திங்கள், 23 நவம்பர், 2009

மறுகூட்டல்


றுபடி மறுபடி கூட்டிப் பார்த்தான் குணா. எத்தனை முறை கூட்டினாலும் தொன்னூற்றெட்டே வந்தது. ஆசிரியரோ முதல் பக்கத்தில் நூற்றுக்கு தொன்னூற்றைந்து என பெரிதாக வட்டமிட்டுக் காட்டியிருந்தார்.

'தப்பு விட்டதோ ஒரே ஒரு ரெண்டு மார்க் கணக்கில். ஒருவேளை எதேனும் ஒரு கேள்வியை விட்டிருப்பேனோ?' வினாத்தாளை வைத்துக் கொண்டு பார்த்தால், அப்படியும் தெரியவில்லை.

சரியெனப் பக்கத்திலிருந்த பாலனிடம் கொடுத்துக் கூட்டிப் பார்க்கச் சொன்னான்.

பாலன் திணறித் திணறி இரண்டு முறை சரி பார்த்ததிலும் அதே தொன்னூற்றெட்டு. “போடா, போய் உடனே சார்கிட்டே சொல்லு. கூட்டலிலேதான் தப்பு!” என்று திருப்பிக் கொடுத்தான்.

அவசரப் படாமல் கவனமாய் இன்னொரு முறை பக்கம் பக்கமாய்ப் பார்த்தான் குணா. எல்லா விடைகளுக்கும் அவற்றின் இடப்பக்கத்தில் மதிப்பெண் இட்டிருந்த ஆசிரியர், நான்காம் பக்கத்தில் கடைசியாய் இருந்த கணக்குக்கு அதன் அடியிலே மூன்று எனச் சுழித்து விட்டிருந்தார். புரிந்து போயிற்று மூன்று மதிப்பெண்கள் எப்படிக் ஆற்றோடு போயிற்று என.

"என்னடா நீ சொல்றியா, இல்லே நான் சொல்லட்டுமா?” எழ எத்தனித்த பாலனை இழுத்து அமரவைத்தான் குணா.

”உனக்கென்ன பைத்தியமா? நீயும் சொல்ல மாட்டேன்கிற. என்னையும் விட மாட்டேன்கிற. பாரு அந்தப் பயலை. மொத மார்க்குன்னு கைதட்டல வாங்கிட்டான். இந்த மூணு மார்க்கால உன் க்ளாஸ் ராங்க்குமில்லே ரெண்டாவதாகுது?”

“தெரியும், போகட்டும் விடு” என்றான் முன் வரிசையில் வானத்தில் மிதக்கிற மாதிரி அமர்ந்திருந்த சரவணனைப் பார்த்தவாறே.

"கணக்கில முதல்னதுக்கே தலைகால் புரியல. ரேங்க கார்ட் வாங்கும் போது ரெண்டு கொம்பே மொழைச்சிடும்" முணுமுணுத்தபடியே இருந்த பாலனை சட்டை செய்யவில்லை குணா.

ப்போது மணி அடித்தது.

“எல்லோரும் மார்க்குகளைச் சரி பார்த்தாச்சா? நாளைக்கு ஆன்சர் பேப்பரில் மறக்காம வீட்டிலிருந்து கையெழுத்து வாங்கிட்டு வந்திடணும். ரிப்போர்ட் கார்ட் இன்னும் இன்னும் ரெண்டு நாளிலே ரெடியாகிடும்” எழுந்தார் வகுப்பாசிரியராகவும் இருந்த கணக்கு ஆசிரியர்.

"சார் நம்ம குணா..." எனத் தாங்க மாட்டாமல், கூவியபடி துள்ளி எழுந்தே விட்டான் இப்போது பாலன்.

அவன் கையை இறுகப் பிடித்தான் குணா. அந்த இரும்புப் பிடியிலும் நெருப்புப் பார்வையிலும் ஆடித்தான் போனான் பாலன். பால்ய காலத்திலிருந்து சிநேகிதனாய் இருப்பவனின் செயல், புரிந்து கொள்ள முடியாத தடுமாற்றத்தைத் தந்தது.

“குணாவுக்கு என்ன?” கேட்டார் ஆசிரியர்.

பாலன் திணறி நிற்க, “ஒண்ணுமில்லே சார். அம்மாவும் அப்பாவும் ஒரு கலியாணத்துக்கு வெளியூர் போயிருக்காங்க. கையெழுத்து உடனே வாங்க முடியாதே” சாதுவாகச் சமாளித்தான் குணா.

”சரி, அதனாலென்ன. இது ரிப்போர்ட் கார்ட் இல்லையே. உன் அண்ணன் குருவிடம் வாங்கிட்டு வா, பரவாயில்லை” எனச் சிரித்தார் ஆசிரியர்.

குரு அதே பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு. படிப்பில் சூரப்புலி. பள்ளியின் மாணவர் தலைவனும் என்பதால் அவனைத் தெரியாதவர் கிடையாது.

ஆசிரியர் வெளியேற, மாணவர்கள் பைகளைக் கட்ட ஆரம்பித்தார்கள். குணா எழுந்து சென்று சரவணனின் கைகளைப் பற்றிக் குலுக்க அதைச் சற்றும் எதிர்பாராதவனாய் சந்தோஷத்தில் நெளிந்தான் அவன்.

வாசலில் பையோடு முறைத்தபடி நின்றிருந்த பாலனை நெருங்கி அவன் தோள் மேலே கைபோட்டபடி அழைத்துச் சென்றான் சமாதானமாக. கைகள் விலக்கப்பட்ட வேகத்தில் தன் மேலான கோபம் தீரவில்லை அவனுக்கு எனப் புரிந்தது.

ருவரும் பள்ளியின் சைக்கிள் ஸ்டாண்டை அடைந்தபோது வழக்கம் போல அண்ணன் குரு தயாராக ஒற்றைக் காலைத் தரையில் ஊன்றியபடி சைக்கிள்மேல் காத்திருந்தான் அவனை டபுள்ஸில் அழைத்துச் செல்ல.

“என்னடா கணக்கு பேப்பர் வந்திடுச்சா?”

“தொன்னூத்தஞ்சு”

“போ! அஞ்சு மார்க் கோட்டை விட்டுட்டியா? அப்போ ரேங்க்?”

“அநேகமாய் செகண்டுதான்”

“இருந்திருந்து நைன்த் ஃபைனலில் இப்படி சறுக்கிட்டியேடா!”

“ஆனைக்கும் அடி சறுக்கும்ங்கிற கதையில்ல தலைவா இது. தானே தலையிலே மண் வாரிப் போட்டுக்கும்ங்கிற கத”

தன் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு அங்கு வந்த பாலன், தங்கள் மாணவர் தலைவனிடம் நடந்ததை விளக்கி, பொங்கிக் கொண்டிருந்த மனதை, போட்டுக் கொடுத்து ஆற்றிக் கொண்டான்.

"முட்டாளா நீ? பெரிய தியாகச் செம்மல்னு நினைப்போ?”

"அய்யோ அப்படில்லாம் இல்லேண்ணா. வீட்ல சொல்லிடாதே. பாரு அவன் இதுவரை என்னை முந்தினதே இல்லை. கைதட்டலும் முதல் மார்க்கும் எப்பவும் எனக்கேதாங்கிற மாதிரி ஆயிடுச்சு. என்னைவிட ஓரிரு மார்க்குதான் கம்மியா வாங்கிருப்பான். அதுவும் நல்ல மார்க்தான்னாலும் பேப்பரை கையில வாங்கும்போது அவன் சந்தோஷப்பட்டு நான் பார்த்ததே இல்லை.

இந்த முறை முதலாவதுன்னு சார் சொன்னதும் அவன் முகத்துல இருந்த ஆனந்தத்தைப் பார்க்கணுமே. அதுவுமில்லாம எனக்கு சொல்லித் தர வீட்ல நீ இருக்கே. அக்கா, அம்மா, அப்பா இருக்காங்க. அவன் அம்மாப்பா சாதாரண கூலி வேலை செய்யறவங்க. இனித் தன்னாலேயும் முடியுங்கிற நம்பிக்கையோடு பத்தாவது க்ளாஸிலே இன்னும் நல்லாப் பண்ணுவான். அவன் குடும்பமே அவனை நம்பித்தானேண்ணா இருக்கு."

நண்பனைப் பார்த்து பிரமித்து நின்றிருந்தான் பாலன்.

குருவோ சைக்கிளை ஸ்டாண்டு போட்டு நிறுத்தி விட்டு அப்படியே சகோதரனை இறுகக் கட்டிக் கொண்டான்.

மறுகூட்டலில் மதிப்பெண்களை மட்டும் கூட்டிப் பார்க்காமல் எத்தனை விஷயங்களைக் கூட்டிக் கழித்துப் பார்த்திருக்கிறான் தன் தம்பி என நினைக்க நினைக்க அவனுக்குப் பெருமையாக இருந்தது.
***

படம் நன்றி: யூத்ஃபுல் விகடன்











புதன், 18 நவம்பர், 2009

பூக்கள்- PiT Nov 09

போட்டித் தலைப்பூ வாண்டுகள்!
அழகழகாய் தந்தாச்சு பூச்செண்டுகள்.
**
இப்பூடியும் கேப்பாரு அப்பூடியும் கேப்பாரு!
குறும்பூ
நான் என்ன இன்னொரு ஐஸ்க்ரீம் வேணும்ன்னா கேட்டேன்? பலூன்தானே கேக்கறேன்”னு
இங்கே சமர்த்து பண்ணும் 'ட்விங்கிள் ட்விங்கிள்' லிட்டில் ஸ்டாரு...

நான் என்ன டாய் வேணும்ன்னா கேட்டேன்? ஸ்வீட் தானே கேக்கறேன்”னு 'தடாலடி'யும் பண்ணுவாரு,
பாருங்க இங்கே :))!


அரும்பூ

புன்னகைக் கீற்றுடன்
புத்தரைப் பின்பற்றி..



களிப்பூ

உயரப் பறக்கும் பலூனின் பிடி
உள்ளங்கையில் இருக்கும் பரவசத்தில்..

சுறுசுறுப்பூ
ஏறி விளையாடு(ம்) பாப்பா




இரண்டும் நாலும் மீள்படங்களாய் பார்வைக்கு.
மாஸ்டர் குறும்பூ போகிறார் போட்டிக்கு.













புதன், 11 நவம்பர், 2009

வெற்றியில் கிறக்கம் [யூத்ஃபுல் விகடனின் முதல் மின்னிதழில்]


லக்கைத்
தொட்டு விட்ட
புள்ளியில் நின்று
தன்னை மறப்பதும்
தற்பெருமை பேசுவதும்
சிறையில் இருப்பவன்
அறையின் விசாலத்தை
சிலாகிப்பதாகாதா?

டைந்த உயரம்
அளிக்கலாம் ஊக்கம்
ஆனால் அதுவே
தரலாமா தலைக்கனம்?
பரந்தது உலகம்
உணர்வது முக்கியம்;
வெற்றியில் கிறக்கம்
வீழவும் வைக்கும்.

த்தனை நேரம்தான்
ஏந்தியே நிற்போம்?
கிடைத்த கோப்பையை
கீழே வைத்துவிட்டு
வந்த பாதைக்குஒரு
வணக்கம் சொல்லிவிட்டு
இந்தப் பக்கம்
திரும்பினால்தானே-
தென்படும் தூரத்தே..
சவாலாய் நமக்குக்
காத்திருக்கின்ற
அடுத்த இலக்கு?!
*** *** ***


ந்வம்பர் 2009 மின்னிதழைத் தரவிறக்கம் செய்ய இங்கே சுட்டுங்கள்.




ஹலோ நான்தாங்க:

முத்துச்சரம் தொடுக்க ஆரம்பித்து சரியாக ஒன்றரை ஆண்டுமுடிந்த நிலையில் சமீபத்தில் தொடருபவர் எண்ணிக்கை சதத்தைத் தாண்டி இருக்கிறது. கடந்த பதிவில் "நூறாவது நபராய் தொடர்வது சந்தோஷமாயிருக்கிறது." என்று பின்னூட்டமிட்டிருந்த பிரபாகருக்கும், அதைத் தொடர்ந்து அங்கே வாழ்த்தியிருந்தவர்களுக்கும், தொடர்கின்ற 102 பேருக்கும், follower ஆக இல்லாமலும் தொடர்ந்து வாசித்து வருபவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்! தொடர்கின்ற உங்கள் ஆதரவுடன் தொடரும் என் பயணமும்...



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin