** வடக்கு வாசல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
** வடக்கு வாசல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 17 செப்டம்பர், 2012

இந்தியத் தலைநகரிலிருந்து உலகத் தமிழர்களுக்கு..- திண்ணை இதழில்..

ந்தியத் தலைநகரிலிருந்து உலகத் தமிழர்களுக்கு..' செப்டம்பர் 2005_ல் யதார்த்தா கி. பென்னேஸ்வரன் அவர்கள் தொடங்கிய இலக்கிய சமூக மாத இதழ் “வடக்குவாசல்”. முதல் இதழை வெளியிட்டவர் கவிஞர் வைரமுத்து அவர்கள். வணிக நோக்கிற்கு அப்பாற்பட்டு நல்ல இலக்கியத்தை, சமூக அக்கறையுடனான கட்டுரைகளை, பலதுறைகளைச் சேர்ந்த ஆளுமைகளுடனான நேர்காணல்களைத் தொடர்ந்து வழங்கி ஏழாண்டுகளாக வாசகர் மனதில் நீங்கா இடம் பெற்று வந்திருக்கிறது. சென்ற சில ஆண்டுகளாக வாசித்து வருகிற வகையில் இதழ் குறித்த எனது எண்ணங்களைப் பகிர்ந்திட விருப்பம்.

ஒவ்வொரு இதழிலும் நான்கு பக்கங்களுக்குக் கவிதைகளையும் இரண்டுக்கு குறையாத சிறுகதைகளையும் தந்து வந்திருப்பினும் இலக்கியம் தாண்டி தன் தலையங்கங்கள், கட்டுரைகள் மூலமாகச் சமுதாய மேம்பாட்டுக்காகவும் குரல் கொடுத்து வந்திருக்கிறது. சிறுகதைகள் அத்தனையையுமே முத்திரைக் கதைகள் எனலாம். ஆண்டு தோறும் சிறந்த பனிரெண்டு கதைகளின் தொகுப்பாக வெளிவரும் ‘இலக்கிய சிந்தனை’யில் வடக்குவாசல் கதைகள் இடம்பெற்று வந்திருக்கின்றன. எழுத்துக்கான மரியாதையாகத் தம் பங்கை ஆற்றிடும் படைப்புகளுக்காகப் பிரத்தியேகமாக வரைந்து வாங்கப்படும் அற்புதமான ஓவியங்கள். அட்டைப்படங்களின் தேர்வு ரசனை மிகுந்தவையாக, கவனத்தை ஈர்ப்பவையாகவே அமைந்து வந்திருக்கின்றன. அனைத்துக்காகவும் ‘குங்குமம்’ வார இதழ் வடக்குவாசலை சென்றவருடம் வியந்து பாராட்டியிருந்தது.

தொடர்களாக நான் வாசித்தவற்றில் குழந்தைகள் மனநலம் மற்றும் ஆரோக்கியம், பள்ளிக் கல்வி சீரமைப்பு குறித்து சி.டி.சனத்குமார் அவர்கள் எழுதிய கட்டுரைகள்; ராகவன் தம்பி என்ற பெயரில் ஆசிரியர் அவர்கள் சுயசரிதத்தையொத்த வகையில் தனது மேடை அனுபவங்கள், நாடக மேதைகளுடனான பழக்கங்கள், நிகழ்வுகள் என வாழ்க்கை அனுபவங்களை சுய எள்ளலோடும் நகைச்சுவையோடும் விவரித்துச் சென்ற ‘சனிமூலை’ கட்டுரைகள்; சுற்றுச் சூழல், வேளாண்மை, சமூகம் போன்ற பலவற்றைப் பற்றி ய.சு. ராஜன் அவர்களின் சிந்தனைப் பகிர்வுகள் ஆகியன குறிப்பிடத் தக்கவை. வாசகரிடத்தில் வரவேற்பைப் பெற்ற இவை அனைத்துமே தற்போது வடக்குவாசல் பதிப்பக் வெளியீடாக, நூல்களாக வெளிவந்துள்ளன. சென்ற ஆண்டு ஜூலை மாதம் இசை விமர்சகர் அமரர் சுப்புடு அவர்களின் நினைவில் வடக்குவாசல் நடத்திய மாபெரும் இசைவிழாவுக்குத் தலைமை தாங்கிப் பதிப்பக நூல்களை வெளியிட்டுச் சிறப்பித்தவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள். 2008-ல் வடக்கு வாசல் இணைய தளத்தைத் தொடங்கி வைத்தவரும் இவரே: http://www.vadakkuvaasal.com/. இங்கே அனைத்து இதழ்களும் வருடவாரியாக PDF கோப்புகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. வெளிவந்த நூல்களின் விவரங்களும் உள்ளன: http://www.vadakkuvaasal.com/books-sale.html

பெரிய எழுத்தாளர்களின் படைப்புகளுடன் புதியவர்களுக்கும் தொடர்ந்து ஊக்கம் தந்தபடி, எண்பத்து நான்கு மாதங்களாக அவ்வப்போது எழுந்த பொருளாதாரச் சிக்கல்களை சமாளித்தபடி, எந்த சமரசங்களுக்கும் இடம் கொடுக்காமல் தன் தரத்திலும் செயலிலும் உறுதியாகப் பயணித்து வந்த வடக்குவாசலின் சமீபத்திய இதழ்கள் வழக்கத்தை விடவும் அதிக வீச்சுடன் அமைந்திருந்தன. “அணையப் போகும் ஜோதியல்லவா?” என்பதாகச் சொல்லியிருந்தார் ஆசிரியர். இத்தகு சீரிய பயணங்கள் என்றைக்கும் சுடர்விட்டுச் சுற்றிலும் ஒளியைப் பரப்பியபடி தம் இலக்கை நோக்கிச் சென்று கொண்டேதான் இருக்கும். சிற்றிதழ் எனும் வடிவிலிருந்து இணைய இதழ் எனும் வடிவுக்குக் கைமாற இருக்கிற இந்தத் தீபம் என்றேனும் ஓர்நாள் மீண்டும் அச்சு வடிவுக்குத் திரும்பும் எனும் வாசகர்களின் நம்பிக்கை நிறைவேறும் வரையில், வடக்குவாசலை அதன் இணைய தளத்தில் தொடருவோம். புதுப்பொலிவுடன் விரைவில் மலர இருக்கும் இணைய இதழுக்கான அறிவிப்புக்காகக் காத்திருப்போம்.

***

16 செப்டம்பர் 2012 திண்ணை இதழில், நன்றி திண்ணை!

செவ்வாய், 10 ஜூலை, 2012

இரவோடு இரவாக.. பெங்களூரு கோரமங்களாவில்..

#1 ரவோடு இரவாக இருக்கிற மரங்களை வெட்டிச் சாய்க்கிற பெங்களூரு மாநகராட்சி, வேரற்ற மரத்தை அழகுச் சிலையாக வேறோர் இடத்தில் எழுப்ப வெட்கப்படவில்லை. சின்னஞ்சிறுவர்களின் கைச்சங்கிலி வளையத்துக்குள் சிறைப்பட்டு ”மரங்களைக் காக்க வேண்டும்” எனச் சேதி சொல்லி நிற்கும் காட்சியைப் பார்த்து சிரிக்கவா அழவா? முடிவு செய்யும் முன் எம்.ரிஷான் ஷெரிஃபின் இந்த வரிகளுடனான அருமையான கட்டுரையை வாசியுங்கள்:

இனி வரும் நாட்களில் வனங்களின் படங்களைக் கொண்டே காடென்பது யாதென, வரும் சந்ததியினருக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கும் போல இருக்கிறது. விடுமுறை நாட்களில் ஏதேதோ விளையாட்டு உலகங்களுக்கு நம் குழந்தைகளை அழைத்து செல்லும் நாம் காடுகளுக்கும் அழைத்துச் சென்று காடென்பதைக் காட்டி வருவோம்.
-எம். ரிஷான் ஷெரீப்

#2 வனத்தில் மிதக்கும் விருட்சங்களின் பாடல்கள்வடக்கு வாசல் தளத்தில் வாசிக்க:
http://vadakkuvaasal.com/component/content/article/550.html


#3 ஜூன் இதழ்இக்கட்டுரைக்காக எனது கீழ்வரும் இரண்டு படங்களை வெளியிட்டுச் சிறப்பித்திருக்கும் வடக்குவாசலுக்கு நன்றி!

#4 அடர்ந்த வனம்



#5 பரந்த மரம்



ஆரம்பித்த கதைக்கு வருகிறேன்.

பாரதி சிமெண்டின் விளம்பரத்துக்குக் கைகோர்த்து முக்கிய சந்திப்புகளில் சிங்கம், புலி என விதம் விதமான சிலைகளை எழுப்பி வருகிறது பெங்களூரு மாநகராட்சி ‘காசுக்கு காசும் ஆச்சு, நகரை அழகு படுத்துனாப்லயும் ஆச்சு’ என. அப்படியாகப் பேலஸ் க்ரவுண்ட் அருகிலிருக்கும் மெஹ்க்ரி சர்க்கிள் சந்திப்பில் திடுமென ஒரு நாள் தோன்றிய சிலைகள் இவை:

#6 “வெட்ட விட மாட்டோம்.. நட்டு வைத்தும் வளர்ப்போம்..”
[படம் ஒன்றும் இதுவும் விரையும் வாகனத்தினுள் இருந்து எடுத்தவை]

நல்ல கருத்தை வலியுறுத்துகிறதுதான். ஆனால், இந்த இடத்திலிருந்து சில பர்லாங்கு தூரத்தில், சென்ற வருடம் மாதக் கணக்கில் மரங்களைக் காக்கக் கோரி பெரியவர்களோடு பள்ளிச் சிறுவர்களும் களமிறங்கிப் போராடியபோது அதற்கு மதிப்புக் கொடுக்காத மாநகராட்சி அதே காட்சியை சிலையாக எழுப்பினால் சலிப்போடு சிரிப்பும் எழுகிறது.

விரியும் எல்லைகளால் பெங்களூர் பெற்றது இழந்ததும்.. , ஜனவரி 2012 வடக்குவாசல் இதழில் வெளியான என் கட்டுரையிலிருந்து:

மல்லேஷ்வரம் சாங்கிடேங்க் முனையில் அமைந்த கோட்டையின் மேல் குதிரை மேல் வீற்றிருக்கும் வீரசிவாஜி சிலை நேர்கொண்டு பார்க்கும் சாலை ‘சாங்கி ரோட்'.
#7 அகன்ற இச்சாலையின் இருபுறமும் அடர்ந்துயர்ந்த அழகு மரங்கள் வரிசைகட்டி நிற்பது பார்ப்பவர் மனதை அள்ளும். மெட்ரோவுக்காக இவற்றை வெட்டிச்சாய்க்க ஒன்றரை வருடம் முன் அரசு முடிவெடுத்த போது பதைப்புடன் வீதிக்குப் போராட வந்த பொதுமக்களில் பெண்கள், குழந்தைகள், வயதானவர்களும் அடக்கம். ஞாயிறு காலைகளில் அந்தப் பக்கம் சென்றால் ‘மரங்களைக் காப்போம்’, ‘இயற்கையைப் போற்றுவோம்’ போன்ற வாசகங்களைத் தம் கைப்பட எழுதிப் பிடித்தபடிப் பள்ளிச் சிறுவர்கள் சிவாஜி சிலைமுன் நிற்பதைக் காண முடிந்தது மாதக்கணக்கில். பலனாக நீதிமன்றம் விதித்த தடை உத்திரவு அரசு கொடுத்த அழுத்தத்தில் திரும்பப் பெறப்பட்டு விட்டது நவம்பரில். டிசம்பரில் கோடாரியின் முதல் வெட்டுக்குப் பலியான மரத்தின் கீழ் மெட்ரோவுக்கான பூஜை போடப்பட்டபோது மனம் வெதும்பி எவரும் அப்பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை. விரல் விட்டு எண்ணுமளவில் ஏழெட்டு பேர்களே நின்றிருந்ததைப் பத்திரிகையில் படமெடுத்துப் போட்டிருந்தார்கள்.”

பார்த்தது மாநகராட்சி. ‘முன்னறிவிப்பு செய்து விட்டு கோடாரியை இறக்கினால்தானே போராட்டம் எதிர்ப்பு எல்லாம்? இரவோடு இரவாகப் போட்டுத் தள்ளிவிடலாம் இனி’ என்று முடிவெடுத்து விட்டது போலும்.

25 மே 2012, அதிகாலை அதிர்ச்சிகரமாக விடிந்தது கோரமங்களா பகுதி மக்களுக்கு. முக்கிய சந்திப்பில் முறையே நான்கு கிமீ நீளங்களில் நான்கு பைபாஸ் கட்டுவதற்காக செயிண்ட் ஜான்ஸ் மருத்துவமனை முன்னிருக்கும் சாலையின் 46 மரங்களை ஒரே இரவில் வெட்டிச் சாய்த்து விட்டது மாநகராட்சி. இந்தத் திட்டம் குறித்த பேச்சு எழுந்ததுமே பகுதி மக்கள் எதிர்ப்பைப் பல்வேறு அமைப்புகள் மூலமாகப் பதிவு செய்ததோடு வழக்கு தொடர்ந்து ஸ்டே ஆர்டர் வழங்கச் செய்திருந்தார்கள். 29 மே, வழக்கு விசாரணைக்கு வர இருக்கையில், முதலமைச்சரிடம் கொடுத்த மனுவும் பரிசீலிக்கப்பட்டு உரிய பதிலளிக்குமாறு உத்திரவாகியிருந்த வேளையில் இப்படியொரு வேலையை செய்து விட்டிருந்தது மாநகராட்சி.

500-க்கும் அதிகமான பேர் ஊர்வலமாகச் சென்றும், வீழ்ந்து கிடந்த மரங்களை அள்ளிச் செல்ல விடாமல் அவற்றின் மீது ஏறி அமர்ந்தும் தங்கள் ஆத்திரத்தையும் வருத்தத்தையும் மக்கள் அரசுக்குத் உணர்த்தியதன் பலன் உயர்நீதி மன்றத் தீர்ப்பில் எதிரொலித்தது.

ரூ.129 கோடி மக்கள் வரிப்பணத்தை குறிப்பிட்ட காண்ட்ராக்டர்களுக்கு வாரிவழங்குவதே திட்டத்தின் அஸ்திவாரம் எனும் குற்றச்சாட்டுக்கும், இந்த பைபாஸ் வரவால் பெரிய நன்மை விளையப் போவதில்லை எனும் வாதத்திற்கும் வலு சேர்ப்பவையாக இருந்தன அப்பாதைகளில் பொதுப்போக்குவரத்து தடையாவது, பேருந்து நிறுத்தங்கள் அகற்றப்படுவது, பாதசாரிகள் சாலையைக் கடக்க இயலாது போவது போன்றன.

‘பைபாஸ் அமைக்க 188 மரங்கள் பலிகொடுக்கப்பட வேண்டியிருந்ததில் 88 மரங்களை பிடுங்கி எறிய தங்களுக்கு அனுமதி கிடைத்திருக்கிறது’ என்று மாநகராட்சி நீட்டிய காகிதங்களைப் புறந்தள்ளிய உயர்நீதிமன்றம், ‘வெட்டிய மரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஈடாகப் பத்து மரக்கன்றுகளை வைப்போம்’ எனும் உறுதிமொழியையும் ஏற்கவில்லை. எந்த விதத்திலும் அது சாய்க்கிற விருட்சத்துக்கு ஈடாகாது எனச் சொன்னதோடு, சரியான சிந்தனையோடு செயல்படவில்லை என்றும், சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவித்து விட்டதாகவும் நீதிமன்றம் அரசு அதிகாரிகளைக் கண்டித்திருக்கிறது தனது அறிக்கையில்.

பொதுமக்களின் நியாயமான கோரிக்கை பரிசீலிக்கப்பட்டிருப்பது தற்காலிகமாக ஆறுதலைத் தந்தாலும் மல்லேஸ்வரம் போராட்டம் முடிந்த விதத்தை நினைத்து ஒரு அச்சம் எழாமல் இல்லை.

செய்திகளாக ஒவ்வொன்றையும் நாம் கடந்து நாம் போய்க் கொண்டே இருக்கிறோம். மேகங்களும் நமட்டுப் புன்னகையுடன் நகர்ந்து போய்க் கொண்டேயிருக்கின்றன:

#8 மேகம் கொட்டட்டும்அக்னி நட்சத்திரம் முடிகிற சமயம், மே மூன்றாம் வாரத்திலிருந்தே அடைமழையால் நனைய ஆரம்பித்து விடுகிற பெங்களூர் சில வருடங்களாகவே ஆகாயம் பார்த்துக் காத்தே கிடக்கிறது. இந்த வருடம் ஜூலை பிறந்து ஒரு வாரம் ஓடிவிட்டது. அவ்வப்போது சின்னத் தூறல், அபூர்வமாய் அரைமணி, போனால் போகிறதென எப்போதாவது ஒருமணி ஊற்றிவிட்டு ஓடி விடுகின்றன மேகங்கள். மக்களின் இந்த விழிப்புணர்வு இனியேனும் இருக்கிற மரங்களைக் காக்கட்டும். மின்னல் வெட்டி மேகங்கள் கொட்டட்டும்.


5 ஜூன், சுற்றுப்புற சூழல்தினத்தையொட்டி ஃப்ளிக்கரில் நான் பதிந்த படம்:

நினைவில் கொள்வோம்!
***


இந்தக் கருத்தை வலியுறுத்தும் விதமாக அதீதம் ஃபோட்டோகார்னருக்கு நான் தேர்வு செய்த படங்கள்:
பசுமை காப்போம் - ஜேம்ஸ் வஸந்த்
நீர் சேமிப்போம் - ஆன்டன் க்ருஸ்
வாழ விடுவோம் (1) - குரு
வாழ விடுவோம் (2) - குரு
***

வியாழன், 7 ஜூன், 2012

அகஸ்டஸின் ‘டீக்கடைச்சூரியன்': மானுட வாழ்வின் மறுபக்கங்கள் - வடக்கு வாசலில்..

ப்படிதான் இருக்க வேண்டும் கவிதை என யாரும் அதை ஒரு வரையறைக்குள் கொண்டு வர இயலாது. கவிதைக்கொரு விதிசெய்வது காற்றைக் கையில் பிடிக்க முயலுவது போல என்பார்கள். பிடிக்க முடிந்து விட்டால் அது காற்று அல்ல. கோட்பாட்டுக்கு உட்பட்டு எழுதினால் அது கவிதை அல்ல. கவிதை குறித்து பலருக்கும் பலவிதமான கருத்து இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை வில்லியம் வொர்ட்ஸ்வொர்த் கூறிய கருத்து மனதுக்கு இசைவானதாக இருக்கிறது: “சக்திமிகு உணர்வுகளின் தங்குதடையற்ற வெளிப்பாடே கவிதை”. அப்படியான கவிதைகள் தாமே தமது வேகத்தை வடிவத்தை நீளத்தை நிர்மாணித்து நதியைப் போல் பாய்ந்து வாசகனின் மனமெனும் கடலோடு சங்கமித்து வெற்றி கண்டு விடுகின்றன. அப்படிப் பல்வேறு இதழ்களின் மூலமாக வாசகர் மனங்களைத் தொட்ட, இருபத்தியெட்டு வருடங்களாகத் தன்னை மெருகேற்றிக் கொண்டே வந்திருக்கும் கவிஞர் அகஸ்டஸின் இருபத்தைந்து கவிதைகள் அடங்கிய தொகுப்பே ‘டீக்கடைச் சூரியன்’.

முதல் ஆச்சரியமே பின் அட்டைதான். நூலுக்குள் வரவேற்கும் விதமாக, நூலாசிரியர் படத்துடன் அவர் பற்றிய குறிப்புகளோ, படைப்பைப் பற்றிய பாராட்டுகளோ இடம்பெறும் முற்றத்தில் ஒரு கவிதை.., கவனமாக இழைக்கப்பட்ட கவிப்பேழையைத் திறக்க நம் கையில் கிடைத்தத் தங்கச்சாவியாக:
இடுப்புவரை அலையாடி
விளையாடிக் கிடப்பது
கடல்தானென்றால்
கைகளால் விலக்கிக்
கால்களால் முன்னேறி
வெளிவந்து விடலாம்தான்

கடலல்ல
கருங்கற்பாறை
இடுப்புக்குக்கீழே இறுகிக்கிடக்க
யோசித்தபடியே டீ குடித்து
பீடிப்புகையை முகத்தில் ஊதுகின்ற
சிற்பியையே
வெறித்துக்கொண்டிருந்தது
தலையிலிருந்து
இடுப்புவரை
செதுக்கவிடப்பட்ட சிலை.


சிலைகள் அமைதியிழக்கும் நாட்கள்’ எனும் அதன் தலைப்பைப் பரபரப்பாகப் புத்தகத்தைப் புரட்டியே அறிய வருகிறோம். ஆதிகாலந்தொட்டு இன்று வரையிலும் தொடரும் அவலமாக அமைந்த ஒரு சூழலை இதை விடச் சிறப்பாக மனதில் உளி கொண்டுப் பதிக்க எவராலேனும் முடியுமா என்றே தோன்றியது.

மனித வாழ்வின் தீராக் காதலாய் அடங்கா வெறியாய் அணை போட இயலா உணர்வாய் இருப்பவற்றுள் முக்கியமானது புகழ் மீதான ஆசை. சிலைகள் புகழின் அடையாளங்கள். வாழ்ந்ததின் மிச்சமாக விட்டுச் செல்ல எண்ணுபவற்றின் உச்சக்கட்ட ஆசையாக இருக்கிறது பலபேருக்கு:
அயராத பேச்சொலியில்
அடங்காத கரவொலியில்
தூக்கம் கலைந்து
அனைத்தும் ஒரு சிலைக்கென்றறிந்து
அச்சிலையின் வாழ்வைக் கனவாக்கி
கட்டியணைத்துக் கிடந்த
கற்பிண்டங்களைத் தட்டிவிலக்கி
மலையிலிருந்து நழுவி
சிற்பியிடம் சென்று நின்றது ஒரு கல்”.

“முதல் சிலையை
தானேதான்
செதுக்கிக் கொள்ளவேண்டும்
சிற்பி செதுக்கி வருவதில்லை
சிலைகளுக்குப் பெயரும் புகழும்

எனத் தொடங்கி வளரும் ‘சிலைகள் வளரும் காலம்’ முச்சந்தியின் முழுச் சிலையொன்றில் முடிகிறது.

சிலைகளைப் படிமங்களாகக் கொண்டு வாழ்வைச் சித்தரிக்கும் இன்னுமொரு கவிதையாக ‘சிலைகள் நகரும் நேரம்’ பேசுகிறது பெருநகரம் ஒன்றின் பசியை:
கீழே
சிறு மணலைக்கூட
உருட்டிக் கல்லாக்கி
உளிகொண்டு செதுக்கி
ஒரு சிலையாக்கிவிடும் பசியுடன்
வாழ்ந்து கொண்டிருந்தது
ஒரு பெரும் நகரம்


யுத்தங்கள் நிறைந்த பூமி இது. வலியோனும் வலியோனும் மோதிக் கொள்ளும் யுத்தங்களை விடவும் எளியோனைத் தன் பலத்தினால் அடக்கியோ நசுக்கியோ வெற்றி பெற்றதாகக் கொக்கரிக்கும் மடையர்களும் கொடூரர்களுமே யுத்தக் குறிப்புகளை அதிகமாக ஆக்ரமித்துக் கிடக்கிறார்கள். கவிஞரின் ‘மகா யுத்தம்’ அதைக் கண் முன்னே கொண்டு வருகிறது. சிலைகளைப் போலவே இன்னொரு படிமமாகப் பலகவிதைகளில் தோன்றுகிற நத்தை இக்கவிதையில்:
சிற்றுடல் இழுத்து வாழ்வதன்றி
வேறேதும் புரியாதிருந்தும்
ஏதோவொன்று தன்மீது
பளிச்சென்று எச்சில் துப்பக்
காத்திருப்பதாய்ப் பயந்து
பயம் பயமென
உடலைக் குறுக்கியதில்
செயலற்றவனின் ஓட்டைச்சுற்றி
கேலியும் கிண்டலும்
முட்புதர்களும் கல்செடிகளும்


வெலவெலத்த நத்தை தன் மேல் படர்ந்த நிழலை யாதென்று அறியாது திகைத்திருந்த வேளையில்,
ஆடாது அசையாது
தூக்கி நிறுத்திய காலால்
பாத நிழலை
நிழற்சிலையென படர்த்திக்
காத்து நின்ற கோபம்
தலைக்குள்ளெரிய
சிறு நத்தையோட்டையே
வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த யானை
சிறுநகர்வு கண்டதும்
வெறியும் வெற்றியுமாய்ப் பிளிறி
நிலத்தோடு அறைந்து மூடியது
அந்தச் சிறு உலகத்தை
”.

விதிக்கப்பட்ட நாள் வரையிலும் பிழைத்துக் கிடக்க வேண்டிய பூமியில் வலியோரைச் சமாளித்துத் தொடர வேண்டியிருக்கிற வாழ்க்கைப்பயணத்தையும் நத்தையின் மூலமாகவே உணர்ந்துகிறது ‘யுத்த முயற்சி’.

காலைத் தேநீரில் ஊதியூதி அந்தச் சூரியனையே குடிக்கிற கவிஞர் எப்படி மலை இறங்குகிறார் பாருங்கள் ‘டீக்கடைச் சூரியன்’ கவிதையில்,
அருவியில் நீர் அள்ளாமல்
காலியாய்த் திரும்பும்
குடத்துக்குள்
சிரிக்கும் காற்றின் சிரிப்பைக்
கேட்டபடியே
”.

றுக்கெனச் சுருக்கமாகச் சொல்லி நகரும் கவிதைகளுக்கு நடுவே சில நீளமான கவிதைகளும் காணப்படுகின்றன. ஆரம்பத்தில் சொன்னது போலக் கவிதையின் நீளத்தைக் கவிஞனின் உணர்வுகளும் அதன் வேகமுமே தீர்மானித்திருக்கிறது. தனக்காகப் படைக்கிற கவிதைகளில் வாசகருக்கு அயர்வைத் தருமோ போன்ற எண்ணங்கள் கவிஞனுக்கு ஏற்படுவதில்லை.

ஆதியில் வார்த்தை
ஆண்டவனிடம் இருந்தது
அவன் அதை மனிதனில் விதைக்க
முளைத்தது நாக்கு

எனத் தொடங்குகிற முதல் கவிதை ‘வார்த்தைப்பாடு’ம், கடைசிக் கவிதை ‘அஞ்சலி’யும் அப்படியானவை. பல்வேறு பரிமாணங்களில் பாடுபொருளை அடர்த்தியாகக் காட்டியபடி கூட்டிச் செல்லுவதில் இரண்டு கவிதைகளுமே தனித்து நிற்கின்றன.

வார்த்தைப் பாட்டில்,
வாழ்வைச்
சட்டையைப் போல மடித்துக்
கரையில் வைத்துவிட்டு
ஆதிவார்த்தையின்
மாய மெளனம் கேட்கத்
தத்தம் கடவுள்களின் கடலில்
வார்த்தைப் பெருநீச்சலிடுகின்றனர்
சிலர்
”.

அஞ்சலியில்,
ஆயிரமாயிரமாய்
விளக்குகள் எரிந்து கொண்டிருக்க
உன்போன்று மெழுகுவர்த்திகளும்
தேவையற்று எரிந்துகொண்டிருக்க
நீஅணைந்தபோது
உன் குழந்தைகளைச்
சுற்றிமட்டும் இருள் சூழ்ந்தது.


ஆழமான உணர்வுகளை அழுத்தமாகப் பதித்துக் காலத்தால் பேசப்படும் நல்ல கவிதைகளைத் தந்திருக்கிறார் கவிஞர்.
***

விலை ரூ:50; பக்கங்கள்: 71; வெளியீடு: நிலாப் பதிப்பகம்;
விற்பனை உரிமை: வடக்கு வாசல் பதிப்பகம்
[5A/11032,Galli No.9, Sat Nagar, Karol Baug, New Delhi-110005.
vadakkuvaasal@gmail.com ; Ph: 011-25815476,65858656]
*****

ஜூன் 2012 வடக்குவாசலில்:

நன்றி வடக்குவாசல்!

வியாழன், 19 ஏப்ரல், 2012

சிற்றருவியின் சங்கீதம் - வடக்கு வாசலில்..

சுருதி லயத்தோடு
சலசலத்து விழுந்து
வற்றாத சங்கீதமாக
நிற்காமல் சிற்றருவி

கூடச் சேர்ந்து இசைக்கக்
காட்டுக் குயிலோ
சுற்றி வந்து ரசிக்க
ஒரு சிட்டுக்குருவியோ
சிறகடிக்கும் பட்டாம்பூச்சியோ
ஏதுமற்றத் தனிவெளியில்.

ஆகாய மேகங்கள்
கண்டும் காணாது நகர

சூரியனின் ஒளிக்கதிர்கள்
அருவியின் தலைகோதிப்
பின்னலிட்டு
வானவில்லின் வண்ணங்களில்
பூச்சூட்டி
அழகு பார்க்கும் மனமின்றித்
திரும்பிக் கொள்ள

சூழ இருந்த பெருமலைகளோ
அசைந்து விலகவும் இயலாத
ஆத்திரத்தில்
குதூகலப் பாடலைத் தவிர்க்கக்
கொடும் பாறைகளாய் இறுகி.

சுருதி லயத்தோடு
சலசலத்து விழுந்து
வற்றாத சங்கீதமாக
நிற்காமல் சிற்றருவி.
***

படம் நன்றி: ஸ்ருதி http://www.flickr.com/photos/sruthiclicks/6252978980/in/photostream


ஏப்ரல் 2012 வடக்குவாசலில் இக்கவிதையும், இதழின் அட்டையில் நான் எடுத்த ஒளிப்படமும்! நன்றி வடக்கு வாசல்!















செவ்வாய், 3 ஏப்ரல், 2012

அட்டைப்படமாக நான் எடுத்த ஒளிப்படம் - நன்றி வடக்குவாசல்!

வடக்குவாசல் இதழ் தபாலில் வந்ததுமே ‘இந்த மாதம் என்ன அட்டைப்படம்’ எனும் ஆவலுடனேயே உறையைப் பிரிப்பது வழக்கம். ஒவ்வொரு இதழிலும் வித்தியாசமான, ரசனைக்குரிய தேர்வுகளாக இருக்கும் அவை. ஒரு நிமிடம் முழுமையாக ரசித்த பின்னரே மற்ற படைப்புகளைத் தேடி இதழைப் புரட்டும் விரல்கள். நான் விரும்பி ரசித்து வந்த அட்டையில் இன்று நான் எடுத்த படமே இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.

அட்டைப்பட கெளரவத்துக்கும், படைப்புகளுக்குத் தொடர்ந்து அளித்து வரும் ஊக்கத்துக்கும் நன்றி வடக்குவாசல்! இந்த இதழில் என் ‘சிற்றருவியின் சங்கீதம்’ கவிதையும் வெளியாகியுள்ளது, விரைவில் பகிர்ந்து கொள்கிறேன்:)!

ஆழ்வண்ண படத்துக்கு ஆகாய நீலத்தைப் பின்னணியாக்கி அருமையாக வடிவமைத்திருக்கும் திரு செந்தில்குமாருக்கும் நன்றி.

***

ஜனவரி மாத குங்குமம் இதழின் ‘வந்தாச்சு’ பகுதியில் வடக்குவாசல் குறித்த பாராட்டில் அதன் அட்டைப்படத் தேர்வும் சிலாகிக்கப் பட்டிருந்ததைப் பார்த்த போது ஏற்பட்ட மகிழ்ச்சியையும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்:

***

புதன், 4 ஜனவரி, 2012

‘விரியும் எல்லைகளால் பெங்களூர் பெற்றதும் இழந்ததும்...’ - வடக்குவாசல் கட்டுரை - நான் எடுத்த படங்களுடன்

நான்கு பக்கக் கட்டுரையுடன், அட்டையில் என் படத்தையும் வெளியிட்டு அங்கீகாரம் தந்திருக்கும் வடக்குவாசலுக்கு நன்றி!

தில்லி, மும்பை, சென்னை, பெங்களூர் போன்ற மாநகரங்களைப் பற்றி ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொருவர் ஆசிரியர் கேட்டுக் கொண்டதன் பேரில் எழுதி வருகிறார்கள். இம்மாதம் பெங்களூர் குறித்து எழுதும் வாய்ப்பினை ஆசிரியர் எனக்கு அளித்திருந்தார். எடுத்த படங்கள் ஏழுடன் கட்டுரை:

***

புதுவருடத்தின் தொடக்கத்தில் வடக்குவாசல் தந்திருக்கும் அங்கீகாரத்துடன் கிடைத்த இன்னொன்றாக, 1 ஜனவரி தமிழ்மணம் அறிவித்த சென்றவருட ‘முன்னணி 100’ வலைப்பூக்களின் பட்டியல். அதில் முத்துச்சரமும்.., நன்றி தமிழ்மணம்!
2011 blog rank 26

சென்றவருடம் போல் இவ்வருடம் வாரம் இரண்டு பதிவுகளாக வழங்க இயலுமா என்பது எனக்குள் கேள்விக்குறியாக இருக்கும் வேளையில் கிடைத்த இடம் ஊக்கம் தருவதாக இருப்பதை மறுக்க இயலாது. இதை சாத்தியப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் என் அன்பு நன்றி! அதேநேரம் பல காரணிகளால் நிர்ணயிக்கப்படுவதாகச் சொல்லப்படுகிற இவ்வரிசையை ஒரு அளவுகோலாக எடுத்துக் கொள்ளாமல் அவரவர் வழியில் தொடர்ந்து நல்ல பதிவுகளைத் தருவதில் மட்டும் அக்கறை காட்டி வந்தால் அது பதிவுலகம் ஆரோக்கியமாக இயங்க வழிவகுக்குமென்பது என் தாழ்மையான கருத்து.
***

செவ்வாய், 22 நவம்பர், 2011

நிழல் - இம்மாத வடக்கு வாசலில்..

தலைநகர் தில்லியிலிருந்து வெளிவரும் ‘வடக்கு வாசல்’ இதழை எனக்கு அறிமுகம் செய்தது ‘சிறுமுயற்சி’ கயல்விழி முத்துலெட்சுமி. கடந்த இரண்டு வருடங்களாக வாங்கி வருகிறேன். ஒவ்வொரு இதழிலும் நான்கு பக்கங்களில் அளிக்கப்படும் கவிதைகளும், இரண்டு சிறப்பான சிறுகதைகளும், ஆசிரியர் எழுதும் ‘சனிமூலை’ பக்கமும் (சமீபத்தில் தொகுப்பாக வெளிவந்துள்ளது) பேசப்படுவன ஆகும். அட்டைப்படத் தேர்வுடன், இதழின் படைப்புகளுக்கான படங்களும் (குறிப்பாகச் ‘சந்தனார்’ சந்திரமோகனின் ஓவியங்கள்) ரசிக்கும்படியாக இருக்கும். இம்மாத அட்டைப்பட ஓவியமும் அவருடையதே.

கல்வித் துறை மற்றும் குழந்தைகள் மனநலம் குறித்து சி.டி.சனத் குமார் அவர்கள் எழுதிவரும் தொடர் பெற்றோர் அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய ஒன்றாகும். இதுவரை வெளியான இவரது கட்டுரைகளின் தொகுப்பும் “விருட்சங்கள் விதைகளாகும்” என சிந்திக்க வைக்கும் வித்தியாசமான தலைப்புடன் வெளியாகியுள்ளது. வடக்குவாசல் பதிப்பக வெளியீடுகள் குறித்த விவரங்கள் இங்கே.

சந்தா விவரம் இங்கே. எந்தச் சிற்றதழாயினும் தொடரும் எண்ணமிருக்கும் பட்சத்தில், ஆசிரியர் நினைவுறுத்தக் காத்திராமல் சந்தாவைச் சரியான மாதத்தில் புதுப்பிப்பது நம் கடமையும், ஆசிரியர்களின் இலக்கியசேவைக்கான மரியாதையும் என்பதை நினைவில் கொள்வோம்.

நவம்பர் 2011, வடக்கு வாசல் இதழில் வெளியாகி இருக்கும் எனது கவிதை நிழல்:

நிழல்


கண்ணுக்குப் புலப்படாத சக்தியின்
கனத்த நிழல் நிலத்தில்.

விண்ணெங்கும் பார்வையால் துழாவியும்
நிஜம் அகப்படாமலே.

எட்டிவிடும் தூரத்தில் இருந்தாலும்
நிஜமற்றதன் பிம்பமென்ற
அலட்சியத்திலும்
மூலம் தெரியாத குழப்பத்திலும்
இளைப்பாற விருப்பமின்றி
ஒதுங்கியோ தாண்டியோ
சென்றிட எத்தனிக்கையில்
மெல்ல நகரத் தொடங்குகிறது நிழல்.

ஆச்சரியமாகத் தொடர்கிறான்
அவ்வப்போது
மிதக்கிறதா ஏதேனும் மேலே என
மீண்டும் ஆகாயம் துழாவி..

கவனத்தில் பதியவில்லை
வழியெங்கும் அந்நிழலில்
யார்யாரோ ஏறுவதும்
நன்றியோடு இறங்குவதும்.

விரும்பி வந்து செல்பவருக்காக
நீண்டு விரிந்தும் அகன்று படர்ந்தும்
நிழலின் பயணம்.

ஆழ்கடல் சிப்பியாக
அதன் குளுமைக்குள்
ஒளிந்திருந்த பதிலை
நனைந்து கைப்பற்றாமல்
சந்தேகமாகத் தேடித் தேடி..

விடை கிடைக்காத சலிப்பில்
வெறுத்து நின்றவனைச் சூழ்கிறது
எங்கிருந்தோ புறப்பட்டு வந்த
அனல் புயல்.

விலகிச் சென்று கொண்டிருந்தது
கண் முன்னே
வேகவேகமாக நிழல்.
***

படம்: இணையத்திலிருந்து...

நன்றி வடக்கு வாசல்!


***

ஞாயிறு, 24 ஜூலை, 2011

அன்பின் வரிகள் - வடக்கு வாசலில்..



காற்றில் மிதந்து வந்து
மடியில் விழுந்தது
பழுத்த இலையொன்று.
காலம் முடிந்து
தானே கனிந்து
விருப்ப ஓய்வு வேண்டி
விருட்சத்தினின்று கழன்று
கொண்ட அதன் நடுவே
நீண்டு ஒன்றும்
குறுக்காகப் பலவும்
ஓடின அழுத்தமாக
அன்பின் வரிகள்

செவிகளால் பார்க்கவும்
கண்களால் கேட்கவும் முடிகிற
அற்புதத்தை நிகழ்த்தி.
***

படம்: இணையத்திலிருந்து..

ஜூலை 2011 வடக்கு வாசல் பத்திரிகையில்,
நன்றி வடக்கு வாசல்!


அட்டைப்படத்தில் குறிப்பிடப் பட்டிருக்கும் இசைவிழா மற்றும் வடக்குவாசல் பதிப்பக நூல்கள் வெளியீடு குறித்த மேலதிகத் தகவல்களுக்கு இங்கே செல்லலாம்.

திங்கள், 11 ஏப்ரல், 2011

நிசப்தத்தின் சப்தம் - வடக்கு வாசலில்..


பச்சிளம் புதுத்தளிரின்
நுனிப்பொட்டில் சொட்டும் மழைத்துளி

இடவலமாய் மிக நளினமாய்
அசைந்து மிதந்து தரைசேரும் சருகு

அணில் குஞ்சின் மழலை
காற்றின் ஊதல் கிளைகளின் ஆடல்

இயற்கையின்
ஒவ்வொரு அதிர்விலும் அசைவிலும்
எழும்பும் ஓசைகள் எத்தனை

தவறவிடாத இதயங்களுக்கு மட்டுமே
கேட்கத் தொடங்கிடும் ஓர்நாள்
பிரபஞ்சத்தின் நிசப்தம்.
***

படம்: இணையத்திலிருந்து..

மார்ச் 2011 வடக்கு வாசல் இதழிலும் மற்றும் அதன் இணைய தளத்திலும்.., நன்றி வடக்கு வாசல்!













திங்கள், 9 ஆகஸ்ட், 2010

ஒரு நதியின் பயணம் - வடக்கு வாசல் கவிதை


தன்னிலே நீந்தும் கயல்களை ரசித்துத்
தழுவியபடி ஊற்றெடுத்து ஓடும்
நதிக்குத் தெரிவதேயில்லை
எங்கே பாதை விரியும்
எங்கே குறுகிச் சுழியும்
எங்கே திருப்பம் எங்கே வளைவு
எங்கே பாறை எங்கே பள்ளம்
எங்கே குபீரென விழ நேரும்
எதுவாயிருக்கும் சென்று சேருமிடம்

எவையும் தெரியாமலே தேடாமலே
தன்மூலம் அறிந்திடத் தவிக்காமலே
எவ்விதக் கேள்வியும் எழுப்பாமலே
அனுபவத்தில் அதுவாகக்
கிடைத்தபடியிருக்கும் விடைகளைத்
திகைப்பின்றி வாசிக்கப் பழகியபடி
பயணிப்பதாலேயே

எதிர்வரும் எத்தடையையும்
எதிரே பாரா
எவ்வகை வீழ்ச்சியையும்
கடக்கிறதோ அநாயசமாய்
தயக்கங்கள் ஏதுமின்றி

எச்சுழலையும் எச்சூழலையும்
எந்நிலையிலும் எம்முனையிலும்
சவாலாகவே சந்தித்தபடி?
***

படம்: இணையத்திலிருந்து..
ஜூன் 2010 வடக்கு வாசல் இதழிலும்











மற்றும் அதன் இணையதளத்திலும்..



"இந்த மாத 'வடக்கு வாசல்' இதழ் மஹாகவி ரவீந்திர நாத் தாகூரின் சிறப்பிதழாக வெளிவந்திருக்கிறது..... தாகூரை மட்டுமல்ல இலக்கியத்தை விரும்பும் அனைவரும் தவற விடக்கூடாத சிறப்பிதழ் இது" எனும் குறிப்புடனான ஓவியர் சந்திரமோகனின் பதிவு ‘மகாக்கவிக்கு ஒரு சமர்ப்பணம்..இங்கே.

திங்கள், 21 டிசம்பர், 2009

பவனி


பளபளக்கும் பட்டுடையும்
மினுமினுக்கும் நகைநட்டும்
சரிகை இழையோடும்
தலைப்பாகையுமாய்..
அலங்கரித்த
வெண்புரவிகளில்
கம்பீரமாய் பெருமிதமாய்
அரசத்தம்பதியர் வீற்றுவர
கண்நூறுதான் கண்டுமகிழ..

ஊர்உலா முடிந்து
உடைமாற்றி நகை களைந்து
நின்றார்கள் கூலிக்கு
இன்றாவது கிடைக்குமாவென..

கனைக்காத குதிரைக்குக்
கால்களாய் இருந்த
களைப்பு மிகுதியில்
ராஜாவும்..
செழிக்காத கலைக்குச்
சேவகியாய்-
மெய் வருத்திப்
பொய்க் களிப்புடன்
பவனிவந்த ராணியும்!
***



படம் நன்றி: வடக்கு வாசல்
[இக்கவிதைக்காகவே ஓவியர் சந்திர மோகன் வரைந்தது].


  • 'வடக்கு வாசல்' பத்திரிகையின் டிசம்பர் 2009 இதழிலும் மற்றும் அதன் இணைய தளத்திலும் வெளிவந்துள்ள கவிதை.



வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

பாத்திரத் தேர்வு



வீதி முனையில்
புதிதாய் முளைத்திருந்தான்
பாதி காலினை
விபத்தொன்றில்
பறி கொடுத்த
வாலிபன் ஒருவன்.

அனுதினம் காலையில்
பேருந்துக்குக் காத்திருக்கையில்-
முடங்கிவிட்டவனைச் சுற்றிக்
காணக் கிடைத்த
காட்சிகள் யாவும்
கடவுளின் கருணையை
எண்ணி எண்ணி
வியக்கவும் மெச்சவும்
வைத்தன மற்றொருவனை.

போவோர் வருவோர்
கொடுத்துப் போனார்
அணிவதற்கு ஆடைகள்
குளிருக்குப் போர்வைகள்
உண்பதற்குப் பொட்டலமாய்
அவரவர் வீட்டிலிருந்து
விதவிதமாய் உணவுகள்.

'என்வயதொத்த இவனுக்கு
எந்தவித சிரமுமில்லாமல்
இருந்த இடத்தில்
எல்லாம் கிடைக்க
அருள்பாலிக்கும் இறைவன்-
என் தேவைகளையும்
இப்படி நிறைவேற்றி
வைத்திட்டால்...'
நினைப்பே இனித்தது
நெஞ்சம் ஏங்கியது.

வாழ்க்கை எனும்
நிசமான மேடையில்
விதிக்கப்பட்ட ஆயுள்
எனும்
கால அவகாசத்தில்
நமக்கான பாத்திரங்களை
எப்போதும்
ஆண்டவனே
தீர்மானிப்பதில்லை.
வேறு எவரோதான்
தேர்வு
செய்வதுமில்லை.
உதவுபவராய்
இருக்க விருப்பமா?
உதவி பெறுபவராய்
ஆகிட ஆசையா?
நம் கையில்!
நம் மனதில்!
*** ***

*படம் நன்றி:MQN

*'வடக்கு வாசல்' பத்திரிகையின் ஜூலை 2009 இதழிலும், மற்றும் அதன் இணைய தளத்திலும்:


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin