செவ்வாய், 20 ஜனவரி, 2009

மின்னுகிறது கிரீடம்

மகுடம் சரிந்தது



மங்கையர் குலத்தின்
மகாராணியாக
தனக்குத் தானே
மகுடம் சூட்டியிருந்தாள்.

மாப்பிள்ளை வீட்டு
மகா ஜனங்கள்-திரு
மண வீட்டில்
கை நனைக்க
வெள்ளிச் செம்பு
கேட்ட போதுதான்..

அரசிக்கு அவரது
பொக்கிஷ அறையின்
பொருளாதாரம்
மட்டுமின்றி
மண மேடையேறிட-
மங்கல நாண்பூட்டிட-
பொருள் வேண்டிடும்
புதிரான உலகும்
புரிய வந்தது.


*****

[ஆகஸ்ட் 09,2003 திண்ணை இணைய இதழிலும்,
கடந்த மாதம் டிசம்பர் 06, 2008 வார்ப்பு கவிதை வாராந்திரியிலும்
வெளிவந்தது.]


தமிழகத்தில் 'மணமகள் கொடுத்த புகாரின் பெயரில், திருமண வீட்டில் வெள்ளிச் செம்பு கேட்டுத் தகராறு செய்த மாப்பிள்ளை வீட்டினர் கைது' என வெளிவந்த செய்தியில் பிறந்ததே முந்தைய கவிதை. இச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு பல காமெடி ட்ராக்குகளும் வந்தன திரைப்படங்களில். இன்றைய மங்கையர் நிலைமை அங்கொன்றும் இங்கொன்றுமாய் இது போலத் தொடர்ந்தாலும் மனதுக்கு இதமான பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது என்பதே நிதர்சனம். என் கவிதைக்கு தந்திருக்கிறேன் நானே ஒரு எதிர் கவிதை இங்கே:

உலக அழகிகள்



படிப்பு ஒரு மணிமகுடம்
தன்னம்பிக்கை அதில்
ஒளிரும் ஒப்பற்ற வைரம்
நிமிர்ந்த நடை நீலம்
நேர்கொண்ட பார்வை முத்தாகும்
பார்க்கின்ற வேலையோ மாணிக்கம்
வாங்கும் சம்பளம் பவளம்
க்ரெடிட்கார்ட் போனஸ் இன்சென்டிவ்
கோமேதகம் மரகதம் வைடூரியம்
பூவையவள் புன்னகையோ புஷ்பராகம்
நவரத்தினங்களும் மின்னிடும்
அசைக்க முடியாத கிரீடம்-
நவயுக நங்கை இதையணிந்து
நிற்கையில் கூடுகிறது கம்பீரம்-
வைக்கிறாள் இண்டர்நெட்டில்
அவளேதான் இன்று சுயம்வரம்-
நிற்கின்றார் பயோடேட்டாவுடன்
வரிசையிலே வாலிபர்
பிடித்திடத்தான் அவள் கரம்-
பொங்கும் மகிழ்வுடன் பெற்றவரும்
தருகிறார் பெருமிதமாய் சுதந்திரம்-
பூரித்து நிற்கிறது இங்கு
பெண்மையெனும் அற்புதம்.
*****


[படங்கள்: இணையத்திலிருந்து]

இங்கு வலையேற்றிய பின்னர் இரண்டாவது கவிதை ‘மின்னுகிறது கிரீடம்’ என்ற தலைப்பிலே 5 மார்ச் 2009 இளமை விகடனின் "சக்தி 2009" மகளிர்தின சிறப்பிதழில் வெளிவந்துள்ளது:


















இங்கு வலையேற்றிய பின் முதல் கவிதையும் 'புரிந்தது உலகம் சரிந்தது மகுடம்' என்ற தலைப்பில் 20 ஏப்ரல் 2009 இளமை விகடனில்:

திங்கள், 12 ஜனவரி, 2009

எடுத்ததில் பிடித்தது பல..பார்வைக்கு இங்கே சில..[PiT Jan-போட்டிக்கு]

நினைவுகளைப் பதியவே புகைப்படங்கள் என்றிருந்த நம்மை திறமையுடன் பதிந்திடவும் என உணர்த்தி அதை ஒரு கலையாகப் பார்க்க வைத்து பாடம் நடத்தி போட்டிகள் வைத்து ஆர்வத்தை வளர்த்து வருபவர்கள் PiT குழுவினர். 17 டிசம்பர் 2008 ஆனந்த விகடனில் ‘விகடன் வரவேற்பரை’யில் அவர்கள் கெளரவிக்கப் பட்டதை பலரும் பார்த்திருப்பீர்கள். ஆயில்யன் வாழ்த்துப் பதிவிட்டிருந்தார். பார்க்கத் தவறியவர்களுக்கு வாழ்த்த வழி செய்ய இங்கும் பதிந்துள்ளேன்:


***



இம்முறை எடுத்ததில் பிடித்ததைத் தரலாம் என தீபா அறிவித்து விட்டார்கள். ஆனால் 'எது நேர்த்தி எனக் கருதுகிறீர்களோ அதை..' என்கிற போது வந்ததே குழப்பம். சரியென நேர்த்தியை மட்டும் பார்க்காமல் மனதுக்கு நெருக்கமாக.. நேசமாக.. உணர்ந்த பலவற்றுள் சிலவற்றை வைத்து விட்டேன் உங்கள் பார்வைக்கு:

கீழ் வரும் முதல் படமானது இதுவரை போட்டிக்கு தரப் படாவிட்டாலும் "எம்மதமும் எமக்கு...[PiT- இறுதிச் சுற்று-'கட்டமைப்பு'க்கு]" என்ற என் பதிவில் இடம் பெற்று பலரின் பாராட்டையும் பெற்றது. தியானத்தின் மேன்மையை அண்ணாந்து வியப்பது போல் அமைந்த காமிரா கோணமும், ஆன்மீகத்தின் அடையாளமாய் தெரிகிற அந்த வானமும் படத்துக்கு ஒரு சிறப்பைத் தருவதாயும் எனக்குத் தோன்றுகிறது. இதுவே இம்மாதப் போட்டிக்கான எனது தேர்வு:
வான மண்டலத்தை
நோக்கி உயர்ந்து நிற்கும்
தியான மண்டபம்

தென்குமரிக் கடலினிலே-
விவேகத்துக்கு வழிகாட்டிய
விவேகானந்தா உட்கார்ந்து
தியானித்தப் பாறையிலே-
தியானத்தின் மேன்மையை
உலகுக்கு உணர்த்திடவே-
எழுந்து நிற்கும் மணிமண்டபம்.
***


செயற்கை குளமும்
பின்னே
இயற்கை வளமும்

கட்டுக்குள் அடங்கிய நீச்சல் குளமும்
கட்டுக்குள் அடக்க இயலா அலைகடலும்
[க்ளிக்கிட்டுப் பார்க்கத் தவறாதீர்]
***


பஞ்ச பாண்டவர் மண்டபம் மேல்
வஞ்சனை இன்றி கதிரொளி வீசுகிறார்
கர்ணனின் தந்தை!

[படத்தின் மேல்பாகம் ஓவர் எக்ஸ்போஸ்டாக இருந்தாலும் அந்த ஒளிக் கீற்றுகள்..அற்புதமாகப் பட்டன.]
***


கல்லெல்லாம் சிலை செஞ்சான் பல்லவ ராஜா!


ராஜா செஞ்ச சிலைகளிலே தாய்மையை
உணர்த்துவதுதான் இந்த சிற்பத்தின் ஜோரா?
***


அணில்ஜிக்கும் பிடித்தது பார்லே-ஜி!

***


இலவு காக்கும் கிளியா
இல்லையேல்
தனிமையில் காணும் இனிமையா?

***


(கொக்கு பறபற கோழி பறபற) வாத்து பறபற!

சிறகுகள் சிலிர்த்து பறக்க முயல்கிறதா?
குளித்து முடித்து இறகுகளை உலர்த்துகிறதா?
***


மன்னிக்க மாட்டாயா
உன்
மனம் இரங்கி?


மன்னிப்பு-தமிழில் எனக்குப் பிடிக்காத வார்த்தை’! ‘ரமணா’வின் திரைவசனம் தொடர்ந்து பல படங்களில் நகைச்சுவையாகப் பயன்படுத்தப் பட்டது. அதை அப்படி நகைச்சுவையாகவே எடுத்துக் கொள்ளுதல் நலம். மன்னிக்கவே முடியாத சமூகக் குற்றங்கள் வேறு. தொழிலில் நட்பில் உறவில் சூழ்நிலை சந்தர்ப்பங்களால் சில துரோகங்கள் சில தப்பான புரிதல்கள் சில தவறுகள் நேர்ந்து பின் மன்னிப்பை நாடி நிற்கும் மனித மனங்கள் வேறு. உணர்ந்து அவர்கள் திரும்பி வருகையில் அந்த வாத்தைப் போல முகத்தைத் திருப்பிக் கொள்ளாமல் மன்னியுங்கள். ‘மன்னிப்புக் கேட்பவனே மனிதன். மன்னிக்கத் தெரிந்தவனோ இறைவன்’! யார் சொன்னது என்று தெரியாது. ஆனால் மன்னியுங்கள். மன்னித்துப் பாருங்கள்! தவறு உங்கள் பக்கம் இருந்தால் மன்னிப்புக் கேட்கவும் தயங்காதீர்கள். இதனால் இறுகிய மனங்கள் இளகும். இணைய வேண்டும் என ஏங்கி மருகிய மனங்கள் மலரும்.
***

"சரியான வாத்துக்கள்"

'சரியான வாத்து'
எவரையும் வையும் முன்
சற்றே நிதானிக்கலாம்
எவரிடமும் உண்டு
கற்பதற்கு நற்பண்பு.
நடைபோடும் வாத்துக்கள்
கடைப் பிடிக்கிற
'வரிசையில் ஒழுங்கு'
பலநேரம் நமக்கு
வாராத் ஒன்று!
***


இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?
ஜெய்ஹிந்த்!

செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் சமீபத்தில் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில்:

கேள்வி:"செஸ் காய்களில் உங்களுக்குப் பிடித்தது எது?"

பதில்:"சிப்பாய்! செஸ்ஸில் ஒரு ராஜா கடைசி வரை ஓடி ஒளிந்து கொண்டே இருப்பார். பிஷப், ராஜாவைக் காப்பாற்ற வியூகங்கள் வகுப்பார். தேவைப்பட்டால் பின்வாங்குவார். ஆனால், ஒரு சிப்பாய்தான் தன் ராஜாவைக் காப்பாற்ற முன்வந்து உயிரைக் கொடுத்துப் போராடுவார். அவர் ஒரு போதும் பின்வாங்க மாட்டார். செஸ் ஒரு மெளன யுத்தம். நான் செஸ் விளையாடும்போது என்னைச் சிப்பாயாகக் கற்பனை செய்துகொள்வேன். அதனாலேயே என் ராஜாவைக் காப்பாற்ற நான் முடிந்த அளவு போராடுவேன்"

எவ்வளவு உண்மை. அப்படித்தான் பின் வாங்காமல் போராடி 26/11 மும்பை நிகழ்வில் மக்கள் உயிர் காக்க தம் இன்னுயிர் நீத்தார் நம் காவலர். நாட்டின் தலைமை, உள்துறை செயலகம் [ராஜா? பிஷப்?]அறைக்குள் முன்னும் பின்னும் நடந்தபடி பிறப்பித்த உத்திரவுகளை, பின் வாங்காமல் முன் நின்று அன்று முடித்தவருக்கும் அப்பணியிலே தம் வாழ்வையே முடித்திட நேர்ந்தவருக்கும் நம் வீர வணக்கங்கள்!
***

வியாழன், 8 ஜனவரி, 2009

பெயரில் மட்டுமே!

திரும்பிய
திசை யாவும்
தீவிரவாதம்
தலை விரித்தாடும்
நாடு எனக்
குலை நடுங்கி
ஓட வைத்தாலும்
இவரை விட்டால்
எவருண்டு என
ஏனைய நாடுகள்
தொடர்ந்தன
தொழிலை
கணினித் துறையில்
வித்தகர் நாம் என.
வைத்தனர் வேட்டு
அதற்கும் இன்று-
காற்றில் பறந்தது
நம் மீதான
நம்பகத் தன்மை
காந்தி பிறந்த
நாட்டின் நிலைமை
இப்படியாவது
என்னவொரு கொடுமை.
ஹும்..
சத்யம்
பெயரில்
மட்டுமே
!

வியாழன், 1 ஜனவரி, 2009

முதல் நாளில் என் முதல் கவிதை

பரிசல்காரர் சில மாதங்களுக்கு முன்னர் எல்லோரையும் அவரவர் 'முதல்’களை வலையில் போடச் சொல்லி அழைப்பு விட்டிருந்தார். தொடர்ந்தன பல முதல்கள்.. முதல் கதை, முதல் கவிதை, முதல் காதல், கிடைத்த முதல் வேலை, வாங்கிய முதல் சேலை, முதன் முதலில் சைக்கிள் ஓட்டியது கார் ஓட்டியது விமானம் ஏறியது என. போட்ட முதலுக்கு நல்ல கருத்து வட்டியும் பெற்றனர். அதோ அந்த வரிசையில் சற்றுத் தாமதமாக என்றாலும், புது வருடத்தின் முதல் மாதம் முதல் நாளில் முதல் நாழிகையில் இதோ என் முதல் கவிதை:

எத்தனை படைப்புகள் இறைவனாலே


[தலைக்காவேரி உச்சியிலிருந்து என் காமிராவுக்கு கிட்டிய தரிசனம்]


எத்தனை படைப்புகள் இறைவனாலே
அத்தனையும் நமக்கென அறிந்திடுவோம்;
முத்தென அவற்றை நாமுமே நம்
சொத்தென போற்றிக் காத்திடுவோம்!

வானின் கருமையும் வயலின் செழுமையும்
தந்திடும் செல்வம் நமக்காக;
காடும் மலையும் கடலும் ஆறும்
விலங்கும் பறவையும் வாழ்வின் சுழற்சிக்காக!

மாந்தர் அனைவரும் நம் நண்பரென
சாந்தமாக நடந்தே நாம்-நற்பெயரும்
அன்பும் பெருக்கிடுவோம்-மென்மேலும்
பண்புடன் வாழப் பழகிடுவோம்!

இறைவனின் வரமாம் இயற்கையின் அருளால்
எல்லா வளமும் பெற்றிடுவோம்;
அறத்தின் வழியினைக் கடைப்பிடித்து
அல்லல் இன்றி வாழ்ந்திடுவோம்!
*** *** ***

1979-ல் பத்தாவது வகுப்பில் இருக்கையில், நான் பயின்ற பாளையங்கோட்டை செயிண்ட் இக்னேஷியஸ் கான்வென்ட் தனது ஐம்பது ஆண்டு நிறைவையொட்டி வெளியிட்ட சிறப்பு மலரில் வெளியான கவிதை.

எனது பதினைந்தாவது வயதில் எழுதியது. ஆகையால்,
சொற்பிழை பொருட்பிழை இருந்தால் பொறுத்தருள்வீர்!
சொல்ல வந்த கருத்தை மட்டும் கணக்கில் கொள்வீர்!
பொற்காசை வழக்கம்போல வழங்கிச் செல்வீர்!
[பொற்காசு? வேறென்ன உங்கள் பொன்னான பின்னூட்டமும் கண்ணான கருத்தும்தான்!!]




கடந்த வருட PiT மெகாப் போட்டியில் முதல் பதினொன்றில் ஒன்றாக முன்னேறி நடுவர் சர்வேசனால் "ஒரு வாழ்த்து அட்டைக்கு உரிய சர்வ லட்சணங்களும்" உள்ளதாகப் பாராட்டப் பட்ட எனது படத்தையே இங்கு பதிந்து, வரவிருக்கும் வருடம் சிறக்க வாழ்த்துகிறேன்.

இயற்கை அன்னை பொழியட்டும் கருணை





உதிக்கின்ற இளங்காலைச் சூரியனுடனே
பிறக்கின்ற புது வருடத்தில்
இதுவரை இருந்த எந்தவொரு
இன்னலெனும் இருளும் விலகி-
ஒவ்வொருவர் குடும்பத்திலும்
எல்லா வளமும் பெருகி-
நம் நாட்டில் மட்டுமின்றி
உலகம் முழுவதும்
மனிதம் உயிர்திருக்கவும்
ஒற்றுமை ஓங்கி அமைதி தவழவும்-
ஈழ மக்களின் பிரச்சனை யாவும்
இனிய முடிவுக்கு வரவும்-
தனிமனிதனுக்கு உணவு கிடைக்க
வழியற்ற வறுமை நீங்கவும்-
தடுமாறும் பொருளாதாரம்
தலைதூக்கி சுபிட்சம் நிலவவும்-
எல்லாம் வல்ல இறைவனை
இணைந்து நாம் பிரார்த்திப்போம்.
அகிலமெங்கும் இப்படியான
அறம் தழைத்திட்டால்-
நீர் நிலம் நெருப்பு
ஆகாயம் காற்று இவை
எவற்றிற்கும் ஏற்படாது
எள்ளளவும் சீற்றம்.
இயற்கை அன்னையின் கருணையும்
உவகையுடன் பொங்கி வழியும்!
வாழ்வீர் வளமுடன் யாவரும்!

[பாருங்கள்,இயற்கை அன்னையை வியந்து எழுதிய என் முதல் கவிதையின் கருத்து இப்போது படைத்த வாழ்த்திலும் தானாகவே வந்து விட்டதை..]

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!




இங்கு வலையேற்றிய பின்னர் 'இயற்கை அன்னை பொழியட்டும் கருணை' 13 ஏப்ரல் 2009 யூத்ஃபுல் விகடன் இணைய தளத்தில் சித்திரைத் திருநாள் வாழ்த்தாக:

விகடன்.காம் முகப்பில்:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin