக்கள் கூட பின்னாளில் எவராலேனும் புதையல் எனக் கண்டெடுக்கப்பட்டதும் நடந்திருக்கிறது. ஆனால் ஆசிரியர் சுகாவுக்கு சக காலத்திலேயே அந்த அங்கீகாரத்தை ஆனந்த விகடன் தந்திருந்தது ‘மூங்கில் மூச்சு’ தொடர் மூலமாக. அதன் பனிரெண்டாவது அத்தியாயத்தின் போது ‘யார் இந்த சுகா’ என வியப்புடன் நான் பகிர்ந்து கொண்ட குறிப்பைத் தொடர்ந்து நண்பர்கள் எனக்குப் பரிந்துரைத்ததே சொல்வனம் இணைய இதழில் அவர் தொடராக எழுதிப் பிறகு தொகுப்பாக வெளியான “தாயார் சன்னதி”. தபால் மூலமாக தருவித்துக் கொண்டாலும் ஏனோ ‘மூங்கில் மூச்சு’ முடிந்த பின்னரே வாசிக்க வேண்டுமெனத் தோன்றக் காத்திருந்து வாசித்தேன். பகிர்ந்திடும் நேரம் இப்போதுதான் வாய்த்தது.
மூங்கில் மூச்சின் முந்தைய பாகம் என்று சொல்ல முடியாமல் இரண்டும் சம காலத்தின் வெவ்வேறு நிகழ்வுகளின் பதிவுகளாக. இதிலிருக்கும் எந்த அத்தியாயங்களையுமே அவர் மூங்கில் மூச்சில் பகிர்ந்ததாகத் தெரியவில்லை, விஞ்சை விலாஸ் தவிர்த்து. அதுவும் உணவகங்களைப் பற்றி எழுதுகையில் தவிர்க்க முடியாமல் சேர்த்திருப்பார் என்றே எண்ணுகிறேன்.
மூங்கில் மூச்சில் பல கதாபாத்திரங்கள் ஏற்கனவே அறிமுகமாகி விட்டிருந்ததால் எளிதாக ஒன்றி சிநேகத்துடன் பயணிக்க முடிந்தது. என் பிறந்த மண்ணைப் பற்றிய பகிர்வு என்பது கூடுதல் ஈர்ப்பு என்பதையும் மறுப்பதற்கில்லை. அதே நேரம் இத்தொடரை நேசிக்கவும் ரசிக்கவும் நெல்லை மண்ணில் பிறந்தவராக இருக்க வேண்டும் என்பது கிஞ்சித்தும் அவசியமில்லை. நெல்லையப்பரும் காந்திமதியும் எம் மண்ணுக்கு அப்பனும் அம்மையும் என்றால் அவரவர் ஊருக்கு அருள் பாலித்திருக்கும் அம்மை அப்பனை இவரது வரிகளில் தரிசிப்பீர்கள். நெல்லை வீதிகளில் ஆசிரியர் நடக்கும் போது, தியேட்டர்களில் படம் பார்க்கும் போது, தன் சமூகத்தின் வழக்கங்களைப் பகிரும் போது, சந்தித்த மக்களைக் கொண்டாடும் போது தன்னிச்சையாக உங்கள் நினைவுகளும் உங்கள் ஊரைச் சுற்றிவரும் என்பதற்கு நூறு சதவிகிதம் உத்திரவாதம் தர முடிகிறது.
குஞ்சு போன்றதொரு தோழன் ஒவ்வொரு நட்பு வட்டத்திலும் இருப்பார். ஜெயண்ட் வீலில் சின்னப்பையனோடு தெம்பாக ஏறி அமர்ந்து, சுற்ற ஆரம்பித்ததும் வெலவெலத்துப் போன சுந்தரம்பிள்ளை பெரியப்பா; பாம்புக்கு பயந்து உத்திரத்தில் தொங்கி, யாரோ அடித்துப் போட்ட பிறகு அதைத் தெருவழியே தூக்கி நடந்த அம்பி மாமா, எம்.ஜி.ஆரின் அதிதீவிர ரசிகரான அன்னண்ணன், ‘வான் நிலா’ பாடலை ரசிக்கும் அம்போத்தி இவர்கள் வேறு பெயர்களில், வேறு உருவங்களில் ஒவ்வொருவர் ஊரிலும் உலவியிருப்பார்கள்.
‘தாயார் சன்னதி’ என்றதும் காந்திமதி அம்மனைப் பற்றியதாகவே இருக்குமென நான் எண்ணியிருக்க அது ஆசிரியரது தாயாரின் கடைசி தினங்களைப் பற்றியதாக, மருத்துவமனையில் அவர் போலவே பாதிக்கப்பட்டிருந்த சில தாயார்களைப் பற்றியதாக அமைந்திருப்பது நெகிழ்வு. “முஜிபுர், ப்ரீத்தி ஜிந்தா, மூன்றாம் பிறை பாட்டியின் மகன் என தங்கள் தாயார்களை உள்ளே அனுமதித்துவிட்டு, மருத்துவமனைக்கு வெளியே இருந்த அனைவருமே ஒருவருக்கொருவர் ரகசியமாக மற்றவரைப் பற்றியும் நினைத்துக் கொண்டிருப்பார்கள்தான். அதில் நானும், அம்மாவும் நிச்சயம் இருந்திருப்போம். சிகிச்சை முடிந்து வெளியே வந்த சில காலத்திலேயே அம்மா காலமாகிவிட்டாள். அந்தத் தாயார்கள் யாரைப் பற்றிய தகவலும் எங்களுக்குத் தெரியவில்லை. அம்மாவுக்குத் தெரிந்திருக்கும்.”
‘பாம்பு என்ற பூச்சி’, விளக்கு வைத்த பின் பாம்பைப் பாம்பு என சொல்லக் கூடாதென்பதை நாங்களும் சிறுவயதில் கடைப்பிடித்திருக்கிறோம்.
‘ஒவ்வொரு ஆச்சிக்கும் ஒவ்வொரு பெயர்.’ உண்மைதான். அத்தனை பல்லும் போனாலும் நெஞ்சு முழுக்க அன்பைச் சுமந்து கொண்டு ஆழ்வாற்குறிச்சியிலிருந்து எங்களைப் பார்க்க வரும் அம்மாவின் பெரியம்மா பெயர் கோமதி என்பதைச் சிரமப்பட்டு நினைவுக்குக் கொண்டு வந்தேன் இதை எழுதும்போது. எல்லோருக்கும் அவர் ‘பொக் பொக்’ ஆச்சி. தொட்டிலில் கிடந்த கொள்ளுப் பேரனாகிய என் அண்ணனின் அழுகையை நிறுத்த ‘கொக்கரக்கோ’ எனக் கூவிக் காட்டிய அம்மாவின் ஆச்சியை ‘கொக்கரக்கோ’ ஆச்சி என்றே இன்றளவும் விளிக்கிறோம். ஆசிரியர் காட்டும் பசு ஆச்சி, குட்டை ஆச்சி, மாம்பழத்தாச்சி போன்றோரின் பிரதிபலன் பாரா பாசம், அன்பு இன்றைய உலகில் காணக் கிடைப்பதே அரிது.
இலங்கை வானொலி கேட்ட இனிய நாட்களை மீட்டெடுக்கிறது ‘சில மனிதர்கள், சில பாடல்கள்’. ‘ஆய்புவன்’ இலங்கை ரூபவாஹினி திருநெல்வேலியில் தெரிய ஆரம்பித்த போது அதை மட்டும் நம்பியே வாங்கப்பட்ட டைனோரா, சாலிடேர் டிவி காலங்களுக்கு அழைத்துச் செல்கிறது. தொடர்ந்து தூர்தர்ஷன் தெரிய ஆரம்பிக்க மொழியே தெரியவில்லையென்றாலும் ஊரே விடாது பார்த்த ‘புனியாத்’ ஹிந்தி சீரியலை நினைவு கூர்கின்றது. நமசிவாயம் பிள்ளை கேட்கிறார் “மருமகனே, வடநாட்டு பொம்பளேளெல்லாம் எந்த நேரமும் சப்பாத்தி போட்டுட்டெ இருக்காளுவளே என்னடே? அவ்வொ புருசமாருல்லாம் அவ்வளவு கானம் திம்பானுவொ, என்னா?”
இவர் பரிமாறி இருக்கும் ‘பந்தி’ யைப் பற்றிச் சொன்னால் சுவைக்காது. வாசித்தாலே ருசிக்கும். பரிமாறும் முறை, உணவுகளின் வகை, எந்தெந்த நிகழ்வுகளுக்கு எப்படியாக இருக்க வேண்டும் பந்தி என்பதைப் பற்றிய நுணுக்கமான விவரிப்புக்கள் அற்புதம். மண்ணின் பழக்க வழக்கங்களைச் சிறப்பாகத் தொடரெங்கும் பதிந்திருக்கிறார் தனிப்பட்ட சமூக நெடி படிந்திடாத படியும்.
கட்டுரையில் நடமாடும் மாந்தரை நாம் நேரில் பார்க்கிற உணர்வைத் தோற்றுவிக்கிறது எழுத்து. சின்னச் சின்ன விஷயங்களையும் நினைவிடுக்கிலிருந்து மீட்டெடுத்துத் தந்த விதமும் ரசிப்புக்குரியது, நெற்றியெல்லாம் நீறுமணக்க கழுத்தி ஸ்படிக, ருத்திராட்ச மாலைகளுடன் விஞ்சை விலாஸ் கைலாசம் பிள்ளை தாத்தா எப்படி பத்மினி ஊதுபத்தியை அதன் பாக்கெட்டின் துளையில் செருகி வைத்திருப்பார் என்பது வரை கூர்மையான அவதானிப்பு.
தொடரைத் தாங்கி நிற்கும் தூணாக வட்டார வழக்கு. தெப்பக்குளத்தெரு ரங்கநாதனின் “நேர்ல பாக்க வருதேன்” எனும் மூன்று வார்த்தைகள் எப்படி ஆசிரியரை சந்தோஷப்படுத்தியதோ அதே சந்தோஷம் கிட்டுகிறது ஊர் மக்களுக்கு, முதல் அத்தியாயத்தின் பெயரைப் பார்த்ததுமே. ‘திருநவேலி’! “ஒன் வயசென்ன என் வயசென்னலே” சண்முக அண்ணன் தன்னிலை மறந்து கோபப்பட்டது என்னவோ நாய் ஜாக்கனிடம் என்றாலும் இந்த வார்த்தைகளை உபயோகிக்காத ‘திருநவேலி’ ஆட்கள் மிகக் குறைவு.
இன்று திருமணத் தகவல் மையங்களில் அல்லாடும், இணையத்தில் மேட்ரிமோனியல் சர்வீஸ்களை உள்ளூற அச்சத்துடன் மேய்ந்து கொண்டிருக்கும் பெற்றோரை ஏங்க வைப்பவராக ‘துப்பு’ சொல்லும் வீரையன் தாத்தா.
கணவன் பேரைச் சொல்லக் கூடாதெனத் தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் ஆச்சிகள், அக்காக்கள், அத்தைகள், சித்திகள், மதினிகள் வலம் வருகிறார்கள் விதம் விதமாய் ‘முருகன் சாமி பேரு’ சொல்லி.
”நிறையக் கட்டுரைகளின் கடைசி வரி அவ்வளவு வாக்காக அமைந்து, அதற்கு முந்திய அத்தனை வரிகளையும் உயரத்திற்குக் கொண்டுபோய் விடுகிறது” முன்னுரையில் வண்ணதாசன் அவர்கள் சிலாகித்திருப்பது பற்றி மேலும் நான் சொல்ல என்ன இருக்கிறது? உயரத்துக்குக் கொண்டு போகும் அந்த சிலவற்றுள் உரக்கச் சிரிக்க வைப்பவையாக சொக்கப்பனை, ஜெயண்ட் வீல், கரையும் உள்ளம், நட்சத்திரம் பார்த்தல்..
ஹாஸ்யம் என்பது வெகு இயல்பாக எழுத்தோடு ஒன்றி தொகுப்பு நெடுக ஆங்காங்கே புதைக்கப்பட்டிருக்கும் கண்ணி வெடிகள். எப்போது நாம் அதில் காலை வைப்போமென்றே தெரியாது.
குஞ்சுவே தொடரில் அதிகம் கிண்டல் செய்யப்பட்ட பாத்திரம். சிறுவனாக இருந்தபோது ஒருநாள் காணாமல் போன குஞ்சு, போலிஸ் படையுடன் ஊரெங்கும் தேடப்படஷாஃப்டர் பள்ளி மைதானத்தில் எம்.ஜி. ஆரைப் பார்க்கப் போய் முதல் வரிசையில் உட்கார்ந்திருக்கும் போது பிடிபடுகிறார். பின்னாளில் நண்பர்கள் இதைச் சொல்லி நகைக்கையில் “எல, அது வெவரம் தெரியாத வயசுல நடந்த விஷயம். சின்னப் பிள்ளைல இத விட என்னென்ன கிறுக்குத்தனம்லாம் பண்ணிருக்கோம். அதுக்காக இப்பவும் அப்படியேவா இருக்கோம்?” சொல்லி வாய்மூடியவரின் அடுத்த செய்கையும், அவரே சொன்ன அத்தனை கிறுக்குத்தனங்களும் பிட்டுப் பிட்டு வைக்கப்பட்டிருக்கின்றன தொகுப்பில். குஞ்சு ’ஒருவேளை கற்பனை பாத்திரமாக இருக்குமோ’ என வண்ணதாசன் அவர்களுக்கு எழுந்த சந்தேகம், ஆரம்ப அத்தியாயங்களில் ஏற்பட்டாலும் போகப்போக அந்தப் பாத்திரப் படைப்பின் இயல்பு கற்பனையாக இருக்க வாய்ப்பில்லை என்றே நம்ப வைக்கிறது. கிண்டலானது நட்பின் நெருக்கத்திலும் உரிமையிலும் செய்யப்பட்டிருக்கும் என்றொரு புரிதல் வருகிறது.
இளம் பிரயாத்து வாழ்வின் முழுமையான நேர்மையான பதிவாக அமைந்திருக்கும் ’தாயார் சன்னதி’ மண் மணத்தோடு தாமிரபரணி பிரவாகமாக எங்கும் தொய்வின்றி சுவாரஸ்யத்துடன் அமைந்து நிறைவான வாசிப்பனுபவத்தைத் தருகிறது.
தொகுப்பில் இடம் பெற்ற படங்களை வரைந்த வள்ளி அவர்களும் பாராட்டுக்குரியவர். அட்டைப்படங்களுடன், நெல்லை மாநகராட்சி ஆர்ச், தேரும் ஜனத்திரளும், காந்திமதி அம்மன் கோபுரத்துடன் கோவில் தெப்பக்குள மண்டபம் போன்றவை தத்ரூபம்.
மூங்கில் மூச்சை வாசித்தவர்கள் தவறவிடக் கூடாததாக இத்தொகுப்பு. இதை வாசித்து ‘மூங்கில் மூச்சை’த் தவறவிட்டவர்கள் விரைவில் எதிர்பார்க்கலாம் அத்தொகுப்பை விகடன் வெளியீடாக.
***
தாயார் சன்னதி
விலை ரூ:150. அத்தியாயங்கள்: 45. பக்கங்கள்: 256.
வெளியீடு: சொல்வனம் பதிப்பகம்.
சென்னையில் கிடைக்கும் இடங்கள்: -ந்யூ புக் லேன்ட், தி.நகர் [தொலைபேசி: 28158171, 28156006] மற்றும் டிஸ்கவரி புக் பேலஸ்[அலைபேசி: 9940446650], கே.கே நகர்.
இணையத்தில் வாங்கிட: உடுமலை.காம்
*** *** ***
6 நவம்பர் 2011 திண்ணை இதழில்., நன்றி திண்ணை!
***
டிசம்பர் 2012 குங்குமம் தோழி என் ஜன்னலிலும்.., நன்றி குங்குமம் தோழி!
சென்னையில் கிடைக்கும் இடங்கள்: -ந்யூ புக் லேன்ட், தி.நகர் [தொலைபேசி: 28158171, 28156006] மற்றும் டிஸ்கவரி புக் பேலஸ்[அலைபேசி: 9940446650], கே.கே நகர்.
இணையத்தில் வாங்கிட: உடுமலை.காம்
*** *** ***
6 நவம்பர் 2011 திண்ணை இதழில்., நன்றி திண்ணை!
***
டிசம்பர் 2012 குங்குமம் தோழி என் ஜன்னலிலும்.., நன்றி குங்குமம் தோழி!
***
அனுபவித்து விமர்சனக்கட்டுரை எழுதி உள்ளீர்கள்.
பதிலளிநீக்குபடிக்கத்தூண்டும் விமர்சனம்....
பதிலளிநீக்குநல்ல புத்தகத்தினை அறிமுகம் செய்தமைக்கு நன்றி சகோ....
-அடாடா... நல்ல தகவல். அவரது மூங்கில் மூச்சை ரசித்துப் படித்தவர்களில் நானும் ஒருவன். இதையும் உடனே வாங்கிப் படித்து விடுகிறேன். நன்றி மேடம்!
பதிலளிநீக்குபுத்தக அறிமுகமும் விமர்சனமும் அருமை. நன்றி.
பதிலளிநீக்குமண் மணத்தோடு தாமிரபரணி பிரவாகமாக எங்கும் தொய்வின்றி சுவாரஸ்யத்துடன் அமைந்து நிறைவான வாசிப்பனுபவத்தைத் தருகிறது.
பதிலளிநீக்குஅருமையாய் தொகுதளித்த வாசிப்புகளுக்கு பாராட்டுக்கள்..
அருமையான விவரணை. சுகா தமிழுக்கு கிடைத்த ஒரு நல்ல எழுத்தாளர். குஞ்சு கதா பாத்திரம் எப்போதும் ஈர்க்கவே செய்கிறது
பதிலளிநீக்குபுத்தக அறிமுகமும் விமர்சனமும் அருமை. நன்றி
பதிலளிநீக்கு//மூங்கில் மூச்சில் பல கதாபாத்திரங்கள் ஏற்கனவே அறிமுகமாகி விட்டிருந்ததால் எளிதாக ஒன்றி சிநேகத்துடன் பயணிக்க முடிந்தது/
பதிலளிநீக்குஇந்த ஒரு விசயம் தங்கள் ஊர்க்காரர்களும் தங்களின் அனுபவங்களை எங்காவது பகிர்ந்திருக்கிறார்களா என்ற ஏக்கத்தை/ஆர்வத்தை புத்தகம் வாசித்த அனைவர் மனதிலும் ஏற்படுத்தி இருக்கும்!
நல்ல பகிர்வு. படித்து முடித்து விட்ட மகிழ்வில் பரபரவென வரிகளைச் சொல்லி பகிர்ந்துள்ளீர்கள். நாங்களும் படித்தால்தான் முழுமையாக அனுபவிக்க முடியும். உங்கள் பதிவு புத்தகம் படிக்க வேண்டும் என்ற ஆவலை உண்டாக்கி இருக்கிறது. அந்த ஆவலுக்கு ஏற்கெனவே படித்த மூங்கில் மூச்சும் ஒரு காரணம்.
பதிலளிநீக்குஅனுபவித்து வாசித்த விமர்சனம்.நன்றி முத்தக்கா !
பதிலளிநீக்குநல்ல விமர்சனம் அக்கா.
பதிலளிநீக்குநூலைப் படிக்கத் தூண்டும் விமர்சனம்..
பதிலளிநீக்குஅருமையான அழகான விமர்சனம்
பதிலளிநீக்குஒரு நல்ல விமர்சகராக உங்கள் விமர்சனங்கள் உங்களை அடையாளம் காட்டுகின்றன... அருகிலிருக்கும் எங்களின் குமரி மண்ணிற்கும் நெல்லை மண்ணின் ஈரமும் வாசமும் படர்ந்திருப்பதால் அந்த மொழியும் வாழ்க்கையும் கடந்த காலத்தின் இனிய தருணங்களை இனிதே நல்லனுபவங்களாக முன்னிறுத்துகின்றன.
பதிலளிநீக்குதமிழ் உதயம் said...
பதிலளிநீக்கு//அனுபவித்து விமர்சனக்கட்டுரை எழுதி உள்ளீர்கள்.//
நன்றி ரமேஷ்.
வெங்கட் நாகராஜ் said...
பதிலளிநீக்கு//படிக்கத்தூண்டும் விமர்சனம்....
நல்ல புத்தகத்தினை அறிமுகம் செய்தமைக்கு நன்றி சகோ....//
நன்றி வெங்கட்.
கணேஷ் said...
பதிலளிநீக்கு//அடாடா... நல்ல தகவல். அவரது மூங்கில் மூச்சை ரசித்துப் படித்தவர்களில் நானும் ஒருவன். இதையும் உடனே வாங்கிப் படித்து விடுகிறேன். நன்றி மேடம்!//
மகிழ்ச்சியும் நன்றியும் கணேஷ். அவசியம் வாங்கி வாசியுங்கள்.
வை.கோபாலகிருஷ்ணன் said...
பதிலளிநீக்கு//புத்தக அறிமுகமும் விமர்சனமும் அருமை. நன்றி.//
மிக்க நன்றி vgk.
இராஜராஜேஸ்வரி said...
பதிலளிநீக்கு//மண் மணத்தோடு தாமிரபரணி பிரவாகமாக எங்கும் தொய்வின்றி சுவாரஸ்யத்துடன் அமைந்து நிறைவான வாசிப்பனுபவத்தைத் தருகிறது.
அருமையாய் தொகுதளித்த வாசிப்புகளுக்கு பாராட்டுக்கள்..//
நன்றி இராஜராஜேஸ்வரி.
ஸ்ரீராம். said...
பதிலளிநீக்கு//நல்ல பகிர்வு. படித்து முடித்து விட்ட மகிழ்வில் பரபரவென வரிகளைச் சொல்லி பகிர்ந்துள்ளீர்கள். நாங்களும் படித்தால்தான் முழுமையாக அனுபவிக்க முடியும். உங்கள் பதிவு புத்தகம் படிக்க வேண்டும் என்ற ஆவலை உண்டாக்கி இருக்கிறது. அந்த ஆவலுக்கு ஏற்கெனவே படித்த மூங்கில் மூச்சும் ஒரு காரணம்.//
மூங்கில் மூச்சினை விரும்பி வாசித்தவர்கள் இதைத் தவறவிடக்கூடாதென்றே சொல்லியிருக்கிறேன்:)! அவசியம் வாங்கிப் படியுங்கள். நன்றி ஸ்ரீராம்.
ஹேமா said...
பதிலளிநீக்கு//அனுபவித்து வாசித்த விமர்சனம்.நன்றி முத்தக்கா !//
நன்றி ஹேமா.
சுசி said...
பதிலளிநீக்கு//நல்ல விமர்சனம் அக்கா.//
நன்றி சுசி.
அமைதிச்சாரல் said...
பதிலளிநீக்கு//நூலைப் படிக்கத் தூண்டும் விமர்சனம்..//
நன்றி சாந்தி.
"என் ராஜபாட்டை"- ராஜா said...
பதிலளிநீக்கு//அருமையான அழகான விமர்சனம்//
மிக்க நன்றி.
குமரி எஸ். நீலகண்டன் said...
பதிலளிநீக்கு//ஒரு நல்ல விமர்சகராக உங்கள் விமர்சனங்கள் உங்களை அடையாளம் காட்டுகின்றன... அருகிலிருக்கும் எங்களின் குமரி மண்ணிற்கும் நெல்லை மண்ணின் ஈரமும் வாசமும் படர்ந்திருப்பதால் அந்த மொழியும் வாழ்க்கையும் கடந்த காலத்தின் இனிய தருணங்களை இனிதே நல்லனுபவங்களாக முன்னிறுத்துகின்றன.//
மகிழ்ச்சியும் நன்றியும் நீலகண்டன்.
மோகன் குமார் said...
பதிலளிநீக்கு//அருமையான விவரணை. சுகா தமிழுக்கு கிடைத்த ஒரு நல்ல எழுத்தாளர். குஞ்சு கதா பாத்திரம் எப்போதும் ஈர்க்கவே செய்கிறது//
நன்றி மோகன்குமார்.
Lakshmi said...
பதிலளிநீக்கு//புத்தக அறிமுகமும் விமர்சனமும் அருமை. நன்றி//
நன்றி லக்ஷ்மி.
ஆயில்யன் said...
பதிலளிநீக்கு***//மூங்கில் மூச்சில் பல கதாபாத்திரங்கள் ஏற்கனவே அறிமுகமாகி விட்டிருந்ததால் எளிதாக ஒன்றி சிநேகத்துடன் பயணிக்க முடிந்தது/
இந்த ஒரு விசயம் தங்கள் ஊர்க்காரர்களும் தங்களின் அனுபவங்களை எங்காவது பகிர்ந்திருக்கிறார்களா என்ற ஏக்கத்தை/ஆர்வத்தை புத்தகம் வாசித்த அனைவர் மனதிலும் ஏற்படுத்தி இருக்கும்!//***
உண்மைதான். அதே நேரம் தம் ஊரோடும் நினைவுகளோடும் இதைப் பொருத்திப் பார்க்க இயலுமென்றே தோன்றுகிறது. ‘தாயார் சன்னதி’யை முதலில் பரிந்துரைத்த உங்களுக்கும் என் நன்றி:)!