திங்கள், 28 ஜூன், 2010

ஆயிரமாயிரம் கேள்விகள் - 'புன்னகை' கவிதை

இரண்டு நிமிடங்களே இருந்தன
இரயிலைப் பிடிக்க

எந்த நிபந்தனையும் விதிக்காமல்
கனத்த பெட்டிகளையும்
பெருத்த பைகளையும் வாங்கிக்கொண்டு
‘எந்தவண்டி எந்தகோச்’
கேட்டபடிகூட்டத்துள் புகுந்து புறப்பட்டு
ஓடியகூலியைப் பின்தொடர்ந்தேன்
ஒருகையில் குழந்தையும்
மறுகையில் அழுத்திப்பிடித்த
மனைவியின் கரமுமாக

இலாவகமாய் சுமையை உள்சேர்த்து
ஏறவும் கைகொடுத்தவன்
தெய்வமாகத் தெரிந்தான்

‘எவ்வளவு சொல்லுப்பா’
தப்பாகி விடக்கூடாதேயெனும்
தவிப்பில் நானும்
‘நீயேதான் போட்டுக்கொடு சார்’
அதீத நம்பிக்கையில் அவனும்

இடம்மாறிய நோட்டுத்தாள்களில்
அடைந்தானா திருப்தியென
அளவெடுக்கும் முன்னரே
நகரத்தொடங்கியிருந்தது வண்டி

அவசரமாய் இறங்கிச்சென்றவன்
இமைகளுக்கிடையே இருந்தது
சங்கடமா சந்தோஷமா
எழுந்த சந்தேகம்
வழியனுப்பிப் பார்த்துநின்ற
பலநூறு விழிகளின்
விதவிதமான உணர்வுகளுக்குள்
வேகவேகமாய்க் கரைந்து
காணாமல் போய்க்கொண்டிருந்தது

இனிஆராய்ந்து விடைதேட
அவசியமற்றதாய்க் கருதி மறந்துபோகும்
ஆயிரமாயிரம் கேள்விகளுள் ஒன்றாக!
***
படம்: இணையத்திலிருந்து..



நன்றி புன்னகை!

'புன்னகை' , க.அம்சப்ரியா அவர்களை ஆசிரியராகக் கொண்டு கடந்த பத்து ஆண்டுகளாக பொள்ளாச்சியிலிருந்து வெளிவரும் கவிதை இதழ். ஏப்ரல் மாதம், தனது அறுபதாவது இதழை அறுபது கவிஞர்களின் கவிதைகளுடன் வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது. அறுபதில் ஒன்றாக இக் கவிதையும்..!

திங்கள், 21 ஜூன், 2010

சீற்றம்


ஆறுவது சினம்
ரெளத்திரம் பழகு

முரண்களாய்த் தோன்றும் இவற்றின்
தேவைகள் சந்திக்கும்
கூர்வாளின் முனைபோன்ற புள்ளியில்
அடங்கிய ரகசியமாய்
சீற்றத்தின் சூத்திரம்

சரியான நபரிடத்தில்
சரியான காரணத்துக்கு
சரியான நேரத்தில்
சரியான கோணத்தில்
சரியான அளவிலும்
வெளிப்படுத்தவேண்டிய ஓர் உணர்வாய்..

புரிந்தால்
வாழ்வோடு வசப்படும் வானமும்.
***


படம்: இணையத்திலிருந்து..

7 ஜூன் 2010 யூத்ஃபுல் விகடனில் வெளிவந்த கவிதை.

புதன், 16 ஜூன், 2010

மகிழ்ச்சி - JUNE PiT

இரட்டை மகிழ்ச்சி. என்னவென்று கேளுங்கள்.

முதலாவது, இந்த வாரக் க்ளிக்-ஐ தேர்ந்தெடுக்கச் சொல்லி என்னைக் கெளரவித்திருக்கிறது PiT இங்கே.

நன்றி PiT, என் மேல் நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்ததற்கும், நடுவராய் இருப்பதன் சிரமங்களைப் புரிய வைத்ததற்கும்!

எனது தேர்வும், படத்துக்காக நான் எழுதிய வரிகளும்:

எல்லோரும் ஓர் நாள்..

முதுமையின் சித்திரம்
கருப்பு வெள்ளையில்

தொலைத்த இளமை
நரைத்த முடியில்

வாழ்வின் அனுபவங்கள்
தோலின் சுருக்கங்களில்

எல்லோரும் ஓர் நாள்
எய்துவோம் இந்நிலையை
என்பதை மறந்திட்ட
மதிகெட்ட மனிதராலே

ஒதுக்கப்பட்ட வேதனை
ஓடுகின்றன நெற்றியின் வரிகளிலே.

***

தேர்வுக்கான காரணம்: Sharpness/ clever b&w treatment / conveys emotion (the feeling of loneliness) clearly

படத்தை எடுத்தவர்: கார்த்திக் ஆர் யாதவ்.

வாழ்த்துக்கள் கார்த்திக்.

என் தேர்வையும் கவிதை வரிகளையும் PiT தளத்தில் பாராட்டியிருந்தவர்களுக்கும் இங்கு என் நன்றிகள்.



அடுத்த மகிழ்ச்சி? அதுதாங்க இம்மாதப் போட்டிக்கான தலைப்பே!

மகிழ்ச்சிப் படங்கள் பல இருந்தும் போட்டிக்குத் தர அதில் சிரிப்பவர் அனுமதி கோர ஏற்பட்ட தயக்கத்தில் இருந்த என்னைப் பார்த்துச் சிரி சிரியெனச் சிரித்தார் இவர் ‘மறந்து விட்டாயா என்னை’ என்பது போல. உடனே அனுப்பி வைத்து விட்டேன் இவரையே போட்டிக்கு இருத்தலின் அடையாளமாக!

வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்
சொல்லாமல் சொல்லி
தானிருக்கும் இடங்களில்
மகிழ்ச்சியலைகளைப் பரப்பி நிற்கிறார்
பேரானந்தமாய் சீனப் புத்தர்


[முன்னர் ‘பொம்மை’ தலைப்புக்காக எடுத்துப் பதிந்த படமே என்றாலும், போட்டிக்குத் தராத ஒன்றே. இவர் தரும் அதிர்ஷ்டம் பற்றி நான் எழுதி யூத்ஃபுல் விகடனில் வெளிவந்த கவிதை இங்கே.]

சரி, இம்மாதப் போட்டிக்காக, உற்சாகமும் மகிழ்ச்சியும் பொங்க வரிசை கட்டி நிற்கும் படங்கள் இங்கே. நேரமில்லாதவர் ஏற்படுத்திக் கொண்டு, கண்டு களியுங்கள். மனம் இலேசாகும்! சற்று அதிகப்படி நேரமிருப்பவர் பாராட்டுக்களையும் கருத்துக்களையும் வழங்கி ஊக்கப்படுத்துங்களேன்!

***

ஞாயிறு, 13 ஜூன், 2010

ஒரு பூ வனத்தில்..- நூறாவது பதிவு



வலைப்பூ வனத்தில் என் நூறாவது மலர்.

இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில் இப்போதுதான் சதம்:)!

ரொம்பவும் நிதானம் என்று தோன்றினாலும் பரவாயில்லை இந்த டெஸ்ட் மாட்சில் நின்று ஆடிக் கொண்டிருக்கிற வரையில் சந்தோஷம்தானே என்றிருக்கிறேன். அடித்த சதம் ஒருபுறமிருக்க, இரண்டு வருடங்கள் தொடர்வேன் என்பதே நான் எதிர்பார்க்காத ஒன்று. எப்போதாவது எழுதுவது என்றிருந்த என்னை ஓரளவு தொடர்ந்து எழுத வைத்து விட்டது வலைப்பூ.

ஆரம்ப ஆர்வம் வேகம் தாகம் எல்லாம் ஒரு கட்டத்தில் வடிந்து விடுவது எல்லோருக்கும் பொதுவாக நடக்கக் கூடியதே. நானும் அதற்கு விதிவிலக்கல்ல.

நானறிந்து அற்புதமான பதிவுகள் தந்து கொண்டிருந்த பலர், பல்வேறு காரணங்களால் ஒதுங்கிக் கொண்டு விட்டுள்ளார்கள்.

அவர்களில் சிலர் அவ்வப்போது மைதானத்தில் தலை காட்டுவதும், சிலபல சிக்ஸர்களை விளாசி மகிழ்வித்து விட்டு ‘மீண்டும் விரைவில் சந்திப்போம்’ என உத்திரவு வாங்கிக் கொள்வதுமாய் இருக்கிறார்கள்.

சிலருக்கு பதிவிடுவது பொழுதுபோக்கு, ரிலாக்ஸேஷன். சிலருக்கு வடிகால். சிலருக்குத் தம் எழுத்துக்களை ஆவணப்படுத்தும் இடம். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

சிலருக்கோ தவம். இவர்கள் எத்தனையோ வேலைகளுக்கிடையிலும் எழுதுவதையும் பதிவதையும் ஒருவித தொடர் ஈடுபாட்டுடன் நேர்த்தியுடன் செய்து பிரமிக்க வைக்கிறார்கள். என் போன்றவர்களுக்குப் ‘போதுமோ’ எனும் எண்ணம் வருகையில் எல்லாம் தொடர்கின்ற உத்வேகத்தைத் தருகிறார்கள்.

புதிதாய் வருகிறவர்கள் பிரமாதப் படுத்துகிறார்கள். இவர்களின் உற்சாகம் எல்லோரையும் தொற்றிக் கொள்கிறது. இன்னும் பல புதியவர்கள் இணைய வேண்டும். அதற்கு ஆரோக்கியமானதொரு சூழல் பதிவுலகில் என்றைக்கும் நிலவுமாறு இருப்பவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சரி இப்போது ஒரு சில வரிகளில் என் நூறினைப் புரட்டலாம்.

மொத்தப் பதிவுகளில் 25 சதவிகிதம் புகைப்படப் பதிவுகள், நிபுணராய் இல்லாவிட்டாலும் ஒரு ஆர்வலராய்..

50 சதவிகிதம் கவிதைகள், இலக்கணங்களுக்கு உட்பட்ட இலக்கியங்களாய் இல்லாவிட்டாலும் என் எண்ணங்களின் பிரதிபலிப்புகளாய்..

சிறுகதைகள் கட்டுரைகள் நினைவலைகள் இன்னபிறவுமாக..

பெரிய இடைவெளியின்றி தொடர்ந்து கொடுத்து வந்துள்ளேன் சராசரியாக வாரம் ஒன்றென. இனிவரும் காலத்தில் இந்த விகிதம் மாறலாம். கூடவோ இன்னும் குறையவோ செய்யலாம். இடைவெளிகள் ஏற்படலாம். அவை தற்காலிகமானதாகவே இருக்க மனம் விளைகிறது.

எழுதும் ஆர்வத்தை உயிப்பித்ததால், பலரையும் வாசித்து நம்மை மேம்படுத்திக் கொள்ளத் தூண்டுவதால் பதிவுலகில் தொடர்வது விருப்பமாய் உள்ளது. இது புகைப்பட ஆர்வத்துக்கும் பொருந்தும்.

நூறு இடுகைகளுக்கு என்ற கணக்கில் அரைலட்சம் தொடவிருக்கும் ஹிட்ஸ், ஏழாயிரத்து முன்னூறு ப்ரொஃபைல் வ்யூஸ் ஆகியவை என் வரையில் பரவாயில்லை எனத் தெம்பைத் தருவதாக உள்ளன. [கெத்தை என அவசரத்தில் வாசித்தோ புரிந்தோ கொண்டால் நிச்சயமாய் கொம்பெனி பொறுப்பேற்காது:)]


தமிழ் ப்ளாகர் திரட்டியின் தனிப்பட்டத் தேர்வாகிய நூற்றியொரு தமிழ் வலைப்பூக்கள் வரிசையில் Tamil Amudam's Blog ஆக முத்துச்சரமும் என்பதில் ஒரு சின்ன மகிழ்ச்சி.

தமிழ் மணம் விருதுகளிலோ அளவற்ற மகிழ்ச்சி:)!

எல்லாவற்றிற்கும் மேலாக., கிடைத்திருக்கும் நல்ல நட்புகள். பின்பலமாய் இருந்து தந்த அன்பு, ஊக்கம். அதுவே இங்கு என்னை உற்சாகமாய் வைத்துள்ளது.

அந்நியப் படுத்துவது போல் நன்றி நன்றி என சொல்வது நமக்குள் தேவையா என்கிற மாதிரியான ஒன்றுபட்டதொரு உணர்வு வந்து விட்ட நிலையிலும் சொல்லாமல் இருக்க முடியுமா?

ஃபாலோயராகத் ப்ளாகரில் தொடரும் 210 பேருக்கும், ரீடரில் தொடரும் 282 பேருக்கும், வாசித்துக் கருத்துக்களைப் பகிர்ந்து வந்திருந்தவருக்கும், முத்துச்சரத்தை எட்டிப் பார்த்துச் சென்றவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

தமிழ்மணம், தமிழிஷ், சங்கமம் திரட்டிகளுக்கும் நன்றிகள்.

முடிவாய்..

விரும்பியதைப் பதிய இத்தனை எளிதாய் நமக்கென ஒரு தளம், அதைப் பிறரிடம் கொண்டு சேர்க்க திரட்டிகளெனும் களம் என இணையம் தந்திருக்கும் வரங்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வோம்.

இடைவெளிகள் தவிர்க்க முடியாது போனாலும் எழுதுவதை முழுவதுமாய் நிறுத்தி விடாது இருப்போம்.
நேரம் அனுமதிக்கையில் பதிவதைத் தொடர்வோம். மற்றவரை இயன்றவரை வாசிப்போம். கருத்துக்களைப் பகிர்ந்திடுவோம். ஊக்கம் எனும் உரத்தினால் ஆக்கங்களும் பகிர்வுகளும் பதிவுகளாய் மலரட்டும். வலைப்பூ வனம் செழிக்கட்டும்.

* படம்: லால்பாக் மலர் கண்காட்சியில் நான் எடுத்தது.



பி.கு: கடந்த மாதமே நூறாவது பதிவினைத் தந்து விடுவேன் என நினைத்து எழுதி சேமிப்பில் வைத்திருந்ததை அப்படியே ஒரு எழுத்தும் மாறாமல் பதிந்துள்ளேன், இப்பொழுதும் பதிவுலகம் குறித்த என் ஆசை இதுவாகவே இருப்பதால்!



14 ஜூன் 2010,
யூத்ஃபுல் விகடன் ‘Good Blogs' பரிந்துரையில் இந்தப் பதிவு. நன்றி விகடன்!

செவ்வாய், 8 ஜூன், 2010

PiT-ன் இந்த வார க்ளிக்-கடல வாங்குங்க


இந்த வார க்ளிக் ஆக எனது ‘கடல வாங்குங்க’ படத்தை Photography-in-Tamil தளம் தேர்வு செய்துள்ளது.

நன்றி PiT! அறிவிப்புப் பதிவில் வாழ்த்தியிருந்த நண்பர்கள் அனைவருக்கும் இங்கும் என் நன்றிகள்.

Flickr தளத்தில் இப்படமும் தொடர்ந்து கிடைத்த பாராட்டுக்களும்.

பரிசுக்குத் தேர்வானது அறிந்து வாழ்த்தி ஃப்ளிக்கர் மெயில் அனுப்பியிருந்த நண்பர் ஜேம்ஸ் வசந்த் “I felt as if I was standing before the vendor ..” எனக் குறிப்பிட்டிருந்தார். உங்களுக்கு எப்பூடின்னு சொல்லுங்க:)! அப்படித்தான் என்றால் ஆழாக்கு கடலையும் மறக்காம வாங்கிக்குங்க. இதோ அழகா உங்களுக்காக பொட்டலம் ரெடியாகுது பாருங்க:



இந்தவாரப் படம் என்பது எப்படித் தேர்வாகிறது என்பது குறித்து முன்னர் வெற்றி பெற்ற போது நான் இட்ட பதிவு இங்கே. “இது வேறயா? பரிசுக்குத் தேர்வானது இரண்டாவது தடவைன்னு கடலையை உடைக்கிற மாதிரி உடைச்சு சொல்லிட்டுப் போலாமே’ங்கறீங்களா? ஹி.. ரைட்! விடு ஜூட்:)!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin