புதன், 9 செப்டம்பர், 2026

காலத்தை வென்ற கதை - ஈற்றடிக்கோர் பாட்டு - பண்புடன் இதழ்: 16

காலத்தை வென்ற கதை


பொறுமையுடன் நிற்கிறது
மறக்கப்பட்ட நூற்றாண்டுகளில்
செதுக்கப்பட்ட சிற்பம்

அதன் விழிகள் இமைப்பதில்லை
ஆயினும் கண்டிருக்கின்றன
தன் பார்வையின் கீழ் நடந்து சென்ற
எந்த அர்ச்சகரையும் அரசரையும் விட
அதிக விடியல்களை

பேரரசுகள் சரிந்த பின்னும்
கொடிகள் மாறிய பின்னும்
நிற்கிறது புன்னகையோடு
மெளனத்தில் உறைந்து
யுகங்களைச் செவியுற்று

உளிகள் ஒருகாலத்தில்
அதன் உடலில் ஒலித்தன
பேரழகை வடிக்க
கலைஞனின் கைகள்
நடுக்கத்துடன் உழைத்தன
ஒவ்வொரு வளைவும் இன்னும்
ஒரு துடிப்பைச் சுமக்கிறது
உயிர் கொடுத்த இதயத்தையும்
தாண்டி வாழ்கிறது

தம் பெயர் இல்லாமலேயே
தமக்காகப் பேசும் ஒன்றை
விட்டுச் செல்வதில் இருக்கிறது
காலத்தை வென்ற கதை
*
ஒளிப்படம்: ராமலக்ஷ்மி

*

‘பண்புடன் மின்னிதழ்’ ஒவ்வொரு வாரமும் கொடுக்கப்படும் ஈற்றடிக்கு வெண்பாக்களையும், புதுக்கவிதைகளையும் வரவேற்கிறது. முகநூலில் இதற்கான அறிவிப்பை “பண்புடன் குழுமப் பக்கத்தில்” ஐயப்பன் கிருஷ்ணன் வெளியிட்டு வருகிறார். சிறந்த படைப்புகள் தேர்வாகி பண்புடன் மின்னிதழில் வெளியாகின்றன. ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளுங்கள். 

மீண்டும், சென்ற வாரம் தேர்வான கவிதைகளில் ஒன்றாக என்னுடையது: “ஈற்றடிக்கோர் பாட்டு – 11. தேர்வான வெண்பாக்கள் மற்றும் பிற கவிதைகளையும் இந்த இணைப்பில் வாசிக்கலாம்.

நன்றி பண்புடன்!

***

1 கருத்து:

  1. அருமையான கற்பனை.  சிற்பத்தைப் படைத்தவனே எப்போதோ இல்லாமல் போய்விட்டான்.  ஆனால் சிற்பம் ஆண்டாண்டு காலமாக காலங்களைக் கடந்து காட்சிகளை பார்த்தபடி இருக்கிறது.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin