திங்கள், 21 நவம்பர், 2011

இந்த வாரம்-தமிழ்மணம் நட்சத்திரம்

தொடர்ந்து எழுதுவது வழக்கமாக இல்லாமல் தோன்றும் போது எழுதுவதே என் பழக்கம்." 2008 மே மாதம் வலைப்பூ ஆரம்பித்த போது இந்த வாசகம் முத்துச்சரத்தின் முகப்பிலும் என் profile பக்கத்திலும் இருந்தது. அடுத்த இரண்டு வருடங்களும் கூட. ஆனால் இப்போது அவ்வழக்கத்தை “வலைப்பூ ஓரளவு மாற்றி இருப்பதாகவே உணர்கிறேன்” என ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளேன்:)!

பதிவுகளின் வகை விரிந்திருப்பதும், 2010 சென்ற வருட அக்டோபர் மாதம் வரை வாரம் ஒரு இடுகையென்ற கொள்கையுடனேயே இருந்த என்னை, வாரம் இரண்டு தருமாறு அக்கறையுடன் கடிந்து கொண்ட நண்பரின் ஆலோசனையை ஏற்றதில் இப்போது வரை அதை செயல்படுத்த முடிந்திருப்பதும் எனக்கே ஆச்சரியமாக உள்ளது.

இதற்கு முன் வலைச்சரம் தொகுத்த வாரத்தில் மட்டுமே தினம் 2 பதிவுகள், அதாவது வலைச்சரத்தில் ஒன்றும் அதற்கான அறிவிப்பாக முத்துச்சரத்தில் ஒன்றும் என தந்து சாதனை படைத்தேன்:)! என் வரையில் முடியுமா எனப் பிரமிப்புடன் கடந்த வாரம் அது. இதோ மீண்டும் அதே போன்ற சூழலில். தினம் ஒன்றுக்கு மேலான பதிவுகள் தரும் விருப்பத்துடன் உங்கள் முன். தமிழ்மணம் நட்சத்திரமாக...

2009-ல் சமூகம் பிரிவில் முதலிடத்துக்கும், 2009, 2010 இரண்டு வருடங்களிலும் தொடர்ந்து காட்சிப்படைப்புகள் பிரிவில் இரண்டாவது இடத்துக்குமாக விருதுகளை வழங்கிக் கெளரவித்த தமிழ்மணம் இப்போது தந்திருக்கும் இன்னொரு அங்கீகாரம் இது. நன்றி தமிழ்மணம்!

னக்கு வலைப்பூ அறிமுகமாகி பதிவுலகம் நுழைந்த சமயத்தில் தமிழ்மணம் மட்டுமே பதிவுகளை இணைக்கும் திரட்டியாக செயல்பட்டு வந்தது. நான் முதன் முதலில் வாசித்த நெல்லை சிவா அவர்களின் வலைப்பூவில் அறிய வந்த, போட்டிகள் பல நடத்திய தேன்கூடு திரட்டி அதன் நிறுவனர் மறைவால் நின்று போயிருந்தது. பதிவுலகப் பிரவேசம் ‘முத்துச்சரம்’ கோர்க்க ஆரம்பிக்கும் முன்னரே நானானி அவர்களது பதிவுகள் சிலவற்றுக்குப் பின்னூட்டமிட்ட வகையில் நிகழ்ந்து விட்டிருந்தது. என் முதல் பதிவுக்கு முதல் கருத்தளித்து வரவேற்றவர் கோமா அவர்கள். நெல்லை சிவா அவர்களே முத்துச்சரத்துக்கு தமிழ்மணம் இணைப்பை ஏற்படுத்தித் தந்தவர். அதுவரை எழுதியவற்றை ஓரிடத்தில் சேமிக்கலாம் எனும் எண்ணத்திலேதான் முத்துச்சரத்தை ஆரம்பித்தேன். ஆனால் தமிழ்மணம் மூலமாக நண்பர்களின் வரவையும், கருத்துக்களையும் பெற முடிந்த வசதி அப்போது அளப்பரிய வியப்பையும், புதிதாக இன்னும் எழுத வேண்டுமெனும் ஊக்கத்தையும் அளித்தன என்றால் அது மிகையன்று.

ஞாயிறு, 13 நவம்பர், 2011

நண்பர்கள் - Nov PiT வெற்றிமுத்திரை யாருக்கு? - கோவை என் விகடனில் நடுவர் கருவாயன்

நண்பர்களுக்கோர் அழைப்பு விட்டிருக்கிறார் இம்மாத நடுவர் கருவாயன், நண்பர்களைப் படமாக்க! நடுவர் எடுத்த அருமையான மாதிரிப் படங்களுடன் அறிவிப்புப் பதிவு இங்கே. போட்டிக்கான விதிமுறையெல்லாம் இந்தப் பதிவிலே இருக்கிறது.

நான் தரும் சில மாதிரிப் படங்கள்:

#1. நண்பர்களின் நடைப் பயணம்.. ஒரு ஞாயிறு காலையில்..


#2.இந்த நண்பர்களின் ஞாயிறு காலை
நதி அலைகளோடு ‘ஏலேலோ.. ஐலசா..’வென..

#3. ஆறுதல் சொல்வான் ஆத்ம நண்பன்
“கிடைக்கணும்னு இருக்கிறது கிடைக்காமப் போகாது.”


#4. தோள் கொடுப்பான் தோழன்..
துணை நிற்பாள் தோழி..

#5. “தோள் கொடு தோழா...
பையை மாட்டிக்கணும்..

#6. கற்றதைப் பகிரும்
நல்ல ‘நண்பேன்டா’

#7. “பொறு.. பொறு..
நிச்சயம் நம்மையும் நண்பர்கள் லிஸ்ட்ல சேர்ப்பாங்க..”

நாளை குழந்தைகள் தினம். குழந்தைகளுக்கு என் வாழ்த்துக்கள்:)!!!


#8. புதிய நட்பு..
முகமெல்லாம் பூரிப்பு

#9. இணைபிரியா நண்பர்கள்

#10. எத்தனை சமர்த்து?

#11. குழந்தையின் முதல் தோழிஇப்படி பெற்றோர்-குழந்தை; தாத்தா பாட்டி-பேரக்குழந்தை போல உறவும் நட்பும் ஒருங்கிணைந்த படங்களும் எடுத்தனுப்பலாம். அதில் நட்பு மிளிருமாறு இருத்தல் நலம்.

கோவை என் விகடனில் இம்மாத நடுவர் கருவாயன்:

9/11/11 தேதியிட்ட ஆனந்த விகடன் இணைப்பாகிய கோவை ‘என் விகடன்’_ல் PiT குழும உறுப்பினர் கருவாயன் என்னும் சுரேஷ்பாபுவைப் பற்றி “இது மூன்றாவது கண்” கட்டுரை வெளியாகியுள்ளது:

கருவாயனின் படங்கள் பலவற்றை முன்னரும் PiT போட்டி மாதிரிப் படங்களாகவும் மற்றும் அதீதம் தேர்வாகவும் முத்துச்சரத்தில் பகிர்ந்துகொண்டிருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். என் கட்டுரை, கதைகளுக்கும் விரும்பி உபயோகிப்பதுண்டு.[அட்வான்ஸாகவே அனுமதி வாங்கி வைத்து விட்டேன்:)]. கிராமிய மணமிக்க ஜீவனுள்ள இவரது படங்கள் அனைத்தையும் ரசிக்க இங்கே செல்லுங்கள்: http://www.flickr.com/photos/30041161@N03/

[*“கேமரா என் மூன்றாவது கரம்” என கல்கி எனக்களித்த ஊக்கம் இங்கு:)!]

அடுத்து,
PiT உறுப்பினர் ஜீவ்ஸ் என்ற ஐயப்பனின் படங்கள் இவ்வருட கல்கி தீபாவளி மலர் 2011_ல் வெளியாகியுள்ளன:நேரமின்மை காரணமாகத் தொடர்ந்து பதியாவிட்டாலும் அருமையான படங்கள் அடங்கிய இவரது ஃப்ளிக்கர் முகவரி: http://www.flickr.com/photos/iyappan/ [இனியாவது வாரம் ஓரிரு படங்களேனும் பதிவார் என நம்புகிறேன்:)].

[*இதே தீபாவளி மலரில் வெளியான எனது படங்கள் இங்கே:)!]

கருவாயன், ஜீவ்ஸ் இருவருக்கும் வாழ்த்துக்கள்!!

வெற்றி முத்திரை:



அக்டோபர் மாத வெற்றிப்படங்களைப் கவனித்தீர்களா? மாதப் போட்டியில் முதலிடம் பெறும் மூவரையும் பாராட்டி அங்கீகரிக்கும் விதமாக அவர்கள் படங்களிலே “வெற்றி முத்திரை” பதிக்க ஆரம்பித்திருக்கிறது PiT. விருப்பமானவர் அதைத் தங்கள் வலைப்பக்கத்தில் நிரந்தரமாகப் பதிந்து வைக்கலாம். ஃப்ளிக்கரில் அக்கவுண்ட் உள்ளவர்கள் அங்கே பகிர்ந்து கொள்ளலாம். இன்னும் உங்கள் நண்பர்களுடன் FB, Google + போன்ற தளங்களிலும்:)!

இம்மாதம் வெற்றி முத்திரை பெறவிருப்பவர் யார் யார் என்பதை அறிய உங்களைப் போலவே PiT-ம் ஆவலாகக் காத்திருக்கிறது. படங்கள் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி நவம்பர் 15. விடுமுறையான ஞாயிறுடன் மேலும் 2 நாட்கள் ‘முழுசா’ உங்கள் கையில்:)!

இதுவரை போட்டிக்கு வந்து சேர்ந்த நண்பர்கள் எல்லோருமாய் உற்சாகமாக ஒன்றுகூடி அளவளாவிக் கொண்டிருக்கிறார்கள் இந்த பிகாஸா ஆல்பத்தில். அவர்கள் நட்பைப் பாராட்டி உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து மேலும் உற்சாகமூட்டுங்கள்!!

வியாழன், 10 நவம்பர், 2011

சின்ன நாடு.. பெரிய பேரு..-சிங்கப்பூர் பயண அனுபவம்(பாகம்-2)-படங்களுடன்

சிறிய நாடானாலும் சீரிய வளர்ச்சியால் பெரிய அளவில் பேசப்படும் நாடு சிங்கப்பூர்.

# 1. நீல வானைத் தொட நீளும் நீலக் கட்டிடம்



# 2. பறவைப் பார்வையில் பாலம்

“ஒரு பத்து வருடங்களுக்கு முன்னர் வந்திருந்தால் இந்த சாலைகள், மால்கள் இவை பிரமிப்பைத் தந்திருக்கக் கூடும். பெங்களூரில் மலிந்து விட்ட மால் கலாச்சாரத்தினாலும், பெருகி விட்ட ஜனத்தொகை மற்றும் ஐடி வளர்ச்சியால் ஊரைச் சுற்றி வளைந்தோடும் ரிங் ரோட்களினாலும், குறிப்பாகச் சமீபத்தில் சில்க் போர்ட் ஜங்ஷனிலிருந்து எலக்ட்ரானிக் சிடி ஜங்ஷனுக்கு பத்து நிமிடங்களில் பறக்க வைக்கும் ஃப்ளை ஓவர் போன்றவற்றாலும் அத்தகு ஆச்சரியம் ஏற்படவில்லை” என்ற போது சிங்கப்பூர்வாழ் நண்பர் “ஒரு வாரம் இருந்ததை வைத்தெல்லாம் எடை போடக் முடியாது” என வாதிட ஆரம்பித்து விட்டார்.

புதன், 9 நவம்பர், 2011

கல்கியில் ‘முகமூடி’

13 நவம்பர் 2011, இந்த வாரக் கல்கியில்..


எனது கவிதை ‘முகமூடி’
நன்றி கல்கி!
***

திங்கள், 7 நவம்பர், 2011

‘மூங்கில் மூச்சு’ சுகாவின் “தாயார் சன்னதி” கட்டுரைத் தொகுப்பு - ஒரு பார்வை (திண்ணையில்..)


எழுத்து என்பது ஒரு சிற்பத்தைப் போல ஒரு கல்வெட்டைப் போல தான் வாழ்ந்த காலத்தை வருங்காலத்துக்கு எடுத்துச் செல்லும் ஆவணமாக அமைந்து போகையில் எழுதப்பட்ட காலத்தில் கொண்டாடப்பட்டு மக்கள் மனதில் இடம் பெறுவதையெல்லாமும் தாண்டி வருங்காலம் வியந்து போற்றுவதாக உயர்ந்து நின்று விடும். கவனிப்பற்று போகும் அத்தகு எழுத்துக்கள் கூட பின்னாளில் எவராலேனும் புதையல் எனக் கண்டெடுக்கப்பட்டதும் நடந்திருக்கிறது. ஆனால் ஆசிரியர் சுகாவுக்கு சக காலத்திலேயே அந்த அங்கீகாரத்தை ஆனந்த விகடன் தந்திருந்தது ‘மூங்கில் மூச்சு’ தொடர் மூலமாக. அதன் பனிரெண்டாவது அத்தியாயத்தின் போது ‘யார் இந்த சுகா’ என வியப்புடன் நான் பகிர்ந்து கொண்ட குறிப்பைத் தொடர்ந்து நண்பர்கள் எனக்குப் பரிந்துரைத்ததே சொல்வனம் இணைய இதழில் அவர் தொடராக எழுதிப் பிறகு தொகுப்பாக வெளியான “தாயார் சன்னதி”. தபால் மூலமாக தருவித்துக் கொண்டாலும் ஏனோ ‘மூங்கில் மூச்சு’ முடிந்த பின்னரே வாசிக்க வேண்டுமெனத் தோன்றக் காத்திருந்து வாசித்தேன். பகிர்ந்திடும் நேரம் இப்போதுதான் வாய்த்தது.

மூங்கில் மூச்சின் முந்தைய பாகம் என்று சொல்ல முடியாமல் இரண்டும் சம காலத்தின் வெவ்வேறு நிகழ்வுகளின் பதிவுகளாக. இதிலிருக்கும் எந்த அத்தியாயங்களையுமே அவர் மூங்கில் மூச்சில் பகிர்ந்ததாகத் தெரியவில்லை, விஞ்சை விலாஸ் தவிர்த்து. அதுவும் உணவகங்களைப் பற்றி எழுதுகையில் தவிர்க்க முடியாமல் சேர்த்திருப்பார் என்றே எண்ணுகிறேன்.

மூங்கில் மூச்சில் பல கதாபாத்திரங்கள் ஏற்கனவே அறிமுகமாகி விட்டிருந்ததால் எளிதாக ஒன்றி சிநேகத்துடன் பயணிக்க முடிந்தது. என் பிறந்த மண்ணைப் பற்றிய பகிர்வு என்பது கூடுதல் ஈர்ப்பு என்பதையும் மறுப்பதற்கில்லை. அதே நேரம் இத்தொடரை நேசிக்கவும் ரசிக்கவும் நெல்லை மண்ணில் பிறந்தவராக இருக்க வேண்டும் என்பது கிஞ்சித்தும் அவசியமில்லை. நெல்லையப்பரும் காந்திமதியும் எம் மண்ணுக்கு அப்பனும் அம்மையும் என்றால் அவரவர் ஊருக்கு அருள் பாலித்திருக்கும் அம்மை அப்பனை இவரது வரிகளில் தரிசிப்பீர்கள். நெல்லை வீதிகளில் ஆசிரியர் நடக்கும் போது, தியேட்டர்களில் படம் பார்க்கும் போது, தன் சமூகத்தின் வழக்கங்களைப் பகிரும் போது, சந்தித்த மக்களைக் கொண்டாடும் போது தன்னிச்சையாக உங்கள் நினைவுகளும் உங்கள் ஊரைச் சுற்றிவரும் என்பதற்கு நூறு சதவிகிதம் உத்திரவாதம் தர முடிகிறது.

குஞ்சு போன்றதொரு தோழன் ஒவ்வொரு நட்பு வட்டத்திலும் இருப்பார். ஜெயண்ட் வீலில் சின்னப்பையனோடு தெம்பாக ஏறி அமர்ந்து, சுற்ற ஆரம்பித்ததும் வெலவெலத்துப் போன சுந்தரம்பிள்ளை பெரியப்பா; பாம்புக்கு பயந்து உத்திரத்தில் தொங்கி, யாரோ அடித்துப் போட்ட பிறகு அதைத் தெருவழியே தூக்கி நடந்த அம்பி மாமா, எம்.ஜி.ஆரின் அதிதீவிர ரசிகரான அன்னண்ணன், ‘வான் நிலா’ பாடலை ரசிக்கும் அம்போத்தி இவர்கள் வேறு பெயர்களில், வேறு உருவங்களில் ஒவ்வொருவர் ஊரிலும் உலவியிருப்பார்கள்.

தாயார் சன்னதி’ என்றதும் காந்திமதி அம்மனைப் பற்றியதாகவே இருக்குமென நான் எண்ணியிருக்க அது ஆசிரியரது தாயாரின் கடைசி தினங்களைப் பற்றியதாக, மருத்துவமனையில் அவர் போலவே பாதிக்கப்பட்டிருந்த சில தாயார்களைப் பற்றியதாக அமைந்திருப்பது நெகிழ்வு. “முஜிபுர், ப்ரீத்தி ஜிந்தா, மூன்றாம் பிறை பாட்டியின் மகன் என தங்கள் தாயார்களை உள்ளே அனுமதித்துவிட்டு, மருத்துவமனைக்கு வெளியே இருந்த அனைவருமே ஒருவருக்கொருவர் ரகசியமாக மற்றவரைப் பற்றியும் நினைத்துக் கொண்டிருப்பார்கள்தான். அதில் நானும், அம்மாவும் நிச்சயம் இருந்திருப்போம். சிகிச்சை முடிந்து வெளியே வந்த சில காலத்திலேயே அம்மா காலமாகிவிட்டாள். அந்தத் தாயார்கள் யாரைப் பற்றிய தகவலும் எங்களுக்குத் தெரியவில்லை. அம்மாவுக்குத் தெரிந்திருக்கும்.

பாம்பு என்ற பூச்சி’, விளக்கு வைத்த பின் பாம்பைப் பாம்பு என சொல்லக் கூடாதென்பதை நாங்களும் சிறுவயதில் கடைப்பிடித்திருக்கிறோம்.

ஒவ்வொரு ஆச்சிக்கும் ஒவ்வொரு பெயர்.’ உண்மைதான். அத்தனை பல்லும் போனாலும் நெஞ்சு முழுக்க அன்பைச் சுமந்து கொண்டு ஆழ்வாற்குறிச்சியிலிருந்து எங்களைப் பார்க்க வரும் அம்மாவின் பெரியம்மா பெயர் கோமதி என்பதைச் சிரமப்பட்டு நினைவுக்குக் கொண்டு வந்தேன் இதை எழுதும்போது. எல்லோருக்கும் அவர் ‘பொக் பொக்’ ஆச்சி. தொட்டிலில் கிடந்த கொள்ளுப் பேரனாகிய என் அண்ணனின் அழுகையை நிறுத்த ‘கொக்கரக்கோ’ எனக் கூவிக் காட்டிய அம்மாவின் ஆச்சியை ‘கொக்கரக்கோ’ ஆச்சி என்றே இன்றளவும் விளிக்கிறோம். ஆசிரியர் காட்டும் பசு ஆச்சி, குட்டை ஆச்சி, மாம்பழத்தாச்சி போன்றோரின் பிரதிபலன் பாரா பாசம், அன்பு இன்றைய உலகில் காணக் கிடைப்பதே அரிது.

இலங்கை வானொலி கேட்ட இனிய நாட்களை மீட்டெடுக்கிறது ‘சில மனிதர்கள், சில பாடல்கள்’. ‘ஆய்புவன்’ இலங்கை ரூபவாஹினி திருநெல்வேலியில் தெரிய ஆரம்பித்த போது அதை மட்டும் நம்பியே வாங்கப்பட்ட டைனோரா, சாலிடேர் டிவி காலங்களுக்கு அழைத்துச் செல்கிறது. தொடர்ந்து தூர்தர்ஷன் தெரிய ஆரம்பிக்க மொழியே தெரியவில்லையென்றாலும் ஊரே விடாது பார்த்த ‘புனியாத்’ ஹிந்தி சீரியலை நினைவு கூர்கின்றது. நமசிவாயம் பிள்ளை கேட்கிறார் “மருமகனே, வடநாட்டு பொம்பளேளெல்லாம் எந்த நேரமும் சப்பாத்தி போட்டுட்டெ இருக்காளுவளே என்னடே? அவ்வொ புருசமாருல்லாம் அவ்வளவு கானம் திம்பானுவொ, என்னா?

இவர் பரிமாறி இருக்கும் ‘பந்தி’ யைப் பற்றிச் சொன்னால் சுவைக்காது. வாசித்தாலே ருசிக்கும். பரிமாறும் முறை, உணவுகளின் வகை, எந்தெந்த நிகழ்வுகளுக்கு எப்படியாக இருக்க வேண்டும் பந்தி என்பதைப் பற்றிய நுணுக்கமான விவரிப்புக்கள் அற்புதம். மண்ணின் பழக்க வழக்கங்களைச் சிறப்பாகத் தொடரெங்கும் பதிந்திருக்கிறார் தனிப்பட்ட சமூக நெடி படிந்திடாத படியும்.

கட்டுரையில் நடமாடும் மாந்தரை நாம் நேரில் பார்க்கிற உணர்வைத் தோற்றுவிக்கிறது எழுத்து. சின்னச் சின்ன விஷயங்களையும் நினைவிடுக்கிலிருந்து மீட்டெடுத்துத் தந்த விதமும் ரசிப்புக்குரியது, நெற்றியெல்லாம் நீறுமணக்க கழுத்தி ஸ்படிக, ருத்திராட்ச மாலைகளுடன் விஞ்சை விலாஸ் கைலாசம் பிள்ளை தாத்தா எப்படி பத்மினி ஊதுபத்தியை அதன் பாக்கெட்டின் துளையில் செருகி வைத்திருப்பார் என்பது வரை கூர்மையான அவதானிப்பு.

தொடரைத் தாங்கி நிற்கும் தூணாக வட்டார வழக்கு. தெப்பக்குளத்தெரு ரங்கநாதனின் “நேர்ல பாக்க வருதேன்” எனும் மூன்று வார்த்தைகள் எப்படி ஆசிரியரை சந்தோஷப்படுத்தியதோ அதே சந்தோஷம் கிட்டுகிறது ஊர் மக்களுக்கு, முதல் அத்தியாயத்தின் பெயரைப் பார்த்ததுமே. ‘திருநவேலி’! “ஒன் வயசென்ன என் வயசென்னலே” சண்முக அண்ணன் தன்னிலை மறந்து கோபப்பட்டது என்னவோ நாய் ஜாக்கனிடம் என்றாலும் இந்த வார்த்தைகளை உபயோகிக்காத ‘திருநவேலி’ ஆட்கள் மிகக் குறைவு.

இன்று திருமணத் தகவல் மையங்களில் அல்லாடும், இணையத்தில் மேட்ரிமோனியல் சர்வீஸ்களை உள்ளூற அச்சத்துடன் மேய்ந்து கொண்டிருக்கும் பெற்றோரை ஏங்க வைப்பவராக ‘துப்பு’ சொல்லும் வீரையன் தாத்தா.

கணவன் பேரைச் சொல்லக் கூடாதெனத் தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் ஆச்சிகள், அக்காக்கள், அத்தைகள், சித்திகள், மதினிகள் வலம் வருகிறார்கள் விதம் விதமாய் ‘முருகன் சாமி பேரு’ சொல்லி.

”நிறையக் கட்டுரைகளின் கடைசி வரி அவ்வளவு வாக்காக அமைந்து, அதற்கு முந்திய அத்தனை வரிகளையும் உயரத்திற்குக் கொண்டுபோய் விடுகிறது” முன்னுரையில் வண்ணதாசன் அவர்கள் சிலாகித்திருப்பது பற்றி மேலும் நான் சொல்ல என்ன இருக்கிறது? உயரத்துக்குக் கொண்டு போகும் அந்த சிலவற்றுள் உரக்கச் சிரிக்க வைப்பவையாக சொக்கப்பனை, ஜெயண்ட் வீல், கரையும் உள்ளம், நட்சத்திரம் பார்த்தல்..

ஹாஸ்யம் என்பது வெகு இயல்பாக எழுத்தோடு ஒன்றி தொகுப்பு நெடுக ஆங்காங்கே புதைக்கப்பட்டிருக்கும் கண்ணி வெடிகள். எப்போது நாம் அதில் காலை வைப்போமென்றே தெரியாது.

குஞ்சுவே தொடரில் அதிகம் கிண்டல் செய்யப்பட்ட பாத்திரம். சிறுவனாக இருந்தபோது ஒருநாள் காணாமல் போன குஞ்சு, போலிஸ் படையுடன் ஊரெங்கும் தேடப்படஷாஃப்டர் பள்ளி மைதானத்தில் எம்.ஜி. ஆரைப் பார்க்கப் போய் முதல் வரிசையில் உட்கார்ந்திருக்கும் போது பிடிபடுகிறார். பின்னாளில் நண்பர்கள் இதைச் சொல்லி நகைக்கையில் “எல, அது வெவரம் தெரியாத வயசுல நடந்த விஷயம். சின்னப் பிள்ளைல இத விட என்னென்ன கிறுக்குத்தனம்லாம் பண்ணிருக்கோம். அதுக்காக இப்பவும் அப்படியேவா இருக்கோம்?” சொல்லி வாய்மூடியவரின் அடுத்த செய்கையும், அவரே சொன்ன அத்தனை கிறுக்குத்தனங்களும் பிட்டுப் பிட்டு வைக்கப்பட்டிருக்கின்றன தொகுப்பில். குஞ்சு ’ஒருவேளை கற்பனை பாத்திரமாக இருக்குமோ’ என வண்ணதாசன் அவர்களுக்கு எழுந்த சந்தேகம், ஆரம்ப அத்தியாயங்களில் ஏற்பட்டாலும் போகப்போக அந்தப் பாத்திரப் படைப்பின் இயல்பு கற்பனையாக இருக்க வாய்ப்பில்லை என்றே நம்ப வைக்கிறது. கிண்டலானது நட்பின் நெருக்கத்திலும் உரிமையிலும் செய்யப்பட்டிருக்கும் என்றொரு புரிதல் வருகிறது.

இளம் பிரயாத்து வாழ்வின் முழுமையான நேர்மையான பதிவாக அமைந்திருக்கும் ’தாயார் சன்னதி’ மண் மணத்தோடு தாமிரபரணி பிரவாகமாக எங்கும் தொய்வின்றி சுவாரஸ்யத்துடன் அமைந்து நிறைவான வாசிப்பனுபவத்தைத் தருகிறது.

தொகுப்பில் இடம் பெற்ற படங்களை வரைந்த வள்ளி அவர்களும் பாராட்டுக்குரியவர். அட்டைப்படங்களுடன், நெல்லை மாநகராட்சி ஆர்ச், தேரும் ஜனத்திரளும், காந்திமதி அம்மன் கோபுரத்துடன் கோவில் தெப்பக்குள மண்டபம் போன்றவை தத்ரூபம்.

மூங்கில் மூச்சை வாசித்தவர்கள் தவறவிடக் கூடாததாக இத்தொகுப்பு. இதை வாசித்து ‘மூங்கில் மூச்சை’த் தவறவிட்டவர்கள் விரைவில் எதிர்பார்க்கலாம் அத்தொகுப்பை விகடன் வெளியீடாக.
***

தாயார் சன்னதி

விலை ரூ:150. அத்தியாயங்கள்: 45. பக்கங்கள்: 256.

வெளியீடு: சொல்வனம் பதிப்பகம்.

சென்னையில் கிடைக்கும் இடங்கள்: -ந்யூ புக் லேன்ட், தி.நகர் [தொலைபேசி: 28158171, 28156006] மற்றும் டிஸ்கவரி புக் பேலஸ்[அலைபேசி: 9940446650], கே.கே நகர்.

இணையத்தில் வாங்கிட: உடுமலை.காம்
*** *** ***

6 நவம்பர் 2011 திண்ணை
இதழில்., நன்றி திண்ணை!

***

டிசம்பர் 2012 குங்குமம் தோழி என் ஜன்னலிலும்.., நன்றி குங்குமம் தோழி!

***

வியாழன், 3 நவம்பர், 2011

என் கேமரா பார்வையில் சிங்கப்பூர் - பயண அனுபவம் (பாகம்-1)

# 1 புதிய லாண்ட் மார்க் ? விரிந்த சாலைகள், உயர்ந்த கட்டிடடங்கள், எங்கும் சுத்தம், எதிலும் ஒழுங்கு என்று பாராட்டப்படும், உலக நாடுகளில் அதிகமாக சுற்றுலா பயணிகளைப் பெறுகிற ஒன்றாகத் திகழும் சிங்கப்பூர் உங்களில் பலரும் சென்ற வந்த இடமாகவே இருக்கக் கூடும். சென்றிராதவருக்கு சில தகவல்கள் உதவலாம் என்றும், சென்ற வந்த நினைவுகள் மறக்காமல் இருக்கவும் என் பயண அனுபவத்தை.. என் கேமரா பார்வையில், வழக்கம் போலவே சிறுகுறிப்புகளாக, சிலபல பாகங்களாகப் பகிர்ந்து கொள்ள உள்ளேன். விரிவான பயணக்கட்டுரையாக இல்லாமல் அதாவது பயணக் கதைக்குப் ‘படங்கள்’ என்றில்லாது, எடுத்த ஐநூறுக்கும் அதிகமான படங்களில் வடிகட்டித் தரவுள்ள சுமார் நூறு படங்களுக்கான ‘கதை’ எனக் கொள்ளலாம்:)!

# 2 அதிர்ஷ்டத்தின் அடையாளச் சின்னம்
சிங்கப்பூருக்கு அதிர்ஷ்டத்தை அழைத்து வருகிற அடையாளச் சின்னமாகக் கொண்டாடப்படும் மெர்லயன் சுற்றுலா செல்லுபவர்கள் தவறவிடாத இடம். ‘மெர்’ என்றால் கடல். கீழுள்ள மீனுடல் ஒருகாலத்தில் இந்நாடு மீன்பிடி கிராமமாகத் திகழ்ந்ததின் குறியீடாகவும், சிங்கத் தலை சிங்கப்புரா (லயன் சிட்டி) எனும் அதன் புராதனப் பெயரின் குறியீடாகவும் அமைந்துள்ளது.

திங்கள், 31 அக்டோபர், 2011

ஈரம்

ரமாக்கி விட்டிருந்தாள் குழந்தை.

பார்த்துப் பார்த்து பால் பவுடர், ஃபீடிங் பாட்டில், ஜூஸ், ஒவ்வொரு முறை டயாப்பரை மாற்றும் முன்னும் போடவேண்டிய க்ரீம், பவுடர், மாற்றுடை இத்யாதிகள் எல்லாம் எடுத்துக் கூடையில் வைத்து விட்டு, செய்த காலை உணவை உண்ணக் கூட நேரமில்லாமல் இரயிலில் சாப்பிட்டுக் கொள்ளலாம் என டப்பர்வேர் டப்பாவில் அடைத்துக் கொண்டு, தூங்கிக் கொண்டிருந்த குழந்தையைத் தூக்க வந்தால்.., ஈரம் ஏற்படுத்திய அசெளகரியத்தைக் கூட வெளிப்படுத்தாமல் செப்புவாய் திறந்திருக்க அயர்வாகக் கிடந்தாள் செளம்யா.

ஏதோ உறுத்தத் தொட்டுத் தூக்கிய அனு பதறிப் போனாள். குழந்தையின் உடலில் சூடு தெரிந்தது.

“தூங்கிட்டுதானே இருக்கா? நல்லதாப் போச்சு. சட்டை கூட மாத்த வேண்டாம். டயாப்பரை போட்டு சீக்கிரமா கெளம்பும்மா, நேரமாகுது” அவசரப்படுத்தினான் பின்னால் வந்து நின்ற அருண்.

“காய்ச்சல் இருக்கறாப்ல தெரியுதே. டாக்டரிடம் காமிச்சா தேவல போலிருக்கே.”

ஒரு கணம் திகைத்தவன் "சரி அப்போ உன்னை டாக்டர் வீட்டில் விட்டுட்டு போறேன். நீ காமிச்சுட்டு க்ரஷ்ல விட்டுட்டு அதே ஆட்டோவுல ஸ்டேஷன் போயிடேன்.”

“இதுக்குதான் ஒரு நல்ல ஏற்பாடாகுற வரை வீட்லயே இருக்கேன்னேன்” என்றாள் தீனமாக.

“சரி சரி உடனே ஆரம்பிக்காத. அப்போ லீவைப் போடு.”

“லீவா? நான்தான் சொன்னேனே? வழியே இல்லை. அப்படின்னா இந்த வேலைய மறந்திடணும். நீங்க டாக்டரைப் பார்த்து காமிச்சு க்ரஷ்ல விட்ருங்களேன். காலையில் ஒரு ட்ரெயினிங் அட்டெண்ட் செய்யணும். அது முடிஞ்சு முக்கியமான ப்ராஜெக்ட் ஒண்ணு முடிச்சுக் கொடுக்க வேண்டி இருக்கு. சீக்கிரம் வரக் கூட பெர்மிஷன் கேட்க முடியுமா தெரியல.”

“நானா? என்ன விளையாடறியா? முன்ன காய்ச்சல் வந்தப்பல்லாம் உடனேயேவா டாக்டர்ட்ட ஓடுனோம்? ஏன் பயப்படறே? வந்து காட்டிக்கலாம். வழக்கமா கொடுக்கற சிரப்பைக் கொடுத்துடு. க்ரஷ்லயும் அடுத்தாப்ல எப்ப கொடுக்கணும்னு சொல்லிடலாம்.”

அடுத்த ஐந்து நிமிட வாதத்தில் அவள் பேச்சு எடுபடாத மாதிரி எல்லாவற்றுக்கும் ஒரு மாற்று வழி சொன்னவனை மீறும் வழி தெரியாமல் திகைத்தவள், இயக்கப்பட்டவள் போல் டெம்ப்பரேச்சர் செக் செய்து, மருந்தை ஊற்றிக் கொடுத்து, ஈரத்துணியை மாற்றி, டயாப்பரை மாட்டிக் குழந்தையைத் தோளில் சாய்த்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.

செள
ம்யாவுக்கு இப்போது நான்கு மாதமாகிறது. பால்குடி மாறவில்லை. குழந்தை பிறந்த ஓரிரு வருடங்கள் வீட்டில் இருந்திடவே அவளுக்கு விருப்பம். தனது திறமைக்கு மீண்டும் உடனே வேலை கிடைக்கும் எனும் நம்பிக்கை நிறைய இருந்தது. ஆனால் அருண் சம்மதிக்கவில்லை. பேசிப் பேசிக் கரைத்தான்.

தன் அம்மா கூடவந்து இருப்பாள் என்றான். அனுவின் சம்பளத்தையும் கணக்குப் போட்டுதான் கார் லோன் எடுத்ததாகவும், அடுத்தாற்போல் வீட்டு லோன் பற்றி சிந்தக்க வேண்டாமா என்றும், பிறந்திருப்பது பெண் குழந்தையாச்சே, ஓடிஓடி சேர்த்தால்தானே ஆச்சு என்றும் என்னென்னவோ சொன்னான். மூன்றாம் மாதம் முடிந்ததுமே அவள் மேலதிகாரியின் நம்பரை டயல் செய்து ஃபோனைக் கையில் திணித்தான்.

அவரது பேச்சு வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டாகவே இருக்கும். அவளது திறமைக்காக இன்னும் ஒருவருடம் வரை கூடச் சம்பளமில்லா விடுமுறை தந்து காத்திருக்கத் தயாராய் இருப்பதாக ஒரு துண்டு. இப்போதே வருவதானாலும் சரி, சேர்ந்த பிறகு குழந்தையைக் காரணம் காட்டி அடிக்கடி லீவு போடக் கூடாது என்பது ரெண்டாவது துண்டு. இவளும் தன் மாமியாரை நம்பி ‘அந்தப் பிரச்சனையே வராது. உடனேயே ஜாயின் பண்றேன் சார்’ என உறுதி அளித்தாள்.

சேரவேண்டிய நாள் நெருங்க நெருங்க மனதுக்குள் பயம் கவ்வியது. புகுந்த வீட்டிலிருந்து ஒரு தகவலும் இல்லை. அருணிடம் கேட்டால் ‘அதெல்லாம் வந்திடுவா அம்மா. அண்ணாவே அழைச்சு வந்து விடுறேன்னிருக்கார்’ என்றான்.

மாமனார் காலமாகி ஆண்டுகள் பல ஆகியிருக்க, மூத்தமகனுடன் மருமகள் அன்பில் நனைந்தபடி பேரக் குழந்தைகளைப் பேணிப் பிரியமாய் பார்த்துக் கொண்டு இருப்பதாகவே தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் மாமியார், இவளைப் பெண் பார்க்க வந்த போது. அந்தக் குழந்தைகளைப் பிரிந்து இங்கு வருவாராமா? ஒன்றும் புரியவில்லை. அருணுக்குத் தெரியாமல் ஊருக்குத் தொலைபேசிய பொழுது அன்பொழுக நலம் விசாரித்தாரே தவிர வருவதாய் ஒருவார்த்தை சொல்லவில்லை.

அருண் மேலான சந்தேகம் வலுத்தது. பிரசவம் முடிந்த இரண்டாம் மாதமே பிறந்த வீட்டிலிருந்த அவளைத் தன்னோடு அழைத்துக் கொள்வதில் தீவிரம் காட்டியவனாயிற்றே. அப்பா கூட “பாசக்கார மாப்பிள்ளம்மா. பாரு உன்னய கொழந்தய பிரிஞ்சு இருக்க முடியாம அவஸ்தை படுறாரு” என சொன்ன போது இவளும் எப்படி வெள்ளந்தியாய் நம்பிக் கிளம்பி வந்து விட்டிருந்தாள்!

திட்டமிட்டே தன்னைத் தயார் செய்திருக்கிறான் என்பதை உணர்ந்த போது மனம் வலித்தது. ‘அம்மாவுக்கு திடீர்னு ஆஸ்துமா ஜாஸ்தியாயிட்டாம். பழகுன டாக்டர் இல்லாம இங்கு வந்து இருக்க பயப்படுறா. ஹை பி பி வேற படுத்துதாம்’ எங்கோ பார்த்தபடி சொன்னவன் இரண்டு தெரு தள்ளி இருக்கிற குழந்தைகள் காப்பகத்தின் வசதிகளை மடமடவென அடுக்கினான். ‘மேலதிகாரியிடம் சொன்ன தேதியில் சேர்ந்து விடலாம், அம்மா கொஞ்ச காலம் பொறுத்து கட்டாயம் வருவா. பேத்தி மேல் கொள்ளை ஆசை’ என்றான்.

ஒருமாதம் ஓடி விட்டது வேலைக்குச் செல்ல ஆரம்பித்து.

கார் காப்பகத்தின் வாசலில் நின்றிருந்தது. அதை நடத்துகிற காந்தாதான் இப்போது அனுவுக்குக் குலசாமி.

தூங்கிய குழந்தையை கைமாற்றியபடி விவரம் சொன்ன போது குலசாமி அதை ரசிக்கவில்லை. “ஏம்மா, நான்தான் சேர்க்கும் போதே சொல்லியிருக்கேனே. குழந்த உடம்புக்கு முடியலேன்னா கொண்டு விடாதீங்கன்னு. அதுவும் இது ரொம்ப சிறுசு.”

“மருந்து கொடுத்திருக்கேங்க. திரும்ப 4 மணிநேரம் கழிச்சு இந்த சிரப்பைக் கொடுங்க. நான் சீக்கிரமா வரப் பார்க்கிறேன்.”

நின்றால் மேலே ஏதும் கேட்டு விடுவாளா எனப் பயந்து இவள் விடைபெற்றால், அதையே அருண் இன்னொரு விதத்தில் தனக்கு செய்வதாய் பட்டது. அதிக நெரிசல் இல்லாத சாலையிலும் ரொம்ப டென்ஷனாக ஓட்டுவதான பாவனையுடன் விரட்டி விரட்டிச் சென்று ஸ்டேஷன் வாசலில் இவளை உதிர்த்து விட்டு “இடையிடையே ஃபோனைப் போட்டுக் கேட்டுக்கோ” எனக் கட்டளை வேறு.

புறநகரில் இருக்கும் அலுவலகத்துக்கு இப்படி அரக்கப் பரக்க இரயிலைப் பிடிப்பதெல்லாம் பழகிப் போன ஒன்றுதான் என்றாலும் என்றைக்குமில்லாத ஒரு கிலி. சுயபச்சாதாபம், குற்றஉணர்வு எல்லாம் தாண்டி குழந்தையைப் பற்றிய கவலையால் கட்டி எடுத்து வந்த காலை உணவைப் பிரிக்கவே பிடிக்கவில்லை.

ஹாய் அனு! குட் மார்னிங். யு லுக் சிம்ப்ளி க்ரேட் இன் திஸ் யெல்லோ சுடிதார்யா” லேட்டாகி விட்டதோ என ட்ரெயினிங் ஹாலை நோக்கி வேகவேகமாக நடந்த போது பின்னாடியே உற்சாகக் குரல் கொடுத்தபடி வந்தாள் அலுவலகத் தோழி ஸ்வேதா.

மூன்று மணி நேர ட்ரெயினிங். நடுவே எங்கேனும் யாரும் பேசினால் மேலாளருக்குப் பிடிக்காது. ஏகப்பட்ட பணம் செலுத்தி அழைத்து வந்த ட்ரெய்னர் சொல்வதை அப்படியே அனைத்துப் பேரும் உள்வாங்கி செயல்பட்டு கம்பெனியை நாட்டின் நம்பர் ஒன்னாக்கி விட வேண்டுமெனக் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டபடி கவனித்துக் கொண்டிருப்பார். கலந்துரையாடலில் அத்தனை பேரின் பங்கும் இருந்தே ஆக வேண்டும். பள்ளி கல்லூரி பருவக் கெடுபிடிகளே தேவலாம்.

மொபைலை அனைவரும் சைலன்டில் போட்டிருந்தனர். அவ்வப்போது கைப்பையிலிருந்து எடுத்துப் பார்க்கக் கூட இவளுக்குத் தயக்கமாய் இருந்தது. இதில் எங்கே ரெஸ்ட் ரூமுக்குச் செல்ல? நெஞ்சுப் பாரம் அதிகரித்தது. தாய்ப்பாலை எடுத்து அலுவலக குளிர்சாதனப் பெட்டியில் சேகரித்து வைத்து, வீட்டுக்கு எடுத்துச் செல்வதாய் சிலர் சொல்லி பத்திரிகைகளில் படித்திருக்கிறாள். சீனியர் சிலரிடம் கேட்டபோது ‘நம்ம கம்பெனியிலா. அடப் போம்மா’ என்றதற்கு என்ன அர்த்தம் என்றுதான் இவளுக்குப் புரியவில்லை.

கூட்டம் முடிந்த வேளையில் மொபைலுக்கு ஒரு காலும் வந்திக்கவில்லை. சற்று நிம்மதியானது மனது. காந்தாம்மாவை அழைத்தாள்.

அடுத்த டோஸ் மருத்து கொடுத்து விட்டதாகவும் சூடு குறைந்திருப்பதாகவும் சொன்னவர், குழந்தை பாட்டிலையே வாயில் வாங்க மறுத்து விட்டதாகவும், தம்ளரில் ஊற்றிப் போக்குக் காட்டிக் கொஞ்சம் புகட்டி விட்டதாகவும் குண்டைத் தூக்கிப் போட்டார்.

‘கொஞ்சம் என்றால் எத்தனை அவுன்ஸ்?’ இவள் கேட்க முடியாது. கேட்டால் நாளைக்கே வேறு இடம் பார்க்க வேண்டி வரலாம்.

“ரொம்ப தேங்க்ஸ்மா” என்றாள்.

பாவம் அம்முச் செல்லம். உடம்புக்கு முடியாது போனால் அம்மாவின் கதகதப்பான அணைப்புத்தான் வேண்டும் அவளுக்கு.

காலையிலும் சாப்பிடாதது பசித்தது. வழக்கமாக கேண்டீனுக்கு செல்லுபவள் நேரத்தை மிச்சம் பண்ண, கொண்டு வந்த காலை உணவையே அவசரமாய் ஐந்து நிமிடங்களில் சாப்பிட்டு விட்டு வேலையை ஆரம்பித்து விட்டாள். அடுத்த அரை மணியில் காந்தாம்மாவின் அழைப்பு. சிணுங்கலாக இருந்த குழந்தையின் அழுகை சமாதானங்களுக்கு மசியாமல் பெரிதாகி விட்டதாகவும், தூங்கப் போட முயலுவதாகவும் சொன்னாள். ‘கிளம்பி வந்தால் பிள்ளைக்கு நல்லது’ என்றாள்.

கலகலப்பாகக் காலை வணக்கம் சொல்லி நேசம் பாராட்டிய ஸ்வேதாவின் நினைவு வர, தேடி ஓடினாள். நிலைமையை விளக்கி ‘ப்ராஜெக்டை கொஞ்சம் முடிச்சுக் கொடுக்க முடியுமா’ கெஞ்சலாகக் கேட்ட போது “என்னப்பா என் வேலையே இன்னும் முடியலையே. இதையும் சேர்த்து செய்யணும்னா நான் பத்து மணி வரை இருக்க வேண்டியதுதான். சீக்கிரமா செய்யத்தான் பாரேன்” எனக் கை விரித்தாள். முதல் காலாண்டின் இறுதி நெருங்கிக் கொண்டிருக்க, வேலைப் பளு எல்லோர் தோளிலும்தான்.

ஏமாந்த மனதைத் தேற்றியபடி அந்த செக்க்ஷனை விட்டு வெளியே வந்தவளுக்கு ‘எதற்கும் அவளையே வேறு நண்பர் யாரிடமாவது கேட்டுப் பார்க்கச் சொல்லலாமோ’ எனும் எண்ணம் எழ, திரும்பி நடந்தாள். பிரசவ விடுமுறைக்கு பிறகு அலுவலகம் நுழைந்த போது பல புதிய முகங்கள். சிலரை இன்னும் சரியாக அறிமுகம் ஆகி இருக்கவில்லை.

ஸ்வேதாவின் இருக்கையை நெருங்கிய போது இவள் பின்னால் வந்து நிற்பது தெரியாமல் யாரையோ அலைபேசியில் அழைத்துச் சொல்லிக் கொண்டிருந்தாள்: “இவல்லாம் எதுக்கு வேலைக்கு வர்றா? பிள்ளையப் பாத்துட்டு வீட்டோட கெடக்கலாமில்ல கொஞ்ச காலம். எல்லாம் வயித்தெரிச்சல். எங்கே அதுக்குள்ள நான் அவள ஓவர்டேக் செஞ்சு ப்ரோமஷனைத் தட்டிட்டுப் போயிடுவனோன்னு..”

மேலே நின்று கேட்கப் பிடிக்காமல் நகர்ந்து வந்த அனு, மனதின் அத்தனை சக்தியையும் ஒன்று திரட்டி, கவனத்தைக் கூட்டிப் பிடித்து ஒரு பிசாசைப் போல வேலையை செய்து முடித்தாள். அதைக் காட்டியே வழக்கத்துக்கு மாறாக ஒருமணி முன்னால் கிளம்ப அனுமதி வாங்க முடிந்தது.

ரயில் நிலையத்தில் கூட்டம் இருக்கவில்லை. வண்டி வந்தது. நெரிசல் நேரம் இல்லையாதலால் பல பெட்டிகள் காலியாகக் கிடக்க, ஒன்றிலேறி சன்னலோர இருக்கையைப் பிடித்தாள். மற்ற இருக்கைகளும் நிரம்பலாயின.

மனம் ஆசுவாசமானது. ‘அம்முச் செல்லம், இன்னும் அரைமணி பொறுத்துக்கோடா. அம்மா வந்துட்டே இருக்கேன்டா’ என்றது.

ஸ்டேஷனை விட்டுக் கிளம்பிய ஒருசில நொடிகளிலேயே ஏதோ காரணத்தால் வண்டி நின்று விட்டது. ‘அஞ்சு நிமிசமாகுமாம்’ விரல்களைக் குவித்து விரித்துத் தகவல் சொன்னபடியே சன்னலைக் கடந்து சென்றார், என்னவென்று பார்க்க இறங்கிய சிலரில் ஒருவர். பக்கத்துத் தண்டவாளத்தில் சரளைக் கற்கள் குவிக்கப் பட்டு வேலை நடந்து கொண்டிருந்தது.

அதன் அருகிலிருந்த மரத்தின் இறக்கமான கிளையிலிருந்து பருத்திச் சேலையில் தொட்டிலொன்று தொங்கிக் கொண்டிருந்தது. உள்ளே குழந்தை. தொட்டிலுக்குக் கீழே தண்ணீர் புட்டி, மருந்து பாட்டில், கிலுகிலுப்பை, கிளிப்பச்சை நிறத்தில் ஒன்றரையடி உயர பிளாஸ்டிக் சிறுமி பொம்மை.


குழந்தை சிணுங்க ஆரம்பிக்க வேலையிலிருந்த பெண்மணி ஓடிச் சென்று “உலுலாயி உலுலாயி” என இழுத்து இழுத்து ஆட்டவும் அமைதியானது. அந்த ஆட்டத்திலேயே விட்டுவிட்டு அம்மாக்காரி வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள். ஆடி ஆடி தொட்டில் நிற்கவும் நெளிந்து வளைந்து பெரிய குரலெடுத்து அழ ஆரம்பித்தது குழந்தை.

“யாரம்மா அது? புள்ளயக் கதறவிட்டுக்கிட்டு வேலையப் பாக்குறது. போம்மா போயி புள்ளயக் கவனி”

எங்கிருந்தோ ஓங்கி ஒலித்த குரல் மேற்பார்வையாளருடையதாக இருக்க வேண்டும். மண்வெட்டியால் சரளைகளைத் தட்டுக்குத் தள்ளிக் கொண்டிருந்த பெண்மணி பதறி அதை அப்படியே போட்டுவிட்டு ஓடினாள் குழந்தையிடம்.

யூரோப் பாரளுமன்றக் கூட்டத்துக்கு அதன் உறுப்பினரான இத்தாலியப் பெண்மணி லிஸியா தன் கைக்குழந்தையை நெஞ்சோடு தொட்டிலிட்டு அணைத்து எடுத்துச் செல்ல முடிகிறது. உழைக்கும் மகளிருக்கான உரிமைகளைப் பற்றிய மசோதாவிற்காக வாதாடவும் வாக்களிக்கவும் வந்தவரின் இச்செயலைப் பார்த்து உலகம் பூரிக்கிறது. பாராட்டுகிறது. நடைமுறையில் எத்தனை அலுவலகங்களில் இது சாத்தியமாகிறது? அதை சாத்தியப் படுத்தும் கருணை அந்த வீதியோரத்து உழைக்கும் மக்களிடத்திலாவது இருப்பதைப் பார்த்து வியப்பும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது அனுவுக்கு.

கூடவே ‘இத்தனை வேண்டாம் சாமீ. ஒரு அனுசரணை, புரிதல் இருந்தால் போதுமே தன் போன்றோருக்கு’ என்கிற ஏக்கம் தவிர்க்க முடியாததாய் இருந்தது.

பெட்டிக்கு நேர் எதிரே என்பதால் அனைவரின் கவனமும் அங்கேயே இருந்த வேளையில் அழைத்த அலைபேசியில் காப்பகத்தின் எண் மிளிர்ந்தது. “என்னம்மா நீ. கெளம்பியாச்சா இல்லியா? பிள்ள விடாம அழுறா. ஒரு அக்கற வேண்டாம்?”

காந்தாம்மாவின் குரல் அந்த நிசப்தமான சூழலில் அனைவருக்கும் கேட்கும்படி ஒலித்தது வேறு தர்மசங்கடத்தை அதிகரிக்க, “நாலு மணிக்கே கெளம்பிட்டேங்க. வழியிலே என்னமோ பிரச்சனை. இரயில் நின்னு போச்சு. பொறப்பட்டிரும் இப்ப. நீங்க திரும்பப் பாலைக் கரைச்சுக் கொடுத்துப் பாருங்களேன்” என்றாள்.

‘அது தெரியாதா எங்களுக்கு’ என்பது போல மறுமுனை கடுப்பாகத் தொடர்பைத் துண்டித்துக் கொண்டது.

மொபைலை பைக்குள் போட்டுவிட்டு நிமிர்ந்த போது தொழிலாளப் பெண்மணி குழந்தையை மார்போடு அணைத்தபடி மரத்துக்குப் பின்னால், அமர இடம் தேடிக் கொண்டிருந்தாள்.

‘கொடுத்து வச்ச அம்மா. அதைவிடக் கொடுத்து வச்ச...’

இவளது சிந்தனை முழுமை பெறுமுன்..,

“குழந்தை எத்தனை கொடுத்து வச்சிருக்கு பாத்தீங்களா?” என்றார் எதிர் இருக்கையிலிருந்த மனிதர் பக்கத்தில் இருந்தவரிடம்.

பதிலுக்கு அந்த நல்ல மனிதர் “ஆமாங்க. என்ன பாவம் பண்ணுச்சுங்களோ சில குழந்தைங்க. பொறந்த சில நாளுல காப்பகத்துல விட்டுட்டு கெளம்பிடறாங்க வேலைக்கு. ஒய்யாரக் கொண்டையாம்.. தாழம்பூவாம்.. உள்ளே இருக்குமாம்...” என முடிக்காமல் நமுட்டாகச் சிரித்தார் ஜாடையாக இவளைப் பார்த்தபடி.

கோபமாய் ஏதோ சொல்ல வாயெடுத்தவள் அப்படியே அமுங்கிப் போனாள். காலையில் இருந்து நேர் கொள்ள நேர்ந்த பல மனிதர்களின் உள்ளங்களில் காணக் கிடைக்காத ஈரம், அங்கு சிதறப்பட்ட வார்த்தைகள் தந்த அதே வலி மிகுந்த வீரியத்துடன் வெளிப்பட்டு குழந்தைக்கும் இல்லாமல் நெஞ்சை நனைத்து விட்டிருக்க, வேகம் பிடித்து விரையத் தொடங்கிய வண்டிக்கு ஈடாகப் போட்டிபோட்டுக் கொண்டு காற்றில் படபடத்த துப்பட்டாவை நடுங்கிய விரல்களால் இழுத்து இறுகப் பற்றிக் கொண்டு, உலர்ந்த கண்களால் மெளனமாகச் சன்னல் வழியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.
***

வம்சி சிறுகதைப் போட்டிக்காக.

படம் நன்றி: கருவாயன் என்ற சுரேஷ்பாபு
http://www.flickr.com/photos/30041161@N03/5864024764/in/photostream


***

மு.வி. நந்தினியின் பார்வையில்.. “ஈரம்” ..

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin