திங்கள், 30 ஆகஸ்ட், 2010

ஒதுக்கப்பட்டவை


இட்லி வடை பொங்கல்
கெட்டிச் சட்னி சாம்பார்

உணவுப் பட்டியல் பார்த்து
விரும்பிக் கேட்டு வாங்கி
கலந்து கட்டி அடித்து

போதும் போதுமெனக்
கெஞ்சிய வயிற்றின் மேல்
இரக்கம் வைத்து
எழுகிற நேரம்

கடந்தது மேசையை
கமகம மசால் தோசை

‘அடடா, விட்டு விட்டோமே’
கண்டும் காணாது நடந்தாலும்
சுண்டி இழுத்த மணத்தால்
மின்னல் வெட்டாய் வந்து மறையும்
அற்ப சிந்தனையை
எப்படி மனதோடு சுமப்பதில்லையோ
அதுபோலவேதான்

நினைத்து மறுகவோ
நெஞ்சின் ஒரு ஓரத்தில்
புதைத்து வைத்து
ஏக்கமாய்ப் புரட்டிப் பார்க்கவோ
அவசியம் இல்லாதவை

வேண்டாம் என வாழ்வில்
ஒதுக்கிய வாய்ப்புகள்!
***

20 ஜூலை 2010, யூத்ஃபுல் விகடனில் வெளியான கவிதை.

படம் நன்றி: யூத்ஃபுல் விகடன்

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

மன்னாதி மன்னர்கள்

ராஜாதி ராஜ.. ராஜ மார்த்தாண்ட.. ராஜ கம்பீர..

யாரு யாரு’ ? பொறுங்களேன்.

'ன்னைக்குப் பொருக்காட்சிக்குப் போகலாமா?’ தம்பி கேட்டதும் மருமக்களுக்கு மட்டுமல்ல அவன் அக்காக்கள் எங்கள் மூவருக்கும் கூட குஷிதான். சின்ன வயதில் போனது. அப்புறம் நெல்லைக்கு போன சமயங்களில் அது வாய்த்திருக்கவில்லை. “பொருக்காட்சின்னா..?” -இது தங்கையின் புத்திரன். அமெரிக்காவில் பெரிய மால்களுக்கும் பெங்களூரில் மால்களுடன், குளிரூட்டப்பட்டு அல்லது ஒரே கொட்டகையின் கீழ் கம்பளமிடப்பட்ட பொருட்காட்சிகளுக்குமே பழகி விட்டிருந்த பிள்ளைகளுக்கு விளக்க முற்பட்ட போது “ஓ கைப்புள்ள திருவிழா மாதிரியா?” என்றார்கள். நல்ல தெளிவுதான். வாழ்க வடிவேலு.

கோவில் மற்றும் விசேஷ வீடுகளுக்கு செல்லுகையில் அழகாய் பாவாடை சட்டை அணியப் பழகிவிட்டிருந்த தங்கை மகளுக்கென கொட்டி வைத்திருந்தார்கள் வண்ண வண்ண வளையல்களை முதல் கடையில். அங்கேயே நேரம் எடுக்க ஆரம்பிக்க காத்திருக்கும் பாலபாடமும் ஆரம்பமாகி விட்டது. ஒலிபெருக்கியில் ஓங்கி இசைந்த பாடலுக்குத் தானாக ஆட்டம் வந்தது தம்பியின் செல்ல மகனுக்கு. தோள்களை ஸ்டைலாக அசைத்து கைகளைச் சொடுக்கிட ஆரம்பிக்க சுற்றி நின்று ரசித்திருந்தார்கள் மற்றவர்கள். ஆடிக்காற்றில் ஆளுயரத்துக்குத் திடீர் திடீரெனக் கிளம்பியப் புழுதிப் புயலைச் சமாளிக்க முதலில் திணறினாலும், ஓரிரு முறைகளில் எதிர்திசை திரும்பி இமைகளை எப்படி இறுக்கிக் கொள்வது என்பது கண் வந்த கலையாயிற்று.

தை எடுத்தாலும் ஆறு ரூபாய்’. இந்தக் கடையைப் பார்த்து தாள மாட்டாத ஆச்சரியம் . ‘ஒன்லி சிக்ஸ் ருபீஸ்? எப்படி சாத்தியம்?’ என ஒரே வியப்பு. சின்னத் தங்கையின் சின்ன மகன் அங்கே ஆறு ரூபாய்க்கு ஒரு அசத்தல் கண்ணாடி வாங்கி மாட்டிக் கொண்டான். அடுத்தடுத்த கடைகளில் ராமரின் வில் அம்புகள், இந்திய ரூபாய்கள் கொண்ட கீ செயின் என பார்த்துப் பார்த்து ஏதேதோ வாங்கிப் பையை நிரப்பிக் கொண்டான். தற்சமயம் அவனது அமெரிக்கப் பள்ளியில் இந்த பர்ச்சேஸ் எல்லாம்தான் ஹாட் டாபிக் என சாட்டில் தெரிவித்தாள் தங்கை. தன் மேசையில் வரிசையாக அடுக்கி வைத்து அங்கே ஒரு கண்காட்சி நடத்திக் கொண்டிருக்கிறானாம்.

தேசம் விட்டு தேசம் வந்து..

[ஆறு ரூபாய் அசத்தல் கண்ணாடியில் தம்பியும், முதன்முதல் பஞ்சு மிட்டாய் சுவைக்கப் போகும் பரவசத்தில் அண்ணனும்..]

விற்பனை உத்தி
உருண்டு திரண்டு..

மிட்டாய் உருண்டு திரண்டு பஞ்சாகி வரும் அழகை ரசித்துப் பார்த்திருந்து வாங்கிச் சப்புக் கொட்டி மகிழ்ந்தார்கள். மைதானத்தில் பல குழந்தைகள் ஒளிரும் கொம்புகளுடன் திரிந்தார்கள். கொம்பு சீவி விட்டவர் யாரெனத் தெரிந்து போனது சிறிது தூரம் நடந்ததும். நல்ல விற்பனைதான். விளம்பர உத்தி தந்த வெற்றி. ‘ரொம்பதான் அலட்டிக்காதே. உனக்கு மட்டுமென்ன ரெண்டு கொம்பா முளச்சிருக்கு?’ எனும் கேள்வியை அடிக்கடி சந்திக்க நேருபவரும் கூட வாங்கி மாட்டிக் கொள்ளலாம்:)!

ஒரு பக்கம் திறந்த மேடையில், ஒளிவெள்ளத்தில், அதிரும் சினிமா பாடல்களுக்கு ஜோராக ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தது ஒரு ஜோடி. லைவ்வாக ‘மானாட மயிலாட’! பிடிக்காமல் போகுமா மக்களுக்கு? சரியான கூட்டம் அங்கு.

டக் தடக்’ எனத் தூக்கித் தூக்கி அடித்த ராட்டினம் ஒன்றில், மொத்த வண்டிக்கும் தனி ஆளாய் அமர்ந்து அசராமல் பவனி வந்து வெற்றிப் புன்னகையுடன் இறங்கினாள் தங்கை மகள். அதற்கென்ன என்கிறீர்களா? சொல்கிறேன். அடுத்து நாங்கள் நின்றிருந்தது பேய் வீட்டின் (ஹாண்டட் ஹவுஸ்) முன்.

இப்படித்தான், நான் நான்காம் வகுப்பில் இருந்தபோது நெல்லை மருத்துக்கல்லூரி பொருட்காட்சிக்குப் பள்ளியிலிருந்து அழைத்துச் சென்றிருந்தார்கள். அங்கே பேய் நடனமென எலும்புக்கூடுகள் ஆட, பார்த்து விட்டு வெளியே வந்து தேம்பித் தேம்பி அழுத வகுப்பு மாணவியர் நினைவுக்கு வர எச்சரித்தேன் அப்படியும் இருக்கலாமென. ‘ஹை!! ஸ்கெலட்டன் டான்ஸ். நல்லாதான் இருக்கும்’ பிள்ளைகள் அடம் செய்ய தலைக்கு பத்து ரூபாய் என டிக்கெட் வாங்கப் பட்டது.

தயாராகக் காத்திருந்த முகமூடிப் பேய் ‘பே’ என தலையை மட்டும் நீட்டி அச்சுறுத்த, முதல் ஆளாய் காலை எடுத்து வைத்த தங்கை மகள் சற்றும் அதை எதிர்பாராத நிலையில் அழத் தொடங்கி விட்டாள். அவள் அம்மா உடனேயே வெளியே அழைத்து வந்து விட்டாலும் கொஞ்ச நேரம் அழுதுதான் நிறுத்தினாள்.

முன் தினம் முரப்பநாடு ஆற்றுக்குப் போயிருந்த போது ‘தண்ணீர் கலர் ப்ரெளனாக இருக்கே’ என்று ஒரு அண்ணனும், ‘இறங்கினால் மீன் கடிக்கே’ என ஒரு அண்ணனும் நீச்சல்குள நினைவுகளோடு கரையோடு நின்று விட, சின்ன அண்ணாரு மட்டும் பயமின்றி குளித்தார் என்றாலும் குளிரில் வெடவெடத்தார். இவள் மட்டுமே நடுஆற்றுக்குப் போய் கொஞ்சமும் பயமின்றி மூழ்கி மூழ்கி வெளிவந்தாள். சமீபத்திய தாய்லாந்து பயணத்தில், அடியில் அதல பாதாளமாய் இருக்க, ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்துக்கு(‘ஃப்ளைட் ஆஃப் தி கிபான்’) குரங்கு போல கயிற்றின் வழி சென்றவள், எப்போதும் தைரியசாலியாய் பாராட்டப்பட்டவள் இந்த முகமூடிப் பேயிடம் ஏமாந்து போய் விட்டாள்.

ஏழு வயதுதானே? எதையோ எதிர்பார்த்து என்னென்னவோ கணக்குப் போட்டு நாம் எடுத்து வைக்கிற அடிகள் எதிர்பாராத திருப்பத்தில் சறுக்கி விடுவதில்லையா? அனுபவங்களைப் பாடங்களாய் காணும் பக்குவம் இன்றைய பிள்ளைகளுக்கு நிறையவே இருக்கிறது. தாண்டி வருவாள்.

பேய் வீட்டுக்குள் நுழைந்த மற்ற சூரர்களைப் பற்றிப் பார்ப்போம். தங்கையை மிரட்டிய பேய் மேலே அண்ணன்களுக்கு இருந்திருக்கிறது உள்ளுக்குள்ளே கோபம். நுழைகையில் பயம் காட்டிய பேயே உள்பக்கமாக ஓடிஓடி அடுத்தடுத்த திருப்பங்களிலும் அச்சுறுத்தியதைக் கவனித்து, சுதாகரித்துக் கொண்டவர்கள் கடைசித் திருப்பத்தில் பேய் அலறும் முன் ‘பே’ எனத் தாங்கள் அலறி வெலவெலக்க வைத்து விட்டார்கள் வீரதீரப் பேயை. பிழைத்துக் கொள்வார்கள்.

சிரித்தபடி பிள்ளைகள் வெளிவர, பேய் முகமூடியைத் தூக்கி என் தங்கையிடம் ‘யக்கா யக்கா, டீக்கு ஒரு ரெண்டு ரூவா கொடுத்துட்டுப் போக்கா’ என்றிருக்கிறது பரிதாபமாக. ஐந்து டீக்கு காசை கொடுத்து விட்டு வந்ததாக தங்கை சொன்ன போது பேயின் பிழைப்பு மேல் இரக்கமே ஏற்பட்டது.

சிரித்து வாழ வேண்டும்


ராசாதி ராசா யார் என்று தெரிந்து விட்டதா?இவரை சிரிக்க வைக்கக் கூட்டத்தினர் ஏதேதோ கோமாளித் தனங்கள் செய்து, தமது செய்கையை தாமே ரசித்துச் சிரித்துக் கொண்டிருந்தது நல்ல வேடிக்கை. அதுவேதான் நோக்கமெனில் பாராட்டத்தான் வேண்டும்.

ராசா விறைப்பாக நின்றாலும் எங்கோ பார்த்துக் கொண்டிருக்கவில்லை. ஒவ்வொருவரின் முயற்சிகளையும் உன்னிப்பாகக் கவனித்தபடிதான் இருந்தார். அப்படியும் நரசிம்ம ராவைத் தோற்கடிக்கும் முகத்துடனேயே நின்றிருக்க இதொன்றும் அத்தனை சிரமமில்லை போலிருக்கிறதென நினைத்து, வீடு திரும்பியதும் ஆளாளுக்கு அந்த ராசா போல இருந்து பார்த்தோம். ஊஹூம். யாராலும் ஓரிரு நிமிடம் கூடத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. உண்மையில் அதில் வெல்லும் ஆர்வம் எவருக்கும் இல்லை என்றே கொள்ள வேண்டும். கோடிகள் கொட்டிக் கொடுத்தாலும் சிரிக்காமல் வாழ யாருக்குதான் இருக்கும் விருப்பம்?

ஆனால் சவால் ராசாவோ ஐம்பதாயிரத்தில் ஐம்பது பைசாவைக் கூட யாருக்கும் விட்டுக் கொடுப்பதாய் இல்லை. மகுடம் தலைக்கு ஏறிவிட்டால் அதை கெட்டியாகப் பிடித்துக் கொள்வதிலேதானே இன்றைய சாம்ராஜ்ய சக்கரவர்த்திகளுக்குக் காலம் கழிகிறது! இன்னொரு கோணத்தில் பார்த்தால் சாமான்னியர்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கா எனும் சிந்தனையும் எழுகிறது. பெயர், பொருள், புகழ், வேலை, பதவி என இருப்பதைத் தக்க வைத்துக் கொள்ளவதுதான் எல்லோருக்குமே வாழ்நாள் போராட்டமாய் உள்ளது. சக்கரவர்த்திகளுக்குச் சற்றே கூடுதலான போராட்டம். அவ்வளவுதான் வித்தியாசம்.

இவ்வேந்தரைப் பொறுத்த மட்டில் கிரீடம் என்பது சவாலில் தோற்றுப் போகாமல் எஜமானின் ஐம்பதாயிரதைக் காப்பாற்றித் தன் வேலையைத் தக்க வைத்துக் கொள்வதே எனும் கனமான உண்மை, பளபளத்த அவரது உடைகளுக்குள் பதுங்கி விட்டுக் கொண்டிருந்தது.

சற்றுப் பொறுத்துக் கிடைத்த காட்சிதான் என்ன அழகு! நிகழ்ச்சி இடைவேளையின் போது தன் சிம்மாசனத்தில் அமர்ந்தபடி ரொம்ப அந்நியோன்மாய் மக்களிடம் அளவளாவிக் கொண்டிருந்தார் ராசா. அரியாசனத்தில் இருப்பவர்கள் இப்படிப் பொதுமக்களை அணுகினால் எத்தனை நன்றாக இருக்கும்? எட்டிப் பார்த்த ஏக்கத்தை எளிதாகத் தட்டிவிட முடியவில்லை.

தூத்துக்குடியிலிருந்து வரவேண்டிய பெங்களூர் எக்ஸ்பிரசுக்காக கோவில்பட்டி ரயில் நிலையத்தில் காத்திருந்தோம் நானும் மகனும். பெஞ்சில் அமர்ந்திருந்த எங்களைக் கடந்து சென்றார்கள் நாலைந்து பேர். அதில் ஒல்லியான உருவத்துடன் ஐம்பது வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ‘எங்கிட்ட நடக்குமா? அப்படியே கொடல வுருவி மாலையாப் போட்டுறுவேன்ல. அந்தப் பயம் இருக்கு அவனுக்கு’ என உதார் விட்டுக் கொண்டிருந்தார்.

”கொடல என்றால்?” உச்சரிப்பு பிடிபடாமல் இழுத்தான் மகன். ”கொடல இல்லை, குடல்.” விளக்கினேன். உதார் மன்னன் சொன்னதன் அர்த்தம் முழுதாகப் புரியவர சிரிப்பை அடக்க முடியவில்லை அவனுக்கு. ”ஆளப் பார்த்தா அப்படியொண்ணும் ரவுடி மாதிரி தெரியலயே” என்றான். ”வெள்ளந்தி மனிதர்கள்தானடா. இப்படி உதார் விட்டுக் கொள்வதில் கிடைக்கிறது ஒரு அற்ப சந்தோஷம்” சொல்லி முடிக்கவில்லை நான்..

அடுத்து வந்து கொண்டிருந்தார்கள் பளீர் வெள்ளையும் சுளீர் சொள்ளையுமாய், மடித்துக் கட்டிய வேட்டியோடு மூன்று பேர். நடுவிலிருந்த பெரியவருக்கு அறுபது வயது இருக்கும். ”எங்க அக்கா வூட்ல இருக்குல அந்தச் சட்டை. அத மட்டும் நா போட்டேன்னு வையு” விரல்களைச் சொடுக்கி ”ஒரு.. ஒரு.. எளவட்டப் பயலும் எம்முன்ன நிக்க முடியாதுல்ல” ரவுசு விட்டபடி அக்கா வூட்டுச் சட்டையை அப்போதே அணிந்திருக்கும் தோரணையில் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டார். ‘ஏதேனும் டீ ஷர்டாய் இருக்கும்’ மறுபடி அடக்க மாட்டாமல் மகன் சிரிக்க எனக்கோ உலகெங்குமே வயது வரம்பின்றி ரவுசு மன்னர்கள் அடிக்கடி தங்களைப் பற்றி விடும் சவுண்டு நினைவுக்கு வந்தது. ‘யூத்து...’!!!

***

இந்தப் பதிவின் ஒரு பகுதி ஆனந்த விகடனின் ‘என் விகடன்’ மதுரை பதிப்பின் வலையோசையில்..
நன்றி விகடன்!

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

மலரோடு மலராக..-பெங்களூரு லால்பாக்கில்.. - ( Bangalore Lalbagh Flower Show )

1.கரங்குவித்து வணங்கி வரவேற்கிறது அழகாய் ஆம்பல்

'சுதந்திரதினக் கண்காட்சி அப்டேட்ஸ் போலிருக்கிறது' என நினைத்து வந்தீர்களானால் மன்னிக்கணும். கடந்தமுறை அலைமோதிய கூட்டத்தை நினைத்தே போகவில்லை. இந்த முறை கண்ணாடி மாளிகையை அலங்கரித்தது ஆறுலட்சம் ரோஜாக்களால் உருவாக்கப்பட்ட ‘இண்டியா கேட்’.

ஒவ்வொரு வருடமும் தாஜ்மகால், குதுப்மினார், டைனாசர் என க்ளாஸ் ஹவுஸில் இடம் பெறும் பிரமாண்ட மலர் கட்டுமானங்களே கண்காட்சியின் செண்டர் ஃஆப் அட்ராக்‌ஷனாக இருந்து வந்தாலும், தோட்டக்கலையை முழுமையாக அறிந்து கொள்ளும் விதமாகக் காட்சிப் படுத்தியிருப்பார்கள் பரந்து விரிந்த லால்பாக் எங்கிலும் பல பிரிவுகளாக.

இந்த சுதந்திர தினக் கண்காட்சிக்கு நாற்பத்தைந்து லட்சம் ரூபாய் செலவானதாகவும் நுழைவுக் கட்டணம் வாயிலாக ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் வந்ததாகவும் (தலைக்கு முப்பது ரூபாய் என்றால் எத்தனை பேர் பார்த்துக் களித்தார்கள் என கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்), நிகர இலாபம் ஐம்பத்தைந்து இலட்சமென்றும் செய்தி அறிக்கை வெளியாகியுள்ளது.

சரி விஜயகாந்த் பாணியில் எதற்கு இந்தக் கதையெல்லாம் என்கிறீர்களா? ஜனவரியில் குடியரசு தினக் கண்காட்சியன்று எடுத்த படங்களில் பலவற்றை சொன்னபடி பார்வைக்கு வைக்காதது இப்போதுதான் நினைவுக்கு வந்தது. என் கணக்குக்கு கூட ஒரு பதிவுமாயிற்று:)! உங்களுக்கு மலர்களைப் பார்த்த மாதிரியும் ஆயிற்று.

முதல் பாகம் பார்க்காதவர்களுக்கு மாதிரிக்காக மீண்டும் ஒரு படம்..

2.குதுப்மினார்
ஆனால் மீள் படம் அல்ல:)! இதே போன்ற காவேரி மாதா மற்றும் மத நல்லிணக்க, பண்டிகை மலர் அலங்காரங்கள் காண விருப்பமாயின் முதல் பாகத்துக்குச் செல்லுங்கள்.

கூட்டத்தோடு கூட்டமாக நகருகையில் அவசரமாய் எடுத்தவையே பின் வரும் படங்களும். ஆகையால் 'பூவை மறைக்கிற இலைகள், அருகே தெரிகிற தளைகள்' போன்ற சிறிய பெரிய குறைகள் எவற்றையும் பெரிது படுத்தாமல் வாருங்களேன் கூடவே, பிழைத்துப் போகிறேன் எப்போதும் போல:)!

[படங்கள் கணினித் திரையை விட்டு விலகித் தெரிந்தால் control மற்றும் minus பொத்தான்களை பயன்படுத்துங்கள்.]

3.ராஜா மகள்




4.லில்லி மலருக்குக் கொண்டாட்டம்



5.பூவில் வண்டு



6.தண்டுடன் அல்லி.. தடாகத்தில்..



7.இதழா குழலா?
இவ்வகை மலரை இங்குதான் முதன் முறையாகக் கண்டேன்.


8.மெல்லத் திறக்கும் இதழ்கள்



9.(செக்கச்) சிவந்த மலர்

10.நம்பினால் நம்புங்கள்
ஒற்றைப் பூதான் இத்தனை பெரிசாய்..

இவ்வகையே கண்காட்சியில் முதல் பரிசினைத் தட்டிச் சென்றது.


11.தொந்திரவு செய்யாதீர்


12.நீயா?


13.நானா?



14.கள்ளிக்குப் பூவேலி

பூந்தோட்டத்துக்கு முள்வேலி பார்த்திருப்போம். இங்கே முள் நிறைந்த ‘டிமோத்தி’ கள்ளிச்செடிக்கு பூக்களால் வேலி.


15.கண்ணாடி மாளிகை கண்காட்சி நாயகனாய்..



எல்லா மலரும் அழகுதான். இருப்பினும் வண்ணம், கோணம், வடிவம் என ஏதேனும் காரணத்தால் எதுவேனும் குறிப்பாகப் பிடித்திருந்தால் சொல்லிச் செல்லுங்களேன்:)!





திங்கள், 16 ஆகஸ்ட், 2010

மேகங்களுக்குப் பின்னால்.. - உயிரோசையில்..

யு.எஸிலிருந்து இரண்டு வார விடுப்பில் மகன்கள் இருவருடனும் வந்திருந்த சின்ன தங்கை ஒவ்வொருவர் வீடாக சென்றால் பயணத்திலேயே பாதி நாட்கள் கழியுமே என நானும் பெங்களூரில் இருக்கும் இன்னொரு தங்கையும் நெல்லையில் அம்மா வீடு செல்ல முடிவெடுத்தோம். என் மகனுக்கும் செமஸ்டர் விடுமுறை. தங்கை மகளுக்கும் விடுமுறை. வசதியாயிற்று. அத்தைகளுக்காகவும் கஸின்களுக்காகவும் அங்கே ஆவலாய் காத்திருந்தான் தம்பியின் ஒன்றரை வயது மகன். குடும்பம் ஒன்று கூடினால் குதூகலத்துக்குக் கேட்க வேண்டுமா? இனிதே கழிந்தது விடுமுறை.

ருங்குளம் சென்றிருந்தோம். குன்றின் மேல் அமைந்த பெருமாள் கோவில்.சுற்றிச் சூழ பசுமையைப் பறை சாற்றும் வயல்கள். ஆங்காங்கே மந்தை மந்தையாய் ஆடுகள். வயல்வெளிகள். சுதந்திரமாய் உலவியபடி சில குதிரைகளும் குட்டிகளும்.மேலே சென்றதும் அப்படியொரு இதமான காற்று. மேகங்கள் விரைந்தபடி இருக்க வெகு அழகாய் ஆகாயம். எல்லாவற்றையும் விட என்னைக் கவர்ந்தது அங்கு காண நேர்ந்த மக்களின் மிக எளிமையான வாழ்க்கை.

தரிசனம் முடித்து வெளிவந்த சமயம் கோவிலுக்கு எதிரே ஒரு முதியவர், வயதின் காரணமாக பார்வை குறைந்த நிலையில். பக்கத்தில் ஒரு எவர்சில்வர் கேனில் சூடான சுக்குவென்னீர். வேட்டி மடிப்பில் கட்டி வைத்திருந்த கவரில் டிஸ்போஸிபிள் கோப்பைகள். எங்கிருந்தோ ஒலிபெருக்கியில் மிதந்து வந்த பாடலுக்கு அவரது விரல்கள் விடாமல் தாளமிட்டபடி இருந்தன.



கூடவே இளம் வயதில் சுண்டல் வியாபாரி. அவர் மகன் எனத் தெரிய வந்தது. ‘சூடாயிருக்கு கொண்டை கடலை. வாங்குங்கம்மா’ என்றார். ‘அத்தனை பேருக்கும்’ என்றதும் முகத்தில் ஒரு பளீர் சிரிப்பு. சந்தோஷமாய்ப் பொட்டலமிட ஆரம்பித்தார்.
‘அண்ணே ரெண்ரெண்ட் ரூபாய்க்கா அஞ்சு சுண்டல்’ என வந்து நின்றார்கள் சில சிறுமியர். ‘முதலில் அவர்களுக்கு கொடுங்க’ என்றோம். பேச்சுக் கொடுத்ததில் சிலர் பக்கத்து கிராமம். அத்தை வீடு வந்தோம் வார இறுதி என்பதால் என்றார்கள் இருவர். எல்லோருமாய் சுண்டலை வாங்கிக் கொண்டு பக்கத்திலிருந்த பாறையை நோக்கி நடையைக் கட்டினார்கள்.

அந்த வயதிலும் பேரனைத் தூக்கிக் கொண்டு கிடுகிடுவெனப் படியேறி அவர்களிடம் வந்தார் ஒரு வயதான பெண்மணி. ‘வந்துட்டியா?’ எங்களுக்காக சுக்குவென்னீர் கோப்பையை ஒன்றொன்றாக மகனிடம் தந்தபடியிருந்த முதியவர் சந்தோஷமாய் குரல் எழுப்பினார். பெண்மணி ‘ம்’ என்றிட ‘அவன்’ என்றார். ‘அவனில்லாம நா ஏன் வாரேன்’ என சிரித்தார்.
வேலையை முடித்து விட்டு ‘கொண்டா கொண்டா’ எனக் காற்றைக் கைகளால் துழாவினார். மகன் வாங்கி அந்த சிசுவை தாத்தாவின் மடியில் வைக்க, முதியவருக்கு என்ன ஒரு சந்தோஷம். குழந்தையும் தாத்தாவிடம் தாவி வந்தமர்ந்து சிரித்து விளையாடத் தொடங்கியது. சிறிது நேரத்தில் ‘இருட்டப் போவுது. நாளை வாரேன்’ என குழந்தையை வாங்கிக் கொண்டு மறுபடி சிட்டாய்ப் பறந்தார் பாட்டி, படிகளின் வழியே.

அது தினசரி வழக்கம் என்பதும் குழந்தை தாத்தாவோடு வசிக்கவில்லை என்பதும் புரிந்தது. அவரிடம் காட்டுவதற்காக மட்டுமே அழைத்து வரப்படுவது கோவிலுக்குச் செல்லாமல் அப்பெண்மணி மறுபடி விடுவிடுவென படியிறங்கிச் சென்றதில் புரிந்தது. மகள் வயிற்றுப் பேரனோ கொள்ளுப் பேரனோ சகோதரியின் பேரனோ தெரியாது.

குன்றின் கீழிருக்கும் சிவன் கோவிலுக்கு செல்லலாமென வந்த வாகனங்களை நோக்கி நாங்கள் நடக்க ஆரம்பிக்க கண்ணில் பட்டார்கள் சுண்டல் வாங்கிச் சென்ற சிறுமியர். ஆகா என்ன ரசனையான வாழ்க்கை. பாறை மேல் அமர்ந்து மலை, வாழைத்தோப்பு, பரந்த வானம், மறையும் சூரியன், வீசும் தென்றல் எல்லாவற்றையும் அனுபவித்து ரசித்தபடி சுண்டலைக் கொறித்தவாறு அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். ‘முகம் பார்க்காமல் அலைதொலைபேசிகளிலும் இணையத்திலும் அடிக்கும் அரட்டையெல்லாம் ஒரு அரட்டையா? எங்களைப் பாருங்கள்’ என ‘கப கப’க்க வைத்தார்கள்.

டிவாரத்தில் சிவன் கோவில். ‘காரிலேயே செருப்பை விட்டு விடட்டுமா’ பெங்களூர் கோவில் வாசலில் இதுவரை நாலைந்து முறை குடும்பமாக, ஏழெட்டு ஜோடிகளை மொத்தமாக தொலைத்த அனுபவத்தில் மகன் கேட்டான். அதுவும் மிகச் சமீபமாக ஊர் கிளம்பும் இரண்டு தினம் முன்னர் தொலைத்ததும், அவசரமாய் வேறு வாங்கியதும் நினைவிடுக்கிலிருந்து எட்டிப் பார்த்து எச்சரிக்கை மணி அடித்திருக்க வேண்டும்:). ‘இங்கேயெல்லாம் யாரும் அப்படி எடுக்க மாட்டார்கள். தைரியமாய் அணிந்து வா. கோவில் வாசலில் விட்டுக் கொள்ளலாம்’ என்றேன்.

அரைமணியில் வெளிவந்தோம். குன்றின் மேல் பார்வை சென்ற போது அந்தச் சிறுமியர் கைகளை நீட்டி ஆட்டி இன்னும் அரட்டை அடித்தபடி. என் மகனுக்கும் சின்னத் தங்கைக்கும் ‘நாமெல்லாம் அப்படி உட்கார்ந்து பேசவில்லையே. எவ்வளவு ஜாலியாய் இருந்திருக்கும்’ மறுபடி காதிலே புகை. ‘சரி ஊர் போகும் முன் இன்னொரு முறை வருவோம்’ என அம்மா சமாதானம் செய்து அடுத்திருந்த ஐயப்பன் கோவிலுக்கு அழைத்துச் சென்றார்கள்.

குழந்தைகளுக்கு ஐயப்பன் கதையையும் புலிவாகனத்தைக் காட்டி புராணத்தையும் சொல்லியபடியே அங்கிருந்து கிளம்பிய வேளையில் மெதுவாக இருள் கவியத் தொடங்கியிருந்தது. கோவில் முன்னிருந்த குறுகிய சாலையில் கூட்டத்தின் ஊடாக மெல்ல மெல்ல நகர்ந்த வாகனத்துள் இருந்து கண்ட காட்சி.. சுண்டல் வியாபாரியின் ஒரு கை தலையிலிருந்த கூடையைப் பிடித்திருக்க மறு கையிடுக்கில் சற்று நீண்ட கம்பு. கம்பின் இன்னொரு முனையைப் பற்றியபடி அவனுடன் வேகமாய் நடந்து கொண்டிருந்தார் முதியவர்.

நெகிழ்வாய் உணர்ந்தோம். 'பேசாம வீட்டோடு இரு’ யாரும் சொல்லவில்லை. ஒருபடி மேலாக அக்கறையுடன் அழைத்துச் செல்லும் மகன். தாத்தாவைப் பார்க்க தினசரி பேரன் அனுப்பி வைக்கப் படுகிறான். உறவுகளின் மேலான மரியாதை, முதிய காலத்தில் அவரது விருப்பங்களை நிறைவேற்ற குடும்பம் எடுத்துக் கொள்ளப்படும் சிரத்தை எதை என்று சொல்ல. பெரிய கனவுகள் லட்சியங்கள் இவர்களுக்கு இருக்குமா தெரியாது. அன்றாட உழைப்பில் அன்றைய ஜீவனம். தேவைகள் தீர்மானிக்கப்பட்டு தேடல்கள் வரையறுக்கப்பட்டு சீரான பாதையில் செல்லும் தெளிந்த நீரோடையை போன்றதான வாழ்க்கை. கிராமத்துக் காற்றைப் போல சுத்தமாய் மனம்.

அவரசயுகத்தில் இழந்த வாழ்க்கை முறைகளுக்காகவும், ஏன்.. அந்த சிறுமியரைப் போன்று ஏகாந்தமான சூழலில் அரட்டையடிக்க முடியாததற்கும் கூட எழுகிற நம் ஏக்கம் எத்தனை உண்மையானது? தேவதை நேரில் தோன்றி ‘இனி இம்மனிதரைப் போல எளிமையாய் வாழ வரம் தருகிறேன்’ என குக்கிராமத்துக் குடில் ஒன்றுக்கு ஒருநொடியில் நம்மை இடம் மாற்றினால் எத்தனைபேர் அதை மனம் உவந்து ஏற்றுக் கொள்வோம்? பட்டணத்து சுகங்கள் என்னதான் அலுத்தாலும் எத்தனை செருப்புக்கள் திருட்டுப் போனாலும் கிராமத்து மண்ணோடு எவ்வளவுதூரம் நம்மால் பொருந்திப் போக இயலும்? எத்தனை நாள் அவை நமக்கு இனிக்கும்?

கேள்விகள் ஒன்றன் பின் ஒன்றாக எழுந்து, காற்றில் அங்குமிங்கும் அலைந்து, வேகவேகமாய் வெள்ளை மேகங்களுக்குப் பின்னால் சென்று ஒளிந்து கொண்டன வெட்கப்பட்டு.
***


உயிர்மை.காமின் இன்றைய உயிரோசையிலும்.., நன்றி உயிரோசை!

சனி, 14 ஆகஸ்ட், 2010

பச்சை - ஆகஸ்ட் PiT போட்டிக்கு..

பெங்களூரில் மெட்ரோ திட்டத்துக்காக நாலாயிரத்துக்கும் மேலான மரங்கள் வெட்டப்பட்டு விட்டதாக காற்று வாக்கில் செய்திகள் உலவினாலும் அரசு தரப்பு அதை மறுக்கிறது. முன் எப்போதையும் விடக் கொதிப்பாக அமைந்த இவ்வருடக் கோடை ‘நானே போதாதா ஆதரத்துக்கு’ என அச்சுறுத்திச் சென்று விட்டது. பெங்களூரின் வெதருக்காகவே முற்றுகையிட்ட பன்னாட்டு நிறுவனங்களால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்க, ஜனத்தொகை பெருக, அதற்கேற்ற வகையில் சாலை விஸ்தரிப்புகளும் மேம்பாலங்களும் தற்போது மெட்ரோவும் தேவைப்பட கடைசியில் இழந்தது கார்டன் சிட்டி தன் அடையாளத்தை.

காட்டை அழித்து நாடாக்குவதும் வயலை அழித்து வீடாக்குவதும் தொடருகிற வேளையில் வந்திருக்கும் PiT தலைப்பு ‘பச்சை’. பசுமை. மனதுக்குக் குளுமை.

"படத்தில் பச்சை பிரதானமா இருக்கணும். அது மரமா இருக்கலாம், இலையா இருக்கலாம், உடையா இருக்கலாம், ப்ளாஸ்டிக் குடமா இருக்கலாம், பெயிண்ட் டப்பாவா இருக்கலாம், வாகனமா இருக்கலாம், இதுவா இருக்கலாம், அதுவா இருக்கலாம், கிளிப்பச்சையா இருக்கலாம், ஆலிவ் பச்சையா இருக்கலாம். மொத்தத்துல பச்சையா இருக்கணும்."

இப்படியாக PiT அறிவித்திருந்தாலும் விரல் விட்டு எண்ணும் அளவுக்கு வெகுசிலரைத் தவிர மற்றவர் எல்லாம்..
‘புல்லின் சிரிப்பு பச்சை நிறமே
இலையின் இளமை பச்சை நிறமே’
எனக் களத்தில் இறங்கி விட்டார்கள், பாருங்கள் இங்கே :)!

[படங்கள் கணினித் திரையை விட்டு விலகித் தெரிந்தால் Ctrl மற்றும் minus பொத்தான்களை உபயோகித்திடக் கேட்டுக் கொள்கிறேன்.]


புல்வெளி புல்வெளி தன்னில்
பனித்துளி பனித்துளி ஒன்று
தூங்குது தூங்குது பாரம்மா!



அடர் பச்சைக் கானகத்தில் தனிப்பச்சையாய்..

தண்ணீரின் நிறமும் பாசிப்பச்சையாய்..


வயலும் வாழ்வும்



பச்சைப் பசேல்



கன்று ஒன்று



பசு ஒன்று

பசும்புல் சுவைத்தபடி..


பசுமை நிறைந்த நினைவுகளே..

"பாடித் திரிந்த பறவைகளே.. பழகிக் களித்த தோழர்களே..
பறந்து செல்கின்றோம்.. நாம்.. பிரிந்து செல்கின்றோம்.." என 82-ல் விடைபெற்ற இக்னேஷியஸ் கான்வென்ட் பள்ளிக்கு சமீபத்திய நெல்லை விஸிட்டின் போது சென்றிருந்தேன். (அது பற்றியொரு பதிவு எழுத எண்ணம் உண்டு). சீருடை வண்ணமாகிய ‘பச்சை’ வெள்ளையைத் தன்னிலும் தாங்கி நிற்கறது பள்ளி அலுவலகம் இயங்கும் இந்தப் பிரதான கட்டிடம். நேர் மேலே சேப்பல்:

சன்னல்களின் பச்சை டின்டட் கண்ணாடி வழியே பாய்ந்து பரவி நிற்கும் இந்தப் பசும் ஒளி சின்ன வயதிலிருந்து ரொம்பப் பிடிக்கும். அமைதியான சூழலை இன்னும் ஆழமாக்குகிறது அந்த ஒளியெனத் தோன்றும். அதற்காகவே அடிக்கடி செல்லுவேன் அப்போது. பள்ளியினுள் பல மாற்றங்களைக் கண்டாலும் இந்த சேப்பல் அன்று கண்டது போல அப்படியே இருப்பது கண்டு வந்தது ஒரு பரவசம்.


மலர்களின் கானமும் மரங்களின் மயக்கமும்


மார்கழி பஜனையில் சிலிர்த்து நிற்கும் நெட்டிலிங்கங்கள்


எங்கெங்கு காணினும் பசுமையடா..



சோலை வனம்



மலர் வனம்



பூங்கா வனம்



ஏரிக்கரையோரம் தேநீர் நேரம்



துள்ளாத மனமும் துள்ளும்


இப்படியொரு back yard அமைந்தால்..


A Country House



தளிரும் மரமும்

பசுஞ்சோலையில் நிற்கும் பச்சிளம்பாலகன்
இவன் தலைமுறைக்காக..
விட்டு வையுங்கள் மரங்களை!


இருந்த பச்சைகளில் சிலவற்றைத் தேற்றிப் பார்வைக்கு வைத்திருக்கிறேன்.
இருத்தலின் அடையாளமாக எதைக் கொடுக்கட்டும் என நேரமிருந்தால் சொல்லிச் செல்லுங்கள். முதல் மூன்றில் ஒன்று என்பது என் எண்ணமாக உள்ளது:)!

திங்கள், 9 ஆகஸ்ட், 2010

ஒரு நதியின் பயணம் - வடக்கு வாசல் கவிதை


தன்னிலே நீந்தும் கயல்களை ரசித்துத்
தழுவியபடி ஊற்றெடுத்து ஓடும்
நதிக்குத் தெரிவதேயில்லை
எங்கே பாதை விரியும்
எங்கே குறுகிச் சுழியும்
எங்கே திருப்பம் எங்கே வளைவு
எங்கே பாறை எங்கே பள்ளம்
எங்கே குபீரென விழ நேரும்
எதுவாயிருக்கும் சென்று சேருமிடம்

எவையும் தெரியாமலே தேடாமலே
தன்மூலம் அறிந்திடத் தவிக்காமலே
எவ்விதக் கேள்வியும் எழுப்பாமலே
அனுபவத்தில் அதுவாகக்
கிடைத்தபடியிருக்கும் விடைகளைத்
திகைப்பின்றி வாசிக்கப் பழகியபடி
பயணிப்பதாலேயே

எதிர்வரும் எத்தடையையும்
எதிரே பாரா
எவ்வகை வீழ்ச்சியையும்
கடக்கிறதோ அநாயசமாய்
தயக்கங்கள் ஏதுமின்றி

எச்சுழலையும் எச்சூழலையும்
எந்நிலையிலும் எம்முனையிலும்
சவாலாகவே சந்தித்தபடி?
***

படம்: இணையத்திலிருந்து..
ஜூன் 2010 வடக்கு வாசல் இதழிலும்











மற்றும் அதன் இணையதளத்திலும்..



"இந்த மாத 'வடக்கு வாசல்' இதழ் மஹாகவி ரவீந்திர நாத் தாகூரின் சிறப்பிதழாக வெளிவந்திருக்கிறது..... தாகூரை மட்டுமல்ல இலக்கியத்தை விரும்பும் அனைவரும் தவற விடக்கூடாத சிறப்பிதழ் இது" எனும் குறிப்புடனான ஓவியர் சந்திரமோகனின் பதிவு ‘மகாக்கவிக்கு ஒரு சமர்ப்பணம்..இங்கே.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin